Search This Blog

Monday, March 28, 2011

நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா - பாக்., சுமுக பேச்சு

இரண்டாண்டு இடைவெளிக்கு பின், இந்தியா - பாக்., உள்துறை செயலர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நேற்று டில்லியில் நடந்தது. இதில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக, நீண்ட காலமாக இருநாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. கடந்த 2008ல், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்தி வைத்தது. இந்நிலையில், இரண்டாண்டு இடைவெளிக்கு பின், தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் உருவானது.

இதையடுத்து, டில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில், இருநாட்டு உள்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை, பாக்., உள்துறை செயலர் சவுத்ரி கமார் ஜமாம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இருநாட்டின் சார்பிலும் தலா 17 அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில், மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் உள்ளிட்டவர்களை இந்தியாவிடம் ஒப்படைப்பது, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது, மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷாகிர் ரகுமான் லக்வி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துவதற்கு இந்திய அதிகாரிகளை அனுமதிப்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து, இதில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஷாகித் மாலிக் கூறுகையில், "பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது' என்றார். மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறுகையில், "பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. சரியான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்' என்றார். இன்றும் இப்பேச்சு தொடர்கிறது. டில்லி மொகாலியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண பாக்., பிரதமர் கிலானி வருகிறார். இந்தியா - பாக்., அணிகள் மோதும் இப்போட்டி நடைபெறும் முன், இருதரப்பும் சேர்ந்து கூட்டறிக்கை விடும் சூழ்நிலையும் உருவாகியிருக்கிறது.

No comments: