Search This Blog

Thursday, March 24, 2011

ஜெ.,அரசியல் வரலாறு முடிவுக்கு வரும்: ராமதாஸ் பேச்சு

இத்தேர்தலுடன் ஜெயலலிதாவின் அரசியல் வரலாறு முடிவுக்கு வரும்,'' என பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

சோழவந்தான் பா.ம.க., வேட்பாளர் இளஞ்செழியனை ஆதரித்து வாடிப்பட்டியில் பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க.,மாவட்டச் செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட காங்.,தலைவர் செல்வராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ராமதாஸ் பேசியதாவது: "கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்' என திருவாரூர் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசினார். நன்றிக் கடனாக நாங்கள், வட மாவடங்களில் கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம். ஜெயலலிதா, "வரும் காலங்களில் மக்கள் கையேந்தும் நிலை மாறும்' என குறிப்பிட்டுவிட்டு, தேர்தல் அறிக்கையையை வெளியிட்டுள்ளார். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு நான்கு ஆடு, ஒரு பசுமாடு வழங்கப்படும் என்கிறார். 30 லட்சம் பேருக்கு ஒரு கோடி 70 லட்சம் ஆடுகளை எப்படி உற்பத்தி செய்ய முடியும்? நடைமுறை சாத்தியம் இல்லாதது. இத்தேர்தலுடன் ஜெ., அரசியல் வரலாறு முடிவுக்கு வரும். என்றார். பா.ம.க.,மாவட்டச் செயலாளர் கிட்டு, தி.மு.க.,ஒன்றிய செயலாளர் பாலராஜேந்திரன், நகர் செயலாளர் பால்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் அயூப்கான் பங்கேற்றனர்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை இந்தியாவில் யாராலும் மிஞ்ச முடியாது. ஐந்தாண்டுகளுக்கு முன் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சொன்னதை மட்டுமில்லாமல் சொல்லாததையும் கருணாநிதி செய்தார். இதனால், ஒவ்வொரு தனி மனிதனும் பயன் பெற்றனர். படித்த, பாமர மக்கள் இதை உணர்ந்துள்ளனர். மீண்டும் கருணாநிதி முதல்வராக வரவேண்டும், என அவர்கள் உறுதியாக உள்ளனர். அவர் பட்டினியை போக்கியவர். உறங்க கான்கிரீட் வீடு கட்டி தந்தவர். மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு திட்டங்கள் கொண்டு வந்தவர். அவர் வரவில்லை என்றால், இதெல்லாம் நடக்காது என்று மக்கள் புரிந்துள்ளனர், என்றார். ராமதாசிடம், அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை குறித்து கேட்டதற்கு, "அது தோல்வி பயத்தில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை' என்றார்.

No comments: