தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்துப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் லேப்-டாப் வழங்கப்படும்,'' என, முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
திருவாரூரில் நேற்று நடைபெற்ற தி.மு.க., கூட்டணி சார்பிலான தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க., தலைவரும், வேட்பாளருமான கருணாநிதி பேசியதாவது: எந்த மண்ணில் நான் தோழர்களோடு விளையாடி கழித்தேனோ, எந்த மண்ணில் தோழர்களோடு படித்தேனோ, அந்த மண்ணில் வேட்பாளராக நிற்க, எனக்கு ஏற்பட்ட ஆசையின் காரணமாக நான் இங்கு நிற்கிறேன். உங்கள் மண்ணில் அமர்ந்து, உங்கள் கரம் பிடித்து, சட்டசபைக்கு செல்லலாம் என்று வந்துள்ளேன். திருவாரூர் எனக்கு புதிய இடமல்ல. உங்களுக்கு தொண்டு செய்ய உங்கள் உதவி நாடி வந்துள்ளேன். எங்கள் அணி, கொள்கையால் உருவான கூட்டணி. நான், தேசிய முற்போக்கு கூட்டணிக்கு ஓட்டளியுங்கள் என்பேனே தவிர, யாருக்கும் ஓட்டளிக்கக்கூடாது என்று சொல்லமாட்டேன். காரணம், இங்கே இருப்பவர்கள் அனைவரும் எனது உறவினர்கள். அவர்கள் மத்தியில் எதிர்ப்பு உணர்வை வீசி ஒரு சிறு காயத்தைக் கூட ஏற்படுத்த விரும்பவில்லை.
தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதை மட்டுமின்றி, சொல்லாததையும் நிறைவேற்றுவேன். கடந்த தேர்தல் வாக்குறுதியில், "கூரை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகள் கட்டித்தருவேன்' என்று சொல்லவில்லை. ஆனால், கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுத்தேன். கடந்த முறை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று அறிவிக்காமலே கொடுத்தேன். கடந்த 19ம் தேதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசுக் கல்லூரிகள் மற்றும் தொழிற் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் தருவதாக உறுதி அளித்துள்ளோம். இதற்கு வரவேற்பு வழங்கியவர்கள், அனைத்து பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வழங்கலாமே என, கேட்டனர். தோழமை கட்சியினர் கேட்டதன் பேரில், இப்போது அறிவிக்கிறேன். பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என, அனைத்துப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் லேப்-டாப் வழங்கப்படும்.
அடுத்ததாக, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பஸ் பாஸ் என்று அறிவித்திருந்தேன். ஓய்வு வயது 58. ஓய்வு பெற்றவர்கள் எல்லாம், "பஸ் பாஸ் வாங்க இன்னும் இரண்டு வருடம் காத்திருக்க வேண்டுமா?' என்று கேட்டதால், இனி 58 வயது முதலே பஸ் பாஸ் வழங்கப்படும். அத்துடன் கட்டப் பஞ்சாயத்து நடைமுறைக்கும் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும். உங்கள் சந்தோஷத்திற்காக, எனது கஷ்டத்தைப் பார்க்காமல் இனி உங்களை அடிக்கடி பார்ப்பேன். ஆறாவது முறையாக ஆட்சிக்கு வரவேண்டும் என்று இட்ட கட்டளையை ஏற்க முயற்சிக்கிறேன். திருவாரூர் தொகுதி சட்டசபை உறுப்பினராகி முதல்வராக ஆவதன் மூலம், என்னை எனது ஊர் கைவிடவில்லை என்று கம்பீரமாக சொல்லி வலம்வருவேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
No comments:
Post a Comment