Search This Blog

Wednesday, March 9, 2011

தே.மு.தி.க.,வின் செல்வாக்கு சேலம் மாநகரில் ஜெயிக்குமா

சேலம்: கடந்த சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில், தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க., சேலம் மாநகர பகுதியில் கணிசமான ஓட்டுக்களை அள்ளியது. வரும் தேர்தலிலும், அதே நிலை நீடிக்கும் என்று அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க., வை துவக்கிய, 2006ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலும் நடந்தது. யாருடனும் கூட்டணி வைக்காத தே.மு.தி.க., 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. தே.மு.தி.க., வால் அதிக தொகுதிகளை கைப்பற்ற முடியாவிட்டாலும் கூட, 27 லட்சத்து 61 ஆயிரத்து 137(8.32 சதவீதம்) ஓட்டுக்களை அள்ளியது. சேலம் 1வது தொகுதியில்(தற்போது வடக்கு) 27 ஆயிரத்து 216 ஓட்டுக்களும், சேலம் 2வது தொகுதியில்(தற்போது தெற்கு) 20 ஆயிரத்து 26 ஓட்டுக்களும் பெற்றது. மாநகர பகுதியில் தே.மு.தி.க., வின் செல்வாக்கை கண்டு அனைத்து கட்சினரும் வியப்படைந்தனர். அதே 2006ம் ஆண்டு இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில், விஜயகாந்த், ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த தேர்தலிலும் தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டது. சட்டசபை தேர்தலில் பெற்ற ஓட்டு சதவீதம் உள்ளாட்சி தேர்தலிலும் கிடைத்தது.

சேலம் மாநகராட்சியின், 60 வார்டுகளிலும் சேர்த்து மொத்தம், 68 ஆயிரத்து 356 ஓட்டுக்களை அள்ளியது. ஒவ்வொரு வார்டிலும் குறைந்தபட்சம் இரண்டாயிரம் ஓட்டுக்களை வாங்கியது. கடந்த 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டது. சேலம் எம்.பி., தொகுதியில், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 325 ஓட்டுக்களை பெற்றது. இதில் சேலம் மாநகர பகுதியில் பெறப்பட்ட ஓட்டு சதவீதம் அதிகம். தே.மு.தி.க., கடந்த மூன்று தேர்தல்களிலும், சேலம் மாநகர பகுதியில் தொடர்ந்து கணிசமான ஓட்டுக்களை அள்ளி வருகிறது. தற்போது தே.மு.தி.க.,- அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்துள்ளது. மாநகர பகுதியில் தே.மு.தி.க., வுக்கு இருக்கும் ஓட்டு வங்கியால் சேலம் வடக்கு, தெற்கு ஆகிய தொகுதிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும் என்று இரு கட்சியினரும் கணக்கு போடுகின்றனர். இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட அ.தி.மு.க., வுக்கு இணையாக தே.மு.தி.க., வில் பலர் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர்.

No comments: