Search This Blog

Thursday, March 17, 2011

சீமானுக்கு சிறப்பான எதிர்காலம்

வைகோவை வரலாறு காணாத அளவுக்கு அவமானப்படுத்தியுள்ள நிலையில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்று கூறிய நாம் தமிழர் கட்சித் தலைவர் இயக்குநர் சீமானின் நிலை என்ன என்பது கேள்விக்குறியதாகியுள்ளது.

வைகோ அதிமுக கூட்டணியில் இல்லை என்றாகி விட்டதால் நிச்சயம் சீமான் அதிமுக அணியில் இடம் பெற மாட்டார் என்று தெரிகிறது. அதை விட முக்கியமாக, சீமானுக்கு சீட் தரப்படும் என்று முன்பு கூறப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வகை தொகை இல்லாமல் அத்தனை பேருக்கும் அல்வா கொடுத்து விட்டார் ஜெயலலிதா. கூட்டணிக் கட்சிகள் என்று பார்க்காமல், தன்னுடன் இணைந்து பணிபுரிய வந்த அத்தனை பேரையும் எதிர்க்கட்சிகள் ரேஞ்சுக்குப் பாவித்து ரகளை செய்துள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவுடன் கூட்டணியாக செல்லத் திட்டமிட்டிருந்த அத்தனை பேரும் இதனால் அதிர்ச்சியில் சமைந்து போயுள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் சீமானின் நிலை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைகோவின் பெரும் முயற்சியால், அதிமுக கூட்டணிக்கு வந்து சேர்ந்தார் சீமான். திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் எதிராக கடுமையாக பிரசாரம் செய்யப் போவதாகவும், இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கேட்கப் போவதாகவும் கூறியிருந்தார் சீமான்.

ஆனால் இப்போது நிலைமை ஜப்பானை விட மோசமாக உள்ளது. சரமாரியாக குண்டு போட்டு கூட்டணிக் கட்சிகளை உண்டு இல்லை என்று பண்ணி விட்டார் ஜெயலலிதா.

வைகோவை அதிமுக கூட்டணியிலிருந்து நேரடியாகவே நீக்கி விட்டார் ஜெயலலிதா. எனவே யாருடன் போய் சீமான் ஜெயலலிதாவுடன் இணைந்து பணியாற்றுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல நடிகர் விஜய்யின் நிலையும் பெரும் கேள்விக்குறியதாக மாறியுள்ளது. ஜெயலலிதா அமைத்துள்ள கூட்டணியின் பலத்தை நம்பித்தான் திமுகவுக்கு ஆதரவாக களம் இறங்க விஜய் தீர்மானித்தார். அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் பலமுறை ஜெயலலிதாவை நேரில் பார்த்து ஆலோசனையும் நடத்தினார். விஜய் நடத்தி வரும் இயக்கத்திற்கு சீட்தரப்படும் என்று வேறு பேசி வந்தார்கள்.

சந்திரசேகரன் அங்கு நிற்கப் போகிறார், இங்கு நிற்கப் போகிறார் என்றும் பேச்சுக்கள் இருந்தன. ஆனால் இப்போது அவர் தான் குடியிருக்கும் சாலிகிராமத்தைத் தவிர வேறு எங்குமே போக முடியாத அளவுக்கு நிலைமை சிக்கலாகியுள்ளது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையால் சீமான், விஜய்யின் நிலைப்பாடு ஆர்வத்தை தூண்டுவதாக மாறியுள்ளது.

சத்தம் காட்டாத சமக, மமக!

அதேபோல சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும், மனித நேய மக்கள் கட்சியும் கூட இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளனர்.

மனித நேய மக்கள் கட்சிக்கு 3 சீட்களும், சரத்குமார் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்குவதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

ஆனால் இவர்களுக்கு என்ன தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது இதுவரை தெரியவில்லை.

அதேசமயம், சரத்குமார் தானே போட்டியிடுவதாக நினைத்திருந்த தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தி விட்டது. இது சரத்குமாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஜெயலலிதாவை முழுமையாக நம்பி, தன்னை நம்பி வந்த நாடார் சமுதாய அமைப்புகளை ஒரே இரவில் தூக்கிப் போட்டு விட்டு வந்தவர் சரத்குமார். இதனால் ஆவேசமடைந்த அவர்கள் சரத்குமார் எங்கு போட்டியிட்டாலும் அவரைக் காலி செய்வோம் என்று ஆவேசமாக கூறியிருந்தன. இந்த நிலையில் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கையால், சரத்குமாரின் நிலை பெரும் சிக்கலாகியுள்ளது.

இதேபோல மனித நேய மக்கள் கட்சிக்கு எந்தத் தொகுதிகளை ஜெயலலிதா கொடுத்துள்ளார் என்பதும் தெரியவில்லை. அந்தக் கட்சியும் இதுவரை கருத்து தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகிறது.

No comments: