Search This Blog

Monday, March 28, 2011

காவிரி பிரச்னையில் தமிழர் உரிமை பெற்றுத்தர நடவடிக்கை: ஜெ., உறுதி

காவிரி பிரச்னையில், தமிழர்களுக்கான உரிமை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். நதிநீர் பிரச்னையில் பக்கத்து மாநிலங்களுடன் சுமுகமாக பேசி தீர்வு காணப்படும்,'' என, ஜெயலலிதா பேசினார். புதுக்கோட்டை மாவட்டத்திலும் அவர் நேற்று பிரசாரம் செய்தார்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் காந்தி பார்க் நான்கு வீதியில் வேனில் இருந்தபடி, அ.தி.மு.க., வேட்பாளர்கள் கும்பகோணம் ராம.ராமநாதன், பாபநாசம் துரைக்கண்ணு, திருவிடைமருதூர் பாண்டியராஜன் ஆகியோரை ஆதரித்து அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியதாவது: வாழவைத்த தமிழரை வஞ்சித்தவர், கச்சத்தீவை தாரை வார்த்தவர், மீனவர் வதைபடுவதை தடுக்காதவர், இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து லட்சக்கணக்கான தமிழர்களை அழித்தவர், காவிரி பிரச்னையில் தமிழர்களின் உரிமையை தாரை வார்த்தவர், 2ஜி இமாலய ஊழலில் தமிழர்களை தலைகுனியச் செய்தவர் கருணாநிதி. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, 1.80 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு செய்து, அதன் மூலம் முதலீடு செய்து ஐந்து லட்சம் கோடி சம்பாதித்தவர் கருணாநிதி.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில், பெரம்பலூரில் ராஜா மூலம் ஏழைகளிடம் ஒரு ஏக்கர் 60 ஆயிரம் ரூபாய் என, 1,000 ஏக்கர் 6 கோடி ரூபாய்க்கு வாங்கி, ஒரே மாதத்தில் பெரிய கம்பெனிகளுக்கு அதை ஏக்கர், 18 லட்சம் என்ற விலைக்கு, 180 கோடிக்கு விற்றனர். ஒரு மாவட்டத்தில், 174 கோடி ரூபாய் அவர்களுக்கு லாபம் என்றால், தமிழகம் முழுமையிலும் இதே நிலையை சிந்தியுங்கள். விலைவாசி ஏற்றம் செயற்கையானது. மணல் கொள்ளையால், 50 ஆயிரம் கோடி, கிரானைட் கொள்ளையால், 80 ஆயிரம் கோடி அவர் குடும்பம் கொள்ளை அடித்துள்ளது. அனைத்து அரசுத் துறையிலும் ஊழல். கடந்த 1971 - 76ல் அவர் ஆட்சியில் வீராணம் திட்ட ஊழலில் சத்தியநாராயணரெட்டி உயிரை மாய்த்தார். 1989 - 91 அவர் ஆட்சியில் டி.ஜி.பி., துரை மர்மமாக இறந்தார். 1996 - 2001ல் அவர் ஆட்சியில் மேம்பால ஊழலில் சென்னை ரமேஷ் தற்கொலை, இப்போது சாதிக்பாட்ஷா தற்கொலை என தொடர்கிறது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தும் காவிரி பிரச்னைக்கு தீர்வில்லை. நடுவர் மன்ற தீர்ப்பு அமலாக்க நடவடிக்கை இல்லை. ஆனால், நாங்கள் வழக்கு தொடுத்துள்ளோம். கர்நாடகத்தில் இருந்து தன் குடும்பத்துக்கு வரும் வருவாய் பாதிக்கும் என்பதால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் ஊழலுடன், மக்களையும் ஏமாற்றுவதால் அவரை விரட்டி அடிக்க வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் தேர்தலில் ஓட்டளியுங்கள். அவரை குடும்பத்துடன் அப்புறப்படுத்துங்கள். காவிரி பிரச்னையில் தமிழர்களுக்கான உரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். நதிநீர் பிரச்னையில் பக்கத்து மாநிலங்களுடன் சுமூகமாக பேசி தீர்வு காணப்படும். விவசாயிகளுக்காக ஆறு, ஏரி, வடிகால் தூர் வாரப்படும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார். புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஜெயலலிதா நேற்று பிரசாரம் செய்தார்.

No comments: