திமுக தேர்தல் அறிக்கைக்குப் போட்டியாக நீ 4 என்றால் நான் 5 என்பேன். நீ 5 என்றால் நான் 6 என்கிறேன் என்று ஏதோ ஏலம் விடுவதைப் போல தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த ஏலம் விடுகின்ற வேலையை நான் விரும்பவில்லை. எனக்கு ஏலமும் பிடிக்காது. ஜாலமும் பிடிக்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று திமுக தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
நாம் இன்றைக்கு தி.மு.க.வை ஆக்கப்பூர்வமாக அமைப்பு ரீதியாக, அயல்நாட்டாரும் பார்த்து வியக்கத்தக்க அளவுக்கு வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த இயக்கம் ஜனநாயகத்தின் அடிப்படையில் தோன்றிய இயக்கம். ஜனநாயகத்தை வளர்ப்பதற்காக பாடுபடுகின்ற அறப்போர் இயக்கம்.
அவசர சட்டம், இந்திய திரு நாட்டின் மீது பாய்ந்த போது, நெருக்கடி நிலை ஏற்பட்ட போது, யாரையும் குறை சொல்லாமல் அன்றைக்கு இருந்த நிலைமைகளை எல்லாம் மக்களுக்கு விளக்கி மக்கள் அவசரநிலையைப் பற்றி, நெருக்கடி நிலையை எதிர்த்து நிற்க வேண்டிய நிலையை எடுத்துக் கூறி தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தமிழர்களையும் காப்பாற்றிக்கொண்டு ஜனநாயகத்தையும் காப்பாற்றிய பெருமை தி.மு.க.வுக்கு உண்டு.
அதனால்தான், அவைகள் நடந்து ஓய்ந்த பிறகு, சென்னையில் கடற்கரையில் உரையாற்ற வந்த இந்திரா காந்தி, சொன்னார்கள். சில தவறுகள் ஏற்பட்டுவிட்டன. அந்த தவறுகளுக்கு நான் நேரடியான காரணம் அல்ல. நாங்கள் இட்ட கட்டளையை, தவறாக புரிந்து கொண்டோ, அல்லது எஜமானனை விட வேலைக்காரர்கள் அதிகஆர்வம் உடையவர்கள் என்பதைக் காட்டுவதற்காகவோ சில அதிகாரிகள் செய்த தீவினையால், நாட்டில் ஏராளமானவர்களுக்கு கொடுமை இழைக்கப்பட்டு விட்டது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று இந்திரா காந்தி சென்னை கடற்கரையில் பேசினார் என்றால், அந்த வார்த்தையை வெளியிட என்ன காரணம். நாம் ஆர்த்தெழுந்து, அல்லது உணர்ச்சி வயப்பட்டு தலைகீழாக சில நிலைமைகளை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அன்றைக்கு நாம் செயல்பட்டிருந்தால், நான் நடந்தவைக்காக வருந்துகிறேன் என்று இந்திரா காந்தி சென்னையில் கடற்கரையில், பரந்த வெளியில் பேசியிருக்க மாட்டார்கள். அப்படி அவர்களை பேச வைத்தது நம்முடைய உறுதி. நாம் கொண்டிருந்த கொள்கை வளம். நம்மிடமிருந்த லட்சிய தாகம். அதனால்தான் அம்மையார் வருத்தம் தெரிவித்தார்.
அவர்கள் வருத்தம் தெரிவித்த சில மாதங்களில், அவர்களுடன் இணைந்து தி.மு.க. தேர்தலில் போட்டிட்டது. அந்த தேர்தலில் பெரு வெற்றியைப் பெற்று ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசை இந்திய திருநாட்டில் அமைத்தோம் என்றால், நெருக்கடி கால நெருப்பில் எங்கே வெந்து போய்விடுமோ, சுருண்டு போய்விடுவோமோ என அஞ்சி விடாமல் அதை எதிர்த்து நின்று நெருப்பையும் நீராக்கும் உத்தி தி.மு.க.வுக்கு உண்டு. அந்தநிலையால் தான் நாம் அமையாரின் பாராட்டை நாம் பெற்றோம். அப்படிப்பட்ட நிலைகளை, காரியங்களை, நிகழ்வுகளை எல்லாம் தாண்டித்தான் இன்று தி.மு.க. தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளுடன் இணைந்து ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற, ஜனநாயகத்திற்கு வருகின்ற ஆபத்துகளை தடுக்கின்ற பெரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
நாம் நம்முடைய மக்களுக்காக என்ன செய்தோம், என்ன செய்யப்போகிறோம் என்பவற்றை அறிவிப்பது அந்த தேர்தலில் வாக்குகளை சேகரிக்க விடுக்கின்ற வேண்டுகோள். அந்த வேண்டுகோள் விடுக்கும் முறையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சாயல் கொண்ட தேர்தல் அறிக்கை. கம்யூனிஸ்டு கட்சியினர் கூட வியக்கக்கூடிய அளவில் விடுக்கப்பட்ட தேர்தல் அறிக்கை. தோழமை கட்சிகள் பாராட்டிய தேர்தல் அறிக்கை. இதை, திருவாரூர் பொதுமேடையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பாராட்டி பேசினார்கள். இதற்கு மேலும் சிலவற்றை நீங்கள் சேர்க்கலாம் என்று கேட்டுக்கொண்டதால், அவைகளையும் சேர்த்து அவையும் வெளியிடப்பட்டுள்ளன.
இன்றைக்கு அதற்குப் போட்டியாக, நீ 4 என்றால் நான் 5 என்பேன். நீ 5 என்றால் நான் 6 என்கிறேன் என்று ஏதோ ஏலம் விடுவதைப் போல தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த ஏலம் விடுகின்ற வேலையை நான் விரும்பவில்லை. எனக்கு ஏலமும் பிடிக்காது. ஜாலமும் பிடிக்காது. நாம் சொன்னதை செய்வோம், என்று எங்கள் தேர்தல் அறிக்கையில், இன்று அல்ல, கடந்த காலத்தில் கூறி இருக்கிறோம்.
அந்த தேர்தல் அறிக்கைப் பற்றி ப.சிதம்பரம், இந்த தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலின் கதாநாயகன் என்று கூறினார். இப்போது எழுதப்பட்ட தேர்தல் அறிக்கை கதாநாயகி என்று கூறினேன். வில்லன் யார்? வருவார்கள். எந்த காட்சியிலும், திரைப்படத்திலும் வில்லன் வரத்தவறுவதில்லை. ஆனால், வில்லன் வீழ்ந்தான் என்பதுதான் படத்தின் முடிவாக இருக்கும். ஆகவே, கதாநாயகி என்று போற்றப்பட்ட இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள எல்லா அறிவிப்புகளும், தமிழகத்தின் தாய்மார்களுக்காக சொல்லப்பட்டவை.
கடந்த காலத்தில் எல்லோருக்கும் ஒரு டி.வி. தரப்படும் என்று கூறினோம். கருணாநிதி கதை விடுகிறார். நம்பாதீர்கள் என்று கூறிய குரல் இன்றும் என் காதில் கேட்கிறது. டி.வி. கொடுக்கிறோம் என்று கூறுவது பொய். நம்பாதீர்கள் என்று கூறினார்கள்.
ஆனால் கொடுத்தோம். லட்சக்கணக்கில் கொடுத்துவிட்டு, மிச்சம் யாருக்கும் இருந்தால் அவர்களுக்கு அடையாள சான்று கொடுத்து, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, அல்லது யாராவது ஆட்சிக்கு வந்தால் அவர்களிடம் கொடுத்து அந்த டி.வி.யை வாங்கிக்கொள்ளுங்கள் என்று அடையாள அட்டை கொடுத்திருக்கிறோம் என்றால் எங்களைப் போன்ற சத்தியசீலர்களை நீங்கள் அரசியல் வட்டாரத்தில் காண முடியும் என கருதுகிறீர்களா? அதனால்தான் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம். எங்களால் செய்ய முடிவதைதான் சொல்வோம்.
ஒவ்வொரு பெண்ணிற்கும், ஒவ்வொரு தாய்மாருக்கும் தேவையானவற்றை எங்களால் முடிந்த அளவு செய்வோம் என்று கூறியிருக்கிறோம். தேர்தலில் போட்டியிடுவோம். தேர்தல் வாக்குறுதியில் போட்டி போட மாட்டோம். முடியவும் முடியாது. ஆகாயம் அளவு காரியங்களை செய்வோம் என்று யாரையும் ஏமாற்ற எங்களுக்கு தெரியாது. செய்ய முடிந்ததைதான் சொல்வோம். உங்களுக்குத் தெரியாதா? கடந்த தேர்தலில் வெற்றிபெற்று மாநில கட்சி தலைவர்கள் வந்து என்னை வாழ்த்தி, முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது என்ன கூறினேன்.
தேர்தல் அறிக்கையில் ஒரு கிலோ அரிசி ரூ.2-க்கு தருவேன் என்று கூறியிருந்தேன். அதைப்படித்துக்காட்டி கையெழுத்தும் போட்டு பத்திரிகைகளுக்கும் கொடுத்தேன். 10 நாட்களுக்குப் பிறகு கணக்குப் பார்த்த போது, இன்னும் மலிவாக தரலாம் போலிருக்கிறது என்று தெரிந்த பிறகு ரூ.1-க்கு ஒரு கிலோ அரிசி என்று மாற்றினேன். யார் கேட்பது என்னை? கேட்க முடியாது. அது என் இஷ்டம். எனக்காக அல்ல. நாட்டு மக்களுக்காக. ஏழை, எளியவர்களுக்காக, பாட்டாளிகளுக்காக. ஏழைகளுக்கு ஒரு கிலோ அரிசி, ரூ. 1 என்ற நிலையில் இருந்து மாற்றி, பரம ஏழைகளுக்கு இந்த தேர்தல் அறிக்கையில், அவர்களுடைய வேதனையை குறைக்க, ஏற்கனவே வெளியிட்ட அந்த அறிக்கையில் இருந்து மாறுபட்டு இந்த தேர்தல் அறிக்கையில் 35 கிலோ அரிசி, பரம ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தேன்.
இதையெல்லாம் யாரையும் ஏமாற்ற அல்ல. நடக்கக்கூடியவை. செய்யக்கூடியவை. செய்யாவிட்டால் என் துண்டைப் பிடித்து கேட்கமாட்டார்களா, காதைப் பிடித்துக்கேட்க மாட்டார்களா. ஏழைக்காக இந்த அரசு இருக்கிறது. எல்லாம் இலவசம், இலவசம் என்கிறார்கள். தமிழகத்தில் கடைசி ஏழை இருக்கிற வரை இந்த இலவச திட்டங்கள் நீடிக்கும் என்று கூறினேன்.
இன்றைக்கும் கடைசியாக ஒரு ஏழை தமிழ்நாட்டில் இருக்கும் வரையில், ஏழைகளுக்கான இலவச திட்டங்களை நிறுத்த மாட்டேன். ஏழைக்காக நான் செய்கின்ற இந்த காரியங்களை பரம ஏழைகளுக்காக செய்யும் இந்த காரியங்களை நான் நிறுத்த மாட்டேன். என்னை இந்த பதவியிலே உட்கார வைத்ததற்கான காரணம் என்னை வாழவைப்பதற்காக அல்ல. நீங்கள் வாழ்வதற்காக. உங்களை நாங்கள் வாழ வைப்பதற்காக. இந்த நாட்டு மக்கள் எத்தனையோ ஆட்சிகளைப் பார்த்தவர்கள். நாம்பார்த்த ஆட்சிகளில் ஒன்று தான் வெள்ளைக்காரன் ஆட்சி. அந்த ஆட்சியைப் பார்த்து, அதற்குப் பின் வந்த காங்கிரஸ் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீதிக்கட்சி ஆட்சியைப் பார்த்தது. தி.மு.க. ஆட்சியைப் பார்த்தது.
இன்றைக்கும் இந்த ஆட்சி தொடர்ந்து நீடிப்பதைப் பார்த்து, அந்த ஆட்சியின் நன்மைகள் எல்லாம் தமிழனை வாழ வைக்க என்ற உண்மையை உணர்ந்தவர்கள்தான் தமிழகத்தில் உள்ளார்கள். எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் தமிழர், தமிழர், தமிழர், திராவிடர், திராவிடர், திராவிடர் என்பதில் எந்த விதமான மாற்றமும் இல்லை.
தமிழர்களுக்காக, திராவிடர்களுக்காக என் உடலில் உயிர் உள்ளவரை உழைப்பேன் என்று எடுத்துக்கொண்ட சபதம்தான் இந்த தேர்தல் அறிக்கையின் முகப்பு. அதைத் தருவோம், இதைத் தருவோம் என்று கூறாமல், ஒரே வரியில் கூற வேண்டுமானால் என் உயிரையும் தருவேன். உங்களுக்காக என் உயிரையும் தருவேன். என் வாழ்வையே தருவேன். எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், எத்தனை சாதனைகளைப் புரிந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய சுபாவம் எல்லா மனிதர்களுக்கும் வந்துவிடாது. அதை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள், பாராட்டக்கூடியவர்கள், அதற்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள், அதைக் கனிவோடு ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் தொகை குறைவு. ஆனால், அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தால் அவர்கள் நம் செயல்களை கவனித்தால், நம்முடன் ஐக்கியமாகிவிடுவார்கள். அப்படி ஐக்கியமாகின்ற காரியம் கடந்த சில மாதங்களாக வேகமாக நடைபெற்று வருகிறது.
தி.மு.க.வுடன் நம் கூட்டணியில் வந்துள்ள கட்சிகள் மாத்திரம் அல்ல. வேறு பல கட்சிகள் கூட தி.மு.க. இன்றைக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. இன்னும் சில கட்சிகள், நான் எதிர்பார்க்கின்ற கட்சிகள், இங்கே வராமல் எங்கே போவது என்று தெரியாமல் உள்ள கட்சிகள் கூட தி.மு.க.விற்கு வந்து அண்ணே என்னை மன்னித்துவிடு என்று சொல்லுகின்ற நிலை வரும். யாரிடத்திலும் நான் மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை. நான் அத்தகைய கேவலமான முறையை கடைப்பிடிக்க விரும்புவதில்லை. வெற்றிபெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் என்றெல்லாம் அரசியலில் இல்லை. அவர்களால் முடிந்ததை செய்தார்கள். நம்மால் முடிந்ததை செய்தோம். நாம் அந்த அளவிற்குதான் மக்கள் இடத்தில் செல்ல முடிந்தது. இரு கட்சிகளாக இருக்கிறோம். பிரிந்தோம்.
பிரிந்தவர்கள் கூடக்கூடாது என்பது சாஸ்வதம் (சாத்திரம்) இல்லை. பிரிந்தவர்கள் கூடுவதும் உண்டு. பிரிந்தவர்கள் கூடிய பிறகு அந்த ஒற்றுமையால், ஒற்றுமைக்கனலால், நம்மை ஒழிக்க எண்ணுபவர்கள் ஒழிந்து போனதும் உண்டு.
இலங்கையில், ஈழத்தமிழர்களிடத்திலே ஏற்பட்ட அந்த கொந்தளிப்பு, அவர்கள் நடத்திய போராட்டம், நாம் கண்ணீர் விடுகின்ற அளவிற்கு முடிந்தது ஏன்? என்ன காரணம்? அந்த போராட்டம் தமிழ் ஈழத்தை தராமல் தாழ்ந்து போனது ஏன்? என்ன காரணம்? சகோதரயுத்தம். இதைத்தான் நான் பல ஆண்டுகாலம் சொல்லி வந்தேன். யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. தமிழன் வீழ்ந்தது போல தெரியலாம். ஆனால் தமிழ்ச் சமுதாயம் எத்தனையோ முறை வீழ்ந்து வீழ்ந்து எழுந்த சமுதாயம். அதையாரும் அடியோடு வீழ்த்தி விட முடியாது. அதையாரும் அறவே அழித்து விட முடியாது. அந்த கனலில் அந்த தணலில் இன்னும் பல சமுதாயங்கள், எழுச்சிகள் ஏற்பட்டே தீரும். அந்த நம்பிக்கையுடன் தி.மு.க.வானாலும், அணி சேர்ந்திருக்கிற கூட்டணி கட்சி நண்பர்கள், தலைவர்களானாலும் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து உழைத்தால் முடியும்.
நாம் எதற்காக பல்வேறு கட்சிகளாக பிரிந்திருக்கிறோம்? ஒவ்வொருவருக்கும் கொள்கை உண்டு. ஒவ்வொரு கட்சியும் மக்களை வாழவைக்கத்தான் தொடங்கப்படுகிறது. ஒவ்வொரு கட்சியும் மக்களை வாழவைக்க தொடங்கப்படும் போது, எப்படி மக்கள் வாழாமல் போவார்கள்? மக்கள் வாழ முடியாமல் போனால், அது அந்த கட்சிகளின் குற்றம். கட்சிகளின் ஒற்றுமையின்மைதான் காரணமாக இருக்க முடியும். மக்களை வாழ வைப்பது நம் குறிக்கோள். லட்சியம். அந்த லட்சியத்திற்காகத்தான் கூட்டணி சேர்ந்துள்ளோம். அதற்காகத் தான் வாக்குகள் கேட்கிறோம். இந்த கூட்டணி தமிழகத்தை மீண்டும் ஆள உத்தரவை கேட்கிறது. நீங்கள் காலால் இடும் வேலையை தலையால் செய்ய இந்த கூட்டணி தயாராக உள்ளது என்றார் கருணாநிதி.
No comments:
Post a Comment