காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 63 சீட்களில் 13 சீட்களை தனது ஆதரவாளர்களுக்கு ஒதுக்கிக் கொண்டு விட்டார் தங்கபாலு. இதையடுத்து தங்கபாலுவுக்கு எதிராக காங்கிரஸார் ஆங்காங்கு போராட்டங்களில் குதித்துள்ளனர்.
அந்த வகையில் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம், இளங்கோவன் உள்ளிட்ட அத்தனை கோஷ்டிகளையும் அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இதனால் ஒட்டுமொத்த கோஷ்டியினரும் கொந்தளித்துள்ளனர். குறிப்பாக தங்கபாலு தனது மனைவிக்காக மயிலாப்பூர் சீட்டை வாங்கியது அனைவரையும் கோபப்படை வைத்துள்ளது.
மேலும், தனது ஆதரவாளர்களான தாமோதரனுக்கு ஆவடியையும், டாக்டர் நடேசனுக்கு திருவிகநகரையும் அவர் வாங்கியுள்ளார். சென்னை நகர தொகுதிகளை தனது ஆதரவாளர்களுக்கு அவர் வளைத்துக் கொண்டதால் கராத்தே தியாகராஜன், நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக கோஷ்டிகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ஜி.கே.வாசன் குரூப் 22 இடங்களைப் பெற்றுள்ளது. சிதம்பரம் கோஷ்டிக்கு 12 சீட்கள் கிடைத்துள்ளன. இளைஞர் காங்கிரஸுக்கு 9 சீட் கிடைத்துள்ளது. ஜெயந்தி நடராஜன், இளங்கோவன், டாக்டர் ராமதாஸின் சம்பந்தி எம்.கிருஷ்ணசாமி, மணிசங்கர அய்யர் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு தலா ஒரு சீட் மட்டுமே கிடைத்துள்ளது.
தனது தரப்புக்கு வெறும் ஒரு சீட் மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பதால் இளங்கோவன் கடும் கோபமாக உள்ளாராம். அவரது ஆதரவாளர் பழனிச்சாமிக்கு மொடக்குறிச்சியை ஒதுக்கியுள்ளனர்.
தற்போதைய எம்.எல்.ஏக்களில் 29 பேருக்கு மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு ராமன், ராமநாதபுரம் ஹசன் அலி, சாத்தான்குளம் ராணி வெங்கடேசன் ஆகியோருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.
சத்தம் போடாமல் பெரிய கோஷ்டிகளுக்கு நிகராக தங்கபாலுவும் சீட் வாங்கி விட்டதால் காங்கிரஸார் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
நாகர்கோவிலில் கொடும்பாவி எரிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மற்றும் விளவங்கோடு தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகளும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் உருவப்படம் தாங்கிய டிஜிட்டல் பேனரை நேற்று மாலை தீவைத்து எரித்தனர்.
இந்த நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகம் முன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் அன்ஷாத், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி விஜய், குளச்சல் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஏ.ஸ்டார்வின், சைமன்காலனி நிர்வாகி ஜெரோம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அய்யர் ஆதரவு பெண் வேட்பாளருக்கு எதிர்ப்பு
விளவங்கோடு சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக குமரி மாவட்டம் மயிலாடி சேந்தன்புதூரைச் சேர்ந்த விஜயதரணி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மணிசங்கர அய்யருக்கு மிகவும் நெருக்கமானவராம். அய்யரின் ஆதரவாளரான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
இவர் வெளியூர்க்காரர் என்று கூறி குழித்துறையில் உள்ள மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன் காங்கிரசின் ஒரு பிரிவினர் நேற்று இரவு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது அய்யரை கடுமையாக விமர்சித்து கோஷமிட்டனர்.
No comments:
Post a Comment