Search This Blog

Sunday, February 27, 2011

தி.மு.க., - காங்., தொகுதி பங்கீட்டில் இறுக்கம்

தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்கு காங்கிரஸ் தலைமை ஏற்படுத்தியுள்ள ஐவர் குழுவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அடுத்த கட்ட தகவல்களை காங்கிரஸ் டில்லி தலைமையுடன் பகிர்ந்து கொள்ள தி.மு.க., முடிவு செய்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியின் போதும், தற்போது நடைபெறும் மத்திய ஆட்சிக்கும் தி.மு.க., சிறந்த நண்பனாகவே இருந்து வருகிறது. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க., - ம.தி.மு.க., போன்றவை தி.மு.க.,வுடன் முரண்பாடு ஏற்பட்டு வெளியே சென்றபோதும், தி.மு.க., - காங்கிரஸ் உறவில் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. இலங்கைப் பிரச்னையில் கடுமையான நெருக்கடி ஏற்பட்ட போதும், காங்கிரசுடன் விரிசல் ஏற்படாமல் தி.மு.க., பார்த்துக் கொண்டது. தமிழக சட்டசபை தேர்தலை காங்கிரசுடன் இணைந்து சந்திக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே தி.மு.க., இத்தகைய பொறுமையை கடைபிடித்து வந்தது. ஆனால், சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கியதும், இந்த போக்கில் மாறுதல் ஏற்பட்டு, விரிசல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

பொதுவாக, தமிழகத்தில் கூட்டணிக் கட்சியிடையே தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை ஏற்படும்போது, காங்கிரசின் தலைமை தலையிட்டு பிரச்னையைத் தீர்க்கும். ஆனால், இந்த முறை, பேச்சுவார்த்தையின் ஆரம்பம் முதலே, டில்லி காங்கிரஸ் தலைமை தலையிடும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. பேச்சுவார்த்தையில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், தொகுதிகள் பற்றி குறிப்புகளுடன் பேசியதும், கூட்டணி அரசுக்கு அடிப்படையாக கருத்துக்களை வலியுறுத்தியதும், தி.மு.க., தரப்பில் இறுக்கம் அதிகமானதற்கு காரணம் என்று தெரிகிறது. மேலும், கடந்த வெள்ளிக் கிழமை அறிவாலயத்தில் நடந்த பேச்சுக்களில் முடிவு இழுபறியானதற்கு அடையாளமாக, அந்தக் கட்டடத்தில் தன் அறையில் அமர்ந்திருந்த முதல்வர் இக்குழுவினரைச் சந்திக்கவில்லை.

தற்போது, காங்கிரஸ் அதிகபட்சமாக போட்டியிடும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற தகவலை, கட்சித் தலைவர் சோனியா மற்றும் பொதுச் செயலர் ராகுலுக்கு தெரிவித்திருக்கின்றனர். இதுவரை தி.மு.க.,வுடன் பேசிய அணுகுமுறையில் இருந்து சற்று வேறுபாடாக சிதம்பரம் தலைமையிலான குழு வைக்கும் கோரிக்கைகள், தி.மு.க.,வுக்கு சற்று அதிருப்தியை தந்திருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியை விட்டு விட முடியாத நிலை உள்ளது.இனி மேலிடப் பிரதிநிதியாக குலாம் நபி ஆசாத் வரலாம் என்ற பேச்சு இருக்கிறது. அதேசமயம் டில்லி தலைமையோ, தி.மு.க., பிரதிநிதிகளை சந்திப்பதையே தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. டில்லியில் சோனியா அரசியல் ஆலோசகரை மட்டுமே டி.ஆர்.பாலு சந்திக்க முடிந்தது.

உளுந்தூர்பேட்டையில் விஜய்காந்த் போட்டி

அ.தி.மு.க., தலைமையிடம் தே.மு.தி.க., கேட்கப் போகும் தொகுதி பட்டியல் தயாரிப்பு பணியில், அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இந்த முறை உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது.
அ.தி.மு.க.- தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அவ்விரு கட்சிகளிடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 24ம்தேதி அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான்று இவ்விரு கட்சிகளின் மூவர் குழுவினர் தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தே.மு.தி.க.,விற்கு 42 சீட்கள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் ஒதுக்குவது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படவும், மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்படவும் வாய்ப்புள்ளது. இதனிடையே அ.தி.மு.க.,விடம் தே.மு.தி.க., கேட்கப் போகும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வு செய்யும் பணிகள் கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் கடந்த இரு நாட்களாக தீவிரமாக நடக்கிறது. இப்பணியில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞரணி செயலர் சுதீஷ், பொருளாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2006ம் சட்டசபை தேர்தல், 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க., வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்கள் அடிப்படையில் தொகுதிகளை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இதில் தே.மு.தி.க., விற்கு அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் "ஏ' பிரிவிலும், கூட்டணி பலத்தில் வெற்றிப் பெறக் கூடிய தொகுதிகள் "பி' பிரிவாகவும் பிரிக்கப்படுகிறது. இப்பட்டியலில் கொளத்தூர், கும்மிடிபூண்டி, மாதவரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர், ரிஷிவந்தியம், வானூர், உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, பென்னாகரம், உத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஆத்தூர், சேலம், செஞ்சி, ஏற்காடு, ஓமலூர், எடப்பட்டி, குமாரபாளையம், பவானி ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.செய்யாறு, ஈரோடு மேற்கு, திருப்பூர் தெற்கு, பண்ருட்டி, நெய்வேலி, திருமங்கலம், விருதுநகர், சிவகாசி, திருப்பரங்குன்றம், அருப்புக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், அம்பாசமுத்திரம், தாராபுரம், கன்னியாகுமரி, பெரம்பலூர் ஆகிய 42 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க., தலைமையிடம், இந்த தொகுதிகளை கேட்டுபெறுவதற்கு தே.மு.தி.க., தலைமை திட்டமிட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த்: கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டார். பா.ம.க.,வின் கோட்டையாக கருதப்பட்ட அத்தொகுதியில் 60 ஆயிரத்துக்கும் அதிகமாக ஓட்டுக்களை பெற்று அவர் எம்.எல்.ஏ., ஆனார். லோக்சபா தேர்தலில் அக்கட்சிக்கு எதிர்பார்த்த ஓட்டுக்கள் கிடைக்கவில்லை. இதனால், இம்முறை உளுந்தூர் பேட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுவார் என தெரிகிறது. ரசிகர்கள் மற்றும் பெண்கள் ஓட்டுக்களை மனதில் வைத்தே அவர் இத்தொகுதியை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொருட்கள் கொள்ளை; அராஜகம் உச்சகட்டம்: லிபியாவில் இருந்து திரும்பியவர்கள் கண்ணீர்

லிபியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் துவங்கியது முதல், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தோம்; உணவு இல்லாமல் பட்டினி கிடந்தோம்' என, அங்கிருந்து விமானம் மூலம் நாடு திரும்பியவர்கள் தெரிவித்தனர்.

வட ஆப்ரிக்க நாடான லிபியாவின் தலைவர் கடாபி பதவி விலக வலியுறுத்தி, அந்நாட்டு மக்கள் இரண்டு வாரங்களுக்கு முன் போராட்டத்தில் குதித்தனர். அது முதல், போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், போராட்டக்காரர்களை ஒடுக்க, கடாபியின் ஆதரவாளர்களும், ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். வன்முறை தலைவிரித்தாடியதால், அங்கு வசித்த 18 ஆயிரம் இந்தியர்களை மீட்கும் பணிகளை இந்திய அரசு துவக்கியது.லிபியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க இரண்டு விமானங்களும், நான்கு கப்பல்களும் அனுப்பப்பட்டன. ஏர்-இந்தியாவின் இரு விமானங்கள் மூலம் முதற்கட்டமாக 528 பேர், நேற்று முன்தினம் இரவு டில்லி வந்து சேர்ந்தனர். அவர்களை வெளியுறவு இணை அமைச்சர் அகமதுவும், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவும் மற்றும் அதிகாரிகளும் வரவேற்றனர். லிபியாவிலிருந்து வந்தவர்களில் பலர் தங்களின் கண்ணீர் கதைகளை, விமான நிலையத்தில் நிருபர்களிடம் விவரித்தனர்.

லிபியாவில் கடந்த 31 ஆண்டுகளாக வசித்த கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த முகமது சலி கூறியதாவது:லிபியாவில் கடாபிக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது. அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. மக்களுக்கு உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. போராட்டம் ஆரம்பித்தது முதல் நாங்கள் எல்லாம், உயிருக்கு என்ன ஆகுமோ என பயந்து கொண்டிருந்தோம். நானும், என்னுடன் மேலும் சில இந்தியர்களும் இரண்டு நாட்களாக முகாமில் தங்கியிருந்தோம். எங்களின் உடைமைகளை எல்லாம் லிபியா மக்களில் பலர் அள்ளிச் சென்றனர்.கடாபிக்கு எதிராக போராட்டம் துவங்கியது முதல், லிபியாவில் சட்டத்தின் ஆட்சி இல்லை. தலைநகர் டிரிபோலியில் இருந்த பல போலீஸ் நிலையங்களை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எரித்து தீக்கிரையாக்கினர். நாங்கள் உள்ளூர் மக்களின் தீவைப்பு சம்பவங்கள் மற்றும் கொள்ளையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.இவ்வாறு முகமது சலி கூறினார்.

லிபியாவில் கார்பென்டராக பணிபுரிந்த கரம்வீர் கூறுகையில், ""லிபியாவில் நிலைமை சீரானால் கூட, நான் மீண்டும் அங்கு செல்ல மாட்டேன். அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. மக்களே கொள்ளை, கொலையில் ஈடுபடுகின்றனர். அங்கு போலீசும் இல்லை; பாதுகாப்பும் இல்லை. எங்களை பாதுகாப்பாக சொந்த நாட்டிற்கு கொண்டு வந்து சேர்த்த இந்திய அரசுக்கு நன்றி,'' என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக லிபியாவில் தனியாக வசித்த பெண் டாக்டர் நவ்பீர் கூறுகையில், ""கடாபிக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பிக்கும் வரை, அங்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதாக நான் உணரவில்லை; நான் அன்னிய நாட்டில் இருப்பது போன்றும் உணர்ந்ததில்லை. இந்தியா வருவதற்காக விமானத்திற்கு செல்ல முற்பட்ட போது கூட, சிலர் என்னை போக வேண்டாம் என தடுத்தனர். டிரிபோலி விமான நிலையத்தில் பெரும் குழப்பம் நிலவுகிறது. விமான நிலையத்திற்குள் செல்ல குறைந்தபட்சம் 10 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. நீண்ட வரிசையில் நின்று தான், விமான நிலையத்திற்குள் செல்ல முடியும்,'' என்றார்.

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்த மொபின் குரேஷி கூறுகையில், ""எங்களுக்கு உதவ யாரும் இல்லை. அனைத்து வீடுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. நாங்கள் உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். இந்தியர்கள் நிலைமை குறிப்பாக பணியாளர்கள் முகாமில் இருப்பவர்களின் நிலைமை மிக மோசம். முகாம்கள் எல்லாம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டு விட்டன; தங்குவதற்கு இடமில்லை. டிரிபோலி விமான நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள் கூட, பணம், மொபைல் மற்றும் இதர மதிப்புமிக்க பொருட்களை எங்களிடம் இருந்து பறித்துக் கொண்டனர்,'' என்றார்.

லிபியாவில் தொழிலாளர்களாக வேலை பார்த்த பலர் கூறுகையில், ""எங்களுக்கு லிபியா போலீசார் பாதுகாப்பு அளிக்கவில்லை. அதற்குப் பதிலாக எங்களிடம் இருந்த பொருட்களை எல்லாம் பறித்துக் கொண்டனர். வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்கள் நடந்த போது, உணவோ அல்லது மருத்துவ வசதிகளையோ, எங்களை வேலைக்கு அழைத்துச் சென்ற நிறுவனம் வழங்கவில்லை. மேலும், எங்களை முறையான பணி விசாவில் அழைத்துச் செல்லாமல், சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்றுள்ளதும் தெரிய வந்தது. எங்களுடன் லிபியாவுக்கு பணிக்கு வந்த ஒருவர், வன்முறை கும்பலால் தாக்கப்பட்டு, தலையில் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு எந்த மருத்துவ வசதியும் அளிக்கப்படவில்லை,'' என்றனர்.

லிபியாவில் நடப்பது என்ன? கோவை வந்த டாக்டர் பேட்டி: லிபியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு 600 பேருடன் விமானங்கள் டில்லி வந்தன. இவர்களில் ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்த டாக்டர் கவிதா, கோவை மதுக்கரையைச் சேர்ந்த இன்ஜினியர் அருண் பிரசாத் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் நேற்று பகல் 11.50 மணிக்கு விமானத்தில் கோவை வந்தனர்.

டாக்டர் கவிதா கூறியதாவது:கணவர் சரவணன், லிபியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ளார். கடந்த இரு வாரங்களாக அந்நாட்டில் பெரும் கலவரம் நடக்கிறது. நகர் பகுதியை விட, புறநகர் பகுதியில் தான் கலவரம் தொடர்ந்து நடக்கிறது. ஆனாலும், பாதுகாப்பு கருதி ஒரு வாரமாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தோம். அந்நாட்டில், இந்தியாவைச் சேர்ந்த 18 ஆயிரம் பேர் வசிப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் சில ஆயிரம் பேர் மட்டுமே சொந்த நாடு திரும்ப முடிவு செய்து, விமான நிலையங்களில் காத்திருக்கின்றனர்.விரைவில், கலவரம் ஓய்ந்து விடும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலானோர் அங்கேயே உள்ளனர். கணவருக்கு அங்கு அவசிய வேலை இருப்பதால் நானும், என் குழந்தைகளும் புறப்பட்டு வந்துள்ளோம் என்றார்.

இன்ஜினியர் அருண் பிரசாத் கூறுகையில், ""தலைநகர் டிரிபோலியில் இருந்து தொலைவில் உள்ள பென்டகார்ட் பகுதியில் தங்கியுள்ளோம். நாட்டில் பல பகுதியில் கலவரம் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் வீட்டை விட்டு யாரும் வெளியே வருவதில்லை. பாதுகாப்பு கருதி பகல் நேரத்திலும் மக்கள் நடமாட்டம் இல்லை. கலவரத்துக்கு பயந்து நானும், பேராசிரியையான எனது மனைவி ரேஷ்மா(35), குழந்தைகள் ஆதிரா(10), துவாரகா(6) ஆகியோர் சொந்த ஊர் திரும்பி விட்டோம்,'' என்றார்.

டுனீசியா சென்ற 258 பேர் : லிபியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும் பணியை மத்திய அரசு முடுக்கி விட்டிருந்தாலும், லிபியாவில் தங்கியிருந்த இந்தியர்கள் 88 பேர் சாலை மார்க்கமாக லிபியாவில் இருந்து டுனீசியாவின் ராஸ் ஜெடிர் நகருக்குச் சென்றனர். அவர்களை டுனீசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். அவர்களுக்காக முகாம் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அவர்கள் விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைக்கப்படுவர். இதுதவிர, மேலும் 170 இந்தியர்களும் நேற்று ராஸ் ஜெடிர் வந்துள்ளனர்.இதற்கிடையில், ஐ.என்.எஸ்.ஜலஸ்வா மற்றும் ஐ.என்.எஸ்.மைசூர் என்ற இரண்டு கப்பல்கள் நேற்று முன்தினம் காலை லிபியாவுக்கு புறப்பட்டுச் சென்றன. இந்தக் கப்பல்கள் அங்கு சென்றடைய 12 நாட்களாகும். ஏற்கனவே "ஸ்காட்டிய பிரின்ஸ்' என்ற மற்றொரு கப்பல் லிபியா நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. லிபியாவில் சிக்கித் தவிப்போர், இந்தக் கப்பல்கள் மூலம் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

மீட்கப்பட்ட 18 தமிழர்கள் சென்னை வந்தனர் : லிபியாவில் இருந்து மீட்கப்பட்டு டில்லிக்கு அழைத்து வரப்பட்ட, இந்தியர்களில் 18 தமிழர்கள் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தனர்.நேற்று மதியம் 1.50 மணிக்கு, சென்னை வந்த தஞ்சாவூரை சேர்ந்த ரமேஷ்குமார், பரமக்குடியை சேர்ந்த இளையராஜா, விழுப்புரத்தை சேர்ந்த அருள்முருகன், கன்னியாகுமரியை சேர்ந்த மஞ்சு உள்ளிட்ட 18 பேரும், விமான நிலையத்தில் இருந்து தங்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்தியர்களை மீட்க மேலும் விமானங்கள்:லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில், மார்ச் 7ம் தேதி வரை இரண்டு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் மேலும் சில விமானங்கள் அங்கு அனுப்பி வைக்கப்படும் என்று, இந்தியாவின் வெளிநாடு வாழ் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.

Tuesday, February 22, 2011

மேட்டூர் தொகுதி பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்படுமா?வீரபாண்டி ஆறுமுகம் போட்டியிட கோரிக்கை

கடந்த சட்டசபை தேர்தலில், மேட்டூர் தொகுதி தி.மு.க.,வுக்கு ஒதுக்காத நிலையில், "வரும் சட்டசபை தேர்தலில் மேட்டூர் தொகுதியை தி.மு.க.,வுக்கு ஒதுக்க வேண்டும். அதில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் போட்டியிட வேண்டும்' என, மேட்டூரில் நடந்த தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.கடந்த, 2006 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இருந்தது. அப்போது, பா.ம.க., கோரிக்கையை ஏற்று, மேட்டூர் சட்டசபை தொகுதி பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது; பா.ம.க., சார்பில், மாநில தலைவர் ஜி.கே.மணி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன் பின், தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க., விலகியது. அடுத்து வந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க., அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், "2006 சட்டசபை தேர்தலின் போது மேட்டூர் சட்டசபை தொகுதியை தி.மு.க.,வுக்கு ஒதுக்கி, மாவட்ட பொருளாளர் கோபாலை வேட்பாளராக்க கோரினேன். கட்சித் தலைமை மேட்டூர் தொகுதியை பா.ம.க.,வுக்கு ஒதுக்கி விட்டது' என, விரக்தி தெரிவித்தார்.வரும், 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இணைந்து போட்டியிடுகிறது. பா.ம.க.,வுக்கு, 31 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கியுள்ளது. எனவே, மேட்டூர் சட்டசபை தொகுதியை தங்களுக்கு ஒதுக்க, பா.ம.க., கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு தொகுதி ஒதுக்கும் பட்சத்தில், பா.ம.க., மாநில தலைவர் ஜி.கே.மணியே மேட்டூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.

தி.மு.க., சார்பில் தொகுதி ஆலோசனை கூட்டம் மேட்டூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கோபால், மாவட்ட துணை செயலர் சிவலிங்கம் உட்பட கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட நகர, ஒன்றிய, கிளை செயலர்கள் உள்ளிட்ட அனைவரும், மேட்டூர் தொகுதி கடந்த, 2006ல் சட்டசபை தேர்தலின்போது, பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. வரும் தேர்தலில் மேட்டூர் தொகுதியை, தி.மு.க.,வுக்கே ஒதுக்க வேண்டும். மேலும், மேட்டூர் தொகுதியில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் போட்டியிட வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

மேட்டூர் தொகுதியை தங்களுக்கு ஒதுக்கக்கோரி தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ம.க., கோரிக்கை விடுத்த நிலையில், தி.மு.க.,வினர், மேட்டூர் தொகுதியை, தி.மு.க.,வுக்கு ஒதுக்க வேண்டும், வீரபாண்டி ஆறுமுகத்தை மேட்டூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, February 20, 2011

சூப்பர் நடிகரின் புது அவதாரம்: கட்சி போணியாகாததால் சிரஞ்சீவி அடித்தார் "பல்டி

நடிகர் சிரஞ்சீவியை தெரியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார். தெலுங்கு திரைப்பட உலகில் படிப்படியாக வளர்ந்து, உச்சத்தை தொட்டவர். சமூக விரோதிகள், ஊழல்வாதிகளுக்கு எதிராக, திரைப்படங்களில், கையை உயர்த்தி, கழுத்து நரம்பு புடைக்க இவர் வசனம் பேசும்போது, படம் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அடிவயிறு கலங்கும். திரையை கிழித்துக் கொண்டு வந்து, நம்மையையும் உதைப்பாரோ என, பீதி ஏற்படும். அந்தளவுக்கு உணர்ச்சிகரமாக நடிப்பவர். இவரது திரைப்படம் ரிலீசாகும் நாளில், ஆந்திராவே அலறும்.

பிரமாண்ட துவக்க விழா: ஒரு திரைப்படத்தில் நடித்தவர்களே, முதல்வர் கனவு காணும்போது, சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு அந்த ஆசை இருக்காதா? கடந்த 2008ல் இவருக்கும் அரசியல் ஆசை வந்தது. "ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஏழைகளுக்காக உழைக்கும் அரசை அமைப்பேன். ஊழல்வாதிகள், சமூக விரோதிகளை அடியோடு ஒழிப்பேன்'என, ஏகப்பட்ட "பில்டப்'களுடன் திருப்பதியில் பிரஜா ராஜ்யம் கட்சியை துவக்கினார். சும்மா சொல்லக் கூடாது. திருப்பதியில் அன்று கூடிய கூட்டம், சமீப ஆண்டுகளில் ஆந்திராவில் எந்த ஒரு அரசியல் கட்சிக்குமே கூடியது இல்லை. அந்தளவுக்கு திரும்பிய திசை எல்லாம், மனித தலைகள் தெரிந்தன. பிரமாண்ட மேடை, மேடையின் நான்கு புறமும் டிஜிட்டல் திரைகள் என, ஏகப்பட்ட தடபுடல் ஏற்பாடுகளுடன், ஒயர்லெஸ் மைக் சகிதம் சிரஞ்சீவி மேடையில் தோன்றியபோது, ஆந்திராவே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனது. இந்த பிரமாண்ட துவக்க விழாவை இந்தியாவின் முக்கியமான செய்தி சேனல்கள் எல்லாம், நேரடியாக ஒளிபரப்பு செய்து, ஆந்திர அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியை கரைத்தன.

அதிகாரிகள் ஆதரவு: சிரஞ்சீவியின் கட்சியில் சேர்ந்தவர்கள் எல்லாம், பெரும்பாலும் படித்தவர்கள் தான். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., அதிகாரிகள், அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் இவரது கட்சியில் விரும்பி சேர்ந்தனர். அவர்களைக் கொண்டே, தனது கட்சியின் கொள்கைகளை உருவாக்கினார். "ஆந்திராவில், தெலுங்கு தேசம், காங்கிரசுக்கு மாற்றான கட்சியாக எங்கள் கட்சி அமையும். ஆந்திராவில் எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கப் போகும் கட்சி இது'என, ரிகர்சல் பார்க்காமலேயே முழங்கினார், சிரஞ்சீவி.

மக்கள் கூட்டம்: இந்த நேரத்தில் தான், தனது பலத்தை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்தது. கட்சி ஆரம்பித்த ஒரு ஆண்டுக்குள்ளேயே, கடந்த 2009ல் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களை ஒரே நேரத்தில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிரஞ்சீவிக்கு இருந்த மக்கள் செல்வாக்கை பார்த்த அரசியல் கட்சிகள், அவரை தங்கள் கூட்டணியில் சேர்க்க முன்வந்தன. ஆனால், திரைப்படங்களில் பேசுவதைப்போலவே இந்த நேரத்திலும் டயலாக் பேசினார் சிரஞ்சீவி. "மக்களுடன் தான் கூட்டணி அமைப்பேன். ஊழல் ஆட்சியாளர்களை ஒழிப்பது தான் என் வேலை. தனியாகவே தேர்தலை சந்திப்பேன்'என்றார். மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். பிரசாரத்துக்கு இவர் சென்றபோது, பயங்கரமான கூட்டம் கூடியது. மாடிகளிலும், மரங்களிலும், சாலைகளில் திரண்டு நின்ற கூட்டம், அவரைப் பார்த்து ஆர்ப்பரித்தது.

விழுந்தது முதல் அடி: தேர்தல் முடிவுகள் வந்த பின்தான், திரண்ட கூட்டம் எல்லாம், தனக்கு ஓட்டளிக்க வந்த கூட்டம் இல்லை. தன்னை பார்க்க வந்த கூட்டம் என்பதை அவர் உணர்ந்தார். 294 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளில் மட்டும் தான், இவரது கட்சியினர் வெற்றி பெற்றனர். சிரஞ்சீவி, திருப்பதி, பலாகோல் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, திருப்பதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதிலும், பலகோல் சட்டசபை தொகுதி, சிரஞ்சீவியின் சொந்த மாவட்டமான மேற்கு கோதாவரியில் உள்ளது. முதல் தேர்தலிலேயே சொந்த மண்ணிலேயே மண்ணை கவ்விய கசப்பான அனுபவம் சிரஞ்சீவிக்கு கிடைத்தது. லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அப்போது தான், அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை உணர்ந்தார். திரைப்படங்களில் கோலோச்சிய என்.டி.ஆர்., போன்றவர்கள் எல்லாம், எப்படி அரசியலிலும் அதிகாரம் செலுத்தினர், என, யோசிக்கத் துவங்கினார்.

கைவிட்ட தலைவர்கள்: தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, கட்சிக்குள் எதிரொலிக்கத் துவங்கியது. சிரஞ்சீவியின் செல்வாக்கை நம்பி, ஆட்சிக் கனவுடன் வந்தவர்கள் எல்லாம், சுதாரித்துக் கொண்டனர். அவருடன் நெருக்கமாக இருந்த மித்ரா ரெட்டி, பிரகாலா பிரபாகர், தேவேந்திர கவுடு ஆகியோர், கட்சியில் இருந்து வெளியேறினர். இவர்களில் தேவேந்திர கவுடு, மீண்டும் தனது தாய் கழகமான தெலுங்கு தேசத்தில் இணைந்தார். இவர்களைத் தொடர்ந்து, படிப்படியாக தலைவர்களும், தொண்டர்களும் வெளியேறிய வண்ணம் இருந்தனர். கடந்த சில மாதங்களில் மட்டும் சிரஞ்சீவி கட்சிக்கு முழுக்குப் போட்ட தலைவர்களின் எண்ணிக்கை 22 என்கின்றன, ஆந்திர அரசியல் வட்டாரங்கள்.

தெலுங்கானா விவகாரத்திலும் அதிருப்தி:இதைத் தொடர்ந்து, தெலுங்கானா பிரச்னை பூதாகரமாக வெடித்தது. இதில் என்ன முடிவு எடுப்பது என, தெரியாமல் திணறினார் சிரஞ்சீவி. இறுதியில், தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு எதிரான நிலையை மேற்கொண்டார். "ஒருங்கிணைந்த ஆந்திரா தான் சிறந்தது'என்றார். இதனால், அவரது கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிருப்தி அடைந்தனர். இவர்களில் பலர் கட்சியில் இருந்தே வெளியேறினர். "கிணறு வெட்ட, பூதம் கிளம்பிய கதையாகி விட்டதே'என, நொந்து போனார், சிரஞ்சீவி.

மீண்டும் திரைப்படம்: அடிமேல் அடி விழுந்ததால், அரசியல் நமக்கு சரிவராது என்ற முடிவுக்கே வந்து விட்டார். தனது 56 வது பிறந்த நாளின்போது, ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியபோது,"மீண்டும் திரைப்படங்களில் நடிக்க, ஆர்வமாக உள்ளேன். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் கிடைத்தால் நடிப்பேன்'என்றார். இதனால், அரசியலுக்கு முழுக்குப் போட்டு விடுவாரோ என, அவரது ஆதரவாளர்கள் பயந்தனர்.

ஜெகன்மோகன் ரெட்டியால் லாபம்: கட்சி நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்த சிரஞ்சீவிக்கு, ஜெகன்மோகன் ரெட்டியால் அதிர்ஷ்டம் அடித்து. தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன், காங்கிரஸ் ஆட்சிக்கு குழி பறித்துக் கொண்டிருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியை, எப்படி சமாளிப்பது என தெரியாமல் விழி பிதுங்கிப் போயிருந்த காங்., மேலிடம், அதிரடியாக அரசியல் கணக்கு போட்டது. சிரஞ்சீவியை நம் பக்கம் இழுந்து விடலாம் என, திட்டமிட்டது. சிரஞ்சீவி கட்சியில் 18 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு கிடைத்தால், ஜெகன்மோகன் இம்சையை சமாளித்து விடலாம் என, கணக்கிட்டனர். இதற்கான "அசைன்மென்ட்' காங்., மூத்த தலைவர்களான வீரப்ப மொய்லி, அந்தோணி ஆகியோரிடம் தரப்பட்டது. அவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக நிறைவேற்றினர்.

வலையில் விழுந்த சிரஞ்சீவி: "கட்சியில் சேர்ந்தால் மத்திய அமைச்சர் பதவி, உங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு மாநில அமைச்சர் பதவி, இன்னும் கொஞ்ச நாளில் நீங்கள் தான் துணை முதல்வர்'என, வலை விரித்தது காங்கிரஸ். அரசியல் கடலில் தனியாக நீந்தி கரை சேர முடியாது என்பதை உணர்ந்த சிரஞ்சீவி, காங்கிரஸ் விரித்த வலையில் வகையாக சிக்கிக் கொண்டார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் பரபரப்பாக அரங்கேறின. டில்லி சென்று காங்., தலைவர் சோனியாவை சந்தித்த சிரஞ்சீவி, காங்கிரசில் தனது கட்சியை இணைப்பதாகவும், மாநில மக்களின் நலன் கருதியே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அறிவித்தார்.

பரிதாபம்: சிரஞ்சீவியின் இந்த இணைப்பு அரசியல் குறித்து, ஆந்திர அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: ஹீரோவாக நடித்து, பிரபலமானவர்கள், வயதானதும் துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடிப்பது இல்லையா? அதுபோன்ற ஒரு பரிதாப நிலை தான், தற்போது சிரஞ்சீவிக்கு ஏற்பட்டுள்ளது. முதல்வர் கனவுடன் வந்தவரை, காங்கிரஸ் ஆட்சிக்கு துணை நிற்கும்படி கூறி இருக்கிறது, காங்., மேலிடம். அதையும் சிரஞ்சீவி ஏற்றுக் கொண்டது தான் பரிதாபம். ஆந்திராவில் காங்கிரசைப் பொறுத்தவரை, பழம் தின்று கொட்டை போட்ட பெரிய தலைகள் எல்லாம் உள்ளன. அவர்களை மீறி, முதல்வர் பதவியை அவரால், அத்தனை எளிதாக பிடித்து விட முடியாது. மக்களுக்காக உழைப்பேன். ஊழலை ஒழிப்பேன் என, முழங்கி வந்த ஹீரோ, தற்போது, கட்சி மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என, சுருதி குறைந்து, அடக்கி வாசித்து வருகிறார். இன்னும் எத்தனை காலத்துக்கு காங்கிரசில் தாக்குப் பிடிப்பார் என, பார்ப்போம். இவ்வாறு ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போன கட்சியின் வரலாறு (?)
2008 ஆகஸ்ட் 26: திருப்பதியில் 10 லட்சம் பேர் திரண்ட கூட்டத்தில், பிரஜா ராஜ்யம் கட்சியின் துவக்க விழா நடந்தது.
2009 மே 16: ஆந்திர சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு 18 தொகுதிகளில் பிரஜா ராஜ்யம் கட்சி வெற்றி பெற்றது. லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.
2009 ஆகஸ்ட் 26: கட்சியின் முதலாமாண்டு துவக்க விழாவில் பேசிய சிரஞ்சீவி, காங்கிரசுடன், தன் கட்சியை இணைக்கப் போவதாக வெளியான தகவலை உறுதியாக மறுத்தார்.
2010 மே 30: ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக சிரஞ்சீவி அறிவித்தார்.
2011 பிப்ரவரி 1: காங்., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அந்தோணி, சிரஞ்சீவியை சந்தித்து, காங்கிரசில் இணைய அழைப்பு விடுத்தார்.
2011 பிப்ரவரி 2: காங்., தலைவர் சோனியாவை சந்தித்து பேசிய பின், பிரஜா ராஜ்யம் கட்சியை காங்கிரசில் இணைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

"சீட்'களை வாரி வழங்குவதால் பலன் கிடைக்குமா? மெஜாரிட்டி பெறுவது எப்படி

கூட்டணி கட்சிகளுக்கு வேண்டிய தொகுதிகளை கொடுப்பதால், தி.மு.க.,வுக்கு கூட்டணியால் பலன் ஏற்படுவதை விட, இழப்பே அதிகம் ஏற்பட உள்ளது.

தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பத்து தொகுதிகள் வரை ஒதுக்கப்பட உள்ளன. இக்கட்சிகள், வடமாவட்டங்களில் தான் பெரும்பாலும் போட்டியிட உள்ளன. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 20 தொகுதிகளாவது வடமாவட்டங்களில் ஒதுக்கப்படும். இவ்வாறு, 50 தொகுதிகள் வடமாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. அப்படியென்றால், வடமாவட்டங்களில் தி.மு.க., எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், கூட்டணி கட்சிகளால் எவ்வளவு பலனடையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய நிலவரத்தைப் பொறுத்தவரை, வடமாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., போன்ற கூட்டணி கட்சிகளால் தி.மு.க., அணி வலுவாக காணப்படுகிறது. எனினும் சேலம், ஈரோடு, கோவை போன்ற மண்டலங்களில் அ.தி.மு.க.,வுக்கு சாதகமான நிலை உள்ளது. தே.மு.தி.க.,வும் அ.தி.மு.க., அணிக்கு வந்தால், இப்பகுதிகளில் அந்த அணி மேலும் வலுவடையும்.

இப்படிப்பட்ட நிலையில், அதிக சீட்களை கைப்பற்ற வேண்டிய வடமாவட்டங்களில், பெரும்பாலான தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்பதால், தி.மு.க.,வுக்கு இழப்பே அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.

மற்றொருபுறம், தென்மாவட்டங்களில் தன் கூட்டணியை ஜெயலலிதா வலுப்படுத்தியுள்ளார். புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி போன்ற கட்சிகளை அணியில் சேர்த்துள்ள ஜெயலலிதா, அப்பகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கு அதிக எண்ணிக்கையில் சீட் கிடைக்கும் வகையில், பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். புதிய தமிழகத்துக்கு இரண்டு, மூவேந்தர் முன்னணிக்கு ஒன்று என்ற அளவில் அவர் தொகுதிகளை ஒதுக்கியுள்ளதால், இந்த கட்சிகளால் மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க., பலன் பெற உள்ளது.

அரசியலில் மிகவும் அனுபவம் வாய்ந்த தி.மு.க., கூட்டணியால் பலனடைய முயற்சிப்பதற்கு பதிலாக, கூட்டணி கட்சிகளை தக்க வைப்பதிலும், திருப்திபடுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

தற்போதைய நிலையில், பா.ம.க.,வுக்கு 31 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகளுக்கு 10 தொகுதிகள், காங்கிரசுக்கு 60 தொகுதிகள் என்று ஒதுக்கினால் கூட, தி.மு.க., வசம் மீதம் இருப்பது 133 தொகுதிகளே. இதிலும், கூட்டணியில் உள்ள மற்ற சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, தி.மு.க., 125 தொகுதிகளில் தான் போட்டியிட வாய்ப்புள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், இவ்வளவு குறைவான தொகுதிகளில் போட்டியிட தி.மு.க., முடிவு செய்திருப்பது, எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாடு தான் காரணமாக இருக்கும்.

அரசியல் கட்சிகளின் விண்ணை முட்டும் வருமானம்

பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஆண்டு வருமானம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக கோடிகளை தொட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு, அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வாரி வழங்கியிருப்பதும் தெரிந்துள்ளது.
"அசோசியேஷன் ஆப் டெமாகிரடிக் ரிபார்ம்ஸ்' என்ற அமைப்பு, அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கு விவரங்களை, வருமான வரித் துறையிடமிருந்து, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளது.

2007 - 08 மற்றும் 2008 - 09ம் ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்குகளை இந்த அமைப்பு பெற்றுள்ளது.இந்த இரண்டு ஆண்டுகளையும் சேர்த்து, காங்கிரஸ் கட்சி 717 கோடியே 69 லட்ச ரூபாய், பா.ஜ., 343 கோடியே 8 லட்சம், பி.எஸ்.பி., 251 கோடியே 76 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சி 122 கோடியே 53 லட்ச ரூபாய், சமாஜ்வாடி கட்சி 71 கோடியே 30 லட்சம், தேசியவாத காங்கிரஸ் 57 கோடியே 40 லட்சம், ராஷ்டிரிய ஜனதா தளம் 6 கோடியே 20 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளன.

தேசிய கட்சிகளில் மிகவும் குறைவாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு ஆண்டுகளிலும் சேர்த்து இரண்டு கோடியே 40 லட்ச ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டியுள்ளது. 2007 - 08ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2008 - 09ம் ஆண்டில் பி.எஸ்.பி.,யின் வருமானம் 161 சதவீதமும், தேசியவாத காங்கிரஸ் வருமானம் 130 சதவீதமும், காங்கிரஸ் வருமானம் 125 சதவீதமும் உயர்ந்துள்ளது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வருமானம் மட்டும், 2007 - 08ம் ஆண்டை விட 2008 - 09ம் ஆண்டில் 6.45 சதவீதம் குறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி கூப்பன்களை விற்பனை செய்ததன் மூலம் மட்டும், 598 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. அரசியல் கட்சிகளின் ஆண்டு வருமானம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக கோடிகளை தொட்டிருப்பது பொதுமக்களை ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்த இரு ஆண்டுகளில் பா.ஜ., 297 கோடியே 70 லட்ச ரூபாயும், பி.எஸ்.பி., 202 கோடியே 94 லட்ச ரூபாயும், காங்கிரஸ் 72 கோடியே 9 லட்ச ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி, ஒருவரிடமிருந்தும் 20 ஆயிரத்திற்கும் அதிகமாக நன்கொடை பெறாத நிலையிலும், அக்கட்சி பெற்ற மொத்த நன்கொடையின் மதிப்பு 202 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, அதிக சொத்துக்கள் உடைய கட்சி காங்கிரஸ். இக்கட்சிக்கு, 611 கோடியே 77 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இதையடுத்து, பி.எஸ்.பி., கட்சிக்கு 286 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்பிலும், பா.ஜ.,வுக்கு 260 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பிலும் சொத்துக்கள் உள்ளன.

அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள், நன்கொடையாக கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாரி வழங்கியுள்ளன. பாரத் எலெக்டோரல் டிரஸ்ட் அதிகபட்சமாக 18 கோடி ரூபாயை கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. இந்நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு 11 கோடி ரூபாயும், பி.ஜே.பி.,க்கு 6 கோடி ரூபாயும், ஆர்.ஜே.டி.,க்கு 1 கோடி ரூபாயும் வழங்கியுள்ளது.இதற்கு அடுத்தபடியாக, டாரன்ட் பவர் லிமிடெட் நிறுவனம் காங்கிரஸ், பி.ஜே.பி.,க்கு தலா 4 கோடியே 50 லட்ச ரூபாயும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 1 கோடி ரூபாயும் அளித்துள்ளது.

ஜெனரல் எலெக்டோரல் டிரஸ்ட் 7 கோடியே 76 லட்ச ரூபாயும், வீடியோகான் இன்டஸ்டிரியல் லிமிடெட் நிறுவனம் 7 கோடியே 50 லட்ச ரூபாயும், அதானி அண்டு முந்த்ரா போர்ட் அண்டு எஸ்.இ.இசட்., லிமிடெட் நிறுவனம் 6 கோடி ரூபாயும் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளன. தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வாரி வழங்குவது, நாட்டின் ஜனநாயகம் வளர வேண்டும் என்ற அடிப்படையில், ஏற்கனவே தேர்தல் கமிஷன் அளித்த விதிமுறைகளில் வழங்குகின்றன. ஆனால், அதன் சார்புடைய பிரதிநிதிகள் லோக்சபாவிலோ ராஜ்யசபாவிலோ வரும் வகையில் அவை அமைந்தால் பிறகு அரசியல் கட்சிகள் சோஷலிச நெறிமுறைகளை சட்டத்தில் கொண்டு வருவது இயலாததாகிவிடும்.

பா.ம.க.,வுடன் கூட்டணி: தி.மு.க.,வினர் அதிருப்தி

தி.மு.க.,கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்று இருப்பதை, தர்மபுரி மாவட்ட தி.மு.க.,வினர் விரும்பவில்லை. கடந்த தேர்தல்களில் பா.ம.க.,வுடன் கடுமையான மோதல்களை சந்தித்த நிலையில், வரும் தேர்தலில் பா.ம.க.,வுடன் கைகோர்த்து தேர்தல் பணிகளில் ஈடுபடுவதில், தர்மபுரி தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வன்னிய மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் தர்மபுரி மாவட்டம் முதன்மை இடத்தில் உள்ளது. தேர்தலுக்கு தேர்தல் பா.ம.க., கூட்டணி மாறி தேர்தல் களத்தை சந்திப்பதோடு, கூட்டணி சேரும் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, ஐந்து தொகுதியில் இரண்டு முதல் மூன்று தொகுதிகளை குறி வைத்து பெற்று வருவதால், பா.ம.க., கூட்டணியில் தலைமை வகிக்கும் கட்சிக்கு வாய்ப்பு குறைந்து வருவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி (மொரப்பூர் தொகுதி நீக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி), அரூர் (தனி) ஆகிய ஐந்து தொகுதிகள் உள்ளன.ஐந்து தொகுதியில், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய மூன்று தொகுதிகளை, பா.ம.க., குறி வைத்துள்ளது. சமீபத்தில் தர்மபுரி வந்த ராமதாஸ், "இந்த மூன்று தொகுதியிலும் படுத்து கொண்டு வெற்றி பெறுவோம்' என, கூறி சென்றார்.

கடந்த, 2006ம் ஆண்டு, தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க., தர்மபுரி மற்றும் பாலக்கோடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டது. தி.மு.க., பென்னாகரம் மற்றும் மொரப்பூர் தொகுதியிலும், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற மார்க்சிஸ்ட் கட்சி அரூர் தொகுதியில் போட்டியிட்டது.

தற்போது, தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க., இரண்டு முதல் மூன்று தொகுதிகளை பெறும் வாய்ப்பு உள்ளது. "தர்மபுரி தொகுதியில் இந்த முறை தி.மு.க., போட்டியிடும்' என, தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வன்னிய மக்கள் அதிகம் இருப்பதால், இந்த தொகுதியை தி.மு.க., கண்டிப்பாக, பா.ம.க.,வுக்கு விட்டு கொடுக்கும். அதே நேரம் பென்னாகரம் மற்றும் தர்மபுரி தொகுதியை பா.ம.க., பெற கடும் முயற்சி மேற்கொள்ளும்.

தர்மபுரி தொகுதியில் பா.ம.க., மாநில தலைவர் மணியும், மேட்டூர் தொகுதியில் அவரது மகன் தமிழ்குமரன் போட்டியிடுவர் என, அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.தர்மபுரி தொகுதி தி.மு.க.,வுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் என்ற நிலையில், பென்னாகரம் தொகுதியில் இடைத்தேர்தல் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்திருப்பதால், தி.மு.க., போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த தேர்தலில் பா.ம.க., போட்டியிட்டு, சொற்ப ஓட்டுக்களில் தோல்வியடைந்த பாலக்கோடு தொகுதியை பா.ம.க., இத்தடவை பெறுமா என்பது சந்தேகம். மேலும் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் எம்.பி., சேகர், இத்தொகுதியில் போட்டியிட தி.மு.க., சார்பில், ஏற்கனவே முடிவு செய்துள்ள நிலையில் பா.ம.க.,வுக்கு தர்மபுரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி ஒதுக்க வாய்ப்பு இருப்பதால் தி.மு.க.,வினர் கவலை அடைந்துள்ளனர்.

அரூர் (தனி) தொகுதி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது.எதிரும், புதிருமாக இரு தேர்தல்களை சந்தித்த நிலையில், மீண்டும் பா.ம.க.,வுடன் கைகோர்த்து, தி.மு.க., தொண்டர்கள் பணி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், வரும் தேர்தலில் பா.ம.க.,வின் வெற்றிக்கு, தி.மு.க.,வினர் முழு அளவில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்களா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

தி.மு.க.,விடம் காங்., முதல்கட்ட பேச்சு: முக்கிய முடிவுகள் குறித்து பேசவில்லை

"சீட்' எண்ணிக்கை குறித்து தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினருடன் காங்கிரஸ் ஐவர் குழுவினர் நேற்று நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில், முக்கிய அம்சங்கள் குறித்து முடிவு எடுக்காததால், பரபரப்பின்றி முடிவடைந்தது.

தமிழக சட்டசபைத் தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளதால், தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன. நேற்று இரு தரப்பு தலைவர்களும் நடத்திய பேச்சு, முதல் கட்ட ஆய்வாக பரபரப்பின்றி முடிந்தது.தமிழக காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் நேற்று மாலை 4 மணிக்கு தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு வந்தனர். அவர்களை தி.மு.க., பிரமுகர்கள் வரவேற்றனர்.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவில் இடம் பெற்றுள்ள துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, பார்லிமென்ட் தி.மு.க., தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோருடன், காங்கிரஸ் ஐவர் குழு பேச்சுவார்த்தையை துவக்கினர். இந்த பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் நீடித்தது.

தி.மு.க., கூட்டணியில் கடந்த சட்டசபைத் தேர்தலில் 48 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டன. வரும் தேர்தலில் அதிக சீட்டுகளை காங்கிரஸ் பெற வேண்டும்; ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என, காங்கிரசார் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் பார்லிமென்ட் தொகுதிக்கு இரண்டு சட்டசபைத் தொகுதி என்ற அடிப்படையில் 78 சீட்டுகளும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பேசலாம் என்ற எதிர்பார்ப்பும் காணப்பட்டது. ஐவர் குழுவினர் கேட்ட "சீட்' எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள வேண்டிய காரணங்களையும், தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் விளக்கினர் என்று கூறப்பட்டது.

அதாவது, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், புதிய நீதிக் கட்சி, தேசிய லீக் மற்றும் சில சமுதாய அமைப்புகளைச் சார்ந்த கட்சிகளும் கூட்டணியில் இடம் பெறும். அக்கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது. இதனால், தொகுதி எண்ணிக்கை குறித்த முடிவு இறுதி வடிவம் எட்டவில்லை என்பதால், கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறித்து பேசவில்லை.

கூட்டம் முடிந்து வெளியே வந்த காங்., தலைவர் தங்கபாலுவிடம், "எத்தனை "சீட்' கேட்டீர்கள்? ஆட்சியில் பங்கு கேட்டீர்களா? பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதா?' என்று சரமாரியாக நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்:காங்கிரஸ் - தி.மு.க., தொகுதி பங்கீடு குழுக்களின் பேச்சுவார்த்தை சுமூகமாக அமைந்தது. எங்கள் கூட்டணி பலமான கூட்டணி; வெற்றிக் கூட்டணி. தற்போது பேசிய விவரங்கள் காங்., தலைவர் சோனியாவிடம் எடுத்துச் சொல்லப்படும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் பேச இருக்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள்; நல்ல செய்திகளைச் சொல்வோம். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக உள்ளது. எல்லா விஷயங்களையும் பேசினோம்.இவ்வாறு தங்கபாலு கூறினார்.

ஆனால், "எத்தனை சீட் என்ற தெளிவு, அடுத்த முறை நடத்தும் பேச்சுகளுக்குப் பின் தெளிவாகும்' என்று கூறினார். அடுத்த சந்திப்பு எந்த தேதியில் நடக்கும் என்பது பற்றி இப்பேச்சில் இறுதி செய்யப்படவில்லை.

துணை முதல்வர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறும்போது, ""பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடரும்,'' என்றார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை அடுத்து பெரிய அளவில் பரபரப்பு நிகழ்ச்சிகள் நடந்த பின், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் உட்பட முக்கியத் தலைவர்கள் நேற்று சந்தித்து பேசிய போதும், பெரிய அளவில் முடிவுகள் எட்ட வழி காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Friday, February 18, 2011

கூட்டணிக்கு திணறும் திராவிட கட்சிகள்: மெஜாரிட்டியை தக்க வைக்க போராட்டம்

தமிழக அரசியலில் எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு கூட்டணிகளை சேர்ப்பதில் திராவிட கட்சிகள் திணறி வருகிறது. தேர்தல் வெற்றியில் மைனாரிட்டியை தவிர்க்க நடக்கும் முயற்சியே தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகளில் கூட்டணி குறித்த இறுதி முடிவுகள் எடுக்க திணறி வருகிறது.

தமிழகத்தில் வரும் மே மாதம் தேர்தல் நடக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளன. தி.மு.க., வை பொறுத்த வரையில் கடந்த தேர்தலில் இருந்த மெகா கூட்டணி இந்த தேர்தலில் இல்லை. தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்ற போதும், வரும் தேர்தலில், 80 சீட் வரை எதிர்பார்ப்பும், ஆட்சியில் பங்கும் என்ற கோஷம் அதிகரித்து இருப்பதால், தி.மு.க., கலக்கத்தில் உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைது, கலைஞர் "டிவி' அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு உள்ளிட்ட பிரச்னைகளில் தி.மு.க., திணறி போய் உள்ளது. அ.தி.மு.க.,வை பொறுத்த வரையில் அக்கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், புதிய தமிழகம், இந்திய குடியரசு கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம், கார்த்திக் கட்சி உள்ளிட்டவைகளுக்கு சில தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், புதிய தமிழகம், குடியரசு கட்சிக்கு சீட் ஒதுக்கீடு முடிந்துள்ளது. கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளை தவிர பிற கட்சிகள் அனைத்தும் அ.தி.மு.க., சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது. கடந்த தேர்தலில் மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்த தே.மு.தி.க., இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற தே.மு.தி.க., ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்று வரை, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. மாறாக தே.மு.தி.க., விதிக்கும் நிபந்தனைகளால் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அ.தி.மு.க., வட்டாரத்தில் பேசப்படுகிறது. தே.மு.தி.க., 50 சீட் வரையில் எதிர்பார்த்துள்ள நிலையில், மாவட்டத்துக்கு ஒரு தொகுதி மற்றும் மாநகராட்சி பகுதியில் இரண்டு முதல் மூன்று சீட்கள் எதிர்பார்ப்பதாலும், கடந்த தேர்தலில் தே.மு.தி.க., அதிக ஓட்டுக்கள் பெற்ற வட மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிக்கு தே.மு.தி.க., குறி வைத்து வருகிறது. மேலும் தேர்தலுக்கு பின் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்ற நிபந்தனையும், தே.மு.தி.க., விதித்திருப்பதாக அ.தி.மு.க., வட்டாரத்தில் பேசப்படுகிறது. தே.மு.தி.க., கூட்டணி குறித்த முடிவை பா.ம.க., மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது.

இதை எல்லாவற்றையும் விட தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் தனி பெரும்பான்மை பெற வேண்டும் என்ற ஆவலில் உள்ளனர். மொத்தம் உள்ள, 234 தொகுதியில் தனிப்பெரும்பான்மை பெற, 117 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதற்கு, 130 முதல், 140 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே, 117 தொகுதிகளை பெற முடியும். அ.தி.மு.க.,வை பொறுத்த வரையில் தற்போது, தி.மு.க., அரசை மைனாரிட்டி அரசு என சுட்டிக்காட்டுவது போல் வரும் தேர்தலில் தமக்கும் அந்த நிலை வந்து விடக்கூடாது என நினைக்கின்றனர். தி.மு.க.,வும் தற்போதைய நிலையை போல் மைனாரிட்டி விமர்சனத்துக்கு ஆளாக கூடாது என நினைகிறது.

அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர தே.மு.தி.க., இணைந்தால் கூட்டணிக்கு அதிக தொகுதிகளை தாரை வார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால், தே.மு.தி.க.,வை மட்டும் கூட்டணியில் சேர்க்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. வரும் 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று கூட்டணி குறித்த தெளிவான முடிவு அறிவிக்கப்படும் என அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். அ.தி.மு.க., கூட்டணி விஷயத்தில் சற்று சுறுசுறுப்பு அடைந்திருந்தாலும், மெஜாரிட்டியை தக்க வைக்க கூட்டணி கட்சிகளிடம் பேரத்தை படிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தி.மு.க.,வை பொருத்த வரை, காங்., கட்சியின் முடிவை பொறுத்து பிற கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பா.ம.க., தி.மு.க., கூட்டணியில் இடம் பெறும் என்பது, கருணாநிதி-ராமதாஸ் சந்திப்பின் மூலம் உறுதியாகி உள்ளதால், தி.மு.க.,வுக்கு எந்தனை சீட்டில் போட்டியிடும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

Thursday, February 17, 2011

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்: சொல்கிறார்கள் பிரிட்டன் விஞ்ஞானிகள்

பிரிட்டன் விஞ்ஞானிகள், தாங்கள் உருவாக்கி வரும் செயற்கை பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகவும், விலை குறைவாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இயற்கையில் கிடைக்கும் கச்சா எண்ணெய் மூலம் உருவாக்கப்படும் பெட்ரோலின் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பெட்ரோலுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி வருகிறது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், பெட்ரோலுக்கு மாற்றாக, செயற்கை பெட்ரோலை பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

இதுகுறித்து, விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் ஸ்டீபன் பெனிங்டன் கூறியதாவது: இயற்கையில் கிடைக்கும் கச்சா எண்ணெயைக் கொண்டு பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. ஆனால், நாங்கள் ஹைட்ரஜனை மையமாகக் கொண்டு செயற்கை பெட்ரோலை உருவாக்கி வருகிறோம். இது இயற்கையான பெட்ரோலை விட மூன்று மடங்கு சக்தி கொண்டதாக இருக்கும். மேலும், இதனால், சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதமான பாதிப்பு ஏற்படாது. எங்களின் செயற்கை பெட்ரோலை பயன்படுத்தி, இருசக்கர வாகனங்கள், கார், பஸ் மற்றும் விமானங்களையும் இயக்க முடியும். சுற்றுச்சூழலுக்கு நண்பனாக இருக்கும் இந்த பெட்ரோல் 14 ரூபாய்க்கே கிடைக்கும். அடுத்த ஆண்டு இந்த பெட்ரோலை பயன்படுத்தி வாகனங்களை சோதனை அடிப்படையில் இயக்க திட்டமிட்டுள்ளோம். இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இந்த பெட்ரோல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு வரும். இவ்வாறு ஸ்டீபன் பெனிங்டன் கூறினார்.

Wednesday, February 16, 2011

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு இல்லையா? சி.பி.ஐ., இயக்குனர் மறுப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு எந்த இழப்பும் இல்லை என கூறுவது சரியானதல்ல,'' என, பொதுக்கணக்கு குழு முன் ஆஜரான சி.பி.ஐ., இயக்குனர் ஏ.பி.சிங் கூறியுள்ளார்.

பா.ஜ., மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி தலைமையிலான பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு முன், நேற்று முன்தினம் ஆஜரான சி.பி.ஐ., இயக்குனர் ஏ.பி.சிங் கூறியதாவது:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பான கிரிமினல் சதிகள் பற்றி மட்டுமே சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. அதனால், "2ஜி' ஒதுக்கீட்டால் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என, தற்போதைய நிலையில் என்னால் உறுதியாக சொல்ல முடியாது. அதேநேரத்தில், இந்த மோசடி விவகாரத்தை பொறுத்தமட்டில், அரசுக்கு எந்த விதமான இழப்பும் இல்லை என்றும் சொல்ல முடியாது.இதுவரை சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும் மேற்கொண்ட விசாரணையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால், அரசுக்கு 40 ஆயிரம் கோடி முதல் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணை முழுமையாக முடிந்த பின்னர் இந்த தொகையில் மாற்றம் ஏற்படலாம்.நான் பதவியேற்று இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. ஸ்பெக்ட்ரம் தொடர்பான எங்கள் அமைப்பின் விசாரணையில் எந்த விதமான குறுக்கீடும் இல்லை. தற்போது எனக்கு தெரிந்த விவரங்களைக் கூறி விட்டேன். மீண்டும் ஒருமுறை ஆஜராக வாய்ப்பு அளித்தால், மேலும் பல விவரங்களை கேட்டு தெரிவிப்பேன்.இவ்வாறு ஏ.பி.சிங் தெரிவித்தார்.

பதவி விலக மாட்டேன்: பிரதமர் மன்மோகன்

கூட்டணி அரசை தலைமையேற்று நடத்தும்படி, மக்கள் எங்களுக்கு ஓட்டளித்துள்ளனர். முடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளதால், பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

தொலைக்காட்சி செய்தி சேனல்களின் செய்தி ஆசிரியர்கள் கேள்விகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பதில் விவரம்:கூட்டணி அரசை வழிநடத்தி செல்லும் போது, சில சங்கடங்கள் எழுவது இயல்பே. சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே. அதற்காக, பிரதமர் பதவியை விட்டு விலகுவது என்ற எண்ணமே எனக்கு எழவில்லை.நான் இப்போதுள்ள பணியை திறம்படவே செய்கிறேன். எனவே, ஏற்றுக் கொண்ட பணியை பாதியிலேயே விட்டுச் செல்லும் எண்ணம் இல்லை. இந்த அரசு இன்னும் நிறைய விஷயங்களில் சாதிக்க வேண்டியுள்ளது.கூட்டணி அரசை தலைமையேற்று நடத்தும்படி, மக்கள் எங்களுக்கு ஓட்டளித்துள்ளனர். முடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளதால், அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஒரு பைசா கூட நஷ்டம் இல்லை என, அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார். இவ்விஷயத்தில் ஆரம்பம் எது என, பார்க்க வேண்டும். ஏலமுறையை பின்பற்றக்கூடாது என்பதே கொள்கையாக இருந்து வந்துள்ளது. முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கைப்படி பார்த்தால், லாப, நஷ்ட கணக்குகளை யூகிக்கவும் முடியாது.

அரசு எத்தனையோ திட்டங்களுக்கு மானியம் வழங்குகிறது. இதை வைத்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறமுடியாது. உதாரணமாக உணவுப் பொருட்களுக்கு, 80 ஆயிரம் கோடி வரை அரசு மானியம் அளிக்கிறது. அதை விட, உரங்களுக்கு மானியம் அளிக்கப்படுகிறது. மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் மண்ணெண்ணெய்க்கு மானியம் அதிகமாக வழங்கப்படுகிறது. எனவே, ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் கூறப்பட்ட நஷ்ட தொகை என்பது ஒரு அனுமானமே.இஸ்ரோ - தேவாஸ் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. இதை வலுவிழக்க செய்யும் நோக்கத்தில், பிரதமர் அலுவலகம் எந்தவொரு காரியங்களிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடவில்லை. அவ்வாறு ஈடுபடுவதாக கூறப்படுவது தவறான தகவல்.

பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையின் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. அதில், ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும்.பார்லிமென்ட் நடைபெறவிடாமல் எதிர்க்கட்சிகள் செய்வது குறித்து எனக்கு புரியவில்லை. பட்ஜெட் கூட்டத் தொடராவது சரியாக நடைபெற வேண்டும். எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கருத்து வேறுபாடுகள் எவ்வளவு இருந்தாலும், பார்லிமென்ட் சுமுகமாக நடைபெற வேண்டும்.அடுத்த பொதுத்தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து இப்போதே எதுவும் கூற முடியாது. என்னுடைய மீதி பதவிக் காலத்தை பூர்த்தி செய்வேன் என்றே நம்புகிறேன். நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா கோப்பை வெல்ல வேண்டுமென்று நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். அவர்களுடன் சேர்ந்து நானும் அதையே விரும்புகிறேன். இந்திய அணியில் பிடித்தமான வீரர் என்று ஒருவரை மட்டும் குறிப்பிட்டு சொல்ல விருப்பமில்லை.இவ்வாறு பிரதமர் கூறினார்.

இலங்கை கடற்படையினர் பிடித்த மீனவர்களை மீட்க நடவடிக்கை : "இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து, ஏற்கனவே வெளியுறவுத்துறை செயலரை இலங்கைக்கு அனுப்பி, மத்திய அரசு தன் கண்டனத்தை தெரிவித்தது."இந்நிலையில், மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தியாவுக்கு அருகில் உள்ள நட்பு நாடுகள், இதுபோல நடப்பது ஏற்கத்தக்கது அல்ல. சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது' என்று பிரதமர் கூறினார்.அதே சமயம் இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் மூலம் அந்த நாட்டு அரசுடன் பேசி உடனடியாக மீனவர்களை மீட்க பேசி, நடவடிக்கை எடுத்திருப்பதாக நேற்று மாலையில் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி கூறினார்.

"எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்க தயார்' : சமீபகாலமாக மத்திய அரசின் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து, சரமாரியாக சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், இவற்றுக்கு விளக்கமளிக்கும் வகையில், இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நேற்று காலை, 11 மணிக்கு துவங்கிய இந்த சந்திப்பின் ஆரம்பத்தில், பிரதமர் சில நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் போட்டிகள், ஐ.எஸ்.ஆர்.ஓ., என, வரிசையாக பல்வேறு பிரச்னைகள் குறித்து, ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. இப்பிரச்னைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதில், ஊடகங்கள் சிறப்பாக செயல்பட்டன.இப்பிரச்னைகளில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, ஊடகங்கள் தூண்டுகோலாக இருந்தன.

ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ள பிரச்னைகளில், யார் தவறு செய்திருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இருப்பினும், நாடு முழுவதும் ஊழல்கள் மட்டுமே நிரம்பியிருப்பது போல சித்திரிக்கப்படுகிறது. ஆனாலும், உரிய முறையில் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தே உள்ளது. இந்த ஆண்டு, நாட்டின் வளர்ச்சி வீதம் என்பது, 8.54 சதவீதம் வரை உள்ளது.ஆனாலும், நாட்டின் பணவீக்கம், உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் ஆகியவை, கவலையளிக்கின்றன. வளர்ச்சி விகிதம் என்பது, பரவலாக பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ளது. இருப்பினும், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் மேலும் குறையும்.உள்நாட்டு பாதுகாப்பை பொறுத்தவரை, பயங்கரவாத நடவடிக்கைகள் எதுவும் இல்லை. இது வரவேற்கத்தக்கது. வடகிழக்கு பகுதியில் முன்பை விட நிலைமைகள் மேம்பட்டுள்ளன. அங்கு, உல்பா அமைப்புகள் தங்களது வன்முறை பாதையை விட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர சம்மதித்து இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.ஜம்மு காஷ்மீரிலும் நிலைமைகள் மேம்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெளியுறவுத் துறையை பொறுத்தவரை, உலகநாடுகள் பாராட்டும் வகையில் இந்தியாவின் நடவடிக்கைகள் உள்ளன.கடந்த முறை ஏற்பட்ட முட்டுக்கட்டையால், பார்லிமென்ட் இயங்காமல் இருப்பது சரியானது அல்ல. அரசு, எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் ஆகிய மூன்றுமே, ஒன்றுக் கொன்று ஒத்துழைப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம். எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறும் என, உறுதியாக நம்புகிறேன்.அரசைப்பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்க தயாராகவே உள்ளோம். எங்கு, எப்போது நடவடிக்கைகள் தேவைப்படுகின்றனவோ, அப்போது, உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்னைகள், எப்போதுமே இருக்கத்தான் செய்யும்.அதேபோல, அதற்குண்டான தீர்வுகளும் அந்த தீர்வை ஏற்படுத்த தேவையான வழிமுறைகளும் இருக்கத்தான் செய்யும் என்றும் நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.

எஸ்-பாண்ட் விவகாரம்: கேபினட் இறுதி முடிவு : "டிவி' செய்தி ஆசிரியர்களுக்கு பேட்டியளித்த மன்மோகன் சிங், "எஸ்-பாண்ட்' விவகாரம் கூறியதாவது:"எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர் ஒதுக்கீடு தொடர்பாக திவாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இது குறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி இறுதி முடிவை எடுக்கும். இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என, விண்வெளி கமிஷன் பரிந்துரை செய்த பின், என் அலுவலகம், திவாஸ் நிறுவனத்துடன் மறைமுக பேச்சுவார்த்தை எதையும் நடத்தவில்லை. ஒப்பந்தம் ரத்து செய்யப்படாத நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு விண்வெளித்துறை அதிகாரிகள், இஸ்ரோ அதிகாரிகள், ஆண்ட்ரிக்ஸ் நிறுவன அதிகாரிகள், திவாஸ் பிரதிநிதிகளை சந்தித்து பேசினர். ஆனால், அதன் பிறகு விண்வெளித்துறை அதிகாரிகளோ, இஸ்ரோ ஒப்பந்தத்தை அமல்படுத்தவது குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. விண்வெளி கமிஷன் எடுத்த முடிவை மாற்றியமைக்கவோ, சீர்குலைக்கவோ, மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதை உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறேன்.சில நடைமுறை சிக்கல்களால், ஒப்பந்தத்தை ரத்து செய்வது காலதாமதமானது. தற்போது அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனை முடிந்துள்ளது. விரைவில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான கமிட்டி முடிவு எடுக்க இருக்கிறது.இவ்வாறு பிரதமர் கூறினார்.

திவாஸ் மிரட்டல்: "ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துடன் நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமானால், நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்' என, திவாஸ் மல்டி மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ராஜா மந்திரியானது குறித்து பிரதமர் தகவல் : ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மவுனம் கலைந்தது

ஸ்பெக்ட்ரம் மோசடியில் கைதான ராஜா, தொலைத் தொடர்புத்துறை அமைச்சரானதற்கு காரணம் யார் என்ற தகவலை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தெரிவித்தார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் மவுனம் கலைத்தார். "பார்லிமென்ட் கூட்டுக் குழுவை சந்திக்கவும் தயார்' என, அறிவித்தார்.

தொலைக்காட்சி செய்தி சேனல்களின் செய்தி ஆசிரியர்களை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு விளக்கம் அளித்து பிரதமர் பேசியதாவது:கடந்த 2007 நவம்பர் 2ம் தேதி அமைச்சராக இருந்த ராஜாவுக்கு கடிதம் எழுதினேன். அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து வந்திருந்த புகார்களை மையமாக வைத்து, சில சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியிருந்தேன். சட்ட ரீதியிலும், சரியான முறையிலும் வெளிப்படையாகவும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்று இருக்க வேண்டுமென்றும் கூறியிருந்தேன்.அந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற அதே நாளில், ராஜாவிடம் இருந்து எனக்கு பதில் வந்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வெளிப்படையான முறையிலேயே நடப்பதாகவும், எந்தத் தவறுக்கும் இடம் இல்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும், "டிராய் அமைப்பும், தொலைத்தொடர்பு கமிஷனும், ஏலமுறையை பின்பற்ற வேண்டுமென்று கூறவில்லை. ஏல முறையை பின்பற்றினால், ஏற்கனவே உள்ளவர்கள் மட்டுமே வர முடியும், புதிய ஆட்கள் வர முடியாது. கடந்த காலங்களில் ஏலம் இல்லாமல் ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை ஏலம் விடப்பட்டால், அது அனைவரையும் சமமாக நடத்தப்படவில்லை என்பது போலாகிவிடும். நிதியமைச்சகமும், தொலைத் தொடர்பு அமைச்சகமும் ஏலமுறை வேண்டாம் என்பதை ஒப்புக் கொண்டன. எனவே, ஏலமுறையை தவிர்த்துவிட்டு, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையை பின்பற்ற முடிவெடுக்கப்பட்டது' என்றும், ராஜா கூறியிருந்தார். இதனால்தான், அந்த சமயத்தில் நான் மறுபடியும் அந்த விவகாரத்தில் தலையிட முடியவில்லை.

சில நிறுவனங்கள் மட்டும் பலன் பெறும் வகையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உள்நோக்கத்துடன் நடந்ததா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஏற்கனவே இருந்த கொள்கை முடிவையே தானும் தொடர்வதாக ராஜா கூறினார். மற்றபடி ஸ்பெக்ட்ரத்தை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது குறித்தோ அல்லது முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கையை அமல்படுத்திய விதம் பற்றியே, என்னிடமோ அல்லது மத்திய அமைச்சரவையிடமோ, ராஜா எந்தவொரு ஆலோசனைகளையும் மேற்கொள்ளவில்லை. அந்த முடிவுகள் அனைத்துக்குமே ராஜாவே பொறுப்பு.தவிர, உரிமங்கள் பெற்ற இரண்டு நிறுவனங்கள் கூடுதல் லாபம் பார்க்கும் வகையில், தங்களது நிறுவன பங்குகளை விற்றுள்ளன. ஒரு நிறுவனம், தனது நிறுவன லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கை அது. அந்த நிறுவனங்களின் விருப்பம் அது. இது போன்ற விஷயங்களில் எல்லாம் நான் தலையிட இயலாது.

கூட்டணி அரசு: கூட்டணி அரசு என்று வரும்போது, ஒரு சில சமரசங்களும் உடன் வருவது இயல்பே. யாரை அமைச்சராக்குவது என்ற விஷயத்தில் நான் சில கருத்துக்களை கூறலாமே தவிர, இறுதி முடிவெடுக்க வேண்டியது கூட்டணிக் கட்சி தலைவரே. அந்த விவகாரத்தில் நான் தலையிட முடியாது. அதில் தவறேதும் இல்லை. தி.மு.க., தரப்பில் எனக்கு அளிக்கப்பட்டது ராஜாவின் பெயர்தான். 2009 மே மாதம் இரண்டாம் முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவை உருவாக்கும் நேரத்தில், ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சில புகார்கள் வந்தன. அந்தப் புகார்கள் மிகவும் வலுவானதாக இருப்பதாக எனக்கு தென்படவில்லை. எனவேதான் ராஜாவின் பெயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நானும் எனது மனதை தயார் செய்து கொண்டு அதை ஏற்றுக் கொண்டேன். ராஜாவை மீண்டும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக்கினேன்.ஸ்பெக்ட்ரம் உட்பட எந்த பிரச்னைகள் குறித்தும் விளக்கமான பதில்களை அளிக்க தயாராக உள்ளேன்.

சீசரின் மனைவியைப் போல, பிரதமர் என்ற பதவியில் உள்ள நானும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவே ஆசைப்படுகிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பார்லிமென்டின் பொதுக்கணக்குழு விசாரணை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்தான் அக்குழுவின் தலைவராக உள்ளார். அந்த குழு முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க தயார் என, ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்து விட்டேன். பொதுக்கணக்கு குழு என்றுதான் இல்லை. ஜே.பி.சி., எனப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழு உட்பட எந்த குழு முன்னரும் ஆஜராக தயார். இவ்விஷயத்தில் எனக்கு எந்த பயமும் இல்லை.இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.

மேலும் நாட்டின் மொத்த வளர்ச்சி, ஊழலை மட்டும் பெரிது படுத்தி நாட்டின் கவுரவத்தை குலைக்காமல், மற்ற சாதக விஷயங்களையும், "மீடியா' வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மொத்தம் 70 நிமிடங்கள் நடந்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். இன்னமும் மூன்றரை ஆண்டுகளுக்கு கூட்டணி அரசு தொடரும் என்ற அவர், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.

அமைச்சரவை மாற்றம் எப்போது?பிரதமர் மன்மோகன் சிங் தன் பேட்டியின் போது கூறிய மேலும் பல முக்கிய விஷயங்கள் விவரம் வருமாறு:

* அசாம், கேரளா, தமிழகம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தில் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

* "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி மோசடி, ஐ.எஸ்.ஆர்.ஓ., ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் என, அனைத்து ஊழல்களிலும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட அந்தஸ்தில் இருந்தாலும், அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவர்.

* எனது அரசு இயலாத அரசு அல்ல, அதே போல், நானும் இயலாத பிரதமர் அல்ல. அரசை நடத்திச் செல்வதில் சில பலவீனங்கள் உள்ளன. அரசாட்சியின் தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

* நான் ஒருபோதும் தவறு செய்யவில்லை எனக் கூறவில்லை. ஆனால், எல்லாரும் வர்ணிப்பது போல, நான் ஒன்றும் பெரிய குற்றவாளியும் அல்ல.

* கடந்த 2009ம் ஆண்டில் மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்ட போது, என்ன நிகழ்ந்தது என்பதை நான் வெளிப்படுத்த முடியாது. நாங்கள் கூட்டணி அரசை நடத்துகிறோம். கூட்டணி அரசில், நாங்கள் சில யோசனைகளை மட்டுமே கூற முடியும். ஆனால், யார் அமைச்சராக வேண்டியது என்பதை கூட்டணி கட்சியின் தலைவர்தான் முடிவு செய்வார்.

* பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின், மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்.

* உணவுப் பொருட்கள் விலை உயர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது உண்மையே. இருந்தாலும், அவர்களை காப்பாற்ற நாங்கள் முற்பட்டுள்ளோம்.

Thursday, February 10, 2011

சத்தியமூர்த்தி பவன், "கேட்' பூட்டு உடைப்பு: இளங்கோவன் ஆதரவாளர்கள் அதிரடி

இளங்கோவன் ஆதரவாளர்கள், சத்தியமூர்த்தி பவனில், பூட்டப்பட்டிருந்த, "கேட்'டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கண்டன கூட்டம் நடத்தினர்.

தி.மு.க., கூட்டணியில் இடப் பங்கீடு பற்றி பேச, காங்கிரஸ் சார்பில், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், மாநில தலைவர் தங்கபாலு, ஜெயக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் கொண்ட ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், இளங்கோவன் பெயரை சேர்க்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சத்திய மூர்த்தி பவனில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் மங்கள் ராஜ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, ராணி வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது: தி.மு.க.,வுடனான கூட்டணி குறித்து, காங்கிரஸ் தொண்டர்கள் கொண்ட உணர்வைத்தான் நான் வெளிப்படுத்தி வந்தேன். மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. இன்னும் மூன்றரை ஆண்டு காலம் ஆட்சி செய்ய வேண்டியுள்ளது. உடல் நலம் சரியாக, தேனில் குழைத்து கசப்பு மருந்து உண்பது போல், மத்தியில் நம் ஆட்சி தொடர, தி.மு.க., ஆதரவு வேண்டும். இதற்காக, சோனியா முடிவுப் படி வரும் சட்டசபைத் தேர்தலில் நாம் தி.மு.க.,வுடன் அணி சேர்ந்துள்ளோம். இனி மற்ற பிரச்னைகளை பேசாமல், தேர்தலில் நம் கூட்டணி வெற்றிக்கு உழைக்க வேண்டும்.

கூட்டணியில் இடப் பங்கீடு செய்ய நம் கட்சியில், ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் இருவரும் நம் மதிப்பிற்குரியவர்கள். ஜெயந்தி நடராஜன் ஆங்கில புலமை உடையவர்; கட்சியின் செய்தித் தொடர்பாளர். ஜெயக்குமார் இளைஞர், இவர்களை நான் வரவேற்கிறேன். இக்குழுவில், தங்கபாலு எந்த தகுதியை வைத்து இடம் பெற்றுள்ளார்? தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகள், ஆறுகள், அணைகள் குறித்து புள்ளி விவரத்துடன் பேசக் கூடிய துரைமுருகன், தி.மு.க., அணியில் இடம் பெற்றுள்ளார். அதே போல், 234 தொகுதிகள் குறித்தும் புள்ளி விவரத்துடன் பேசக் கூடிய, எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனை நம் கட்சியின், இடப் பங்கீட்டுக் குழுவில் இடம் பெறச் செய்திருக்கலாம் அல்லது நீண்ட காலமாக அரசியலில் உள்ள யசோதாவை இடம் பெறச் செய்திருக்கலாம். அதை விட்டு விட்டு, தங்கபாலு அந்த குழுவில் இடம் பெற்றது ஏன் என்று கேட்டால், 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் உண்டு. தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கிறார், எனச் சொல்கின்றனர். இவரின் அரசியல் அனுபவம் என்ன என்பது எனக்கு தெரியாதா? "மெடிக்கல் சீட் வாங்கித் தருகிறேன், வெளிநாட்டிற்கு அனுப்புகிறேன்' எனக் கூறி, லட்சக்கணக்கில் மோசடி செய்த போது காப்பாற்றியது நான் தானே, அந்த நன்றி விசுவாசம் கூட இல்லையே. இவர் முன்பு தலைவராக இருந்த போது, நான்கு பேர் புகுந்து கட்சியினரை அடித்து உதைத்தனர்; அந்தளவில் தான் இவர் கட்சியை வளர்த்து இருந்தார். பிரிந்து இருந்தவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து நான் கட்சியை வளர்த்தேன். இவர் கட்சிக்காக என்ன செய்துள்ளார்?

டில்லிக்கு நான் சென்றிருந்த போது, குலாம் நபி ஆசாத் என்னிடம், "நீங்கள் மூத்த தலைவர். காங்கிரஸ் குழுவில் நீங்கள் இடம் பெறுவீர்கள்' என்று சொன்னார். கடைசியில், என்னை குழுவில் சேர்க்கவிடாமல் தங்கபாலு தடுத்து விட்டார். இப்பிரச்னையை இதோடு விட்டு விடுங்கள், அவரை நான் பார்த்துக் கொள்கிறேன். விரைவில் கட்சித் தலைமை மாறும்; அப்போது, சத்தியமூர்த்திபவன் நம் வசமாகும். இவ்வாறு இளங்கோவன் பேசினார். முன்னதாக, சத்தியமூர்த்திபவன் வாயிலில் இளங்கோவன் ஆதரவாளர்கள் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில், "கேட்' பூட்டப்பட்டிருந்தது. மூடப்பட்டிருந்த கேட்டின் பூட்டை, இளங்கோவன் ஆதரவாளர்கள் உடைத்தெறிந்தனர். பலர் ரகளையிலும் ஈடுபட்டனர்.

"இவர்கள் ஏன் தியாகி ஆகவில்லை?' காங்கிரஸ் குழுவில் இளங்கோவனுக்கு இடம் அளிக்காததை கண்டித்து, தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அவரை மற்றவர்கள் தடுத்து விட்டனர். தீக்குளிப்பு முயற்சியை கண்டித்த இளங்கோவன், "தீக்குளிப்பது, தற்கொலை செய்வது ஆண்மையாகாது; அது கோழைத்தனம். இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமரனை தியாகி எனக் கூறி, பழ.நெடுமாறன், சீமான் போன்றவர்கள் கொண்டாடுகின்றனர். தற்கொலை செய்து கொள்வது தியாகமென்றால், அந்த தியாகத்தை இவர்கள் செய்யாதது ஏன்?' என, கேள்வி எழுப்பினார்.

மோசடியில் மிகப்பெரியது ஸ்பெக்ட்ரம்: சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

"ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்குக்கு இணையானது எதுவும் இல்லை. எனவே, இந்த வழக்கு விவகாரத்திற்கு மத்திய அரசு முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறப்பு கோர்ட் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு விரைவில் உத்தரவாதம் அளிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறினர்.

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்த ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கு விசாரணையின் போது, பொதுநல அமைப்பு சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷன், ""சுவான் டெக்னாலஜி உட்பட, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற பல பெரிய கம்பெனிகளிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை,'' என்றார். சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், ""ஸ்பெக்ட்ரம் ஊழலில் பயனடைந்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய சி.பி.ஐ.,க்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை. விசாரணை வரம்பை நாங்கள் அதிகப்படுத்தியுள்ளோம். ஒரு மாதகாலம் அவகாசம் கொடுத்தால், யார் யார் பலனடைந்தனர் என்பது தொடர்பான விவரங்களைத்தர முடியும். இருந்தாலும், ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பான முதல் குற்றப் பத்திரிகையை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் சி.பி.ஐ., தாக்கல் செய்யும்,'' என்றார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, ""சிறப்பு கோர்ட் அமைப்பது தொடர்பாக, மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்கப்படும்,'' என்றார். இதன்பின் நீதிபதிகள் கங்குலி மற்றும் சிங்வி தெரிவித்ததாவது: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சிறப்பு கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் முன், அது தொடர்பான முழு விவரங்களையும் எங்களிடம் தெரிவிக்க வேண்டும். சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யும் முன், வரைவு குற்றப் பத்திரிகையை நாங்கள் பரிசீலனை செய்வோம். ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்து விசாரிக்க, மத்திய அரசு சிறப்பு கோர்ட் அமைத்தால் மட்டுமே, இந்த வழக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவுக்கு வரும்.

ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கிற்கு இணையானது எதுவும் இல்லை. எனவே, இந்த விவகாரத்திற்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிறப்பு கோர்ட் அமைப்பது தொடர்பான உறுதி மொழியை விரைவில் தெரிவிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக, வேறு எந்த கோர்ட்டும் எவ்விதமான உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. இந்த வழக்கானது நியாயமான முடிவுக்கு வர வேண்டும். இப்போதைக்கு சுப்ரீம் கோர்ட்டிற்குதான் சி.பி.ஐ., பதிலளிக்க வேண்டும். சி.பி.ஐ.,யின் விசாரணையில் யாரும் குறுக்கிடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) 2003ல் எடுத்த முடிவே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி நடக்கக் காரணம். அதனால், டிராய் அதிகாரிகளுக்கு எதிராக சி.பி.ஐ., எடுத்த நடவடிக்கை என்ன? இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளை விசாரிக்க விசேஷ கோர்ட்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டின் பிடி மேலும் இறுகுகிறது. இந்த ஊழல் வழக்குகளை விசாரிக்க, சிறப்பு கோர்ட்டை அமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், ஸ்பெக்ட்ரம் ஊழலால் பலனடைந்த யாரையும், அவர்கள் எப்படிப்பட்ட அந்தஸ்தில் இருந்தாலும், சி.பி.ஐ., சுதந்திரமாக விசாரிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி குறித்து, சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும் விசாரித்து வருகின்றன. இந்த இரு அமைப்புகளும், பிப்., 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின், நீதிபதிகள் கங்குலி மற்றும் சிங்வி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், சி.பி.ஐ.,யின் செயல், உண்மைகளைக் கண்டறியும் வகையில் இருக்க வேண்டும் எனக் கூறியது. நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு: "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சிறப்பு கோர்ட்டை மத்திய அரசு அமைக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் மோசடியில் பயனடைந்த யாரையும், சி.பி.ஐ., அதிகாரிகள் சுதந்திரமாக விசாரிக்கலாம். அதில், ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குற்றவாளியை காவலில் எடுக்க உரிமை கோரலாம்.

தாங்களே சட்டம் என, ஏராளமானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களையும் இந்தச் சட்டம் பிடிக்க வேண்டும். பிரபலமான வர்த்தக நிறுவனங்களையும், சி.பி.ஐ., தங்களின் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரலாம். அந்நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பிரபலங்கள் பட்டியலிலோ அல்லது கோடீஸ்வர்கள் பட்டியலிலோ இடம் பெற்றிருந்தாலும், அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்களிடம் சுதந்திரமாக விசாரணை நடத்தலாம். இந்த மோசடியில் எந்த அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்களையும் விட்டு வைக்கக் கூடாது. அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினால் மட்டும் போதாது, அதற்கு மேலான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இதையெல்லாம் காலதாமதமின்றி செய்ய வேண்டும்.

இதுவரை மோசடி தொடர்புடைய பல பெரிய கம்பெனிகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்படவில்லை. அது வியப்பை அளிக்கிறது. அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., நடவடிக்கை எடுக்காதது ஏன்? விசாரணை நிறுவனங்களின் சுதந்திரம் எந்த வகையிலும் தடைபடக்கூடாது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அதையும் தாண்டி, இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய வேண்டும். சதிகாரர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக, வேறு எந்த கோர்ட்டுகளும் எவ்விதமான உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே கடந்த ஒருவாரமாக ஸ்பெக்ட்ரம் வழக்கில் பல ஆதாரங்களை திரட்டும் சி.பி.ஐ.,யின் பிடி, இனி கடுமையாக இறுகும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

Monday, February 7, 2011

தொகுதி பங்கீடு: திமுகவுடன் பேச ப.சிதம்பரம், வாசன் அடங்கிய 5 பேர் குழு அமைப்பு

தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சு நடத்த காங்கிரஸ் கட்சியின் சார்பில் 5 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளார் அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி.

இதில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், நாமக்கல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

வரும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவும், காங்கிரசும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

காங்கிரஸ் எதிர்ப்பால் இதில் பாமகவையும் சேர்ப்பதில் திமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 90 தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு அதிர்ச்சி தந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. திமுக தரப்பில் அதிகபட்சம் 60 தொகுதிகள் தருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து தொகுதிப் பங்கீடு குறித்து பேசவும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றி பேசவும் திமுக, காங்கிரஸ் சார்பில் தனித்தனியாக குழுக்கள் அமைத்து பேச்சு நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து திமுக சார்பில் பேச்சுவார்த்தை நடத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் அமைச்சர் பொன்முடி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

ஆனால், குழு அமைப்பதில் காங்கிரசில் பெரும் குழப்பம் நிலவி வந்தது. இந் நிலையில் இந்தக் குழுவை சோனியா காந்தி இப்போது அறிவித்துள்ளார். அதில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், நாமக்கல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இத் தகவலை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத் டெல்லியில் தெரிவித்தார்.

பூஜ்யத்தின் மதிப்பை பாஜகவுக்கு உணர்த்த போகும் தமிழக தேர்தல்-ப.சிதம்பரம்

தமிழகம் -புதுவையில் பாஜக தனித்து போட்டியிடப்போவதாக அக் கட்சியின் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். அவர்கள் தனித்து போட்டியிட வாழ்த்துகிறேன். அப்படி செய்தால்தான் பூஜ்யம் என்ற எண்ணின் மதிப்பு அவர்களுக்கு தெரியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

புதுச்சேரி மாநில முதல்வராக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அதிலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கியுள்ளார்.

இந் நிலையில் அம் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வில்லியனூர் தென்கோபுர வீதியில் நடந்தது. முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம்,

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவின் துணையோடு காங்கிரஸ் புதுவையில் ஆட்சிக்கு வந்தது. இன்னும் 20 நாட்களில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நேரத்தில் காங்கிரஸ் என்ன சொல்லப் போகிறது என்பதை கூட்டணி கட்சியினர் பொதுமக்கள், ஏன் எதிர்கட்சிகள் கூட எதிர்பார்க்கிறார்கள்.

மத்திய அமைச்சர் நாராயணசாமி, முதல்வர் வைத்திலிங்கம் ஆகியோர் மாநில அரசின் சாதனை பற்றி விளக்கினார்கள். நான் யார்? உங்களுக்கும், எனக்கும் என்ன உறவு?. வைத்திலிங்கம் முதல்வர் என்றால் நாராயணசாமி மத்திய அமைச்சர் என்றால் அதற்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான். எங்களுக்கு அடையாளம் தந்தது காங்கிரஸ் கட்சிதான்.

இந்த இடத்தைவிட்டால் நாங்கள் சாதாரண மனிதர்கள்தான். இந்த சாதாரண பெயருக்கு முகவரி காங்கிரஸ் கட்சிதான். இந்த இயக்கத்தில் இருந்து சில நண்பர்கள் விலகியுள்ளார்கள். அவர்கள் தங்கள் அடையாளத்தில் இருந்து விலகி உள்ளனர்.
அவர்களுக்கு முகவரி தந்த இயக்கத்தில் இருந்து விலகி உள்ளனர்.

7 ஆண்டுகளுக்கு முன்பு அவர் முதல்வரானதற்கு காரணம் உங்களின் அபரிவிதமான சக்தி காரணமில்லை. காங்கிரஸ் கட்சிதான் காரணம். காங்கிரஸ் கட்சியை விட்டு போகிறவர்கள் முக்கியமல்ல. காங்கிரசுக்கு வருபவர்கள்தான் முக்கியம். ஒரு பெருமாள் சென்றால் பெத்தபெருமாள் வந்துள்ளார். சந்தை பொருளாதாரத்தில் ஒரு கடையை மூடினால் 2 கடைகளை திறக்க முடியும். ஒருவர் இடத்தை காலி செய்தால் 2 இளைஞர்கள் வருவார்கள். 125 வயதான காங்கிரசுக்கு என்றும் வசந்த காலம்தான்.

பாஜகவைச் சுஷ்மா சுவராஜ் புதுவைக்கு வந்து குறை கூறிவிட்டுச் சென்றுள்ளார். பாஜக ஆட்சிகாலத்தில் பெயர் செல்லும்படியாக ஒரு திட்டமாவது றைவேற்றப்பட்டதா? அதே நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஊரக வேலை உறுதி திட்டம், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மாணவர்களுக்கு கல்வி கடன் என எண்ணற்ற பல திட்டங்களை அளித்துள்ளோம்.

இதோடு மத்திய அரசு கட்டாய கல்வி சட்டம் கொண்டு வந்துள்ளது. இப்போது உணவுக்கு உரிமை சட்டம் தயாராகி வருகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 20 கிலோ அரிசி அல்லது கோதுமை ரூ.3 விலையில் வழங்குவோம் என்று கூறியிருந்தோம். இப்போது சோனியாகாந்தி 35 கிலோ அரிசி அல்லது கோதுமை ரூ.2 விலையில் தர விரும்புகிறார். வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் அதை தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கான வரைவு சட்டம் தயாராகிறது. விரைவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

சுஷ்மா சுவராஜ் தமிழகம் -புதுவையில் தனித்து போட்டியிடப்போவதாக கூறியுள்ளார். அவர்கள் தனித்து போட்டியிட வாழ்த்துகிறேன். அப்படி செய்தால்தான் பூஜ்யம் என்ற எண்ணின் மதிப்பு அவர்களுக்கு தெரியும்.

புதுவை வந்த அவர் மத்திய அமைச்சர் நாராயணசாமியை அர்ச்சனை செய்துள்ளார். வழக்கமாக அர்சனை செய்பவர் பூஜாரி, அர்ச்சிக்கப்படுபவர் கடவுள்.

இந்திய மக்கள் புத்திசாலிகள். அதனால்தான் பாஜகவை புறக்கணித்துள்ளார்கள் என்றார் சிதம்பரம்.

Sunday, February 6, 2011

காங்.,கில் ஒலிக்க ஆரம்பித்தது வன்னியர் கோஷம் : தேர்தலில் உரிய பங்கீடு தர மேலிடத்தில் கோரிக்கை

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் வன்னியர்களுக்கு போதிய அளவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். தி.மு.க.,வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக போடப்படும் குழுவிலும் இரண்டு வன்னியர்களை நியமிக்க வேண்டும். ஓட்டு வங்கி வைத்திருக்கும் பா.ம.க.,வையும் கூட்டணியில் இடம் பெற செய்வதே நல்லது' என, டில்லி காங்கிரஸ் மேலிடத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அனைத்து கட்சிகளுமே ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு தேர்தலுக்கு முன், வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் வேண்டுமென்ற குரலும் காங்கிரசில் ஒலிப்பது வழக்கம். அந்த வகையில் இப்போதும் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பி.,யும், சமூக சிந்தனையாளர் பேரவை என்ற அமைப்பின் நிறுவனருமான, இரா.அன்பரசு நேற்று டில்லிக்கு வந்திருந்தார். மூத்த தலைவர்கள் அந்தோணி, மோதிலால் ஓரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் மற்றும் மத்திய அமைச்சர் வாசன் ஆகியோரையும் சந்தித்து பேசினார். அப்போது சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் வன்னியர்களுக்கு போதுமான அளவில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
பின், இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதி மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு வன்னியர்கள் உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக வன்னியர் சமூகம் இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்த சமூகத்தின் பெருவாரியான ஆதரவு, காங்கிரசுக்கே இருந்து வந்துள்ளது. இருப்பினும் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வின் போது மூன்று தொகுதிகள் மட்டுமே வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட கிடைத்தது. கிடைத்த மூன்றிலும் வெற்றியும் பெறப்பட்டது. அதேபோல, கடந்த லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு சீட் மட்டுமே வன்னியருக்கு ஒதுக்கப்பட்டது; அதிலும் வெற்றி பெறப்பட்டது.
முந்தைய காலகட்டங்களில் எல்லாம் வன்னியர்களுக்கு சட்டசபை தேர்தல்களில் 25 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் அனுமதிக்கும். லோக்சபா தேர்தலில் ஒன்பது முதல் 10 தொகுதிகள் வரை வன்னியர்களுக்கு ஒதுக்கப்படும். ஆனால், வர வர இந்த நிலைமை மாறிவிட்டது; இது நியாயமானது அல்ல. எனவே, இந்த தேர்தலிலாவது வன்னியர்கள் போட்டியிடுவதற்கு அதிக தொகுதிகளை காங்கிரஸ் மேலிடம் ஏற்பாடு செய்ய வேண்டும். போதிய பிரதிநிதித்துவத்தை இந்த தேர்தலில் அளிக்க மேலிடம் முன்வர வேண்டும். இது தவிர, தி.மு.க.,வுடன் பேசுவதற்காக காங்கிரஸ் சார்பில் ஒரு குழு அமைக்கப்படவுள்ளது. அந்த குழுவில் வன்னியர்கள் இடம் பெறுவது அவசியம். அப்போது தான் அதிக தொகுதிகள் வன்னியர்களுக்கு கிடைக்கும். எனவே, வன்னிய தலைவர்கள் இரண்டு பேரையாவது அந்த குழுவில் நியமிக்க வேண்டும்.
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உள்ஒதுக்கீடு பிற சமூகங்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, வன்னியர்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதேபோல, நீதித் துறை, காவல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் வன்னியர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாது, அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நியமனத்திலும் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். டில்லியில் சந்தித்த மேலிட தலைவர்களிடம் இதை வலியுறுத்தினேன்.
இந்த கோரிக்கைகள் குறித்து மேலும் கருத்துக்களை கேட்பதற்கு, வன்னிய தலைவர்கள் பலரையும், சென்னையில் கூட்டி, நாளை ஆலோசனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் வேறு எந்தெந்த கட்சிகளை இடம் பெற வைப்பது என்பது குறித்து, இந்த இரு கட்சிகளின் தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். ஆனாலும், பா.ம.க., ஓட்டு வங்கி உள்ள ஒரு கட்சி. நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டி கடுமையானதாகவே இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்ப்பதால், ஓட்டு வங்கி இருக்கும் பா.ம.க., போன்ற ஒரு கட்சியை கூட்டணிக்குள் வைத்து கொள்வதே நல்ல முடிவாக இருக்கும். இவ்வாறு அன்பரசு கூறினார்.

காங்கிரசில் இணைந்தார் சிரஞ்சீவி : டில்லியில் அறிவிப்பு

ஆந்திர அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று சந்தித்து பேசிய பின், தனது கட்சியை, காங்கிரசுடன் இணைக்கப் போவதாக நடிகர் சிரஞ்சீவி அறிவித்தார். இது காங்கிரசுக்கு பெரும் சாதகமாகும்.ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் கிரண்குமார் ரெட்டி, முதல்வராக உள்ளார். முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன், ஜெகன்மோகன் ரெட்டி, காங்கிரஸ் மேலிடத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கப் போவதாகவும் அவர் கூறி வருகிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் அவருக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
இவர்கள் காங்கிரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற்றால், ஆட்சி கவிழ்ந்து விடும். விரைவில் தனிக் கட்சி துவங்கப் போவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி கூறி வருகிறார். மேலும், தெலுங்கானா விவகாரத்திலும், காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி அணி உருவாகியுள்ளது. இந்த இரண்டு பிரச்னைகளாலும், ஆந்திராவில் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடமும் இதுகுறித்து கவலைப்பட்டது. இந்த எதிர்ப்புகளை முறியடிக்க வேண்டுமானால், நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியை, தங்களுடன் இணைத்துக் கொள்வது அல்லது கூட்டணியில் சேர்த்துக்கொள்வது என, முடிவு செய்தனர்.
சிரஞ்சீவி கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்கள் ஆதரவு அளித்தால், ஜெகன் மோகன் ரெட்டியின் எதிர்ப்பை எளிதாக சமாளித்து விடலாம் என, காங்., மேலிடம் திட்டமிட்டது. இந்நிலையில், கடந்த வாரம் ஐதராபாத்துக்கு வந்த, ராணுவ அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான அந்தோணி, சிரஞ்சீவியுடன் இதுகுறித்து பேச்சு நடத்தினார். அப்போது இது தொடர்பாக விரிவாக பேச்சு நடத்த டில்லிக்கு வரும்படி, சிரஞ்சீவிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
சோனியாவுடன் சந்திப்பு: இந்த விவகாரத்தில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. நேற்று டில்லி சென்ற சிரஞ்சீவி, காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளர் வீரப்ப மொய்லி, ராணுவ அமைச்சர் அந்தோணி ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, ஆந்திர மாநில அரசியல் நிலவரம் குறித்து, இரு தரப்பிலும் பேசப்பட்டது. சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் நடிகர் சிரஞ்சீவி கூறுகையில்,"பிரஜா ராஜ்யம் கட்சியை, காங்கிரசுடன் இணைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நாள், வரலாற்றில் மிக முக்கியமான நாளாக அமைந்து விட்டது. ஆந்திர மக்களின் நலன் கருதி, இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆந்திர அமைச்சரவையில் நான் சேரப்போவதாக வெளியான தகவல் உண்மை அல்ல' என்றார்.
சிரஞ்சீவியின் இந்த அறிவிப்பு குறித்து, ஆந்திர அரசியல் வட்டாரங்கள் கூறுகையில்,"பிரஜா ராஜ்யம் கட்சியை, காங்கிரசுடன் இணைக்கும் விழா, விரைவில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது. சிரஞ்சீவிக்கு, மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், தற்போது அவரது கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள், சிலர் ஆந்திர அமைச்சர்களாகவும் வாய்ப்பு உள்ளது. இந்த இணைப்பு மூலம், ஜெகன் மோகன் ரெட்டியின் எதிர்ப்பை, காங்கிரஸ் மேலிடம் எளிதாக சமாளித்து விடும்' என்றன.
இரண்டே ஆண்டுகளில் சிரஞ்சீவி கட்சி காணோம் : "ஆந்திராவில், காங்கிரஸ், தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளுக்கு மாற்றாக, ஒரு கட்சியை உருவாக்கபோகிறேன்' என்ற முழக்கத்துடன், கடந்த 2008ல் பிரஜா ராஜ்யம் கட்சியை துவக்கினார், சிரஞ்சீவி. திருப்பதியில் நடந்த கட்சியின் துவக்க விழாவில், பத்து லட்சம் பேர் திரண்டனர். இதனால், ஆந்திர அரசியலில் சிரஞ்சீவி கட்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடந்த 2009ல் நடந்த சட்டசபை தேர்தலில் பிரஜா ராஜ்யம் கட்சி, அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
சிரஞ்சிவி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார். லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளில் இந்த கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனால், கட்சியின் செல்வாக்கு குறைந்தது. தொடர்ந்து, தனியாக கட்சி நடத்த முடியாமல் திணறி வந்த சிரஞ்சீவி, தற்போது காங்கிரசுடன் கட்சியை இணைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனால், துவங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே, பிரஜா ராஜ்யம் கட்சி காணாமல் போய்விட்டது.

சொத்து விவரத்தை வெளியிட்டார் எடியூரப்பா : 18 ஏக்கர் நிலம்

பா.ஜ., மேலிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தனது சொத்து விவரங்களை பட்டியலிட்டு, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரிக்கு அனுப்பியுள்ளார். முதல்வர் எடியூரப்பா தனது சொத்து விவரங்களை இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தார். நேற்று மாலை, முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில், அவரது செய்தி தொடர்பாளர் ஜெகதீஷ், எடியூரப்பா சொத்து நகலை வெளியிட்டார். இந்த நேரத்தில், முதல்வர் எடியூரப்பா உடுப்பி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.
தன்னிடம் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பட்டியலிட்டுள்ளார். விவசாய நிலங்கள், விவசாயமற்ற நிலங்கள், வங்கி முதலீடுகள், பங்குகள், அசையும் சொத்துகள், தங்கம், வெள்ளி நகைகள், சேமிப்பில் உள்ள வங்கி கணக்குகள், ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் முதலீடுகள், இதர சொத்துக்கள் என்ற தலைப்பின் கீழ், தனது சொத்து கணக்குகளை தெரிவித்துள்ளார்.
விவசாய நிலங்கள் : ஷிகாரிபுரா தாலுகா சன்னஹள்ளியில் மொத்தம் மூன்று இடங்களில் உள்ள 13.21 ஏக்கர் நிலம், சிகாரிபுரா தாலுகா திம்மலாபுராவில் 5.2 ஏக்கர் நிலம்.
விவசாயமற்ற நிலங்கள் : ஷிகாரிபுராவில் 22க்கு 35 அடி, 40க்கு 35 அடி, 2க்கு 22 அடி குடியிருப்பு வீடுகள். ஷிகாரிபுராவில் 28க்கு 50 அடி குடியிருப்பு வீடு. ஷிரலாகொப்பாவில் 9.12 ஏக்கர் விவசாய நிலம், (இந்த நிலம் பின்னர் தொழிற்பகுதிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது). பெங்களூரு ஆர்.எம்.வி. செகண்ட் ஸ்டேஜில் 50க்கு 80 அடி வீடு, (இந்த பிளாட் 1997 மே 27ல் பி.டி.ஏ. ஒதுக்கியது, 1999 பிப்ரவரியில் வீடு எழுப்பப்பட்டது).
வங்கி கணக்குகள் : கெய்தான் நிறுவனத்தில் 70 பங்குகள் 1984 நவம்பர் 22ல் வாங்கப்பட்டது. ஷிகாரிபுரா சிவா கூட்டுறவு வங்கியில் 2002 டிசம்பரில் 20 ஆயிரம் ரூபாய் டிபாசிட். ஷிகாரிபுரா நகர வங்கியில் 100 பங்குகள் 1971 நவம்பரில் வாங்கியது, சாப்ட்வேர் டெக் குரூப்பில் 100 பங்குகள் 2000 ஜனவரியில் வாங்கியது, ஜெனித் இன்போடெக் லிமிடெட்டில் 50 பங்குகள் 2000 ஜனவரியில் வாங்கியது சொத்தில் அடக்கம்.
அசையும் சொத்துகள் : காண்டஸா கார், ஸ்கார்பியோ என இரண்டு கார்களும் வாங்கி விற்கப்பட்டுள்ளன. ஆனால் எப்போது வாங்கினார், எப்போது விற்றார் என கணக்கு இல்லை. தங்க, வைர நகைகள் 2 ஆயிரத்து 596 கிராம் உள்ளன. வெள்ளி நகைகள், பாத்திரங்கள் 76 கிலோ மதிப்புள்ள 34 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எட்டு வங்கிகளில் சேர்த்து மொத்தம் 31 லட்சத்து 24 ஆயிரத்து 169 ரூபாய் இருப்பு உள்ளது. 1.70 லட்சம் எல்.ஐ.சி., பாலிசி எடுக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உயோகப் பொருட்கள் உள்ளன.
இந்த கணக்குகள் லோக் ஆயுக்தா, தேர்தல் கமிஷன், வருமான வரித்துறை, தற்போதைய நிலவரம் என பிரித்து கணக்கு காண்பித்துள்ளார். நிலங்கள், வீடுகள் மதிப்பிடப்படவில்லை. ஷேர்கள், கார்கள் மதிப்பை குறிப்பிடவில்லை. முதல்வர் எடியூரப்பா தனக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர் என்றும், இவர்கள் தனித்தனியாக வசிப்பதாகவும், 2004 பிப்ரவரியில் சொத்துகள் பிரித்து கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதே நகலை பா.ஜ., மேலிட பொறுப்பாளர் தர்மேந்திரா பிரதானுக்கும் அனுப்பியுள்ளார்.
முதல்வர் எடியூரப்பா தன் வங்கி கணக்குகள், வீடுகள், நிலங்களை தனது சொந்த தொகுதியான ஷிகாரிபுராவில் தான் வாங்கியுள்ளார். பெங்களூரில் ஒரே ஒரு வீடு மட்டும் இருப்பதாகவும், அதுவும் பி.டி.ஏ., கொடுத்தது என்றும் உருகியுள்ளார். மற்றபடி எனக்கோ, எனது மகன்கள், மகள்களுக்கு சுவிஸ் வங்கியில் எந்த கணக்கும் இல்லை. வருமான வரி விலக்கு அளிக்கும் சொர்க்க நாடுகளிலும் வங்கி கணக்கு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., உறுதி? வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்

வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ள நிலையில், வடமாவட்டங்களில் 50 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் பா.ம.க., தயாரித்துள்ளது. மேலும், தி.மு.க.,வின் உள்ளடி வேலைகளில் இருந்து தப்பிக்கும் வகையில், அமைச்சர்களுடன் மோதலில் ஈடுபட்டவர்கள் வேட்பாளராக தேர்வு செய்யப்பட மாட்டர் என, பா.ம.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின், பா.ம.க., தனது செல்வாக்கை மீட்க வேண்டும் எனில், வரும் சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., தரப்பில் தே.மு.தி.க.,வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், கூட்டணியில் சேர பா.ம.க.,வின் மிரட்டல் அங்கு எடுபட வில்லை.
அதே நேரத்தில், தி.மு.க.,வும் கை விரித்து விடக்கூடாது என்ற பயத்தில், தி.மு.க., கூட்டணியில் சேர்வதை உறுதி செய்து உள்ளது. பா.ம.க.,- தி.மு.க., கூட்டணியில் இணையும் பட்சத்தில், தி.மு.க., ஆதரவு பெற்ற வேட்பாளர்களை களத்தில் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வடமாவட்டங்களில் பா.ம.க., செல்வாக்குள்ள 50 தொகுதிகளை தேர்வு செய்து, ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட பட்டியல் தேர்வு செய்யப்பட்டு, பா.ம.க., மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில், சேலம் மேற்கு, ஓமலூர், மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி ஆகிய ஐந்து தொகுதிகளை கேட்டு பெறவும் திட்டமிட்டுள்ளது.கடந்த 2006 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 31 தொகுதிகள் குறையாத வகையில், பா.ம.க., தலைவர் மணி தி.மு.க.,விடம் பேசி வருகிறார். கடந்த முறை போட்டியிட்ட 31 தொகுதிகளுடன், மேலும் 19 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு, தொகுதியில் உள்ள செல்வாக்கு, பணபலம், தி.மு.க.,வினர் இடையே அவர்கள் மீதான நன்மதிப்பு, கட்சியினரை அரவணைத்து செல்லும் பாங்கு என, அவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு, அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை வேட்பாளராக நிறுத்த கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள 18 எம்.எல்.ஏ.,க்களில், பாதிக்கும் மேலானவர்களுக்கு போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, புதியவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவும், பா.ம.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது.தி.மு.க.,வின் உள்ளடி வேலைகளில் இருந்து தப்பிக்கும் வகையில், வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், உணவுத்துறை அமைச்சர் வேலு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரிடம் நேரடி மோதலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.,க்களில் பலருக்கு இந்த முறை போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது என்பதே தற்போது பா.ம.க., வட்டாரங்களில் பரபரப்பு பேச்சாக உள்ளது.

பட்டியலில் உள்ளவர்கள் யார்?சேலம் மேற்கு தொகுதிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் அருள், பசுமை தாயக மாநில செயலாளர் சத்ரியசேகர், மாநகர செயலாளர் கதிர்ராசரத்தினம், ஆறுமுகம், சாம்ராஜ்.மேட்டூர் தொகுதிக்கு, தற்போதைய எம்.எல்.ஏ.,வும் மாநில தலைவருமான மணி, அவரது மகன் தமிழ்குமரன், தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ., காமராசு, மினரல் சதாசிவம், ராஜேந்திரன்.இடைப்பாடி தொகுதிக்கு, தற்போதைய எம்.எல்.ஏ., காவேரி, யூனியன் சேர்மன் தொப்பாக்கவுண்டர், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராஜமாணிக்கம், கொழந்தாகவுண்டர்.ஓமலூர் தொகுதிக்கு, தற்போதைய எம்.எல்.ஏ., தமிழரசு, டாக்டர் மாணிக்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, மாவட்ட வன்னியர் சங்க தலைவர் முருகன்.சங்ககிரி தொகுதிக்கு, தாரமங்கலம் எம்.எல்.ஏ., கண்ணையன், அண்ணாதுரை, முன்னாள் மாவட்ட தலைவர் பூ.தா.கணேசன் ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Thursday, February 3, 2011

ராஜாவை கைது செய்தது சி.பி.ஐ.; உயர் அதிகாரிகளும் சிக்கினர்

ரூபாய், 1.76 லட்சம் கோடி, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா மற்றும் ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா ஆகிய மூன்று பேர், சி.பி.ஐ., அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த ராஜா (வயது 47), மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக, 2007, மே 18ல் பதவியேற்றார். இடையில் நடந்த தேர்தலில், 15வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னும், மீண்டும் அதே பதவியில் தொடர்ந்தார்.இவர், அமைச்சராக பதவி வகித்த காலத்தில், 2008ல், "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு நடைபெற்றது. இந்த ஒதுக்கீட்டில், ஏல முறை பின்பற்றப்படவில்லை என்றும், முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற முறை பின்பற்றப்பட்டதால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து எழுந்த சர்ச்சையால், 2010 நவம்பர் 14ம் தேதி, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜா விலகினார். ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக, ராஜாவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள், அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான கட்டடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைக்குப் பின், மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அரசுக்கு, 22 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.அதே நேரத்தில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும், வரும் 10ம் தேதிக்குள் விசாரணை நிலவரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக, கடந்த டிசம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில், ராஜாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், பல கேள்விகள் ராஜாவிடம் கேட்கப்பட்டன. பல விஷயங்கள் குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றது.ராஜா மட்டுமின்றி, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய முன்னாள் தலைவர் பிரதீப் பைசல், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர்கள் சித்தார்த்த பெகுரா மற்றும் மாத்தூர், கம்பெனிகளின் தொடர்பு அதிகாரியும், வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் தலைவருமான நிரா ராடியாவிடமும் விசாரணை நடந்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜாவிடம் கடந்த திங்களன்று மூன்றாவது முறையாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, எட்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. நேற்று முன்தினம், ராஜாவின் சகோதரர் ஏ.கே.பெருமாளிடம் விசாரணை நடைபெற்றது.

கைது: இதைத் தொடர்ந்து, நேற்று காலை, சி.பி.ஐ., அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட ராஜாவிடம் நான்காவது முறையாக விசாரணை நடைபெற்றது. விசாரணையைத் தொடர்ந்து ராஜாவையும், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா மற்றும் ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா ஆகியோரையும் கைது செய்தனர்.சில தொலைத்தொடர்பு கம்பெனிகள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்காக, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது மற்றும் டெண்டர் நடவடிக்கைகளை மாற்றி அமைத்தது என, இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது குறித்து சி.பி.ஐ., சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "விசாரணையில் இந்த மூவரும் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில் கைது செய்யப்படுகின்றனர். வழக்கமான நடைமுறைகளை மீறி, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். இவர்கள், கிரிமினல் கூட்டுசதி புரிந்ததாக இந்திய தண்டனைச் சட்டம் 120பி மற்றும் லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜா கைதை அடுத்து, இந்த விவகாரத்தில் அரசியல் தரகர் நிரா ராடியா எப்போது கைது செய்யப்படுவார் என்ற கேள்வி எழுகிறது. அது தவிர, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்ற சில நிறுவனங்கள் லாபத்துடன் வேறு அமைப்புகளுக்கு விற்றன. அவர்கள் மேற்கொண்ட பரிவர்த்தனையானது, பெரும் இழப்புக்கு காரணமாக அமைவதால், சி.பி.ஐ., விசாரணையில் புதுத் தகவல் கிடைத்திருந்தால், அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களும் கைது செய்யப்படலாம்.

ராஜா கைதானது தி.மு.க.,வுக்கு அதிர்சியான செய்தி என்றாலும், காங்கிரஸ் தரப்பில் இக் கைது, இனி பிரதமரையும், அவர் பதவியின் கவுரவத்தை உயர்த்த உதவிடும் என்ற அடிப்படையில் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. டில்லியில், முதல்வர் தங்கி இருந்த போதே அவரிடம் சி.பி.ஐ., நடவடிக்கை பற்றி கோடிட்டு காட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இனி, பார்லிமென்ட் சுமுகமாக நடக்க இக் கைது உதவும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

கைதானவர்கள் விவரம்:முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.ராஜா:தமிழகம், பெரம்பலூரில், 1963ல் பிறந்தார். திருச்சி கல்லூரியில், பி.எஸ்சி., பட்டம் பெற்றார். பின்னர், சட்டம் படித்து வக்கீலானார். தலித் வகுப்பைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில், திராவிடர் கழகத்தில் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தார். 1996ல், பெரம்பலூர் தொகுதியில் இருந்து லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ல், நீலகிரி தொகுதியில் இருந்து, லோக்சபாவுக்கு தேர்வானார்.தன் 35வது வயதில், அதாவது, 1999ல், தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், கேபினட் அமைச்சராக பதவியேற்றார். 2007ல், தொலைத்தொடர்புத் துறை அமைச்சரானார். 2009ல் நடந்த தேர்தலுக்குப் பின், மீண்டும் அதே துறையின் அமைச்சரானார். ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக, 2010 நவம்பர் 14ம் தேதி, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

சித்தார்த்த பெகுரா: 2008 ஜனவரி 1 முதல், 2009 செப்டம்பர் 30 வரை, தொலைத்தொடர்புத் துறை செயலராக இருந்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்ட, 122 லைசென்ஸ்கள் தொடர்பாக, பைலில் கையெழுத்திட்டவர் இவரே. இவருக்கு முன்னாள், இந்த பதவி வகித்தவர், டி.எஸ்.மாத்தூர். இவர், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தொடர்பான பைல்களில் கையெழுத்திட மறுத்து விட்டார். 2007 டிசம்பர் 31ல், மாத்தூர் ஓய்வு பெற்றார். அதன்பின்னர்தான், பெகுரா இந்தப் பதவிக்கு வந்தார்.

சந்தோலியா: 1984ல் தேர்வான ஐ.இ.எஸ்., (இந்திய பொருளாதார சேவைகள்) அதிகாரி. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில், ராஜாவின் தனிச் செயலராக இருந்தார். ஐ.மு., கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது, சந்தோலியா இணை செயலராக பதவி உயர்வு பெற்றார்.அதனால், அமைச்சரின் தனிச் செயலராக பதவி வகிக்க முடியாத சூழ்நிலை உருவானது. உடன் அவரை பொருளாதார ஆலோசகராக ராஜா நியமித்தார். இதன்மூலம், தொலைத்தொடர்புத் துறை தொடர்பான அனைத்து முக்கிய கொள்கைகளை கவனிக்கும் பொறுப்பாளரானார். இவர்தான் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்தாரர்கள் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மூன்றாவதும் முதலும் :தமிழகத்தில் இருந்து, ஊழல் குற்றச்சாட்டுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்களில் மூன்றாவது நபராக இருந்தாலும், கைது செய்யப்படும் முதல் நபர் ராஜாவே.நிதியமைச்சர் பதவியில் இருந்து, எல்.ஐ.சி., தொடர்பான முந்திரா ஊழல் காரணமாக, நேரு அமைச்சரவையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா செய்தார்.வாஜ்பாய் அரசில், சாலை போக்குவரத்து அமைச்சராக இருந்த சேடபட்டி முத்தையாவும், தமிழகத்தில் நடைபெற்ற ஊழல் வழக்கு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார்.

கருணாநிதி அன்று சொன்னது என்ன?ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி புகாரால், தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து ராஜா பதவி விலகிய பின், கடந்த டிசம்பர் 8ம் தேதி நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, "2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராஜா தவறு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவரை கட்சியில் இருந்து நீக்க தயங்க மாட்டோம். ராஜா மீதான குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. சி.பி.ஐ., விசாரணை முடிந்து, ராஜா குற்றவாளி என நிரூபிக்கும் வரை அவர் குற்றமற்றவரே' என, தெரிவித்தார்.

அதேபோல், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி 7ம் தேதி நிருபர்களிடம் பேசிய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், ""2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில், அரசுக்கு எந்த இழப்பும் இல்லை. 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏன, ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் கூறியிருப்பது தவறானது. அப்படிக் கருத்துக் கூறியது அரசை இக்கட்டான நிலைக்கு தள்ளியது. ஆனால், ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை துல்லியமாக ஆராய்ந்தால், அரசுக்கு இழப்பீடு பூஜ்யம் தான் ,'' என்றார்.

ராஜா கைது: டில்லியில் நடந்தது என்ன?

பிரணாபின் புன்னகை: ராஜா கைது செய்யப்பட்டுள்ளார் என்பது நேற்று மதியத்துக்கு மேல் உறுதியாகிக் கொண்டிருந்தது. அந்த சூழ்நிலையில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலும் தீவிர ஆலோசனையில் இருந்தனர். நார்த் பிளாக்கில் உள்ள பிரணாப்பின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. ஆனாலும், வெளியில் வந்தபோது நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு வெறும் புன்னகையை மட்டும் அளித்து விட்டு பிரணாப் சென்றார். பிரணாப்பும், அகமது படேலும், தி.மு.க.,வுடனான கூட்டணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தது என்ன? சி.பி.ஐ., அலுவலகத்தில் நேற்று கைது செய்யப்பட்ட ராஜா, உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவில்லை. அவர், சி.பி.ஐ., அலுவலகத்திலேயே தங்க வைக்கப்படலாம் என, கூறப்பட்டது. இருப்பினும், பாட்டியாலா கோர்ட்டில் இன்று ராஜாவை ஆஜர்படுத்தும் போது, "தங்களது விசாரணை இன்னும் முடியவில்லை. அதனால், ராஜாவை தங்களது காவலிலேயே வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., தரப்பில் கோரப்படலாம். அப்படி இல்லாமல், தங்களது விசாரணை முடிந்து விட்டதாக கோர்ட்டில் சி.பி.ஐ., கூறினால், நீதிமன்ற காவலில், திகார் சிறைக்கு ராஜா அனுப்பப்படலாம்.

மேலும், ராஜாவை நேற்று விசாரணைக்கு வரும்படி மட்டுமே சி.பி.ஐ., அதிகாரிகள் அழைத்திருந்தனர். ஆனால், ராஜாவுக்கு தான் கைது செய்யப்பட போகிறோம் என்பது நேற்று முன்தினம் இரவு வரை தெரியாது. காரணம் அவரை சந்திக்க வேண்டுமென்று, அவரது நண்பர்கள் சிலர் நேரம் கேட்டிருந்தனர். அவர்களை இன்று வந்து சந்திக்கும்படி அதற்கான நேரத்தை ஒதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

கைதை உறுதி செய்த ராஜா: காலையில் சி.பி.ஐ., அலுவலகத்திற்கு சென்ற ராஜாவிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனாலும், நேரம் ஆக ஆக கைது செய்திகள் கசிய ஆரம்பித்தது. மதியம் ஒரு மணிக்கு ராஜாவிடம் இருந்து அவரது வீட்டிற்கு போன் வந்துள்ளது. அப்போது தனது குடும்ப உறுப்பினர்களிடம் ராஜா பேசியுள்ளார். பின், "கைது செய்யப்படலாம் என்று செய்தி வருகிறதே' என, ராஜாவின் உதவியாளர் கேட்டபோது, " இன்று கைது நடவடிக்கை இருக்கலாம்' என்று கூறி, தனது கைது செய்தியை அப்போதே உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம்: கடந்து வந்த பாதை

தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா நேற்று சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருடன் தொலைத்தொடர்பு முன்னாள் செயலாளர் சித்தார்த்தா பெகுரா, ராஜாவின் தனிசெயலாளர் ஆர்.கே.சந்தோலியா கைதுசெய்யப்பட்டனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுமுறைகேட்டால் நாட்டிற்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதுஎன இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2007 மே 18: தி.மு.க., வைச்சேர்ந்த ராஜா மத்திய தகவல்மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
ஆகஸ்ட் 18: டிராய் (மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான சந்தை விலை நிர்ணயம் உள்ளிட்ட பரிந்துரைகளை தொலைத்தொடர்பு அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பியது.
ஆகஸ்ட் 28: ராஜா தலைமையிலானமத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் டிராயின் பரிந்துரைகளை அடியோடு நிராகரித்தது. மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட அதே நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. "முதலில் வருபவருக்கேமுன்னுரிமை அளிப்பது' என்றநடைமுறையை பின்பற்ற முடிவுசெய்தது. 2001ம் ஆண்டில் 40 லட்சம் மொபைல்போன் சந்தாதாரர்கள்இருந்தனர். ஆனால் 2007 முதல் 2008 வரையிலான காலத்தில், மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 35 கோடியாக உயர்ந்திருந்தது.இதனால் 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை வசூலித்தால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தனியார்நிறுவனங்கள் பெருமளவில் பயனடைந்து அரசுக்கு வரவேண்டிய வருமானம் வராமல் பெரும் நஷ்டம்ஏற்பட காரணமாக இந்த முடிவுஅமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
செப்., 20 - 25: "யூனிடெக், லூப்,டாடாகாம் மற்றும் ஸ்வான்' ஆகிய நிறுவனங்கள், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமத்தை பெற்றன. இதில் யூனிடெக்மற்றும் ஸ்வான் ஆகிய இரு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில்எவ்வித முன் அனுபவமும் இல்லாத நிறுவனங்கள். இவை அமைச்சர் ராஜாவுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2007 டிச., : இவ்விவகாரம் தொடர்பாகநிதி அமைச்சக அதிகாரி ராஜினாமாசெய்தார். அப்போது தொலைத்தொடர்புத்துறை அமைச்சக செயலாளர்ஓய்வு பெற்றுவிட்டார். ஸ்வான் நிறுவனத்துக்கு லைசென்ஸ் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருஅதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டனர். இதன்மூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு எளிதாக நிறைவேறியது.
2008 ஜன., 1 - 10: அமைச்சர் ராஜா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோதுமுன்னாள் செயலாளராக பணியாற்றியசித்தார்த்தா பெகுராவை தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் செயலாளராக நியமித்தார். பின்னர் தொலைத்தொடர்பு அமைச்சகம் 10 நாட்களில்2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கானஒன்பது லைசென்ஸ் உரிமங்களை வழங்கியது. மேலே குறிப்பிட்ட நான்குநிறுவனங்களும் ஒதுக்கீடு பெற்றன.
செப்., - அக்., : ஸ்வான் நிறுவனம்45 சதவீத பங்குகளை எட்டிசேலட் என்ற ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த நிறுவனத்துக்கு சுமார் 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. யூனிடெக்நிறுவனம் 60 சதவீத பங்குகளைடெலினார் என்ற நார்வே நாட்டுநிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்றது. தொலைத்தொடர்புத் துறை லைசென்சை 1,661 கோடி ரூபாய்மட்டுமே செலவழித்து யூனிடெக்நிறுவனம் வாங்கியிருந்தது. டாடா டெலிசர்வீசஸ் 26 சதவீத பங்குகளை டோகோமா என்ற ஜப்பான்நிறுவனத்துக்கு 13, 230 கோடி ரூபாய்க்கு விற்றது. இந்த பங்குகளை யூனிடெக், ஸ்வான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 70 ஆயிரத்து 22.42 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்தன. ஆனால் தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு 10 ஆயிரத்து 772.68 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டது. இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்டஒன்பது லைசென்சில் மட்டும்60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம்ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மொத்தம் 122 "லைசென்ஸ்கள்' வழங்கப்பட்டுள்ளன.
நவ., 15: மத்திய தலைமை விஜிலென்ஸ் கமிஷனர், ராஜாவுக்கு நோட்டீஸ்அனுப்பியது. மேலும் இது தொடர்பான விரிவான அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியது.
2009 அக்., 21: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இந்த முறைகேடு தொடர்பாக 2008 நவம்பர் 29,
2009 அக்., 31, 2010 மார்ச் 8, மார்ச்13 ஆகிய தேதிகளில் பிரதமர்மன்மோகன் சிங்கிற்கு, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி கடிதங்களைஎழுதினார்.
2010 ஏப்., 12: சுப்ரமணிய சாமி டில்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல்.
அக்., 29: மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,க்கு "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில், மந்தமாக செயல்படுவதாக கூறி சுப்ரீம் கோர்ட் தனது கண்டனத்தை தெரிவித்தது. "இதே போன்ற நடைமுறையை தான் அனைத்து வழக்குகளிலும் கடைபிடிப்பீர்களா' என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது.
நவ., 10: மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம், மத்திய நிதி அமைச்சகத்திடம் இதுதொடர்பான அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அந்த அறிக்கையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை என்றும்தெரிவித்துள்ளது. இதனால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ., 11: மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில்2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை எனவே இதுகுறித்து சி.பி.ஐ.,விசாரணை தேவையில்லை என்றுதெரிவித்தது.
நவ., 14: ராஜா அமைச்சர் பதவியைராஜினாமா செய்தார்.
நவ., 15: மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக கபில்சிபல் பொறுப்பேற்றார்.
டிச., 8: ராஜா அவரது நண்பர்சாதிக் பாட்ஷா மற்றும் ராஜாவின்உறவினர்கள் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடத்தியது.
டிச., 13: ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகளின் அமளியால் கூட்டத்தொடர் (23 நாட்கள்) முழுவதும் முடங்கியது. இதனால் அரசுக்கு 146 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
டிச., 15: நிரா ராடியா மற்றும் முன்னாள் டிராய் சேர்மேன் பிரதீப் பைஜால் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., ரெய்டு நடந்தது.
டிச., 24, 25, 31: டில்லியில் சி.பி.ஐ.,அலுவலகத்தில் ராஜாவிடம் விசாரணை நடந்தது.
2011 பிப்., 1: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழு நீதிபதி சிவராஜ் பாட்டீல் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்தஅறிக்கையை மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் சமர்பித்தார்.
பிப்., 1: ராஜாவிடம் மீண்டும் சி.பி.ஐ.,விசாரணை நடத்தியது.
பிப்., 2: ராஜா கைது செய்யப்பட்டார்.

ராஜா - பயோடேட்டா
பெயர் : ஆ. ராஜா
தந்தை பெயர் : எஸ்.கே.ஆண்டிமுத்து
தாயார் பெயர் : சின்னப்பிள்ளை
பிறந்ததேதி : 5, அக்டோபர், 1963
பிறந்த இடம் : பெரம்பலூர்
மனைவி பெயர் : எம்.ஏ.பரமேஸ்வரி
குழந்தைகள் : ஒரு மகள் ( பெயர்: மயூரி)
கட்சி : தி.மு.க.,
எம்.பி., தொகுதி : நீலகிரி தொகுதியில் வெற்றி பெற்றுபார்லிமென்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கல்வித் தகுதி : பி.எஸ்.சி., எம்.எல்.,
வகித்த பதவிகள் : 1996ல் பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி., ஆனார். 1999 லோக்சபா தேர்தலில் 2வது முறையாக வெற்றிபெற்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சரானார். பின்னர் குடும்ப நலம் மற்றும் சுகாதார அமைச்சராக பதவி வகித்தார்.
2004 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று( 2004 மே 23 - 2007 மே 17) மத்திய
சுற்றுச்சூழல் அமைச்சரானார். பின்னர் 2007 மே 18ல் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த 2009 மே 31ல் மத்திய தொலைத்
தொடர்பு அமைச்சராக 2வது முறையாக மீண்டும் பொறுப்பேற்றார். கட்சித்
தலைமையிடத்தில் அவருக்கு இருந்த செல்வாக்கால் , வட்டார அளவில் செல்வாக்கு பெற்றிருந்த அவர், மத்திய அமைச்சராகும் அளவுக்கான தகுதியை குறுகிய காலத்தில் பெற்றார். இலக்கியத்தில் ராஜாவுக்கு இருந்த திறமைதான் கட்சித் தலைவர்
கருணாநிதியிடம் அவர் நெருக்கமாகக் காரணமாக அமைந்தது.

கிராமப்புற மாணவர்கள் நிலை மோசம்: ஆய்வில் தகவல்

தமிழக கிராமப்புற பள்ளிகளில், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில், 47.5 சதவீதம் பேருக்கு முதலாம் வகுப்பு பாடத்தைக் கூட படிக்க தெரியவில்லை. மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 79.5 சதவீதம் பேருக்கு கழித்தல் கணக்கு செய்ய தெரியவில்லை' என, தன்னார்வ தொண்டு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிந்துள்ளது.

நாடு முழுவதும் குழந்தைகளின் அடிப்படை கற்றல் திறன் குறித்த ஆய்வினை(அசர் - 2010), பிரதம் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில், "எய்டு இந்தியா' என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவுகள் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டன.

ஆய்வு முடிவுகளின் முக்கிய விவரங்கள்:நாடு முழுவதும் 522 மாவட்டங்களில், 14 ஆயிரத்து 830 கிராமங்களில் ஆறு லட்சத்து 9,659 குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் 29 மாவட்டங்களில், 830 கிராமங்களில் 26 ஆயிரத்து 19 குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆறு முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களில் 99 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்கின்றனர். மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 47.5 சதவீதம் பேருக்கு, முதலாம் வகுப்பு பாடத்தைக் கூட வாசிக்கத் தெரியவில்லை. மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 79.5 சதவீதம் பேருக்கு, கழித்தல் கணக்கு செய்யத் தெரியவில்லை.முதல் வகுப்பில், 47.6 சதவீதம் பேருக்கு மட்டுமே, தமிழ் எழுத்துக்களை வாசிக்கத் தெரிகிறது. மூன்றாம் வகுப்பில் 27.3 சதவீதம் பேருக்கு மட்டுமே, பத்தியை வாசிக்கத் தெரிகிறது. ஐந்தாம் வகுப்பில் 30.6 சதவீதம் பேருக்கு மட்டுமே, சிறிய கதையை வாசிக்கத் தெரிகிறது.

முதல் வகுப்பில் 54.4 சதவீதம் பேருக்கு மட்டுமே, 1 - 9 வரையிலான எண்களை அடையாளம் காட்டத் தெரிகிறது. மூன்றாம் வகுப்பில் 20.5 சதவீதம் பேருக்கு மட்டுமே, கழித்தல் கணிதம் தெரிகிறது. ஐந்தாம் வகுப்பில் 15 சதவீதம் பேருக்கு மட்டுமே, வகுத்தல் கணிதம் தெரிகிறது.தமிழகத்தில் வாசிப்பு நிலையும், கணித அறிவும் தேசிய சராசரியை விட மிகக் குறைவாக உள்ளது. வாசிப்பு நிலையில், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக நீலகிரியில் 81.9 சதவீதம் பேருக்கும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 32.7 சதவீதம் பேருக்கும் பத்தியை வாசிக்கத் தெரிகிறது.

கணித அறிவில், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக நீலகிரியில் 80.8 சதவீதம் பேருக்கும், குறைந்தபட்சமாக விழுப்புரத்தில் 25.8 சதவீதம் பேருக்கும் கழித்தல் கணக்கு தெரிகிறது.வருகைப் பதிவை பொறுத்தவரை, ஒன்று முதல் எட்டாம் வகுப்பில் ஆசிரியர் வருகை 79.9 சதவீதமாகவும், மாணவர் வருகை 90.7 சதவீதமாகவும் உள்ளது. தமிழக கிராமப்புற பள்ளிகளில் 80.5 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே குடிநீர் வசதி உள்ளது. 50.9 சதவீத பள்ளிகளில் மட்டுமே கழிவறை பயன்படுத்தும் நிலையில் உள்ளது; 20.8 சதவீத பள்ளிகளில் பெண்களுக்கு தனி கழிவறை வசதி இல்லை.இவ்வாறு ஆய்வில் தெரிந்துள்ளது.

கல்வியாளர் ராஜகோபாலன் பேசியதாவது:தமிழகத்தைத் தவிர நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும், "அசர்' அறிக்கையை பற்றி கல்வித்துறையில் ஆய்வு செய்து எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள் குறித்து சிந்திக்கிறது. எஸ்.எஸ்.ஏ., அறிக்கையின்படி, தமிழகத்தில் 2006 - 07ம் ஆண்டில், அரசு பள்ளிகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 80 ஆயிரம் ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்து 1,000 ஆசிரியர்கள் என மொத்தம் மூன்று லட்சத்து 61 ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தனர்.இது, 2008 - 09ம் ஆண்டில், அரசு பள்ளிகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 60 ஆயிரம் ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் என மொத்தம் மூன்று லட்சத்து 27 ஆயிரம் ஆசிரியர்களாக உள்ளது. 2006 - 07ம் ஆண்டை விட 2008 - 09ம் ஆண்டில் 34 ஆயிரம் ஆசிரியர்கள் குறைந்துள்ளனர்.இவ்வாறு ராஜகோபாலன் பேசினார்.

முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி பேசும்போது, ""இந்த அறிக்கையின் உண்மைகளை புரிந்து கொண்டு, தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ""கேரளாவிற்கு அடுத்ததாக தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது என்ற கருத்து ஒரு மாயை. ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்கள் இந்த அறிக்கைக்கு பின், தேவையான நடவடிக்கைகளை எடுத்து முன்னேற்றம் கண்டுள்ளன,'' என்றார்.