Search This Blog

Tuesday, March 22, 2011

தொண்டர்கள் சோர்வடையக் கூடாது: ராமதாஸ் பேச்சு

தேர்தல் களப் பணி ஆற்றுவதில் தி.மு.க., கூட்டணி கட்சித் தொண்டர்கள் சோர்வடைந்து விடக்கூடாது,'' என, சேலத்தில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

சேலத்தில் நடந்த தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தி.மு.க., அரசின் சாதனைகளை மக்கள் பேசத் துவங்கி விட்டனர். கருணாநிதி, தமிழகத்தில் ஆறாவது முறையாக முதல்வராக பதவி ஏற்கப் போகிறார் என்பதை பொதுமக்களும் பேசி வருகின்றனர். சேலத்தில் உள்ள, 11 தொகுதிகளில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள, 234 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என்று மக்கள் சொல்கின்றனர். தொகுதியில் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டுவதை விட, ஒவ்வொரு வாக்காளரையும், 18 முறை சந்தித்து பேசி, அவர்களின் மனதை மாற்றி, தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு போடச் செய்ய வேண்டும். எதிரணியை ஒப்பிட்டு, சூப்பர், சாலிட் என்று சொல்லி, தொண்டர்கள் சோர்வடைந்து விடக்கூடாது.

பா.ம.க., தொகுதிகளில் ஆறு மாதத்துக்கு முன்னரே பணியை துவக்கி விட்டோம். அதே போல், கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதிகளில், பா.ம.க.,வினரை மூன்று மடங்கு பணி செய்ய கட்டளையிட்டுள்ளேன். என் கட்டளையை கட்சியினர் நிறைவேற்றித் தருவர். கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து, அரவணைத்து களம் இறங்கி பணியாற்ற வேண்டும். வேட்பாளர், தொகுதிக்கு வரும் போது, 2,000 பேரை திரட்டி வரவேற்பு கொடுக்க வேண்டும். தி.மு.க., கூட்டணி கட்சிகள் வெற்றி உறுதியாகி விட்ட நிலையில், வெற்றி ஓட்டு வித்தியாசம் லட்சக்கணக்கில் இருக்க வேண்டும். பா.ம.க.,வும், விடுதலைச் சிறுத்தைகளும் ஓர் அணியில் கைகோர்த்து இருப்பதன் மூலம், எங்களின், 20 ஆண்டு கனவு நிறைவேறி உள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் போடும் கட்டளையை, கூட்டணி கட்சிகள் நிறைவேற்றிக் கொடுத்தாலே நம் கூட்டணிக்கு வெற்றி உறுதி. இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

"சாலிட், சூப்பர்' கெட்ட வார்த்தைகள்: சென்னை புறநகர் பகுதியான மதுரவாயலை அடுத்த வானகரத்தில், பா.ம.க., செயல் வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம், நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: நாளுக்கு நாள் எதிரணியின் பலம் குறைந்து கொண்டே போகிறது. இந்த தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் போட்டியிடுகிறார் என நினைக்காமல், முதல்வர் நிற்கிறார், துணை முதல்வர் நிற்கிறார், நான் நிற்கிறேன் என நினைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும். தொகுதியில் இரண்டு கெட்ட வார்த்தைகள் உள்ளன. ஒன்று, "சாலிட்' மற்றொன்று "சூப்பர்!' அதை தவிர்த்து, சிறப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும். குறிப்பாக காலை 6 மணி முதல், 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல், 10 மணி வரையிலும், தேர்தல் பணி செய்யலாம். மக்கள் மனதில் என்றைக்கும் நிலைத்திருக்கும் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி. கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், தி.மு.க.,விற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது போல், இந்த முறையும் ஆதரவு கொடுப்போம். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

No comments: