முதல்-அமைச்சர் கருணாநிதி சி.என்.என்., ஐ.பி.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- இந்த தேர்தலில் தமிழ்நாட்டு வாக்காளர்கள் முன் தி.மு.க. என்ன கேள்விகளை முன் வைக்கின்றது?
பதில்:- தி.மு.க. அரசு 1967 முதல் இதுவரையில் ஆற்றியுள்ள சாதனைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? நாங்கள் நம்பகமானவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? இல்லையா? நாங்கள் அறிவித்த திட்டங்கள், வாக்குறுதிகள் ஆகியவற்றை நிறைவேற்றி யிருக்கிறோமா? இல்லையா? அப்படி நிறைவேற்றக் கூடிய அளவுக்கு ஆற்றலும், அறிவும் அதே நேரத்தில் அக்கறையும் உள்ளவர்கள் நாங்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்களா? இல்லையா? தமிழ்நாட்டில் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு பாடுபடுகின்ற அரசு இது என்பதை அடித்தட்டு மக்க ளுக்காக உழைக்கின்ற அரசு இது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இல்லையா? இத்தகைய கேள்விகளைத்தான் நான் வாக்காளப் பெருமக்களிடம் இந்தத் தேர்தலையொட்டி வைக்க விரும்புகிறேன்.
கேள்வி:- தேர்தல் அறிக்கையில் பல இலவசத் திட்டங்களை அறிவிக்கின்றீர்கள். 2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இலவச கலர் தொலைக் காட்சி பெட்டிகளை வழங்கினீர்கள். தற்போது லேப்-டாப், கிரைண்டர் போன்றவைகளை தேர்தல் அறிக்கையில் இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறீர்கள். தேர்தலில் வெற்றித் தோல்வியை நிர்ணயிப்பது இலவச சலுகைகளை அளிப்பதாக வாக்குறுதி கொடுப்பது தான் என்று கூறப்படுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- இலவச சலுகைகள் என்பது வாக்குகளைப் பெறுவதற்காக அல்ல. ஏழை-எளிய மக்கள் தமிழகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களை வாழ வைக்க வேண்டும் என்ற குறிக்கோள் தி.மு.க. அரசுக்கு இன்று நேற்றல்ல- இந்த இக்கத்தை தொடங்கியதே அந்த ஏழைகளை வாழ வைப்பதற்காகத்தான். ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம் என்பது தான் எங்கள் தலைவர் அண்ணாவின் முழக்கம்.
அந்தச் சிரிப்பைக் காண்பதற்காகத் தான்- எழைகளின் முகங்களிலே அந்தச் சிரிப்பைக் காண்பதற்காகத்தான் நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்ற முயற்சிகளில் இந்த இலவச திட்டங்களும் ஒன்றாகும்.
கேள்வி:- கட்சி களிடையே தொகுதி ஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தை நடந்தபோது காங்கிரசுக்கும், தி.முக.விற்கும் இடையே கருத்து மாற்றங்கள் ஏற்பட்டன. தேர்தலுக்குப் பிறகும் இந்தக் கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
பதில்:- இரண்டும் அகில இந்திய அளவில் இல்லாவிட்டாலும் இந்திய அளவில் காங்கிரசும், தமிழ் நாட்டளவில் தி.மு.க.வும் பெரிய கட்சிகள் என்பதை நாங்கள் பரஸ்பரம் உணர்ந்தவர்கள். எனவே எங்களுக்கு ஒரு சில கொள்கைகள், லட்சியங்கள் இருக்கின்றன.
அவைகளை நிறைவேற்றுவதற்காக எங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது. உதாரணமாக தமிழைச் செம்மொழியாக ஆக்க வேண்டும் என்பதற்காக நூற்றாண்டு காலத்திற்கு முன்பு நாங்கள் திட்டம் வகுத்து - பரிதிமாற்கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரிகள் தமிழ் செம் மொழியாக ஆக வேண்டு மென்பதற்காகக் குரல் கொடுத்தார்.
அந்தக் குரல் என்ன ஆகுமோ என்ற அளவுக்கு இடையில் வந்த ஆட்சியாளர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் இருந்தபோது, சோனியா காந்தி வந்து தான் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர அவர்களே முன்னின்று முயற்சித்து மறைந்த கல்வி அமைச்சர் அர்ஜுன்சிங் உதவியோடு தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தார்கள்.
ஆகவே நாங்கள் மாறுபடுவதாக இருந்தால், எங்களுக்கும் மத்தியிலே அமைகிற அரசுக்கும் மாறுபட்ட கொள்கை ரீதியாக வித்தியாசங்கள் இருக்கலாம், அதாவது திட்டங்கள் தமிழகத்திற்கு இன்னும் நிறைய வேண்டும் என்பதில் போராடுவதின் காரணமாக ஏற்படுகிற மாறுபாடுகள் இருக்கலாம்.
ஆனால் அடிப்படைக் கொள்கைகளில் எங்களுக்கும் அவர்களுக்கும் அதாவது மதவாதத்தை ஒழிப்பது, இந்தியாவில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது போன்றவற்றில் நாங்கள் இருவரும் மாறுபட்டவர்கள் அல்ல.
கேள்வி:- இந்த முறை தேர்தலில் தி.மு.க. இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்த இடங்களில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையப் போகிறது என்பதற்கான முன் அறிவிப்பதாக இதனை எடுத்துக் கொள்ளலாமா?
பதில்:- அரசியல் மாற்றங்களைப் பொறுத்தவரையில் ஒரே கட்சியின் ஆட்சியா? அல்லது கூட்டணி ஆட்சியா? என்பதை தேர்தல் முடிந்த பிறகு தான் சொல்ல முடியும்.
மேற்கு வங்கத்தில் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கூட்டணி அமைத்து அந்தக் கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து - இடதுசாரிக் கட்சிகள், பார்வர்டு பிளாக் மற்றும் வலது சாரி கட்சிகள் எல்லாம் இடம் பெற்று அவர்கள் எல் லாம் தேர்தல் முடிந்த பிறகு உகந்தவாறு அரசு அமைக்கிறார்கள்.
அதைப் போல நாம் நம்புகிறேன், எண்ணுகிறேன். தமிழ்நாட்டு மக்களும் மற்றவர்களும் ஒரே கட்சியின் ஆட்சி நீடிக்க வேண்டுமென்று தான் கருதுவார்கள் என்று எண்ணுகிறேன். ஒரு வேளை வோட்டிங் பேட்டன் என்று சொல்வார்களே, அதிலே மாற்றம் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் ஒரு அரசு நிலைத்திருக்க முடியும் என்ற சூழ்நிலை தோன்றினால் நாங்கள் அப்போது மற்ற கட்சிகளோடு கலந்து பேசி அதைத் தீர்மானிப்போம்.
கேள்வி:- 12-வது முறையாக வேட்பாளராக நீங்கள் போட்டியிடுகிறீர்கள். இந்த நேரத்தில் உங்கள் மகன், துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உங்களுடைய அரசியல் வாரிசு என்பதில் ஏதாவது கேள்விக்குறி இருக்கிறதா?
பதில்:- எந்த கேள்விக் குறிக்கும் இடம் இல்லாமல் வளர்ந்தவன் தான் மு.க. ஸ்டாலின். நான் அரசியலில் நுழைந்து அறிஞர் அண்ணா தலைமையில் ஒரு அரசியல் கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்பவனாக இருந்து, பொருளாளராக அண்ணா அவர்களால் நியமிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த பொறுப்பை நான் எப்படி நிறைவேற்றினேனோ, அதற்கு அண்ணா காட்டிய அன்பும் என்னிடம் அவர்கள் வைத்த நம்பிக்கையும், அதற்கு கொஞ்சமும் குந்தகம் இல்லாமல் எப்படி நான் நடந்து கொண்டேனோ, அதைப் போலவே என்னுடைய தலைமையில் மு.க.ஸ்டாலின் தொண்டாற்றி வருகிறார்.
என்னிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்ற கழகத் தோழர்கள் கழகத்திலே இருக்கின்ற முன்னணியினர் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் மு.க.ஸ்டாலினிடமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே அது கேள்விக்குறியாக ஆவதற்கு எந்தவித நியாயமும் இல்லை.
கேள்வி:- அரசியலில் உங்கள் குடும்பத்தினரை நீங்கள் முன்னிலைப் படுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டிற்கு உங்கள் பதில் என்ன?
பதில்:- திராவிட முன்னேற்ற கழகம் ஒரு ஜனநாயக இயக்கம், அடுத்தது யார் என்ற கேள்விக்கு நாமே ஒருவரைப் பிடித்து வைத்து, இவர் தான் அடுத்தது என்று சொல்லக்கூடிய இயக்கம் அல்ல இது. அதாவது மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல இது. மடாதிபதி என்றால், உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் சங்கரமடம் இருக்கிறது அல்லவா, அந்த மடத்திலே பெரியவர் சங்கராச்சாரியார் இருந்து, தனக்கு பின்னர் இவர் தான் என்று ஒருவரை அடையாளம் காட்டி விட்டு சென்றார்.
அதை அந்த மடத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதைப் போல திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மத ஸ்தாபனம் அல்ல. இது ஜனநாயக ரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதை போல தான்இயக்கத் தோழர்கள், கழக செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
கேள்வி:- உங்கள் குடும்பத்தை ஊக்குவிக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு பற்றி?
பதில்:- எனக்கு குடும்பம் இருப்பதால் பெரிய தொல்லை, என்னைப் புரிந்த வர்கள் குடும்ப அரசியல் நடத்துகிறேனா இல்லையா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். குடும்பம் நடத்துவது என்றால் திருமணமாகி ஆணும், பெண்ணும் சேர்ந்து அவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகள், அண்ணன், தம்பி இவர்கள் தான் குடும்பம் என்று அர்த் தம் அல்ல.
துணைக்கு யார்-யாரோ சேர்ந்து கொண்டு சில குடும்பங்கள் உருவாகின்றன. நான் அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. ஒரு நேர்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன்.
கேள்வி:- ஸ்பெக்ட்ரம் 2ஜிஅலைவரிசை ஒதுக் கீட்டைப் பற்றி சி.பி.ஐ. உங்கள் மகளையும், மனைவியையும் விசாரித்ததோடு கலைஞர் தொலைக்காட்சி நிறுவ னத்தின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. அதனால் எதிர்க்கட்சிகள் உங்களுக்கு தெரியாமல் எதுவும் இதிலே நடைபெற்றிருக்க முடியாது என்று சொல்கிறார்கள். இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?
பதில்:- இது ஊழலே அல்ல. இதைப் பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளிலே செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் (உதவியாளரிடம் விசாரித்து விட்டு) 20 சதவீதம் பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவிகித பங்குதாரர்.
சரத்குமார் 20 சதவிகித பங்குதாரர். இந்த விவரத்தையே நான் விசாரித்து விட்டு தான் கூறுகிறேன் என்பதை நீங்கள் பார்க்கலாம். கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதிலே பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே அதைப் பற்றி பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கையினைத் தந்திருக்கிறார்.
அது எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. ஒரு கடனை அடைப்பதற்காக ஒருவரிடம் கடன் பெற்றார்கள். பிறகு பெற்ற கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அதற்கு வட்டி, அதற்காக வருமான வரித்துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு அதற்கு வருமான வரித்துறைக்கும் விவரம் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை.
கேள்வி:- இப்படி ஊழல் குற்றச்சாட்டினை சுமத்திய காரணத்தினால் தி.மு.க.கழகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதா?
பதில்:- சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது பல்லுக்கு பல் இருகாதம், பல்லிடுக்கு மூன்று காதம் என்று அந்த காலத்தில் பூசாரிகள் பம்பை அடிப்பார்கள். அதைக் கேட்டு இன்னொருவர் ஆமாம், ஆமாம் என்பார். மக்களும் அதை கேட்டு தலையட்டிக் கொண்டிருப்பார்கள்.
காதம் என்றால் பத்து மைல் தொலைவு. பல்லுக்கு பல் இரு காதம் என்றால் இருபது மைல் தூரம். பல் லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல். அந்த அளவிற்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால் வாய் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் ஆமாம், ஆமாம் என்று ஒப்புக் கொண்டு பூசாரி பம்மை அடிப்பதைப் போல பாமர மக்களை ஏமாற்றிட ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கிறார்கள்.
அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கிறார்கள். அந்த விஷயத்தைப் பற்றி நான் விரிவாக, உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடைபெறுகின்ற காரணத்தால் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஊழலா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது உச்சநீதிமன்றம். அதிலே நான் தலையிட விரும்பவில்லை.
அந்த நிறுவனத்துக்கு கடனைக் கொடுத்தவர் கள் மீது வழக்கு இருக்கலாம். கடன் வாங்கிய பணம் ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்கு பிறகுதான் தெரியும்.
கேள்வி:- கடைசியாக ஒரு கேள்வி. கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடப் போகின்றன. நீங்கள் ஒரு கிரிக்கெட் ரசிகர் என்ற முறையிலும் இந்திய வீரர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்.
பதில்:- ஒற்றுமையாக இருந்து அவரவர்களுக் கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து உற்சாகமூட்டுகின்ற முறையில் பொறுப்போடு விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் நான் அவர்களுக்கு தருகின்ற வாழ்த்து.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment