Search This Blog

Tuesday, March 29, 2011

தேர்தல் முடிவில் மாற்றம் ஏற்பட்டால் கூட்டணி ஆட்சி பற்றி பேசி தீர்மானிப்போம்; கருணாநிதி பேட்டி

முதல்-அமைச்சர் கருணாநிதி சி.என்.என்., ஐ.பி.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- இந்த தேர்தலில் தமிழ்நாட்டு வாக்காளர்கள் முன் தி.மு.க. என்ன கேள்விகளை முன் வைக்கின்றது?

பதில்:- தி.மு.க. அரசு 1967 முதல் இதுவரையில் ஆற்றியுள்ள சாதனைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? நாங்கள் நம்பகமானவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? இல்லையா? நாங்கள் அறிவித்த திட்டங்கள், வாக்குறுதிகள் ஆகியவற்றை நிறைவேற்றி யிருக்கிறோமா? இல்லையா? அப்படி நிறைவேற்றக் கூடிய அளவுக்கு ஆற்றலும், அறிவும் அதே நேரத்தில் அக்கறையும் உள்ளவர்கள் நாங்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்களா? இல்லையா? தமிழ்நாட்டில் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு பாடுபடுகின்ற அரசு இது என்பதை அடித்தட்டு மக்க ளுக்காக உழைக்கின்ற அரசு இது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இல்லையா? இத்தகைய கேள்விகளைத்தான் நான் வாக்காளப் பெருமக்களிடம் இந்தத் தேர்தலையொட்டி வைக்க விரும்புகிறேன்.

கேள்வி:- தேர்தல் அறிக்கையில் பல இலவசத் திட்டங்களை அறிவிக்கின்றீர்கள். 2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இலவச கலர் தொலைக் காட்சி பெட்டிகளை வழங்கினீர்கள். தற்போது லேப்-டாப், கிரைண்டர் போன்றவைகளை தேர்தல் அறிக்கையில் இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறீர்கள். தேர்தலில் வெற்றித் தோல்வியை நிர்ணயிப்பது இலவச சலுகைகளை அளிப்பதாக வாக்குறுதி கொடுப்பது தான் என்று கூறப்படுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- இலவச சலுகைகள் என்பது வாக்குகளைப் பெறுவதற்காக அல்ல. ஏழை-எளிய மக்கள் தமிழகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களை வாழ வைக்க வேண்டும் என்ற குறிக்கோள் தி.மு.க. அரசுக்கு இன்று நேற்றல்ல- இந்த இக்கத்தை தொடங்கியதே அந்த ஏழைகளை வாழ வைப்பதற்காகத்தான். ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம் என்பது தான் எங்கள் தலைவர் அண்ணாவின் முழக்கம்.

அந்தச் சிரிப்பைக் காண்பதற்காகத் தான்- எழைகளின் முகங்களிலே அந்தச் சிரிப்பைக் காண்பதற்காகத்தான் நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்ற முயற்சிகளில் இந்த இலவச திட்டங்களும் ஒன்றாகும்.

கேள்வி:- கட்சி களிடையே தொகுதி ஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தை நடந்தபோது காங்கிரசுக்கும், தி.முக.விற்கும் இடையே கருத்து மாற்றங்கள் ஏற்பட்டன. தேர்தலுக்குப் பிறகும் இந்தக் கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

பதில்:- இரண்டும் அகில இந்திய அளவில் இல்லாவிட்டாலும் இந்திய அளவில் காங்கிரசும், தமிழ் நாட்டளவில் தி.மு.க.வும் பெரிய கட்சிகள் என்பதை நாங்கள் பரஸ்பரம் உணர்ந்தவர்கள். எனவே எங்களுக்கு ஒரு சில கொள்கைகள், லட்சியங்கள் இருக்கின்றன.

அவைகளை நிறைவேற்றுவதற்காக எங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது. உதாரணமாக தமிழைச் செம்மொழியாக ஆக்க வேண்டும் என்பதற்காக நூற்றாண்டு காலத்திற்கு முன்பு நாங்கள் திட்டம் வகுத்து - பரிதிமாற்கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரிகள் தமிழ் செம் மொழியாக ஆக வேண்டு மென்பதற்காகக் குரல் கொடுத்தார்.

அந்தக் குரல் என்ன ஆகுமோ என்ற அளவுக்கு இடையில் வந்த ஆட்சியாளர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் இருந்தபோது, சோனியா காந்தி வந்து தான் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர அவர்களே முன்னின்று முயற்சித்து மறைந்த கல்வி அமைச்சர் அர்ஜுன்சிங் உதவியோடு தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தார்கள்.

ஆகவே நாங்கள் மாறுபடுவதாக இருந்தால், எங்களுக்கும் மத்தியிலே அமைகிற அரசுக்கும் மாறுபட்ட கொள்கை ரீதியாக வித்தியாசங்கள் இருக்கலாம், அதாவது திட்டங்கள் தமிழகத்திற்கு இன்னும் நிறைய வேண்டும் என்பதில் போராடுவதின் காரணமாக ஏற்படுகிற மாறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால் அடிப்படைக் கொள்கைகளில் எங்களுக்கும் அவர்களுக்கும் அதாவது மதவாதத்தை ஒழிப்பது, இந்தியாவில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது போன்றவற்றில் நாங்கள் இருவரும் மாறுபட்டவர்கள் அல்ல.

கேள்வி:- இந்த முறை தேர்தலில் தி.மு.க. இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்த இடங்களில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையப் போகிறது என்பதற்கான முன் அறிவிப்பதாக இதனை எடுத்துக் கொள்ளலாமா?

பதில்:- அரசியல் மாற்றங்களைப் பொறுத்தவரையில் ஒரே கட்சியின் ஆட்சியா? அல்லது கூட்டணி ஆட்சியா? என்பதை தேர்தல் முடிந்த பிறகு தான் சொல்ல முடியும்.

மேற்கு வங்கத்தில் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கூட்டணி அமைத்து அந்தக் கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து - இடதுசாரிக் கட்சிகள், பார்வர்டு பிளாக் மற்றும் வலது சாரி கட்சிகள் எல்லாம் இடம் பெற்று அவர்கள் எல் லாம் தேர்தல் முடிந்த பிறகு உகந்தவாறு அரசு அமைக்கிறார்கள்.

அதைப் போல நாம் நம்புகிறேன், எண்ணுகிறேன். தமிழ்நாட்டு மக்களும் மற்றவர்களும் ஒரே கட்சியின் ஆட்சி நீடிக்க வேண்டுமென்று தான் கருதுவார்கள் என்று எண்ணுகிறேன். ஒரு வேளை வோட்டிங் பேட்டன் என்று சொல்வார்களே, அதிலே மாற்றம் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் ஒரு அரசு நிலைத்திருக்க முடியும் என்ற சூழ்நிலை தோன்றினால் நாங்கள் அப்போது மற்ற கட்சிகளோடு கலந்து பேசி அதைத் தீர்மானிப்போம்.

கேள்வி:- 12-வது முறையாக வேட்பாளராக நீங்கள் போட்டியிடுகிறீர்கள். இந்த நேரத்தில் உங்கள் மகன், துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உங்களுடைய அரசியல் வாரிசு என்பதில் ஏதாவது கேள்விக்குறி இருக்கிறதா?

பதில்:- எந்த கேள்விக் குறிக்கும் இடம் இல்லாமல் வளர்ந்தவன் தான் மு.க. ஸ்டாலின். நான் அரசியலில் நுழைந்து அறிஞர் அண்ணா தலைமையில் ஒரு அரசியல் கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்பவனாக இருந்து, பொருளாளராக அண்ணா அவர்களால் நியமிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த பொறுப்பை நான் எப்படி நிறைவேற்றினேனோ, அதற்கு அண்ணா காட்டிய அன்பும் என்னிடம் அவர்கள் வைத்த நம்பிக்கையும், அதற்கு கொஞ்சமும் குந்தகம் இல்லாமல் எப்படி நான் நடந்து கொண்டேனோ, அதைப் போலவே என்னுடைய தலைமையில் மு.க.ஸ்டாலின் தொண்டாற்றி வருகிறார்.

என்னிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்ற கழகத் தோழர்கள் கழகத்திலே இருக்கின்ற முன்னணியினர் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் மு.க.ஸ்டாலினிடமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே அது கேள்விக்குறியாக ஆவதற்கு எந்தவித நியாயமும் இல்லை.

கேள்வி:- அரசியலில் உங்கள் குடும்பத்தினரை நீங்கள் முன்னிலைப் படுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டிற்கு உங்கள் பதில் என்ன?

பதில்:- திராவிட முன்னேற்ற கழகம் ஒரு ஜனநாயக இயக்கம், அடுத்தது யார் என்ற கேள்விக்கு நாமே ஒருவரைப் பிடித்து வைத்து, இவர் தான் அடுத்தது என்று சொல்லக்கூடிய இயக்கம் அல்ல இது. அதாவது மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல இது. மடாதிபதி என்றால், உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் சங்கரமடம் இருக்கிறது அல்லவா, அந்த மடத்திலே பெரியவர் சங்கராச்சாரியார் இருந்து, தனக்கு பின்னர் இவர் தான் என்று ஒருவரை அடையாளம் காட்டி விட்டு சென்றார்.

அதை அந்த மடத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதைப் போல திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மத ஸ்தாபனம் அல்ல. இது ஜனநாயக ரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதை போல தான்இயக்கத் தோழர்கள், கழக செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

கேள்வி:- உங்கள் குடும்பத்தை ஊக்குவிக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு பற்றி?

பதில்:- எனக்கு குடும்பம் இருப்பதால் பெரிய தொல்லை, என்னைப் புரிந்த வர்கள் குடும்ப அரசியல் நடத்துகிறேனா இல்லையா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். குடும்பம் நடத்துவது என்றால் திருமணமாகி ஆணும், பெண்ணும் சேர்ந்து அவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகள், அண்ணன், தம்பி இவர்கள் தான் குடும்பம் என்று அர்த் தம் அல்ல.

துணைக்கு யார்-யாரோ சேர்ந்து கொண்டு சில குடும்பங்கள் உருவாகின்றன. நான் அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. ஒரு நேர்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன்.

கேள்வி:- ஸ்பெக்ட்ரம் 2ஜிஅலைவரிசை ஒதுக் கீட்டைப் பற்றி சி.பி.ஐ. உங்கள் மகளையும், மனைவியையும் விசாரித்ததோடு கலைஞர் தொலைக்காட்சி நிறுவ னத்தின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. அதனால் எதிர்க்கட்சிகள் உங்களுக்கு தெரியாமல் எதுவும் இதிலே நடைபெற்றிருக்க முடியாது என்று சொல்கிறார்கள். இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?

பதில்:- இது ஊழலே அல்ல. இதைப் பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளிலே செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் (உதவியாளரிடம் விசாரித்து விட்டு) 20 சதவீதம் பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவிகித பங்குதாரர்.

சரத்குமார் 20 சதவிகித பங்குதாரர். இந்த விவரத்தையே நான் விசாரித்து விட்டு தான் கூறுகிறேன் என்பதை நீங்கள் பார்க்கலாம். கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதிலே பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே அதைப் பற்றி பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கையினைத் தந்திருக்கிறார்.

அது எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. ஒரு கடனை அடைப்பதற்காக ஒருவரிடம் கடன் பெற்றார்கள். பிறகு பெற்ற கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அதற்கு வட்டி, அதற்காக வருமான வரித்துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு அதற்கு வருமான வரித்துறைக்கும் விவரம் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை.

கேள்வி:- இப்படி ஊழல் குற்றச்சாட்டினை சுமத்திய காரணத்தினால் தி.மு.க.கழகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதா?

பதில்:- சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது பல்லுக்கு பல் இருகாதம், பல்லிடுக்கு மூன்று காதம் என்று அந்த காலத்தில் பூசாரிகள் பம்பை அடிப்பார்கள். அதைக் கேட்டு இன்னொருவர் ஆமாம், ஆமாம் என்பார். மக்களும் அதை கேட்டு தலையட்டிக் கொண்டிருப்பார்கள்.

காதம் என்றால் பத்து மைல் தொலைவு. பல்லுக்கு பல் இரு காதம் என்றால் இருபது மைல் தூரம். பல் லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல். அந்த அளவிற்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால் வாய் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் ஆமாம், ஆமாம் என்று ஒப்புக் கொண்டு பூசாரி பம்மை அடிப்பதைப் போல பாமர மக்களை ஏமாற்றிட ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கிறார்கள்.

அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கிறார்கள். அந்த விஷயத்தைப் பற்றி நான் விரிவாக, உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடைபெறுகின்ற காரணத்தால் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஊழலா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது உச்சநீதிமன்றம். அதிலே நான் தலையிட விரும்பவில்லை.

அந்த நிறுவனத்துக்கு கடனைக் கொடுத்தவர் கள் மீது வழக்கு இருக்கலாம். கடன் வாங்கிய பணம் ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்கு பிறகுதான் தெரியும்.

கேள்வி:- கடைசியாக ஒரு கேள்வி. கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடப் போகின்றன. நீங்கள் ஒரு கிரிக்கெட் ரசிகர் என்ற முறையிலும் இந்திய வீரர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்.

பதில்:- ஒற்றுமையாக இருந்து அவரவர்களுக் கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து உற்சாகமூட்டுகின்ற முறையில் பொறுப்போடு விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் நான் அவர்களுக்கு தருகின்ற வாழ்த்து.

இவ்வாறு அவர் கூறினார்.

Monday, March 28, 2011

மாவு, சட்னி அரைக்க நேரமில்லாததால் மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட உள்ளது: கனிமொழி

பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, அவர்கள் சுய தொழில் செய்து முன்னேற்றம் அடைந்துள்ளனர். மாவு அரைக்கவும், சட்னி அரைக்கவும் அவர்களுக்கு நேரம் இல்லை என்பதால் மிக்சி, கிரைண்டர் தருவதாக கருணாநிதி அறிவித்துள்ளார்,'' என்று கனிமொழி எம்.பி., கூறினார்.

நாகை தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளர் முகமது ஷேக் தாவூதுக்கு ஆதரவாக நேற்று நாகூரில் பிரசாரம் செய்த கனிமொழி பேசியதாவது; கடந்த தேர்தலில் கூறிய வாக்குறுதிகளை, 100 சதவீதம் நிறைவேற்றியவர் முதல்வர் மு.கருணாநிதி. கடந்த தேர்தலில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு தருவோம், இலவச கலர் "டிவி' தருவோம் என்று நாங்கள் சொன்னதை யாரும் நம்பவில்லை. ஆனால்,ஒரு கிலோ அரிசி,ஒரு ரூபாய்க்கு கொடுத்தோம். இலவச கலர் "டிவி' 80 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் சொல்லாத "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்' மூலம் தமிழகத்தில் 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, சுழல் நிதியை நான்கு லட்சம் ரூபாயாக உயர்த்தி, அதில் இரண்டு லட்சம் ரூபாய் மானியம் என்று அறிவித்தது முதல்வர் கருணாநிதி தான்.

பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, அவர்கள் சுய தொழில் செய்து முன்னேற்றம் அடைந்துள்ளனர். மாவு அரைக்கவும், சட்னி அரைக்கவும் அவர்களுக்கு நேரம் இல்லை என்பதால் மிக்சி, கிரைண்டர் தருவதாக கலைஞர் அறிவித்துள்ளார். காப்பீட்டு திட்டம்,"108' ஆம்புலன்ஸ் என்று எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, தமிழகத்தை இந்தியாவிலேயே முன்னுதாரண மாநிலமாக மாற்றி காட்டியவர் கருணாநிதி என்பதை யாரும் மறுக்க முடியாது. சிலர் தேர்தல் அறிக்கையில் ஆடு,மாடு தருவதாக கூறுகிறார்கள். அவர்களின் பொய்யான வாக்குறுதியை, மக்கள் நம்பத் தயாராக இல்லை. நான்கு ஆடுகளை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள். அவர்கள் சொல்வதோடு சரி, எதையும் நிறைவேற்ற மாட்டார்கள். இவ்வாறு கனிமொழி எம்.பி., பேசினார்

காவிரி பிரச்னையில் தமிழர் உரிமை பெற்றுத்தர நடவடிக்கை: ஜெ., உறுதி

காவிரி பிரச்னையில், தமிழர்களுக்கான உரிமை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். நதிநீர் பிரச்னையில் பக்கத்து மாநிலங்களுடன் சுமுகமாக பேசி தீர்வு காணப்படும்,'' என, ஜெயலலிதா பேசினார். புதுக்கோட்டை மாவட்டத்திலும் அவர் நேற்று பிரசாரம் செய்தார்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் காந்தி பார்க் நான்கு வீதியில் வேனில் இருந்தபடி, அ.தி.மு.க., வேட்பாளர்கள் கும்பகோணம் ராம.ராமநாதன், பாபநாசம் துரைக்கண்ணு, திருவிடைமருதூர் பாண்டியராஜன் ஆகியோரை ஆதரித்து அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியதாவது: வாழவைத்த தமிழரை வஞ்சித்தவர், கச்சத்தீவை தாரை வார்த்தவர், மீனவர் வதைபடுவதை தடுக்காதவர், இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து லட்சக்கணக்கான தமிழர்களை அழித்தவர், காவிரி பிரச்னையில் தமிழர்களின் உரிமையை தாரை வார்த்தவர், 2ஜி இமாலய ஊழலில் தமிழர்களை தலைகுனியச் செய்தவர் கருணாநிதி. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, 1.80 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு செய்து, அதன் மூலம் முதலீடு செய்து ஐந்து லட்சம் கோடி சம்பாதித்தவர் கருணாநிதி.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில், பெரம்பலூரில் ராஜா மூலம் ஏழைகளிடம் ஒரு ஏக்கர் 60 ஆயிரம் ரூபாய் என, 1,000 ஏக்கர் 6 கோடி ரூபாய்க்கு வாங்கி, ஒரே மாதத்தில் பெரிய கம்பெனிகளுக்கு அதை ஏக்கர், 18 லட்சம் என்ற விலைக்கு, 180 கோடிக்கு விற்றனர். ஒரு மாவட்டத்தில், 174 கோடி ரூபாய் அவர்களுக்கு லாபம் என்றால், தமிழகம் முழுமையிலும் இதே நிலையை சிந்தியுங்கள். விலைவாசி ஏற்றம் செயற்கையானது. மணல் கொள்ளையால், 50 ஆயிரம் கோடி, கிரானைட் கொள்ளையால், 80 ஆயிரம் கோடி அவர் குடும்பம் கொள்ளை அடித்துள்ளது. அனைத்து அரசுத் துறையிலும் ஊழல். கடந்த 1971 - 76ல் அவர் ஆட்சியில் வீராணம் திட்ட ஊழலில் சத்தியநாராயணரெட்டி உயிரை மாய்த்தார். 1989 - 91 அவர் ஆட்சியில் டி.ஜி.பி., துரை மர்மமாக இறந்தார். 1996 - 2001ல் அவர் ஆட்சியில் மேம்பால ஊழலில் சென்னை ரமேஷ் தற்கொலை, இப்போது சாதிக்பாட்ஷா தற்கொலை என தொடர்கிறது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தும் காவிரி பிரச்னைக்கு தீர்வில்லை. நடுவர் மன்ற தீர்ப்பு அமலாக்க நடவடிக்கை இல்லை. ஆனால், நாங்கள் வழக்கு தொடுத்துள்ளோம். கர்நாடகத்தில் இருந்து தன் குடும்பத்துக்கு வரும் வருவாய் பாதிக்கும் என்பதால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் ஊழலுடன், மக்களையும் ஏமாற்றுவதால் அவரை விரட்டி அடிக்க வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் தேர்தலில் ஓட்டளியுங்கள். அவரை குடும்பத்துடன் அப்புறப்படுத்துங்கள். காவிரி பிரச்னையில் தமிழர்களுக்கான உரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். நதிநீர் பிரச்னையில் பக்கத்து மாநிலங்களுடன் சுமூகமாக பேசி தீர்வு காணப்படும். விவசாயிகளுக்காக ஆறு, ஏரி, வடிகால் தூர் வாரப்படும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார். புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஜெயலலிதா நேற்று பிரசாரம் செய்தார்.

தமிழக மக்களுக்கு தற்போது தேவை ஆட்சி மாற்றம்: விஜயகாந்த்

அ.தி.மு.க., கூட்டணியில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற மனம் இருக்கிறது' என, வேலூரிலும், "தமிழக மக்களுக்கு தற்போது தேவை ஆட்சி மாற்றம்' என, திருவண்ணாமலையிலும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

வேலூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் விஜய்யை ஆதரித்து விஜயகாந்த் பேசியதாவது: சென்னையில் இருந்து மதுரையில் குடியேறிய அழகிரி என்னை பார்த்து ரோஷக்காரன் என்றும், பின்னர் ரோஷம் இல்லாதவன் என்றும் கூறுகிறார். மதுரைக்காரனை பற்றி மதுரைக்காரனுக்கு தான் தெரியும். அவருக்கு தெரியாது. தி.மு.க., கூட்டணியிடம் பணபலம் மட்டுமே தான் உள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டுமே உள்ளது. பாலாற்றில் தண்ணீர் கொண்டுவர முயற்சி எடுக்காமல், மணல் கொள்ளை அடிக்கின்றனர். 1967ல் காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் இருந்து அண்ணா துரை விரட்டியடித்தார். ஆனால், கருணாநிதி மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர முயற்சிக்கிறார். மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் என்னுடைய குறிக்கோள். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஏழைகள் வாழ முடியாது. ஏழைகள் இருக்கும் வரை இலவசம் தொடரும் என்கிறார் கருணாநிதி. கருணாநிதி இருக்கும் வரை ஏழைகள் இருப்பர் என்பதே உண்மை.

திருவண்ணாமலை மாவட்டம்: தமிழக மக்களுக்கு தற்போது உடனடி தேவை ஆட்சி மாற்றம் தான். திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வேலு, ஆர்.எம்.வீரப்பன், ப.உ.சண்முகம் போன்றோரால், எம்.ஜி.ஆரிடம் அறிமுகப்படுத்தப்பட்டு எம்.எல்.ஏ., ஆனவர். இன்று அவர் எம்.ஜி.ஆர் போட்ட சத்துணவில் சத்து இல்லை என்று கூறுகிறார். இவரை சத்தில்லாதவராக மாற்ற அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும். கருணாநிதி பிறந்த நாளுக்கு ஓட்டல்களில், 20 ரூபாய்க்கு சாப்பாடு போடுகிறேன் என்று திட்டம் கொண்டு வந்தாரே அது செயல்படுகிறதா? ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இலங்கையில் தமிழர் இனத்தை குழி தோண்டி புதைத்திட்டவர் கருணாநிதி, இவர் மாறி மாறி பேசி வார்த்தை ஜாலத்தால் ஏமாற்றுபவர். மக்களுக்கு தற்போது உடனடி தேவை ஆட்சி மாற்றம். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

கூட்டணியை பிரிக்க சதி: திருத்தணி தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் தே.மு.தி.க., வேட்பாளர் அருண் சுப்பிரமணியத்தை ஆதரித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: திருத்தணி முருகன் துணை வருவான் என்பது போல, தி.மு.க., ஆட்சி மாற்றம் செய்வதற்கும் இந்த முருகன் துணை நிற்பான். நான் அ.தி.மு.க., கூட்டணியில் சேரக்கூடாது என, பலர் எதிர்க்கட்சிகளிடம் 100 கோடி, 200 கோடி, 500 கோடி ரூபாய் பணம் வாங்கிவிட்டதாக வதந்தி பரப்பினர். மக்களிடம் கூட்டணி வைத்துள்ளேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. தமிழக மக்களுக்காக தான் அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்தேன். இது எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சி என்பதால் தான் கூட்டணி வைக்க சம்மதித்தேன். கூட்டணி வைத்துள்ளதால் ஆட்சியில் பங்கோ, துணை முதல்வர் பதவியோ கேட்க மாட்டேன். மக்களை ஒரு போதும் நான் ஏமாற்ற மாட்டேன். இந்த வெற்றிக் கூட்டணியில் பிரிவினை ஏற்படுத்துவதற்கு சிலர் சதி செய்கின்றனர். தொண்டர்கள் யாரும் இதில் சிக்காமல், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும், நமது கட்சி வேட்பாளர்களுக்கும் வெற்றிக்காக பாடுபட வேண்டும்.

தேர்தல் அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் கருணாநிதிக்கு பிடிக்காது. தேர்தல் அதிகாரிகள் இன்னமும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். தன்னுடைய மகன், பேரன், மகள் ஆகிய உறவினர்களுக்கு மட்டும் பதவிகளை கொடுத்து குடும்ப அரசியல் நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதன் ரகசியம் காங்கிரஸ் கட்சியில் உள்ள 10 தலைவர்களுக்கு 6 தொகுதிகள் வீதமும், டில்லிக்கு 3 தொகுதிகள் வீதம் கட்சியை கூறுபோடுகின்றனர். ஏழைகளுக்கு தி.மு.க., ஆட்சியில் எந்தவித நன்மையும் செய்யவில்லை. விவசாயிகள் மின்தடையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டும். தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

ட்டசபை தேர்தலில் காங்., வேட்பாளரானார் தங்கபாலு: மனைவி மனு தள்ளுபடி

சென்னை, மயிலாப்பூர் தொகுதிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்தி தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவரது கையெழுத்து இல்லாத காரணத்தால், வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மாற்று வேட்பாளரான "டம்மி', தமிழக காங்கிரஸ் தலைவரும் அவரது கணவருமான தங்கபாலுவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இப்போது தங்கபாலு போட்டியிடுகிறார். வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலனை, நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி அறிவிக்கப்பட்டார். கட்சியினர் மத்தியில் ஜெயந்திக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தென்சென்னை மாவட்ட மகளிர் அணி செயலர் சிவகாமி, போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு, தேர்தல் அதிகாரி இன்னசன்ட் திவ்யா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது.

தங்கபாலு, அவரது மனைவி ஜெயந்தி, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜலட்சுமி, பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் போட்டி வேட்பாளர் சிவகாமி உட்பட 32 பேர் கலந்து கொண்டனர். ஜெயந்தியின் வேட்பு மனு பரிசீலனை செய்யும் போது அவரது மனுவில் ஜெயந்தியின் கையெழுத்து இல்லாத காரணத்தினாலும், இரண்டு முக்கிய ஆவணங்கள் இல்லாததாலும் அம்மனு நிராகரிக்கப்பட்டது. அவருக்கு மாற்று வேட்பாளரான தங்கபாலுவின் மனுவை சரிபார்த்த போது அனைத்தும் சரியாக இருந்ததால் அம்மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலு போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

தங்கபாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மயிலாப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஜெயந்தி தங்கபாலு அறிவிக்கப்பட்டார். கூட்டணிக் கட்சியினர் முன்னிலையில் தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை சரி பார்த்த தேர்தல் அதிகாரி, நான்கு மனுக்களும் சரியாக இருப்பதாகக் கூறினார். தற்போது இரண்டு மனுக்களை காணவில்லை; இரண்டு இடங்களில் வேட்பாளர் கையெழுத்து போடவில்லை என்று கூறுகிறார். மனு தாக்கல் செய்த போது சரியாக இருப்பதாகக் கூறிவிட்டு, இப்போது சரியில்லை என்று அதிகாரி கூறுவது ஏற்கக் கூடியது அல்ல. இரண்டு படிவங்கள் காணாமல் போனது குறித்து தேர்தல் அதிகாரிகள் மீது, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுப்பேன். வேட்பு மனு பரிசீலனையில் காங்கிரஸ் மாற்று வேட்பாளராக தாக்கல் செய்திருந்த என் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. என் மனைவி ஜெயந்தி மீது வழக்கு இருப்பதாக வதந்தி பரப்புகின்றனர். அதில் எந்தவித உண்மையும் கிடையாது. அவர் மீது எந்த வழக்கும் தொடரப்படவில்லை; எந்த வழக்கும் நிலுவையிலும் இல்லை. இவ்வாறு தங்கபாலு கூறினார்.

பின்னணி என்ன? மயிலாப்பூர் தொகுதியின் அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்தி தங்கபாலுவின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு, குறைபாடுகள் உள்ள வேட்பு மனுவை தங்கபாலுவும், அவரது மனைவியும் திட்டமிட்டே தாக்கல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜெயந்தி தாக்கல் செய்த வேட்பு மனு குறைபாடுகள் உள்ளதாகக் கூறி, மயிலாப்பூர் தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்துள்ளார். இதற்கு பதிலாக, ஜெயந்திக்கு, "டம்மி' வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த தங்கபாலுவின் மனுவை, தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டுள்ளார். இதன் மூலம் தங்கபாலு, மயிலாப்பூர் தொகுதியின் அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மயிலாப்பூர் தொகுதியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்பதற்காகவே, மனைவியின் வேட்பு மனுவில், உரிய ஆவணங்களை இணைக்கவில்லை என்று தங்கபாலு மீது, காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர். மனைவி பெயரில் தாக்கல் செய்துள்ள மனுவை அரைகுறையாக தாக்கல் செய்துவிட்டு, மாற்று வேட்பாளராக தன் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சரியாக தாக்கல் செய்துள்ளார். மாநில அரசியலுக்குள் நுழைய, பின் வழியை தங்கபாலு பயன்படுத்தியுள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

"சட்டசபை தேர்தலில், போட்டியிட நேரடியாக கட்சித் தலைமையிடம், "சீட்' கேட்டபோது, "மாநிலத் தலைவராக இருப்பவர் ஒரு தொகுதியில் முடங்கி விடக்கூடாது; மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டும்' எனக் கூறி நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. எனவே, அகில இந்திய தலைமையை ஏமாற்றும் வகையில் தங்கபாலு செயல்பட்டுள்ளதாக, கூட்டணிக் கட்சிகளில் சந்தேகம் எழுந்துள்ளது. காங்கிரசைப் பொறுத்தவரை, கூட்டணி ஆட்சி என்பதில் தெளிவாக உள்ளது. இது போன்ற சூழல் ஏற்படும் போது, மந்திரி சபையில் காங்கிரஸ் கட்டாயமாக பங்கேற்கும். அப்போது, தான் எம்.எல்.ஏ.,வாக இருக்க வேண்டும் என்பதற்காக, தங்கபாலு களத்தில் நுழைந்துள்ளார் என்றும் கூட்டணி கட்சியினர் சந்தேகிக்கின்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா - பாக்., சுமுக பேச்சு

இரண்டாண்டு இடைவெளிக்கு பின், இந்தியா - பாக்., உள்துறை செயலர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நேற்று டில்லியில் நடந்தது. இதில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக, நீண்ட காலமாக இருநாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. கடந்த 2008ல், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்தி வைத்தது. இந்நிலையில், இரண்டாண்டு இடைவெளிக்கு பின், தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் உருவானது.

இதையடுத்து, டில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில், இருநாட்டு உள்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை, பாக்., உள்துறை செயலர் சவுத்ரி கமார் ஜமாம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இருநாட்டின் சார்பிலும் தலா 17 அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில், மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் உள்ளிட்டவர்களை இந்தியாவிடம் ஒப்படைப்பது, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது, மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷாகிர் ரகுமான் லக்வி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துவதற்கு இந்திய அதிகாரிகளை அனுமதிப்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து, இதில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஷாகித் மாலிக் கூறுகையில், "பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது' என்றார். மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறுகையில், "பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. சரியான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்' என்றார். இன்றும் இப்பேச்சு தொடர்கிறது. டில்லி மொகாலியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண பாக்., பிரதமர் கிலானி வருகிறார். இந்தியா - பாக்., அணிகள் மோதும் இப்போட்டி நடைபெறும் முன், இருதரப்பும் சேர்ந்து கூட்டறிக்கை விடும் சூழ்நிலையும் உருவாகியிருக்கிறது.

மயிலாப்பூரில் அதிரடி திருப்பம்-ஜெயந்தி மனு தள்ளுபடி-வேட்பாளரானார் தங்கபாலு!

காங்கிரஸாருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் கட்சியினருக்கும் பெரும் வியப்பூட்டும் வகையில் மயிலாப்பூர் தொகுதியில் ஒரு அரசியல் நாடகம் இன்று அரங்கேறியது. அங்கு காங்கிரஸ் வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த ஜெயந்தி தங்கபாலுவின் மனுவை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். அதேசமயம், அவரது டம்மி வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த தங்கபாலுவின் மனு ஏற்கப்பட்டு விட்டது. இதனால் அவர் வேட்பாளராகியுள்ளார்.

வரலாறு காணாத குழப்பத்தில் உள்ளது காங்கிரஸ். வேட்பாளர் தேர்வு தொடர்பாக பல தொகுதிகளிலும் போர் வெடித்துள்ளது. இதை அடக்க முடியாமல் ஸ்தம்பித்துப் போய் வாயடைத்து நிற்கிறது காங்கிரஸ் மேலிடம்.

தங்கபாலு செய்த பெரும் குழப்பத்தால் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பெரும் கேள்விக்குறியாக்கி விட்டது காங்கிரஸ். இதனால் இத்தனை தொகுதிகளை காங்கிரஸுக்கு தேவையில்லாமல் அளித்துள்ள திமுக பெரும் கவலையிலும், கடுப்பிலும் உள்ளது.

இந்த நிலையில் தங்கபாலு அட்டகாசமான ஒரு ஸ்டண்ட்டை அடித்து அனைவரையும் மூக்கில் விரல் வைக்கச் செய்துள்ளார்.

இவரது மனைவி ஜெயந்திக்கு மயிலாப்பூரில் சீட் வாங்கிக் கொடுத்திருந்தார் தங்கபாலு. ஆனால் இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஜெயந்தி தோற்பது நிச்சயம் என்ற நிலை காணப்படுகிறது. மயிலை சிவகாமி என்பவர் போட்டி வேட்பாளராக களம் குதித்துள்ளார். இவருக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரஸார் உள்பட ஒட்டுமொத்த நிர்வாகிகளும் களம் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அதிரடியாக சில வேலைகளை செய்தார் தங்கபாலு. ஒவ்வொரு அரசியல் கட்சி வேட்பாளருடனும் ஒரு டம்மி வேட்பாளர் அதாவது மாற்று வேட்பாளர் மனு தாக்கல் செய்வது வழக்கம்.

ஜெயந்தி தங்கபாலுவுக்கு மாற்று வேட்பாளராக, அதாவது டம்மியாக தங்கபாலுவே மனு தாக்கல் செய்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இது காங்கிரஸாரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தங்கபாலு ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் இவ்வாறு செய்திருப்பதாக அனைவரும் கூறினர்.

2 ஆவணங்களை இணைக்கவில்லை

தற்போது தங்கபாலுவின் திட்டம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இன்று நடந்த வேட்பு மனு பரிசீலனையின்போது ஜெயந்தியின் வேட்பு மனுவை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.

வேட்பு மனுவுடன் முக்கியமான 2 ஆவணங்களை ஜெயந்தி தங்கபாலு தனது வேட்பு மனுவுடன் இணைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாகவே அவரது மனு நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காணாமல் போயிருச்சு-தங்கபாலு

ஆனால் அந்த இரண்டு ஆவணங்களும் வேட்பு மனுவுடன்தான் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது மாயமாகி விட்டது என்று தங்கபாலு புகார் கூறியுள்ளார். ஆனால் வேட்பு மனுவுடன் இணைத்துள்ள எதுவும் காணாமல் போக வாய்ப்பில்லை. ஜெயந்தி இணைக்கவில்லை, எனவேதான் நிராகரிக்கப்பட்டது என்று அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் தங்கபாலு கூறுவது பொய்யாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

நான்தான் வேட்பாளர்-தங்கபாலு அதிரடி

ஜெயந்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட போதிலும், தங்கபாலுவின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மயிலாப்பூர் வேட்பாளர் நான்தான் என்று தங்கபாலுவே அறிவித்துள்ளார்.

தங்கபாலுவின் இந்த அதிரடி செயலால் காங்கிரஸார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மிகப் பெரிய டிராமாவை படு கேஷுவலாக தங்கபாலு அரங்கேற்றியுள்ளார் என்று அவரது அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர்.

உண்மையில் தங்கபாலுதான் இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பியுள்ளார். ஆனால் நேரடியாக களத்தில் குதித்தால் காங்கிரஸாரின் ஒட்டுமொத்த கொந்தளிப்புக்குள்ளாக நேரிடும் (சேலம் லோக்சபா தொகுதியில் போட்டி படுதோல்வி அடைந்தவர் தங்கபாலு என்பது நினைவிருக்கலாம்) என்பதால் நேரடியாக களத்தில் குதிக்காமல், மனைவியை வேட்பாளராக களம் இறக்கி, சத்தம் போடாமல் பின்னாடியே இவரும் டம்மி வேட்பாளராக மனு தாக்கல் செய்து இப்போது அவரே வேட்பாளராகி விட்டார் என்கிறார்கள் அதிருப்தி காங்கிரஸார்.

தங்கபாலுவின் இந்த அலேக் ஐடியாவால் தங்கபாலு எதிர்ப்புக் கோஷ்டியினர் மேலும் டென்ஷனாகியுள்ளனர்.

ஜெயந்தி மீது போட்டி வேட்பாளர் புகார்

இதற்கிடையே, ஜெயந்தி தங்கபாலு மீது தேர்தல் அதிகாரிகளிடம் போட்டி காங்கிரஸ் வேட்பாளர் மயிலை சிவகாமி புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தன் மீது கிரிமினல் வழக்கு ஒன்று நிலவையில் இருப்பதை தனது வேட்பு மனுவில் ஜெயந்தி தெரிவிக்காமல் மறைத்து விட்டார்.

அதேபோல தனது குடும்பத்தின் மெகா டிவியின் நிர்வாக இயக்குநராக இருப்பதையும் தெரிவிக்காமல் அவர் மறுத்து விட்டார் என்று சிவகாமி கூறியுள்ளார்.

Sunday, March 27, 2011

பணம் வாங்கிக் கொண்டு வேட்பாளரை தடுத்த தங்கபாலுவைக் கைது செய்ய காங் கோரிக்கை

கிருஷ்ணகிரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹசீனா சயத்திடம் ரூ. 50 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு, அவருக்கு ஆதரவாக நடந்து கொண்டு, அவருக்கு மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மக்பூல் ஜானை வேட்பு மனு தாக்கல் செய்யாமல் தடுத்து, அவருக்கு ரூ. 10 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார் தங்கபாலு. எனவே அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திற்குப் புகார் அனுப்பியுள்ளார் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் சாந்தி என்பவர்.

திமுகவிடம் ஓரணியாக நின்று 63 தொகுதிகளைப் போராடி வாங்கி விட்ட காங்கிரஸ் கட்சியினர் இன்று சாக்கடை சண்டையில் குதித்துள்ளனர். கோஷ்டிகளின் குத்து வெட்டில் சிக்கி காங்கிரஸ் கட்சியின் மேலிடம் திகைத்துப் போய் நிற்கிறது.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் ஒன்று கிருஷ்ணகிரி. கிருஷ்ணகிரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹசீனா சையத்துக்கு தொகுதியில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சோனியா உத்தரவுப்படி கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக மக்பூல் ஜான் அறிவிக்கப்பட்டார்.

வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று பிற்பகல் 3 மணி வரை கிருஷ்ணகிரி வேட்பாளர் மக்பூல் ஜான் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பழைய வேட்பாளர் ஹசீனா சையத்தும் மற்றும் சில காங்கிரசாரும் ஏற்கனவே மனு தாக்கல் செய்து விட்டனர். அதிகாரப்பூர்வ வேட்பாளர் மக்பூல் ஜான் எங்கே சென்றார்? அவர் கடத்தப்பட்டதாரா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி 155வது வட்ட காங்கிரஸ் கவுன்சிலர் சாந்தி இன்று காலை சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரைச் சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலுவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனு கொடுத்தார்.

அதில்,

கிருஷ்ணகிரி தொகுதிக்கு முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஹசீனா சையத். இரண்டாவதாக வெளியிட்ட பட்டியலில் இவருக்கு பதிலாக மகபூல் ஜான் என்பவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாளான நேற்று மகபூல்கானை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு தடுத்துள்ளார்.

மேலும் அவருக்கு வேண்டப்பட்டவரான ஹசீனா சயத் என்பவரை வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்துள்ளார். இதற்காக அவரிடம் தங்கபாலு ரூ. 50 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு இவருக்கு சீட் வாங்கி கொடுத்திருக்கிறார். இந்தப் பணத்தில் 10 லட்ச ரூபாயை மகபூல் ஜானுக்கு தங்கபாலு கொடுத்துள்ளார்.

இவர்கள் மூவரும் சேர்ந்து கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு துரோகம் செய்துள்ளதுடன், லஞ்ச ஊழலிலும் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் தங்கபாலு லஞ்சம் வாங்கியது தெளிவாக தெரிய வருவதால் தங்கபாலுவையும் மற்றவர்களையும் கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த கோஷ்டிக் கலவரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Thursday, March 24, 2011

ஜெ.,அரசியல் வரலாறு முடிவுக்கு வரும்: ராமதாஸ் பேச்சு

இத்தேர்தலுடன் ஜெயலலிதாவின் அரசியல் வரலாறு முடிவுக்கு வரும்,'' என பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

சோழவந்தான் பா.ம.க., வேட்பாளர் இளஞ்செழியனை ஆதரித்து வாடிப்பட்டியில் பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க.,மாவட்டச் செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட காங்.,தலைவர் செல்வராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ராமதாஸ் பேசியதாவது: "கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்' என திருவாரூர் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசினார். நன்றிக் கடனாக நாங்கள், வட மாவடங்களில் கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம். ஜெயலலிதா, "வரும் காலங்களில் மக்கள் கையேந்தும் நிலை மாறும்' என குறிப்பிட்டுவிட்டு, தேர்தல் அறிக்கையையை வெளியிட்டுள்ளார். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு நான்கு ஆடு, ஒரு பசுமாடு வழங்கப்படும் என்கிறார். 30 லட்சம் பேருக்கு ஒரு கோடி 70 லட்சம் ஆடுகளை எப்படி உற்பத்தி செய்ய முடியும்? நடைமுறை சாத்தியம் இல்லாதது. இத்தேர்தலுடன் ஜெ., அரசியல் வரலாறு முடிவுக்கு வரும். என்றார். பா.ம.க.,மாவட்டச் செயலாளர் கிட்டு, தி.மு.க.,ஒன்றிய செயலாளர் பாலராஜேந்திரன், நகர் செயலாளர் பால்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் அயூப்கான் பங்கேற்றனர்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை இந்தியாவில் யாராலும் மிஞ்ச முடியாது. ஐந்தாண்டுகளுக்கு முன் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சொன்னதை மட்டுமில்லாமல் சொல்லாததையும் கருணாநிதி செய்தார். இதனால், ஒவ்வொரு தனி மனிதனும் பயன் பெற்றனர். படித்த, பாமர மக்கள் இதை உணர்ந்துள்ளனர். மீண்டும் கருணாநிதி முதல்வராக வரவேண்டும், என அவர்கள் உறுதியாக உள்ளனர். அவர் பட்டினியை போக்கியவர். உறங்க கான்கிரீட் வீடு கட்டி தந்தவர். மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு திட்டங்கள் கொண்டு வந்தவர். அவர் வரவில்லை என்றால், இதெல்லாம் நடக்காது என்று மக்கள் புரிந்துள்ளனர், என்றார். ராமதாசிடம், அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை குறித்து கேட்டதற்கு, "அது தோல்வி பயத்தில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை' என்றார்.

அ.தி.மு.க., வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

தமிழகத்தில் அ.தி.மு.க., வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஊழல் மிகுந்த கருணாநிதியின் குடும்ப ஆட்சி ஒழிய வேண்டும் என்று தமிழக மக்கள் நினைப்பதால், அ.தி.மு.க., நிச்சயம் வெற்றி பெறும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபை தேர்தலுக்கான, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை திருச்சியில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா நேற்று வெளியிட, மாநகர் மாவட்டச் செயலர் மனோகரன் பெற்றுக் கொண்டார். புதுச்சேரிக்கான தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட, திருச்சி புறநகர் மாவட்டச் செயலர் சுப்ரமணியன் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர், ஜெயலலிதா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை எப்படி உள்ளது?

தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு கெட்டு போய்விட்டது. அ.தி.மு.க., ஆட்சி வந்த பிறகு, தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுத்துச் சட்டம் ஒழுங்கு சீரமைக்கப்படும்.

* தி.மு.க., அரசு இலவசங்களை கொடுத்து ஏமாற்றுகிறது என்று பிரசாரம் செய்த நீங்களே, தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்துள்ளீர்களே?

தமிழகத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, அ.தி.மு.க., வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை சார்ந்து, தமிழகத்தில் அரிசி, பருத்தி, பால் உற்பத்தி பெருகும். புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். பல வளர்ச்சி திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளதால், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டு, அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். அதனடிப்படையில், தேவையான, தேவைப்படும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

* உங்களது தேர்தல் அறிக்கை தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை போலவே இருக்கிறதே?

தேர்தல் அறிக்கையை முழுமையாக படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

* இலவசங்கள் வழங்குவதற்கான நிதி ஆதாரம் இருக்கிறதா?

தி.மு.க., அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடனாக வைத்துள்ளது உண்மை தான். அதிலிருந்து மீட்டு, தமிழகத்தை மீண்டும் முன்னணி மாநிலமாக மாற்றுவோம். எங்களால் முடிந்ததைத் தான் சொல்லிருக்கிறோம். நிதி ஆதாரத்துக்கான அனைத்து வழிவகையும் செய்வோம். சொல்வதைத் தான் செய்வோம். செய்வதைத் தான் சொல்வோம்.

* தேர்தலில் பண வினியோகத்தைத் தடுக்க, தேர்தல் கமிஷன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா?

தேர்தல் கமிஷன் நடவடிக்கையை மீறி, தி.மு.க.,வினரால் பணம் எல்லா இடத்திலும் வினியோகம் செய்யப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அதைத் தடுக்க தேர்தல் கமிஷன் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* ஆண்டிப்பட்டி தொகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவது ஏன்?

ஆண்டிப்பட்டித் தொகுதி ரொம்ப தூரமாக இருக்கிறது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் அருகில் இருப்பதால் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறேன்.

* ஸ்ரீரங்கத்துக்கு ஏதாவது சிறப்புத் திட்டம் இருக்குமா?

ஸ்ரீரங்கத்துக்கு மட்டுமில்லை. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சிறப்புத் திட்டம் உள்ளது.

* அ.தி.மு.க.,வில் இருந்து ம.தி.மு.க., விலகியிருப்பது உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?

நாங்கள் எதையும் பின் நோக்கிப் பார்க்க விரும்பவில்லை. முன்நோக்கி செல்லவே விரும்புகிறோம்.

* வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஊழல் மிகுந்த கருணாநிதியின் குடும்ப ஆட்சி ஒழிய வேண்டும் என்று தமிழக மக்கள் நினைப்பதால், அ.தி.மு.க., நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு ஜெயலலிதா பதிலளித்தார்.

ஜெ., மனு தாக்கல்; "ஒர்க் அவுட்' ஆன "9' எண் சென்டிமென்ட்: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, நேற்று மனு தாக்கல் செய்தார். இதில், ஜெயலலிதாவுக்கு உகந்த, "9' எண் சென்டிமென்ட், "ஒர்க் அவுட்' ஆகியுள்ளது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். மனு தாக்கல் செய்வதற்காக நேற்று காலை விமானம் மூலம் திருச்சி வந்த ஜெயலலிதா, சங்கம் ஓட்டலில் தங்கினார். அங்கிருந்து காலை 11 மணியளவில் காரில் புறப்பட்ட அவர், திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள, ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான உதவி இயக்குனர் (நில சீர்திருத்தம்) அலுவலகத்துக்கு வந்தார். அங்கு காலை 11.03 மணியளவில், தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரனிடம் மனு தாக்கல் செய்தார். உறுதிமொழி ஏற்கப்பட்டு, ஆவணம் சரிபார்க்கப்பட்டு மனு தாக்கல் செய்யும் பணி, 11.07 மணியளவில் நிறைவடைந்தது. அங்கிருந்து புறப்பட்ட ஜெயலலிதா, மீண்டும் சங்கம் ஓட்டல் சென்றார்.

ஜெயலலிதா வருவதுக்கு முன்னதாக, அவரது மனுவை முன்மொழிந்த ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி மற்றும் வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆகியோர், மனு தாக்கல் செய்யும் இடத்தில் காத்திருந்தனர். ஜெயலலிதாவுடன், அவரது தோழி சசிகலா, திருச்சி மாநகர் மாவட்ட செயலர் மனோகரன் ஆகியோர் வந்திருந்தனர்.

"9' எண் "சென்டிமென்ட்': நேற்று முன்தினம், ஜெயலலிதாவுக்கு வேட்புமனு பெற்ற நிர்வாகிகள், அவருக்கு உகந்த கூட்டுத்தொகை எண், "9' வரும் நேரமான மதியம், 1.53க்கு மனுபெற்றனர். அதேபோல், நேற்று, "9' கூட்டுத்தொகை எண் வரும் நேரத்தில் மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 11.03 மணிக்கு மனு தாக்கல் செய்து, அனைத்து பணிகளும், 11.07 மணிக்கு முடிக்கப்பட்டது. 11.07 மணிக்கு கூட்டுத்தொகை, "9' வருவதால், அந்த சென்டிமென்டும், "ஒர்க் அவுட்' ஆனதாக கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஆட்சி அதிகாரத்திற்காக கூட்டணி அமைக்கவில்லை: விஜயகாந்த் பேச்சு

திருக்கோவிலூர்: ""நான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. என் மக்களின் நலனுக்காகத்தான், இந்த கூட்டணியை அமைத்துள்ளேன்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஐந்து முனை ரோட்டில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று மாலை 4.35 மணிக்கு தன் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். திருக்கோவிலூர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் வெங்கடேசன், உளுந்தூர்பேட்டை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு ஆகியோரை ஆதரித்து விஜயகாந்த் பேசியதாவது: விஜயகாந்த் தெய்வத்தோடு, மக்களோடு கூட்டணி என்று சொல்லிவிட்டு அ.தி.மு.க., வோடு எப்படி கூட்டணி வைத்தார் என கேட்பார்கள். தெய்வத்தோடு, மக்களோடு இருக்கும் கூட்டணி எப்போதும் இருக்கும். நான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. என் மக்களின் நலனுக்காகத்தான், இந்த கூட்டணியை அமைத்துள்ளேன்.

காங்., கட்சியில் ஐவர் குழு, அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு நடத்திக்கிட்டு இருக்கு. மனைவி, மகளை மேல் மாடியில சி.பி.ஐ., விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க. கீழையும் பிரிச்சி மேயராங்க, மேலயும் பிரிச்சி மேயராங்க இதுதான் அரசியல். கருணாநிதியின் தாரக மந்திரம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ், எங்கும் ஊழல் எதிலும் ஊழல். அதுதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணி அரசை தெய்வம் காலி செய்யும். ராமதாஸ், கருணாநிதிக்கு பூஜ்யம் மார்க் போட்டார். இப்ப சொல்றார் கருணாநிதி ஹீரோவாம். இது கொள்கை கூட்டணி இல்லை, மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டணி. இரண்டு ஏக்கர் நிலம் யாருக்கு கொடுத்தனர். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவதாகக் கூறி நீங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில், ஐந்து லட்சம் பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை.

மதுரைக்கு வந்து பிரசாரம் பண்ணிப்பார் என்று அழகிரி கூறுகிறார். மதுரைக்கு பிரசாரத்துக்கு வருவேன். இந்த உருட்டல் மிரட்டல தான் உங்க ஆட்சி நடந்துட்டு இருக்கு அது என்கிட்ட செல்லாது. ரிஷிவந்தியம் தொகுதியில் ஏதாவது மாற்றம் செய்யவேண்டும் என்ற முடிவோடு தான் இங்கு போட்டியிடுகிறேன். ரிஷிவந்தியத்தை குஷிவந்தியமாக மாற்றுவதே எனது லட்சியம். ஏன் ரிஷிவந்தியத்தில் போட்டியிட முடிவு செய்தேன் என்பதை உங்களுக்கு கூற கடமைப்பட்டுள்ளேன்.

"தினமலர்' இதழில் வெளியான செய்திபடி, நான் கடந்த முறை போட்டியிட்ட விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் இருக்கிறார். ரிஷிவந்தியத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார், சிவன் இருக்கும் இடத்தில் எல்லாம் இந்த விஜயகாந்த் இருப்பான். சிவன் எப்படி தனது மனைவிக்கு சரிபாதி அளித்தாரோ, அதேபோல் எனது மனைவிக்கு நானும் சமஉரிமை அளித்துள்ளேன். சிவன் அதர்மத்தை அழிப்பவர். அதனால், கருணாநிதியின் அதர்மத்தை அழிக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றிக்கேட்டால் கடந்த ஆட்சியில் நீங்கள் செய்யவில்லையா என கேட்டு திசை திருப்புகிறார். கடந்த, 1967ல் காங்., கட்சிக்கு எதிராக ஏழைகள் அனைவரும் தேர்தலில் நிற்க வேண்டும் என அண்ணாதுரை வாய்ப்பளித்தார். இப்போது பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தி.மு.க., வில் தேர்தலில் "சீட்' தரப்படும் அவலம் உள்ளது. நான் ஆறாவது முறையாக முதல்வராக வேண்டும் அதனால், எனது சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிடுவதாக கருணாநிதி கூறுகிறார். இத்தனை ஆண்டுகள் திருவாரூர் தெரியவில்லையா? கருணாநிதி இருக்கும் வரை ஏழைகள் தொடருவார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்கு எந்த நன்மையும் அவர் செய்யமாட்டார். காங்., கட்சிக்கு 63 சீட் கொடுக்க முடியாது என்று கூறிய கருணாநிதி, அதன்பின் எப்படி ஒதுக்கினர். தன்னை கைது செய்துவிடுவார்களோ என்ற பயம் தான் காரணம், என்றார்.

"முரசு' சின்னம் கிடைக்குமா? ""தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது,'' என விருதுநகர் தே.மு.தி.க., வேட்பாளர் பாண்டியராஜன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தே.மு.தி.க., கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 41 தொகுதிகளில் முரசு சின்னம் ஒதுக்கீடு செய்ய தேர்தல் கமிஷனிடம் அனுமதி கேட்டுள்ளோம். அவர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளனர்,'' என்றார். தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இது வரை தேர்தல் கமிஷன் தே.மு.தி.க., விற்கு "முரசு' சின்னம் ஒதுக்கீடு செய்ததாக தெரிவிக்கவில்லை. சின்னம் ஒதுக்கீடு செய்ய அவகாசம் இருப்பதால் இனிமேல் தேர்தல் கமிஷன் அனுமதிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.

63 தொகுதிகளிலும் காங்கிரஸை வீழ்த்துவதுதான் லட்சியம்! - சீமான்

சென்னை: காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, அந்தக் கட்சியை தமிழ்நாட்டில் இல்லாதொழிப்பது மட்டுமே நாம் தமிழர் கட்சியின் இப்போதைய நிலைப்பாடு என சீமான் அறிவித்துள்ளார்.

தமிழ் ஈழ தீவிர ஆதரவாளரான வைகோ அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி, தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டார். அப்படியெனில் அவரால் அதிமுக கூட்டணிக்கு அழைத்து வரப்பட்ட மற்றொரு ஈழ ஆதரவாளரான நாம் தமிழர் கட்சி சீமானின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது.

வைகோ - அதிமுக உறவு முறிவுக்குப் பிறகு பலர் மனதிலும் எழுந்த இந்தக் கேள்விக்கு கடந்த ஒரு வார காலமாக பதிலே இல்லை. தொடர்ந்து அறிக்கை மேல் அறிக்கையாகத் தந்து கொண்டிருந்த சீமானும், திடீரென அமைதியாகிவிட்டார்.

இந்தத் தேர்தலில் அவர் தனித்துப் போட்டியிடுவார் என்று நேற்று இரவு கூறப்பட்டது. இவை அனைத்தும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளாகவே இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு கூடிய நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் பேரவை, இந்தத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்துவதை மட்டும் பிரதானமாகக் கொள்வோம் என முடிவெடுத்தது. அதன்படி, தேர்தலில் போட்டியிடாமல், காங்கிரஸை எதிர்த்து நிற்கும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு பிரச்சாரம் மேற்கொள்வோம் என திடீரென முடிவு செய்து, அதனை இன்று காலை அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட இன்று காலை 11 மணிக்கு பத்திரிகையாளர்களை சென்னை பிரஸ் கிளப்பில் சந்தித்தார் இயக்குநர் சீமான்.

அவர் கூறுகையில், " இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி நேரடியாகப் போட்டியிடுவதில்லை என்று இப்போது முடிவு செய்துள்ளோம். காரணம், நாங்கள் தனியாக நிற்பதால் பெரும் வாக்குகள் திமுக அணியில் உள்ள காங்கிரஸுக்கு சாதகமாகப் போய்விடும் ஆபத்துள்ளது.

தனிப் பெரும் சக்தியாக காங்கிரஸை வீழ்த்த முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம். எனவே, காங்கிரஸை எதிர்த்துக் களம் காணும் எதிர் அணி வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில், எதிர்ப்பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருக்கிறோம்.

நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் பேரவை நேற்று எடுத்துள்ள முடிவு இது.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, எங்களுக்கு இரட்டை இலை, முரசு, கதிர், சுத்தியல் அரிவாள் போன்ற சின்னம் முக்கியமல்ல. காங்கிரஸை அழித்தொழிக்க வேண்டும் என்ற எண்ணமே முக்கியம்.

ஈழத் தமிழர்களைக் கொன்றழித்த கட்சி காங்கிரஸ். தமிழக மீனவர்கள் படுகொலையை வேடிக்கைப் பார்க்கும் கட்சி காங்கிரஸ். தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்த கட்சி காங்கிரஸ். காவிரித்தண்ணீருக்கும், முல்லைப் பெரியாறு தண்ணீருக்கும் தமிழனை கையேந்த வைத்த கட்சி காங்கிரஸ்.

எனவே அந்தக் கட்சியே தமிழகத்தில் இனி இருக்கக் கூடாது. இனி வரும் தேர்தல்களில் எந்த திராவிட கட்சியும் காங்கிரஸுடன் கூட்டு வைத்துக் கொள்ளவும் கூடாது. அப்படி ஒரு நிலை உருவாகத்தான் இந்தத் தேர்தலில் காங்கிரஸை தோற்கடிக்கும் முடிவை எடுத்துள்ளோம்.

காங்கிரஸை தோற்கடிக்க நீங்கள் மேற்கொள்ளும் பிரச்சாரம் அதிமுகவை ஜெயிக்க வைக்குமே?

அதுபற்றி எனக்கு கவலையில்லை. இப்போதைய நோக்கம், நமது இன எதிரி காங்கிரஸ் ஒழிய வேண்டும். அதன் பலன் யாருக்குப் போகிறது என்பது முக்கியமல்ல. பதவிக்கு வந்த பின் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை ஜெயலலிதா எடுத்தால், அப்போது அவரையும் எதிர்ப்போம். போராட்டங்களை நடத்துவோம்.

ஜெயலலிதாவின் ஈழத் தமிழர் நிலைப்பாட்டை ஒருபோதும் நாம் தமிழர் ஆதரிக்கவில்லை. ஆனால் இந்த தேர்தல் எங்களுக்கு ஒரு கெட்டவாய்ப்பு. வேறு வழியில்லை. எனக்கு முன் நான்கைந்து எதிரிகள் இருந்தாலும், யார் மோசமான எதிரியோ அவரைத்தான் முதலில் வீழ்த்த வேண்டியுள்ளது.

வைகோவையும் துணைக்கு அழைப்பீர்களா?

இந்தத் தேர்தலில் அண்ணன் வைகோ மற்றும் அவரது கட்சி மேற்கொண்டுள்ள முடிவு குறித்து நான் எதுவும் சொல்ல முடியாத நிலையில் உள்ளேன். அவர் சிறந்த அறிவாளி. தெளிந்த அரசியல் தலைவர். எனவே பல விஷயங்களையும் யோசித்துதான் இந்த முடிவை எடுத்திருப்பார்.

ஆனால் அவரை அதிமுக நடத்திய விதம், கூட்டணியிலிருந்து அவர் வெளியேறும் அளவுக்கு நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் கட்சியினருக்கும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழுணர்வாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனதை ரணமாக்கிவிட்டது.

அருமை அண்ணன் வைகோ, எனது நிலைப்பாட்டை நிச்சயம் வாழ்த்துவார் என்று நம்புகிறேன்.

"தமிழர்களைக் கொன்றழித்த காங்கிரஸ் வேட்பாளர்களைத் தோற்கடியுங்கள்" என்பதே இந்தத் தேர்தலில் எனது ஒரே பிரச்சாரம்.

உங்கள் பிரச்சாரம் எந்த அளவுக்கு காங்கிரஸை வீழ்த்த உதவும்?

அது எந்த அளவுக்கு பாதிப்பை முன்பு ஏற்படுத்தியது என்பதை காங்கிரஸ்காரர்களிடம் கேட்டுப் பாருங்கள். காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரையும் தோற்கடித்துவிட்டு, மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பேன்.

ஈழப் பிரச்சினை பற்றி மட்டும்தான் பிரச்சாரம் செய்வீர்களா.... இங்குள்ள தமிழர்களுக்கு என்ன செய்வதாக திட்டமிட்டுள்ளீர்கள்?

இந்தத் தேர்தலில் ஈழத் தமிழினத்துக்கு இந்த காங்கிரஸ் இழைத்த அநீதி மற்றும் இங்குள்ள தமிழர்களை தொடர்ந்து வஞ்சித்து வருவது குறித்தெல்லாம் பிரச்சாரத்தில் சொல்லப் போகிறேன்.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரவேசம் என்பது இனி வரும் இடைத்தேர்தல் ஏதாவதொன்றிலிருந்து தொடங்கும். 2016-ல் முழுவீச்சில் இருக்கும். அப்போது தமிழக மக்களுக்கு நாம் தமிழர் செய்யப் போகும் நல்ல விஷயங்கள், திட்டங்கள் பற்றியெல்லாம் விரிவாக எடுத்து வைப்பேன்.

திமுகவின் தேர்தல் அறிக்கைகள் குறித்து...

தமிழர்களைப் பிச்சைக்காரர்களாக்குவதை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இந்த தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. சாப்பாடு, வீடு, துணி, கட்டிக்க பொண்டாட்டி என எல்லாமே இலவசம்... எல்லாமே பிச்சையாகக் கிடைக்கிறது தமிழனுக்கு.

இதுவா தொலைநோக்குப் பார்வை? இலவசங்கள் என்று ஒழிகின்றனவோ அன்றுதான் நாடு உருப்படும். கல்வி, வேலைவாய்ப்பை முறையாகத் தாருங்கள். நாடு மற்ற வசதிகளை தானாகவே பெற்றுக் கொள்ளும்.

ஒரு பக்கம் நாட்டின் கடன் ஏறிக் கொண்டே போகிறது. இவர்கள் இலவசங்களை அடுக்கிக் கொண்டு போகிறார்கள். கடன் வாங்கி இலவசங்களைத் தருவது ஒரு பிழைப்பா?", என்றார் ஆவேசமாக.

ஏலம் விடும் விலை எனக்குப் பிடிக்காது, ஜாலமும் பிடிக்காது-கருணாநிதி

திமுக தேர்தல் அறிக்கைக்குப் போட்டியாக நீ 4 என்றால் நான் 5 என்பேன். நீ 5 என்றால் நான் 6 என்கிறேன் என்று ஏதோ ஏலம் விடுவதைப் போல தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த ஏலம் விடுகின்ற வேலையை நான் விரும்பவில்லை. எனக்கு ஏலமும் பிடிக்காது. ஜாலமும் பிடிக்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் நேற்று திமுக தேர்தல் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

நாம் இன்றைக்கு தி.மு.க.வை ஆக்கப்பூர்வமாக அமைப்பு ரீதியாக, அயல்நாட்டாரும் பார்த்து வியக்கத்தக்க அளவுக்கு வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த இயக்கம் ஜனநாயகத்தின் அடிப்படையில் தோன்றிய இயக்கம். ஜனநாயகத்தை வளர்ப்பதற்காக பாடுபடுகின்ற அறப்போர் இயக்கம்.

அவசர சட்டம், இந்திய திரு நாட்டின் மீது பாய்ந்த போது, நெருக்கடி நிலை ஏற்பட்ட போது, யாரையும் குறை சொல்லாமல் அன்றைக்கு இருந்த நிலைமைகளை எல்லாம் மக்களுக்கு விளக்கி மக்கள் அவசரநிலையைப் பற்றி, நெருக்கடி நிலையை எதிர்த்து நிற்க வேண்டிய நிலையை எடுத்துக் கூறி தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தமிழர்களையும் காப்பாற்றிக்கொண்டு ஜனநாயகத்தையும் காப்பாற்றிய பெருமை தி.மு.க.வுக்கு உண்டு.

அதனால்தான், அவைகள் நடந்து ஓய்ந்த பிறகு, சென்னையில் கடற்கரையில் உரையாற்ற வந்த இந்திரா காந்தி, சொன்னார்கள். சில தவறுகள் ஏற்பட்டுவிட்டன. அந்த தவறுகளுக்கு நான் நேரடியான காரணம் அல்ல. நாங்கள் இட்ட கட்டளையை, தவறாக புரிந்து கொண்டோ, அல்லது எஜமானனை விட வேலைக்காரர்கள் அதிகஆர்வம் உடையவர்கள் என்பதைக் காட்டுவதற்காகவோ சில அதிகாரிகள் செய்த தீவினையால், நாட்டில் ஏராளமானவர்களுக்கு கொடுமை இழைக்கப்பட்டு விட்டது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று இந்திரா காந்தி சென்னை கடற்கரையில் பேசினார் என்றால், அந்த வார்த்தையை வெளியிட என்ன காரணம். நாம் ஆர்த்தெழுந்து, அல்லது உணர்ச்சி வயப்பட்டு தலைகீழாக சில நிலைமைகளை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அன்றைக்கு நாம் செயல்பட்டிருந்தால், நான் நடந்தவைக்காக வருந்துகிறேன் என்று இந்திரா காந்தி சென்னையில் கடற்கரையில், பரந்த வெளியில் பேசியிருக்க மாட்டார்கள். அப்படி அவர்களை பேச வைத்தது நம்முடைய உறுதி. நாம் கொண்டிருந்த கொள்கை வளம். நம்மிடமிருந்த லட்சிய தாகம். அதனால்தான் அம்மையார் வருத்தம் தெரிவித்தார்.

அவர்கள் வருத்தம் தெரிவித்த சில மாதங்களில், அவர்களுடன் இணைந்து தி.மு.க. தேர்தலில் போட்டிட்டது. அந்த தேர்தலில் பெரு வெற்றியைப் பெற்று ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசை இந்திய திருநாட்டில் அமைத்தோம் என்றால், நெருக்கடி கால நெருப்பில் எங்கே வெந்து போய்விடுமோ, சுருண்டு போய்விடுவோமோ என அஞ்சி விடாமல் அதை எதிர்த்து நின்று நெருப்பையும் நீராக்கும் உத்தி தி.மு.க.வுக்கு உண்டு. அந்தநிலையால் தான் நாம் அமையாரின் பாராட்டை நாம் பெற்றோம். அப்படிப்பட்ட நிலைகளை, காரியங்களை, நிகழ்வுகளை எல்லாம் தாண்டித்தான் இன்று தி.மு.க. தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளுடன் இணைந்து ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற, ஜனநாயகத்திற்கு வருகின்ற ஆபத்துகளை தடுக்கின்ற பெரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

நாம் நம்முடைய மக்களுக்காக என்ன செய்தோம், என்ன செய்யப்போகிறோம் என்பவற்றை அறிவிப்பது அந்த தேர்தலில் வாக்குகளை சேகரிக்க விடுக்கின்ற வேண்டுகோள். அந்த வேண்டுகோள் விடுக்கும் முறையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சாயல் கொண்ட தேர்தல் அறிக்கை. கம்யூனிஸ்டு கட்சியினர் கூட வியக்கக்கூடிய அளவில் விடுக்கப்பட்ட தேர்தல் அறிக்கை. தோழமை கட்சிகள் பாராட்டிய தேர்தல் அறிக்கை. இதை, திருவாரூர் பொதுமேடையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பாராட்டி பேசினார்கள். இதற்கு மேலும் சிலவற்றை நீங்கள் சேர்க்கலாம் என்று கேட்டுக்கொண்டதால், அவைகளையும் சேர்த்து அவையும் வெளியிடப்பட்டுள்ளன.

இன்றைக்கு அதற்குப் போட்டியாக, நீ 4 என்றால் நான் 5 என்பேன். நீ 5 என்றால் நான் 6 என்கிறேன் என்று ஏதோ ஏலம் விடுவதைப் போல தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த ஏலம் விடுகின்ற வேலையை நான் விரும்பவில்லை. எனக்கு ஏலமும் பிடிக்காது. ஜாலமும் பிடிக்காது. நாம் சொன்னதை செய்வோம், என்று எங்கள் தேர்தல் அறிக்கையில், இன்று அல்ல, கடந்த காலத்தில் கூறி இருக்கிறோம்.

அந்த தேர்தல் அறிக்கைப் பற்றி ப.சிதம்பரம், இந்த தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலின் கதாநாயகன் என்று கூறினார். இப்போது எழுதப்பட்ட தேர்தல் அறிக்கை கதாநாயகி என்று கூறினேன். வில்லன் யார்? வருவார்கள். எந்த காட்சியிலும், திரைப்படத்திலும் வில்லன் வரத்தவறுவதில்லை. ஆனால், வில்லன் வீழ்ந்தான் என்பதுதான் படத்தின் முடிவாக இருக்கும். ஆகவே, கதாநாயகி என்று போற்றப்பட்ட இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள எல்லா அறிவிப்புகளும், தமிழகத்தின் தாய்மார்களுக்காக சொல்லப்பட்டவை.

கடந்த காலத்தில் எல்லோருக்கும் ஒரு டி.வி. தரப்படும் என்று கூறினோம். கருணாநிதி கதை விடுகிறார். நம்பாதீர்கள் என்று கூறிய குரல் இன்றும் என் காதில் கேட்கிறது. டி.வி. கொடுக்கிறோம் என்று கூறுவது பொய். நம்பாதீர்கள் என்று கூறினார்கள்.

ஆனால் கொடுத்தோம். லட்சக்கணக்கில் கொடுத்துவிட்டு, மிச்சம் யாருக்கும் இருந்தால் அவர்களுக்கு அடையாள சான்று கொடுத்து, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, அல்லது யாராவது ஆட்சிக்கு வந்தால் அவர்களிடம் கொடுத்து அந்த டி.வி.யை வாங்கிக்கொள்ளுங்கள் என்று அடையாள அட்டை கொடுத்திருக்கிறோம் என்றால் எங்களைப் போன்ற சத்தியசீலர்களை நீங்கள் அரசியல் வட்டாரத்தில் காண முடியும் என கருதுகிறீர்களா? அதனால்தான் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம். எங்களால் செய்ய முடிவதைதான் சொல்வோம்.

ஒவ்வொரு பெண்ணிற்கும், ஒவ்வொரு தாய்மாருக்கும் தேவையானவற்றை எங்களால் முடிந்த அளவு செய்வோம் என்று கூறியிருக்கிறோம். தேர்தலில் போட்டியிடுவோம். தேர்தல் வாக்குறுதியில் போட்டி போட மாட்டோம். முடியவும் முடியாது. ஆகாயம் அளவு காரியங்களை செய்வோம் என்று யாரையும் ஏமாற்ற எங்களுக்கு தெரியாது. செய்ய முடிந்ததைதான் சொல்வோம். உங்களுக்குத் தெரியாதா? கடந்த தேர்தலில் வெற்றிபெற்று மாநில கட்சி தலைவர்கள் வந்து என்னை வாழ்த்தி, முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது என்ன கூறினேன்.

தேர்தல் அறிக்கையில் ஒரு கிலோ அரிசி ரூ.2-க்கு தருவேன் என்று கூறியிருந்தேன். அதைப்படித்துக்காட்டி கையெழுத்தும் போட்டு பத்திரிகைகளுக்கும் கொடுத்தேன். 10 நாட்களுக்குப் பிறகு கணக்குப் பார்த்த போது, இன்னும் மலிவாக தரலாம் போலிருக்கிறது என்று தெரிந்த பிறகு ரூ.1-க்கு ஒரு கிலோ அரிசி என்று மாற்றினேன். யார் கேட்பது என்னை? கேட்க முடியாது. அது என் இஷ்டம். எனக்காக அல்ல. நாட்டு மக்களுக்காக. ஏழை, எளியவர்களுக்காக, பாட்டாளிகளுக்காக. ஏழைகளுக்கு ஒரு கிலோ அரிசி, ரூ. 1 என்ற நிலையில் இருந்து மாற்றி, பரம ஏழைகளுக்கு இந்த தேர்தல் அறிக்கையில், அவர்களுடைய வேதனையை குறைக்க, ஏற்கனவே வெளியிட்ட அந்த அறிக்கையில் இருந்து மாறுபட்டு இந்த தேர்தல் அறிக்கையில் 35 கிலோ அரிசி, பரம ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தேன்.

இதையெல்லாம் யாரையும் ஏமாற்ற அல்ல. நடக்கக்கூடியவை. செய்யக்கூடியவை. செய்யாவிட்டால் என் துண்டைப் பிடித்து கேட்கமாட்டார்களா, காதைப் பிடித்துக்கேட்க மாட்டார்களா. ஏழைக்காக இந்த அரசு இருக்கிறது. எல்லாம் இலவசம், இலவசம் என்கிறார்கள். தமிழகத்தில் கடைசி ஏழை இருக்கிற வரை இந்த இலவச திட்டங்கள் நீடிக்கும் என்று கூறினேன்.

இன்றைக்கும் கடைசியாக ஒரு ஏழை தமிழ்நாட்டில் இருக்கும் வரையில், ஏழைகளுக்கான இலவச திட்டங்களை நிறுத்த மாட்டேன். ஏழைக்காக நான் செய்கின்ற இந்த காரியங்களை பரம ஏழைகளுக்காக செய்யும் இந்த காரியங்களை நான் நிறுத்த மாட்டேன். என்னை இந்த பதவியிலே உட்கார வைத்ததற்கான காரணம் என்னை வாழவைப்பதற்காக அல்ல. நீங்கள் வாழ்வதற்காக. உங்களை நாங்கள் வாழ வைப்பதற்காக. இந்த நாட்டு மக்கள் எத்தனையோ ஆட்சிகளைப் பார்த்தவர்கள். நாம்பார்த்த ஆட்சிகளில் ஒன்று தான் வெள்ளைக்காரன் ஆட்சி. அந்த ஆட்சியைப் பார்த்து, அதற்குப் பின் வந்த காங்கிரஸ் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீதிக்கட்சி ஆட்சியைப் பார்த்தது. தி.மு.க. ஆட்சியைப் பார்த்தது.

இன்றைக்கும் இந்த ஆட்சி தொடர்ந்து நீடிப்பதைப் பார்த்து, அந்த ஆட்சியின் நன்மைகள் எல்லாம் தமிழனை வாழ வைக்க என்ற உண்மையை உணர்ந்தவர்கள்தான் தமிழகத்தில் உள்ளார்கள். எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் தமிழர், தமிழர், தமிழர், திராவிடர், திராவிடர், திராவிடர் என்பதில் எந்த விதமான மாற்றமும் இல்லை.

தமிழர்களுக்காக, திராவிடர்களுக்காக என் உடலில் உயிர் உள்ளவரை உழைப்பேன் என்று எடுத்துக்கொண்ட சபதம்தான் இந்த தேர்தல் அறிக்கையின் முகப்பு. அதைத் தருவோம், இதைத் தருவோம் என்று கூறாமல், ஒரே வரியில் கூற வேண்டுமானால் என் உயிரையும் தருவேன். உங்களுக்காக என் உயிரையும் தருவேன். என் வாழ்வையே தருவேன். எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், எத்தனை சாதனைகளைப் புரிந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய சுபாவம் எல்லா மனிதர்களுக்கும் வந்துவிடாது. அதை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள், பாராட்டக்கூடியவர்கள், அதற்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள், அதைக் கனிவோடு ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் தொகை குறைவு. ஆனால், அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தால் அவர்கள் நம் செயல்களை கவனித்தால், நம்முடன் ஐக்கியமாகிவிடுவார்கள். அப்படி ஐக்கியமாகின்ற காரியம் கடந்த சில மாதங்களாக வேகமாக நடைபெற்று வருகிறது.

தி.மு.க.வுடன் நம் கூட்டணியில் வந்துள்ள கட்சிகள் மாத்திரம் அல்ல. வேறு பல கட்சிகள் கூட தி.மு.க. இன்றைக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. இன்னும் சில கட்சிகள், நான் எதிர்பார்க்கின்ற கட்சிகள், இங்கே வராமல் எங்கே போவது என்று தெரியாமல் உள்ள கட்சிகள் கூட தி.மு.க.விற்கு வந்து அண்ணே என்னை மன்னித்துவிடு என்று சொல்லுகின்ற நிலை வரும். யாரிடத்திலும் நான் மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை. நான் அத்தகைய கேவலமான முறையை கடைப்பிடிக்க விரும்புவதில்லை. வெற்றிபெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் என்றெல்லாம் அரசியலில் இல்லை. அவர்களால் முடிந்ததை செய்தார்கள். நம்மால் முடிந்ததை செய்தோம். நாம் அந்த அளவிற்குதான் மக்கள் இடத்தில் செல்ல முடிந்தது. இரு கட்சிகளாக இருக்கிறோம். பிரிந்தோம்.

பிரிந்தவர்கள் கூடக்கூடாது என்பது சாஸ்வதம் (சாத்திரம்) இல்லை. பிரிந்தவர்கள் கூடுவதும் உண்டு. பிரிந்தவர்கள் கூடிய பிறகு அந்த ஒற்றுமையால், ஒற்றுமைக்கனலால், நம்மை ஒழிக்க எண்ணுபவர்கள் ஒழிந்து போனதும் உண்டு.

இலங்கையில், ஈழத்தமிழர்களிடத்திலே ஏற்பட்ட அந்த கொந்தளிப்பு, அவர்கள் நடத்திய போராட்டம், நாம் கண்ணீர் விடுகின்ற அளவிற்கு முடிந்தது ஏன்? என்ன காரணம்? அந்த போராட்டம் தமிழ் ஈழத்தை தராமல் தாழ்ந்து போனது ஏன்? என்ன காரணம்? சகோதரயுத்தம். இதைத்தான் நான் பல ஆண்டுகாலம் சொல்லி வந்தேன். யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. தமிழன் வீழ்ந்தது போல தெரியலாம். ஆனால் தமிழ்ச் சமுதாயம் எத்தனையோ முறை வீழ்ந்து வீழ்ந்து எழுந்த சமுதாயம். அதையாரும் அடியோடு வீழ்த்தி விட முடியாது. அதையாரும் அறவே அழித்து விட முடியாது. அந்த கனலில் அந்த தணலில் இன்னும் பல சமுதாயங்கள், எழுச்சிகள் ஏற்பட்டே தீரும். அந்த நம்பிக்கையுடன் தி.மு.க.வானாலும், அணி சேர்ந்திருக்கிற கூட்டணி கட்சி நண்பர்கள், தலைவர்களானாலும் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து உழைத்தால் முடியும்.

நாம் எதற்காக பல்வேறு கட்சிகளாக பிரிந்திருக்கிறோம்? ஒவ்வொருவருக்கும் கொள்கை உண்டு. ஒவ்வொரு கட்சியும் மக்களை வாழவைக்கத்தான் தொடங்கப்படுகிறது. ஒவ்வொரு கட்சியும் மக்களை வாழவைக்க தொடங்கப்படும் போது, எப்படி மக்கள் வாழாமல் போவார்கள்? மக்கள் வாழ முடியாமல் போனால், அது அந்த கட்சிகளின் குற்றம். கட்சிகளின் ஒற்றுமையின்மைதான் காரணமாக இருக்க முடியும். மக்களை வாழ வைப்பது நம் குறிக்கோள். லட்சியம். அந்த லட்சியத்திற்காகத்தான் கூட்டணி சேர்ந்துள்ளோம். அதற்காகத் தான் வாக்குகள் கேட்கிறோம். இந்த கூட்டணி தமிழகத்தை மீண்டும் ஆள உத்தரவை கேட்கிறது. நீங்கள் காலால் இடும் வேலையை தலையால் செய்ய இந்த கூட்டணி தயாராக உள்ளது என்றார் கருணாநிதி.

Wednesday, March 23, 2011

விஜயகாந்தை விட எனக்குத்தான் தொகுதி பற்றி அதிகம் தெரியும்: ரிஷிவந்தியம் காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் சொல்கிறார்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக எஸ்.சிவராஜ் நிறுத்தப்பட்டுள்ளார். 55 வயதாகும் சிவராஜ் பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர். பஸ் போக்குவரத்து உள்பட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். கடந்த 14 ஆண்டுகளாக அவர் விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவரது உறவினர் சுந்தரம் ரிஷிவந்தியம் தொகுதியில் 2 தடவை எம்.எல்.ஏ. ஆக இருந்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து கடந்த 1984-ம் ஆண்டு சிவராஜ் தன் 28-வது வயதில் முதன் முதலாக ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அந்த தொகுதியில் 4 தடவை எம்.எல்.ஏ. ஆக இருந்த சிறப்பு அவருக்கு உண்டு. தற்போது அவர் 5-வது தடவையாக எம்.எல்.ஏ. ஆகும் முயற்சியுடன் களம் இறங்கி உள்ளார்.

விஜயகாந்தும், பலம் பொருந்திய காங்கிரஸ் வேட்பாளரும் மோதுவதால் ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் களம் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜிடம் பேசியபோது அவர் கூறியதாவது:-

நான் இந்த மண்ணின் மைந்தன். ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் மீண்டும் என்னை தேர்ந்து எடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளேன். விஜயகாந்த் ஒரு கட்சிக்குத் தலைவராக இருந்தாலும் கூட மீண்டும் விருத்தாசலத்தில் போட்டியிட அவருக்கு துணிச்சல் இல்லை. அங்கிருந்து நழுவி ரிஷிவந்தியம் பக்கம் வந்ததன் மூலம் அவரது பலவீனம் தெரிகிறது. ரிஷிவந்தியம் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மூலை, முடுக்குகள் பற்றிய விபரம் எல்லாம் எனக்கு தெரியும். ஒவ்வொரு பகுதியின் தேவை என்ன என்பதை நான் நன்கு அறிவேன். விஜயகாந்துக்கு இது பற்றியெல்லாம் தெரியாது.

அவர் வெளியில் இருந்து வந்து இருக்கிறார். சொந்த ஊரில் நான் போட்டியிடுவது எனக்குள்ள பெரிய பலமாகும். ரிஷிவந்தியம் தொகுதியில் எந்த ஊருக்குச் சென்றாலும் என்னைத் தெரியும். தொகுதி முழுவதும் மக்கள் என் மீது நல்ல மரியாதையும் அன்பும் வைத்து இருக்கிறார்கள். தி.மு.க., பா.மக., விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் கூட்டணி பலமும் ஆதரவும் எனக்கு உள்ளது. எனவே விஜயகாந்த்தை எதிர் கொள்வதில் நான் கவலைப்படவில்லை. மக்கள் ஆதரவுடன் அவரை எதிர் கொள்வேன்.

ரிஷிவந்தியம் தொகுதியில் பல பள்ளிகளை தரம் உயர்த்தி உள்ளேன். சாலைகளை பழுது பார்த்துள்ளேன். எனவே மக்கள் என்னை நம்புகிறார்கள். கடவுள் துணையும் இருப்பதால் நிச்சயம் விஜயகாந்தை வெல்வேன். இவ்வாறு சிவராஜ் கூறினார்.

தே.மு.தி.க.வினர் கடந்த கால ஓட்டுப்பதிவுகள் புள்ளி விபரங்களின் அடிப்படையில் விஜயகாந்த் எளிதில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின் போது சிவராஜ் 54,793 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் எல்.ஆதிநாராயணன் 46,858 ஓட்டுக்கள் பெற்று தோல்வி அடைந்தார். அப்போது களம் இறக்கப்பட்டிருந்த தே.மு.தி.க. வேட்பாளர் டி.கே.கோவிந்தன் 20,283 ஓட்டுக்கள் வாங்கி 3-வது இடத்தில் இருந்தார். 2006 தேர்தலில் அ.தி. மு.க. பெற்ற 46858 ஓட்டுக்களையும், தே.மு.தி.க. வேட்பாளர் பெற்ற 20283 ஓட்டுக்களையும் கூட்டினால் 67,141 ஓட்டுக்கள் வருகிறது. அதாவது வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் வாங்கிய 54,793 ஓட்டுக்களை விட இது 12,318 ஓட்டுக்கள் அதிகமாகும். இந்த பார்முலாபடி விஜயகாந்த் எளிதில் வெற்றி பெறுவார் என்று தே.மு. தி.க.வினர் கூறுகிறார்கள்.

மேலும் 2009-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடந்த போது ரிஷிவந்தியம் தொகுதியில் தே.மு. தி.க. வேட்பாளருக்கு 24,512 ஓட்டுக்கள் கிடைத்திருந்தது. 2006 தேர்தலுடன் ஒப்பிடுக்கையில் 2009ல் தே.மு. தி.க.வுக்கு கூடுதலாக 4 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருந்தது. எனவே ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் தங்களை அதிகம் ஆதரிப்பதாக தே.மு.தி.க.வினர் கருதுகிறார்கள்.

அ.தி.மு.க.வின் பலமான வாக்கு வங்கியும் சேர்வதால் விஜயகாந்த் வெற்றி உறுதி என்று தே.மு.தி.க.வினர் நம்பிக்கையுடன் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் இந்த கூட்டல், கழித்தல்களை நம்பாமல், சாதி ஓட்டுக்களையும், கூட்டணி பலத்தையுமே நம்புகிறார். இதனால் மற்ற தொகுதிகளை விட ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் களம் அனல் பறப்பதாக உள்ளது.

கருணாநிதி முன்னிலையில் விஜயகாந்த்தை தாறுமாறாக விளாசி விமர்சித்த வடிவேலு

முதல்வர் கருணாநிதி தலைமையில் திருவாரூரில் நேற்று நடந்த திமுக பிரசாரக் கூட்டத்தில் நடிகர் வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை ஒருமையில் விளித்து, குடிகாரன், லூசு என்றெல்லாம் தாறுமாறாக விமர்சித்துப் பேசினார்.

நேற்றைய கூட்டத்தில் வடிவேலுவும் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அவர் யாரைக்குறி வைத்து இதில் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. விஜயகாந்த்தை குறி வைத்து அவர் கடுமையாக பேசப் போகிறார் என்ற பேச்சும் எழுந்தது.

அதற்கேற்ப நேற்று அத்தனை பேர் முன்னிலையிலும் விஜயகாந்த்தை இந்த சொல் தான் என்றில்லாமல் பாரபட்சம் பார்க்காமல் கடுமையாக திட்டிப் பேசினார் வடிவேலு. அவர் பாணியில் சொல்வதென்றால் நிச்சயம் விஜயகாந்த் காதில் ரத்தமே வந்திருக்கும். அவ்வளவு மோசமாக விமர்சித்துப் பேசினார் வடிவேலு.

குடிகாரன், லூசு என்றெல்லாம் விஜயகாந்த்தை கடுமையாக தாக்கினார் வடிவேலு. மேலும் விஜயகாந்ததை அவன், இவன் என்று ஒருமையிலேயே அவை அடக்கின்றி வடிவேலு பேசியதால் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். அதேசமயம், வடிவேலுவின் பேச்சை அமைச்சர் மு.க.அழகிரி குலுங்கிக் குலுங்கி சிரித்து ரசித்தார். கூட்டத்தினரும் வடிவேலு பேச்சை சிரித்துக் கேட்டனர்.

வடிவேலு பேச்சிலிருந்து சில பகுதிகள் (தாறுமாறாக பேசிய வார்த்தைகளைத் தவிர்த்து):

இந்த பூமிக்குள் வரும்போது இந்த மண்ணை எடுத்து என் நெற்றியில் பூசிவிட்டுதான் வந்தேன். அப்படி ஒரு மண். இந்த மண். நான் திரையில் காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைக்கிறேன். ஆனால் என்ன செய்தாலும் ஒரு மனிதனுக்கு எது தேவைப்படுகிறது.

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இவை கண்டிப்பாக தேவைப்படுகிறது. நான் மக்களில் ஒருவனாக பேசுகிறேன். கலைஞர் போட்ட திட்டங்களை கேட்டபோது, கண்ண கட்டுது. எதிர் அணி மிரண்டு கிடக்கிறது. எல்லா பக்கமும் அணைகட்டி வைத்துவிட்டார் கலைஞர்.

கர்ப்பிணி பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். கருவில் உள்ள குழந்தையும் பயன் அடைகிறது. நான் 25 வயதுக்கு மேல்தான் சம்பாதிக்க ஆரம்பித்தேன். ஆனால் கருவில் உள்ள குழந்தை மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறது.

இப்போது நான் மேட்டருக்கு வருகிறேன். ஒருவர் முந்தாநாள் கட்சியை ஆரம்பித்துவிட்டு, நாளைக்கு முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார். என்னவென்றால் அவர் கல்யாண மண்டபத்தின் இடையில் இரண்டு தூண் வந்துவிட்டதாம். இதுக்காக ஒரு கட்சியை ஆரம்பித்து, நான் அடுத்த முதல் அமைச்சர் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நான் கேட்கிறேன் முதல் அமைச்சர் பதவி என்ன மியூசிக்கல் சேரா. அந்த பதவி என்ன சாதாரண பதவியா. கல்யாண மண்டபத்தில் இரண்டு தூண் வந்ததற்கு, உடனே கட்சியை ஆரம்பித்து முதல் அமைச்சர் என்று சொல்லிக் கொள்கிறீர்களே.

இப்ப நான் சொல்கிறேன், நீ முதல் அமைச்சர் என்றால் நான் பிரதமர் (கருணாநிதியைப் பார்த்து) அய்யா, தப்பா நினைச்சுக்கக் கூடாது. நீ பிரதமர் என்றால் நான் ஜனாதிபதி. நீ ஜனாதிபதி என்றால் நான் ஒபாமா.

ஒருத்தர் என்னிடம் கேட்டார். ஏங்க அவர எதிர்த்து நிற்க போறேன் என்று சொன்னீர்களே, நிற்க போறீங்களா என்றார். அவரை எதிர்த்து நின்றால் எனக்குத்தான் கேவலம். அதனால நான் அந்த கேள்வியை ரிஜக்ட் செய்து விட்டேன். இப்ப மொத்த டீமையும் காலி செய்வதுதான் என் வேலை.

இந்த இடத்துல அவரைப் (விஜயகாந்த்) பத்தி பேசக் கூடாது. காரணம், அதற்கு அவருக்கு தகுதி இல்லை. இருந்தாலும் சொல்ல வேண்டியதை சொல்லித்தானே ஆகனும்.

முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு 41 சீட் வாங்க போனீர்களே. அங்க என்ன முதல் அமைச்சர் பதவி கொடுப்பார்களா. மிகப்பெரிய வீராப்பா பேசினீங்க.

அந்த கட்சி பெயர் கூட வாயில் வரமாட்டேங்குது. ஏதோ நாக்கு மூக்காவா, தேக்கு மூக்காவா, ஏதோ சொல்றாங்க. முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொள்வதோடு அல்லாமல், 2 ரூபாய்க்கு ஒரு தொப்பியை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு, அதேபோல் கண்ணாடி, கர்சிப் வாங்கி மாட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறார். கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்கிறார். நீங்கள் கருப்பு எம்ஜிஆர் என்றால் நான் கருப்பு நேரு.

நான்தாங்க கருப்பு நேருன்னு சொல்லிக்கிட்டு சோனியா காந்தி கிட்ட போய் பேசினா, என்ன வெளக்குமாத்தாலேயே அடிக்க மாட்டாங்க. பள்ளிக்கூடத்தில மாறுவேடப் போட்டியில போட வேண்டிய வேஷத்தையெல்லாம் பப்ளிக்காப் போட்டுக்கிட்டு பேசினா எப்படி.

கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துறாங்களாம். இதுகுறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, முதல் ரவுண்டு முடிஞ்சிருக்கு, ரெண்டாவது ரவுண்டு முடிஞ்சிருக்குன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. கடைசிலதான் அது தண்ணி அடிக்கிற ரவுண்டுன்னு எல்லோருக்கும் புரிஞ்சது.

நான் இந்த அணிக்கு வர காரணம் அண்ணன் அழகிரி மற்றும் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களும்தான். இரண்டு பேரும் சிங்கக்குட்டி மாதிரி. கலைஞர் ஆட்சிக்கு வந்தால் அவர் சொன்னதை செய்வார். சொல்லாததையும் செய்வார். இன்னும் வேணும்னு போய் கேட்டா அதையும் செய்வார் என்றார் வடிவேலு.

வடிவேலுவின் பேச்சில் விஜயகாந்த்தை மட்டும் அவர் கடுமையாக தாக்கிப் பேசினார். அதேசமயம், ஜெயலலிதா குறித்தோ, கூட்டணியின் மற்றவர்கள் குறித்தோ அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

சத்தம் போடாமல் 13 சீட்களைப் பிடித்தார் தங்கபாலு-காங்கிரஸார் கொந்தளிப்பு

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 63 சீட்களில் 13 சீட்களை தனது ஆதரவாளர்களுக்கு ஒதுக்கிக் கொண்டு விட்டார் தங்கபாலு. இதையடுத்து தங்கபாலுவுக்கு எதிராக காங்கிரஸார் ஆங்காங்கு போராட்டங்களில் குதித்துள்ளனர்.

அந்த வகையில் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம், இளங்கோவன் உள்ளிட்ட அத்தனை கோஷ்டிகளையும் அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இதனால் ஒட்டுமொத்த கோஷ்டியினரும் கொந்தளித்துள்ளனர். குறிப்பாக தங்கபாலு தனது மனைவிக்காக மயிலாப்பூர் சீட்டை வாங்கியது அனைவரையும் கோபப்படை வைத்துள்ளது.

மேலும், தனது ஆதரவாளர்களான தாமோதரனுக்கு ஆவடியையும், டாக்டர் நடேசனுக்கு திருவிகநகரையும் அவர் வாங்கியுள்ளார். சென்னை நகர தொகுதிகளை தனது ஆதரவாளர்களுக்கு அவர் வளைத்துக் கொண்டதால் கராத்தே தியாகராஜன், நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழக கோஷ்டிகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ஜி.கே.வாசன் குரூப் 22 இடங்களைப் பெற்றுள்ளது. சிதம்பரம் கோஷ்டிக்கு 12 சீட்கள் கிடைத்துள்ளன. இளைஞர் காங்கிரஸுக்கு 9 சீட் கிடைத்துள்ளது. ஜெயந்தி நடராஜன், இளங்கோவன், டாக்டர் ராமதாஸின் சம்பந்தி எம்.கிருஷ்ணசாமி, மணிசங்கர அய்யர் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு தலா ஒரு சீட் மட்டுமே கிடைத்துள்ளது.

தனது தரப்புக்கு வெறும் ஒரு சீட் மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பதால் இளங்கோவன் கடும் கோபமாக உள்ளாராம். அவரது ஆதரவாளர் பழனிச்சாமிக்கு மொடக்குறிச்சியை ஒதுக்கியுள்ளனர்.

தற்போதைய எம்.எல்.ஏக்களில் 29 பேருக்கு மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு ராமன், ராமநாதபுரம் ஹசன் அலி, சாத்தான்குளம் ராணி வெங்கடேசன் ஆகியோருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.

சத்தம் போடாமல் பெரிய கோஷ்டிகளுக்கு நிகராக தங்கபாலுவும் சீட் வாங்கி விட்டதால் காங்கிரஸார் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

நாகர்கோவிலில் கொடும்பாவி எரிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மற்றும் விளவங்கோடு தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகளும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் உருவப்படம் தாங்கிய டிஜிட்டல் பேனரை நேற்று மாலை தீவைத்து எரித்தனர்.

இந்த நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகம் முன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் அன்ஷாத், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி விஜய், குளச்சல் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஏ.ஸ்டார்வின், சைமன்காலனி நிர்வாகி ஜெரோம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அய்யர் ஆதரவு பெண் வேட்பாளருக்கு எதிர்ப்பு

விளவங்கோடு சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக குமரி மாவட்டம் மயிலாடி சேந்தன்புதூரைச் சேர்ந்த விஜயதரணி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மணிசங்கர அய்யருக்கு மிகவும் நெருக்கமானவராம். அய்யரின் ஆதரவாளரான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

இவர் வெளியூர்க்காரர் என்று கூறி குழித்துறையில் உள்ள மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன் காங்கிரசின் ஒரு பிரிவினர் நேற்று இரவு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது அய்யரை கடுமையாக விமர்சித்து கோஷமிட்டனர்.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு: மிக்சி, கிரைண்டர், பேன் இலவசம்

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை இன்று திருச்சியில் ஜெயலலிதா வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

* குடும்ப ரேஷன் அட்டைதா ரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

* விலைவாசி கட்டுப்பாட் டிற்குள் கொண்டு வரப்படும்.

* “எத்தனால்” எரிபொருள் உற்பத்தியை பெருக்குகிற வகையில், கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 2,500/- ரூபாயாக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு, நிர்வாகம் சீரமைக்கப்படும்.

* நலிந்த கரும்பு ஆலைகள் புதுப்பிக்கப்பட்டு, சர்க்கரை மற்றும் எத்தனால் எரிபொருள் தயாரிப்பு விரிவாக்கப்படும்.

*அத்மீறி மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துகளை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக் கப்பட்டு, சொட்டு நீர்ப்பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.

* ஆண்டிற்கு 7 லட்சம் டன் பருப்பு உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பருப்பு கொள்முதல் கொள்கையை உருவாக்கி, தர வேறுபாடு இல்லாமல் துவரம் பருப்பு கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய்க்குக் குறையாமல் கொள்முதல் செய்யப்படும்.

* குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பருப்பு, மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் வேறுபாடு இல்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும் பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி தண்ணீர் இலவச மாக வழங்கப்படும்.

* இதன் மூலம் 5.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும்.

* புதிதாக 1 லட்சம் பேருக்கு போக்குவரத்துத் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* இதன் மூலம் 20,000 தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* அனைத்து மாவட்டங் களிலும் மாவட்ட மருத்துவ மனைகளில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மற்றும் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவமனை கிராமத்திற்கே வரும் உன்னத திட்டம் செயல்படுத்தப்படும்.

* 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தொலை தூர மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.

* நவீன பசுமை வீட்டு வசதித் திட்டம் - அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள, சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.

* வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் 1,80,000/- ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு இத்திட்டம் 1 லட்சம் ரூபாய் மானியத்துடன் விரிவாக்கம் செய்யப்படும்.

* வீடில்லா ஏழை குடும் பங்களுக்கு வீடு கட்ட 3 சென்டில் இடம் அளிக்கப்படும்.

* கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வாங்கப்பட்ட வீட்டுக் கடன் மற்றும் வட்டிகளால் அல்லலுறும் கடனாளிகளின் பிரச்சனைகள் களையப்படும்.

* வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். கம்ப்யூட்டர் முறையில் மின்சார மீட்டர் அளவு கணக்கிடப்படும். மேலும் அரசு துறைகளிலும், தனியார் துறைகளிலும் மின்சாரம் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டு மின்சாரம் சேமிக்கப்படும்.

* அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

* மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத் தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப்படை அமைக்கப்படும்.

* தமிழகத்தில் இரண்டாம் விவசாய புரட்சித் திட்டம் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்படும். விவசாய உற்பத்தியை இரண்டு மடங்காகப் பெருக்கி, மதிப்பு கூட்டப்பட்ட விவசாய பொருட்களின் உற்பத்தியால் 9 சதவீத விவசாய வளர்ச்சியை அடைவோம்.

* தற்போதைய 8.6 மில்லியன் டன் அரிசி உற்பத்தியை 13.45 மில்லியன் டன்னாக உயர்த்துவோம்.

* விவசாயியின் தனிநபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்குக்கு மேல் உயர்த்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

* 30,000 ஹெக்டேர் நிலப் பரப்பை சிறப்பு சிறுபாசன திட்டத்தில் கொண்டு வருவோம்.

* விவசாய கருவிகளை அ.தி.மு.க. அரசு இலவசமாக வழங்கும்.

* மதிப்பு கூட்டப்பட்ட விவசாயத்தை தொழிலாக அறிவிக்கப்பட்டு - உணவு பதப்படுத்தும் சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு, விவசாயிகள் விவசாய நிறுவனங்களில் பங்குதாரர்கள் ஆக்கப்படுவார்கள்.

* அனைத்து மாவட்டங்களிலும் தேவைக்கேற்ற குளிர் பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும். விவசாய விளை பொருள்கள் சேகரிப்பு நிலையங்களை நவீனப் படுத்துவோம்.

* விவசாய உற்பத்தி மற்றும் லாபத்தை கணக்கிட்டு அதன் அடிப்படையில் குறைந்த ஆதரவு விலை அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும், கரும்பின் விலையை நிர்ணயிப்பதைப் போல விலை நிர்ணயம் செய்யப்படும்.

* கடைகளில் வாங்கி உண்ணும் உணவு பொருட்களுக்கு இடைத்தரகர்கள் நீக்கப் பட்டு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட்டு உபயோகிப் பாளர்களுக்கும், விவசாயி களுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் பயன் தரக்கூடிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஒரு லட்சம் ஹெக்டேரில் கரும்பு பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உற்பத்தி இரண்டு மடங்காகப் பெருக்கப்படும்.

* 2012ஆம் ஆண்டுக்குள், அதாவது இரண்டு வருடங்களுக்குள் 151 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், நகராட்சிக் கழிவைக் கொண்டு 1000 மொகவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

* 2013ஆம் ஆண்டுக்குள் பத்து 300 மெகாவாட் சூரிய சக்தி பூங்கா உருவாக்கப்பட்டு 3000 மெகாவாட் மின்சாரம் அதன் மூலம் தயாரிக்கப்படும்.

* தெரிந்தெடுக்கப்பட்ட 160 கிராமப் பஞ்சாயத்துக்களில் 200 கிலோ வாட் உயிரிதிரள் இயற்கை எரிபொருள் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கிராமப் புறங்களில் 64000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

* வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும்.

* கிராமப்புற தெரு விளக்குகள் சூரிய ஒளி மின்சா ரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ் நாட்டை பன்முக சமூக, பொருளாதார வளம் பெற்ற மாநிலமாக மாற்றி, 1,20,000/- கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை 5 வருடங்களில் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாத, அமைதியான, பாதுகாப்பான, ஒட்டு மொத்த வளர்ச்சி அடைந்த சமத்துவ தமிழகத்தை அமைப்போம்.

* நவீன மக்கள் சந்தைகள் மற்றும் பொருட்களை பதப்படுத்தப்பட வேண்டிய குளிர்சாதன வசதிகள் செய்து தரப்படும்.

* பருத்தி உற்பத்தியை மற்றும் விளைச்சலை இரண்டு மடங்காக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* 6 ஆடை அலங்கார சிறப்பு பொருளாதார மண்டலங்கள் துவக்கப்படும். இதன் மூலம் தமிழ் நாட்டில் 70 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

* 10 ஆடை அலங்கார பூங்காக்கள் உருவாக்கப்படும்.

* மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்க திட்டம் தீட்டப்படும்.

* 2016ஆம் ஆண்டுக்குள் 6000 கிராமங்களில் சீரமைக்கப்பட்ட பால் பண்ணைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரில் இருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதை ஊக்குவிக்கும் வகையில் 6000 கிராமங்களில் சுமார் 60,000 பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகைகள் செய்யப்படும்.

* 2015க்குள் 100 பெரிய பால் பண்ணைகள், பால் பதப்படுத்தும் நிலையங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கும் சிறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு இதன் மூலம் கிராமப் புறங்களில் சுய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

* வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கால்நடை வளத்தைப் பெருக்கும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

* 30லிருந்து 40 கிராமங்கள் வரை இணைக்கப்பட்டு, அவற்றிற்குத் தேவையான அடிப்படை சாலை மற்றும் கட்டமைப்புகள், தொலைத் தொடர்பு இணைப்புகள், அறிவுசார் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக கிராமப்புற பொருளாதார மேம்பாடு அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்படும்.

* மாணவர்களுக்கு 4 சீருடைகளும், காலணிகளும் இலவசமாக வழங்கப்படும்.

* அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 1,000/- ரூபாய் முதல் 5,000/- ரூபாய் வரை வழங்கப்படும்.

* பள்ளியில் படிக்கும் +1 மற்றும் +2 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.

* பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்க மாணவர் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்படும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை பற்றிய பயம் பெற்றோர்களுக்கு இல்லாத நிலை உருவாக்கப்படும்.

* மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு சிறப்புத் திட்டம் வகுக்கப்படும்.

* பல்கலைக்கழகங்களின் தரம் உலகத் தரத்திற்கு இணையாக உயர்த்தப்பட்டு, சீர்படுத்தப்படும்.

* மாணவர்களின் பன்முக திறனை ஊக்குவிக்க தனித் திறமை மற்றும் அறிவுசார் வளர்ச்சிக் கழகம் உருவாக்கப்படும்.

* அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் (கலை, அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் பல் தொழில் பட்டய கல்லூரிகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படும்.

* மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும்.

* இயந்திர மீன்பிடி படகுகள் வாங்கத் தேவையான மானியம் வழங்கப்படும். * 13 குளிர்சாதன மீன் பூங்காக்கள் அமைக்கப்படும்.

* மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். * பருவ காலத்தால் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4,000/- ரூபாயாக வழங்கப்படும்.

* கச்சத் தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்கப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

* தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் தொழில் தொடங்க முனைவோருக்கு 25 சதவீத மானியத்தில் கடன் உதவித் தொகை வழங்கப்படும்.

* மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மாவட்டம் தோறும் மண்பாண்ட தொழிற்கூடங்கள் அமைத்துத் தரப்படும்.

* படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் பல்வேறு தொழில் பூங்காக்களில் 25 சதவிகிதம் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

* வீடுகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளைகளை முற்றிலும் தடுக்க தற்காப்பு கலை பயின்ற இளைஞர்களைக் கொண்டு சிறப்பு சுய பாதுகாப்பு படைகள் அமைக்கப்படும். அவர்கள் சம்பவம் நடக்கும் இடத்திற்கு விரைந்து வந்து தடுத்து பாதுகாக்க நவீன முறைகளுடன் பயிற்சி அளிக்கப்படும். வீட்டை பூட்டி வெளியூர் செல்லும் மக்களின் வீடுகளும் பாதுகாக்கப்படும்.

* சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். அதில் 25 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும்.

* பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தொழில்நுட்பத்தின் மூலம் கிராமப்புறச் சாலைகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டு, பிளாஸ்டிக் கழிவு இல்லாத கிராமங்கள், நகரங்கள் உருவாக்கப்படும்.

* திருநங்கைகளுக்கான சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும்.

* தாய்மார்களுக்கு ஒரு காற்றாடி, ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.

* குழந்தையை பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறையும், 12,000/- ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும்.

* 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.

* முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற முதிய ஆண்கள் மற்றும் பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள் தங்குவதற்கு சிறப்பு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும்.

* அங்கு அவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படும்.

* இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகள் போல் வாழும் நிலைமையை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

* இலவச திட்டங்கள் இலங்கை தமிழ் அகதிகள் முகாமுக்கும் நீட்டிக்கப்படும்.

* தமிழ் நாட்டு நதிகளை இணைக்கும் நவீன நீர்வழிச் சாலை உலக வங்கி கடன் பெற்று செயல்படுத்தப்படும்.

* காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ் மொழியின் பெருமையை மற்ற மொழியினரும் உணர்ந்து அதைப் பற்றி அறிய, திருக்குறள், தமிழ் காப்பியங்கள், இலக்கண இலக்கியங்கள், புராண, இதிகாச நூல்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் பல்வேறு வரலாற்று புகழ் பெற்ற நூல்களை பல்வேறு இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், சீன, அரேபிய மற்றும் உலகில் அதிக மக்கள் பேசும் மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, இணைய தளத்தில் இடம்பெறச் செய்து, நமது தமிழ் மொழியின் பெருமை உலகமெல்லாம் பரவ வழிவகை செய்யப்படும்.

* தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப் பில் முன்னுரிமை கொடுக்கப் படும். அரசு ஊழியர் நலன்

* அரசு ஊழியர்கள் நலன்கள் பாதுகாக்கப்பட்டு, அவர்களது உடல் நலம், மனநலம் பேணப்பட்டு, தமிழக அரசு ஊழியர்கள் இந்தி யாவிலேயே திறம்பட பணியாற்றும் சூழல் உருவாக்கப்படும்.

* அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன் முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் அவ்வப் போது நிறைவு செய்யப்படும்.

* அரசு ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் அனைத்து சலுகைகளும் தொடரும்.

* மாற்றுத் திறனாளிகளுக் கென 3 சதவீத இட ஒதுக் கீடு அரசுப் பணியில் ஒதுக் கப்படும். * அரசு கட்டிடங்கள் மற்றும் பொது இடங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வகையில் உடனடியாக மாற்றம் செய்யப்படும்.

* தமிழகத்தில் கேபிள் டிவி தொழில் அரசுடமை யாக்கப்படும்; ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

* அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டிவி இணைப்பு அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.

* டி.டி.எச். சேவைகள் மக்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கேபிள் டிவி மூலமாக கடைசி மைலில் வீட்டுக்கு இணைப்பு கொடுப்பவர்களது தொழில் பாதுகாக்கப்படும். அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* மொபைல் மின்அணு ஆளுமை திட்டம் செயல் படுத்தப்படும்.

* சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூருக்கு சிங்கப்பூரில் உள்ளபடி மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

* தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000/- ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (1/2 சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

* இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

* காவல் துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* புலனாய்வு மற்றும் சைபர் குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு நவீனபடுத்தப்படும்.

* சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, வி.ஐ.பி. மற்றும் பாதுகாப்பு படைகள் தனியாக பிரிக்கப்பட்டு, அவர்களது எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்த வழிவகை செய்யப்படும்.

* பணியில் மரணமடையும் காவலர்களுக்கு - கருணைத் தொகை 3 லட்சம் ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படும்.

* காவல் துறையினருக்கு சிறப்பு மன வளக்கலை பயிற்சி நடத்தப்படுவதோடு, அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஒவ்வொரு வருடமும் இலவசமாக நடத்தப்படும்.

* ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கட்டுமானத் துறை, கப்பல் கட்டும் துறை போன்ற துறைகள் ஊக்குவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

* நடைமுறையில் உள்ள மதுரை - தூத்துக்குடி - அருப்புக்கோட்டை காரிடார் - “தன்னிறைவு கொண்ட இன்டஸ்டிரியல் காரிடார்” ஆக அறிவிக்கப்பட்டு அதற்கு தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

* கப்பல் கட்டுமானத் துறையில் 10,000 கோடி ரூபாய் அந்நிய நாட்டு முதலீடு ஈர்க்கப்படத் தேவையான பல்முனை முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் - அதன் மூலம் தமிழகத்தை கப்பல் கட்டும் துறையில் முன்னோடியாக்குவோம்.

* தென் தமிழகத்தில் “ஏரோ பார்க்“ ஏற்படுத்தத் தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* திருப்பூர் சாயக் கழிவு பிரச்சனையை பரிசீலித்து அதன் கழிவுகளை சுத்தி கரிக்கத் தேவையான தொழில் நுட்பத்துடன் விஞ்ஞான வழியில் கழிவு அகற்றும் நிலையம் உருவாக்கப்படும்.

* முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்.

* அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு மானியம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கிராம நிர்வாக அலு வலர்கள் தேர்வு முடிவுகள் உட்பட அனைத்து தேர்வு முடிவுகளும் உடனடியாக வெளியிட ஆவன செய்யப்படும்.

* மருத்துவ கல்வி பொது நுழைவுத் தேர்வு முறை தமிழகத்தில் அமுல் படுத்தப்பட மாட்டாது.

* உழவர் பாதுகாப்புத் திட்டம் மீண்டும் நவீன காலத்திற்கு ஏற்ற வடிவில் புதிய பொலிவுடன் சிறப்பான முறையில் செயல் படுத்தப்படும்.

* 108 ஆம்புலன்ஸ் திட்டம் மேம்படுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் ஊர்திகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* ஒவ்வொரு வருடமும் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் மற்றும் பள்ளி சார்ந்த இதர சான்றிதழ்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்கப்படும்.

* சத்துணவுப் பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பாக பிரச்சனைகள் முன்னுரிமையோடு அணுகப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.

* போக்குவரத்து தொழி லாளர் நலன் பேணப்பட சிறப்புத் திட்டங்கள் தீட்டப்படும்.

* சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு திட்டம் நடை முறைபடுத்தப்படும்.

அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் லேப்-டாப்: முதல்வர் அறிவிப்பு

தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்துப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் லேப்-டாப் வழங்கப்படும்,'' என, முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

திருவாரூரில் நேற்று நடைபெற்ற தி.மு.க., கூட்டணி சார்பிலான தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க., தலைவரும், வேட்பாளருமான கருணாநிதி பேசியதாவது: எந்த மண்ணில் நான் தோழர்களோடு விளையாடி கழித்தேனோ, எந்த மண்ணில் தோழர்களோடு படித்தேனோ, அந்த மண்ணில் வேட்பாளராக நிற்க, எனக்கு ஏற்பட்ட ஆசையின் காரணமாக நான் இங்கு நிற்கிறேன். உங்கள் மண்ணில் அமர்ந்து, உங்கள் கரம் பிடித்து, சட்டசபைக்கு செல்லலாம் என்று வந்துள்ளேன். திருவாரூர் எனக்கு புதிய இடமல்ல. உங்களுக்கு தொண்டு செய்ய உங்கள் உதவி நாடி வந்துள்ளேன். எங்கள் அணி, கொள்கையால் உருவான கூட்டணி. நான், தேசிய முற்போக்கு கூட்டணிக்கு ஓட்டளியுங்கள் என்பேனே தவிர, யாருக்கும் ஓட்டளிக்கக்கூடாது என்று சொல்லமாட்டேன். காரணம், இங்கே இருப்பவர்கள் அனைவரும் எனது உறவினர்கள். அவர்கள் மத்தியில் எதிர்ப்பு உணர்வை வீசி ஒரு சிறு காயத்தைக் கூட ஏற்படுத்த விரும்பவில்லை.

தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதை மட்டுமின்றி, சொல்லாததையும் நிறைவேற்றுவேன். கடந்த தேர்தல் வாக்குறுதியில், "கூரை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகள் கட்டித்தருவேன்' என்று சொல்லவில்லை. ஆனால், கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுத்தேன். கடந்த முறை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று அறிவிக்காமலே கொடுத்தேன். கடந்த 19ம் தேதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசுக் கல்லூரிகள் மற்றும் தொழிற் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் தருவதாக உறுதி அளித்துள்ளோம். இதற்கு வரவேற்பு வழங்கியவர்கள், அனைத்து பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வழங்கலாமே என, கேட்டனர். தோழமை கட்சியினர் கேட்டதன் பேரில், இப்போது அறிவிக்கிறேன். பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என, அனைத்துப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் லேப்-டாப் வழங்கப்படும்.

அடுத்ததாக, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பஸ் பாஸ் என்று அறிவித்திருந்தேன். ஓய்வு வயது 58. ஓய்வு பெற்றவர்கள் எல்லாம், "பஸ் பாஸ் வாங்க இன்னும் இரண்டு வருடம் காத்திருக்க வேண்டுமா?' என்று கேட்டதால், இனி 58 வயது முதலே பஸ் பாஸ் வழங்கப்படும். அத்துடன் கட்டப் பஞ்சாயத்து நடைமுறைக்கும் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும். உங்கள் சந்தோஷத்திற்காக, எனது கஷ்டத்தைப் பார்க்காமல் இனி உங்களை அடிக்கடி பார்ப்பேன். ஆறாவது முறையாக ஆட்சிக்கு வரவேண்டும் என்று இட்ட கட்டளையை ஏற்க முயற்சிக்கிறேன். திருவாரூர் தொகுதி சட்டசபை உறுப்பினராகி முதல்வராக ஆவதன் மூலம், என்னை எனது ஊர் கைவிடவில்லை என்று கம்பீரமாக சொல்லி வலம்வருவேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கொண்டு சென்ற 2 வது பட்டியலையும் சோனியா காந்தி நிராகரித்தார்



தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கொடுத்த 2வது வேட்பாளர் பட்டியலையும் நிராகரித்து விட்டார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. மத்திய அமைச்சர்களும், தமிழக காங்கிரஸின் இரு பெரும் கோஷ்டித் தலைவர்களுமான ப.சிதம்பரம், மற்றும் ஜி.கே.வாசன் கொடுத்த புகாரைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார் சோனியா.

தமிழக காங்கிரஸ் கட்சியினர் எந்த வேகத்தில் திமுகவை நெருக்கி சீட் வாங்கினார்களோ அதை விட மோசமான முறையில், வேட்பாளர் தேர்வில் குழம்பித் தவித்துத் திண்டாடிக் கொண்டுள்ளனர்.

திமுகவை மிரட்டி, உருட்டி 63 சீட்களை வாங்கி விட்ட காங்கிரஸார் இப்போது வேட்பாளர்களை அறிவிக்க முடியாத அளவுக்கு பெரும் குழப்பில் மாட்டித் தவித்து வருகின்றனர். காரணம் - கோஷ்டிப் பூசல்.

தமிழக காங்கிரஸ் கட்சி கோஷ்டிப் பூசலுக்குப் பெயர் போனது. ஒவ்வொரு கோஷ்டியினரும் தத்தமது ஆதரவாளர்களின் பட்டியலை வேட்பாளர் பட்டியலுடன் இணைத்து விட்டதால் குழம்பிப் போன காங்கிரஸ் மேலிடம் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய முடியாமல் குழம்பி நிற்கிறது.

காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இதுவரை 2 வேட்பாளர் பட்டியலை சோனியாவிடம் கொடுத்தார். அகமது படேல், வயலார் ரவி, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் பரிசீலனை செய்த பின்னரே இந்த பட்டியல்கள் தரப்பட்டன என்ற போதிலும், தங்கபாலு சொன்ன ஆட்களே இந்த பட்டியலில் நீக்கமற நிறைந்துள்ளனராம்.

இதனால் முதலில் கொடுத்த பட்டியலை சோனியாவும், ராகுலும் ஏற்க மறுத்து விட்டனர்.

மேலும் 2 முறைக்கு மேல் எம்.எல்.ஏவாக இருந்தவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்றும் சோனியா உத்தரவு போட்டு விட்டார். இதையடுத்து 2வதாக ஒரு பட்டியலை தங்கபாலுவை துணைக்கு வைத்துக் கொண்டு தயாரித்த காங்கிரஸ் குழு அதை சோனியாவிடம் கொடுத்தது. அதிலும் கூட தங்கபாலு கோஷ்டியினர்தான் ஆதிக்கம் செலுத்தியுள்ளனராம்.

இதனால் டென்ஷன் ஆன ப.சிதம்பரமும், ஜி.கே.வாசனும் சோனியா காந்தியை நேரில் சந்தித்து குமுறி விட்டனர். இந்தப் பட்டியலை தயவு செய்து ஏற்க வேண்டாம். கட்சிக்காக உழைத்த யாருமே இதில் இடம்பெறவில்லை. இவர்களில் பலருக்கு மக்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே இதை ஏற்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதைப் பரிசீலிப்பதாக உறுதியளித்த சோனியா காந்தி தற்போது இந்தப் பட்டியலையும் நிராகரித்து விட்டார்.

தற்போது அகமது படேலிடமும், குலாம் நபி ஆசாத்திடமும் நேரடியாக சோனியாவே ஆலோசனையில் இறங்கியுள்ளாராம். இதன் இறுதியில் புதிய வேட்பாளர் பட்டியலை தயாரித்து அதை இன்று மாலை சோனியா காந்தி வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் நிலவிவரும் இந்தக் குழப்பத்தால் தமிழக காங்கிரஸார் கடும் பதைபதைப்புடன் உள்ளனர்.

Tuesday, March 22, 2011

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை நிராகரித்த சோனியா-ராகுல்

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் எதிர்ப்பால், நிராகரித்துவிட்டார் கட்சித் தலைவர் சோனியா காந்தி. இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.

இரண்டு முறைக்கு மேல் எம்எல்ஏக்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று ராகுலும் சோனியாவும் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் போட்டியிட 2,160 பேர் விருப்ப மனு அளித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு தலைமையிலான 20 பேர் கொண்ட தேர்தல் குழு விருப்ப மனுக்களை ஆய்வு செய்தது. தொகுதிகளை கோஷ்டிவாரியாகப் பிரித்துக் கொண்டு, அந்தந்த கோஷ்டி தலைவர்களுக்கு வேண்டியவர்களின் பெயர்கள் அடங்கிய 3 முதல் 5 பேர் கொண்டவர்களின் பட்டியலை தொகுதிவாரியாக தயார் செய்தது.

இதை காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் வழங்கினார் தங்கபாலு .

இதையடுத்து இந்தக் குழு பரிந்துரைப் பட்டியலை ஆய்வுசெய்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து லண்டனில் இருந்து டெல்லி திரும்பிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் திங்கள்கிழமை இரவு வழங்கியது.

அதை ராகுல் காந்தியிடம் ஆலோசனை நடத்திய சோனியா காந்தி பட்டியலை நிராகரித்துவிட்டார்.

இரண்டு முறைக்கு மேல் எம்.பி. அல்லது எம்.எல்.ஏக்களாக இருந்தவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றும் புதியவர்களுக்குதான் வாய்ப்பு என்றும் சோனியா கூறியதாகத் தெரிகிறது.

மேலும் புதிய பட்டியல் தயாரித்துக் கொண்டு வருமாறு சோனியா உத்தரவிட்டார். இதையடுத்து புதிய பட்டியலுடன் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவைச் சந்திக்கவுள்ளனர்.

சோனியாவின் நிபந்தனையின்படி இப்போது எம்.எல்.ஏக்களாக இருக்கும் டி. யசோதா, பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன், கோபிநாத், சிவராஜ், கோவை தங்கம், ஜெயக்குமார், ராம்பிரபு , கே.ஆர். ராமசாமி, சுந்தரம், டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன் உள்ளிட்ட பலருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது. இரண்டு முறைக்கு மேல் எம்.பி, எம்.எல்.ஏக்களாக இருந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், பி.வி. ராஜேந்திரன், குமாரதாஸ், டாக்டர் செல்லக்குமார் ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைக்காது.

இதில் பெரும்பாலானவர்கள் கோஷ்டிகளிலேயே பெரிய கோஷ்டியான ஜி.கே. வாசனின் ஆதரவாளர்கள் ஆவர்.

மேலும் நாமக்கல் ஜெயக்குமார், திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ளார். வாய்ப்பு பறிபோகும் என்ற தகவலால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் தங்கபாலு தனது மனைவிக்கும் சீட் கேட்டதாக கூறப்படுகிறது. அந்தக் கோரிக்கையயும் சோனியா நிராகரித்துவி்ட்டார்.

புதிய வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்தல் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விடும் என்று தெரிகிறது. நாளை மாலை வேட்பாளர்களை சோனியா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல், சோனியாவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று டெல்லி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன் தமிழக காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிகிறது.

கட்சி உருப்படும்!!!

வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியீடு-ஆஸ்கர் பெர்னான்டஸ்:

இந் நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னான்டஸ் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அறிவுறுத்தலின்படி, மத்திய தேர்தல் குழுவினர் வேட்பாளர் பட்டியல் தயாரித்துள்ளதாகவும், இன்று மாலை அல்லது நாளைக்குள் இறுதி செய்யப்பட்ட பட்டியல் வெளியாகும் எனவும் அவர் கூறினார்.

திமுக Vs அதிமுக நேரடியாக மோதும் 84 தொகுதிகள்!

சட்டசபைத் தேர்தலில் திமுக 119 இடங்களிலும், அதிமுக 160 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

இதில் திமுகவும் அதிமுகவும் 84 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. அதன் விவரம்:

தொகுதிகள் -திமுக வேட்பாளர்-அதிமுக வேட்பாளர்

1. ஆயிரம் விளக்கு- அசன்முகமது ஜின்னா - பா.வளர்மதி
2. சைதாப்பேட்டை- மகேஷ்குமார் - செந்தமிழன்
3. ஆர்.கே.நகர்- பி.கே.சேகர்பாபு - வெற்றிவேல்
4. கொளத்தூர்- மு.க.ஸ்டாலின் - சைதை துரைசாமி
5. வில்லிவாக்கம்- க.அன்பழகன் - ஜே.சி.டி.பிரபாகரன்
6. பொன்னேரி (தனி)-மணிமேகலை - பொன்.ராஜா
7. திருவள்ளூர்- இ.ஏ.பி.சிவாஜி - பி.வி.ரமணா
8. அம்பத்தூர்- ப.ரங்கநாதன் - எஸ்.வேதாச்சலம்
9. மாதவரம்- டாக்டர் கனிமொழி - வி.மூர்த்தி
10.திருவொற்றியூர்- கே.பி.பி.சாமி - கே.குப்பன்
11. பல்லாவரம்- தா.மோ.அன்பரசன் - ப.தன்சிங்
12. தாம்பரம்- எஸ்.ஆர்.ராஜா - சின்னையா
13. உத்திரமேரூர்- பொன் குமார் - வாலாஜாபாத் கணேசன்
14. காட்பாடி- துரைமுருகன் - எஸ்.ஆர்.கே.அப்பு என்ற ராதாகிருஷ்ணன்
15. ராணிப்பேட்டை- ஆர்.காந்தி - முகம்மத்ஜான்
16. திருப்பத்தூர்- எஸ்.ராஜேந்திரன் - கே.ஜி.ரமேஷ்
17. திருவண்ணாமலை- ஏ.வ.வேலு - எஸ்.ராமச்சந்திரன்
18. கீழ்பெண்ணாத்தூர்- கு.பிச்சாண்டி - ஏ.கே.அரங்கநாதன்
19. வந்தவாசி (தனி)- கமலக்கண்ணன் - செய்யாமூர் குணசீலன்
20. வானூர் (தனி)- புஷ்பராஜ் - ஜானகிராமன்
21. விழுப்புரம்- க.பொன்முடி - சி.வி.சண்முகம்
22. சங்கராபுரம்- உதயசூரியன் - மோகன்
23. கடலூர்- புகழேந்தி - எம்.சி.சம்பத்
24. குறிஞ்சிப்பாடி- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - சொரத்தூர் ராஜேந்திரன்
25. திருவிடைமருதூர்- கோவி.செழியன் - பாண்டியராஜன்(தனி)
26. கும்பகோணம்- க.அன்பழகன் - ராம.ராமநாதன்
27. திருவையாறு- கல்லணை செல்லக்கண்ணு - ரத்தினசாமி
28. தஞ்சாவூர்- எஸ்.என்.எம்.உபயதுல்லா - எம்.ரங்கசாமி
29. ஒரத்தநாடு- மகேஷ் கிருஷ்ணசாமி - வைத்திலிங்கம்
30. மன்னார்குடி- டி.ஆர்.பி.ராஜா - சிவா.ராஜமாணிக்கம்
31. திருவாரூர்- மு.கருணாநிதி - குடவாசல் ராஜேந்திரன்
32. நன்னிலம்- இளங்கோவன் - ஆர்.காமராஜ்
33. ஸ்ரீரங்கம் - என்.ஆனந்த் - ஜெ.ஜெயலலிதா
34. திருச்சி மேற்கு- கே.என்.நேரு - மரியம்பிச்சை
35. திருச்சி கிழக்கு- அன்பில் பெரியசாமி - ஆர்.மனோகரன்
36. மணச்சநல்லூர்- என்.செல்வராஜ் - டி.பி.பூனாட்சி
37. துறையூர் (தனி)- பரிமளா தேவி - இந்திராகாந்தி
38. பெரம்பலூர் (தனி)- எம்.பிரபாகரன் - இளம்பை தமிழ்ச்செல்வன்
39. அரவக்குறிச்சி- கே.சி.பழனிசாமி - வி.செந்தில்நாதன்
40. கிருஷ்ணராயபுரம்- பெ.காமராஜ் - எஸ்.காமராஜ்(தனி)
41. குளித்தலை- மாணிக்கம் - பாப்பாசுந்தரம்
42. கந்தர்வக்கோட்டை- கவிதைப்பித்தன் - சுப்ரமணியன் (தனி)
43. விராலிமலை- எஸ்.ரகுபதி - டாக்டர் விஜயபாஸ்கர்
44. ஏற்காடு (தனி)- தமிழ்செல்வன் - பெருமாள்
45. சங்ககிரி- வீரபாண்டி ஆறுமுகம் - விஜயலட்சுமி பழனிச்சாமி
46. சேலம்- தெற்கு எஸ்.ஆர்.சிவலிங்கம் - எம்.கே.செல்வராஜ்
47. வீரபாண்டி- வீரபாண்டி ராஜேந்திரன் - எஸ்.கே.செல்வம்
48. சேலம் மேற்கு- இரா.ராஜேந்திரன் - ஜி.வெங்கடாஜலம்
49. ராசிபுரம் (தனி)- வி.பி.துரைசாமி - ப.தனபால்
50. குமாரபாளையம்- வெப்படை செல்வராஜ் - பி.தங்கமணி
51. பாப்பிரெட்டிபட்டி -முல்லைவேந்தன் - பழனியப்பன்
52. மேட்டுப்பாளையம்- அருண்குமார் - சின்னராஜ்
53. கவுண்டம்பாளையம்- சுப்ரமணியன் - ஆறுக்குட்டி
54. கோவை வடக்கு- வீரகோபால் - மலரவன்
55. கோவை தெற்கு- பொங்கலூர் பழனிசாமி - சேஞ்சர் துரை
56. கிணத்துக்கடவு- மு.கண்ணப்பன் - செ.தாமோதரன்
57. தாராபுரம் (தனி)- ஜெயந்தி - பொன்னுசாமி
58. திருப்பூர் வடக்கு- கோவிந்தசாமி - எம்.எஸ்.எம்.ஆனந்தன்
59. மடத்துக்குளம் -மு.பெ.சாமிநாதன் - சண்முகவேலு
60. அந்தியூர்- என்.கே.கே.பி.ராஜா - எஸ்.எஸ்.ரமணிதரன்
61. மேலூர்- ராணி ராஜமாணிக்கம் - ஆர்.சாமி
62. மதுரை கிழக்கு- மூர்த்தி - தமிழரசன்
63. திருமங்கலம்- மணிமாறன் - ம.முத்துராமலிங்கம்
64. மதுரை மேற்கு தளபதி - செல்லூர் ரா ஜு
65. பழனி செந்தில்குமார் - வேணுகோபாலு
66. ஒட்டன்சத்திரம்- சக்கரபாணி - பாலசுப்பிரமணி
67. நத்தம்- விஜயன் - இரா.விஸ்வநாதன்
68. ஆண்டிபட்டி- எல்.மூக்கையா - தங்க தமிழ்செல்வன்
69. போடிநாயக்கனூர்- லட்சுமணன் - ஓ.பன்னீர்செல்வம்
70. முதுகுளத்தூர்- சத்தியமூர்த்தி - மு.முருகன்
71. திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன் - ராஜகண்ணப்பன்
72. மானாமதுரை (தனி)- தமிழரசி - குணசேகரன்
73. ராஜபாளையம்- தங்கபாண்டியன் - கே.கோபால்சாமி
74. சாத்தூர்- கடற்கரை ராஜ் - உதயகுமார்
75. சிவகாசி- வனராஜா - உதயகுமார்
76. அருப்புக்கோட்டை- சாத்தூர் ராமச்சந்திரன் - வைகைச்செல்வன்
77. சங்கரன்கோவில்- உமாமகேஸ்வரி - சொ.கருப்பசாமி (தனி)
78. ஆலங்குளம்- பூங்கோதை - பி.ஜி.ராஜேந்திரன்
79. திருநெல்வேலி- ஏ.எல்.எஸ்.லட்சுமணன் - நயினார் நாகேந்திரன்
80. அம்பாசமுத்திரம்- ஆவுடையப்பன் - இசக்கி சுப்பையா
81. தூத்துக்குடி- கீதா ஜீவன் - ஏ.பால்
82. திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன் - பி.ஆர்.மனோகரன்
83. கன்னியாகுமரி- சுரேஷ்ராஜன் - கே.டி.பச்சைமால்
84. நாகர்கோவில்- மகேஷ் - நாஞ்சில் முருகேசன்

மற்ற இடங்களில் இரு கட்சிகளின் கூட்டணிக் கட்சிகளும் ஒருவரை ஒருவர் சந்திக்கவுள்ளன

நேரில் சந்திக்காமல் பேக்ஸ் மூலம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜெ, விஜயகாந்த்



கூட்டணி , ஒப்பந்தம் என்பது மனமொத்து செய்து கொள்வது. ஆனால் அதி்முக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தும் நேரில் பார்த்துக் கொள்ளாமலேயே பேக்ஸ் மூலம் கையெழுத்துப் போட்டு நூதன முறையில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

அதாவது வேண்டா வெறுப்பான கூட்டணியாக இது மலர்ந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் பிய்த்து்க கொண்டு போகக் கூடிய அளவுக்கு இரு கட்சிகளுக்கிடையே கடும் இறுக்கமான நிலை காணப்படுகிறது. வாக்குப் பதிவு முடிந்த அடுத்த நிமிடமே இந்தக் கூட்டணி பிரிந்து போகக் கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்ட அத்தனை கட்சிகளின் தலைவர்களும் போயஸ் தோட்டத்திற்கு நேரில் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டு, வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசி விட்டுச் சென்றனர். ஆனால் விஜயகாந்த் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட போயஸ் தோட்டம் வரவில்லை.

பேச்சுவார்த்தைகளின்போது அவரது சார்பில் மச்சான் சுதீஷும், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் மட்டுமே வந்து போய்க் கொண்டிருந்தனர். தொகுதிகள் முடிவானதும் அதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட விஜயகாந்த், போயஸ் தோட்டத்திற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விஜயகாந்த் வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அவரை ஜெயலலிதாவை சந்தித்து கையெழுத்திட்ட அவரது கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டும் கூட விஜயகாந்த் போக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதை பேக்ஸ் மூலம் போயஸ் தோட்டத்திற்கு அனுப்பி வைத்தனராம்.

இப்படியும் ஒரு கூட்டணி....!

கருத்து வேறுபாடு இல்லை-பண்ருட்டி ராமச்சந்திரன்:

இந் நிலையில் அதிமுகவுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

நிருபர்களிடம் பேசிய அவர், அதிமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது இறுதி செய்யப்பட்ட பட்டியல்தான் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. நாங்கள் இணைந்து போட்டியிடுகிறோம். எங்களுக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை. எங்களுக்குள் குழப்பம் நிலவுவதாக சிலர் அவதூறு பிரசாரம் செய்தனர். இப்போது தொகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பதன் மூலம் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை என்பதை தெளிவுப்படுத்தியுள்ளோம்.

அனைத்து கட்சிகளுமே அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. சில தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு கண்டுள்ளோம். அதன் அடிப்படையில்தான் அதிமுக ஏற்கெனவே அறிவித்திருந்த விருகம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட சில தொகுதிகளை எங்களுக்காக விட்டுக் கொடுத்துள்ளது.

வேட்பாளர்கள் யார் என்று பார்த்து எங்கள் கட்சித் தொண்டர்கள் தேர்தல் வேலை பார்ப்பது இல்லை. கூட்டணிக் கட்சியினர் யார் நின்றாலும் அவர்களது வெற்றிக்காக பாடுபடுவார்கள். தேர்தலை புறக்கணிப்பதாக மதிமுக அறிவித்துள்ளது குறித்து நாங்கள் கருத்து ஏதும் கூற விரும்பவில்லை என்றார்.