Search This Blog

Wednesday, March 23, 2011

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கொண்டு சென்ற 2 வது பட்டியலையும் சோனியா காந்தி நிராகரித்தார்



தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கொடுத்த 2வது வேட்பாளர் பட்டியலையும் நிராகரித்து விட்டார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. மத்திய அமைச்சர்களும், தமிழக காங்கிரஸின் இரு பெரும் கோஷ்டித் தலைவர்களுமான ப.சிதம்பரம், மற்றும் ஜி.கே.வாசன் கொடுத்த புகாரைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார் சோனியா.

தமிழக காங்கிரஸ் கட்சியினர் எந்த வேகத்தில் திமுகவை நெருக்கி சீட் வாங்கினார்களோ அதை விட மோசமான முறையில், வேட்பாளர் தேர்வில் குழம்பித் தவித்துத் திண்டாடிக் கொண்டுள்ளனர்.

திமுகவை மிரட்டி, உருட்டி 63 சீட்களை வாங்கி விட்ட காங்கிரஸார் இப்போது வேட்பாளர்களை அறிவிக்க முடியாத அளவுக்கு பெரும் குழப்பில் மாட்டித் தவித்து வருகின்றனர். காரணம் - கோஷ்டிப் பூசல்.

தமிழக காங்கிரஸ் கட்சி கோஷ்டிப் பூசலுக்குப் பெயர் போனது. ஒவ்வொரு கோஷ்டியினரும் தத்தமது ஆதரவாளர்களின் பட்டியலை வேட்பாளர் பட்டியலுடன் இணைத்து விட்டதால் குழம்பிப் போன காங்கிரஸ் மேலிடம் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய முடியாமல் குழம்பி நிற்கிறது.

காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இதுவரை 2 வேட்பாளர் பட்டியலை சோனியாவிடம் கொடுத்தார். அகமது படேல், வயலார் ரவி, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் பரிசீலனை செய்த பின்னரே இந்த பட்டியல்கள் தரப்பட்டன என்ற போதிலும், தங்கபாலு சொன்ன ஆட்களே இந்த பட்டியலில் நீக்கமற நிறைந்துள்ளனராம்.

இதனால் முதலில் கொடுத்த பட்டியலை சோனியாவும், ராகுலும் ஏற்க மறுத்து விட்டனர்.

மேலும் 2 முறைக்கு மேல் எம்.எல்.ஏவாக இருந்தவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்றும் சோனியா உத்தரவு போட்டு விட்டார். இதையடுத்து 2வதாக ஒரு பட்டியலை தங்கபாலுவை துணைக்கு வைத்துக் கொண்டு தயாரித்த காங்கிரஸ் குழு அதை சோனியாவிடம் கொடுத்தது. அதிலும் கூட தங்கபாலு கோஷ்டியினர்தான் ஆதிக்கம் செலுத்தியுள்ளனராம்.

இதனால் டென்ஷன் ஆன ப.சிதம்பரமும், ஜி.கே.வாசனும் சோனியா காந்தியை நேரில் சந்தித்து குமுறி விட்டனர். இந்தப் பட்டியலை தயவு செய்து ஏற்க வேண்டாம். கட்சிக்காக உழைத்த யாருமே இதில் இடம்பெறவில்லை. இவர்களில் பலருக்கு மக்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே இதை ஏற்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதைப் பரிசீலிப்பதாக உறுதியளித்த சோனியா காந்தி தற்போது இந்தப் பட்டியலையும் நிராகரித்து விட்டார்.

தற்போது அகமது படேலிடமும், குலாம் நபி ஆசாத்திடமும் நேரடியாக சோனியாவே ஆலோசனையில் இறங்கியுள்ளாராம். இதன் இறுதியில் புதிய வேட்பாளர் பட்டியலை தயாரித்து அதை இன்று மாலை சோனியா காந்தி வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் நிலவிவரும் இந்தக் குழப்பத்தால் தமிழக காங்கிரஸார் கடும் பதைபதைப்புடன் உள்ளனர்.

No comments: