விசேஷமாக தயாரிக்கப்பட்ட மோருடன் துவங்கியது அந்தச்சந்திப்பு. அடுத்தடுத்து பலகாரங்களும், தேநீரும், இளநீரும் வந்து கொண்டே இருந்தன. செடி, கொடிகளைப் பற்றிய காதல், ஒவ்வொரு சொல்லிலும் தெறிக்கிறது. உடற்பயிற்சி, உணவு, உள்ளம் இம்மூன்றும் ஒழுங்காக இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்' என, உள்ளுக்குள் இருந்த டாக்டரும் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறார். இத்தனையையும் தாண்டி, சென்னையை தைலாபுரத்துக்கு இழுத்து வந்த பெருமையோடு இருக்கிறார் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ். தேர்தல் களத்துக்காக அவருடன் ஒரு சந்திப்பு.
கூடுதல் சீட்டுக்கு ஒவ்வொரு கட்சியும் அடித்துக்கொள்ள, கடந்த முறை போட்டியிட்ட, 31 சீட்டுக்கே மகிழ்ச்சியில் மிதந்தது, உங்கள் கட்சியின் தொய்வைக் காட்டுகிறதா?
இது ஊடகங்கள் செய்த வேலை. ஆரம்பத்தில் இருந்தே, "இவங்களுக்கு 18, 20, 22 தான் கிடைக்கும்; 25க்கு மேல் இல்லை' என, தொடர்ந்து எழுதினாங்க. முதல்வரிடம் பேசும்போது, 45ல் இருந்து ஆரம்பிச்சோம். "நீங்க கொஞ்சம் கொஞ்சமா இறங்கி வாங்க; நாங்க கொஞ்சம் கொஞ்சமா ஏறி வர்றோம்'னாரு. அவர் ஏறலை; நாங்க தான் இறங்கினோம். "ஒண்ணாவது கூடுதலா வேணும்'னு கேட்டோம்.
"காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய பெரிய கட்சிகளுக்கு கொடுக்கணும்'னு, தன்னோட சங்கடத்தைச் சொன்னாரு. வெளியில வந்து, "வருத்தமா இருக்கு'ன்னு சொல்ல முடியுமா?
"கிடைத்ததைக் கொண்டு மகிழ்ச்சியா இருப்போம்'னு வந்துட்டோம். இப்ப நடக்கறதை எல்லாம் பார்க்கும்போது, "கொஞ்சம் தாமதித்திருந்தால், 33வது கிடைச்சிருக்குமோ'ன்னு தோணுது.
உங்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட தே.மு.தி.க., கூட, அ.தி.மு.க., அணியில், 41 இடங்களைப் பெற்றுள்ளதே...
கடந்த, 1996ல தனிச்சுப் போட்டியிட்டு நாலு இடங்கள்ல வெற்றி பெற்றோம். இப்ப கூட நாங்க தனியா போட்டியிட்டா, 234 தொகுதியிலயும், 10 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை ஓட்டு வாங்க முடியும். வடமாவட்டங்களைப் பொறுத்தவரை உங்களுக்குச் சொல்ல வேண்டியதே இல்லை. 2006ல, தனிச்சு போட்டியிட்ட தே.மு.தி.க., ஒரு இடத்துல தானே வெற்றி பெற முடிஞ்சது!
மது ஒழிப்பு, மணல் கொள்ளை, நிழல் நிதிநிலை அறிக்கை என, மற்ற கட்சிகள் செய்யாத பல விஷயங்களைக் கையாண்டாலும், தேர்தல் என்று வரும்போது, வன்னிய சொந்தங்கள் என்ற வட்டத்தில் சுருங்கி விடுகிறீர்களே...
சுருங்குறதில்லை. பா.ம.க., இன்றைக்கு முழுமையான கட்சியாக, எல்லா சமுதாயங்களையும் உள்ளடக்கிய கட்சியாக வளர்ந்திருக்கிறது. எங்களோட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வாங்கிப் பாருங்க. அதுல எல்லா சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்திருக்கிறோம்.
வன்னியர்கள் ஒண்ணு சேரணும் என மேடையிலேயே பேசுகிறீர்கள்...
ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட சமுதாயம் இது. இந்த மூன்று வார்த்தைகளுக்கும் அர்த்தம் சொல்வதென்றால், அதற்கு ஒரு தனி பேட்டி அளிக்க வேண்டும். அந்த சமுதாயத்துக்கு, 20 சதவீத ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்தேன். அதையும் வன்னியர்களுக்கு மட்டும் கொடுக்காமல், 107 ஜாதிகளுக்கு சேர்த்து கொடுத்தார் கலைஞர். ஒன்பது வருட போராட்டம் அது. ஒரே நாளில், 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்படி ஒரு சம்பவம் நடந்ததை வேறு எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கீங்களா? அவங்களுக்காக வேறு யாரும் பேசுறதில்லை. நான் பேசுறேன்.ஜாதி, மத, பேதமில்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்னு சொல்றாங்களே. நாட்டுல எந்த ஊர்லயாவது, தெருவுலயாவது, வீட்டுலயாவது ஜாதி, மதம் இல்லைன்னு சொல்ல முடியுமா? சங்கமில்லாத எந்த சமுதாயமாவது இருக்கா? கல்வியில் முன்னேறிய பிராமணர்களுக்கும் சமுதாயம் இருக்கே. அவங்க எவ்ளோ சதவீதம் இருக்காங்களோ, அதுக்கேத்த மாதிரி இட ஒதுக்கீடு கொடுங்கன்னு தானே கேட்கிறேன்.
ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில் நாலரை ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கட்சியையும், ஆட்சியையும் விமர்சித்தீர்கள். இப்போது எப்படி ஓட்டு கேட்பீர்கள்?
அவை அனைத்துமே ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள். இதை கலைஞரே சொல்லியிருக்கிறார். "தைலாபுரத்தில் இருந்து தைலம் வருகிறது'ன்னு சொல்லுவாரு. ஒரு சட்டம், கொள்கை இப்படி இருந்தால் நன்றாக இருக்குமென்று சொல்கிறேன். அவ்வளவு தான். சென்னைக்கு அருகில் துணை நகரம் அமைக்கப்போவதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. 144 கிராம மக்களை, அவர்களது வாழ்விடத்திலிருந்து வெளியேற்றி, மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் கட்டுவது யாருக்காக? பணக்காரர்களுக்குத் தானே. அதை நான் எதிர்த்தேன். அந்தப் பகுதி மக்களிடம் சென்று, "உங்களோடு இணைந்து போராடுவேன்' என்றேன். மறுநாளே அந்தத் திட்டத்தை முதல்வர் வாபஸ் பெற்றார்.
தி.மு.க., ஊழலற்ற, முறைகேடற்ற, அப்பழுக்கற்ற ஆட்சி நடத்தியது என உங்களால் பிரசாரம் செய்ய முடியுமா?
அந்த விமர்சனங்கள் இந்த நேரத்தில் தேவையில்லை. கூட்டணியில் இருந்து கொண்டு, இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பலை. என்ன சொல்ல முடியும், சொல்லுங்க... ஆனா, ஏழை, எளிய மக்களுக்கு, உச்சகட்ட நன்மைகளைச் செய்திருக்கிறது இந்த அரசு. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், இந்த தி.மு.க., அரசால் பலனடைந்திருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். எந்த முதல்வரும் செய்யாத சாதனை இது.
இலங்கை பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் துரோகம் செய்துவிட்டன எனக் குற்றம் சாட்டி வந்தீர்கள். அந்த நிலைப்பாட்டில் ஏதாவது மாற்றம் உண்டா?
மாற்றம் இல்லை. மத்திய, மாநில அரசுகள் நினைத்திருந்தால், இலங்கைத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்றியிருக்கலாம் என, இப்போதும் உறுதியாக இருக்கிறேன். ஓர் இனத்தையே அழிக்க சிங்கள அரசு முயற்சித்தது. அவர்களுக்காக போராடியவர்களை பூண்டோடு அழித்தது. அதன் பிறகும் தமிழர்களுக்கு சம உரிமை, அரசியல் அதிகாரம் வாங்கித் தரவில்லை. இந்த அரசுகள் தரும், 500 கோடியோ, 5,000 கோடியோ அவர்களுக்குத் தேவையில்லை. அரசியல் அதிகாரம் கிடைத்தால், அவர்களே மற்றதைப் பெற்றுக்கொள்வர்.
தமிழகம் முழுக்க சாராயக் கடைகளைத் திறந்திருப்பதாக கடுமையாக விமர்சித்தீர்கள். இப்போது, அவை எல்லாம் இல்லை என்றாகிவிடுமா?
இல்லைன்னு ஆகாது. பூரண மதுவிலக்கு தான் எங்கள் கொள்கை. ஆனால், தேர்தலில் அதைப் பிரசாரம் செய்ய முடியாது. கலைஞர் ஆறாவது முறையாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதும், மதுக்கடைகளை மூடச் சொல்லி வலியுறுத்துவோம். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.
அதை நீங்கள் இப்போதே செய்யலாமே. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லையே...
பூரண மதுவிலக்கு பற்றி எதிரணியில் ஏதாவது உத்தரவாதம் கொடுக்கிறார்களா? அப்புறம் எப்படி இவர்களைப் புறக்கணித்து, அந்தப் பிரசாரம் செய்ய முடியும்? அவர்கள் வந்தால், மதுக்கடைகளை இன்னும் அதிகரித்து விடுவர். அவர்களே மதுபான ஆலைகளை வைத்திருக்கின்றனரே! 44 சமுதாய தலைவர்களுடன் கோட்டைக்குச் சென்று முதல்வரைச் சந்தித்தேன். "படிப்படியாக அதை அமல்படுத்துவோம்' என உறுதியளித்திருக்கிறார்.
உங்கள் கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் கருத்து, கொள்கை, சீட் பற்றிய வேறுபாடு இருக்கிறது. அப்புறம் எப்படி தேர்தல் பணியில் இணக்கம் வரும்?
வரும்... வந்தாகணும். அதான் கூட்டணி தர்மம். நம் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என கடுமையாக உழைக்க வேண்டும். உடன்பாடு ஏற்படும் வரை தான் சிற்சில பூசல்கள் இருக்கும். ஏற்பட்ட மறுநிமிடமே மன வேற்றுமைகள் இல்லாமல், ஒற்றுமையாகச் செயல்படுவோம்.
திரும்பவும் சிறுபான்மை அரசு ஏற்பட்டால், ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?
மாட்டோம்; அப்படி எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. இதை முதல்வரிடமும் தெளிவாக விளக்கி உள்ளோம்.
அடிக்கடி கூட்டணி மாறுவது பற்றிய நெடுநாளைய குற்றச்சாட்டு ஒன்று உங்கள் மீது இருக்கிறது...
இதுவும் ஊடகங்கள்செய்த வேலை தான். 1967ல் அண்ணா தான் கூட்டணி வியுகத்தை ஆரம்பித்தார். எதிரும் புதிருமாக இருந்த கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்தார். அதன் பிறகு, எல்லா கட்சிகளும் கூட்டணி மாறியிருக்கின்றன. தி.மு.க., கூட, ஜனதா தளம், பா.ஜ., காங்கிரஸ் என, தன் அணியை மாற்றியிருக்கிறது. அ.தி.மு.க., - காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் என எல்லா கட்சிகளையும் உதாரணம் காட்டலாம். அவற்றை எல்லாம் விட்டு விட்டு, திரும்பத் திரும்ப, பா.ம.க.,வை மட்டுமே குறிவைத்து இந்த விமர்சனம் வைக்கப்படுகிறது. கூட்டணியே இல்லாமல் எல்லா கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதாக இருந்தால், பா.ம.க.,வும் தயார்.
நீங்கள் எதிர்பார்ப்பதற்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்தால்...?
நிச்சயமாக அமையாது; வாய்ப்பே இல்லை. எதிரணியினர் என்ன சாதனைகளைச் சொல்ல ஓட்டு கேட்க முடியும்? இலக்கிய ரீதியாகச் சொல்வதானால், அவங்க ஆட்சி செய்தபோது நடந்தது, "இன்னா நாற்பது!' தி.மு.க., ஆட்சியில் நடந்திருப்பது, "இனியவை நாற்பது!' மக்கள் புத்திசாலிகள்; இவற்றை எல்லாம் மறக்க மாட்டார்கள். நல்ல தீர்ப்பு கொடுப்பார்கள்.
பெயர் : சு.ராமதாஸ்
நிறுவனர்: பாட்டாளி மக்கள் கட்சி
படிப்பு : எம்.பி.பி.எஸ்.,
முகவரி :தைலாபுரம் தோட்டம், திண்டிவனம்
முதல் பணி:வன்னியர் சங்கம்
நிறுவிய ஆண்டு:1980
அரசியல் பிரவேசம்:பா.ம.க.,
நிறுவிய ஆண்டு:1989
சின்னம் :மாம்பழம்
தலைவர் :கோ.க.மணி
தலைமையிடம் :சென்னை
தேர்தல் அனுபவம்:போட்டியிட்டதில்லை
தற்போதைய அணி:தி.மு.க., கூட்டணி
No comments:
Post a Comment