Search This Blog

Wednesday, January 18, 2012

மாற்றத்தை காணாமல் ஓய மாட்டேன்: ராகுல் சூளுரை




எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி, மாற்றத்தைக் கொண்டு வரும் வரை நான் உத்தர பிரதேசத்தை விட்டு அகல்வதாக இல்லை,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், தேர்தல் பிரசாரத்தில் சபதம் செய்தார். ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களையொட்டி, உத்தர பிரதேசத்தில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல். அம்மாநிலத்தில் நான்காவது இடத்தில் இருக்கும் தன் கட்சியை எப்படியாவது முன்னுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார்.
அதற்காகவே, மற்ற மாநிலங்களை விட உ.பி.,யில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஜாலோன் மாவட்டத்தில் உள்ள உரய், கால்பி, பங்க்ரா ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளிலும் நேற்று அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கால்பி தொகுதி, டக்கர்பாபா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கண்டது என்ன? : கடந்த 22 ஆண்டுகளாக உ.பி.,யில் காங்கிரஸ் அரசு இல்லை. பஞ்சரான சைக்கிளும் (சமாஜ்வாடி கட்சி சின்னம்), பணம் தின்னும் யானையும் (பகுஜன் சமாஜ்) தான் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தன. இத்தனை ஆண்டு ஆட்சியில் நீங்கள் கண்டது என்ன? கொலை, கொள்ளை, மோசடி, ஊழல் ஆகியவை மட்டும் தானே. இந்த 22 ஆண்டுகளில், நாடு எவ்வளவோ முன்னேறி விட்டது. 10 ஆண்டுகளில் ஆந்திராவை மாற்றிக் காட்டி விட்டோம். ஐதராபாத்தை பற்றி, அமெரிக்காவில் பேசுகின்றனர். ஜான்சியை பற்றி யாருக்காவது தெரியுமா? பந்தல்கண்ட் பகுதியில் என்ன வளம் இல்லை. ஆனாலும் ஏன் வளர்ச்சியில்லை. காரணம், மாயாவதியோ, முலாயம் சிங்கோ உங்களிடம் வந்ததில்லை. உங்கள் குடிசையில் தங்கியதில்லை. கூழையும், குழாய் தண்ணீரையும் குடித்ததில்லை. ஆனால், நாங்கள் செய்திருக்கிறோம்.

பணம் விழுங்கும் யானை : இங்கிருக்கும் "மாஜிக்' யானை அரசு, மக்களுக்காக மத்திய அரசு
ஒதுக்கும் நிதியை எல்லாம் விழுங்கி விடுகிறது. மக்கள் பணத்தை மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும் என்பதில், காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. நீங்கள் ஒன்று சேர்ந்து மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். அத்தகைய மாற்றத்தை கண்ணால் காணும் வரை, உத்தர பிரதேசத்தை விட்டு ஒருபோதும் அகல மாட்டான் இந்த ராகுல். ஐந்து ஆண்டுகள் அல்ல; 15 ஆண்டுகள் ஆனாலும் சரி, உத்தர பிரதேசத்தில் மாற்றத்தைக் கொண்டு வராமல் ஓய மாட்டேன். இவ்வாறு ராகுல் பேசினார்.

தமிழகத்திலிருந்து வந்ததால் கடும் சோதனை : ராகுல் பேசிய கால்பி, சாதாரண ஊர் தான். விழுப்புரம் அருகில் உள்ள விக்கிரவாண்டி மாதிரி தான் இருக்கும். பாரதத்தை எழுதிய வேத வியாசர் பிறந்த ஊர் இது. பிரபல கொள்ளைக்காரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பூலன்தேவி பிறந்த ஊரும் இதுவே.
ஊரின் அளவை ஒப்பிடுகையில், திரண்ட கூட்டம் மிகப் பெரியது. 5,000 முதல் 7,000 பேர் வரை இருப்பர். இந்தப் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி தான் பலமாக இருக்கிறது. கால்பி தொகுதியில் காங்கிரசுக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் தான் போட்டி. தெளிவான இந்தியில் ராகுல் பேசிய பேச்சு, மக்களைக் கவர்ந்தது. பொதுக்கூட்டம் முடிந்து நீண்ட நேரத்துக்கு சாயா கடைகளிலும், தாபாக்களிலும் அவர் பேச்சை பற்றியே பேச்சாகவே இருந்தது. தந்தை ராஜிவை போலவே, பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, தொண்டர்களோடு உற்சாகமாக கைகுலுக்கினார். ஒரு வார தாடியோடு காணப்பட்டவர், உற்சாகமாகவே இருந்தார். பா.ஜ.,வை லேசாகத் தான் தொட்டார். மாயாவதியையும், முலாயமையும் தான் போட்டு வாங்கிவிட்டார்.
மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேடைக்கு 20 அடி முன்னாலேயே தடுப்பு போடப்பட்டிருந்தது. தமிழகத்திலிருந்து வந்திருப்பதாக சொன்னதும், கேமரா, லென்ஸ், பை உள்ளிட்டவை கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.