Search This Blog

Monday, March 21, 2011

கூட்டணி கட்சிகள் வெற்றிக்கு பாடுபட வேண்டும்: விஜயகாந்த்

தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டார். ""கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற உழைக்க வேண்டும்,'' என, கட்சித் தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் நேற்று காலையில் ஈடுபட்டார்.இதையடுத்து, கட்சியின் உயர்மட்ட குழு மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம், கோயம்பேடு தே.மு.தி.க., அலுவலகத்தில் நடந்தது. பிற்பகலில் அ.தி.மு.க., - தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் விஜயகாந்த் கையெழுத்திட்டு அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவிற்கு அனுப்பி வைத்தார்.

இதையடுத்து, தே.மு.தி.க.,வுக்கு விருத்தாச்சலம், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், திருச்செங்கோடு, ஆரணி, செங்கம், பட்டுக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, சோளிங்கர், தர்மபுரி, கங்கவல்லி, மதுரை மத்தி, கூடலூர், திருவாடனை, திட்டக்குடி, குன்னம், மயிலாடுதுறை, திருவெறும்பூர், சேலம் வடக்கு, ராதாபுரம், சூலூர், விருகம்பாக்கம், ஓசூர், லால்குடி, பேராவூரணி, செங்கல்பட்டு, எழும்பூர், செஞ்சி, ஈரோடு கிழக்கு, கம்பம், சேந்தமங்கலம், திருப்பரங்குன்றம், விருதுநகர், ஆத்தூர், பண்ருட்டி, அணைக்கட்டு, பத்மநாபபுரம், வேப்பனஹள்ளி, மேட்டூர், ஆலந்தூர் ஆகிய 41 தொகுதிகளை ஒதுக்கி, அ.தி.மு.க., தலைமை அறிவித்தது.

நேற்று மாலை 4.30 மணிக்கு தே.மு.தி.க., முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் வெளியிட்டார். இதில், 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டனர். கட்சியின் கேப்டன் "டிவி' நேரடி ஒளிபரப்பில் வெளியிட்ட விஜயகாந்த், "தே.மு.தி.க., வேட்பாளர்கள் வெற்றி பெற கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும். முக்கியமாக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற, தொண்டர்கள் பாடுபட வேண்டும்' என, கேட்டுக்கொண்டார்.

No comments: