தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் எதிர்ப்பால், நிராகரித்துவிட்டார் கட்சித் தலைவர் சோனியா காந்தி. இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
இரண்டு முறைக்கு மேல் எம்எல்ஏக்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று ராகுலும் சோனியாவும் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் போட்டியிட 2,160 பேர் விருப்ப மனு அளித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு தலைமையிலான 20 பேர் கொண்ட தேர்தல் குழு விருப்ப மனுக்களை ஆய்வு செய்தது. தொகுதிகளை கோஷ்டிவாரியாகப் பிரித்துக் கொண்டு, அந்தந்த கோஷ்டி தலைவர்களுக்கு வேண்டியவர்களின் பெயர்கள் அடங்கிய 3 முதல் 5 பேர் கொண்டவர்களின் பட்டியலை தொகுதிவாரியாக தயார் செய்தது.
இதை காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் வழங்கினார் தங்கபாலு .
இதையடுத்து இந்தக் குழு பரிந்துரைப் பட்டியலை ஆய்வுசெய்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து லண்டனில் இருந்து டெல்லி திரும்பிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் திங்கள்கிழமை இரவு வழங்கியது.
அதை ராகுல் காந்தியிடம் ஆலோசனை நடத்திய சோனியா காந்தி பட்டியலை நிராகரித்துவிட்டார்.
இரண்டு முறைக்கு மேல் எம்.பி. அல்லது எம்.எல்.ஏக்களாக இருந்தவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றும் புதியவர்களுக்குதான் வாய்ப்பு என்றும் சோனியா கூறியதாகத் தெரிகிறது.
மேலும் புதிய பட்டியல் தயாரித்துக் கொண்டு வருமாறு சோனியா உத்தரவிட்டார். இதையடுத்து புதிய பட்டியலுடன் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவைச் சந்திக்கவுள்ளனர்.
சோனியாவின் நிபந்தனையின்படி இப்போது எம்.எல்.ஏக்களாக இருக்கும் டி. யசோதா, பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன், கோபிநாத், சிவராஜ், கோவை தங்கம், ஜெயக்குமார், ராம்பிரபு , கே.ஆர். ராமசாமி, சுந்தரம், டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன் உள்ளிட்ட பலருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது. இரண்டு முறைக்கு மேல் எம்.பி, எம்.எல்.ஏக்களாக இருந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், பி.வி. ராஜேந்திரன், குமாரதாஸ், டாக்டர் செல்லக்குமார் ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைக்காது.
இதில் பெரும்பாலானவர்கள் கோஷ்டிகளிலேயே பெரிய கோஷ்டியான ஜி.கே. வாசனின் ஆதரவாளர்கள் ஆவர்.
மேலும் நாமக்கல் ஜெயக்குமார், திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ளார். வாய்ப்பு பறிபோகும் என்ற தகவலால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் தங்கபாலு தனது மனைவிக்கும் சீட் கேட்டதாக கூறப்படுகிறது. அந்தக் கோரிக்கையயும் சோனியா நிராகரித்துவி்ட்டார்.
புதிய வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்தல் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விடும் என்று தெரிகிறது. நாளை மாலை வேட்பாளர்களை சோனியா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல், சோனியாவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று டெல்லி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன் தமிழக காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிகிறது.
கட்சி உருப்படும்!!!
வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியீடு-ஆஸ்கர் பெர்னான்டஸ்:
இந் நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னான்டஸ் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அறிவுறுத்தலின்படி, மத்திய தேர்தல் குழுவினர் வேட்பாளர் பட்டியல் தயாரித்துள்ளதாகவும், இன்று மாலை அல்லது நாளைக்குள் இறுதி செய்யப்பட்ட பட்டியல் வெளியாகும் எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment