Search This Blog

Friday, January 28, 2011

தி.மு.க.,விடம் அதிக சீட் கேட்டுப்பெற காங்., தயார்: பிரணாப், அகமது படேலிடம் பொறுப்பு ஒப்படைப்பு

சட்டசபைத் தேர்தலுக்கான பணிகள் விரைவில் துவங்கவுள்ள நிலையில், தமிழக காங்கிரசின் டில்லி மேலிட பொறுப்பாளராக இருக்கும் குலாம் நபி ஆசாத்தை அக்கட்சியின் தலைமை ஓரங்கட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் காங்கிரஸ் மேலிடமே களம் இறங்க தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதிக சீட்கள் கேட்டு தி.மு.க.,விடம் பேரம் பேசும் பொறுப்பு, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அகமது படேல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் தமிழக காங்கிரசுக்கு என பெரிய அளவில் முக்கியத்துவத்தை தராமலேயே தவிர்த்து வருவது, காங்கிரசில் வழக்கமான ஒன்று தான். தேர்தல் நடக்கும் காலங்களில் மட்டுமாவது டில்லி மேலிடம், தமிழக காங்கிரசின் செயல்பாடுகள் குறித்த நடவடிக்கைகள் எடுக்கும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது கூட தமிழகத்துக்கு மிகவும் டம்மியான ஆட்களையே மேலிடத் தலைவர்களாக நியமிக்கப்படுவதும் நடந்தது. இந்த பாணியில் தான் அருண்குமார் உட்பட சிலரிடம் தமிழக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. குலாம் நபி ஆசாத்தை தமிழக மேலிட பொறுப்பாளராக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், டில்லி மேலிடம் அறிவித்தது.இவர் பொறுப்புக்கு வந்த பிறகு, "பலமான தலைவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது' என்ற நம்பிக்கை, தமிழக காங்கிரசிடம் லேசாக துளிர்விட்டது. இவர் பொறுப்பேற்பதற்கு முன்பாகவே இவரது ஆதரவாளராகக் கருதப்படும் தங்கபாலுவும் தமிழக காங்கிரசுக்கு தலைவராக ஆக்கப்பட்டார்.

குலாம் நபி வந்த பிறகு, கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் தென்படுவதற்காக தொய்வு தான் ஏற்படத் துவங்கியது. பொறுப்புக்கு வந்ததில் இருந்து இதுவரை எதுவும் உருப்படியாக செய்த மாதிரி தெரியவில்லை. ஜெயலலிதா ஆதரவு தெரிவித்த சமயத்தில் மட்டும் ஒரே ஒரு தடவை தமிழக காங்கிரசில் இடம் காலியில்லை என்று பேட்டியளித்தது மட்டுமே நினைவில் நிற்கிறது.தமிழக சட்டசபையின் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி ஆறு மாதங்களாக காலியாக உள்ளது. சுதர்சனம் மறைவுக்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப வேண்டுமென்ற அக்கறையோ, நடவடிக்கையோ காட்டப்படவில்லை. எந்த கோஷ்டியைச் சேர்ந்த எவரையாவது ஒருத்தரை அந்த பதவியில் நியமிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படியிருந்தும், 30க்கும் மேல் எம்.எல்.ஏ.,க்கள் இருக்கும் ஒரு கட்சிக்கு சட்டசபையில் தலைவர் இல்லை என்ற நிலையை மாற்ற அவர் முயற்சி செய்யவில்லை. மாறாக டில்லியிலும் அவரது நிலை ஊசலாட்டமாகவே இருக்கிறது. கட்சிப் பதவி, அமைச்சர் பதவி என இரண்டையும் வைத்துள்ளவர் என்பதால் இவர் மாற்றப்படுவார் என்று செய்திகள் வரும்.

இந்த சூழ்நிலையில் தான் எதிர்பாராத திருப்பமாக, தமிழக காங்கிரஸ் விவகாரங்களில் இவர் ஓரங்கட்டப்பட்டுள்ள விஷயம் தெரியவந்துள்ளது.தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம், சட்டசபையில் 100 சீட் என்ற கோரிக்கைகளை முன் வைக்க, காங்கிரஸ் தயாராக உள்ளது. தி.மு.க., தலைமையும், காங்கிரஸ் தலைமையும் நேரடியாக பேசி முடிவெடுத்தாலும் கூட, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியவர்களில் முக்கியமானவர் மேலிட பொறுப்பாளர். ஆனால், கூட்டணி விவகாரங்கள் திரைமறைவில் ஆரம்பமாகி, சில நாட்களில் டில்லிக்கு வரும் முதல்வரது பயணத்தின் போது இறுதியாகவுள்ள நிலையில், குலாம் நபி ஆசாத்தின் பங்களிப்பு என்பதே சுத்தமாக இல்லை.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்களில் விசாரித்த போது தெரிய வந்ததாவது: சட்டசபைத் தேர்தல் விவகாரங்களில் தலையிட வேண்டாமென குலாம் நபி ஆசாத் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதற்காக அவர் மாற்றப்படுவார் என்று அர்த்தம் இல்லை. குலாம் நபி ஆசாத் இடத்திலிருந்து அனைத்து விஷயங்களையும் அகமது படேலும், பிரணாப் முகர்ஜியும் நேரடியாகவே கவனித்துக் கொள்வர் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கபாலு எப்படி?குலாம் நபிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதால், அவரது ஆதரவாளரான தங்கபாலு தமிழக காங்கிரஸ் தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்படுவரா என்ற கேள்வியும் எழுகிறது. இன்னும் சில தினங்களில் பல மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை மேலிடம் அறிவிக்க உள்ளது. அதில் தங்கபாலுவும் இடம் பெறலாம் என்றாலும், அதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன.தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால், தங்கபாலு மாற்றப்படுவார் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றே அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க.,வுக்கும்விருப்பமில்லை : அகமது படேலுக்கும், குலாம் நபிக்கும் பல ஆண்டுகளாகவே சுமுக உறவு இல்லை. இந்த சூழ்நிலையில் குலாம் நபி டம்மி செய்யப்பட்டிருப்பதன் பின்னணியில் அவர் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தவிர தி.மு.க., தலைமையும் குலாம் நபி ஆசாத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.பேச்சுவார்த்தையை நேரடியாக முடித்துக் கொள்ள முடிவெடுத்து விட்டதால், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விஷயங்களில் குலாம் நபி ஆசாத் ஓரங்கட்டப்பட்டு விட்டதை தி.மு.க., வட்டாரங்களும் உறுதிப்படுத்தவே செய்கின்றன.

Wednesday, January 26, 2011

காங்கிரஸை ஒழிக்க வேண்டியதுதான்-அதற்காக ஜெயலலிதாவை ஆதரிக்கலாமா?: சீமானுக்கு தாமரை கேள்வி

காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமல்ல. திமுக, அதிமுக இரண்டும் ஒன்றுதான் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு, திரைப்படப் பாடலாசிரியை தாமரை கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சீமானுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

வணக்கம். இனியவளே படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழைப் பற்றியதாக, தமிழினம் பற்றியதாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும்.

பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நானும் நீங்களும் நிற்கும் இடம் பற்றி யோசிக்கிறேன். திரைப்படத்துறை நம் தமிழ் உணர்வுகளை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. வெற்றியோ தோல்வியோ, புகழோ பெயரோ… எதனாலும் நம் போராட்ட உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை. அன்றும் இன்றும் நம்மை ஒருங்கிணைத்தது, இணைப்பது மொழி இன உணர்வும் தமிழீழ வேட்கையும்தான்!

திரைக்கலைஞர்களாக இருந்து கொண்டே தமிழீழ மக்களைக் காப்பதற்காக மற்றவர்களோடு சேர்ந்து போராடினோம். ஆவேசமான பேச்சு, கைது, சிறை என்று நீங்கள் போனீர்கள். ஒரு கட்டத்தில் நேரடியாக அரசியலில் இறங்கி ‘நாம் தமிழர்’ கட்சியை நிறுவுனீர்கள். தெளிவான சில அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் இயங்கினாலும் நான் எந்தக் கட்சி அல்லது அமைப்பையும் சேர்ந்தவனில்லை. எப்போதும் இப்படி இருப்பதையே விரும்புகிறேன்.

ஆனால் உங்கள் முயற்சியும் அதில் நீங்கள் கண்டுவரும் வளர்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. மொழி இனவுணர்வு படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று உங்கள் பின்னால் அணிவகுத்திருக்கிறார்கள். தமிழீழத் தேசியத் தலைவரிடம் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பொங்கு தமிழர்க்கு இன்னல் விழைந்தால் சங்காரம் நிசமென்று நீங்கள் முழங்குவதும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கும் இளைஞர் வரிசையை மென்மேலும் நீளச் செய்யும் என்பது உறுதி!

என் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்களின்போது உலகத் தமிழர்கள் உங்கள் பால் வைத்துள்ள நேசத்தை நேரில் அறிந்து வியந்தேன், மகிழ்ந்தேன். அத்துணைப் பேரும் உங்களைத் தங்கள் உறவாகவே மதிக்கிறார்கள். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் ‘நம்பிக்கை நாயக’னாக நீங்கள் நிற்பது கண்டு வாழ்த்தி வரவேற்கிறேன்.

ஆனால், உங்கள் நலம் விரும்பிகள்… என்று சாதாரணமாகச் சொல்லமாட்டேன், உங்கள் உறவுகளை – நான் உட்பட உரிமைச் சொந்தங்களை, அண்மையில் குழம்பித் திகைக்கச் செய்துள்ள ஒன்றை, உங்கள் முகத்திற்கு நேரே சொல்லப் பலரும் தயங்கிக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை இந்த திறந்த மடல் வழியாக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனக்கு அந்த உரிமை இருக்கிறது என்றே நம்புகிறேன்.

வரப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவையும் அ.தி.மு.கவையும் ஆதரிக்கப் போவதாக நீங்கள் பேசியும் எழுதியும் வருவது எங்கள் நெஞ்சங்களில் ஆயிரம் இடிகளை ஒன்றாக இறக்கியுள்ளது.

நம் தமிழினத்தை அழித்து, மென்று, உமிழ்நீரால் ஊறவைத்த காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஆனால் அதற்காக அ.தி.மு.கவை ஆதரிக்கவேண்டும் என்றால் எப்படி?

யார் இந்த ஜெயலலிதா?

‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்ற, காலத்தால் அழிக்க முடியாத அரும்பெரும் பொன்மொழியை உதிர்த்தவர் அல்லவா? அதுதான் அவருடைய ‘உண்மையான உள்ள வெளிப்பாடு’!

தேசியத் தலைவரைப் பிடித்து இழுத்து வந்து தூக்கில்போட ஆசைப்பட்டவர், நோய்வாய்ப்பட்ட ஐயா ஆன்டன் பாலசிங்கம் இந்தியாவில் சிகிச்சை எடுக்க முடியாமல் மூர்க்கமாகத் தடுத்து அவர் உயிருக்கு உலையானவர், வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்களைப் பொடாக் கொடுஞ் சிறையில் அடைத்தவர், இப்படியெல்லாம் கொடுமைகள் புரிந்ததற்கு இன்று வரை ஒப்புக்குக்கூட வருந்தாதவர், இன்றளவும் ராஜபக்சே புரிந்த இனப்படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசாதவர், அந்தக் கொலைகாரனுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசைக் கண்டிக்காதவர், தமிழர்களின் வாக்கைப் பெறுவதற்காக ‘தமிழீழம் அமைத்துத் தருவேன்’ என்று முழங்கிவிட்டு, தமிழ் மக்கள் இவர் ‘சிலநாள் மட்டும் நடிக்க வந்த புது நாடகத்தை’ நம்பவில்லை என்றதும், உண்ணாவிரதக் களைப்பு நீங்க கொடாநாடு போய்விட்டவர் – இவரையா சீமான் நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்கிறீர்கள்? என்ன கொடுமை இது?

உங்கள் தர்க்கப்படி பார்த்தால் இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவைத் தடுக்க ரணில் விக்ரமசிங்கேவை நம் அண்ணன் பிரபாகரன் ஆதரித்திருக்க வேண்டும், அப்படித்தானே? இதைத்தான் இந்து ராம் சொன்னார், நக்கீரன் பேட்டியில் ரணிலே சொன்னார், கலைஞரும் ஆமோதித்தார். அண்ணனுக்கு அருவருப்பாகத் தெரிந்த சந்தர்ப்பவாதம் உங்களுக்கு மட்டும் தேர்தல் வியூகமாகத் தெரிவது எப்படி இயக்குனரே?

உங்கள் நிலையை சுபாஷ் சந்திரபோசோடு ஒப்பிடுகிறீர்கள். அவர் பிரிட்டனை எதிர்க்க ஜப்பானியனை நாடியதாகக் கூறுகிறீர்கள். ஆம் உண்மைதான். ஆனால் ஜப்பான் பிரிட்டனின் எதிரிநாடு! பிரிட்டனை மெய்யாகவே எதிர்த்தது, போர் புரிந்தது. களத்தில் நின்றது. எனவே போஸ் ஜப்பானிய ‘இராணுவ’த்தின் உதவியை நாடினார். இங்கே ஜெ உண்மையிலேயே காங்கிரசை எதிர்க்கிறாரா? இந்த வகையிலும் கலைஞர் செய்வதைத்தானே ஜெவும் செய்கிறார்?

தீயை அணைக்க சாக்கடையை வீசலாம். பெட்ரோலை வீசலாமா?

கலைஞரின் இனத் துரோகத்தைத் தோலுரித்துக் காட்டும் நீங்கள் ஜெ.யின் இனத் துரோகத்தையும் உரிக்க வேண்டாமா? அதை மன்னிக்க முடியாது என்றால் இதையும் மன்னிக்க முடியாது அல்லவா?

‘ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டால் எதிர்த்து முழங்குவேன்’ என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் அவர் இதுவரை தமிழர் விரோதப் போக்கில் செயல்படவில்லை என்கிறீர்களா? அல்லது ‘இனி தமிழர் விரோதப் போக்கில் செயல்படமாட்டேன்’ என்று உங்களிடம் தனியாக ஏதும் உறுதியளித்திருக்கிறாரா?.

கலைஞர் காங்கிரசோடு அப்பிக் கொண்டிருப்பவர், ஜெ அதைப் பிய்த்து எடுத்துத் தான் அப்பிக் கொள்ளத் துடிப்பவர். இவர்களுக்கிடையே எதில்தான் வேறுபாடு உள்ளது – ஒருவர் வேட்டி, மற்றவர் சேலை அணிவது தவிர?

ஒருவேளை கூட்டணியில் ‘திடீர்’ மாற்றம் ஏற்பட்டு காங்கிரசுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துவிட்டால் உங்கள் ‘வியூகம்’ என்னாகும்? அப்போது காங்கிரசை ஒழிப்பதற்காகக் கலைஞரை ஆதரிப்பீர்களா?

‘அதிமுக ஆட்சிக்கு வந்தர்லும் சீமான் இருக்குமிடம் சிறைதான்’ என்கிறீர்கள். சரி, தமிழீழ ஆதரவாளர்களை – வைகோ, நெடுமாறன், சீமான் யாராயினும் – ஒடுக்குவதில் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கிடையே வேறுபாடு இல்லை என்று தெரிந்தும் அதிமுக ஆட்சிக்கு வர நாம் ஏன் உதவ வேண்டும். இப்போது அவசரமாகக் கலைஞரைப் பதவியிறக்கி, அம்மையாரை அரியணையில் அமர்த்தி நாம் சாதிக்கப் போவது என்ன? – அரசு அலுவலகங்களில் தொங்கும் படம் மாறும் என்பதைத் தவிர?

ஐந்தாண்டு கழித்து (ஜெ.யின் உண்மை உருவத்தைப் பார்த்து, ‘அதிர்ந்து’போய், மேடை, சிறை, வழக்கு, வாய்தாவெல்லாம் முடித்து) – அடுத்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவு கேட்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?

அவரை எதிர்ப்பதற்காக இவரையும், இவரை எதிர்ப்பதற்காக அவரையும் ஆதரித்து தேர்தலுக்குத் தேர்தல் கால்பந்தாக மாறி.. ஐயகோ.. அதைத்தானே இயக்குனரே, எங்கள் அன்பிற்கினிய வைகோ அவர்களும் தோழர் திருமாவளவனும் செய்து கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாகத் தமிழகம் இந்தக் கால்பந்து விளையாட்டைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது!

தமிழக அரசியல் என்பது ரங்க ராட்டினமாகி வெகுகாலமாகிவிட்டது. திமுகவும் அதிமுகவும் மேலும் கீழுமாகப் போய் வந்துகொண்டிருக்கின்றன. இதில் ஏறினால் மேலும் கீழுமாகச் சுற்றிச் சுற்றி, ‘தலைசுற்றிப்’ போகலாமே தவிர, வேறு ஊருக்குப் பயணம் போக முடியாது. இதை மக்கள் தெரிந்து கொண்டார்கள்… அதனால்தான் ஒரு மாற்று அரசியலை எதிர்பார்த்து தவம் கிடக்கிறார்கள்.

விஜயகாந்த் இட்டு நிரப்ப முயன்றது இந்த இடத்தைத்தான். இரு கழகங்களுக்கும் மாற்றாக அவர் இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் இன்றைய இடத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவரும் மக்களை ஏமாற்றி விட்டார். ஊழலற்ற நல்லாட்சி என்ற அடிப்படையில்தான் அவர் மக்களை அணுகினார். தமிழினம், தமிழர் இறையாண்மை என்ற அடிப்படையில் அணுகவில்லை. எனவேதான் காங்கிரசுக்குக் கைகொடுக்கும் நிலைக்கு நெருங்கி வந்தார். காலாவதியாகிப் போன இந்திய இறையாண்மை என்ற இறகுத் தொப்பியை அணிந்து வந்தவர் அவர். தமிழக அரசியல் வெற்றிடத்தை அவரால் நிரப்ப முடியாது என்பது நிதர்சனம்!

காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பது அவர்கள் தமிழீழத்தைச் சிதைத்தார்கள் என்பதற்காக மட்டும்தானா? இல்லவே இல்லை. இன்னும் விரிந்த நோக்கில், நம் தௌ்ளிய, நேரிய நோக்கமான ‘தேசிய இனங்களின் தன்னுரிமை, இறையாண்மை பெற்ற தமிழ்நாடு’ ஆகியவற்றின் முழுமுதல் எதிரியாகவும் இருப்பதால்தானே?

உங்களிடம் தமிழினம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும். ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு அன்று இந்தியத் தேசியம் தேவைப்பட்டது. இந்திய சுதந்திரத்தோடு அதன் தேவை முடிந்துபோய் விட்டது. காங்கிரஸ் கட்சி அத்தோடு கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக, தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தேசிய இன மக்களுக்கும் எதிராக வளர்ந்து, அடித்துத் தின்ன முயன்றது. ஆதனால் ‘திராவிட தேசியத்தின்’ தேவை உருவானது. திமுக அபரிதமான வெற்றி பெற்றது. ஆனால் பதவி நாற்காலியில் அமர்ந்த பின் தன் கொள்கைகளைக் கைகழுவி விட்டது.

திமுக வும் எதிர்க்கட்சியான அதிமுக வும் மீண்டும் ‘இந்திய தேசியத்’தைச் தூக்கிச் சுமக்கப் போட்டியிடுகின்றன. பதவிக்காக இந்தக் கழகங்கள் போட்டுக் கொள்ளும் பங்காளிச் சண்டை காங்கிரசுக்கு மறுபிறவி கொடுத்து விட்டது. ‘எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்’ என்ற அடிப்படையில் காங்கிரசைத் தமிழ்நாட்டிலிருந்து ஒழித்தால் கழகங்கள் இரண்டும் தமிழ்நாட்டை, தமிழரை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டி வரும். அந்த நிலையை ஏற்படுத்துவதே நம் போன்றோரின் அவசரக் கடமை.

தமிழ்த் தேசியமே இன்றைய தேவை. அதை அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு, களம் காணும் அரசியற் கட்சிகளே இல்லை என்ற நிலையில் நீஙகள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்கிறீர்கள் சீமான் அவர்களே… உங்கள் பொறுப்பு பெரும் பொறுப்பு. எதிர்காலத் தமிழினத்திற்கு நீங்கள் ஆற்றும் மகத்தான கடமை!

சிங்களன் தமிழ் மீனவனை நோக்கிச் சுடும் ஒவ்வொரு தோட்டாவிலும் இந்திய இறையாண்மை பொத்தலாகிக் கிழிந்து தொங்கும் நேரம் இது! இரண்டகம் செய்யும் இரட்டையர்களான திமுக வையும் அதிமுக வையும் ஒன்றாகக் கருதி, ஒரு சேர தனிமைப்படுத்த வேண்டும். பதவி அரசியலை சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலை மறுதலிக்க வேண்டும். தேர்தல் வரட்டும், போகட்டும். ஆனால் இந்த கொள்கை வழித் தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பது உங்கள் பணியாக இருக்க வேண்டும். இதை நீங்கள் செய்தால் எம்மைப் போன்ற தமிழ் உணர்வாளர்களின் ஆதரவு கிட்டும். தமிழ்த் தேசிய இயக்கங்கள் வலுவாக உங்கள் பின்னால் அணிவகுப்பார்கள். உலகத் தமிழர்கள் வலுக்கூட்டுவார்கள். நாளை அழிக்க முடியாத பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கலாம்.

அதைவிடுத்து நீங்களும் அரசியல் சதுரங்கத்தில் பகடையாக மாறி உருண்டீர்களானால், நாங்கள் பதைபதைத்துப் பார்த்து பத்தடி தள்ளி நிற்பதைத் தவிர வேறென்ன செய்வது?

நான் என்ன செய்யட்டும், பகலவன் படப்பிடிப்பை இப்போதே நடத்தலாமா என்று நண்பர்களைக் கேட்கிறீர்கள். சரி என்னுடைய யோசனையைச் சொல்கிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று ‘நாம் தமிழர்’ கட்சி அமைப்பை வலுப்படுத்துங்கள். தமிழ்த் தேசியச் சிந்தனையை மக்களிடம் வலுவாக வளர்த்தெடுங்கள். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்யலாம்.

இல்லை, இந்தத் தேர்தலிலேயே நின்றாக வேண்டும் என்றால், நல்லது, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் போட்டியிடுங்கள். காங்கிரசை எதிர்த்துத் தோற்கடிப்போம்.

மற்றத் தொகுதிகளில் ‘திமுக வும் அதிமுக வும் ஒன்றே’ என்ற நிலைப்பாட்டை எடுங்கள். ’49 ஓ’ வுக்குக் குரல் கொடுங்கள். அது உங்களுக்கு உடன்பாடு இல்லை எனில், யார் வென்றால் என்ன, அந்தத் தொகுதிகளைப் பற்றி கவலையில்லை என்று முடிவெடுங்கள்.

இலங்கைப் புறக்கணிப்பை வலுவாக மேற்கொள்வோம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தமிழகத்தில் கொண்டு வருவோம். தமிழீழமும் தமிழ்நாடும் ஒன்றாக விடியல் காணட்டும்!

இதையெல்லாம் செய்தபின் பகலவனுக்காகவும் நேரம் ஒதுக்கினால், நல்லது.. சொல்லியனுப்புங்கள், நானும் வந்து பாடல் எழுதுகிறேன்.

திரை அதிர, தமிழனின் சிறை உடைப்போம்!
என்றும் அடங்கா தமிழ்த் தாகத்தோடு என்று தாமரை தெரிவித்துள்ளார்.

Monday, January 24, 2011

அ.தி.மு.க., கூட்டணியில் மொத்தம் 18 கட்சிகள்: தே.மு.தி.க,வுக்கு 36, ம.தி.மு.க.,வுக்கு 15

வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 144 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 90 தொகுதிகளில் தே.மு.தி.க.,வுக்கு 36 தொகுதிகள் உட்பட, 16 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்வதற்குரிய முதல் கட்ட பேச்சுவார்த்தையை அ.தி.மு.க., துவக்கியுள்ளது.

தொகுதி பங்கீடு எண்ணிக்கை முடிவுக்கு தே.மு.தி.க., தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது என்றாலும், தேர்தல் செலவு தொகை பேச்சுவார்த்தை முடிவு எட்டாமல் இருப்பதால், அக்கட்சி அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுவதில் இழுபறி நீடிக்கிறது.தி.மு.க., தலைமையில் காங்கிரஸ், பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகள் உட்பட, சில கட்சிகள் ஒரு அணியாக போட்டியிடுகின்றன. அ.தி.மு.க., தலைமையில் ஏற்கனவே ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கூட்டணியில் உள்ளன. இந்த கூட்டணியில் புதிய வரவாக தே.மு.தி.க., இடம் பெறுமா என்ற கேள்வி அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது.

அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை முன்னாள் அமைச்சர்கள் சிலர் ரகசியமாக நடத்தினர். அதில் அ.தி.மு.க., தரப்பில் 36 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தருவதற்கு விருப்பம் தெரிவித்தன. இதற்கு தே.மு.தி.க., தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட்டாலும், தேர்தல் செலவுக்கான தொகையை ஒதுக்கீடு செய்வது குறித்த பேச்சுவார்த்தை இன்னும் முழுமை பெறவில்லை. இதனால், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம் பெறுவதில் இழுபறி நீடிக்கிறது.

ம.தி.மு.க.,வுக்கு 15 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கு அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்திற்கு கள்ளர், மறவர், அகமுடையார் என்ற அடிப்படையில் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.கிருஷ்ணசாமி தலைமையில் உள்ள புதிய தமிழகம் கட்சிக்கு மூன்று தொகுதிகள், செ.கு.தமிழரசன் தலைமையில் உள்ள இந்திய குடியரசுக் கட்சிக்கு ஒரு தொகுதி, நடிகர் கார்த்திக் தலைமையில் இயங்கும் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சிக்கு இரு தொகுதிகளும் ஒதுக்கப்படுகின்றன.

கொங்கு முன்னேற்ற பேரவைக்கு நான்கு தொகுதிகள், பச்சமுத்து தலைமையில் உள்ள இந்திய ஜனநாயக கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆக மொத்தத்தில் அ.தி.மு.க.,வுடன் சேர்த்து அக்கூட்டணியில், 18 கட்சிகள் இடம் பெறவுள்ளன.இதில், தமிழக தேசியவாத காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, அம்பேத்கர் மக்கள் கட்சி, கிறிஸ்துவ மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக், தமிழ் மாநில முஸ்லிம் லீக், யாதவர் பேரவை, வன்னியர் கூட்டமைப்பு, தலித் மக்கள் முன்னணி, கிறிஸ்துவ மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய குடியரசு கட்சி, ராஜிவ் மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாடு அனைத்துக் கட்டடத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம், வன்னிய குல சத்திரிய நல அமைப்புகளின் மத்திய மையம் ஆகிய கட்சிகளும் அ.தி.மு.க.,வை ஆதரிக்கும் கட்சிகளாக விளங்குகின்றன. இதில் உள்ள சில கட்சிகளுக்கும் தொகுதி பங்கீட்டில், "ஜாக்பாட்' அடிக்கவும் வாய்ப்புள்ளது என அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sunday, January 23, 2011

ஆளுநர் பரத்வாஜ் பிறப்பித்த உத்தரவில் எதியூரப்பாவுக்கு எதிராக 15 குற்றச்சாட்டுக்கள்

கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக 15 வழக்குகளைத் தொடரலாம் என்று ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அளித்துள்ள அனுமதிக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அந்த வழக்குகள் விவரம்:

1. பெங்களூர் , கே.ஆர்.புரம், ராச்சனஹள்ளி கிராமத்தில், சர்வே எண் 55-2ல் உள்ள 1 ஏக்கர் 2 குண்டா நிலத்தை 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் டினோட்டிபை செய்துள்ளார் எதியூரப்பா. இதன் மூலம் அவர் அடைந்த லாபம் ரூ. 19.6 கோடி.

2. கே.ஆர்.பாரும், ராச்சனஹள்ளி, சர்வே எண் 56ல் உள்ள 16 குண்டா நிலத்தை 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் டினோட்டிபை செய்துள்ளார். மேலும், இந்த நிலம் பின்னர் முதல்வரின் மகன்கள், மருமகன் ஆகியோருக்கு 75 சதவீத பங்குள் உள்ள தவளகிரி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் முதல்வர் குடும்பம் அடைந்த லாபம் ரூ. 7.4 கோடியாகும்.

3. பெங்களூர், நாகவரா,வயாலிகாவல் பகுதியில், 47,972 சதுர அடி உடைய சாலையை சட்டவிரோதமாக தவளகிரி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் ஆக்கிரமித்து, கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கிடைத்த லாபம் ரூ. 16.26 கோடியாகும்.

4. அரகரே கிராமத்தில், 2 ஏக்கர் 5 குண்டா நிலம் டினோட்டிபை செய்யப்பட்டுள்ளது. இதில் 1 ஏக்கர் 7.5 குண்டா நிலத்தை, முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கு விற்றுள்ளனர். இதன் மூலம் கிடைத்த லாபம் ரூ. 25.39 கோடியாகும்.

5. பெங்களூர் வடக்கு தாலுகா, லொட்டேகொள்ளஹள்ளி கிராமத்தில், 9 குண்டா நிலத்தை டினோட்டிபை செய்துள்ளனர். அதேபோல, அதே பகுதியில், 14 குண்டா நிலத்தை, உள்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் அஷோகாவுக்கு சாதகமாக டினோட்டி செய்துள்ளனர்.

6. அகரா கிராமத்தில், 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஏக்கர் 5 குண்டா நிலத்தை டினோட்டிபை செய்துள்ளனர். இதில் 2 பகுதி நிலம் (16,000 சதுர அடி மற்றும் 5000 ச.அடி), மார்ச் மாதத்தில் எலியான் டெவலப்பர்க் நிறுவனத்திற்கு தலா ரூ. 1.76 கோடி மற்றும் ரூ. 44 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெங்களூர் வளர்ச்சி ஆணையத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ. 74.05 கோடியாகும். நிலத்தை வாங்கிய உகேந்தர் என்பவருக்கு ரூ. 14.6 கோடி லாபம். முதல்வர் குடும்ப உறுப்பினர்களுக்கு லாபம் ரூ. 2 கோடியாகும்.

7.ஆனேகல் தாலுகாவில் பெருமளவிலான விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக அறிவித்து, முதல்வர் குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் தவளகிரி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் மற்றும் பாலாஜி கிருபா டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்திற்கும் உதவியுள்ளார் முதல்வர். இதற்காக விதிமுறைகளில் மோசடியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

8. ஷிமோகா மாவட்டத்தில், மாச்சனஹள்ளி-ஹொன்னவிலே தொழிற்பேட்டை பகுதியில், தவளகிரி டெவலப்பர்ஸ், பகத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்களுக்காக 100 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி ரூ. 6 கோடி லாபம் கண்டுள்ளார் முதல்வர். இதுபோக ஹொசதுர்கா தாலுகாவில் 330 ஏக்கர் நிலத்தை மாங்கனீஸ் மற்றும் இரும்புத் தாது சுரங்கங்கள் அமைக்க ஒதுக்கியுள்ளனர்.

9. பிரகாஷ் ஷெட்டி என்பவருக்காக மொத்தம் 1 ஏக்கர் 91 குண்டா நிலத்தை டினோட்டிபை செய்துள்ளனர். இதன் மூலம் பெங்களூர் வளர்ச்சி ஆணையத்திற்கு ரூ. 101.27 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் குடும்பத்தினருக்கு ரூ. 2.75 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

10. முதல்வர் குடும்பத்தினரின் பார்ட்னரான பெஸ்டோ இன்பிராஸ்டிரக்சர் பெங்களூர் நிறுவனத்திற்காக 11 ஏக்கர் 25குண்டா நிலத்தை டினோட்டிபை செய்துள்ளனர். இதை பி.ஆர்.ஷெட்டி என்பவருக்காக செய்துள்ளனர். அதற்குப் பதிலாக, ஷெட்டி, தனது 2 ஏக்கர் 20 குண்டா நிலத்தை பெஸ்டோவுக்கு கொடுத்துள்ளார். இதை ரூ. 3.75 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால் அதன் மார்க்கெட் மதிப்பு ரூ. 54.45 கோடியாகும். லாபம், ரூ. 50 கோடி -முதல்வர் குடும்பத்துக்கு.

11. முதல்வரின் குடும்பம் தங்களது தொழில்முறை கூட்டாளிகளான பகத் ஹோம்ஸ், கான்டர் பிசினஸ் சொல்யூஷன்ஸ், எலியான் டெவலப்பர்ஸ் ஆகியவை மூலம் செயலிழந்து போயிருந்த ஹெல்த் ஜோன் அட்வைசர்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தின. இந்த நிறுவனத்திற்கு ரூ. 34.41 கோடி மார்க்கெட் மதிப்பு்லள 9 ஏக்கர் நிலத்தை ராச்சனஹள்ளியில் ஒதுக்கியுள்ளனர்.

12. உத்தரஹள்ளி கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தை டினோட்டிபை செய்து, பாஜக எம்.எல்.ஏ. ஹேமசந்திர சாகருக்கு கொடுத்துள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ. 175 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் குடும்பம் ரூ. 3.35 கோடி லாபத்தைக் கண்டுள்ளது.

13. ஆதர்ஷ் டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கு முதல்வர் குடும்பம் சாதகமாக நடந்து அரசு நிலத்தை ஒதுக்கியதன் மூலம் முதல்வர் குடும்பத்திற்கு ரூ. 5 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

14. உச்சநீதிமன்றம் , உயர்நீதிமன்றஉத்தரவுகளை மீறி, நாகரபவி கிராமத்தில்,5 ஏக்கர் 13 குண்டா நிலத்தை டினோட்டிபை செய்துள்ளனர். இதனால் பெங்களூர் வளர்ச்சி ஆணையத்திற்கு ரூ. 115 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

15. பெங்களூர் ஆர்.எம்.வி. 2வது ஸ்டேஜில் முதல்வர் மகன் ராகவேந்திராவுக்கு சட்டவிரோதமாக ஒதுக்கியுள்ளனர். இந்த நிலத்தைத்தான் பின்னர் ராகவேந்திரா சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து அரசிடம் திரும்பக் கொடுத்தார்.

இந்தப் புகார்களைப் பட்டியலிட்டுள்ள ஆளுநர் பரத்வாஜ், எதியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த விதி முறை மீறல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளால் அரசுக்கு ரூ. 465.32 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது, முதல்வர் குடும்பத்தினர் ரூ. 189.71 கோடி பலன்களை சந்தித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முதல்வர் மீது வழக்கு தொடரலாம் என்றும் வழக்கறிஞர்கள் சிராஜின் பாஷா மற்றும் பலராஜ் ஆகியோருக்கு ஆளுநர் அனுமதி கொடுத்துள்ளார்.

இருப்பினும் உள்துறை அமைச்சர் அஷோகா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி தரவில்லை. எதியூரப்பா மீது மட்டுமே கொடுத்துள்ளார். அஷோகா மீதும் வழக்கு தொடர இரு வக்கீல்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் அந்தக் கோரிக்கை தனியாக பரிசீலிக்கப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் படையால் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஜெயக்குமார் ஊனமுற்றவர்

நாகப்பட்டனம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற மீனவரை இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல் கொடூரமாக கொன்றுள்ளது. இவர் ஊனமுற்ற மீனவர் ஆவார். தனது இயலாமையை சொல்லி உயிர்ப்பிச்சை கேட்டும் அதை சற்றும் காதில் போட்டுக் கொள்ளாமல், அவரது கழுத்தில் கயிற்றைப் போட்டு இறுக்கி காட்டுமிராண்டித்தனமாக கொன்றுள்ளது இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல்.

சமீபத்தில்தான் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற 19 வயது மீனவரை இலங்கை ரவுடிக் கும்பல் சுட்டுக் கொலை செய்தது. இந்த சோகம் கூட மறையாத நிலையில், மத்திய அரசு உறுதிமொழி அளித்தும் கூட, மீண்டும் ஒரு தமிழக மீனவரை படு கொலை செய்துள்ளது சிங்களக் கும்பல்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு படகில் புஷ்பவனத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் மூவர் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் தாக்கினர். தாக்குதலில் ராஜேந்திரனும்,செந்திலும் கடலில் குதித்துள்ளனர். ஆனால் மீனவர் ஜெயக்குமார் உடல் ஊனமுற்றவர் என்பதால் அவரால் அப்படிச் செய்ய முடியவில்லை. இதனால் தன்னை விட்டுவிடும்படி அவர் இலங்கை கடற்படை ரவுடிகளிடம் உயிர்ப்பிச்சை கேட்டுக் கதறியுள்ளார். ஆனாலும் மோசமான காட்டுமிராண்டிக் கும்பலான இலங்கை கடற்படை ரவுடிகள், ஜெயக்குமாரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி படகைச் சுற்றிச் சுற்றி இழுத்ததில் ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஹிட்லருக்குக் கூட இப்படிப்பட்ட கொடூர மனம் இருந்திருக்காது என்று கருதும் அளவுக்கு மிக மிக மோசமான வெறித்தனத்தைக் காட்டியுள்ளனர் இலங்கை காவாலிக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.

இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்தடுத்து 2 மீனவர்களை இலங்கை கும்பல் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் தமிழக மீனவர்கள் பேரதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

கடந்த 12ம் தேதிதான் பாண்டியன் கொல்லப்பட்டார். இதையடுத்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு தந்தி அடித்தார். இதையடுத்து மத்திய அரசு என்றும் இல்லாத சுறுசுறுப்புடன் (தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால்) இலங்கை தூதரை அழைத்து விளக்கம் கேட்டு அனுப்பி வைத்தது.

மேலும், தமிழக மீனவர்கள் மீது இனிமேல் எந்த விதமான தாக்குதல் சம்பவங்களும் நடைபெறாது என முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளேன் என, நேற்றுதான் கிழக்கு பிராந்திய கடலோர பாதுகாப்புப் படை தளபதி எஸ்.பி சர்மா கூறியிருந்தார். இந்த நிலையில் இன்னொரு இந்தியத் தமிழரை வீழ்த்தியுள்ளது இலங்கைக் கடற்படை கும்பல்.

ஜெயக்குமார் உடலுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஜெயக்குமாரின் உடலுடன் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு இன்று மீனவர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்ந்து மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தி மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கக் கோரி மீனவர்கள் கோஷமிட்டனர். மத்திய, மாநில அரசுகள் விரைவான, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

ஜெயக்குமார் சார்ந்த புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலைநிறுத்தத்தில் குதித்தனர்

இந்த நிலையில், இலங்கைக் கடற்படையின் இந்த கொடூரச் செயலைக் கண்டித்து புஷ்பவனம் கிராம மீனவர்கள் கடலுக்குப் போகாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இலங்கை வெறிச் செயலால் மீனவர் கிராமங்களில் பரபரப்பும், கொந்தளிப்பும், கொதிப்பும் நிலவுகிறது.

Wednesday, January 19, 2011

உலகம் பூராவும் எதிர்பார்க்கும் சந்திப்பு : ஒபாமா - ஹூ பேச்சு பலன் தருமா?

பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் அமெரிக்கா சென்ற சீன அதிபர் ஹூ ஜிண்டாவோவுக்கு, நேற்றிரவு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரவு விருந்து அளித்தார். இந்நிகழ்ச்சியில் ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட மிக முக்கியமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
உலகின் இரு பெரும் வல்லரசுகளின் அதிபர்களின் சந்திப்பு, உலகளவில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கரன்சி கொள்கை, வர்த்தகம் மற்றும் மனித உரிமை கொள்கைகள் போன்றவை உலகளவில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ நான்கு நாள் சுற்றுப் பயணமாக நேற்று அமெரிக்கா வந்தடைந்தார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப் படை தளத்தில் வந்திறங்கிய அவரை, துணை அதிபர் ஜோ பிடேன் வரவேற்றார். ஹூவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்றிரவு வெள்ளை மாளிகையில் உள்ள விருந்து அறையில், ஹூவுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா, வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் டாம் டானிலன் ஆகியோரும், ஹூவுடன் இரண்டு சீன உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். இது பற்றிய வேறு செய்திகளை வெள்ளை மாளிகை வெளியிடவில்லை. ஆனால், இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலர் ராபர்ட் கிப்ஸ், "பேச்சுவார்த்தைக்கான ஒரு சிறிய முன்னேற்பாட்டை இந்த விருந்து அளிக்கும்' என்று கருத்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ஒபாமா - ஹூ இடையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து, இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அப்போது, அமெரிக்க பத்திரிகையாளர்கள் தரப்பில் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும், சீன பத்திரிகையாளர்கள் தரப்பில் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் ஹூ பதிலளித்தார்.

இதையடுத்து, சீனாவுக்கான அமெரிக்க ஏற்றுமதியை அதிகரிக்கும் விதத்திலும், அமெரிக்காவில் சீனாவின் முதலீட்டை அதிகரிக்கும் விதத்திலும், மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் பால்மர், கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத் தலைவர் லாய்ட் பிளாங்க்பெயின், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத் தலைவர் ஜெப் இம்மெல்ட், மோட்டாரோலா நிறுவனத் தலைவர் க்ரக் பிரவுன் மற்றும் போயிங் நிறுவனத் தலைவர் ஜிம் மெக் நெர்னே ஆகியோருடன் ஹூ மற்றும் ஒபாமா பேச உள்ளனர்.

மனித உரிமை விவகாரம்: இதற்கிடையில், ஹூவின் வருகைக்கு முன், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க எம்.பி.,க்கள் சிலர், சீனாவில் மனித உரிமைகளின் மோசமான நிலை குறித்து கவலை தெரிவித்தனர். இப்பிரச்னை குறித்து ஒபாமா, ஹூவிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். கடந்த வாரம் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, சீனாவில் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற லியு ஷியாபோ உள்ளிட்ட அரசியல் கைதிகளை, அந்நாட்டு அரசு விடுவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதேநேரம், சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன் தலைவர் லியோனார்ட் லியோ நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, "சீனாவில் மத சுதந்திரம் அளிக்க அந்நாட்டு அரசு தயங்குவது பற்றியும் ஹூவிடம் பேச வேண்டும் என அதிபரை வலியுறுத்துகிறோம்' என்றார். கடந்த வாரம், ஹூவின் வருகையை முன்னிட்டு, அமெரிக்காவில் உள்ள சீன நிபுணர்கள் மற்றும் சீன மனித உரிமை ஆர்வலர்களைச் சந்தித்த ஒபாமா, ஹூ உடனான பேச்சுவார்த்தையில் மனித உரிமைகள் மற்றும் சீனாவில் கட்டுப்படுத்தப்படும் மதச் சுதந்திரம் ஆகியவை முக்கிய இடம் பெறும் என உறுதியளித்திருந்தார். இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலர் ராபர்ட் கிப்ஸ், "பேச்சுவார்த்தையில் கடினமான எந்த ஒரு பிரச்னையையும் தவிர்க்க வேண்டும் என்பது ஒபாமாவின் நோக்கமல்ல. பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் அனைத்தும் பேச்சுவார்த்தையில் இடம் பெறும்' என்றார். ஆனால், அமெரிக்காவைத் தாண்டி சீனா முன்னேற்றம் பெறும் வகையில் எவ்வித திட்டங்களும் ஏற்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது.

மத்திய மந்திரி சபை மாற்றத்தில் தி.மு.க.,வுக்கு அதிர்ச்சி : மம்தா கட்சிக்கும் வாய்ப்பில்லை

மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. மூன்று பேர் கேபினட் அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றனர். மூன்று புதுமுகங்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி, பெட்ரோலியத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதே நேரத்தில், தி.மு.க., மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., கட்சியைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. தொலைத் தொடர்பு அமைச்சராக கபில் சிபல் நீடிப்பார் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும், எண்ணிக்கை அளவில் சில சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அமைச்சரவை மாற்றம் நேற்று நிகழ்ந்தது. இந்த மாற்றத்தில், தனிப் பொறுப்புடன் கூடிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த பிரபுல் படேல், கனரக தொழில்கள் துறைக்கான கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளது கூட்டணிக் கட்சிக்கு தரப்பட்ட அங்கீகாரம் ஆகும். கடந்த 1996ம் ஆண்டில் ஐக்கிய முன்னணி அரசில் கேபினட் அமைச்சராக இருந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெனி பிரசாத் வர்மா, தனிப் பொறுப்புடன் கூடிய உருக்குத் துறை இணை அமைச்சராகியுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த கே.சி.வேணுகோபால், மின்துறை இணை அமைச்சராகியுள்ளார். இந்த இருமாநிலங்களிலும் விரைவில் தேர்தல் வருகிறது. மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அந்தத் துறையை கவனித்து வந்த முரளி தியோரா, கம்பெனிகள் விவகாரத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜெய்பால் ரெட்டி கவனித்து வந்த நகர்ப்புற மேம்பாட்டுத் துறை கமல் நாத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 20 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் முயற்சியில் முழுவெற்றி பெறாத அவர் பொறுப்பை இனி சி.பி.ஜோஷி கவனிப்பார்.

விவசாயத் துறை அமைச்சராக சரத் பவார் நீடிக்கிறார். அதே நேரத்தில், அவர் கவனித்து வந்த நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் சிவில் சப்ளை துறை பறிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக உணவு பதப்படுத்துதல் தொழில்கள் துறை வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக அவர் விரும்பியபடி இலாகாக்கள் குறைக்கப்பட்டன. உள்துறை இணை அமைச்சராக இருந்த அஜய் மக்கான், தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை பொறுப்பை கவனித்து வந்த எம்.எஸ்.கில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது, காமன்வெல்த் ஊழல் குறித்த புகாருக்கு கிடைத்த பதில் என்று கருதலாம். வெளிநாட்டு இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவிக்கு, கூடுதல் பொறுப்பாக சிவில் விமானப் போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புத் துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக கபில் சிபல் நீடிக்கிறார். அதே நேரத்தில், அவரிடம் இருந்த அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை, பவன் குமார் பன்சாலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செல்ஜாவிடம் இருந்த சுற்றுலா துறை பறிக்கப்பட்டுள்ளது. அவர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையோடு, கலாசாரத் துறையையும் கூடுதலாக கவனிப்பார். ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது, வெளியுறவுத் துறை இணை அமைச்சராக, சசி தரூருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். பார்லிமென்ட் விவகாரத் துறை இணை அமைச்சர் நாராயணசாமி, அந்தப் பொறுப்போடு, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் பொறுப்பு மற்றும் பணியாளர் நலன், பொதுமக்கள் குறை மற்றும் ஓய்வூதியத் துறையையும் சேர்த்து கவனிப்பார். மின் துறை இணை அமைச்சர் பாரத்சிங் சோலங்கிக்கு ரயில்வே இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய அமைச்சரவை மாற்றத்தில் எந்த ஒரு அமைச்சரும் நீக்கப்படவில்லை. சிதம்பரம், பிரணாப், அந்தோணி , கிருஷ்ணா, மம்தா, ஆனந்த் சர்மா ஆகியோரின் இலாகாக்களிலும் மாற்றமும் இல்லை. எல்லா இலாகாக்களிலும் காங்கிரஸ் பிரதிநிதி இருக்கும் வகையில் மாற்றம் அமைந்திருக்கிறது.

புதிதாக பதவியேற்றவர் களுக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில், துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நேற்றைய அமைச்சரவை மாற்றத்தின் மூலம், மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 35 பேர் கேபினட் அமைச்சர்கள், 6 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், மீதமுள்ளவர்கள் இணை அமைச்சர்கள். மேலும், அமைச்சரவை மாற்றத்தில், தி.மு.க., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு கைவிரிக்கப்பட்டுள்ளது. இரு கட்சிகளைச் சேர்ந்த யாருக்கும் இத்தடவை அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. மத்தியில் தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவுக்கு பதிலாக பாலு அமைச்சராவார் என்ற பேச்சு டில்லியில் இருந்தது. ஆனால் புதிதாக யாருக்கும் பதவி தரப்படவில்லை. தி.மு.க., அமைச்சர்களுக்கும் இலாகா மாற்றம் இல்லை. பழைய பொறுப்பிலேயே தொடருகின்றனர்.

மூன்று புதிய மந்திரிகள் பின்னணி என்ன? விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில், மூன்று புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த வேணுகோபால், பஞ்சாபைச் சேர்ந்த அஸ்வினி குமார், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெனி பிரசாத் வர்மா ஆகியோர் நேற்று புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். பஞ்சாப் சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் பிரபோத் சந்திராவின் மகன் அஸ்வினி குமார்(58). டில்லியில் பிறந்த இவர், தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். சுப்ரீம் கோர்ட் வக்கீலான இவர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் இருந் து உள்ளார். வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்த சசி தருர் கிரிக்கெட் போட்டி விவகாரத்தில் ராஜினாமா செய்ததால், கேரள மாநிலத்தைச் சேர்ந்த வேணுகோபாலுக்கு(47) அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது. கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், பல்கலைக் கழக அளவில் கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர். கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆலப்புழாவில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். மூன்று முறை எம்.எல்.ஏ., வாக இருந்துள்ளார். மாநில சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். நாயர் சமூகத்தைச் சேர்ந்த இவர், கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியு உஇள்ளார். உத்தர பிரதேச மாநிலம் கோண்டா தொகுதி எம்.பி.,யான பெனி பிரசாத் வர்மா(69), குர்மி இனத்தின் தலைவராக உள்ளார். ஏற்கனவே இவர் நான்கு முறை மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். அவ்வப்போது கட்சி மாறும் இவர், கடந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சியிலிருந்து மீண்டும் காங்கிரசுக்கு தாவினார்.

அடுத்த மாற்றம் எப்போது? ""பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின், பெரிய அளவில் மாற்றம் இருக்கும்,'' என, பிரதமர் மன்மோகன் கூறினார். மேலும் கூறியதாவது: தெலுங்கான தனி மாநில கோரிக்கை தொடர்பாக, ஆந்திர அரசியல் கட்சி தலைவர்களுடன் உள்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின் அந்தத் தலைவர்கள் கிருஷ்ணா கமிட்டி அறிக்கையை படிப்பர். அதன் பின் மீண்டும் ஆலோசனை நடைபெறும், என்றார்.

Sunday, January 9, 2011

கூட்டணி குழப்பத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்

தமிழக சட்டசபை தேர்தலில், எந்த கழகத்தோடு, "கை' கோர்ப்பது என்பதில், தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து வரும் இரு வேறு கருத்துகள் காரணமாக காங்கிரஸ் தலைமை முடிவெடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இந்நிலையில் கூட்டணிக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தி.மு.க., வற்புறுத்துவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், "தி.மு.க., கூட்டணி வேண்டாம்' என்ற கோஷத்தை முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவனும், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜாவும் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இதற்கு மாறாக, "தி.மு.க., கூட்டணி வேண்டும்' என்ற கோஷத்தை சிதம்பரம், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.தி.மு.க., கூட்டணியில் தொடரக்கூடாது என மூச்சுக்கு மூச்சு பேசி வரும் இளங்கோவன் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரை சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரதமரிடம் தி.மு.க., தலைவர் வலியுறுத்தியுள்ளார்."கட்சி விவகாரத்தில் நான் தலையிடுவதில்லை. சோனியாவிடம் தெரிவியுங்கள்' என பிரதமர் கூறிவிட்ட நிலையில், டி.ஆர்.பாலு மூலமாக சோனியாவிடம் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டணி குறித்து இளங்கோவன் தொடர்ந்து கூறி வரும் கருத்துக்கு, காங்கிரஸ் மேலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்; அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது தி.மு.க., தரப்பின் கோரிக்கையாக உள்ளது.இளங்கோவன் மீது மேலிடம் நடவடிக்கை எடுத்தால், தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்டது என்றும், அப்படி நடவடிக்கை எடுக்காமல், மேலிடம் மவுனம் சாதித்தால் கூட்டணி மாறுவது உறுதி என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி தொடர்பாக தி.மு.க., காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள உரசல்கள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது: அடையாறு பூங்கா திறப்பு விழாவிற்கு பிரதமர் வரவிரும்பவில்லை என்ற காரணத்திற்காக, அவரை வரவேற்க முதல்வர் செல்லாமல், துணை முதல்வரை அனுப்பி வைத்தார். ராஜ்பவனில் பிரதமரை சந்திக்க அப்பாய்ன்ட்மென்ட் கொடுக்கப்பட்டிருந்தும், வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் கலந்து கொண்டார். சட்டசபை வளாகத்தில் உள்ள மீன்களுக்கு அவர் உணவளித்து விட்டு பிரதமரைச் சந்திப்பதை தவிர்த்தார். புதிய சட்டசபை கட்டட பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

அந்தக் கட்டடத்தை பிரதமரும், சோனியாவும் திறந்து வைத்தனர். கூட்டணிக்காக அவர்கள் காட்டிய பெருந்தன்மை, தி.மு.க.,விடம் இல்லாமல் போனது?ஒரு கிலோ அரிசி, இலவச ஆம்புலன்ஸ், கான்கிரீட் வீடுகள் திட்டங்களில் மத்திய அரசின் மானியம் இருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் இளங்கோவன் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. "கூட்டணியை விட்டு விலகினால் யாருக்கு நஷ்டம்' என முதல்வர் கேட்கிறார். அதற்கு இளங்கோவன் "எங்களுக்கு நஷ்டம் இல்லை. உங்களுக்கு தான் நஷ்டம் வரும்' என பதிலடி தருகிறார்.தி.மு.க., கூட்டணி வேண்டாம்; அ.தி.மு.க., கூட்டணி மலரும், தே.மு.தி.க., வுடன் மூன்றாவது அணி அமைக்கலாம் என தொண்டர்களின் மன உணர்வுகளை தான் இளங்கோவன் பிரதிபலிக்கிறார். அவருக்கு கருத்து சொல்ல உரிமை இல்லையா?

மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி காலத்தில் இருவரும் தனித்தனியாக கூட்டணி பற்றிய கருத்துகளை மேலிடத்தில் தெரிவிப்பார்கள். ஒரு தலைவருடைய கருத்தை மேலிடம் ஏற்றுக் கொள்ளும் போது, மற்றொரு தலைவர் அதை ஏற்றுக் கொள்வார்.அதேபோல எம்.ஜி.ஆர்., காலத்தில் காங்கிரஸ் கட்சியை காளிமுத்து மூலம் விமர்சனம் செய்வார். காங்கிரஸ் மேலிடம் சரியானதும், காளிமுத்துவும் அடங்கி விடுவார். எனவே கூட்டணி விமர்சனம் என்பதெல்லாம் காங்கிரசுக்கு புதுசு அல்ல.இந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும். துணை முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என்பது தொண்டர்களின் எண்ண ஓட்டம். அதை இளங்கோவன் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.

"இந்த ஆட்சி நன்றாக இருக்கிறது' என காலையில் சொல்லிவிட்டு நள்ளிரவில் அதே ஆட்சியை கலைத்து விடுவதும், "கூட்டணி வலுவாக இருக்கிறது' என கூறிவிட்டு கூட்டணியை முறித்த வரலாறுகள் இருக்கின்றன. தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கிற தலைமை தற்போது உள்ளது. காங்கிரசைப் பொறுத்தவரை மூச்சு விடும் நேரமாக கருதுகிறது. தி.மு.க., விடம் உள்ள 18 எம்.பி.,க்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.கூட்டணி முடிவில் மதில் மேல் பூனையாகத்தான் இன்று வரை கட்சித் தலைமை நிற்கிறது. இப்போதைக்கு இளங்கோவன் மேல் நடவடிக்கை பாய்ந்தால் தி.மு.க., கூட்டணி நீடிக்கும்; இல்லாவிட்டால் கூட்டணி முறிந்துவிடும் என்ற எண்ணம்தான் பரவலாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மைக்கை நிமிர்த்தும் எதிர்கட்சிகள்: ஆளூம் கட்சிக்கு நெருக்கடி

முழுக்க, முழுக்க பேச்சாற்றல் கொண்ட குழுவாகவே உருவாகி, அதன் மூலமே தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து, தொடர்ந்து வெற்றி வாகை சூடிய தி.மு.க., விற்கு, வரும் சட்டசபை தேர்தலில் எதிர்கட்சிகளின் மேடைப் பேச்சு பெரும் சவாலாக இருக்கப் போகிறது. எதிர்கட்சி, எதிரணியில் உள்ள பேச்சாளர்கள் ஆளுங்கட்சியை துளைத்தெடுக்கும் வகையில், பிரச்னைகள் வரிசை கட்டி நிற்பதால் தி.மு.க.,விற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேடைப்பேச்சில் மிகுந்த வல்லமை பெற்ற அண்ணாதுரை; அவர் வழியிலேயே தனது வசனக் கவிதைகளாலும், சொல் விளையாட்டு மற்றும் சினிமா வசனங்களால் தமிழக மக்களை ஈர்த்து, அதன் பலனை இன்றுவரை பெற்று வருபவர் முதல்வர் கருணாநிதி.கிளைக்கழக கொடியேற்றுவிழாவில், துவங்கி மாவட்ட அளவிலான பொதுக்கூட்ட மேடை வரை ஒலித்த கருணாநிதியின், "கரகரப்பான' கணீர் குரலுக்கு, காரமும், கவர்ச்சியும் அதிகம். எம்.ஜி.ஆர்., காலத்தில் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் எதிர்கட்சியாக இருந்தாலும், கருணாநிதியின் பொதுக்கூட்டம் நடக்கும் மைதானங்கள் நிரம்பி வழியும்.

தலைமைக்கு ஏற்றவாறு அக்கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் வகையில் பல மாவட்டங்களில் கட்சியில் முக்கிய பேச்சாளர்கள் உருவாகினர். பேச்சாளர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தி, அவர்களுக்கு திராவிட இயக்கம், தி.மு.க.,வின் வரலாறு குறித்து பாடம் நடத்தி, அவர்களை சிறப்பாக பரிணமிக்கச் செய்வதில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அதீத ஆர்வம் உண்டு.தானும் மேடைப் பேச்சாளராக இருந்துதான், இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன் என்று பெருமிதமாக கூறுவதையும் அவர் வழக்கமாக வைத்துள்ளார். இப்படி, பேச்சிற்கு உள்ள வல்லமையை தி.மு.க., தலைமை இன்றும் உணர்ந்திருக்கிறது.

ஆளுங்கட்சிக்கு நெருக்கடியைக் கொடுக்கக்கூடிய ஸ்பெக்ட்ரம், இலங்கைத் தமிழர் பிரச்னை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் இன்று வரிசைகட்டி நிற்கின்றன. இவற்றை மேடைகள் தோறும் முழங்க எதிரணியினரும் தயாராகி வருவது, ஆளுங்கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, நாஞ்சில்சம்பத், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் தா. பாண்டியன் என கட்சித் தலைவர்களும், ஸ்டார் பேச்சாளர்களும் ஆளுங்கட்சியை தங்களது பேச்சின் மூலம் இரண்டில் ஒன்று பார்க்க தயாராகி வருகின்றனர்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து வெளியில் வந்துள்ள சினிமாக்காரர் சீமானும் ஆளுங்கட்சியை தன் பேச்சால் வெளுத்து வருகிறார்.எதிர்க்கட்சியோடு சேர்ந்து, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா போன்றவர்களும் ஆளுங்கட்சியை விமர்சித்து வருவதால், இவர்களுக்கு தி.மு.க., எப்படி பதிலடி கொடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை.ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான விளக்கக் கூட்டங்களை தி.மு.க., தலைமை தற்போது நடத்தி வருகிறது. இந்த கூட்டங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்ற கருத்து தி.மு.க.,வினர் மத்தியில் உள்ளது. இந்த கூட்டங்களுக்கான, "ஐடியா'வை கொடுத்த, தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர் திருச்சி சிவாவைத் தவிர, இதர பேச்சாளர்கள் கொடுக்கும் விளக்கம், "இமேஜை' மாற்றும் வகையில் இல்லை.

பொதுவாகவே, ஆளுங்கட்சியின் பொதுக்கூட்டங்களுக்கு கூட்டம் கூடுவது குறைவு. பொதுக்கூட்ட மேடைகளில் சாதனைகளை கேட்பதை விட, குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் கேட்பதையே பொதுமக்கள் விரும்புகின்றனர். உலக நிகழ்வுகள் ஒரு நொடியில், "டிவி' மூலம் வீட்டுக்கு வந்துவிடும் நிலையில், பொதுக்கூட்டங்களுக்கு கூட்டம் சேர்ப்பது சிரமமானதாகும்.சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், எதிர்கட்சிகளின் பேச்சு யுத்தத்தை சமாளிக்க தி.மு.க., தலைமை சுதாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, பிரசாரத் தில் முந்துவதற்கு வாய்ப்பாக மாறும் என்று கருதுகின்றனர் தொண்டர்கள்.

சோதனை மேல் சோதனை: போதுமடா சாமி : பா.ம.க.வினர் புலம்பல்

பா.ம.க.,வின் தேர்தல் கால கூட்டணி பார்முலா கட்சிக்கு வளர்ச்சியை, வெற்றி தேடி தந்த நிலை மாறி, சமீபகால கூட்டணி பார்முலா தோல்வியை தழுவுவதால் பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்கள் விரக்தியில் உள்ளனர்.
வன்னியர் சங்கத்திலிருந்திலிருந்து 1989ல் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க., ) உருவானது. அதே ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தர்மபுரி தொகுதியில் மட்டும் தனித்து போட்டியிட்டு பா.ம.க., தோல்வி அடைந்தது. தொடர்ந்து 1991ல் நடந்த சட்டசபை தேர்தலில் 147 தொகுதியில் தனித்து போட்டியிட்ட பா.ம.க., பண்ருட்டி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.கடந்த 1996 சட்டசபை தேர்தலிலும் 165 தொகுதியில் தனித்து போட்டியிட்ட பா.ம.க., எடப்பாடி, தாரமங்கலம், பென்னாகரம், ஆண்டிமடம் ஆகிய நான்கில் மட்டுமே வென்றது. எனவே, கூட்டணி வைத்தால் மட்டுமே கூடுதல் தொகுதியை கைப்பற்ற முடியும் என்ற நிலைக்கு பா.ம.க., தள்ளப்பட்டது.எனவே, 1998ல் நடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியில் இணைந்து ஐந்து இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., தர்மபுரி, சிதம்பரம், வந்தவாசி, வேலூர் என நான்கு தொகுதியில் வென்றது.இந்த வெற்றிக்கு பின்பு, ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் எந்த கட்சிக்கு ஆதரவு அதிகமாக உள்ளது என்பதை கணித்து, அந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்து பா.ம.க., தேர்தல் களத்தில் இறங்கியது.

இந்த கூட்டணி பார்முலா 1999ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ம.க.,விற்கு பெரிய அளவில் வெற்றியை தேடி தந்தது.அ.தி.மு.க.,வில் இருந்து விலகி 1999 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,- தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து எட்டு இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., ஏழு தொகுதியில் வெற்றி பெற்றது. மக்கள் ஆதரவு மாறுவதை கணித்த பா.ம.க., பின்பு தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி 2001 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து 27 தொகுதியில் போட்டியிட்டு 21 தொகுதியில் வெற்றி பெற்றது.அடுத்து 2004 லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இணைந்து ஆறு தொகுதியில் போட்டியிட்டு, ஆறிலும் பா.ம.க., வெற்றி பெற்றது. தொடர்ந்து 2006 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியுடன் இணைந்து 31 தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க, 18 தொகுதியில் வென்றது.

தொடர்ந்து 15 ஆண்டுகள், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தேர்தலுக்கு முன்பு கூட்டணி தொடர்பாக எடுக்கும் முடிவு கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. ஆனால், 2006க்கு பின் பா.ம.க., நிறுவனர் ராமதாசின் கூட்டணி கணிப்பு தோல்வியில் முடிந்தது தொண்டர்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்கள் கூறியதாவது:வன்னியர் சங்கத்திலிருந்து அரசியல் கட்சியாக பரிணமித்த பின், தொடர்ச்சியாக தேர்தல் களம் கண்டு வருகிறோம். கடந்த 15 ஆண்டுகளாக கட்சித் தலைமை எடுத்த, முடிவுகள், தேசிய அளவில் கட்சி அந்தஸ்து பெற காரணமாயிற்று. ஆனால், அவை அனைத்தையும் இழந்து தற்போது, பூஜ்யத்தில் இருந்து கணக்கைத் துவங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 2006ல் தி.மு.க., கூட்டணியில் இருந்த நிலையில், 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் இணைந்து ஏழு தொகுதியில் போட்டியிட்டோம்; அனைத்திலும் தோல்வியைத் தழுவினோம். "திட்டமிட்டு எங்களை தோல்வி அடைய வைத்து விட்டனர்' என வெளிப்படையாக குற்றஞ்சாட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அடுத்து பென்னாகரம் சட்டசபை இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு தோல்வியடைந்தோம். தொடர்ச்சியாக, இரு தேர்தலிலும் எங்களின் கூட்டணி கணிப்பு தவறாகி விட்டது.கடந்த லோக்சபா தேர்தலின்போது, தி.மு.க., கூட்டணியிலேயே பா.ம.க., நீடித்திருந்தால் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், தவறாக கணித்து அ.தி.மு.க., பக்கம் ஒதுக்கியதால், டில்லி செல்வாக்கையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தல் கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாகும். எனவே, எதிர்கால அரசியலைக் கருத்தில் கொண்டு, கூட்டணியை கட்சித் தலைமை முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான், இதுவரை கட்சி சந்தித்த சோதனைகளுக்கு முடிவு கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Sunday, January 2, 2011

தமிழக காங்., நிர்வாகிகளை மாற்ற முடிவு : விசாரித்து அறிக்கை தர சோனியா உத்தரவு

அகில இந்திய காங்கிரஸ் மாநாடு முடிந்த கையோடு, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன், சோனியா ஆலோசனை நடத்தினார். தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை மாற்றுவது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி, குலாம்நபி ஆசாத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இது, தங்கபாலு போன்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாடு, டில்லியில் டிச., 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடந்தது. மாநாடு முடிந்தவுடன் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வாசன், சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் பிரபு, இளங்கோவன், என்.எஸ்.வி.சித்தன், டாக்டர் செல்லகுமார், சுதர்சன நாச்சியப்பன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், மணிசங்கர் அய்யர், அகில இந்திய செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், சட்டசபை கொறடா பீட்டர் அல்போன்ஸ், ஞானதேசிகன் எம்.பி., ஆகிய 13 பேர், சோனியாவை நேரில் சந்தித்து பேசினர்.

கட்சி அமைப்பு மற்றும் தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி பற்றி பேசப்பட்டது. "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை மாற்றினால், மாவட்ட நிர்வாகிகளையும் மாற்றலாம். இல்லாவிட்டால், மாவட்ட நிர்வாகிகளை மாற்ற தேவையில்லை. காலியாக உள்ள மாவட்ட தலைவர்கள் பதவியிடத்தை மட்டும் நிரப்பலாம்' என, வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது கருத்துக்கு ஆதரவாக, இளங்கோவன் உட்பட எட்டுக்கும் மேற்பட்டோர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை மாற்ற வலியுறுத்தியுள்ளனர். அதற்கு, "தேர்தல் நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை மாற்றுவது அவ்வளவு நல்லதல்ல; 10 ஆண்டுக்கும் மேலாக உள்ள மாவட்ட தலைவர்களை மட்டும் மாற்றி விடலாம்' என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
இந்த கருத்தை ஏற்க மறுத்த சோனியா, "பெரும்பாலான நிர்வாகிகள், தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டியை மாற்ற வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். குறிப்பாக, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இதில் உறுதியாக இருக்கின்றனர்' என, தெரிவித்துள்ளார்.
அதற்கு, தங்கபாலு, "என்.எஸ்.வி. சித்தன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் ஆதரவு தெரிவிப்பதை வைத்து, நீங்கள் பேசக் கூடாது. அவர்கள் எந்த அடிப்படையில் இங்கு வந்தனர்?' என கேட்க, இளங்கோவன் ஆவேசமடைந்து, "டாக்டர் செல்லகுமாரை எந்த அடிப்படையில் அழைத்து வந்தீர்கள்?' என, எதிர்கேள்வி கேட்க, தங்கபாலு திகைத்து போய்விட்டார்.

"அணி இல்லாத தலைவர், நான் மட்டும் தான். எனவே, எனக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி தாருங்கள்' என, டாக்டர் செல்லகுமார் வெளிப்படையாக கேட்க, தங்கபாலு வாயடைத்து போய் விட்டார்.
இதையடுத்து, 13 பேர் கொண்ட குழுவிடம் மீண்டும் ஆலோசனை நடத்தி, தமிழக காங்கிரஸ் கமிட்டியை மாற்றுவது தொடர்பாக விரைவில் அறிக்கை தரும்படி, குலாம்நபி ஆசாத்துக்கு சோனியா உத்தரவிட்டுள்ளார்.
சோனியாவின் இத்தகைய அதிரடி உத்தரவு, தங்கபாலுவுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் காலியாக உள்ள நாமக்கல், திருவாரூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருச்சி (புறநகர்), விழுப்புரம், கடலூர், அரியலூர் உட்பட ஒன்பது மாவட்ட தலைவர்களை இன்னும் ஒரு மாதத்துக்குள் நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிறகு, கூட்டணி குறித்து பேசப்பட்டது. தமிழகத்தில், "தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள், காங்கிரசை வளர விடுவதே இல்லை. எனவே, காங்கிரஸ் தலைமையில் விஜயகாந்த், பா.ம.க., உட்பட இதர கட்சிகளை சேர்த்து தனி கூட்டணி அமைக்கலாம். அதன் பிறகு வேண்டுமானால், அ.தி.மு.க., அல்லது தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்யலாம்' என, வாசன் தன் கருத்தை பதிவு செய்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிதம்பரம், "அ.தி.மு.க. நம்பகமான கட்சியில்லை; எனவே, தி.மு.க.,வுடன் கூட்டணியை தொடரலாம்' என, கூறினார்.
அதை ஏற்க மறுத்த இளங்கோவன், "அ.தி.மு.க., கூட்டணியை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நாம் தனி அணி அமைத்து, அதன் பிறகு வேண்டுமானால், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து கொள்ளலாம்' என்றவர், சிதம்பரத்தை பார்த்து, "உங்கள் மகன் தமிழக முதல்வரை எதிர்த்து பேசுவார்; அறிக்கை விடுவார். நீங்கள் முதல்வரை சந்தித்து பேசி சமரசம் செய்வீர். யாரை ஏமாற்றுகிறீர்?' என, காட்டமாக கேட்க, சிதம்பரம் மவுனமாகி விட்டார்.

"மத்திய-மாநில அரசுகள் இணக்கமாக இருந்தாலும், கூட்டணி கட்சிகளுக்குள் சுமுக உறவு இல்லை. தமிழக மக்கள், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் விருப்பப்படி தான், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும்' என, சோனியா தன் முடிவை தெரிவித்துள்ளதாக, காங்., வட்டார தகவல்கள் உறுதியாக தெரிவிக்கின்றன.