Search This Blog

Thursday, December 30, 2010

2010ல் தமிழ்நாடு-முக்கிய நிழ்வுகள்..

ஜனவரி

3 - அரசுப் பேருந்துகளில் டிரைவர்கள் செல்போன் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது.

6- சென்னை காமராஜர் சாலையில், சாலையைக் கடக்க முயன்ற கல்லூரி மாணவி மீது முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக எம்.பியுமான கனிமொழி வந்த கார் மோதியது. இதில் அந்த மாணவி லேசான காயமடைந்தார்.

7 - நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், ஆள் மாறாட்டத்தில், ஆம்பூர் அருகே சரமாரியாக வெட்டியும், வெடிகுண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டார். உயிருக்குத் துடித்த அவரை மீட்காமல் அமைச்சர்கள் வேடிக்கை பார்த்ததாக பெரும் சர்ச்சை கிளம்பியது.

- நான் முன்பை விட பாதுகாப்பான இடத்தில் இருக்கிறேன் என்று தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவை குற்றம் சாட்டியும், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டியும் பேசினார் எஸ்.வி.சேகர்.

8- பட்டப்பகலில் ஒரு சப் இன்ஸ்பெக்டரை கொலைக் கும்பல் வெடிகுண்டுகளை வீசியும், அரிவாள்களால் வெட்டியும் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வெடிகுண்டுக் கலாச்சாரத்துக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்து ஒடுக்க வேண்டும் என்று சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன் கூறினார்.

- தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் (டிஜிபி) கே.பி.ஜெயின் நீண்ட விடுமுறையில் சென்றார். இதையடுத்து புதிய டிஜிபியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டார்.

9 - தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்விமுறையைக் கொண்டு வருவது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

10 - மூட்டு வலி காரணமாக நடிகை மனோரமாவுக்கு இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

11 - புனித ஜார்ஜ் கோட்டியில் தமிழக சட்டசபையின் கடைசிக் கூட்டம் நடந்தது.

19 - நடிகர்கள் வடிவேலு, சூர்யா உள்ளிட்ட திரையுலகினரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது.

பிப்ரவரி

2 - மலையாளம் மற்றும் தமிழில் பிரபலமான நடிகர் கொச்சின் ஹனீபா எனப்படும் வி.எம்.சி. ஹனீபா உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் மரணமடைந்தார்.

- தன்னுடன் நடித்த சில நடிகர்கள் தன்னிடம் ரூ. 7 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து நடிகர் வடிவேலு புகார் கொடுத்தார்.

5 -கோவில்பட்டி அதிமுக எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரும், தென் மண்டல திமுக அமைப்பாளருமான மு.க.அழகிரியை சந்தித்தார். இதையடுத்து அவரது கட்சிப் பதவியைப் பறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

- தமிழ்ப் பெண்கள் குறித்து மலையாள டிவியில் நடிகர் ஜெயராம் பேசியது பெரும் சர்ச்சையானது. அவரது வீட்டை சிலர் தாக்கி தீவைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நான் பேசியது ஏதோ ஒருவகையில் தமிழ் உள்ளங்களை, முக்கியமாக, தமிழ் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் என் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி மன்னிப்பு கூறுகிறேன் என்று கேட்டுக் கொண்டார் ஜெயராம்.

- காசோலை மோசடி வழக்கில் பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலத்துக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பித்தது கரூர் நீதிமன்றம்.

- தனது காதல் கணவரை ஆவி அமுதா கைப்பற்றி வைத்துக் கொண்டுள்ளதாக புகார் கூறினார் நடிகை கனகா.

6- சேலத்தை தலைமையிடமாகக் கொண்ட கேபிஎன் டிராவல்ஸ் அதிபர் நடராஜனின் வீடு, அலுவலகங்கள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்ட் நடத்தினர்.

- நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் வரவேண்டும் என்று திரையுலக அமைப்பினர் நடிகர்களை மிரட்டுகிறார்கள். இது நியாயமா என்று முதல்வர் கருணாநிதிக்கு நடந்த திரையுலக பாராட்டு விழாவில் முதல்வர் முன்னிலையில் குமுறினார் நடிகர் அஜீத்குமார். அவரது பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார்.

7 - சென்னை அருகே பனையூர் பகுதியில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டியன். இவருடன் இருந்த கூட்டாளி கூடுவாஞ்சேரி வேலுவும் போலீஸின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானான்.

8 - சென்னை கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டு வரும் அண்ணா நூலகத்திற்கு முதல்வர் கருணாநிதி தம்மிடம் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான அரிய நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்.

11 -: சங்கரராமன் கொலை வழக்கில் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது மேலும் 7 பேர் பிறழ் சாட்சியாக மாறினர்.

12 - நடிகர் வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் 2 வழக்குகளில் சிக்கியுள்ள நடிகர் சிங்கமுத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்தது.

13 - கரும்பு விவசாயிகள் சிந்தி வரும் ரத்தக் கண்ணீருக்கு கருணாநிதி பதில சொல்லியே ஆக வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த அதி்முக கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.

14- ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

- கரும்பு விவசாயிகள் தொடர்பாக விழுப்புரத்தில் நடந்த போராட்டத்தின்போது பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டியிருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதற்காக அவருக்கு அகில உலகப் புளுகு ராணி என்ற பட்டமே கொடுக்கலாம் என்று கூறினார் முதல்வர் கருணாநிதி.

- வாக்குப் பதிவு எந்திரத்தி்ல் முறைகேடு செய்ய முடியாது என்பதை வெளிநாட்டு நிபுணர்கள் முன்பு தேர்தல் ஆணையம் நிரூபிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

21 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.ஆர். வரதராஜன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

மார்ச்

3 - கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை முதல்வர் கருணாநிதி திருச்சியில் தொடங்கி வைத்தார்.

4 - நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்க கோலத்தில் சாமியார் நித்தியானந்தா குஜாலாக இருந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

13 - தமிழகத்தின் புதிய சட்டசபைக் கட்டடத்தை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

19 - தமிழக புதிய சட்டசபைக் கட்டடத்தில் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார்.

21 - தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காலாவதி மருந்து வழக்கில் 7 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

26 - காஞ்சிபுரம் அருகே நடந்த என்கவுன்டரில் ரவுடி நடராஜன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

30 - பென்னாகரம் தொகுதியில் நடந்த சட்டசபை இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. பாமக இரண்டாவது இடத்தையும், அதிமுக 3வது இடத்தையும் பெற்றன.

ஏப்ரல்

6 - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

12 - தமிழகத்தில் மீண்டும் மேல்சபையைக் கொண்டு வருவது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

20 - வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினியின் அறையிலிருந்து செல்போன்கள் சிக்கியதாக சிறை அதிகாரிகள் அறிவித்தனர்.

28 - நடிகை குஷ்பு மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். தற்போது பெரும் ஊழல் புகார்களில் சிக்கியுள்ள முன்னாள் தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச்தான் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

30 - ரவுடி சின்னாவும் அவரது வக்கீல் பகவத் சிங் என்பவரும் பூந்தமல்லி கோர்ட் வளாகத்தில் ரவுடிக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

மே

1- பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த எஸ்.ஏ. ராஜாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

- சேலம் மாநகராட்சி மேயர் ரேகா பிரியதர்ஷினி சாலை விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

3 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் பாதுகாப்பு கருதித்தான், அரசின் அரவணைப்பில் அந்த அம்மையார் நாங்கள் குறிப்பிடுகிற மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அரசு செலவில் அவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

5 - தமிழக சட்ட மேலவைக்கான மசோதாவை சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார்.

- துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்- துர்கா தம்பதியினரின் மகள் செந்தாமரைக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.

- திமுகவிலிருந்து பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் கட்சிக்குத் திரும்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.

6 - யூனிகோட் தமிழ் எழுத்துருவை பொதுவான எழுத்துருவாக அங்கீகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சட்டசபையில் அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.

- தமிழகத்தில் செயல்பட்டு வரும் ராகுல் காந்தி பேரவை, பிரியங்கா காந்தி பேரவைகள் கலைக்கப்படுவதாக தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறினார்.

- கஞ்சா வழக்கில் விடுதலையான தன்னிடம் கைப்பற்றிய பணத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இதுவரை பணத்தை ஒப்படைக்கவில்லை என்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலம் பெண் செரீனா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

7 - நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதாக அதன் தலைவர் சீமான் அறிவித்தார்.

- கேரள மாநிலம் கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அனைவரும் ஆஸ்திரேலியா செல்லக் காத்திருந்தபோது பிடிபட்டனர்.

- தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்தது.

10 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நிபந்தனையுடன் தமிழகத்தில் சிகிச்சை பெறலாம் என மத்திய அரசு அறிவித்தது.

14 - தன் மீதான அனைத்து வழக்குகளும் தள்ளுபடியான சூட்டோடு நடிகை குஷ்பு திமுகவில் போய்ச் சேர்ந்து கொண்டார்.

16 - பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் மரணமடைந்தார்.

19 - லைலா புயலால் தமிழகத்தில் பெரும் மழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டது.

30 - மீண்டும் பாமகவை கூட்டணியில் சேர்க்கத் தயார் என்று திமுக உயர் நிலை செயல் திட்டக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதேசமயம், சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னரே பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தரப்படும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை பாமக இதுவரை ஏற்கவில்லை.

ஜூன்

2- தனது கோபாலபுரம் வீட்டை தனது மறைவுக்குப் பின்னர் இலவச மருத்துவமனையாக மாற்றுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதுதொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு வீட்டைத் தானமாகவும் அளித்தார்.

8- 8ம் வகுப்பு வரை யாரையும் பெயிலாக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

10- தமிழகத்தில் ராஜ்யசபாவுக்கு நடந்த தேர்தலில் 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

11 - தமிழகம் முழுவதும் நடந்த அதிரடி வேட்டையில் 170 போலி மருத்துவர்கள் சிக்கினர்.

21 - சென்னை உயர்நீதிமன்றம், மதுரை பெஞ்ச் ஆகியவற்றில் தமிழில் வாதாடத் தடையில்லை என்று தலைமை நீதிபதி இக்பால் அறிவித்தார்.

23 - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் பிரமாண்ட பேரணியுடன் தொடங்கியது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைத்துப் பேரணியைப் பார்வையிட்டார்.

26 - பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏவும், சட்டசபை காங்கிரஸ் தலைவருமான சுதர்சனம் கோவையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

27 - கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோலாகலமாக முடிவடைந்தது.

ஜூலை

13 - அதிமுகவுக்கு புத்துயிர் அளித்த கோவை கண்டனக் கூட்டம் இன்று நடந்தது. ஜெயலலிதா கலந்து கொண்ட இக்கூட்டத்தில் லட்சக்கணக்கில் கூடிய கூட்டத்தால் கோவையே திணறியது.

14 - பல மாநிலங்களில் மோசடியாக ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தி வந்த ஜேபிஜே குழுமத் தலைவர் தேவதாஸ் கைது செய்யப்பட்டார்.

17 - இலங்கைக் கடற்படையைக் கண்டித்தும், எச்சரித்தும் சென்னைக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் தலைவர் சீமான், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

21 - சென்னையில் ஆதித்யா என்ற சிறுவன் அவனது தந்தை ஜெயக்குமாரின் கள்ளக்காதலியான பூவரசியால் கடத்திக் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைத்து நாகப்பட்டனம் பஸ் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செயல் தமிழகத்தை அதிர வைத்தது.

24 - மதுரையைச் சேர்ந்த பாத்திமா என்பவரின் ஒன்றரை வயதுக் குழந்தை காதர் யூசுப்பைக் கடத்தி நரபலி கொடுத்து ரத்தத்தைக் குடித்ததாக அப்துல் கபூர் மற்றும் அவரது மனைவி ரமலா பீவி ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.

27 - திரைப்படத் தயாரிப்பாளரிடம் ரூ. 25,000 லஞ்சம் வாங்கியதாக திரைப்படத் தணிக்கை அதிகாரி ராஜசேகர் கைது செய்யப்பட்டார்.

- புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக குரேஷி நியமிக்கப்பட்டார்.

28 - ஐடிஐ வினாத்தாள் வெளியானதால், தமிழகம் முழுவதும் ஐடிஐ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

- ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து நளினி, முருகன் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

30 - தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பிரவீன் குமார் நியமிக்கப்பட்டார்.

- தமிழகத்திலும், புதுவையிலும் மாநிலக் கட்சி அந்தஸ்தை மதிமுக இழந்தது. புதுவையில் மாநிலக் கட்சி அந்தஸ்தை பாமக இழந்தது.

- ஆலடி அருணா கொலை வழக்கிலிருந்து எஸ்.ஆர்.ராஜாவை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

31 - சென்னைக் கடல் நீர் குடிநீராக்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

ஆகஸ்ட்

13 - சேலத்தில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

20- தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் குண்டு பல்புகளைப் பயன்படுத்த அரசு தடை விதித்தது.

30- தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

செப்டம்பர்

2- ஜாதி குறித்து தவறான தகவலைக் கொடுத்ததாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கருக்கு தமிழக அரசு மீண்டும் பணி வழங்கியது.

10 - தமிழக அரசின் சமச்சீர் க்ல்வித் திட்டம் சரியானதே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

12 - தமிழகத்தில் 15 ஆய்வகங்களில் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை செய்யலாம் என அரசு அறிவித்தது.

- பிரபல பின்னணிப் பாடகி சொர்ணலதா சென்னையில் மரணமடைந்தார்.

- தமிழகத்தில் பந்த் நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

14 - நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி தனியார் பள்ளிகளுக்கு விதித்த கட்டண நிர்ணயத்தை நடப்பு கல்வி ஆண்டில் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

- அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி 13 கைதகிளை விடுதலை செய்ய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

- தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

- இன்டர்நெட் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது, பதிவு மூப்பை புதுப்பிப்பது ஆகியவற்றை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

- சென்னையில் ரூ. 165 கோடியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

19 - சென்னையில் நடந்த டேவிஸ் கோப்பைப் போட்டியில், பிரேசிலை 3-2 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று உலகச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

22 - தஞ்சாவூர் பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா தஞ்சையில் கோலாகலமாக தொடங்கியது.

28 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவெடுத்தது.

- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அக்டோபர்

7 - புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாச்சலம் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

8 - டிஜிபியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. புதிய டிஜிபியை தேர்வு செய்யவும் அது உத்தரவிட்டது.

9 - முன்னாள் மத்திய அமைச்சரும், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளில் இருந்தவருமான திருநாவுக்கரசர் சோனியா காந்தி முன்னிலையில் திருச்சியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸில் முறைப்படி இணைந்தார்.

18- தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்தது.

- நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில், கள்ளக்காதல் விவகாரத்தில், போலீஸ்காரர் இசக்கிமுத்து என்பவர் தனது காதலி உமா மகேஸ்வரி, நண்பரின் மனைவியான கீதா ஆகியோரை வெட்டிக் கொன்று தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

19 - சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து கொள்ளையடிக்க முயன்ற முன்னாள் திமுக எம்.எல்.ஏ ரவிசங்கர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒரு கொள்ளையராக மாறிய கதை தெரிய வந்து தமிழகமே அதிர்ந்தது.

21 - பெரும் சர்ச்சைக்கு மத்தியில் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்யண விவரத்தை தமிழக அரசு தனது இணையதளத்தில் வெளியிட்டது.

22 - வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

23 - தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டித் தலைவர் பொறுப்பிலிருந்து நீதிபதி கோவிந்தராஜன் விலகினார்.

26 - காங்கிரஸுக்குப் போவது போல போக்குக் காட்டிய நடிகர் ராதாரவி திடீரென ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.

- பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரது பெயர்களை வழக்கிலிருந்து நீக்கி தடா கோர்ட் உத்தரவிட்டது.

நவம்பர்

1 - தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் கமிட்டியின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

3 - சென்னையை உலுக்கியது கீர்த்திவாசன் கடத்தல் நாடகம். இரண்டு பொறியியல் பட்டதாரி இளைஞர்களால் கடத்தப்பட்ட கீர்த்திவாசன் பெரும் பரபரப்புக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டான். அடுத்த நாளே கடத்தல்காரர்களான விஜய், பிரபு ஆகியோரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

6 - தமிழகத்தை உலுக்கிய ஜல் புயலால் பெரும் மழை பெய்து சென்னை உள்பட தமிழகமே வெள்ளக்காடாகியது.

9 - கோவையில் முஷ்கின் (11) என்ற சிறுமியையும், அவளது தம்பி ரித்திக்கையும் கடத்திச் சென்று முஷ்கினை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தும், இருவரையும் தண்ணீரில் தள்ளிக் கொன்ற மோகனகிருஷ்ணன், மனோகரன் ஆகிய இரு கொடூரர்களில், மோகன கிருஷ்ணன், கோவை அருகே என்கவுன்டரில் கொல்லப்பட்டான்.

11 - திமுக தனது ஆதரவை விலக்கிக் கொண்டால் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கத் தயார் என்று கூறி புதிய 'பிட்'டைப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஜெயலலிதா.

12 - தமிழை மொழிப் பாடமாக எடுத்துப் படித்தவர்களுக்கு அரசு வேலை தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பான சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

14 -2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

22 - தமிழகம் முழுவதும் கொட்டித் தீர்த்த கன மழையால் தமிழகமே ஸ்தம்பித்தது. 100 பேர் பலியானார்கள்.

23 - நடிகர் விஜயக்குமாரை தாக்கிக் காயப்படுத்தியதாக கூறி அவரது மகள் வனிதாவின் 2வது கணவர் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார்.

25 - தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

- குன்னூர் அருகே மத்திய அரசின் வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் 5 பேர் பலியானார்கள்.

29 - தஞ்சை பெரிய கோவிலின் ராஜராஜன் வாயில் கோபுரத்தில் இடி தாக்கி கலசம் உடைந்தது.

டிசம்பர்

1 - முதல்வர் கருணாநிதி தனது சொத்து விவரத்தை வெளியிட்டார். அதில் கோபாலாபுரம் வீட்டைத் தவிர தனக்கு வேறு சொத்து இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

2 - நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு மண் அள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் அதிரடி தடை விதித்தது.

4- கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் எம்.பி. முற்றுகைப் போராட்டத்தால் திரும்பிச் சென்றார்.

8 - முன்னாள் அமைச்சர் ராசா, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது.

14 - ஒரு ஜாமீன் வழக்கு தொடர்பாக முன்னாள் நீதிபதி ரகுபதியை மிரட்டி சாதிக்க முயன்றவர் முன்னாள் அமைச்சர் ராசா என்ற தகவலை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனும் சர்ச்சையில் மாட்டினார்.

15 - ராசாவின் வீடுகள், நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் மீண்டும் சிபிஐ சோதனைக்குள்ளாக்கப்பட்டன.

- ஹஜ் யாத்திரை போல கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்கு புனித யாத்திரை செல்ல அரசு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று அறிவித்தார் ஜெயலலிதா.

- எனக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத நில மாற்றம் தொடர்பாக அவதூறான நோக்கத்தோடு செய்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் எச்சரித்தார்.

- பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்திற்கு வரும்போது அவரைத் தாக்கி படுகொலை செய்ய விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு குழு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கைத் தகவலை அனுப்பியது. அதேபோல முதல்வர் கருணாநிதி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் கொல்லத் திட்டமிட்டுள்ளனராம் புலிகள் என்றும் உளவுத்துறை கூறியது.

16 - அரசியல்வாதிகளுடன் எங்களுக்குத் தொடர்புகள் இருப்பதால் எங்களை நியாயமே இல்லாமல் குறி வைத்துள்ளனர் என்று காட்டமாக கூறினார் சிபிஐ சோதனைக்குள்ளான தமிழ் மையம் அமைப்பின் தலைவர் பாதிரியார் ஜெகத் கஸ்பார்.

- தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

17 - தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் வளாகத்தில் அரசு மருத்துவமனை கட்டக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

- அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினராக தனது 'உடன் பிறவா சகோதரி' சசிகலாவை அக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா நியமித்தார்.

24 - ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசாவிடம் சிபிஐ அதிரடி விசாரணை நடத்தியது. இது 9 மணி நேரம் நீடித்தது.

25 - மீண்டும் ராசாவிடம் 7 மணி நேரம் சிபிஐ விசாரணை நடந்தது.

26 - ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டணம் பகுதியைச் சேர்ந்த சிலர் கடலில் படகுகளில் சென்றபோது ஒரு படகு கவிழ்ந்தது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

27 - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணனுக்கு வந்த 3 மிரட்டல் கடிதங்களில்ல மணிப் பாதிரியார் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் ஆகியவற்றை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து இக்கோவில்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

28 - ரூ. 470 கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டதாக கிரிக்கெட் வாரியம் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியது.

29 - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த காமச் சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடந்ததால் அவர் தப்பி ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

- அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் என்னைத் தாக்கியும், சிறிதும் நாகரீகம் இன்றி மறைந்த என்னுடைய தந்தையாரை வம்புக்கிழுத்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து எனக்கு அவர் மீது உள்ள அக்கறையால் ஐயோ! பாவம்! என்றுதான் தோன்றியது என்று கூறினார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

- 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிக்கக் கூடாது என்று நாம் தமிழர் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்தார்.

- சென்னை மாநகராட்சியைச் சுற்றி தாம்பரம், அம்பத்தூர், திருவொற்றியூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக 3 மாநகராட்சிகளை ஏற்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

30 - தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி ஆலோசனை நடத்தினார்.

Wednesday, December 29, 2010

பா.ம.க., தயவில்லாமல் இருகட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாது: ராமதாஸ் பேச்சு

பா.ம.க., தயவில்லாமல் இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் சட்டசபை தொகுதிக்குப்பட்ட பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: பா.ம.க., தற்போது கட்சியை வலுப்படுத்தும் நிலையிலும், திசை மாறிச் சென்ற இளைஞர்களை நல்வழிப்படுத்தும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. பா.ம.க., தயவில்லாமல் இரண்டு கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது. பா.ம.க.,வின் இலக்கு இந்த சட்டசபை தேர்தலில் இல்லை. அடுத்த சட்டசபை தேர்தலில் தான் ஆட்சியை பிடிக்கும். பா.ம.க., தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவதாக கூறுகின்ற கட்சிகள் எதுவும் ஒரே அணியில் இருந்ததில்லை. கூட்டணி மாறுவது குறித்து எந்த கட்சி எப்போது முடிவெடுக்கும் என்று கூற முடியாது.

கிராமத்து இளைஞர்கள், அந்த கிராம மக்களின் பிரச்னைகளை கையிலெடுத்து தீர்வு காண வேண்டும். தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். ஏழைகள் கூட எம்.எல்.ஏ., ஆகும் நிலை உருவாக வேண்டும். கல்வியை மேம்படுத்தவும், விவசாயத்தை மேம்படுத்தவும், சுகாதார வசதி கிடைக்கவும், கிராம இளைஞர்கள் அதற்காக பாடுபட முன்வர வேண்டும். பொங்கலுக்கு பின் பா.ம.க., யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவெடுக்கும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: இளங்கோவன் பதிலடி

வீரபாண்டி ஆறுமுகம் எனக்கு விடுத்துள்ள கொலை மிரட்டலைக் கண்டு ஒரு போதும் அஞ்ச மாட்டேன் ,'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் 126வது தொடக்க விழா மற்றும் வாசன் 46வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் சார்பில், அதன் தலைவர் தணிகைமணி தலைமையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில், அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு 100 மெத்தைகள் வழங்கும் விழா நடந்தது.

இதில் இளங்கோவன் பேசியதாவது: மூப்பனார் மகன் என்பதால் மட்டும் வாசனுக்கு கட்சியிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்கு வரவில்லை. வாசனுக்கு எம்.பி., பதவி தர வேண்டுமென்று கூறிய போது அதை மறுத்தவர் மூப்பனார். இன்றோ தன் மகனை முதல்வராக்க துடிக்கும் தலைவரும் நம் நாட்டில் உள்ளார். கட்சியில் உள்ள வயதானவர்களை வாசன் சமாளிப்பது தான் எனக்கு அவரிடம் பிடித்த காரியம். ஏனெனில், எங்கள் கட்சியில் உள்ள பெரியவர்கள் ஒரு மாதிரியானவர்கள். அவர்களை நிச்சயம் என்னால் அரவணைத்து செல்ல முடியாது. நாட்டின் பெரிய தலைவர்கள் பலர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். வீரபாண்டி ஆறுமுகத்திற்கு, அவர் சார்ந்திருக்கும் கட்சியில் சரிவு ஏற்பட்டு வருகிறது. அதனால் தான் என் தந்தையை கொச்சைப்படுத்தி பேசியும், எனக்கு கொலை மிரட்டல் விடுத்தும் கட்சியின் தலைமையை திருப்திபடுத்த விரும்புகிறார். அவரின் மிரட்டலைக் கண்டு, நான் ஒரு போதும் அஞ்ச மாட்டேன். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், தமிழக காங்கிரஸ் பொருளாளர் சுந்தர வடிவேலு, தென் சென்னை காங்கிரஸ் தலைவர் மங்கள்ராஜ், முன்னாள் கைத்தறி வாரிய உறுப்பினர் ரங்கபாஷ்யம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் தரம்சந்த், துணை தலைவர் சுரேஷ் ஆனந்த் கலந்து கொண்டனர்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: இளங்கோவன் பதிலடி

வீரபாண்டி ஆறுமுகம் எனக்கு விடுத்துள்ள கொலை மிரட்டலைக் கண்டு ஒரு போதும் அஞ்ச மாட்டேன் ,'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் 126வது தொடக்க விழா மற்றும் வாசன் 46வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் சார்பில், அதன் தலைவர் தணிகைமணி தலைமையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில், அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு 100 மெத்தைகள் வழங்கும் விழா நடந்தது.

இதில் இளங்கோவன் பேசியதாவது: மூப்பனார் மகன் என்பதால் மட்டும் வாசனுக்கு கட்சியிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்கு வரவில்லை. வாசனுக்கு எம்.பி., பதவி தர வேண்டுமென்று கூறிய போது அதை மறுத்தவர் மூப்பனார். இன்றோ தன் மகனை முதல்வராக்க துடிக்கும் தலைவரும் நம் நாட்டில் உள்ளார். கட்சியில் உள்ள வயதானவர்களை வாசன் சமாளிப்பது தான் எனக்கு அவரிடம் பிடித்த காரியம். ஏனெனில், எங்கள் கட்சியில் உள்ள பெரியவர்கள் ஒரு மாதிரியானவர்கள். அவர்களை நிச்சயம் என்னால் அரவணைத்து செல்ல முடியாது. நாட்டின் பெரிய தலைவர்கள் பலர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். வீரபாண்டி ஆறுமுகத்திற்கு, அவர் சார்ந்திருக்கும் கட்சியில் சரிவு ஏற்பட்டு வருகிறது. அதனால் தான் என் தந்தையை கொச்சைப்படுத்தி பேசியும், எனக்கு கொலை மிரட்டல் விடுத்தும் கட்சியின் தலைமையை திருப்திபடுத்த விரும்புகிறார். அவரின் மிரட்டலைக் கண்டு, நான் ஒரு போதும் அஞ்ச மாட்டேன். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், தமிழக காங்கிரஸ் பொருளாளர் சுந்தர வடிவேலு, தென் சென்னை காங்கிரஸ் தலைவர் மங்கள்ராஜ், முன்னாள் கைத்தறி வாரிய உறுப்பினர் ரங்கபாஷ்யம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் தரம்சந்த், துணை தலைவர் சுரேஷ் ஆனந்த் கலந்து கொண்டனர்.

Tuesday, December 28, 2010

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நீடிக்கிறது: தங்கபாலு

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது; இந்த கூட்டணி நீடிக்கிறது,'' என, தமிழக காங்., தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.

காங்., கட்சியின் 126வது ஆண்டு துவக்க விழா சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. சேவாதளம் தொண்டர்கள் சார்பில் அணிவகுப்பு மரியாதை நடந்தது. கட்சிக் கொடியை தங்கபாலு ஏற்றி வைத்து, கேக் வெட்டி, தொண்டர்களுக்கு வழங்கினார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சுவர் கடிகாரத்தை தங்கபாலு பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தங்கபாலு அளித்த பேட்டி: சோனியா, ராகுல் வழியில் நடந்து ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவோம். உன்னதமான தமிழகத்தை படைப்போம். கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு எடுக்கும். சோனியா எடுக்கும் முடிவு தான் இறுதியானது. அவர் காட்டும் வழியில் தமிழக காங்கிரஸ் நடைபோடும். தமிழகத்தில் தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியை மதிக்கிறோம் என திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியா தெரிவித்தார். தி.மு.க., - காங்., வலுவான கூட்டணி, வெற்றி கூட்டணி. இந்த கூட்டணி தொடருகிறது. கூட்டணி பற்றி பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என ராகுல் கூறியுள்ளார். சோனியா மட்டுமே கூட்டணி குறித்து பேசுவார். உள்ளாட்சி இடைத்தேர்தலில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு காங்கிரஸ் பாடுபடும். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். சட்டசபைத் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும். தேர்தல் கமிஷனுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு தங்கபாலு கூறினார்.

இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக "டாஸ்மாக்'

தமிழக, "டாஸ்மாக்' நடப்பாண்டில் அரசு நிர்ணயம் செய்த இலக்கையும் தாண்டி 16,445 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் டிச.,25 வரை மேற் கொண்ட கணக்கீன்படி 2, 464 கோடி ரூபாய் மது விற்பனை அதிகரித்துள்ளது. அரசு நிர்ணயித்த இலக்கை விட தாண்டி மது விற்பனை நடந்துள்ளது.

கடந்த 2003 நவம்பர் முதல் தமிழகத்தில், "டாஸ்மாக்' மூலம் மது விற்பனையை அரசு துவக்கியது. ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனையில் 2,000 கோடி ரூபாய் வரை அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசும் மது இலக்கு விற்பனையை தொடர்ந்து அதிகரித்து வந்தது. நிர்ணயிக்கப்படும் இலக்கை தாண்டி மது விற்பனையில் சாதனை படைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 7,434, "டாஸ்மாக்' கடைகள் மூலம் மது விற்பனை மேற் கொள்ளப்படுகிறது. இந்த மது விற்பனை கடைகளில் விற்பனையாளர், கடை மேற்பார்வையாளர், ஏரியா சூப்பர் வைசர் என 34 ஆயிரத்து 323 பேர் பணி செய்து வருகின்றனர். தினம் தோறும் சராசரியாக 1.26 லட்சம் பெட்டிகள் ஐ.எம்.எஃப்.எல்., மது பானங்களும், 57 ஆயிரம் கேஸ் ( ஒரு கேஸில் 12 பாட்டில்) பீர் பாட்டில்களும் விற்பனை நடந்துள்ளது. வார நாளில் சாரசரி விற்பனை அளவு 45 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. இதுவே சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மது விற்பனை சராசரியாக 53 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விழா நாட்களின் சராசரி மது விற்பனை 92 கோடி ரூபாய் வரை நடந்துள்ளது. தமிழக, "டாஸ்மாக்' மது விற்பனை நிதியாண்டு அடிப்படையில் (மார்ச் -பிப்ரவரி என 12 மாதங்கள்) கணக்கிடப்படுகிறது. அது மட்டுமின்றி ஆண்டின் அடிப்படையிலும் மது விற்பனை கணக்கிடப்படுகிறது. அத்துடன் தமிழகத்தில் மாதம் தோறும் மாவட்ட வாரியாக மேற் கொள்ளப்படும் மது விற்பனை குறித்த தகவல், அந்தந்த மாதத்தின் கடைசி நாளில் மாநகர பகுதி எனில் போலீஸ் கமிஷனருக்கும், மாவட்ட பகுதியில் மாவட்ட எஸ்.பி.,க்கும் வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் மது விற்பனை சரிவு ஏற்படாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில், "டாஸ்மாக்' மது விற்பனை துவக்கப்பட்ட 2003 முதல் 2006 வரை மது விற்பனை எட்டாயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்து வந்தது. கடந்த 2007 - 2008 நிதியாண்டில் 10 ஆயிரத்து 486 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த மது விற்பனை 2008-2009ம் ஆண்டில் 12 ஆயிரத்து 831 கோடியாக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து 2009 -2010 நிதியாண்டில் மார்ச் வரை மது விற்பனை 14 ஆயிரத்து 926 கோடியாக அதிகரித்தது. 2010 மார்ச் முதல் டிச.,25 வரை நிதியாண்டு கணக்கீட்டின் படி மது விற்பனை 11 ஆயிரத்து 887 கோடி விற்பனை நடந்துள்ளது. இந்த மது விற்பனை அளவை ஆண்டு கணக்கின்படி (ஜனவரி துவங்கி டிசம்பர் வரை) கணக்கிடும் போது, கடந்த 2009ம் ஆண்டில் மது விற்பனை 13 ஆயிரத்து 981 கோடிக்கு நடந்தது. இந்த மது விற்பனையை அதிகரிக்கும் வகையில் அரசு, "டாஸ்மாக்' நிறுவனத்துக்கு 2010ம் ஆண்டுக்கான விற்பனை இலக்கு, 2009ம் ஆண்டு விற்பனையை விட கூடுதலாக 2,000 கோடி என நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. ஆனால், அரசின் விற்பனை இலக்கை தாண்டி தற்போது மது விற்பனை நிகழ்ந்துள்ளது.

கடந்த ஜனவரி துவங்கி நடப்பு டிச.,25 வரை 359 நாட்களுக்கு தமிழக "டாஸ்மாக்' கில்16 ஆயிரத்து 445 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதாவது சராசரியாக தினசரி 45. 80 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இரண்டாயிரத்து 464 கோடி ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 31ம் தேதி வரை மேலும் ஆறு நாட்களுக்கு கணக்கிட்டால் 274.80 கோடி விற்பனையாகும். மொத்தம் 16 ஆயிரத்து 719.80 கோடிக்கு விற்பனையாகும் என டாஸ்மாக் நிர்வாகம் கணக்கிட்டுள்ளது.

தமிழக அளவில் "டாஸ்மாக்' மது விற்பனையில் தர்மபுரி, கோவை, சென்னை, சேலம் ஆகிய மாவட்டங்கள் முதல் நான்கு இடங்களை பெற்றுள்ளன. இதில் தர்மபுரி மாவட்டமே மது விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. இது குறித்து "டாஸ்மாக்' ஊழியர்கள் கூறியதாவது: தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்படும் இலவச திட்டங்கள் அனைத்துக்கும் "டாஸ்மாக்' மது விற்பனையே நிதி ஆதாரமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அளவு அதிகரித்து வந்த போதிலும், அரசு, நாங்கள் அ.தி.மு.க., ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்டோம் என்ற காரணத்துக்காக எங்களை தொடர்ந்து, "மாற்றாந்தாய் பிள்ளையாக' கருதி வருகிறது. எங்களை அரசு ஊழியராக்க எந்த முயற்சியும் எடுக்கப்பட வில்லை. மாறாக நாங்கள் உரிமைக்காக நடத்திய போராட்டங்களை முறியடிக்கவே முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறோம், என்றனர்.

விலைவாசி உயர்வு மிகப்பெரிய சவால்: காங்கிரஸ் கட்சி ஒப்புதல்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு, விலைவாசி உயர்வு மிகப் பெரிய சவாலாக விளங்குவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப் பெரிய மற்றும் பழமையான கட்சியான, காங்கிரஸ் 125ம் ஆண்டை நிறைவு செய்து, 126ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. 2ஜி ஸ்பெக்டரம், காமன்வெல்த் விளையாட்டு போட்டி மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள், காங்கிரசுக்கு எதிராக புகார் எழுப்பி வருகின்றன. இதன் காரணமாக, பார்லிமென்ட் குளிர் காலக் கூட்டத்தொடர் முழுவதையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த ஆதர்ஷ் குடியிருப்பில் முறைகேடு அக்கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. ஆந்திராவில், முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைந்தது முதல், அங்கு காங்கிரஸ் கட்சி பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல், பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று இளைஞர் காங்கிரசை வலுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தாலும் அதிக பலன் காணோம். மேலும், இந்து பயங்கரவாதம் குறித்து ராகுல் பேசியதாக, விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியதால், காங்கிரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நெருக்கடிகளையெல்லாம், கட்சித் தலைவர் சோனியா சமாளித்து, நான்காம் முறையாக, தலைவர் பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் 126ம் ஆண்டு துவக்க விழா நேற்று காலை டில்லியில் உள்ள, கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், "காங்கிரஸ் கட்சியும் இந்திய தேசிய வளர்ச்சியும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை பிரதமர் மன்மோகன் சிங் உறுதியாகவும், அமைதியாகவும் நிர்வகித்துச் செல்கிறார். நாட்டு மக்களுக்குத் தேவையான பல்வேறு திட்டங்களை அரசு தீட்டி வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சிக்கும் பொறுப்பு கூடுதலாக உள்ளது. இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் வலுவடைந்து வருவதாக, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாதிகளும், நக்சலைட்டுகளும் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். பொருளாதார வளர்ச்சியில் ஜாம்பவனாக திகழும் சீனாவுடன் இணைந்து செயல் பட இந்தியா தயாராக உள்ளது. கடந்த 2004 ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தல் வெற்றிக்குப் பின்னர், தன்னைத் தேடி வந்த பிரதமர் பதவியை உதறிவிட்டு, தன்னலமற்ற அரசியல்வாதிக்கு உதாரணமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா விளங்குகிறார். தற்போது, நாட்டில் காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களின் விலை உயர்வு மத்திய அரசுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. சென்ற தேர்தலில் காங்கிரசுக்கு 206 சீட் வெற்றி கிடைத்தது மாநிலக் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட வளர்ச்சித் தடையாகும். இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜ., தலைவர்களிடையே திடீர் கருத்து வேறுபாடு: பார்லி., கூட்டுக்குழு விவகாரத்தில் திருப்பம்

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்ற பா.ஜ., கட்சித் தலைவர்களின் நிலைப்பாட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள் முரளிமனோகர் ஜோஷிக்கும், சுஷ்மா சுவராஜுக் கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, கட்சிக்குள் மோதல் முற்றியுள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அளித்த அறிக்கை, தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதன் காரணமாக, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா, பதவி விலகினார். இருந்தாலும், எதிர்க்கட்சியினர் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து தீவிரப் படுத்தினர். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் பிப்ரவரி மூன்றாம் வாரத்தில் துவங்கவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரிலும், பார்லிமென்ட் கூட்டுக் குழு பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், பட்ஜெட்கூட்டத்தொடரும் முடக்கப்படும்அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்ப்பதற்கான முயற்சியில் லோக்சபா சபாநாயகர் மீரா குமார் ஈடுபட்டுள்ளார். பார்லிமென்ட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, நாளை டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதாக பா.ஜ., நேற்று அறிவித்தது.

மோதல்: இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு தலைவரும், பா.ஜ., மூத்த தலைவருமான முரளிமனோகர் ஜோஷி கூறியதாவது: பொதுக் கணக்கு குழுவின் அதிகாரம், சில வரம்புகளுக்கு உட்பட்டது என, கூறுவது சரியல்ல. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணையை பொதுக் கணக்கு குழுவால் நடத்த முடியும். குறிப்பாக,இந்த விவகாரத்தில் கடந்த 2001ல் இருந்து மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் குறித்து விசாரிக்க முடியும். பொதுக் கணக்கு குழு முன், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங், கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து சரியான நேரத்தில், சரியான முடிவு எடுக்கப்படும் என்றார். ஆனால், பா.ஜ.,வின் மற்றொரு மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ், முரளிமனோகர் ஜோஷி கூறியதற்கு முற்றிலும் மாறான கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இணையதளத்தில் தெரிவித்துள்ளதாவது: ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பொதுக் கணக்கு குழுவின் அதிகாரம் வரைமுறைகளுக்கு உட்பட்டது. கணக்கு குறித்த விவரங்களை மட்டுமே பொதுக் கணக்கு குழு விசாரிக்க முடியும். பார்லிமென்ட் கூட்டுக் குழு தான், அரசு பொறுப்பாக செயல்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க முடியும். எனவே, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரித்தால் தான், ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த மர்மங்கள் வெளிச்சத்துக்கு வரும். பொதுக் கணக்கு குழு முன் ஆஜராக தயார் என, பிரதமர் கூறியுள்ளதில் எந்த அர்த்தமும் இல்லை. பொதுக் கணக்கு குழுவால், அமைச்சர்களையே நேரில் அழைத்து விசாரிக்க முடியாது என்கிறபோது, பிரதமரை எப்படி நேரில் அழைத்து விசாரிக்க முடியும் என்றார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பா.ஜ., மூத்த தலைவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல், பா.ஜ.,வுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரை, பொதுக் கணக்கு குழு நேரில் அழைத்து விசாரிக்க வேண்டுமானால், லோக்சபா சபாநாயகரிடம் அதற்காக அனுமதி பெற வேண்டும். மேலும், இதற்காக பார்லிமென்டின் பொது விஷயங்களை கவனிக்கும் கமிட்டியால் (பார்லிமென்ட் ஜெனரல் பர்ப்பஸ் கமிட்டி), விதிமுறைகளில் திருத்தமும் செய்யப்பட வேண்டும். இதுபோன்ற சட்ட சிக்கல்கள் உள்ள சூழ்நிலையில், கூட்டுக் குழு விசாரணை தொடர்பாக முரளிமனோகர் ஜோஷி கூறியுள்ள கருத்துக்கள், பா.ஜ.,வின் மற்ற தலைவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முரளிமனோகர் தன்னை சீனியர் என்று கருதி அத்வானி உள்ளிட்டோரை அதிகம் பொருட்படுத்தாதவர் என்ற பெயரும் உண்டு. இந்த குழப்பத்தால் , சபாநாயகர் நடத்தும் கூட்டத்தில் முட்டுக்கட்டை நிலை முடிவுக்கு வரும் வாய்ப்பு உள்ளது.

சி.பி.ஐ., விசாரணைக்கு ஒத்துழைத்தேன்: ராஜா

சி.பி.ஐ., விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டால் பதவி இழந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவிடம், சி.பி.ஐ., கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில் விசாரணை நடத்தியது. அப்போது பல்வேறு தகவல்களை சி.பி.ஐ., திரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், ராஜா நேற்று சென்னை வந்தார். அவர் அளித்த பேட்டி: ஸ்பெக்ட்ரம் தொடர்பாக, சி.பி.ஐ., என்னிடம் கடந்த வாரம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்திய போது, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். சி.பி.ஐ., என்னிடம் நடத்திய விசாரணை குறித்து நான் எதுவும் கூற முடியாது. இது தொடர்பாக சி.பி.ஐ.,யோ மற்ற அமைப்புகளோ என்னை திரும்பவும் விசாரணைக்கு அழைத்தாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். இவ்வாறு ராஜா கூறினார்.

அவரை விடாமல், கார் ஏறும் வரை நிருபர்கள் துரத்தி கேள்விகளை எழுப்பினர். அப்போதும் அசராத ராஜா, வேறு எந்த கேள்விகளுக்கும் நான் பதில் சொல்ல மாட்டேன்'' என தெரிவித்தார். சி.பி.ஐ., விசாரணையின் போது ராஜா முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என, முன்னதாக செய்திகள் வெளியாயின. முன்தேதியிட்டு அவர் ஏன் அலைவரிசை ஒதுக்கீட்டை நிறுவனங்களுக்கு தந்தார் என்ற கேள்விக்கு பதில் சரியாக அளிக்கவில்லை என்று கூறப்பட்டது. அதே சமயம் சில நிறுவனங்கள் பணப் பரிவர்த்தனை விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு கேட்ட கேள்விகள் என்ன, அவற்றை ராஜா சந்தித்தது எப்படி என்னும் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

Monday, December 27, 2010

பார்லிமென்ட் கூட்டுக் குழு

"ஜே.பி.சி.,' என அழைக்கப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்படுவதற்கோ அல்லது அந்த குழு செயல்படுவதற்கோ அல்லது அந்த குழுவை இயக்குவதற்கோ குறிப்பிடத்தகுந்த விதிகள் எதுவும் பார்லிமென்ட் விதிமுறைகளில் கூறப்படவில்லை. பார்லிமென்டின் பிற குழுக்களைப் போல இதுவும் ஒன்று.

இருப்பினும், நாட்டில் அசாதாரண சூழ்நிலை உருவாகும் நிலையிலும், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் என, அனைத்து தரப்பும் ஒப்புக் கொண்டால் மட்டுமே இது அமைக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க வேண்டுமென, எதிர்க்கட்சிகள் அனைத்துமே ஒரே அணியில் திரண்டு கோரிக்கை வைத்துள்ளன. கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடும் அமளியில் இறங்கியதால் பார்லிமென்டின் இரு சபைகளுமே முற்றிலுமாக இயங்க முடியாமல் முடங்கின. இதனால், கோடிக்கணக்கான வரிப்பணம் பாழாகிவிட்டதாக விமர்சனம் எழுந்தாலும்கூட, எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கையை கைவிட கடைசிவரை தயாராக இல்லை. இந்த சூழ்நிலையில், ஜே.பி.சி., என்றழைக்கப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழு எப்படி அமைக்கப்படுகிறது மற்றும் எதற்காக அமைக்கப்பட வேண்டுமென, பார்லிமென்ட் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதா என தேடிப்பார்த்த போது, பல்வேறு புதிய விஷயங்கள் தெரிந்துள்ளன.

மிகவும் அதிமுக்கியமான பிரச்னை குறித்து விரிவான விசாரணையை நடத்த வேண்டுமெனில், இந்த பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்கப்படும். அந்த வகையில், மிகப்பெரிய ஊழல் மற்றும் முறைகேடு ஏற்பட்டு, அந்த ஊழல் அல்லது முறைகேடு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அதுபோன்ற ஒரு அசாதாரணமான சூழ்நிலையாக இருக்கும்பட்சத்தில், பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்படுவது பார்லிமென்ட் நடைமுறையில் வழக்கமாக இருந்து வந்துள்ளது. மேலும் இந்த பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டுமெனில், அதற்கு ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டு தரப்புமே ஒப்புக் கொள்ள வேண்டும். பார்லிமென்டின் மிக முக்கியமான வலுவான, புலன் விசாரணை அமைப்பாக இந்த ஜே.பி.சி., இருந்து வருகிறது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டு தரப்பைச் சேர்ந்த எம்.பி.,க்களும் இந்த பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் உறுப்பினர்களாக அங்கம் வகிப்பர். பார்லிமென்ட் அமைக்கும் பிற குழுக்களில் ஆளும்கட்சி அல்லது ஆளும் கூட்டணி தரப்பைச் சேர்ந்த எம்.பி.,க்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள். இதைப் போலவே, பார்லிமென்ட் கூட்டுக் குழுவிலும் ஆளும் கட்சி எம்.பி.,க்களே அதிக எண்ணிக்கையில் இடம் பெறுவர்.

லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு சபைகளில் இருந்தும் எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த குழுவில் இடம்பிடிப்பர். தவிர மற்ற விஷயங்கள் எப்படியாக இருந்தாலும், பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் தலைவர் பதவியில் மட்டும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்தான் இருப்பார். பார்லிமென்ட் ஜனநாயகத்தில் உள்ள மிகப்பெரிய விசாரணை அமைப்பாக இது இருந்து வந்தாலும், இதற்கென தனியாக விதிமுறைகள் ஏதும் இல்லை. பார்லிமென்டிற்கு என தனிப்பட்ட விதிமுறைகள் இருந்து வருகின்றன. அந்த விதிமுறைகளில் இந்த கூட்டுக் குழுவுக்கென தனியாக எதுவும் வரையறை செய்யப்படவில்லை. பிற வழக்கமான பார்லிமென்ட் நிலைக்குழுக்களுக்கு பொதுவாக என்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அவைதான் இதற்கும் பொருந்தும். கூட்டுக் குழுவை அமைப்பதற்கோ அல்லது அதை செயல்படுத்துவதற்கோ அல்லது இந்த குழுவை இயக்குவதற்கோ எந்தவொரு தனி விதிமுறைகளும் பார்லிமென்ட் விதிகளில் கூறப்படவில்லை. பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைப்பது என முடிவெடுக்கப்பட்டுவிட்டால், அதற்கான தீர்மானத்தை சபையில் அமைச்சரோ அல்லது அவை முன்னவரோ முன்மொழிந்து பேசுவர்.

இந்த பார்லிமென்டின் கூட்டுக் குழு விசாரணை காலத்தை பொறுத்தவரை, இவ்வளவுதான் என எதுவும் வரையறை செய்யப்படவில்லை. இந்த குழுவின் ஆயுட்காலமும் கூட வரையறுக்கப்படவில்லை. இதுதவிர, இந்த குழு யாருக்கு வேண்டுமானாலும் சம்மன் அனுப்பி விசாரிக்கலாம். மிக முக்கிய உயர் அதிகாரிகளை அழைப்பது மற்றும் அரசின் மிக முக்கியமான கோப்புகளையும் கேட்டு வாங்கி சரிபார்க்கலாம். பிற விசாரணை அமைப்புகளை தனது புலன் விசாரணை உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம். இப்படி நிறைய அதிகாரங்கள் இந்த குழுவிற்கு என இருந்தாலும் கூட, விசாரணையின் முடிவில் தண்டனை வழங்கும் அதிகாரமோ அல்ல தீர்ப்பு எழுதும் அதிகாரமோ அளிக்கப்படவில்லை. மாறாக பல்வேறு முக்கியமான பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு இந்த குழு வழங்கிடலாம். அந்த பரிந்துரைகளை அரசாங்கம் கேட்டுத்தான் ஆக வேண்டுமென்பதும் கிடையாது. இருந்தாலும் அந்த பரிந்துரைகளின்படி அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது இதுவரை வழக்கமாக இருந்து வந்துள்ளது.

Sunday, December 26, 2010

பார்லி.யை முடக்கும் கட்சிகளை மக்கள் அடையாளம் காண வேண்டும்:மத்திய அமைச்சர் சிதம்பரம்

பார்லி.யை முடக்கும் கட்சிகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் நடையழகன் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா பாளை. ஜவகர் திடலில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நடையழகன் தலைமை வகித்தார். நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சுந்தரராஜ பெருமாள், கிழக்கு மாவட்ட தலைவர் மோகன் குமார ராஜா, மேற்கு மாவட்ட தலைவர் முத்தையா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது; நாட்டில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏற்படக்கூடிய புரட்சிகள் மாறுபடும். சுதந்திர போராட்டத்தின் போது கட்டபொம்மன், பூலித்தேவன் உட்பட பலர் புரட்சி செய்தனர். சுதந்திர இந்தியாவின் முதல் 10 ஆண்டில் ஏற்பட்ட புரட்சியானது இந்தியாவை இணைப்பது ஆகும்.
நம் நாட்டில் கடந்த 10ஆயிரம் ஆண்டுகளாக தீண்டதகாதவர்கள் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு சம உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு வழங்கப்படாமல் பெரிய அளவில் கொடுமை நிகழ்ந்ததை மறுக்க முடியாது. காந்தி தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டார். அம்பேத்கரை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க முயன்றார். ஆனால் அம்பேத்கர் காங்கிரசில் சேராமல் வெளியில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் சாசனம் மூலம் பாதுகாப்பை ஏற்படுத்தினார். உயர்ந்த, தாழ்ந்த ஜாதி என்ற நிலை தான் தீண்டாமையாகும். அந்த தீண்டாமை இன்னும் ஒழியவில்லை. நாட்டின் பல பகுதியிலும் தீண்டாமை உள்ளது. தீண்டாமை மனதளவில் ஒழியவில்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தீண்டாமையும், ஜாதி பாகுபாடும் முழுமையாக ஒழிய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு கல்வி மற்றும் அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இந்த இரண்டையும் வழங்க காங்கிரஸ் கட்சிதயாராக உள்ளது. கல்வி மட்டுமே மனிதனை பண்படுத்தும், திறமை தரும், மனிதனை மெருகூட்டுகிறது. புதிய சிந்தனையின் ஊற்றாக கல்வி திகழ்ந்து வருகிறது. இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது. பெற்றோர்கள் எந்த தியாகத்தை செய்தாவது ஆண், பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் கடந்த 1947 முதல் 1967ம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. இந்த கால கட்டத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த கக்கனிற்கு முதல்வருக்கு அடுத்த பொறுப்பான போலீஸ் துறை வழங்கப்பட்டது. இதற்கு பிறகு 1967 முதல் 2010 வரை 43 ஆண்டுகள் மற்ற கட்சிகள் ஆட்சி செய்துள்ளன. ஆனால் எந்த கட்சியும் தலித்களுக்கு போலீஸ் துறையை வழங்கவில்லை. மேலும் நிதித்துறை, கல்வி துறை போன்ற அமைச்சர் பதவி கூட வழங்கவில்லை. தலித்களுக்கு அரசியல் அதிகாரம் தரும் கட்சி காங்கிரஸ் கட்சியாகும். நாட்டின் முதல் தலித் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், முதல் தலித் பெண் சபாநாயகர் மீராகுமாரை உருவாக்கியது காங்கிரஸ் கட்சியாகும்.
தலித் மக்கள் எந்த கட்சி அரசியல் அதிகாரத்தை வழங்கியுள்ளது. இனி எந்த கட்சி வழங்கும் என்பதை பார்க்க வேண்டும். கல்வியும், அரசியல் அதிகாரமும் தலித்களுக்கு வழங்கப்பட்டால் தீண்டாமை மட்டுமின்றி, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலையும் ஒழியும். பிளவுபட்ட இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும். இன்னும் நிறைய இளைஞர்கள் காங்கிரசில் சேர வேண்டும். வாருங்கள் பதவி தருகிறோம். ஆசனத்தில் அமர்ந்து பொறுப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். வடகிழக்கு மாநில மக்கள், முஸ்லிம்கள், காஷ்மீர் மக்கள், பழங்குடியின, தலித் மக்கள், பெண்கள் போன்றோரை ஒதுக்கி வைத்தால் நாடு வல்லரசாக முடியாது. இன்னும் 100 ஆண்டுகள் கடந்தாலும் வல்லரசு ஆகாது. அனைவருக்கும் அரசியல் அதிகாரம், கல்வி வழங்கினால் மட்டுமே நாடு வல்லரசாகும். இந்த பணியை தான் காங்கிரஸ் செய்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். எந்த ஒரு பகுதி மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கருதுகின்றனரோ அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பது எனது அமைச்சகத்தின் கடமையாகும். பாஜ., ஒரு பகுதியிலும், கம்யூனிஸ்ட்கள் ஒரு பகுதியிலும் நிற்கிறது. ஆனால் காங்கிரஸ் மட்டுமே நடுநிலையோடு ஏழை, தலித், முஸ்லிம், பழங்குடியின மக்களை பார்த்து நிற்கிறது. சமீபத்தில் தவறு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக பிரதமரோ, சோனியாவோ ஓடி ஒளியவில்லை. குற்றம் நிரூபிக்கப்படவில்லை. வழக்கு பதியவில்லை. குற்றவாளி என தீர்ப்பு இல்லை. தண்டிக்கப்படவில்லை. இருப்பினும் முதல்வர்கள், அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அதிகாரிகளின் அதிகாரம் பறிக்கப்பட்டது. இதுகுறித்து சிபிஐ., வருமான வரித்துறை, நீதிபதி சிவராஜ் பாட்டீல் குழு, பொது கணக்கு குழுஉட்பட 5 குழுக்கள் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது. ஆனால் பாஜ., பார்லியை முடக்கி வைத்துள்ளது. இதனால் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா, பயங்கரவாததடுப்பு சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களை பார்லியில் நிறைவேற்ற முடியவில்லை. புதிய சட்டங்கள் நிறைவேறினால் தான் பாதுகாப்பை அதிகரிக்க முடியும். எனவே பார்லியை முடக்கும் கட்சிகளை மக்கள் அடையாளம் காண வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசினார். முன்னதாக நடையழகன் தலைமையில் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இளைஞர்கள் ஏராளமானோர் சிதம்பரம் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். கூட்டத்தில் எம்பிக்கள் அழகிரி, விஸ்வநாதன்,எம்எல்ஏக்கள் சுந்தரம், கந்தசாமி, செல்வப்பெருந்தகை மற்றும் வானமாமலை, ராகுல் காந்தி ரத்ததான கழக பிரம்மா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜோதிராஜ் நன்றி கூறினார்.

ஸ்பெக்ட்ரம் இழப்பின் மதிப்பிற்கு மூன்று ஆதாரங்கள்

"2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தணிக்கை அதிகாரியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இழப்பின் மதிப்பு அனுமானம் அல்ல. அது யூகத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டதல்ல என்பதற்கு மூன்று ஆதாரங்கள் உள்ளன' என்று, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உலக வரலாற்றில் இதுவரை நடந்திராத அளவுக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை நான் பூதாகரமாக ஆக்குவதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்த ஊழலே பூதாகரமான ஊழல் தான்; இதை யாரும் பூதாகரமாக்கத் தேவையில்லை. கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டபோது, ஏற்கனவே ராஜா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்ததால், அவருக்கு தொடர்ந்து அந்த துறை ஒதுக்கப்பட்டதே தவிர, அதில் தி.மு.க., பிடிவாதமாக இல்லை என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார். கருணாநிதியின் இந்த கூற்று, "முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்' அமைந்துள்ளது.அந்த காலகட்டத்தில், டில்லியில் இருந்து சென்னை வந்து, "வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம்' என்ற முடிவை தி.மு.க., எடுத்ததற்கான காரணம் என்ன? இதற்குக் காரணம் வளம் கொழிக்கும் இலாகாக்கள் கிடைக்காதது தான் என்பதும், தி.மு.க., கேட்ட வளம் கொழிக்கும் இலாகாக்களை தருகிறேன் என்று பிரதமர் சொன்ன பிறகு தான் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றனர் என்பதும் ஊரறிந்த விஷயம்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில், "முதலில் வருபவருக்கு முதலில் தருவது' என்ற முந்தைய கோட்பாட்டைக் கூட ராஜா பின்பற்றவில்லை. "தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தருவது' என்ற கோட்பாட்டைத் தான் கடைபிடித்துள்ளார்.தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு, ஆயிரக்கணக்கான ஏழைகளின் விவசாய நிலங்கள் அமைச்சர்களாலும், தி.மு.க.,வினராலும் அபகரிக்கப்பட்டுள்ளன. இந்த நில அபகரிப்புகளை கருணாநிதி வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்."2ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பு அனுமானத்தின் அடிப்படையில் தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது' என்று, கருணாநிதி கூறியுள்ளார். ஆனால், தணிக்கை அதிகாரியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இழப்பின் மதிப்பு அனுமானம் அல்ல; அது யூகத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டதல்ல என்பதற்கு மூன்று ஆதாரங்கள் உள்ளன."எஸ்-டெல்' என்ற நிறுவனம் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விலை கொடுத்து அலைக்கற்றை உரிமத்தை வாங்க முன்வந்தது. ஆனால், 2001ல் நிர்ணயிக்கப்பட்ட 1,650 கோடி ரூபாய்க்கு உரிமங்களை ராஜா விற்றார். அதன் அடிப்படையில் இழப்பின் மதிப்பு கணிக்கப்பட்டுள்ளது."ஸ்வான்' என்ற, "லெட்டர்பேடு' நிறுவனம் 1,650 கோடி ரூபாய்க்கு உரிமங்களை வாங்கியது. அந்நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை, "இடிசலட்' (ETISALAT) என்ற நிறுவனத்திற்கு, சில நாட்களுக்கு பின் 9,000 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது.

இதே போன்று, "யுனிடெக்' என்ற, "லெட்டர்பேடு' நிறுவனம் தனது 60 சதவீத பங்குகளை, "டெலிநார்' (TELENOR) என்ற நிறுவனத்திற்கு 6,120 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது. அந்த விலைக்கு அரசே கொடுத்திருந்தால், அந்த லாபம் மத்திய அரசுக்கு கிடைத்திருக்கும். அதன் அடிப்படையில் இழப்பின் மதிப்பு கணிக்கப்பட்டுள்ளது.அண்மையில் "3ஜி' ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. "2 ஜி' ஸ்பெக்ட்ரம் இதை விட அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இதே விலைக்கு "2 ஜி' ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டிருந்தால், மத்திய அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைத்திருக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலுமே இழப்பின் மதிப்பு கணிக்கப்பட்டுள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் பயன்பாடு இன்னும் அதிகம் என்பதால், தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை விட இழப்பின் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஜெகனின் "வெடி'க்கு காங்கிரஸ் உடையுமா?

ஆந்திராவில், கடப்பா தொகுதி முன்னாள் எம்.பி.,யும், ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டி, காங்கிரசுக்கு எதிராக மேற்கொண்டுள்ள எதிர்ப்பு பிரசாரம், மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி அமைச்சரவையில் தாக்கத்தை ஏற்படுத்துமா, புதிய கட்சி துவக்கினால், தற்போது ஆதரவு தெரிவிக்கும் 21 எம்.எல்.ஏ.,க்கள், ஜெகன் பக்கம் வருவார்களா என்ற கேள்வி, அரசியல் பார்வையாளர்களின் மனதில் எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், ஆந்திராவின் மையப் பகுதியான விஜயவாடாவின் கிருஷ்ணா நதிக்கரையில், விவசாயிகளுக்கு ஆதரவு குரல் கொடுக்க, 48 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார் ஜெகன் மோகன் ரெட்டி. தனக்கு ஆதரவாக கூடியிருந்த லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே அப்போது உரை நிகழ்த்தினார். அவரது அனல் பறக்கும் பேச்சின் போது, அகில இந்திய காங்கிரஸ் தலைமை, மாநிலத்தை ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிரான கருத்துக்களை அள்ளி வீசினார்.

தன் தந்தை ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலத்தை பொற்காலமாக புகழ்ந்து பேசிய அவர், தன்னை ஆந்திர மக்களின் எதிர்கால (முதல்வராக) தலைவராக அடையாளம் காட்டும் விதமாக ஆவேச முழக்கமிட்டார். "மூன்றரை ஆண்டு காத்திருங்கள்; பின்னர் நீண்ட காலம் ஆட்சி ஆளும் பொற்காலம் மலரும்' என, மறைமுகமாக, அடுத்த முதல்வராக நினைத்துக் கொண்டு, தன் புதிய அரசியல் கட்சி அறிவிப்புக்கு ஒரு அச்சாரமாக உண்ணாவிரதத்தை பயன்படுத்திக் கொண்டார். ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி ஆட்சியின்போது, அவரது ஆதரவால் வெற்றி பெற்று, அவருக்கு விசுவாசமாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் 21 பேரும், நான்கு எம்.எல்.சி.,க் களும், இரண்டு எம்.பி.,க்களும் உண்ணாவிரதம் இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ஜெகன் மோகன் ரெட்டி புதுக்கட்சி துவக்கினால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், கட்சியில் பதவி பொறுப்பு கிடைக்கும் என, நம்பப்படுகிறது.

அதனால், நடிகை ரோஜா உட்பட, தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சிலரும், ஜெகனின் உண்ணாவிரத மேடையில் தோன்றி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். புதுக்கட்சி துவக்கினால் எத்தனை எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் தனக்கு பின் அணிவகுப்பார்கள், முன்னர் ரோசய்யாவிற்கு ஆதரவு காட்டியவர்கள், இப்போது, முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கும் ஆதரவளிப்பார்களா அல்லது பதவி பறிபோனாலும் போகட்டும் என காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவார்களா என்ற தன் அரசியல் வியூகத்தை பகிரங்கமாக அறியவே, ஜெகன் மோகன் ரெட்டி, விவசாயிகளுக்கு ஆதரவு என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார் என, ஆளும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் விமர்சித்துள்ளனர். ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பின், ஆந்திராவில் முதல்வர் பதவியை எதிர்பார்த்த ஜெகன்மோகன் ரெட்டி, அந்த பதவி எட்டாக் கனியாகி விட்டதால், தன் மீடியா (சாக்ஷி தினசரி சேனல்) பிரசாரம் மற்றும் தன் பார்வையில் உள்ள பல்வேறு வகையான தொழில்களின் பங்குதாரர் என்ற பணபலத்தின் வாயிலாகவும், முதல்வராக இருந்த ரோசய்யா, பதவியை ராஜினாமா செய்து வீடு திரும்பும் வரை தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார்.

இனியும் ஜெகனின் ருத்ர தாண்டவம் தொடரக் கூடாது என்பதற்காகவே, கிரண் குமார் ரெட்டியை முதல்வராக காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது. தற்போது சட்டசபையில் காங்கிரசின் பலம் 155 ஆக உள்ளது. தெலுங்கு தேசம் கட்சிக்கு 98 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியில், 18 பேர் மற்றும் டி.ஆர்.எஸ்., கட்சிக்கு 11 பேர் உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் மதில்மேல் பூனையாக, 21 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஜெகன் புதிய கட்சி ஆரம்பித்தால், அவர்கள் அவர் பக்கம் சாய வாய்ப்பு உள்ளது. அப்படி சாய்ந்தால், அவர்களுக்கு எதிராக கட்சித் தாவல் தடைச் சட்டப்படி நடவடிக்கை பாயலாம். அப்படி எடுக்கும்போது, கிரண்குமார் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்படலாம். அதனால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அவசரப் பட்டு எந்த முடிவையும் எடுக்காது என, நம்பப்படுகிறது. ஜெகன் புதிய கட்சி துவக்கட்டும், அதன் பிறகு பார்க்கலாம் என்ற நினைப்பில் உள்ளது. ஜெகனின் அடுத்த (புதிய கட்சி) வெடிக்கு, ஆளும் காங்கிரஸ் உடையுமா அல்லது தற்போதைய நிலை தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் ராகுலின் சிந்தனை

தமிழகத்திற்கு முதல் முறையாக ராகுல் வரும் போது, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்திற்காக வந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஆளுமை திறன் பயிற்சி கொடுப்பதற்காக, இரண்டாவது முறை வந்தார். அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் எண்ண ஓட்டங்களை அறிய மூன்றாவது முறையாக தற்போது ராகுல் வந்துள்ளார்.

இந்த பயணத்தின் மூலம் தான் உருவாக்கிய படையான, இளைஞர் காங்கிரசின் உணர்வுகளை பதிவு செய்து போயிருக்கிறார் ராகுல். தலைமைக்கு தலையாட்டுவது தங்கள் வேலையல்ல என்பது போல், உள்ளபடியே, துணிச்சலாக பல கருத்துக்களை ராகுலுக்கு தெரிவித்துள்ளனர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்.சென்னை வானகரத்தில் நடந்த கூட்டத்தில், "தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை பிடித்துள்ளதா? பிடிக்கவில்லையா?' என்ற கேள்வியை ராகுல் கேட்கவும், "பிடிக்கவில்லை' என மாநில தலைவர் யுவராஜா ஆதரவாளர்கள், "கை' தூக்கி பதிலளித்து பரப்பரப்பை ஏற்படுத்தினர்.அதே சமயம் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்கள் தி.மு.க., கூட்டணியை பிடிக்கவில்லை என்ற பதிலை கூறவில்லை.சென்னை விமான நிலையத்தில் முன்னாள் துணை மேயரும், சிதம்பரத்தின் ஆதரவாளருமான கராத்தே தியாகராஜன், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க வேண்டும் என்ற கருத்தை ராகுலிடம் வலியுறுத்தினார். இளைஞர் காங்கிரசில் கூட்டணி குறித்து இருவேறு கருத்துகள் நிலவுவதை இது வெளிப்படுத்தியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்னை நாடு முழுவதும் புயலாக வீசும் போது, தமிழக சட்டசபை தேர்தலை தி.மு.க., கூட்டணியுடன் எப்படி சந்திக்க முடியும்? அப்படி தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால், ஊழலில் காங்கிரசுக்கும் பங்கு உள்ளது என்ற விமர்சனம் எழும். இதனால் தேர்தல் முடிவு காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது, இளைஞர் காங்கிரசின் ஒரு தரப்பு கருத்தாக உள்ளது.

பெங்களூரு கோர்ட்டில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, சசிகலா மீதும் சொத்து குவிப்பு வழக்கு நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை வெளிநாட்டுக்காரர் என சரத்பவார், சங்மா போன்ற தலைவர்கள் கருத்து தெரிவித்து, பின் வருத்தமும் தெரிவித்தனர். சோனியாவை தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா விமர்சனம் செய்தது குறித்து, அவர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கும் போது அ.தி.மு.க.,வுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும் என்பது மற்றொரு தரப்பின் கருத்தாக உள்ளது. மொத்தத்தில் இரு கோஷ்டிகளின் குரலையும் கேட்டு, குழம்பி போய் ராகுல் திரும்பியுள்ளார் என்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.

இதுகுறித்து, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:"இளைஞர் காங்கிரசை சேர்ந்த ஒருவர் நாளை முதல்வராகலாம்' என, ராகுல் கூறியுள்ளார். 40 ஆண்டு காலமாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி இல்லை. ஆனால், இளைஞர் காங்கிரசில் 13 லட்சம் பேர் உறுப்பினராக உள்ளனர். இளைஞர் காங்கிரசார் மீது அசைக்க முடியாத நம்பிக்கை ராகுலுக்கு ஏற்பட்டுள்ளது.இளரத்தமும், புதிய உறுப்பினர்களும் 80 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களை வைத்து 2016ம் ஆண்டில் தனித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது ராகுலின் புது உத்தி. அதனால் தான் தமிழகத்தை ஐந்து மையங்களாக பிரித்து ஆதிதிராவிடர், மகளிர் நிர்வாகிகளை தனியாக சந்தித்து கருத்து கேட்டு அவர்களுக்கு புத்துணர்ச்சி வழங்கவும், சொந்த மண்ணில் அவர்களின் எண்ணங்களை அறிய வேண்டும் என்பதற்காக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை ராகுல் சந்தித்து பேசினார்.

கடந்த 1996ல், தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வேண்டாம் என ஒட்டுமொத்த காங்கிரசாரின் கருத்தாக இருந்தது. தொண்டர்களின் உணர்வுகளுக்கு எதிராக, மேலிடம் கூட்டணி வைத்ததால் த.மா.கா., உருவாகியது. தற்போது அப்படியொரு சூழ்நிலை உருவாகவில்லை. இளைஞர் காங்கிரசில் பெரும்பான்மையானவர்கள் தி.மு.க., கூட்டணியை விரும்பவில்லை. ஆனால், "கூட்டணி குறித்த முடிவை சோனியா எடுப்பார்' என்று ராகுல் திரும்ப, திரும்ப தெரிவித்து வருகிறார். எனவே, கூட்டணியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பில்லை.அதோடு, இளைஞர் காங்கிரசார் மட்டுமே கட்சி அல்ல. காங்கிரசில் வட்டார, மாவட்ட வாரியாக செல்வாக்குடன் உள்ள தலைவர்களின் செயல்பாடு தான் தேர்தல் பணிக்கு உதவியாய் இருக்கும். எனவே, அனுபவம் வாய்ந்த அவர்களது கருத்துக்களையும் ராகுலே கேட்டறிய வேண்டும். அப்போது தான், தமிழக அரசியல் நிலை குறித்து அவருக்கு ஒரு தெளிவான பார்வை கிடைக்கும்.இவ்வாறு காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினர்.

கக்கனை தெரியாத காங்கிரசார்! திருநெல்வேலியில் இளைஞர் காங்கிரசின் தலித் பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் 20 பார்லிமென்ட் தொகுதிக்கு உட்பட்டவர்கள் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட ஒன்றிரண்டு தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்றனர். 3,600 பேர் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விழா நடந்த அரங்கமே 1,500 பேர் தான் அமர முடியும் என்பதால், ஆரம்பத்தில் போலீசார் கெடுபிடியுடன்சோதனைக்கு பின்னர் அனுப்பினர். ராகுல் வரும் வரையிலும், அரங்கம் நிறையாததால் 60 வயதை கடந்த இளைஞர் காங்கிரசாரையும் உள்ளே அனுப்பி வைத்தனர்.
* ராகுலின் ஆங்கிலப் பேச்சு ஆக்ரோஷமாகவும், விழிப்புணர்வு தருவதாகவும் இருந்தது. ஆனால், மொழிப் பெயர்த்தவரோ தமது இஷ்டத்திற்கு தப்பும், தவறுமாக மொழி பெயர்த்தார். இதனால், ராகுல் பேச்சின் உண்மையான அர்த்தம், தமிழ் மட்டுமே தெரிந்த தொண்டர்களுக்கு போய் சேரவில்லை.
* விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் கக்கன் படத்திற்கு, ராகுல் மாலையணிவித்தார். இளைஞர் காங்கிரசின் தலித் பிரதிநிதிகள் பலருக்கும், அந்த படத்தில் இருப்பது யார் என்றே தெரியவில்லை..

Wednesday, December 22, 2010

தமிழ்நாட்டில் காங். ஆட்சியை பிடிக்க உழைக்க வேண்டும்: சென்னையில் ராகுல்காந்தி பேச்சு


தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி இன்று சென்னை வந்தார். காலை 9.58 மணிக்கு அவர் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.

அவரை காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 56 தலைவர்கள் சால்வை கொடுத்து வர வேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் காலை 10.20 மணிக்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்னை வானகரம் புறப்பட்டார்.

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபம் அருகே ஹெலிபேடு தளம் அமைக்கப்பட்டிருந்தது. காலை 10.35 மணிக்கு ராகுல்காந்தி வானகரம் வந்தார். ஹெலிபேடு தளத்தில் இருந்து அவரை அழைத்துச் செல்லகார் தயாராக நின்றது. ஆனால் அவர் அதில் ஏறாமல் திருமண மண்டபத்துக்கு நடந்தே சென்றார்.

திருமண மண்டபத்துக்குள் நுழைந்ததும் நிர்வாகிகள் அவரை கைதட்டி வரவேற்ற னர். “நடப்போம் நடப்போம் ராகுல் வழியில் நடப்போம். அமைப்போம் அமைப்போம் காமராஜர் ஆட்சி அமைப்போம்” என்று கோஷம் எழுப்பினார்கள்.

அதன் பிறகு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் 8 பாராளு மன்ற தொகுதிகளான வட சென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும் புதூர், வேலூர், அரக்கோ ணம் பாராளுமன்ற தொகுதி யைச்சேர்ந்த தேர்ந்தெடுக்கப் பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜூசத்வே, தமிழக பொறுப்பாளர் பிரியம்வர்சிங், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜிதேந்தர்சிங் எம்.பி., தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ஆகியோர் பேசினார்கள்.

இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மத்திய சென்னை ராம்குமார், தென் சென்னை ஜேம்ஸ் பிரகாஷ், வடசென்னை ஆனந்த், வேலூர் பழனி, அரக்கோணம் ராஜேஷ், ஸ்ரீபெரும்புதூர் அருவிபாபு, திருவள்ளூர் தர்மபிரகாஷ், காஞ்சீபுரம் புருஷோத்தமன், துணை தலைவர்கள் ஆர்.வி. ரஞ்சித் குமார், வடசென்னை சுரேஷ், பொதுச்செயலாளர் பி.வி. தமிழ்ச்செல்வன், அனுராதா அதி, கோடம்பாக்கம் ஸ்ரீ மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற கிராம பஞ்சாயத்து தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதா வது:-

நடந்து முடிந்த தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் என்பது வரலாற்று திருப்பு முனை என பணிவோடு கூறிக்கொள்கிறேன். இளைஞர் காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக பஞ்சாயத்து தலைவர்கள் உறுப்பினர்களை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.

என்னைப் பொறுத்தவரை பஞ்சாயத்து தலைவர்களின் பணி மிக முக்கியமானது. அவர்கள் மக்களோடு ஒன்றி பழகினால் கட்சி மேலும் வலுவடையும். காங்கிரசில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

இங்கே பஞ்சாயத்து அளவில் பெண்களும் வந்துள்ளனர். அவர்களை வர வேற்கிறேன். தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய அளவில் காங்கிரசில் இளைஞர்கள் முன்னிலைப் படுத்துப்படுவதை காண்கிறேன். என்னைப்பார்த்து தற்போது நிறைய பேர் கேட்பது என்னவென்றால் நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க கட்சியான காங்கிரசில் இளைஞர்களை எப்படி ஈர்த்தீர்கள் என்று கேட்கிறார்கள். இதற்கு நீங்கள்தான் காரணம்.

எதிர்காலத்தில் வலிமையான இந்தியா உருவாக இளைய தலைமுறையை உருவாக்கினால் மட்டுமே முடியும். காங்கிரசின் கதவு இளைஞர்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இன்று எங்குபார்த்தாலும் காங்கிரசில் இளைஞர்களை பார்க்க முடிகிறது. இளைஞர்களை காங்கிரசில் சேர்த்தால் மட்டும் போதாது. அவர்களின் கருத்தை கேட்டு வாய்ப்பு வழங்கவேண்டும். மதிப்பும் கொடுக்க வேண்டும். இளைஞர் காங்கிரசாரின் பங்கு ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தையும் சக்தி வாய்ந்த தாக மாற்ற வேண்டும். அப் போதுதான் காங்கிரஸ் வளரும்.

இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வருகிறது. இது முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் இளைஞர் காங்கிரசாருக்கு முக்கிய கடமை, பொறுப்பு உள்ளது. நாம் எந்த அளவுக்கு உழைக்கிறோமோ அந்த அளவுக்கு வெற்றியை பெற முடியும். இந்த தேர்தலுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வரும். அதில் இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்களுக்கு அதிகவாய்ப்பு வழங்கப்படும்.

உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்கள் அதிகம் பங்கேற்று வெற்றி பெற்றால் உங்கள் பணி சிறப்பான தாக அமையும். கட்சிக்கும் அடித்தளம் சிறப்பாக அமையும். தமிழக மக்கள் மீது நானும் என் குடும்பத்தாரும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம். தமிழக மக்கள் ஒரு நிலைப் பாட்டை எடுப்பதாக இருந்தால் அது நல்லதாக இருக்கும். இங்கே நான் உங்களை வாழ்த்துகிறேன்.

முக்கியமான கருத்தையும் சொல்கிறேன். தமிழக காங்கிரசில் இளைஞர்களுக்காக கதவுதிறந்தே உள்ளது. காங்கிரசில் இளைஞர்கள் இணைய வேண்டும். அப்போதுதான் இளைஞர் காங்கிரஸ் அதற்கான வளர்ச்சி பாதையில் செல்லும். அந்த நம்பிக்கையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். அதன் மூலம் அரசியல் மாற்றம் வரவேண்டும் என்றும் எண்ணுகிறேன்.

ஒவ்வொரு இளைஞர் காங்கிரசாரின் உழைப்பு அவரை மதிப்புடையதாக ஆக்கும். உண்மையான உழைப்பு என்பது அது எந்த அமைப்பு தலைவராக இருந்தாலும், மக்களுடன் எந்த அளவுக்கு ஒன்றி போகிறார்கள் என்பதை பொறுத்து அமைகிறது. எதிர்கால தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை எங்கிருந்து வரவேண்டும் என்றால் அது இளைஞர் காங்கிரசின் மூலமாகவும் வர வேண்டும்.

தமிழகத்தில் மட்டும் இது போதாது. அகில இந்திய அளவிலும் நீங்கள் பதவிக்கு வரவேண்டும். தமிழகத்தை பொறுத்த வரை நாம் எடுக்கும் முயற்சி கொஞ்சமல்ல. 40 ஆண்டு காலமாக தமிழகத்தில் காங் கிரஸ் ஆட்சி இல்லை. இங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உழைப்பு அதிகம் தேவை. இதற்கான சவால்களை எதிர் கொள்ளவேண்டும். அது உங்கள் கையில்தான் உள்ளது. நாம் வருங்காலத்தில் ஆட்சியைபிடிக்க முடியும். எதிர்காலத்தில் இளைஞர் காங்கிரசை சேர்ந்த இங்குள்ள யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் பதவியை அடைய முடியும்.

வருங்காலத்தில் முதல்வராகும் தகுதி உங்களுக்கு உள்ளது. இதற்கு நாம் நிறைய உழைக்க வேண்டும். இதற்காக மெதுவாக முயற்சி எடுத்தாலும் கவலைப்படக் கூடாது. இலக்கை அடைய தொடர்ந்து செயல்பட வேண்டும். 6 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். பதவியை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன். நாம் மக்க ளோடு ஒன்றி பழக வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்பு களை நிறைவேற்ற முடிந்த அளவு சேவை செய்ய வேண்டும். எனவே மக்களோடு ஒன்றிப் பழகுங்கள். மக்கள் ஆதரிக்கும் தலைமைதான் நீடிக்கும்

இந்த முயற்சியை உருவாக்க சிலகாலம் ஆகலாம். ஆனால் நாம் உறுதியாக வெற்றி கொள்வோம். பஞ்சாயத்து அளவில் வெற்றி பெற்றால் அடுத்து சட்டசபை, பாராளுமன்றம் என்று முன்னேற முடியும். இன்று காங்கிரசுக்கு புதிய சக்தி பிறந்துள்ளது. இந்த கூட்டத்தின் மூலம் மிகப் பெரிய சக்தியை எதிர்பார்க்க முடியும். அதை உங்கள் மூலம் காண்கிறேன்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

Monday, December 20, 2010

அடுத்த 10 ஆண்டுகளுக்கு பா.ஜ., ஆட்சிக்கு வராது: சிதம்பரம்

அடுத்த 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலும் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். டில்லியில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டில் இது குறித்து அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது: பாரதிய ஜனதா கட்சி 2004 மற்றும் 2009ல் நடந்த தேர்தலில் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஒரு முறை ஆட்சியை இழந்தாலும் மறுமுறை காங்கிரசால் ஆட்சியைப் பிடிக்க முடிகிறது. அடுத்த 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலும் பாரதிய ஜனதா கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தான் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும். ஆட்சிக்கு எப்படி வர வேண்டும் என்ற வழிமுறை காங்கிரசுக்கு தெரியும். ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த பாரதிய ஜனதா அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வி கண்டுவிட்டது. இதனால், காங்கிரஸ் கட்சியைப் பார்த்து அது எரிச்சல் அடைகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி ஐந்தாண்டில் சராசரியாக 5.8 சதவீதமாக இருந்தது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி 8.5 சதவீதமாக உள்ளது. கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்காக மத்திய அரசு, மாநிலங்களுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

பல்வேறு மாநிலங்கள் நிதி பற்றாக்குறை உள்ளதாக கூறுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் அனைத்து மாநிலங்களின் நிதி நிலையை ஆராய்ந்த போது, 95 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருப்பு வைத்துள்ளன. இவ்வளவு நிதியை வைத்துக் கொண்டு நிதி இல்லை என கூற முடியுமா? நிதியில்லாமல் இல்லை. இருக்கும் நிதியை பயன்படுத்த பல மாநிலங்களுக்கு தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி அல்லது மற்ற கட்சி ஆளும் மாநிலங்களானாலும் சரி, நிதியை பயன்படுத்தும் முறையை தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து அமைச்சர்கள் தங்கள் துறை தொடர்பான செயல்பாடுகளை மூன்று மாதத்துக்கு ஒரு முறை பிரதமரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதே போல, மத்திய அரசின் ஆறு மாத செயல்பாடுகளை காங்கிரஸ் தலைவர் சோனியா ஆராய வேண்டும். இவ்வாறு சிதம்பரம் பேசினார்.

சட்டசபை தேர்தல் பணிகளை ஆரம்பியுங்கள்: தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு உத்தரவு

"தமிழகத்தில் காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து, இப்போதே தேர்தல் பணியை துவங்கிட வேண்டும். மாவட்ட தலைவர்கள் மாற்றம் குறித்து விரைந்து செயல்பட்டு, புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க வேண்டும்' என, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறினார். "தமிழகத்தில் கூட்டணி குறித்து இப்போதைக்கு புதிய முடிவு எதுவும் எடுப்பதாக உத்தேசம் இல்லை' என்றும் அவர் கூறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டில்லியை அடுத்த புராரியில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று முன்தினம் காலை உரையாற்றினார். பின்னர் மதியம் 3 மணிக்கு, மேடைக்கு பின்னால் அமைக்கப்பட்டிருந்த சோனியாவின் அறைக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். அகில இந்திய மாநாடு நடைபெறும் போது, மாநில தலைவர்களை காங்கிரஸ் தலைவர் சந்திப்பது வழக்கமான ஒன்று. அந்த அடிப்படையில் அமைந்த இந்த சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது. தமிழக காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் உடனிருக்க, சிதம்பரம், வாசன், இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் சோனியாவை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் தி.மு.க.,வுடனான கூட்டணி குறித்து ஏதாவது பேசப்படும் என்று அனைத்து தரப்புமே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சந்திப்பின் ஆரம்பத்திலேயே குலாம் நபி ஆசாத், ""நீங்கள் எல்லாரும் எதைப் பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்று தெரியும்; அதைப் பற்றி இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம். இனி வரும் நாட்களில் சூழ்நிலைக்கு ஏற்ப அது குறித்து என்ன முடிவெடுக்க வேண்டுமென்பதை மேலிடம் பார்த்துக் கொள்ளும்,'' என்றார்.

இதையடுத்து பேசிய சோனியா, ""தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அங்கு கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டியது முக்கியம். அதற்கு இப்போதே பணிகளை துவக்கிட வேண்டும். காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து, இப்போதிருந்தே தேர்தல் பணிகளை முடுக்கி விட, முக்கிய தலைவர்கள் முயற்சிக்க வேண்டும். மாவட்ட தலைவர்கள் நியமனம் நடைபெறாமல் இருப்பது சரியானது அல்ல. புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்தை விரைவாகச் செய்திட வேண்டும். அது முடிந்துவிட்டால், பிறகு மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து மேலிடம் முடிவு செய்யும். எனவே, மாவட்ட தலைவர்கள் நியமனத்தில் தாமதம் கூடாது,'' என்றார்.

அதன் பின்னர் ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தனர்.

அதில் வாசன் கூறும் போது, ""தமிழகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ஒருவித அதிருப்தி உள்ளது. அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளது. எனவே, அனைத்து மாவட்ட தலைவர்களையும் மாற்றாமல், காலியாக உள்ள பதவிகளை மட்டும் நிரப்புவதே நல்லது,'' என்றார்.

சிதம்பரம் பேசும் போது, ""கட்சியின் விதிமுறைகளின்படி தேர்தல் நடந்தால், மாநில தலைவர், மாவட்ட தலைவர்கள் என, அனைவரது பதவியும் தானாகவே காலியாகிவிட்டது என்றே அர்த்தம். அப்படி பார்த்தால், இப்போது பதவியில் யாருமே இல்லை என்பதே பொருள். எனவே, எல்லா பதவிகளுமே நியமிக்கப்பட வேண்டும். கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்சும் வகையில் மாவட்ட தலைவர்களாக புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.

இளங்கோவன் பேசும் போது, ""2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது தமிழகத்து பிரச்னை அல்ல; இந்தியா முழுவதும் உள்ள பிரச்னை. எனவே, அந்த வகையில் இதை அணுக வேண்டும். தமிழகத்தில் கூட்டணி குறித்த தனது முடிவை, காங்கிரஸ் மேலிடம் பரிசீலனை செய்ய வேண்டும். தே.மு.தி.க., - பா.ம.க., - கொங்கு பேரவை உள்ளிட்ட கட்சிகளை இணைத்துக் கொண்டு காங்கிரஸ் புதிய அணி காண முயற்சி செய்ய வேண்டும்,'' என்றார்.

பிரபு பேசும் போது, ""சிறிய கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைமை தாங்கினால், அந்த கட்சிகளை தேவையில்லாமல் தமிழகத்தில் வளர்த்துவிட்டது போலாகி விடும். அக்கட்சிகளுக்குத் தான் நன்மையே தவிர, காங்கிரசுக்கு எந்த பயனும் இல்லை,'' என்றார்.

மணிசங்கர் அய்யர் பேசும் போது, ""கடந்த முறையைப் போல இல்லாமல் இந்த முறை தி.மு.க.,வுடன் தேர்தலுக்கு முன்னரே ஒப்பந்தம் போட வேண்டும். ஆட்சியில் பங்கு என்ற அந்த ஒப்பந்தம் இருந்தால் தான் காங்கிரசுக்கு நல்லது,'' என்றார்.

இந்த கூட்டம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறும்போது, ""தமிழகத்தில் தி.மு.க.,வுடனான கூட்டணி குறித்து ஏதாவது பேசி முடிவெடுக்கப்படும் என்று தான் முதலில் எதிர்பார்க்கப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே இதைப் பற்றி பேசக் கூடாது என குலாம் நபி கூறிவிட்டார். இளங்கோவன் போன்றவர்கள் துணிந்து இதைப் பற்றி பேசியும் பலனில்லை. பீட்டர் அல்போன்சையும், தங்கபாலுவையும் வைத்துக் கொண்டு தி.மு.க.,வுடனான கூட்டணி குறித்து சுதந்திரமாக எப்படி சோனியாவிடம் கருத்து தெரிவிப்பது என்பதாலேயே பலரும் அதைப் பற்றி முக்கியமாக பேசவில்லை,'' என்று தெரிவித்தன.

கூட்டம் முடியும் தறுவாயில் சோனியாவிடம் சென்ற சில தலைவர்கள், "தி.மு.க.,வுடன் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படாத நிலையில், பிரதமர் அடுத்த மாதம் தமிழகத்துக்கு வர வேண்டாம்' என கேட்டுக் கொண்டதாகவும், அது குறித்து பரிசீலிப்பதாக சோனியா கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதி, சோனியாவை விமர்சிக்காதே என அறிவுறுத்தினார் பிரபாகரன்! - சீமான்

கருணாநிதி, சோனியா காந்தி போன்ற தலைவர்களை தாக்கிப் பேசி வருத்தம் கொள்ள வைக்காதே என்று எனக்கு அறிவுரை கூறினார் தலைவர் பிரபாகரன் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.

இதுகுறித்து, ஜூனியர் விகடன் புலனாய்வு இதழில் சீமான் எழுதியிருப்பதாவது:

"கடந்த ஜூலை 10-ம் தேதி... மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் பேசிவிட்டு, வீட்டுக்கு வந்தேன். காவல்துறையில் இருக்கும் நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. ''அடிபட்ட மீனவர்களில் ஒருவராக நீங்கள் அலறியதுபோல் இருந்தது உங்கள் பேச்சு.

அதேவேளை, அரசு வேறு விதமாக யோசிக்கிறது. உங்களின் பேச்சைவைத்து மீள முடியாத அளவுக்கு வலுவான வழக்காக இருக்கும். என்ன காரணத்தினாலோ, முதல்வர் உங்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். நீங்கள் அவரைப்பற்றி ஆவேசமாகப் பேசுவதை எல்லாம், அவர் கவனத்துக்குக் கொண்டுபோய் சேர்த்து இருக்கிறார்கள். முதல்வரின் கோபத்தைத் தணிக்கும் விதமாக வழக்குகளைப் போட வேண்டும் என்பதுதான் உளவுத்துறையின் உத்தேசம்!'' என்றார் அந்தக் காக்கி நண்பர்.

அவர் மட்டும் அல்ல... அரசியலில் இருப்பவர்கள் தொடங்கி என் அடிமட்ட அபிமானிகள் வரையிலான பலர் என் மீதான அக்கறையிலோ... இல்லை எச்சரிக்கும் தொனியிலோ... ''அவரைப்பற்றிப் பேசும்போது மட்டும் அதிகமாகத் தாக்காதீர்கள்...'' என்பார்கள்!

எனக்கு அறிவுரை வழங்கும் இந்த அன்பர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. இவர்கள் சொல்லும் அறிவுரையை, அறவுரையாக ஏற்கெனவே எனக்கு இன்னொருவர் சொல்லி இருக்கிறார்.

முதல்வர் கலைஞரையோ, காங்கிரஸ் தலைவர் சோனியாவைப் பற்றியோ பேசும்போது சொல்ல வேண்டிய கருத்துகளை மட்டும் சொல்லுங்கள். ஆவேசமோ... ஆத்திரமோ... கொள்ளாதீர்கள். விமர்சனங்கள் வைக்காதீர்கள். அது சம்பந்தப்பட்டவர்களை மனரீதியாய் வருத்தம்கொள்ள வைத்துவிடும்!'' எனச் சொன்ன அந்த நபர் யார் தெரியுமா?

யாரை என் வாழ்வியல் வடிவமாக... யாரை என் நெஞ்சத்து நெருப்பாக... யாரை என் நாடித் துடிப்பின் நரம்பாக நினைக்கிறேனோ... அந்தத் தமிழ்த் தேசியத் தலைவன் பிரபாகரன் சொன்ன வார்த்தைகள் இவை!

ஈழ மண்ணில் கால்வைத்து, என் நெஞ்சத்து நாயகனை சந்தித்த திருநாளில், அவர் என் புத்திக்குள் ஏற்றிய போதனை இது. குருதியாறு ஓயாத - கொந்தளிப்பு அடங்காத அந்த மண்ணில், எதிரியையும் மதிக்கத்தக்க மாண்புகொண்டவனாக எம் தலைவன் இருந்தது, ஆத்திரத்தோடு அலையும் இந்த உலகத்தின் ஆச்சரியம்!

''பேச்சும் ஒரு இராணுவம்தான். எங்கள் துப்பாக்கிகளில் இருந்து வெளியேறும் தோட்டாக்களைவிட, உங்களின் வார்த்தைகள் வல்லமை வாய்ந்தவை. அதனால், தரம் தாழ்ந்த பேச்சு உங்களுக்குத் தேவை இல்லை. மூன்றாம்தர அரசியலில் நீங்களும் ஒரு ஆளாக உருவெடுத்துவிட வேண்டாம்!'' என என் தலைவன் தட்டிக்கொடுத்துச் சொன்ன வார்த்தைகளைத்தான் தடம் மாற்றும் மந்திரங்களாக ஏற்றுக்கொண்டு தமிழகத்துக்கு வந்தேன்.

ஈழத்தில் போர் தீவிரம் எடுத்து கொத்துக் கொத்தாக தமிழர்கள் செத்தழிந்த நேரம்... தமிழ்த் திரையுலகம் ஏற்பாடு செய்து இருந்த இராமேஸ்வரம் போராட்டத்தில் கலந்துகொண்டு ஈழ விவகாரத்தின் உண்மைகளை உரக்கச் சொன்னேன். அவை இறையாண்மை மீறலாகக் கையில் எடுக்கப்படும் என நான் எண்ணவில்லை.

ஆனால், இராமேஸ்வரம் போராட்டத்தை நேரலையில் பார்த்த தலைவர் பிரபாகரன், ''என்னைய தலைவன்னு சொல்லலைன்னா இப்போ என்ன? அந்த ரெண்டு பேருக்குமே என்னையப் பிடிக்காதே... இந்தளவுக்குப் பேசிய சீமானை வெளியே விட்டு வெச்சிருப்பாங்களா?'' எனச் சொன்னாராம். இராமேஸ்வரம் கூட்டம் முடிவதற்குள்ளேயே தலைவரின் கருத்தை என்னிடம் அலைபேசியில் சொன்னார் நடேசன் அண்ணா.

அடுத்த சில நாட்களிலேயே இராமேஸ்வரம் விவகாரத்தில் என் மீதும், அமீர் மீதும் வழக்குப் போடப்பட... "இதைத்தான் நான் அப்போதே சொன்னேன். ஆனாலும், பரவாயில்லை. அவனுக்கு யாரும் ஆறுதலோ தேறுதலோ சொல்ல வேண்டியதில்லை. என் தம்பி புலிபோல் சிறைமீண்டு வருவான்!'' எனச் சொல்லி இருக்கிறார் தலைவர்.

இங்கே பேசப்படும் வார்த்தைகளுக்கு என்ன விளைவு நடக்கும் என்பதை அங்கே இருந்தபடியே அனுமானித்த தலைவரின் முன்யோசனை இன்றைக்கும் என்னை சிலிர்க்க வைக்கிறது.

போர்க் களத்தில் இருந்தபடியே தமிழக அரசியல் கள நிலவரங்களை அறிந்த புலித் தளபதிகள் அடிக்கடி என்னைத் தொடர்புகொண்டு பேசுவார்கள். ''தலைவரை நினைத்து கவலைப்படாதே... எங்களின் துயரங்களை நினைத்து தமிழகத்தில் இருப்பவர்களை விமர்சிக்காதே... கவனம்... கவனம்...'' என ஒவ்வொரு முறையும் பாசத்தோடு அறிவுறுத்தும் அண்ணன் சூசை, கடைசிக் கட்ட போர் முனையில் இருந்தபடி என்னைத் தொடர்புகொண்ட கடைசிப் பேச்சு, நினைக்கும் போதெல்லாம் நெஞ்சைக் கிழிக்கக்கூடியது.

கடற்புலி சூசையின் கடைசி குரல்...

ஈழத்தின் துயரமான திசை மாற்றம் என்னை எல்லா விதத்திலும் இயலாமைக்காரனாக மாற்றிப்போட்டு இருந்த நேரம்... சூசை அண்ணனிடம் இருந்து எனக்கு வந்த அழைப்பை தம்பி ஒருவன் எடுத்திருக்கிறான். ''சாவின் விளிம்பில் நிற்கிறோம்டா தம்பி... நான் பேசுவதைப் பதிவுசெய்து தம்பி சீமானிடம் கொடு. திரும்பிய பக்கம் எல்லாம் எங்கட சனங்கள் செத்துக்கிடக்குறாங்க. இதுவே என்னுடைய கடைசிப் பேச்சாக இருக்கலாம். எல்லோரும் தைரியமாக இருங்கள்...'' எனச் சொல்லி இருக்கிறார்.

அப்போது என் சார்பாக பேசிய தம்பி தாங்க முடியாமல் அழ, ''அழக் கூடாது. தைரியமா இருக்கணும். தமிழன் அழக் கூடாது. அழுதால் இனி என்னிடம் பேசாதே...'' எனச் சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அந்தப் பேச்சின் பதிவை இப்போது கேட்டாலும், அவர்களின் நெஞ்சுறுதியும் நிலைகுலையாத் தைரியமும் கண் முன்னே வந்துவிட்டுப் போகின்றன.

சூசை அண்ணனின் சொல்படி யாரையும் விமர்சித்துப் பேச எனக்கும் விருப்பம் இல்லைதான். ஆனால், இந்த அன்னை மண்ணில் நடக்கும் அக்கிரமங்களையும் கேலிக்கூத்துகளையும் பார்த்தால்... கிறுக்குப் பிடித்தே செத்துவிடுவேன்போல் இருக்கிறது.

தம்பிகளே! ராஜபக்சேவின் போர்க் குற்றத்தை விசாரிக்கக் கோரி உலக நாடுகளே ஒருசேரக் குரல் கொடுக்கையில், சொந்த இனத்துக்காக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றக்கூட நம் முதல்வருக்கு தெம்பில்லாமல் போய்விட்டதா?

சுட்டு விளையாட ஈழ உயிர்கள் இல்லாது போனதால், மீனவர்களை விரட்டும் சிங்கள கடற்படையைக் கண்டிக்க இந்த வக்கற்ற மண்ணில் யாருக்குமே வாய் இல்லையா?

ஈழப் போர் துயரமான முடிவாக அமைந்த வேளையிலும், தொப்புள் கொடி உறவாகத் துடிக்க வேண்டிய தமிழகத் தலைவர், 'சகோதர யுத்தம்... சகோதர யுத்தம்� என்றே திரும்பத் திரும்பச் சொல்லி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாரே... இந்தக் குரூரத்தை எப்படி ஐயா பொறுப்பது?

பிரபாகரன் நிகழ்த்தியது சகோதர யுத்தம் என்றால், தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது என்ன சகோதர முத்தமா? இதைக் கேட்டால், உங்களுக்குப் பொத்துக்கொண்டு வருகிறதா கோபம்?

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்...

அவர் வீட்டில் சோதனை... இவர் வீட்டில் விசாரணை... எனத் தமிழகமே அல்லோலகல்லோலப்பட்டுக் கிடக்கையில், தமிழக டி.ஜி.பி. மூலமாக அதிமுக்கிய அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிடவைத்து இருக்கிறீர்கள். பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரைக் கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டு இருப்பதாகச் சொல்லி, இழவு வீட்டிலும் இடி பாய்ச்சி இருக்கிறீர்களே... உங்களின் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். நிஜமாகவே புலிகளால் உங்களுக்கு ஆபத்து இருக்கிறதா?

பிச்சைக்காரர்கள் இல்லை... பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை... இச்சைக் கேடுகள் இல்லை... இரவானால் பயம் இல்லை... என உங்களாலோ, உலக மகா தலைவர்களாலோ நடத்திக் காட்ட முடியாத நாட்டின் தலைவனாக இருந்த எங்கள் பிரபாகரன்... உங்களைக் கொல்ல ஆள் அனுப்பி இருக்கிறாரா?

கோழைகளை புலிகள் கொல்வதில்லை!

என்ன பின்னணி..? காலம் காலமாக உங்களின் தந்திர - எந்திர விளையாட்டை சகித்துவரும் எங்களை மேற்கொண்டும் நீங்கள் குழப்ப வேண்டாம் மொத்தத்தையும் வாரிக் கொடுத்துவிட்டு நாதியற்று அலையும் புலிப் படையின் மீது பழி போட்டு, உங்களின் பழி பாவங்களைப் பதுக்கப் பார்க்கிறீர்களே... 'புலிகளால் ஆபத்து! என மத்திய உளவுத் துறை அபாயம் பாடியதாகச் சொல்லி ப.சிதம்பரம் வீட்டுக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கிறீர்கள்... பிரதமரின் விழாவுக்குப் பெருவாரியான கண்காணிப்புகளை மேற்கொள்ளச் சொல்லி இருக்கிறீர்கள்... தமிழகத்தில் புலிகளின் நடமாட்டம் இருக்கிறதா எனத் தீவிரமாக தேடச்சொல்லி இருக்கிறீர்கள்.

நாடாளும் தலைவர்களே... உங்களின் பதற்றத்தைத் தணிக்க... படபடப்பை அடக்க... பாதுகாப்பை உறுதி செய்ய... ஒரே ஒரு விஷயம் சொல்லவா... 'கோழைகளைக் கொல்லும் பழக்கம் புலிகளுக்குக் கிடையாது!'

Sunday, December 19, 2010

மத்திய அரசுக்கு பாராட்டு

மத்திய அரசின் செயல்பாடுகளை பாராட்டி காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத மோதல்கள் தடுப்புச் சட்டம் கொண்டு வந்ததன் மூலம் மத்திய அரசு, மத மோதல்களைத் தடுத்துள்ளதுடன், அதனை தூண்டி விடுபவர்களையும் தண்டித்துள்ளது. மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பாபர் மசூதியை இடித்ததன் மூலம் அக்குற்றவாளிகள் அவமானகரமான செயலைச் செய்துள்ளனர். மசூதி இடிப்புக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் தீர்மானத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி மீது தாக்கு: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் காங்கிரஸ் கட்சி தாக்கியுள்ளது. குஜராத்தில் உள்ள நமது சகோதரர்கள் வெளியில் சொல்ல முடியாத துயரத்தை அடைந்து வருகின்றனர்.
அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வருகிறது. இதனை பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது என்று காங்கிரஸ் மாநாட்டு தீர்மானம் கூறுகிறது.

மணிப்பூர் என்றால் இளக்காரமா?: முதல்வர் இபோபி சிங் கேள்வி

மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்கிறது என்றாலும் மத்திய அமைச்சர்கள் அதை மதிப்பதில்லை என்று அந்த மாநில முதலமைச்சர் இபோபி சிங் வருத்தம் தெரிவித்தார்.
இதே கோரிக்கையை மகாராஷ்டிரமோ மேற்கு வங்கமோ வைத்திருந்தால் உடனே நடவடிக்கை எடுத்திருப்பீர்கள், இல்லையென்றால் அந்த மாநிலங்களே பற்றி எரியும், மணிப்பூர் என்பதால் அலட்சியமாக இருக்கிறீர்கள் என்று சற்று காட்டமாகவே காங்கிரஸ் மாநாட்டில் பேசினார் இபோபி சிங்.
மணிப்பூர் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் போன்றவற்றை இருப்புவைக்க இப்போதுள்ள இடம் போதவில்லை. மாநிலத்தின் 13 நாள் தேவைகளுக்கு மட்டும்தான் இடம் இருக்கிறது.
புதிய சேமிப்புதொட்டி கட்ட மாநில அரசு இடம் கொடுத்தும்கூட மத்திய அரசும் பெட்ரோலிய நிறுவனங்களும் முன்வராததால் பெரிய தொட்டிகட்ட முடியாமல் இருக்கிறது.
காங்கிரஸ் மாநாட்டில் ஒரு காங்கிரஸ் முதல்வரே மத்திய அரசைக் கண்டித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

சோனியா, ராகுல் ஆசியோடு பேசுகிறேன்: திக்விஜய் சிங்

மகாராஷ்டிரத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டமாநில போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேவுக்கு ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை கைவிடவில்லை என்ற திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலர் ராகுல் ஆகியோரின் ஆசியோடுதான் இதைப் பேசுகிறேன் என்று மீண்டும் வலியுறுத்தினார்.
நான் வேண்டுமென்றோ, பொருத்தம் இல்லாமலோ இந்தக் குற்றச்சாட்டைக் கூறவில்லை, என்னுடைய மனசாட்சிக்குத் தெரிந்த உண்மையைத்தான் கூறுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சில இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்தது குறித்து ஹேமந்த் கர்கரே புலனாய்வு செய்தார் என்பதாலும் அவருடைய விசாரணையின் விளைவாக சில தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பதாலும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவர் மீது பகைமை பாராட்டினர் என்று அவர் விவரித்தார்.
இத்தகைய குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக பிரக்யா தாக்கூர் என்ற பெண் சாதுவைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தபோது, அத்வானி போன்ற மூத்த தலைவர் ஏன் அவரைச் சிறைக் கொட்டடியிலேயே சென்று பார்த்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
உங்களுடைய இந்த கருத்து குறித்து சோனியா, ராகுல் ஆகியோர் உங்களிடம் ஏதேனும் கேட்டார்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, நான் பேசியதற்கு அவர்களுடைய ஆசி உண்டு என்று பதில் அளித்தார் திக்விஜய் சிங்.
மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான திக்விஜய் சிங் இப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழலை ஒழிப்போம்

ஊழலை நாட்டில் இருந்து ஒழிப்போம் என்று காங்கிரஸ் மாநாட்டில் சோனியா காந்தி உறுதிபடத் தெரிவித்தார்.
தில்லியில் இருந்து ஹரியாணா செல்லும் வழியில் உள்ள புராரி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள், கட்சியின் முக்கியத் தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் சோனியா காந்தி பேசியது: ஊழல் நடைபெறுவதையும், ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் துணைபோகின்றவர்களையோ காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. கட்சிக்கும், ஆட்சிக்கும் இது பொருந்தும். எளிமை, கட்டுப்பாடு, நேர்மை ஆகியவற்றை நமது கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
எனவே நமக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழும்பாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். ஊழலை ஒழிக்க இன்னும் கடும் நடவடிக்கைகள் எடுக்க புதிய வழிமுறைகளைக் கையாள முயற்சிகள் எடுக்கப்படும். ஊழலை ஒழிக்க காங்கிரஸ் பாடுபடும். ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஊழல் விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் பதவி விலகினார்கள். ஆனால் பாஜக அவ்வாறு நடந்து கொண்டதா?
கர்நாடகத்தில் ஊழலில் ஈடுபட்டவரைத்தான் பாஜகவினர் இன்னும் முதல்வர் பதவியில் வைத்துள்ளனர் என்றார் சோனியா காந்தி.
மன்மோகன் சிங் நேர்மையானவர்: தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மன்மோகன் சிங் குறித்து பாஜகவினர் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நேர்மைக்குக்கும், திறமையான நிர்வாகத்துக்கும் உதாரணமாகத் திகழும் அவரை குறை கூறுவது இழிவான செயல். அவரது திறமையின் மூலம்தான் இந்தியா பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியா பல்வேறு துறைகளில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதற்கு பிரதமர் மன்மோகன் சிங்கின் திறமையே காரணம் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற முடக்கம் நியாயமில்லை: தொடர்ந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வைத்து பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடேக்கியதைக் கண்டித்து சோனியா பேசினார்.
ஆனால் எதிர்க்கட்சியினர் அரசியல் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் செய்துவிட்டனர் என்று சோனியா காந்தி குற்றம்சாட்டினர்.

தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தத் தயார்: சோனியா

காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதிகள், நக்சலைட்டுகளுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெறும் 83-வது காங்கிரஸ் மாநாட்டில் இது குறித்து அவர் மேலும் பேசியது:
இந்தியாவில் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து பல தீவிரவாத அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவர்கள் கூறும் பிரச்னைகள் அனைத்துக்கும் அரசியல் ரீதியாக தீர்வு ஏற்பட்டு அப்பகுதிகளில் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்றே மத்திய அரசு விரும்புகிறது.
இதற்காக தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்த மத்திய அரசு இப்போதும் தயாராவே உள்ளது. அவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வுகாண முன்வர வேண்டும். இதற்காக மத்தியஸ்தர்கள் குழுவையும் அமைத்துள்ளோம்.
ஜம்மு - காஷ்மீர் உள்பட எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் தொடர்ந்து பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களை உரிய வகையில் மத்திய அரசு எதிர்கொண்டு வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடரும்.
ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத நக்ஸலைட்கள், பல மாநிலங்களில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களில் இவர்கள் அமைதியைச் சீர்குலைத்து வருகின்றனர். இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடரும்.
எனினும் பேச்சு நடத்துவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக தடைபட்டு விடவில்லை. பிரச்னை உள்ள இடங்களில் பேச்சு நடத்த முன்வருபவர்களை எப்போதும் ஏற்றுக்கொள்வோம்.
நக்சல்கள் ஆதிக்கமுள்ள பகுதியில் இருக்கும் மலைவாழ் மக்களின் நலனில் கூடுதல் அக்கறை காட்டுவதன் மூலம் அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த முடியும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
ஜம்மு -காஷ்மீரில் உள்ள இளைய தலைமுறையினர் போராட்டத்தையும், வன்முறையையும் தவிர வேறு எதையும் பார்த்தது இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி விடக் கூடாது. அதே நேரத்தில் அங்கு ராணுவத்தினரும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் என்பதையும் மறுத்துவிட முடியாது என்றார் சோனியா.
பயங்கரவாதத்தில் வேறுபாடு இல்லை: சிறுபான்மையினரது இயக்கம், பெரும்பான்மை மக்களின் இயக்கம் என்றெல்லாம் வேறுபாடு பார்த்து மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது இல்லை. பயங்கரவாதம் என்பது நாட்டுக்கு அபாயகரமானது இதனை சிறுபான்மையினம், பெரும்பான்மையினம் என காங்கிரஸ் கட்சி பிரித்துப் பார்க்கவில்லை.
பயங்கரவாதம் எந்த விதத்தில் தலையெடுத்தாலும் அது ஒழிக்கப்பட வேண்டும். மதத்தைக் காரணமாகக் கூறி பயங்கரவாதத்தில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
நமது எல்லைக்கு அப்பால் இருந்து செயல்படும் பல அமைப்புகள், இங்கு பயங்கரவாதச் செயல்களைத் தூண்டிவிடுகின்றன.
நமக்குள் பிரிவினையை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியாக நமது நாட்டை பலவீனமாக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம் என்று சோனியா காந்தி பேசினார்.

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியவர்களுக்குத் தோல்வி: பிரணாப் முகர்ஜி

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியவர்களுக்கு தோல்விதான் கிடைத்தது என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
நம்முடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டவர்கள் முந்தைய தேர்தலைவிட அதிக தொகுதிகளில் வென்றுள்ளனர். அல்லது முந்தைய தேர்தலில் பெற்ற வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால், கூட்டணியை விட்டு விலகியவர்கள் தோல்வியையே தழுவியுள்ளனர்.
காங்கிரஸ் தலைமையேற்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தை பாரதிய ஜனதா கட்சி முடக்கியது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்றார்.

தொண்டர்களை அமைச்சர்கள் புறக்கணிக்கக் கூடாது: சோனியா கண்டிப்பு

புது தில்லி, டிச. 19: காங்கிரஸ் தொண்டர்களை மத்திய அமைச்சர்கள் புறக்கணிக்கக் கூடாது என்று சோனியா காந்தி கண்டிப்புடன் கூறியுள்ளார்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் இது குறித்து அவர் மேலும் பேசியது:
காங்கிரஸ் ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள நமது கட்சித் தொண்டர்கள் பலரிடம் இருந்து எனக்குப் புகார்கள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை நமது மத்திய அமைச்சர்கள் தங்களைப் புறக்கணிக்கிறார்கள்; எங்கள் கருத்துக்களை அவர்கள் கேட்பதே இல்லை என்பதேயாகும்.
இது மிகவும் முக்கியப் பிரச்னை, எனவே தான் கட்சி மாநாட்டில் இதனைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறேன். இதுபோன்று மத்திய அமைச்சர்கள் நடந்து கொள்வது, தொண்டர்கள் மத்தியில் உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையை குறைத்துவிடும்.
பல்வேறு கடினமாக சூழ்நிலைகளில் கட்சித் தொண்டர்கள் நமக்காகப் பாடுபட்டு வருகிறார்கள். அவர்களை நமது அமைச்சர்களே புறக்கணிப்பது நிச்சயமாக கண்டிக்கத்தது.
முக்கியமாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இதுபோன்ற புறக்கணிப்புகள் நிலவுவது நமக்கு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
எனவே இனி வரும் காலங்களில் மத்திய அமைச்சர்கள் தாங்கள் செல்லும் இடங்களில் உள்ள நமது உள்ளூர் கட்சித் தலைவர்கள், தொண்டர்களுடன் அவர்கள் பிரச்னை குறித்தும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றார் சோனியா காந்தி.
தொண்டர்களுக்கு கோரிக்கை:தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள இடம், இல்லாத இடம் என்று வேறுபாடு எதையும் காண்பிக்காது மத்திய அரசு சரியாக நிதியை பகிர்ந்து அளித்து வருகிறது.
மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மக்களிடம் காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
முக்கியமாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் நமது தொண்டர்கள் இப்பணியை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் அங்கு ஆட்சியில் உள்ளவர்கள் இத்திட்டங்களை தாங்கள் செயல்படுத்துவதாகக் கூறி மக்களை திசை திருப்ப வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில் கட்சியின் மாநிலத் தலைவர்கள், காங்கிரஸின் பிற அமைப்புத் தலைவர்கள் கூறுவதைக் கேட்டு காங்கிரஸ் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். தொடர்ந்து பிகார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டிப் பேசிய சோனியா, மாநிலத்தில் கட்சியை அடிப்படையில் இருந்து பலப்படுத்த வேண்டும் என்பதையே தேர்தல் முடிவு காட்டுகிறது.
இதற்கு வேறு மாற்று வழிகள் இல்லை. நாம் விடாமுயற்சியுடன் போராடினால் வெற்றி கிடைக்கும். காங்கிரஸ் பலவீனமாக உள்ள எல்லா மாநிலங்களுக்கும் இந்த கருத்து பொருந்தும் என்றார் அவர்

காங்கிரஸ் தலைவர் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக நீட்டிப்பு

புது தில்லி, டிச. 19: காங்கிரஸ் கட்சித் தலைவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதவிக் காலம் 3 ஆண்டுகளாக இருந்தது.
இதற்காக காங்கிரஸ் கட்சியின் விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தில்லியில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில் இந்த பதவி நீட்டிப்பு குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தை மூத்த காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் கொண்டு வந்தார். பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி, பொதுச் செயலாளர் ராகுல்காந்தி, கட்சியின் பிற தலைவர்கள் அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டனர்.
இதே போன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை ஆண்டுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்ற புதிய தீர்மானமும் மாநாட்டில் கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்னர் ஆண்டுக்கு இரண்டு முறைக்கு குறையாமல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கட்சி விதி இருந்தது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பின் நடைபெறும் முதல் காங்கிரஸ் மாநாடு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டின் மிகவும் பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 125 ஆண்டுகள் ஆகின்றன. இது அக்கட்சியின் 83-வது மாநாடு. மாநாட்டில் சமீபத்தில் மரணமடைந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் தலைவர் சிலரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநாட்டின் முக்கியத்துவம்:முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் போட்டி ஆகிய முறைகேடு குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, ராகுலின் காவி பயங்கரவாதப் பேச்சு, பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் படுதோல்வி ஆகியவற்றாலும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது தவிர விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் காங்கிரஸின் கூட்டணி வியூகம் மாறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளாலும் மாநாடு மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு: விசாரணை தேவை: காங்கிரஸ்

புது தில்லி, டிச. 19: தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ்., அதன் சகோதர அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ள 2 நாள் மாநாடு புது தில்லியின் புறநகர்ப் பகுதியான புராரியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்த மாநாட்டின் தலைமை உரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:
வகுப்புவாத செயல்களிலும், தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டுவரும் அமைப்புகள் பெரும்பான்மைச் சமூகமா அல்லது சிறுபான்மைச் சமூகமா என காங்கிரஸ் வேறுபடுத்திப் பார்க்கவில்லை.
தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் அமைப்பு எந்த மதத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அது அபாயகரமானது. அத்தகைய சக்திகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
வகுப்புவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் அதை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. குறுகிய அரசியல் லாபங்களுக்காக வகுப்புவாதச் செயல்களில் ஈடுபடுவதும், வெறுப்புணர்வைப் பரப்புவதும், மதவெறியைத் தூண்டுவதும் மதத்தை அவமதிக்கும் செயலாகும்.
மதத்தை கேடயமாகப் பயன்படுத்தி மக்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டுவது, மற்ற மதங்களைப் பற்றி அவதூறுப் பிரசாரம் செய்வது, வரலாற்றைத் திரித்து மக்கள் மனங்களில் கேடு விளைவிக்கும் தனிநபர்கள், அமைப்புகள், கொள்கைகளை புறந்தள்ள முடியாது.
ஊழலைக் களைய 5 அம்சத் திட்டம்: ஊழல் ஒரு நோய் போல சமூகத்தின் எல்லாநிலைகளிலும் பரவியுள்ளது. அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகள் உள்பட அனைத்து வழக்குகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைவாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நிரபராதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
2-வதாக, வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்கு அரசே நிதி அளிக்க வேண்டும்.
ஊழலுக்கு மிக முக்கிய ஊற்றாக விளங்குவது நில ஒதுக்கீடு செய்வதற்கு உள்ள அதிகாரம். இத்தகைய அதிகாரத்தை எல்லா முதல்வர்களும், அமைச்சர்களும் கைவிட வேண்டும்.
மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் அனைத்தும் வெளிப்படையாக நடைபெறுவதற்கான தெளிவான வரைமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
இயற்கை வளங்களை சுரண்டுவதைத் தடுக்க தகுந்த வெளிப்படையான நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். தங்களது நேர்மை மீது எந்தவிதமான சந்தேகத்தின் நிழலும் விழாதவகையில் காங்கிரஸ் நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.
எளிமை, பொறுமை, சிக்கனம் போன்றவையே நமது தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறையாக இருக்க வேண்டும். இதை நாம் சட்டமாகக் கொண்டு வரமுடியாது. வறுமை நிறைந்திருக்கும் நாட்டில், நமது வளத்தை கூச்சமில்லாமல் வெளிப்படுத்துவதைத் தவிர்க்கும் சமூக உணர்வு நமக்கு இருக்க வேண்டும்.
பா.ஜ.க.வுக்கு சவால்: எந்தவிதமான குற்றச்சாட்டும் உறுதி செய்யப்படாத நிலையிலும், விசாரணை மட்டுமே நடைபெறும் நிலையிலும் நமது முதல்வர்கள், அமைச்சர்களை பதவி விலக ஆணையிட்டுள்ளோம்.
இதுபோன்று எத்தனைக் கட்சிகள் உரிமை கோர இயலும்? கர்நாடகத்தில் ஊழல் புகார் எழுந்துள்ள நிலையில், முதல்வரையோ, அமைச்சர்களையோ பாரதிய ஜனதா கட்சியால் விலகச் சொல்ல முடியுமா?
நாடாளுமன்ற முடக்கம் குறித்து...: நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியதற்கு எப்படி நியாயம் கற்பிக்கப் போகின்றன? அரசியல் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை பிணைக் கைதியாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தக் கூடாது.
மிக முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், முடிவு எடுக்கவும் நாடாளுமன்றமே மிகச் சரியான இடமாகும்.
மன்மோகன் சிங்குக்கு புகழாரம்: பிரதமர் மன்மோகன் சிங் கெüரவம், நேர்மையின் உருவமாகத் திகழ்கிறார். அவரது சீரிய தலைமை, கடுமையான புயல் வீசும்போதும் அவர் காத்துவரும் மெüனம், தேசத்தின் முன்னேற்றம் தொடர்பாக அவர் கொண்டுள்ள நிலையான முனைப்பு ஆகியவற்றுக்காக மாநாட்டில் கூடிய பிரதிநிதிகள் சார்பாக அவரைப் பாராட்டுகிறேன்.
சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டபோது அவரது தலைமையை உலகமே பாராட்டியது.
விலைவாசி உயர்வு...: ஒரே சீரான பொருளாதார வளர்ச்சியை அரசு உறுதிப்படுத்தியுள்ள அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது போன்ற சவால்களை அரசு எதிர்கொண்டுள்ளது.
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு அளிக்கும் மானியம் சரியானவர்களைச் சென்றடைய வேண்டும்.
பிகார் தோல்வி குறித்து...: மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது. நாம் செல்ல வேண்டிய பாதை நீண்ட தூரம் கொண்டது மட்டுமல்ல, கரடுமுரடானதும் கூட என்பதையே பிகார் தேர்தல் உணர்த்துகிறது.
எனினும், அந்தப் பாதையைக் கடந்து நாம் வெற்றி பெறுவோம். மனச் சோர்வு அடைய இப்போது நேரமில்லை. நாம் கூட்டணியில் உள்ள மாநிலங்கள் உள்பட எல்லா பகுதிகளிலும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டிய தருணம் இது என்றார் சோனியா காந்தி.
சர்ச்சையைத் தவிர்த்த ராகுல்: லஷ்கரை விட ஹிந்து அமைப்புகள் பயங்கரமானவை என காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறியதாக "விக்கி லீக்ஸ்' வெளியிட்ட தகவல் தொடர்பாக இந்த மாநாட்டில் ராகுல் காந்தி எதுவும் பேசவில்லை.
ஊழலில் ஈடுபடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று மட்டுமே ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
அத்வானி மீது திக்விஜய் சிங் தாக்கு: அயோத்தி பிரச்னை தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரைதான் ஹிந்து- முஸ்லிம் வேற்றுமைக்கு விதை விதைத்தது என்றும், அதுதான் நாட்டில் தீவிரவாத வன்முறைச் செயல்கள் நடைபெறுவதற்கு காரணம் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டினார்.
தீர்மானம்: தீவிரவாத செயல்கள் தொடர்பான சமீபத்திய சில வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ்.ஸýக்கும், அதன் சகோதர அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்வதுடன், வகுப்புவாதத்தை முறியடிக்க கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராகுல் காந்தி குறிப்பிட்டதாக "விக்கி லீக்ஸ்' வெளியிட்ட தகவலை ஈடுகட்டும் விதமாகவே தீவிரவாதத்தை எந்த உருவத்திலும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என சோனியா காந்தி பேசியதாகக் கருதப்படுகிறது.

Friday, December 17, 2010

கூட்டணி குறித்து அகில இந்திய காங்., முடிவெடுக்கும் :கார்த்தி சிதம்பரம் பேட்டி

தி.மு.க.,வுடனான கூட்டணியில் காங்கிரசின் நிலைப்பாடு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவெடுக்கும்,'' என அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா பிறந்த நாள் நிகழ்ச்சி நேற்று திருவேற்காடு உதவும் கரங்கள் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கார்த்தி சிதம்பரம் மகள் அதிதி பிறந்த நாளும் சேர்த்து கொண்டாடப்பட்டது.குறிப்பாக, ஆதரவற்ற குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக ஜெயன்ட் வீல், பவுன்சிங் பால் கேசில், மேரி-கோ-ரவுண்ட் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளும், கராத்தே, மேஜிக் ÷ஷா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது:காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் எனது மகள் அதிதி இருவரது பிறந்த நாளையும் உதவும் கரங்கள் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடுவது என முடிவெடுத்தோம்.அரசியலைக் கூட சற்று வித்தியாசமாக செய்ய வேண்டும் என எண்ணுவதுடன், அதை பின்பற்றுவதாக நம்புகிறேன்."தேர்வு, வீட்டுப்பாடம், டியூஷன் ஆகியவை எனக்கு பிடிக்காது. சிறு வயதில் அதிகம் குறும்பு செய்ய வேண்டும்' என, நான் பள்ளி விழாக்களில் பேசுவது ஆசிரியர்களுக்கு பிடிக்காது. குறிப்பாக என்றைக்கும் குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. நாளை (இன்று) அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடும் இந்த கமிட்டி மற்றும் காங்., தலைவர் சோனியா ஆகியோர் கூட்டணியில் காங்கிரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிப்பர்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரச்னையை பொறுத்தவரை, அரசியலில் ஒரேயொரு நிலைப்பாடு மாற்றத்தை ஏற்படுத்தாது. குறிப்பாக வரும் சட்டசபை தேர்தலில், இதனால் பாதிப்பு ஏற்படாது.இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பேசினார்.

நிகழ்ச்சியில், வளசை சுப.தங்கராஜ், எழும்பூர் மாமன்ற உறுப்பினர் ருக்மாங்கதன், எம்.எல்.ஏ.,க்கள் செல்வப்பெருந்தகை, சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக, திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்., தலைவர் மனோகரன் மற்றும் வளசை காங்., நகரத் தலைவர் பாலமுருகன் தலைமையில் வேலப்பன் சாவடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தி.மு.க.,வை கழற்றி விட காங்., திட்டம் :மாஜி அமைச்சர் செம்மலை ஆரூடம்

: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தைக் கொண்டு தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு வரியில்லா பட்ஜெட் போடலாம் என மாஜி அமைச்சர் செம்மலை பேசினார்.


கடலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் குறிஞ்சிப்பாடியில் பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் மாஜி அமைச்சர் செம்மலை பேசியதாவது:சிறிய அளவில் செ#யப்படும் ஊழலில் அதிக நபர்கள் கைது செய்யப்படும் நிலை உள்ளது. ஆனால், 1,76,379 கோடியில் உலகிலே மிகப் பெரிய ஊழலாக பேசப்படும் ஸ்பெக்ட்ரம் ஊழலை அரசு கண்டு கொள்ளவில்லை. இந்த ஊழல் குறித்து சுப்ரீம் கோர்ட் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறது. அமைச்சரவை, பிரதமர், சட்டத்துறை, டிராஸ் ஆகியோரின் ஆலோசனைகளை கேட்காமல் அனுபவம் இல்லாத கம்பெனிகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அளித்துள்ளனர். இதில் ராஜாவின் பினாமிகளுக்கு 6 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

ராஜா பங்குதாரராக உள்ள ஸ்வாங் கம்பெனியில் அனுமதி கொடுத்து அந்த லைசென்சை நார்வே கம்பெனிக்கு விற்றதன் மூலம் ராஜா 16 ஆயிரத்து 40 கோடி லாபம் சம்பாதித்துள்ளார். கனிமொழியும் தனக்கு ஒதுக்கிய பங்கை விற்றதன் மூலம் 16 ஆயிரத்து 500 கோடி லாபம் சம்பாதித்துள்ளார். சாதாரண மக்கள் வங்கியில் கடன் கேட்டால் பல ஆவணங்களை கேட்கும் தேசிய வங்கிகள் இந்த லைசென்ஸ் மீது 26 ஆயிரம் கோடி கடன் அளித்துள்ளது.தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு பட்ஜெட் போடுவதற்கு 60 ஆயிரம் கோடி ஆகிறது. இந்த ஊழல் பணத்தை வைத்து தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பட்ஜெட் போடலாம். இந்த ஊழலில் இருந்து காங்கிரஸ் தப்பித்துக் கொள்ள, கூடிய விரைவில் தி.மு.க.,வை கழற்றி விட திட்டம் போட்டுள்ளது.இவ்வாறு மாஜி அமைச்சர் செம்மலை பேசினார்.