Search This Blog

Tuesday, August 31, 2010

மத்திய அரசுடன் பேரம் பேச "மாநில சுயாட்சி' ஆயுதம் : ஜெ., குற்றச்சாட்டு

மத்திய அரசுடன் பேரம் பேசுவதற்காக, "மாநில சுயாட்சி' என்ற ஆயுதத்தை கருணாநிதி கையில் எடுத்து கொண்டிருக்கிறார்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கல்வி, வரிவிதிப்பு போன்ற துறைகளில் மாநில அரசின் உரிமைகளை பாதிக்காத வகையில் மத்திய அரசின் அணுகுமுறை இருக்க வேண்டுமென, தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. "மாநில சுயாட்சி, மாநில உரிமை' குறித்து கருணாநிதி பேசுகிறார் என்றால், தன்னாட்சி, தன் உரிமைக்கு பங்கம் வந்து விட்டது என்று தான் பொருள்.தன்னலத்திற்காக மாநிலத்தின் உரிமைகளை விற்ற கருணாநிதிக்கு, மாநில சுயாட்சி பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. கச்சத்தீவு மற்றும் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என அண்டை மாநிலங்களுடனான நதி நீர் பிரச்னைகளில் நமக்குள்ள உரிமைகளை அவர் தாரை வார்த்துள்ளார்.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கு, அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு என்று மத்திய அரசு அறிவித்த போது, அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், கருணாநிதி கடிதம் எழுதினார்.மத்திய அரசின் இந்த செயலுக்கு நான் கண்டனம் தெரிவித்து, அறிக்கை விடுத்ததோடு, இந்த திட்டத்தை கைவிடவில்லை என்றால், அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தவுடன் மத்திய அரசு அதை நிறுத்தி விட்டது.தமிழகத்தில், "வாட்' வரி செயல்படுத்தப்பட வேண்டும் என்றால், 100 சதவீத இழப்பீட்டை மத்திய அரசு தர வேண்டும்; சேவை வரி விதிக்கும் உரிமையை மாநில அரசுக்குத் தர வேண்டும் என்று வலியுறுத்தினேன். அனைத்து மாநிலங்களும், "வாட்' வரியை அமல்படுத்திய நிலையில், தமிழகம் மட்டும் பின்பற்றவில்லை என்றால் வரி இழப்பு ஏற்படும் என்று தி.மு.க., தெரிவித்தது.

கருணாநிதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், "வாட்' வரியை செயல்படுத்தினார். இதன் விளைவாக, தமிழக அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, மாநிலத்தின் வரி விதிக்கும் உரிமையும் பறிபோய் இருக்கிறது."வாட்' அமல்படுத்தியது காரணமாக, மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசுக்கு வர வேண்டிய இழப்பீட்டுத் தொகையான 3,500 கோடி ரூபாய் இன்று வரை வழங்கப்படவில்லை.இது மட்டுமல்லாமல், 2007ம் ஆண்டு, "வாட்' வரியை அமல்படுத்த கருணாநிதி முடிவெடுத்த போதே, சரக்குகள் மற்றும் சேவை வரி விதிப்பிற்கு ஒப்புக் கொண்டு விட்டார் என்று தான் அர்த்தம்.இந்த சூழ்நிலையில், இப்போது "மாநில சுயாட்சி, மாநில உரிமை' என்று கருணாநிதி புலம்புவது நகைப்புக்குரியதாக உள்ளது.

"வாட்' வரியை தமிழகத்தில் அமல்படுத்தியதன் மூலம், மாநிலத்தின் வரி விதிக்கும் உரிமையை கருணாநிதி தாரை வார்த்து இருக்கிறார்.சரக்குகள் மற்றும் சேவை வரி தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டால் மாநில அரசுக்கு எந்த வரி விதிக்கும் உரிமையும் இல்லாமல் போய்விடும். மாநிலத்தின் அனைத்து உரிமைகளையும் சீரழித்த பெருமை கருணாநிதியையே சாரும்.தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி தொடருமானால், 69 சதவீத இட ஒதுக்கீடு உட்பட, தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் பறிபோய் விடக்கூடிய நிலைமை ஏற்படும். "உரிமை' என்ற நிலை மாறி, "யாசகம்' என்ற நிலை உருவாகிவிடும்.தற்போது மத்திய அரசுடன் பேரம் பேசுவதற்காக, "மாநில சுயாட்சி' என்ற ஆயுதத்தை கருணாநிதி கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். மக்கள் இவருக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்டுகள் வைத்த கொள்ளி காரணம் : முதல்வர் பகீர் குற்றச்சாட்டு

கம்யூனிஸ்டுகள் வைத்த கொள்ளி தான், இந்தியாவில் சில மாநிலங்களில், "மாவோயிஸ்ட்' தாக்குதல், அராஜகம், உயிர் பலிகள் என்ற அளவுக்கு கொழுந்து விட்டு எரியக் காரணம்' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தி.மு.க., போராட்டங்களில் ஈடுபட்ட போது விளம்பரப்படுத்திக் கொள்ளவோ, வேண்டுமென்றே அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்றோ செயல்பட்டதில்லை. எந்த பிரச்னையாக இருந்தாலும், அமைதியான முறையில், அறவழியிலேயே போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.கம்யூனிஸ்டுகள் நடத்துகின்ற கிளர்ச்சி எதுவாயினும், அதற்கு ஒரு போர்க்கள முத்திரை குத்தாமல் இருக்கமாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பர், அடுத்து கண்டன ஆர்ப்பாட்டம் என்பர், அதற்கடுத்து மறியல் என்பர், அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் முற்றுகை என்பர். அரசு அதை வேடிக்கை பார்த்து, அவர்களுக்கு முரசு கொட்ட வேண்டுமென எதிர்பார்ப்பர்.இப்படித்தான் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சிகள், கோரிக்கை பேரணிகளாக மாறி, கோட்டை முற்றுகை என்ற அளவிற்கு வளர்ந்துள்ளன. அவர்கள் வைத்த கொள்ளி தான், இந்தியாவில் சில மாநிலங்களில், "மாவோயிஸ்ட்' தாக்குதல், அராஜகம், உயிர் பலிகள் என்ற அளவிற்கு கொழுந்து விட்டு எரிகின்றன. 

தமிழகத்திலும் அத்தகைய அராஜகங்களை, வன்முறை சேட்டைகளை, கொலை வெறி தாக்குதல்களை கட்டவிழ்த்து விட வேண்டுமென்று திட்டமிடுகின்றனர். தி.மு.க., அரசுக்கு ஒரு சிறு களங்கமாவது ஏற்படுத்தினால் தான், அதை வைத்து தேர்தலில் நிற்கவோ, தங்கள் கூட்டணித் தலைவி, "சிறுதாவூர் சீமாட்டி' வெற்றி வாகை சூடி மீண்டும் கோலோச்சவோ முடியும் என்ற எதிர்பார்ப்போடு திட்டங்களை தீட்டுகின்றனர்.அவர்கள் அறிக்கையில், 27 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. 27 ஆண்டுகளாக எந்த அரசாவது முன் வந்ததா? ஏன், மேற்கு வங்கம், கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசுகள் முன் வந்ததுண்டா? ஆனால், தமிழகத்தில் மட்டும் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்துவோம் என்பதும், அதற்கு கோட்டையை முற்றுகையிடுவோம் என்பதும், அதை போலீசார் தடுத்தால், தமிழக அரசின் உச்ச கட்ட அராஜகம் என்றும் சொல்வது எந்த வகை ஜனநாயகம் என்பது தெரியவில்லை.

சத்துணவு ஊழியர்களை, முழு நேர அரசு ஊழியர்களாக ஆக்க இயலாவிட்டாலும், அ.தி.மு.க., அரசு அளிக்காத சலுகைகளை எல்லாம் இந்த ஆட்சியில் அளித்திருக்கிறோம். இதற்காக சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் எனக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழாவையே நடத்தியிருக்கின்றனர்.சத்துணவு பணியாளர்களுக்கு இந்த அரசின் மீது எவ்வித குறையும் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். ஆனால், அவர்களை வைத்துக் கொண்டு ஒரு சில சங்கத்தினர், சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாகவும், கோவில்களை பார்த்து வரலாம் என்றும் ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வர முற்படுகின்றனர்.மற்ற அலுவலர் சங்கத்தினர், என்னையோ, அமைச்சர்களையோ அணுகி தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து, சலுகைகளை பெறுகின்றனர்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Monday, August 30, 2010

மூப்பனார் நினைவு நாளில் முக்கிய திருப்பம்-விஜயகாந்த், வாசன், திருமா, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆலோசனை

எந்தக் கூட்டணி எப்படி அமையும் என்ற 'கெஸ்'ஸில் மக்கள் இருக்க, புதிய திருப்பமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் [^], காங்கிரஸ் தலைவர்களான ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் [^] மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் [^] ஆகியோர் கூடி திடீரென ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் புதிராக பார்க்கப்படுகிறது.

இன்று ஜி.கே.மூப்பனார் எனப்படும் கருப்பையா மூப்பனாரின் 9வது நினைவு தினமாகும். இதையொட்டி இன்று தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சியினரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி தீப்பந்தம் ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் முடிவில் தீப்பந்தம் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஜி.கே.வாசன் வழங்கினார்.

மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி 'மூப்பனாரின் வாழ்க்கை வரலாறு' எனும் புத்தகத்தை திரைப்பட பாடலாசிரியர் வாலி வெளியிட்டார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு [^] காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இசையமைப்பாளர் தேவா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

திருப்புமுனை சந்திப்பு

மலர் வளையம் வைக்க வந்த விஜயகாந்துடன், இளங்கோவன், வாசன், திருமாவளவன் ஆகியோர் தனியாக அமர்ந்து சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.

இளங்கோவன் திமுகவுக்கு கடுமையான எதிர்ப்பாளர். வாசன் அப்படி இல்லை. திமுகவை எதிர்க்கவில்லை. அதேசமயம், திமுகவுடன் அவர் மிகவும் நெருக்கமானவராக இருப்பவரும் இல்லை. திருமாவளவன், திமுக கூட்டணியில் இருப்பவர். விஜயகாந்த் கூட்டணி அரசியலுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டவர். எனவே இவர்களின் இந்த திடீர் சந்திப்பு பல யூகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

மூப்பனாரை தனது குருக்களில் ஒருவராக கருதுகிறேன் என பலமுறை முன்பு விஜயகாந்த் கூறியுள்ளார். மூப்பனார் உயிருடன் இருந்தபோது அவருடன் நெருக்கமாக இருந்தவர். அந்த வகையில் வாசனும், விஜயகாந்த்துக்கு நெருக்கமானவராகவே கருதப்படுகிறார்.

இளங்கோவனும் நீண்ட காலமாக விஜயகாந்த்துடன் நட்பில் இருப்பவர்தான். சமீபத்தில் விஜயகாந்த்தின் பிறந்த நாளன்று அவரை சந்தித்து, விஜயகாந்த் ரொம்ப நல்ல தலைவர், அவர் வளர்ந்து வரும் முக்கியத் தலைவர் என்று 'ஐஸ்' பெட்டிகளை தூக்கி தலையில் வைத்து விட்டு வந்தவர்.

இப்படிப்பட்டவர்கள் திடீரென சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு புதிய அரசியல் கூட்டணிக்கான முதல் படியா என்ற கேள்வியும் எழுகிறது.

தனது தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்று விஜயகாந்த் கூறி வருகிறார். எனவே வாசனையும், திருமாவளவனையும் விஜயகாந்த் தலைமையின் கீழ் கொண்டு வர இளங்கோவன் பாடுபடுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எனவே இந்த சந்திப்பு எதேச்சையாக நடந்ததா அல்லது திட்டமிட்ட சந்திப்பா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அரசியலாச்சே, எது வேண்டுமானாலும் நடக்கலாம், என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நாங்க வளர்ந்துட்டோம்-பண்ருட்டியார்

இதற்கிடையே, கோவை சவுரிபாளையத்தில் நடந்ததேமுதிக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தேமுதிக வளர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவற்றை நடத்தி வருகிறது. இதில், தங்களை வருத்தி தான் செய்கின்றனர். மக்களுக்கு பிரச்சனைகள் வருவதுபோல் நடப்பதில்லை.

தே.மு.தி.க. வுக்கு என்றுமே வன்முறை மீது நம்பிக்கை இல்லை. கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது, 70 கட்சியோடு 71 ஆக இருக்கும் என அரசியல் விமர்சனம் செய்தனர். ஆனால், 71ல் 7 மறைந்து ஒன்றுவது கட்சியாக தமிழகத்தில் வளர்ந்துள்ளது தே.மு.தி.க.

அண்ணாவுக்கு அடுத்து எம்.ஜி.ஆர். வந்தார். அடுத்து தலைமுறையாக விஜயகாந்த் உருவெடுத்துள்ளார். தமிழகத்தில் மக்களின் பல்வேறு பிரச்னைகள் கட்டாயம் தீர்க்க வேண்டிய உள்ளன. வறுமையை ஒழிப்பதற்காக அ.தி.மு.க., தி.மு.க., போட்ட திட்டங்களால் 20 சதவீதமாக இருந்த வறுமை 22.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. கவர்ச்சி திட்டங்களை அவர்கள் போட்டனர். வளர்ச்சி திட்டங்களை போடவில்லை என்றார்.

மெகா கூட்டணி அமையும்-மச்சான் சுதீஷ்

இதேபோல சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில் தேமுதிக இளைஞர் அணி செயலாளரும், விஜயகாந்த்தின் மச்சானுமான சுதீஷ் பேசுகையில்,

நான் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று பல பொது கூட்டங்களில் கலந்துகொண்டு வருகிறேன். ஆனால் இன்று நடக்கும் இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும்போது எனக்கு பிரமிப்பாக உள்ளது. காரணம் இங்கு ஒரு மாநாடு நடப்பது போன்ற கூட்டம் அலைமோதுகிறது. இதுவே வரும் 2011ல் தமிழக முதல்வர் விஜகாந்த்தான் என்பதற்கு ஓர் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

மேலும் தே.மு.தி.க.வின் வளர்ச்சியை பார்த்து. தி.மு.கவும், அ.தி.மு.கவும் அஞ்சி நிற்கின்றன. தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் அப்பாவி பொதுமக்களின் ஓட்டுகளை பணம்கொடுத்து வாங்குகின்றன. அவர்கள் ஓட்டுக்காக வழங்கும் பணம் தற்காலிகமாக உயர்ந்துவருவதற்கு காரணம் தே.மு.தி.க வின் வளர்ச்சிதான். அவர்கள் தொகையை உயர்த்த உயர்த்த தே.மு.தி.க வளர்ந்து கொண்டே போகிறது என்று அர்த்தம்.

விஜயகாந்த்துக்கு 5 ராசி

அடுத்ததாக வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நமது தலைவர் 14வது முதல்வராக வருவார். அவருக்கு எப்போதும் 5ஆம் எண் ராசியானது. அதற்காக அ.தி.மு.க, ,தி.மு.க தவிர்த்த பிற கட்சிகள் தே.மு.தி.க தலைமையில் மெகா கூட்டணி அமைத்து எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நமது தலைவர் முதல்வராக அமர்வார் அப்போது நடைபெறும் வெற்றிப் பொதுக்கூட்டத்தில் நான் மீன்டும் உங்களை வந்து சந்திபேன் என்றார் சுதீஷ்.

படிக்கும் காலத்தில் கல்விக் கடனுக்கு வட்டி கிடையாது: ப.சிதம்பரம் அறிவிப்பு

2009, 2010-ம் ஆண்டுகளில் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு படிக்கின்ற காலத்தில் வட்டி இல்லை என்று உள்துறை அமைச்சர் [^] ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடி மண்டலம் ஐ.ஓ.பி. சார்பில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வங்கி நிர்வாகிகள் பங்கேற்ற மாவட்ட ஆலோசனைக் குழு சிறப்பு முகாம் நடந்தது. காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் ப.சிதம்பரம் 643 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 10 கோடியே 41 லட்சத்து, 36 ஆயிரம் கல்விக் கடன் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது,

மாணவர்கள் தங்களின் உயர் கல்வியைத் தொடர்வதற்கு மத்திய அரசு [^] அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

கல்விக் கடன் வழங்கியதில் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நாடு முழுவதும் இருப்பில் உள்ள கல்விக் கடன்களைக் கணக்கில் கொண்டால் 19 லட்சத்து 41 ஆயிரத்து 882 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 5 லட்சத்து 63 ஆயிரத்து 429 பேருக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கல்விக் கடன் பெறும் மாணவர்களில் நான்கில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

எனது அரசியல் வாழ்க்கையில் பெருமகிழ்ச்சியுடன் தீட்டப்பட்ட திட்டம் கல்விக் கடன் திட்டம் ஆகும். கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் [^] கல்விக் கடனை நிர்வகிக்கும் கனரா வங்கியை அணுகலாம்.

கல்விக் கடனுக்கான வட்டி விவரம் பற்றி நிதித் துறையினர் எனக்கு தகவல் அனுப்பியுள்ளனர். கடந்த 2009, 2010-ம் ஆண்டுகளில் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு படிக்கின்ற காலத்தில் வட்டியே கிடையாது.

மாணவர்கள் எதிலும் முந்திக் கொள்ள வேண்டும். தற்போது வாய்ப்புகளுக்கு குறைவில்லை. வங்கித் துறையில் மட்டும் 1 லட்சம் பேர் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பணியைப் பெற வேண்டும் என்றார்.

இந்த விழாவில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் தலைவர் எஸ்.ஏ. பட் தொடக்க உரையாற்றினார். காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் என். சுந்தரம், திருவாடானை சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக ஐ.ஓ.பி. காரைக்குடி மண்டல முதன்மை மேலாளர் எம். ராமதாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்தியன் வங்கியின் வட்டாரத் தலைவர் கதிரேசன் நன்றியுரை கூறினார்.

Friday, August 27, 2010

சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் பாமக தனித்துப் போட்டி: ராமதாஸ் தடாலடி அறிவிப்பு!

வரும் சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் தனித்து நிற்க முடிவு செய்துள்ளோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

ஓமலூர், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் பாமக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,

கடந்த 42 ஆண்டுகாலமாக தமிழகத்தை சினிமா கலைஞர்கள் மட்டும் ஆட்சி செய்து வந்துள்ளனர். இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இது போன்ற அவலநிலை இல்லை. இந்த நிலையை மாற்ற இளைஞர்களராகிய உங்களால் தான் முடியும்.

இன்றைய இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் [^], வகுப்புகளுக்கே குடித்து விட்டு ஆசிரியர்களிடம் தகராறு செய்கிறார்கள் என்ற செய்தி கேட்டு என் மனம் தீயிலிட்ட புண் போல எரிகிறது.

இளைஞர்கள் குடித்துவிட்டு எதிர்காலத்தை வீணாக்குவதுடன், அவனது குடும்பத்தையும் அனாதையாக விட்டு விடுகிறான். எனவே இளைஞர்களே உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் குடிக்க வேண்டாம்.

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பலமுறை முதல்வரை வலியுறுத்தியும் எடுக்க மறுக்கிறார். அதற்கு ரூ. 4,000 கோடி செலவாகும் என்கிறார். ரூ. 40,000 கோடி செலவானாலும் சாதிவாரி கணக்கு எடுத்தே தீர வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 6.5 கோடி மக்களில் 2.5 கோடி வன்னியர்கள் உள்ளனர். எனவே எனது மக்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.

தமிழக அரசு இலவச பொருட்களை கொடுப்பதை தவிர்த்து, அனைத்து தரப்பு மக்களுக்கும், இலவசமாக சமச்சீர் கல்வியை கொடுக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலையை கொடுக்க வேண்டும். அதை வைத்து அவர்கள் உழைத்து பிழைத்து கொள்வார்கள்.

டாஸ்மாக் கடைகளை உடனே மூட முடியாவிட்டாலும், கொஞ்சம், கொஞ்சமாக மூடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும்.

எனது தலைமுறைக்குப் பிறகு பாமகவை காப்பாற்றும் பொறுப்பு இளைஞர்கள், இளம் பெண்களாகிய உங்கள் கைகளில் தான் உள்ளது. எனவே பாமகவை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

108 ஆம்புலன்ஸ், சேலம் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை [^], சேலம் மக்களின் 40 ஆண்டு கால கனவாக இருந்த ரயில்வே கோட்டம் ஆகிய திட்டங்களை எனது வற்புறுத்தலின் பேரில் அப்போதைய மத்திய பாமக அமைச்சர்கள் கொண்டு வந்தார்கள்.
ஆனால், இப்போது அதை யார், யாரோ, நான் கொண்டு வந்தேன் என்று கூறுகிறார்கள். இந்த திட்டங்களை யார் கொண்டு வந்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.

வரும் சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் தனித்து நிற்க முடிவு செய்துள்ளோம். அதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் கிராமம், கிராமமாக சென்று புதிய கிளைகளை ஏற்படுத்தி அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம். எனவே கூட்டணியை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

அனைத்து கட்சிகளிலும் உள்ள நம் இன மக்கள் நமக்கு வாக்களித்தாலே இந்த 100 தொகுதியிலும் நாம் வெற்றி வெற்றி பெற்று ஆட்சி மகுடத்தில் அமர்ந்துவிட முடியும்.

இன்றைய சூழ்நிலையில் நம் இன மக்கள், மனுவை கையில் ஏந்திக் கொண்டு அய்யா, எங்களுக்கு ஏதாவது செய்யுங்கள், என்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் கூனி, குறுகி முறையிட வேண்டியுள்ளது.

நாமும் மாவட்ட ஆட்சியராகவோ, மாவட்ட எஸ்.பியாகவோ, உயர் அதிகாரிகளாக படித்து முன்னேறினால் மட்டுமே நம் இன மக்களையும், அடித்தட்டு மக்களையும் காப்பாற்ற முடியும்.

எனவே நம் இன இளைஞர்கள், இளம்பெண்கள் ஒவ்வொரு கிராமம், கிராமமாகச் சென்று மற்ற கட்சியில் உள்ளவர்களை நம் கட்சிக்கு அழைத்து வரவேண்டும் என்றார் ராமதாஸ்.

சினிமாவை ரசியுங்கள். ஆனால்,...:

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி [^] பேசுகையி்ல்,
இன்றைய இளைஞர்கள் சினிமாவை பார்த்து அதில் வருவது போலவே தன்னையும் பாவித்துக் கொண்டு மது, சிகரெட் போன்ற பழக்கத்துக்கு அடிமையாகின்றனர்.

சினிமா கலைஞர்களுக்கு கட்-அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்வதை தவிர்த்து இளைய தலைமுறையினர் தாங்கள் எதிர்நோக்கியுள்ள கல்விப் பிரச்சனை, பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக உழைக்க முன்வர வேண்டும்.

சினிமாவை ரசியுங்கள். ஆனால், அதை அத்தோடு விட்டு விடுங்கள் என்றார்.

மேற்கு வங்கம்: முக்கிய நக்ஸல் தலைவர் என்கெளண்டரில் சுட்டுக் கொலை

ஜர்கிராம்: மேற்கு வங்க மாநிலத்தில் ரயிலைக் கவிழ்த்து 148 பயணிகள் பலியாகக் காரணமாக இருந்த முக்கிய நக்ஸல் தலைவர் [^] பாதுகாப்புப் படையினரின் என்கெளணடரில் கொல்லப்பட்டார்.

கடந்த மே மாதம் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலை மாவோயிஸ்டுகள் கவிழ்த்தனர். இதில் 148 பயணிகள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாவோயிஸ்டுகளை மேற்கு வங்க போலீசார் அடையாளம் கண்டு அவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதையடுத்து 6 பேர் சரணடைந்தனர்.

இந் நிலையில் நக்ஸல் தலைவர்களான பப்பி மகதோ, அசித் மகதோ, சத்ரதார் மகதோ, உமா காந்த் மகதோ ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு, அவர்கள் பற்றி தகவல் கொடுப்பபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு தரப்படும் என்று சி.பி.ஐயும் அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கிடையே மேற்கு வங்க போலீசார் நடத்திய வேட்டையில் பப்பி மகதோ, சத்ரதார் மகதோ ஆகிய இருவரும் சிக்கினர். ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ப்பில் உமா காந்த் மகதோதான் முக்கிய நபராக செயல்பட்டார் என்று இந்த இருவரும் வாக்குமூலம் தந்தனர்.

இதையடுத்து உமா காந்த்தைப் பிடிக்க நடவடிக்கை [^] தீவிரமானது. மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள லோதசுலி வனப்பகுதியில் மோகன்பூர் என்ற இடத்தில் அவர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய ரிசர்வ் போலீஸ் [^] படை, அதிரடிப்படை போலீஸ் மற்றும் உள்ளூர் போலீஸ் படை கொண்ட கூட்டுப்படை வீரர்கள் குழு நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு உமாகாந்த் மகதோ இருந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

இரவு 1 மணியளவில் உமாகாந்த் மகதோ மற்றும் அவருடன் இருந்த நக்ஸல்களுக்கும் கூட்டுப்படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.

அதிகாலை 5 மணிவரை நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் பல மாவோயிஸ்டுகள் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தனர். உமாகாந்த் மகதோவும் என்கெளண்டரில் பலியாகிவிட்டார்.

இதன்மூலம் ஞானேஸ்வரி ரயில் கவிழ்ப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களில் அசித் மகதோ என்பவர் மட்டுமே இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Thursday, August 26, 2010

போலீஸ் அதிகாரிகள் திறம்பட செயல்பட்டால் பதவி உயர்வு அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை * ரம்ஜான் சிந்தனைகள் * மனைவியுடன் கள்ளத்தொடர்பால் நண்பனை கொன்றேன் : கொலை வழக்கில் கைதானவர் வாக்குமூலம் * ராகுலின் மவுசு குறைகிறதா? * ஓட்டுப்பதிவு இயந்திர திருட்டு விவகாரத்தில் திருப்பம் * வி.ஏ.ஓ.,வின் போலி சான்றிதழ் கொடுத்த டிராவல் ஏஜன்ட் சிங்கப்பூருக்கு ஓட்டம் * ரம்ஜான் சிந்தனைகள் * சட்டசபை தேர்தலில் 100 இடங்களில் பா.ம.க., போட்டி: ராமதாஸ் * நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மின்சிக்கனம் தரும் "நீர்வழிச்சாலை' * "காவி பயங்கரவாதம்' வார்த்தை : சிதம்பரத்திற்கு கட்காரி எதிர்ப்பு * ஸ்ரீரங்கத்தில் ஜெ., தரிசனம்:100 ரூபாய் கட்டுகள் காணிக்கை * ரம்ஜான் சிந்தனைகள் * வி.ஏ.ஓ.,வின் போலி சான்றிதழ் கொடுத்த டிராவல் ஏஜன்ட் சிங்கப்பூருக்கு ஓட்டம் * நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மின்சிக்கனம் தரும் "நீர்வழிச்சாலை' * இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல் * இந்திய டீன்-ஏஜ் வயதினருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு அதிகம் Click here இ-பேப்பர் AAnmeegam News

போலீஸ் துறையில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகளை  ஊக்கப்படுத்தவும், அவர்களை மேலும் திறம்பட செயல்பட வைக்கவும் பதவி உயர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியம்,'' என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்களின் மூன்று நாள் மாநாடு டில்லியில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: போலீஸ் துறையில் தற்போது பதவி உயர்வு என்பது சீனியாரிட்டி அடிப்படையில் உள்ளது. இதை மாற்ற வேண்டும். திறமையான செயல்பாடு மற்றும் உத்வேகத்தின் அடிப்படையில், பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும்.  இப்படி செய்வது போலீஸ் அதிகாரிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும். குறிப்பாக பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு தகுந்த பதவி உயர்வுகளை வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, போலீஸ் படையினருக்கான உபகரணங்கள் வாங்கும் விஷயத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். தரமான உபகரணங்கள் வாங்குவதோடு, மிக விரைவாகவும் அவற்றை கிடைக்கச் செய்ய வேண்டும்.  இதற்கு கொள்முதல் நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். போதுமான பரிசோதனை வசதிகள் உட்பட பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இதையெல்லாம் செய்தால், கொள்முதல் செய்வதற்காக கால நேரத்தை வீணடிப்பது குறையும்.

போலீஸ் படையினரின் செயல்பாடு பல வகையிலும் திறமையானதாக இருக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவல், பயங்கரவாதம் மற்றும் நக்சல்வாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய துணை ராணுவப் படைகளில் அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு ஐந்து ஆண்டுகளுக்கு முன், 20 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களைக் கொண்டு சில படைப்பிரிவுகளையும் பல மாநிலங்கள் உருவாக்கியுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டும். இதன்மூலம் நாட்டின் சில பகுதிகளில் உள்ள மக்கள், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கொண்டுள்ள எண்ணம் மாறும்.

பொதுமக்களின் போராட்டங்களை ஆயுத  உதவியின்றி  கையாள வேண்டும். இதற்காக புதிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும். இதுதொடர்பான பரிந்துரைகளை வழங்க உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை கேட்டுக் கொள்வேன். அந்தக் குழுவும் இரண்டு மூன்று மாதங்களில், பரிந்துரைகளை வழங்கும். காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள்  தற்போது  ஒடுக்கப்பட்டு விட்டாலும், அங்கு பொது ஒழுங்கு சரியில்லாமல் இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.

சவால்கள்: நக்சல்கள் எல்லாம் நம்நாட்டவர்களே. அவர்கள் வன்முறையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால், அவர்களுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. மேலும், நக்சல் வன்முறையால் பாதித்த பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் அரசு உறுதி பூண்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் போலீசார் மூலம் கையாளப்படும் விவகாரங்கள் எல்லாம் சிக்கலானதாக மாறிக் கொண்டிருக்கின்றன. சமூக பதட்டங்கள், மத தகராறுகள், அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பிராந்திய, மொழி ரீதியான மற்றும் இனி ரீதியான வேறுபாடுகள் எல்லாம் போலீசாருக்கு மிகப்பெரிய சவால்களாக உள்ளன.  அரசு சாரா நபர்களின் செயல்பாடுகள், பழமைவாத அமைப்புகள் மற்றும் இடதுசாரி பயங்கரவாதிகளாலும் நிலைமை மேலும் மோசமடைகிறது. இவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

சட்டசபை தேர்தலில் 100 இடங்களில் பா.ம.க., போட்டி: ராமதாஸ்

தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் 100 இடங்களில் பா.ம.க., போட்டியிட்டு, வெற்றி பெரும் வகையில் கிராமம் தோறும் இளைஞர்கள், இளம்பெண்கள் மூலம் பா.ம.க.,வின் கொள்கை கோட்பாடுகள் விளக்கப் பட்டு வருகின்றன,'' என காடையாம்பட்டியில் நடந்த பயிற்சி முகாமில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதிக்கு உட்பட்ட காடையாம்பட்டியில் பா.ம.க., சார்பில் நடத்தப்பட்ட இளம்பெண்கள், இளைஞர்களுக்கான பயிற்சி முகாமில் ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் படிப்பு, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காததால், இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கத்தை துவக்கினேன். பின், வன்னியர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பா.ம.க., வை துவக்கினேன். உங்களில் ஒருவர் கேட்டார், ஏன் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுகிறீர்கள் என்று, எந்தக் கட்சி தமிழகத்தில் கூட்டணி மாற்றம் செய்ய வில்லை. தமிழகத்தில் வன்னியர்கள் ஓட்டு பா.ம.க.,வுக்கு தான் என உறுதி அளித்தால், நான் தனித்து போட்டியிட தயார். அது உங்களைப் போன்ற இளைஞர்கள், இளம்பெண்கள் கையில் தான் உள்ளது. தமிழகத்தை ஆட்சி செய்ய 117 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தால் போதும், 100 தொகுதியில் பா.ம.க., போட்டியிட்டு வென்றாலே ஆட்சியை பிடித்து விடலாம்.

வன்னியர்கள் வாழ, வளர, உயர தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைந் தால் மட்டுமே முடியும். வன்னியர்கள் ஓட்டு வன்னியர்களுக்கு தான் என, நாம் அறிவித்தால் பிற ஜாதியினர் ஓட்டு வன்னியர்களுக்கு இல்லை என்னும் மாயத் தோற்றத் தை உருவாக்குகின்றனர். ஆனால், அதே நேரத்தில் பிற சமூகத்தினருக்கு வன்னியர் ஓட்டு போட வேண்டுமாம். தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைந்தால், அது சமூக நீதி ஆட்சியாக அனைத்து ஜாதி மக்களும் பயன் பெற முடியும். வரும் தேர்தலில் பா.ம.க., 100 தொகுதிகளில் வெற்றி பெரும் வகையில் இது போன்ற பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கிராம் தோறும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பா.ம.க.,வின் கொள்கை, கோட்பாடுகள், வன்னியர்கள் வளம் பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் தங்களின் கிராம மக்களுக்கு தெரிவித்து ஒவ்வொருவரும் வரும் தேர்தலில் 100 ஓட்டுக்களை பா.ம.க., வுக்கு பெற்றுத் தரவேண்டும், என்றார்.

டில்லியில் நான் இருந்தாலும் பழங்குடியினர் நலனே முக்கியம்: ராகுல் உணர்ச்சி பேட்டி

நான் டில்லியில் இருந்தாலும் பழங்குடியின மக்களின் பாதுகாவலனாகத் தான் இருப்பேன்,'' என காங்., பொதுச் செயலர் ராகுல் உணர்ச்சிபட தெரிவித்தார்.

பிரிட்டனைச் சேர்ந்த வேதாந்தா என்ற நிறுவனம், ஒரிசா, நியம்கிரி மலையில் பாக்சைட் தாதுக்களை வெட்டி எடுக்கும் வகையில் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துள்ளது. சுற்றுப்புறச் சூழலை கருத்தில் கொண்டு, இந்த சுரங்கத்துக்கு அனுமதி அளிக்க, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மறுத்துவிட்டார். இது, ஒரிசா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இது, சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மறுக்கப்பட்டதா அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பழி வாங்கப்பட்டதா என்ற கோணத்தில் அரசியல் பார்வையாளர்கள் இந்த பிரச்னையை பார்க்கின்றனர். இருப்பினும், வேதாந்தா நிறுவனம் ஒரிசாவை விட்டு சென்று விடவில்லை; இந்த விவகாரத்தில் அரசியல் இருக்காது என்றே கருதுகிறேன். ஒரிசாவில் இப்போது தான் முதன் முறையாக பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு இது போன்ற திட்டங்கள் தேவை என, முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நியம்கிரி மலையில் தங்களது உரிமைகளை நிலைநாட்ட போராடிய பழங்குடியின மக்களை, காங்., பொதுச் செயலர் ராகுல் பாராட்டிள்ளார். நேற்று, நியம்கிரி மலை அமைந்துள்ள பகுதிக்குச் சென்ற ராகுல், பழங்குடியின மக்களிடையே பேசியதாவது: நான் டில்லியில் இருந்தாலும் உங்களது பாதுகாவலனாகத் தான் இருப்பேன். எப்போதெல்லாம் நியம்கிரி மலைவாழ் மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் நான் வருவேன். மாநிலத்தின் வளர்ச்சி என்பது முக்கியமானது தான். அதே நேரத்தில், ஏழைகள் மற்றும் பழங்குடியின மக்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். ஏழைகள், பழங்குடியின மக்கள் மற்றும் பின்தங்கியவர்களை அழித்து விட்டு வளர்ச்சியை எட்டிவிட முடியாது. நியம்கிரியை பொறுத்தவரை, பழங்குடியின மக்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர்.

ஏழை மக்களின் குரல் வளையம் நசுக்கப்பட்ட போது, அவர்களது குரல் ஒலி டில்லியில் எதிரொலித்தது. இப்போது நீங்கள்(பழங்குடியினர்), உங்களது நிலங்களையும், உங்களையும் காப்பாற்றிக் கொண்டீர்கள். என்னைத் தேடி வந்த ஒரு பழங்குடியின இளைஞனும், பெண்ணும் வருத்தத்துடன் தங்களது கடவுளை அபகரிப்பதாக தெரிவித்தனர். நியம்கிரி மலையை கடவுளாக பாவிக்கும் மக்கள், அதைக் காப்பாற்ற எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என்றும் கூறினர். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பழங்குடியின மக்களின் நலம் காக்க, காங்கிரஸ் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இவ்வாறு ராகுல் பேசினார்.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மின்சிக்கனம் தரும் "நீர்வழிச்சாலை'

தமிழகத்தில் நீர்வழிச்சாலை அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், மின்சார சிக்கனமும் கிடைக்கும்,'' என தேசிய நீர்வழிச்சாலை வளர்ச்சி தொழில்நுட்ப அமைப்பு தலைவர் ஏ.சி.காமராஜ் கூறினார்.

அவர் கூறியதாவது: முதல்வர் கருணாநிதி, 25 சதவீத மின்சாரம் மிச்சமாகும் என்பதால், விவசாயிகளுக்கு இலவச பம்பு செட் திட்டத்தை அறிவித்துள்ளார். நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போவதால்தான் அதிக மின்சாரம் செலவாகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர, சமவெளிக் கால்வாய் அமைத்து, நீர்வழிச்சாலையாகவும் பயன்படுத்தலாம். கடல் மட்டத்திற்கு மேல் 250 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் இக்கால்வாயை அமைக்க வேண்டும். தமிழகத்தில் 900 கி.மீ., அளவு அமைக்கலாம். இதற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். மாநிலத்தின் பல பகுதிகளிலும் செல்லும் இக்கால்வாயை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதால் மாசு குறையும். மின்சாரம் தயாரிப்பு, விவசாயம் போன்றவற்றுக்கும் பயன்படுத்தலாம். இதன்மூலம் மின்செலவு 75 சதவீதம் குறைவதுடன், 1.50 கோடி பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். நீர்வழிச் சாலை திட்டம் பற்றி ஆந்திரா, கர்நாடகா உட்பட பல மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. பீகார் மாநிலத்தில் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டதுடன், மத்திய அரசின் ஆலோசனையையும் பெற்றுள்ளனர்.

எதிர்காலத்தில் நீர்வழிச்சாலை மூலம் அனைத்து மாநிலங்களையும் இணைக்கலாம். இதனால் மின்சாரத்தை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு "பவர் கிரிட்' மூலம் கொண்டு செல்வது போல, வெள்ளப் பகுதியில் இருந்து வறண்ட பகுதிக்கு "வாட்டர் கிரிட்' மூலம் தண்ணீரை கொண்டு செல்லலாம். நாடுமுழுவதும் ஒரே அளவாக 250 மீட்டர் உயரத்தில் கால்வாய் அமையும் என்பதால் நீர்மட்ட விதிப்படி இது சாத்தியமாகும். இதனை நதிநீர் இணைப்பு போன்று கருதக் கூடாது. நதிநீர் இணைப்பில், ஒரு மாநில தேவைக்கு தண்ணீர் வழங்கினால், தண்ணீர் பெற்ற மாநிலம் மீண்டும் அத்தண்ணீரை திருப்பித் தரவாய்ப்பில்லை. ஆனால் இத்திட்டத்தில் அனைத்து நீர்வழிச்சாலையும் ஒரே மட்டத்தில் செயல்படுவதால், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தண்ணீரை கொண்டு செல்லவும், பற்றாக்குறை நீங்கிய பின், தண்ணீரை திருப்பி வழங்கவும் முடியும். தமிழக அரசு இத்திட்டத்தை பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரமாண்டமான முறையில் மாநில நூலகம் : முதல்வர் மகிழ்ச்சி

சென்னை கோட்டூர்புரத்தில், 172 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள மாநில நூலகம், அண்ணாதுரை பிறந்த நாளான செப்., 15ம் தேதி திறக்கப்படுகிறது. ஓரிரு நாட்களில் இறுதிக் கட்டப் பணிகள் முடிய உள்ள நிலையில், முதல்வர் கருணாநிதி நேற்று நேரில் சென்று நூலகத்தை பார்வையிட்டார்.

தமிழகத்தில் 4,028 நூலகங்கள் இயங்கி வருகின்றன. இதில், பெரிய நூலகமாக கன்னிமாரா நூலகம் இருந்து வருகிறது. இதை விட அதிக நூல்களைக் கொண்ட மிகப் பெரிய நவீன நூலகத்தைக் கட்ட முடிவெடுத்து, 2007-08ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னை கோட்டூர்புரத்தில், அண்ணா பல்கலை வளாகத்தை ஒட்டி எட்டு ஏக்கர் பரப்பிலான இடத்தில், எட்டு அடுக்குகளுடன் 120 கோடி ரூபாய் செலவில், சர்வதேச தரத்தில் மாநில நூலகம் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு, 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி, முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். அக்டோபர் மாதம் துவங்கிய கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்தன.

முதல்வர் கருணாநிதி, நூலகத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அடிக்கடி நேரில் சென்று, கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டனர். இதன் காரணமாக, 22 மாதங்களில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கட்டுமானப் பணிகள் முடிந்து, உள் அலங்கார வேலைப் பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. நூல்களை அடுக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் கருணாநிதி நேற்று காலை நேரில் சென்று நூலகத்தை பார்வையிட்டார். முதல்வருடன், அமைச்சர்கள், நூலகத் துறை இயக்குனர் அறிவொளி ஆகியோர் சென்றிருந்தனர். மூன்று தளங்கள் வரை சென்று, நூலகத்தை முதல்வர் பார்வையிட்டார்.

முதல்வர் மகிழ்ச்சி: நினைத்தபடி மிக நேர்த்தியாக நூலகத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றிருப்பது குறித்து, அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் முதல்வர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதையடுத்து, அண்ணாதுரை பெயரில் அமைக்கப் பட்டுள்ள நூலகத்தை, அவரது பிறந்த நாளான செப்., 15ம் தேதியே திறப்பு விழாவை வைத்துக் கொள்ள முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, அடுத்த மாதம் 15ம் தேதி அண்ணாதுரை நூற்றாண்டு நூலகத்தை, முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார். ஐ.டி., நிறுவனம் போல், அழகான வடிவமைப்புடன் பிரமாண்டமான முறையில் மாநில நூலகம் உருவாக்கப்பட்டு உள்ளது.

ஆரம்பத்தில் 120 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு திட்டமிட்டிருந்த போதும், பின்னர் படிப்படியாக திட்ட ஒதுக்கீடு 172 கோடியே 17 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. ஆசியாவில் மிகப் பெரிய நூலகம் சிங்கப்பூரில் உள்ளது. இரண்டாவது மிகப் பெரும் நூலகம் என்ற பெருமையை சென்னையில் கட்டப்படும் நூலகம் பெறுகிறது. பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடனும், வாசகர்களை கவரும் வகையிலும் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

நூலகத்தில் உள்ள வசதிகள்: எட்டு தளங்கள், 3 லட்சத்து 33 ஆயிரத்து 140 சதுர அடி பரப்பளவில் நூலகம் கட்டப் பட்டுள்ளது. தரை தளத்தில், வரவேற்பறை, பிரெய்லி முறையிலான புத்தகங்கள், இரண்டு கருத்தரங்கு கூடங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. முதல் தளத்தில் சிறுவர்கள் பிரிவு, நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள், வாசகர்கள் படிப்பதற்கு விசாலமான அறை ஆகியவையும், இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்களும் இடம் பெறுகின்றன. மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், நான்காவது தளத்தில் தமிழ் அல்லாத திராவிட மொழி நூல்கள் மற்றும் இதர இந்திய மொழி நூல்கள், ஐந்தாவது தளத்தில் பழைய நாளிதழ்கள், பருவ இதழ்கள் இடம் பெறுகின்றன. ஆறாவது தளத்தில் அரசு ஆவணங்கள், ஏழாவது தளத்தில் நன்கொடையாளர்கள் வழங்கிய புத்தகங்கள், ஆடியோ - வீடியோ பிரிவு ஆகியவையும், எட்டாவது தளத்தில் அரிதான நூல்கள், பாதுகாக்கக் கூடிய நூல்கள், புகைப்படங்கள் மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகியவை அமைகிறது. ஒட்டு மொத்த நூலகத் துறை வளர்ச்சியடைவதற்கு உந்து சக்தியாக மாநில நூலகம் அமையுமென பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் நம்புகின்றனர்.

புட் கோர்ட், காபி ஷாப்...! இந்நூலகத்தில் ஒரே நேரத்தில் 1,200 வாசகர்கள் அமர்ந்து நூல்களை படிக்க முடியும். 200 பேர் அமரும் வகையில் ஒரு கருத்தரங்க கூடமும், 30 பேர் அமையும் வகையில் ஒரு கருத்தரங்கு கூடமும் அமைக்கப்படுகின்றன. 1,280 பேர் அமரக்கூடிய மிகப்பெரிய கூட்ட அரங்கம், மிகப்பெரிய அளவில் பார்க்கிங் வசதி, புட் கோர்ட், காபி ஷாப் என, "ஹைடெக்' முறையில் அசத்தலாக பல்வேறு வசதிகள் அமைகின்றன. முக்கியமாக, நூலகத்தில் 12 லட்சம் புத்தகங்கள் இடம்பெறுகின்றன. முதற்கட்டமாக, திறப்பு விழாவின்போது 4 லட்சம் புத்தகங்கள் வைக்கப்படுகின்றன. இதற்கான புத்தகங்கள், நூலகத்தில் அடுக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டில் 4 லட்சம் புத்தகங்களும், அதற்கு அடுத்த ஆண்டில் 4 லட்சம் புத்தகங்களும் வைக்கப்பட உள்ளன. இந்த நூலகத்தில் பணிபுரிவதற்காக பிரத்யேகமாக போட்டித் தேர்வு மூலம் 100 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் 29ம் தேதி தேர்வு நடக்கிறது. அடுத்த ஒரு வாரத்தில் முடிவை வெளியிட்டு, நூலக திறப்பு விழாவின் போது அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிகிறது.

Wednesday, August 25, 2010

மாநில அரசே ஜாதிவாரி சென்ஸஸ் நடத்த வேண்டும்: ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்

 மத்திய அரசு [^]க்காக காத்திருக்காமல் மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமுதாயத்தில் பெரும்பான்மையாக உள்ள மக்கள், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் [^] போன்றவற்றில் முன்னேற வேண்டும்; அதற்கு ஒவ்வொரு ஜாதியினருக்கும் விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பது நீதிக் கட்சியின் கொள்கை.

பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு, அவர்களின் ஜனத்தொகை விகிதாச்சாரப்படி ஒதுக்கீடு செய்யும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கிடைக்க, அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டும் என்பது பெரியாரின் கொள்கை.

இந்த வழியில் வந்ததாக உரிமை கொண்டாடுகிறவர்கள், யாரும் வற்புறுத்தாமல், யாரும் கோரிக்கை வைக்காமல், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும். அப்படி நடைபெறாததால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நான் கேட்கிறேன்.

ஆனால், இதற்கெல்லாம் தலையாட்டுவதாக இல்லை என்று முதல்வர் கருணாநிதி [^] கூறியிருக்கிறார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை, சமூக நீதிக்கோ, நீதிக் கட்சியின் கொள்கைக்கோ எதிரானது என்று சொல்ல முடியுமா?. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எந்த அடிப்படையில் 50 சதவீத இடஒதுக்கீடு என்பது முடிவு செய்யப்பட்டது? அதற்கான கணக்கு எங்கே? என்று உச்ச நீதிமன்றம் [^] கேட்டுள்ளது.

இதுவரை கணக்கு இல்லாவிட்டால், புதிதாக கணக்கெடுப்பு நடத்தி, அந்த விவரங்களை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு எவ்வளவு வேண்டும் என்பதை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தேவைப்பட்டால், மாநில அரசு இடஒதுக்கீட்டின் அளவை தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதற்காக புதிய சட்டமும் இயற்றலாம் என்று கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சமூக நீதியில் அக்கறையுள்ள எந்த ஒரு அரசும், இந்த அனுமதி கிடைத்த மறுநாளே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும்.

புதுச்சேரி மாநில அரசு யாரும் கோரிக்கை வைக்காமலேயே, வரும் நவம்பர் மாதத்துக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்க ஆணையிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் புதிதாக இடஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வரப்போவதாகவும் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், சமூக நீதி கொள்கைக்கு எங்களைத் தவிர வேறு யார் உரிமை கொண்டாட முடியும்? என்று கேட்கும் தமிழக முதல்வர் கருணாநிதி அகில இந்திய அளவில் முயற்சி நடப்பதால், இங்கே தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று கூறியிருக்கிறார். இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில், மாநிலத்துக்கு கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க முன்வராமல், பொறுப்பை தட்டிக் கழித்து ஒதுங்கிக் கொள்வது எந்த வகையில் நியாயம்? இது இரட்டை நிலை இல்லையா?

ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. பரிசீலிக்கலாம் என்ற நிலையில்தான் மத்திய அரசு உள்ளது. ஆனால், தமிழக அரசின் நிலை அப்படி அல்ல. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான கடமையையும், பொறுப்பையும் மாநில அரசின் மீது உச்ச நீதிமன்றம் சுமத்தியிருக்கிறது. ஓராண்டு காலத்துக்குள் கணக்கெடுப்பை செய்து முடிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த கெடு முடிவதற்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, புதிதாக இடஒதுக்கீடு அளவை முடிவு செய்து, அதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், இப்போது இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கும் ஆபத்து வந்துவிடும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

ஜெ., ஆட்சியை கொண்டு வர தலைகீழாய் நிற்கின்றனர் :கருணாநிதி

ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டு வர, கம்யூனிஸ்டுகள் தலைகீழாக நிற்கின்றனர்; அதற்காக, அரசின் சாதனைகளை மறைக்கப் பார்க்கின்றனர்,'' என, முதல்வர் கருணாநிதி பேசினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி ஆதரவாளர்கள், தி.மு.க.,வில் இணையும் விழா சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது.

அவர்களை வரவேற்று, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:திருப்பூர் பனியனுக்கு பெயர் பெற்றது. மனிதன் உடை உடுத்தும்போது பனியனைப் போட்டுவிட்டு பின், சட்டை அணிந்து கொள்வது வழக்கம். தற்போது பனியன் போன்ற உங்களை எல்லாம் அணிந்திருக்கிறேன். சட்டையை எப்போது அணியப் போகிறேன் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.மார்க்சிஸ்ட் கட்சியை உடைத்து, அதில் உள்ளோரை இழுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை; நான் அப்படிப்பட்ட நோக்கம் கொண்டவனும் அல்ல. யாரை தோழர்கள், நண்பர்கள் என்று அழைத்தேனோ, அவர்களைத்தான் இன்று உடன் பிறப்புகள் என்று அழைத்திருக்கிறேன்.

கம்யூனிஸ்டுகளுக்கும், எனக்கும் பந்தம், பாசம் உண்டு. வலது, இடது என பிரிந்த நிலையிலும், இரண்டு தலைவர்களிடத்திலும் நான் நெருக்கமாக, நண்பராகவே உள்ளேன். அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் இருக்கும் இடம் அப்படி; சேர்வார் தோஷம்.கோவிந்தசாமியின் உழைப்பு, பேச்சாற்றல், சொல்லாற்றலை அவர்கள் பொருட்படுத்தவில்லை. போ என சொல்லாமல் போகவிட்டு விட்டனர். அவர் இங்கு வந்திருப்பது ஆறுதல் பெறுவதற்காகத்தான். அவருக்கு சோதனை வந்ததும், அழைத்து பேசினேன்."என் கட்சிக்கு வா' என்று சொல்லும் அற்ப புத்தியில் அல்ல. தளபதியாக இருந்தவர் சோதனையை எப்படி தாங்கிக் கொள்வார் என அழைத்து ஆறுதல் சொன்னேன்; மருந்து தடவி விட்டேன்.

நான் இரண்டாவது முறை முதல்வராக பொறுப்பேற்றபோது, கோபாலபுரம் வீட்டிற்கு கம்யூனிஸ்ட் தலைவர் மணலி கந்தசாமியும், சுப்புவும் வந்தனர். "மணலி கந்தசாமி உங்கள் தலைமையில், தி.மு.க.,வில் இணைய விரும்புகிறார்' என்றார் சுப்பு. "நீங்கள் வரவேண்டாம்; வந்தாலும் சேர்க்க மாட்டேன், பெரும் தலைவரான நீங்கள் வருவது எனக்கு பெருமைதான்; உங்களுக்கு பெருமை இல்லை' என்று மறுத்து விட்டேன். இதனால் மணலி கந்தசாமி வேறு கட்சிக்கு போய்விட்டார்.மார்க்சிஸ்டாக இருந்தாலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும், அடிக்கடி கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்கள் அல்ல; தற்போது, கொள்கையை மாற்றுவதையே தங்கள் கொள்கையாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்பதற்காக முழுமூச்சாக, தலைகீழாக நிற்கின்றனர். தி.மு.க., அரசின் சாதனைகளை மறைக்கப் பார்க்கின்றனர். அரசின் சாதனைகளை யாராலும் மறைக்க முடியாது; மறுக்கவும் முடியாது. தி.மு.க.,வுக்கு மக்கள் ஆதரவு கிடைத்துக் கொண்டே இருக்கும்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

உரிய இடத்திற்கு வந்துவிட்டேன்: விழாவில், கோவிந்தசாமி எம்.எல்.ஏ., பேசும்போது, ""திருப்பூர் மக்களுக்காக பல கோடி ரூபாயில் திட்டங்களை  தந்ததால் பாராட்டு விழா அறிவித்தேன். அதற்காக, என்னை அழைத்துக்கூட, பேசாமல் கட்சியில் இருந்து வெளியேற்றிவிட்டனர். ""நானும் உரிய இடத்திற்கு வந்துவிட்டேன். அவர்கள் என்னை நீக்கியதாக எனக்கும் கடிதம் வரவில்லை; சபாநாயகருக்கும் போகவில்லை. என் ஆதரவாளர்கள் தி.மு.க.,வில் இணைந்துள்ளனர்; நான் வேறொரு நாளில் இணைவேன்,'' என்றார்.

சட்டசபையில் ஜீவா படம் : சட்டசபையில் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் படம் வைக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.விழாவில் முதல்வர் பேசும்போது, ""சட்டசபையில் பல தலைவர்களின் படங்கள் உள்ளன; ஜீவானந்தம் படம் வைக்க வேண்டும் என சிவபுண்ணியம் எம்.எல்.ஏ., என்னிடம் கேட்டார்; கோவிந்தசாமியும் கேட்டார். வைக்கப்படும் என்று சொன்னேன்.""இன்று நீங்கள் எல்லாம் தி.மு.க.,வில் இணைந்துள்ளீர்கள். இந்த நாளை நினைவில் வைத்து, சட்டசபையில் ஜீவானந்தம் படமும் வைக்கப்படும். இது கோவிந்தசாமி, சிவபுண்ணியத்திற்கு நான் காட்டும் மரியாதை,'' என்றார்.

அரசியலில் மிகப்பெரிய தலைவராக விஜயகாந்த் வருவார் : இளங்கோவன்

தமிழக அரசியலில் மிகப்பெரிய தலைவராக விஜயகாந்த் வருவார்,'' என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு நேற்று 58வது பிறந்த நாள். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு காலை 9.45 மணியளவில் நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்தார்.விஜயகாந்துடன் 10 நிமிடம் பேசித் திரும்பிய இளங்கோவன், நிருபர்களிடம் கூறுகையில், ""எதிர்வரும் காலத்தில் தமிழக அரசியலில் விஜயகாந்த் மிகப்பெரிய தலைவராக வருவார். அவரது கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது,'' என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, இந்திய கம்யூ., கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி., ஆரூண் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக மதியம் வரை காத்திருந்தனர். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் விஜயகாந்தை நேரடியாக சந்தித்து இளங்கோவன் வாழ்த்து தெரிவித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் ஆர்வமாக பேசப்படுகிறது.

நம்மை ஒதுக்கிவைத்த காலம் முடிந்தது : பிரதமர்

அணுசக்தி என்பது நீடித்து பலன் தரும் ஒன்று. அதை நாம் புறக்கணிக்க முடியாது. அணுஉலை விபத்து நஷ்ட ஈடு  மசோதா நிறைவேறுவதன் மூலம், அணுசக்தித் துறையில் நாம் ஒதுக்கி வைக்கப்பட்டது முடிவுக்கு வரும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அத்துடன், அணு உலை விபத்து நஷ்ட ஈடு மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

"அணு உலை விபத்து நஷ்ட ஈடு மசோதா 2010' நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறியதாவது:இந்த மசோதா தயாரிக்கப்பட்டது மற்றும் அதை அவசரமாக பார்லிமென்டில் நிறைவேற்ற முற்படுவது போன்றவற்றை பார்க்கும் போது, அமெரிக்கா சொல்கிறபடி, மத்திய அரசு செயல்படுவது போல தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் பெரும்பான்மை இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும்.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகைக்கு முன்னதாக மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தென்கொரியா அல்ல இந்தியா. அவர்களின் பாணியை நாம் பின்பற்ற வேண்டியதில்லை. எங்கள் கட்சி சொல்லும் திருத்தங்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால், நாங்கள் மசோதாவை ஆதரிப்போம்.இவ்வாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.

மணீஷ்திவாரி - காங்கிரஸ்: அணுசக்தி விஷயத்தில் இந்தியா தனிமைப்படுத்தப்படுவதை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தவர் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங். அவர் மேற்கொண்ட நடவடிக்கையை தான், பிரதமரான பின், மன்மோகன் சிங் முன்னெடுத்துச் சென்றுள்ளார்.அமெரிக்காவுடன் மட்டுமின்றி, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளுடனும் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு எரிசக்தி அவசியம் என்பதால், இந்த மசோதாவும் அவசியமே. இந்தியா முன்னேற வேண்டும் என்றால், அணுசக்தி அவசியமான ஒன்று.

சைலேந்திர குமார் - சமாஜ்வாடி: அணுசக்தி விவகாரத்தில் சப்ளையர் மற்றும் ஆபரேட்டர் என, இரு தரப்பினருக்கும் பொறுப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்பதால், இந்த மசோதா மிகவும் முக்கியமானது.

கோரக் பிரசாத் ஜெய்ஸ்வால்  - பகுஜன் சமாஜ்: இந்த புதிய மசோதாவுக்கு அவசியமே இல்லை. புதுப்புது மசோதாக்களை கொண்டு வருவது அதிகரித்து வருகிறது.

வாசுதேவ் ஆச்சார்யா - மார்க்சிஸ்ட்: இது அமெரிக்க நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.   அமெரிக்க வர்த்தக நலனுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருக்கிறது.

டி.கே.எஸ்.இளங்கோவன் - தி.மு.க: ஒரு விபத்து நடந்ததை வைத்து, அத்தொழிலையே ஏற்க முடியாது என்று கூறமுடியாது. எதிர்காலத்தில் கார்கள் கூட அணு மின்சக்தியில்  ஓடும்.

இந்த விவாதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:அணு உலை விபத்து நஷ்ட ஈடு மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம், அணுசக்தித் துறையில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டது முடிவுக்கு வரும். அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டு இந்த மசோதா தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுவது தவறு. அணுசக்தி என்பது நீடித்து பலன் தரக்கூடிய, ஒரு நல்ல வாய்ப்பு. அதை நாம் புறக்கணிக்க முடியாது. இதன்மூலம் உலக நாடுகளுடன் அணுப் பொருட்கள் வர்த்தகத்தில் இந்தியா ஈடுபட முடியும்.அமெரிக்கர்களின் நலனை மேம்படுத்தவும், அமெரிக்க கம்பெனிகளை மேம்படுத்தவும் இந்த மசோதா கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது. இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள், 1992ம் ஆண்டு முதல் கூறப்பட்டு வருகின்றன.இதற்கெல்லாம் வரலாறு பதில் சொல்லும்.

 1991ம் ஆண்டில் நிதி அமைச்சராக பணியாற்றிய போது, பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தேன். அது இந்தியா மறுமலர்ச்சி அடைய வழி வகுத்தது. அதுபோல அணுசக்தியும் நீண்ட காலத்திற்கு பலன் தரும்.தொழில்நுட்பம் என்பது நிலையாக இருக்காது. அது வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல முடியாது.அணுமின் நிலையங்களை பாதுகாக்க தேவையான ஒவ்வொன்றையும் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. அணுசக்தி பயன்பாடு என்பது முக்கியமான பிரச்னை. அது ஒதுக்கித்தள்ள முடியாது. அதனால், அணுசக்தியை பயன்படுத்துவது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் மிகவும் கவனமாக மேற்கொள்ளப்படும். உறுப்பினர்களின் கவலைகளை நான் நன்கறிவேன்.  இந்தியாவில் 40 அணு உலைகள் உள்ளன. அவற்றில் ஒரு விபத்து கூட நடந்ததில்லை. இது விஞ்ஞானிகளின் திறமைக்கு ஒரு சான்று.இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.இதையடுத்து, அணு உலை விபத்து நஷ்டஈடு மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.மேலும், வரும் 31ம் தேதி வரை  லோக்சபா கூட்டத் தொடர்  நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Monday, August 23, 2010

எம்.பி.,க்களுக்கு மாத அலவன்ஸ் மேலும் உயர்வு : வரியும் கட்ட வேண்டாம் என மத்திய அரசு முடிவு

எம்.பி.,க்களுக்கான சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள் கடந்த வாரம் அதிகரிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மீண்டும், "ஜாக்பாட்' அடித்துள்ளது. எம்.பி.,க்களுக்கான மாதாந்திர அலவன்ஸ்களை 10 ஆயிரம் ரூபாய் உயர்த்த, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த அலவன்ஸ்களுக்கு வருமான வரிச் சலுகையும் உண்டு.

எம்.பி.,க்கள் தற்போது மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். "இந்த சம்பளத்தை 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக உயர்த்த வேண்டும்' என, பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிந்துரை செய்தது. ஆனால், அந்த அளவுக்கு உயர்த்தினால், மக்களிடையே பெரும் அதிருப்தி உருவாகும் என்பதால், தற்போது வாங்குவதை மூன்று மடங்கு அதிகமாக உயர்த்தி, மாதம் 50 ஆயிரம் ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவையும் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அத்துடன், தொகுதி மற்றும் அலுவலக அலவன்ஸ்கள் மாதம் தலா 20 ஆயிரம் ரூபாய் என்பது 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இருந்தாலும், "இந்த சம்பள உயர்வு போதாது, பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிந்துரைத்தபடி, 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக எம்.பி.,க்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும்' என வலியுறுத்தி, கடந்த வாரம் ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.,க்கள் பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த கட்சிகளின் தலைவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார். பின்னர், சம்பள உயர்வு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், எம்.பி.,க்களின் தொகுதி அலவன்ஸ் மற்றும் அலுவலக அலவன்ஸ்களை மாதம் ஒன்றுக்கு தலா 5 ஆயிரம், அதாவது இரண்டும் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் அதிகரிக்க வகை செய்யும் முன்மொழிவை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். இதற்கு அமைச்சரவையும் உடனடியாக ஒப்புதல் அளித்தது. இந்த அலவன்ஸ்களுக்கு வருமான வரிச் சலுகையுண்டு. இதனால், எம்.பி.,க்கள் இனி மாதம் ஒன்றுக்கு தொகுதி அலவன்சாக 45 ஆயிரம் ரூபாயும், அலுவலக அலவன்சாக 45 ஆயிரம் ரூபாயும் சேர்த்து 90 ஆயிரம் ரூபாய் அலவன்சாக பெறுவர். சம்பளம் 50 ஆயிரம் ரூபாயையும் சேர்த்தால், மாதம் ஒன்றுக்கு 1.40 லட்சம் ரூபாய் பெறுவர். இதுதவிர, வேறு பல சலுகைகளும் உண்டு.

கல்வி தீர்ப்பாயம்: இது மட்டுமின்றி, உயர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான தகராறுகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக கல்வித் தீர்ப்பாயம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான, "கல்வி தீர்ப்பாயங்கள் மசோதா-2010'க்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது.இந்தச் சட்டத்தின் கீழ் மாநில அளவில் அமைக்கப்படும் தீர்ப்பாயங்கள், கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள்  தொடர்பான விவகாரங்களை கையாளும். தேசிய அளவில் அமைக்கப்படும் தீர்ப்பாயம், உயர் கல்வி கட்டுப்பாட்டு அமைப்புகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களை விசாரிக்கும்.இந்த மாநில அல்லது தேசிய கல்வித் தீர்ப்பாயங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்தாத நபர்களுக்கு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த மசோதா ஏற்கனவே லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை விவசாயியின் ஒரு சென்ட் நிலம் கூட எடுக்கக் கூடாது : ராமதாஸ்

விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல் மாற்று இடத்தில் கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே "கிரீன் பீல்டு' விமான நிலையம் அமைக்க 22 கிராமங்களில் இருந்து விவசாய நிலங்கள், வீடுகள் உட்பட 4,825 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.திருவள்ளூர் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.  இதில் பல பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதையடுத்து "இப்பகுதியில் உள்ள விளைநிலங்களை அரசு கையகப்படுத்தக் கூடாது. தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே நேற்று பா.ம.க., மற்றும் உழவர் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது: ஏழை மக்களின் விளை நிலங்களை கையகப்படுத்துவோம் என்றால் அங்கு ராமதாஸ் இருப்பார். விளை நிலங்களை பாழாக்கும் இடத்தில் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.ஒரு சென்ட் நிலத்தைக்கூட ஏழை விவசாயிகளிடம் இருந்து அபகரிக்கக் கூடாது என தொடர்ந்து நான் கூறியபோது, ஒரு சென்ட் விளை நிலத்தைக் கூட எடுக்க மாட்டேன் என சட்ட சபையில் கருணாநிதி சொன்னார். என் அறிக்கையை பார்த்து கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க ராமதாஸ் முட்டுக்கட்டை போடுகிறார்; எங்கே கட்டுவது என முதல்வர் அறிக்கை விடுகிறார். கிரீன் பீல்டு விமான நிலையம் தேவைதான். ஆனால் 22 கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று இடமான செங்குன்றம் அடுத்த அலமாதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட விமான நிலையம் பயனற்ற நிலையில் உள்ளது. அதனருகே வனத்துறைக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலமும், பால் பண்ணைக்கு சொந்தமாக ஆயிரம் ஏக்கர் நிலமும் உள்ளது.அங்கு ஏன் கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்கக் கூடாது.

நாங்கள் நில ஆர்ஜிதம் செய்யவில்லை, மண்ணழுத்த பரிசோதனைதான் செய்தோம் என முதல்வர் கூறுகிறார். விருப்பத்துக்கு மாறாக நிலங்களை அபகரிப்பதற்கு பெயர்தான் ஆர்ஜிதம்.ஆசிய வளர்ச்சி வங்கியின் புள்ளி விவரப்படி இந்தியாவில் 99.5 சதவீதம் ஏழைகள்தான் உள்ளனர். மீதமுள்ள அரை சதவீத பணக்காரர்கள்தான் விமானத்தில் செல்பவர்கள். இதற்காக ஏழை விவசாயிகளின் விளைநிலங்களை அபகரிக்காமல் மறுபரிசீலனை செய்து, மாற்று இடத்தில் கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பெண்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீதும், சம்பவ இடத்துக்கு வராத திருவள்ளூர் வருவாய் அதிகாரிகள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

கறுப்பு பணம் வாங்குகிறார் விஜயகாந்த்: கருணாநிதி

என்னை ஊழல் கட்சி என சொல்லும் விஜயகாந்த், படத்தில் நடிக்க லட்சக்கணக்கில் வாங்குகிற பணத்தில், பெரும் பகுதி வருமான வரி கட்டாமல், கறுப்பு பணமாக வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறதே, அவர் ஊழலைப் பற்றி பேசியிருப்பது, கேலியாக இருக்கிறது,'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரின் கேள்வி - பதில்:

தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டுமே ஊழல் கட்சிகள்; அவர்களோடு கூட்டணி கிடையாது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியிருக்கிறாரே?

அதை எல்லா ஏடுகளும் வெளியிட்டிருக்கின்றன. ஒரு ஒப்பீட்டு உதாரணத்தை சொன்னால், பொதுமக்களுக்கு விளக்கம் கிடைக்கும். தி.மு.க., தலைவனாக இருக்கும் நான், திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதுவதில் கிடைக்கும் ஊதியம் முழுவதையும், வருமான வரி கட்டியது போக மிச்சத்தை பொது நலன்களுக்கான நிதியாக வழங்குகிறேன். சில நேரம், அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியிலும் சேர்த்து விடுகிறேன்.உதாரணமாக, சுனாமி நிவாரணத்திற்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம், ஸ்டாலின் மூலம் 21 லட்ச ரூபாயை நேரில் வழங்கச் செய்தேன். என் பெயரில் உள்ள அறக்கட்டளை மூலம், இதுவரை 2,049 பேருக்கு ஒரு கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எனது பொற்கிழி அறக்கட்டளை மூலம், 17 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கியிருக்கிறேன். ஒரு கோடி ரூபாயை தமிழ்ச் செம்மொழி நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, என் வீட்டையே மருத்துவமனையாக மாற்றிட வழங்கியிருக்கிறேன். அப்படிப்பட்ட என்னையும் ஊழல் கட்சி என்கிறார்; மற்றொரு கட்சியையும் ஊழல் கட்சி என்கிறார்.இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டேன் என கூறும் நண்பர் விஜயகாந்த், ஒரு படத்திலே கதாநாயகனாக நடிக்க லட்சக்கணக்கில் வாங்குகிற பணத்தில், பெரும் பகுதி வருமான வரி கட்டாமல், கறுப்பு பணமாக வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறதே, அவர் ஊழலைப் பற்றி இப்படி பேசியிருப்பது, உலகத்தினர் வாய் விட்டு சிரிப்பதற்குரிய கேலியாக அல்லவா இருக்கிறது. பிறர் முகத்தில் குறை காண்பதற்கு முன், தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டாமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., மகேந்திரன் விடுத்துள்ள மறுப்பு அறிக்கையைப் பார்த்தீர்களா?அவரது மறுப்பு அறிக்கையை பார்த்தேன். அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள, விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர் குமரன் பத்மநாபன் அளித்த பேட்டியையும் நாளேடுகளில் படித்தேன். அந்த பேட்டி உண்மையல்ல என மகேந்திரன் எம்.எல்.ஏ., மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதிலே என்ன உண்மை என்பதை குமரன் பத்மநாபன் தான் தெரிவிக்க வேண்டும்.

ஸ்ரீபெரும்புதூர் கிரீன்பீல்டு விமான நிலையம் உட்பட தமிழகத்தில் வரக்கூடிய நல்ல திட்டங்களை எல்லாம், அரசியல் உள்நோக்கத்தோடு, ஒரு சில கட்சிகள் எதிர்ப்பதால், நாட்டிற்கும், மக்களுக்கும் தானே இழப்பு?
இந்த பிரச்னை பற்றி, "தினமலர்' நாளிதழில், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த கணபதி என்பவர், "இது உங்கள் இடம்' பகுதியில் எழுதியுள்ளார். அதில் அவர், சில குறைகளைத் தெரிவித்திருந்த போதும், சில உண்மைகளையும் தெரிவித்துள்ளார். உண்மை பொதுமக்களுக்குத் தெரிகிறது. அது மாத்திரமல்ல, ஏதோ உள்நோக்கத்தோடு தான், எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என்பதும் பொதுமக்களுக்கு புரிந்துள்ளது.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

பீகாரில் கிரிமினல் பின்னணி உடையவர்களுக்கு டிக்கெட் கிடையாது:காங்கிரஸ்

பீகார் சட்டசபை தேர்தலில் குற்றப் பின்னணி உடையவர்களுக்கு தேர்தலில் போட்டியிட, "சீட்' கொடுக்கப்பட மாட்டாது' என, காங்கிரஸ் மேலிடம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால், எப்படியாவது சீட் பெற்று விடலாம் என, கனவு கண்டுகொண்டிருந்த குற்றப் பின்னணி உடைய அரசியல்வாதிகள், கலக்கம் அடைந்துள்ளனர்.

பீகார் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. தற்போதைய ஆளும் கூட்டணியான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி, இந்த தேர்தலிலும் தொடர்கிறது. மற்றொரு புறம், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவும், லோக்ஜன சக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளனர். இவர்களுக்கிடையே, தொகுதி பங்கீடும் சுமுகமாக முடிந்துள்ளது. இந்நிலையில், பீகாரில் காங்கிரசை பலமான கட்சியாக்க வேண்டும் என்பதில், அக்கட்சியின் பொதுச் செயலர் ராகுல் தீவிரமாக உள்ளார். இதற்காக, தன் இளைஞர் படையை அவர் முடுக்கி விட்டுள்ளார். காங்கிரசில் சேர்ந்து எப்படியாவது சீட் பெற்றுவிடலாம் என, பணபலம் மற்றும் ஆள் பலம் கொண்ட, குற்றப் பின்னணி உடைய சிலர் கனவு கண்டு கொண்டிருந்தனர். ஆனால், இவர்களின் கனவு, பகல் கனவாகி விட்டது.

கிரிமினலுக்கு சீட் இல்லை: பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் சவுத்ரி மெகபூப் அலி கய்சர் இது குறித்து கூறியதாவது:பீகாரில் காங்கிரஸ் பலமான கட்சியாக உருவெடுக்கும். இதற்கான முயற்சிகளை கட்சி மேலிடம் எடுத்து வருகிறது. யார் வேண்டுமானாலும் கட்சியில் இணையலாம். இதற்கு எந்த நிபந்தனையும் இல்லை. அதே நேரத்தில், குற்றப் பின்னணி உடைய எவருக்கும் வரும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்பட மாட்டது.இதற்காக, தேர்தலில் போட்டியிட சீட் கேட்கும் ஒவ்வொருவரின் பின்னணி குறித்தும், முழுமையாக ஆய்வு செய்யப்படும். எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாதவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட டிக்கெட் தர அனுமதி வழங்கப்படும்.

ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிலர், இன்று(நேற்று) காங்கிரசில் சேர்ந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, மேலும் பலர் விரைவில் காங்கிரசில் இணையவுள்ளனர்."பீகாரில் காங்கிரஸ் வெற்றி பெறாது' என, ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் கூறி வருகின்றனர். வரும் தேர்தலில் இதை பொய்யாக்குவோம். மேலும், மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் தான், பீகார் காங்கிரசை வழி நடத்துகின்றனர் என்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் கூறுகின்றனர்.

ஏன், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில், மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் இல்லையா?பீகாரில், ராஷ்டிரிய ஜனதா தளம் - லோக்ஜனசக்தி கூட்டணியை விட, தே.ஜ., கூட்டணி வலிமையாகவே உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 15 ஆண்டுகால ஆட்சியில் கால்நடை தீவன ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவை நடந்ததை யாரும் மறக்கவில்லை.இவ்வாறு சவுத்ரி மெகபூப் அலி கய்சர் கூறினார்.

Friday, August 20, 2010

காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி இன்று மாலையே கூட முறியும்: இளங்கோவன்

காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி இன்று மாலை வரை நிரந்தரமாக இருக்கலாம். நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. உங்களுக்கும் தெரியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெயரை வைக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் நட்பகம் சார்பில், சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மெய்யப்பன் தலைமையில், வசந்தகுமார் எம்.எம்,ஏ., போராட்டத்தை துவக்கி வைத்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது: சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெயரை சூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் நட்பகம் சார்பில், பல வகைகளில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரத்த தானம் செய்து பார்த்தார்கள். ரத்தக் கையெழுத்து இயக்கம் நடத்தினர். ஒரு லட்சம் கையெழுத்து வாங்கி தமிழக அரசிடம் கொடுத்தனர். இவ்வளவு செய்தும் இவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை.இங்கே உள்ளவர்கள் ஊழல் செய்வதில் கில்லாடிகள். நாங்கள் கொள்ளையடிக்கவில்லை. ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. மருத்துவமனைக்கு ராஜிவ் காந்தி பெயர் வைக்க வேண்டுமென்று தான் கேட்கிறோம். நான், காந்திய வழியில் அரசியலில் களமிறங்கியுள்ளேன். எங்கள் காங்கிரசில் நேதாஜி வழி என்றும் ஒரு வழி உள்ளது. இப்போது உள்ள இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் கண்ணசைத்தால், அனைவரும் நேதாஜி வழியில் களமிறங்கவும் தயார்.

நான் மனதில் பட்ட கருத்தை பேசுகிறேன். அதை தவறாக கருதி டில்லிக்கு கோள்மூட்டி விடுகின்றனர். நான் பதவிக்கு ஆசைப்பட்டவன் இல்லை. சோனியா, ராகுல் கரத்தை வலுப்படுத்துவதே என் நோக்கம். கட்சிக்கு கடுமையாக உழைப்பேன். மனதில் பட்டதை நான் தொடர்ந்து பேசிக் கொண்டு தான் இருப்பேன். என்னைத் தடுக்க முடியாது. சென்னையில் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. ஆண்டுகள் பலவாகியும் இன்னும் கட்டப்படவில்லை. அரசிடம் பணம் இல்லையா அல்லது கொடுக்க மனமில்லையா? அரசிடம் பணம் இல்லை என்றால் நாங்களே பணம் வசூலித்து கட்டிக் கொள்கிறோம்.

வலி என்கின்றனர். வலி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. நல்ல காரியத்தை செய்தால் வலி எப்படி ஏற்படும். கூட்டணி தொடரும் என்றால் எப்படி தொடரும். இந்தக் கூட்டணி இன்று மாலை வரை நிரந்தரமாக இருக்கலாம். நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. உங்களுக்கும் தெரியாது.அம்மையார், யாருடன் கூட்டணி வைக்கச் சொன்னாலும் நாங்கள் கூட்டணி அமைப்போம். நான், அம்மையார் என்று சொன்னது சோனியாவை என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைத்தால் சரியாக இருக்கும் என்று நாங்கள் மேலிடத்திற்கு சொல்லி வருகிறோம். வரும் தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

Tuesday, August 17, 2010

சட்டசபைத் தேர்தல்: 78 சீட் வேண்டும்-கார்த்தி சிதம்பரம்

வருகிற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் [^] கட்சிக்கு ஒரு எம்.பி தொகுதிக்கு 2 சட்டசபைத் தொகுதிகள் வீதம் மொத்தம் 78 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கார்த்தி சிதம்பரம் [^].

தமிழக காங்கரஸ் கட்சியிலிருந்து திமுகவுக்கு எதிராக ஈவிகேஎஸ் இளங்கோவனும், கார்த்தி சிதம்பரமும் குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களில் இளங்கோவன் [^] பட்டவர்த்தனமாக திமுகவையும், முதல்வர் கருணாநிதியையும் விமர்சிக்கிறார். கார்த்தி சிதம்பரமும் தனது பலத்திற்கேற்ப திமுகவை விமர்சித்து வருகிறார்.

தமிழக காங்கிரஸைப் பொறுத்தவரையில் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் அல்லது கார்த்தி சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு என நான்கு பெரிய கோஷ்டிகளும், கணக்கிலடங்காத குட்டி கோஷ்டிகளும் உள்ளன.

இவர்களுக்குள் யார் பெரியவர் என்ற பிரச்சினை ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும், தற்போது வாசன் கோஷ்டிக்கு எதிராக இளங்கோவன் கோஷ்டியும், சிதம்பரம் கோஷ்டியும் மறைமுகமாக கை கோர்த்து செயல்பட்டு வருகின்றன. இதன் விளைவே இளங்கோவனும், கார்த்தியும் மாறி மாறி திமுகவை சாடி வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 78 சீட்கள் ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், வருகிற சட்டசபைத் தேர்தலில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் கவனிக்கப்படாத கோரிக்கைகளைத்தான் நான் எதிரொலித்து வருகிறேன். நான் சொல்லும் அனைத்துமே கடைக்கோடியில் இருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் குரல்தான்.

தமிழகத்தில் மொத்தம் 39 எம்.பி தொகுதிகள் உள்ளன. இதில் 15 தொகுதிகளில் ஒருவர் கூட காங்கிரஸ் எம்.பி இல்லை. சென்னையில் உள்ள 3 எம்.பி. தொகுதிகளில் ஒருவர் கூட காங்கிரஸ்காரர் இல்லை.

வருகிற தேர்தலில் ஒரு எம்.பி தொகுதிக்கு 2 சட்டசபைத் தொகுதிகள் வீதம் குறைந்தது 78 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்.

இது எனது யோசனை. இதே போலத்தான் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் நினைக்கிறார். இதுகுறித்துப் பரிசீலிக்க வேண்டியது மேலிடம்தான் என்றார் கார்த்தி சிதம்பரம்.

அடுத்த மாதம் 17-ந் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், கட்சித் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நேற்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

பிரதமர் மன்மோகன்சிங், மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி மற்றும் அகமது படேல், மோதிலால் வோரா உள்பட 26 காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உறுப்பினர்களில் ராகுல்காந்தி, திக்விஜய்சிங் ஆகியோர் வெளியூர் சென்றிருப்பதால், கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மாநில பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்பட்டது.
 
கூட்டம் முடிவடைந்த பிறகு, நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் பத்திரிகை தொடர்பு பிரிவு தலைவர் ஜனார்தன் திவிவேதி, காங்கிரஸ் தலைவர் தேர்தல் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் கூறியதாவது:-
 
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல், ஆகஸ்டு 27-ந் தேதி தொடங்குகிறது. மனுதாக்கலுக்கு செப்டம்பர் 2-ந் தேதி கடைசிநாள் ஆகும். மனுக்கள், 3-ந் தேதி பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற 10-ந் தேதி கடைசிநாள்.

தலைவர் பதவிக்கு போட்டி இருந்தால், செப்டம்பர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படும். அதே நாளில், நாடு முழுவதும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவுகள், செப்டம்பர் 21-ந் தேதி அறிவிக்கப்படும்.
 
காரிய கமிட்டி கூட்டத்தில், காஷ்மீர் கலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், காஷ்மீர் நிலவரம் குறித்து கூட்டத்தில் விளக்கம் அளித்தார். தீவிரவாத ஊடுருவல் மற்றும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துக் கூறினார்.
 
காஷ்மீரில் பெய்த பேய்மழை, மேற்கு வங்காளத்தில் நடந்த ரெயில் விபத்து ஆகியவற்றில் பலியானவர்களுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
 
இவ்வாறு ஜனார்தன் திவிவேதி கூறினார்.
 
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தலைவர் பதவிக்கு ஒருமித்த கருத்துடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வட்டாரத்தில் இருந்து தெரியவருகிறது. சோனியாகாந்தி, இப்பதவியில் 1998-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்முறையாக அமர்ந்தார். கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜிதேந்திர பிரசாதாவை தோற்கடித்து தலைவர் ஆனார். 2005-ம் ஆண்டு தேர்தலில், சோனியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இந்த தடவையும் அவர் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து 4-வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையை பெறுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் கூட, இந்த சாதனையை நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், தற்போது, தலைவர் மற்றும் செயல் தலைவராக உள்ள சோனியாகாந்தி, தலைவர் பதவியை மட்டும் தான் வைத்துக்கொண்டு, செயல் தலைவர் பதவியில் ராகுல்காந்தியை நியமிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, August 16, 2010

கோஷ்டிப் பூசலை உருவாக்குகிறார் கார்த்தி-வாசன் ஆதரவு இளைஞர் காங். தலைவர் பாய்ச்சல்

இளைஞர் காங்கிரஸ் கட்சிக்குள் தேவையில்லாமல் கோஷ்டிப் பூசலை ஏற்படுத்தி வருகிறார் கார்த்தி சிதம்பரம் [^]. அவர் இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களுக்குப் போகக் கூடாது என்று கோபமாக கூறியுள்ளார் தமிழ்நாடு [^] இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா. இவர் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்லாமல், இளைஞர் காங்கிரஸிலும் கூட கோஷ்டிப் பூசல் கொடி கட்டிப் பறக்கிறது. தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த யுவராஜா இருக்கிறார். துணைத் தலைவராக இருப்பவர் ப.சிதம்பரத்தின் வாரிசு கார்த்தி சிதம்பரத்தின் கோஷ்டியைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்த இரு கோஷ்டிகளும், யார் பெரியவர் என்ற போட்டியில் கடுமையாக ஈடுபட்டுள்ளன. இதில் சிக்கி கசங்கிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் கோஷ்டிப் பூசலை உருவாக்கி கட்சியை சீர்குலைத்து வருவதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பரபரப்புப் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களை நடத்தி வருகிறார். இது கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயலாகும்.

இது குறித்து இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழக
பொறுப்பாளருமான கிரண்குமார் ரெட்டியிடமும், காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடமும் புகார் தெரிவித்துள்ளோம். அதன்பேரில் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி தொடர்ந்து கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

மாநிலத் தலைவரான எனக்குக்கூட தகவல் தெரிவிக்காமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகப்பட்டினத்தில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவை நடத்தியுள்ளார். இதன் மூலம் இளைஞர் காங்கிரஸில் கோஷ்டி பூசலை உருவாக்கி வருகிறார்.

இது குறித்து இளைஞர் காங்கிரஸ் மக்களவைத் தொகுதித் தலைவர்கள் 28 பேர் கிரண்குமார் ரெட்டியிடம் புகார் மனு அளித்துள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறிய கார்த்தி சிதம்பரம் மீது கடுமையான நடவடிக்கை [^] எடுக்க வேண்டும். மாநிலத் தலைமைக்கு தெரிவிக்காமல் கூட்டம் நடத்தியதற்காக நாகை மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மூத்த தலைவர்களைக் கொண்டு இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் அட்டைகளை வழங்குமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் கட்சியின் மூத்த தலைவர் அல்ல. அவர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ஆலோசனை சொல்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களில் அவர் பங்கேற்கக் கூடாது என்றார்.

இந்த இளைஞர் காங்கிரஸை நம்பித்தான் தமிழக சட்டசபைத் தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார் ராகுல்காந்தி. ஆனால் இவர்கள் இப்படி அடித்துக் கொள்வதைப் பார்த்தால் ராகுல் காந்தி [^] திட்டம் எப்படி நிறைவேறும் என்பது தெரியவில்லை.

என்னைத் தவிர யாரும் கூட்டணி குறித்து பேசக் கூடாது-தங்கபாலு

கூட்டணி குறித்து நான் மட்டும்தான் பேச வேண்டும். வேறு யாருக்கும் அந்த அதிகாரம் கிடையாது. எனவே காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும். உள்கட்சியில் பேச வேண்டிய விஷயங்களை உள்கட்சியிலும், வெளியில் பேச வேண்டியதை மேடைகளிலும் பேச வேண்டும். இதையும் மீறி பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டென்ஷனாக கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.

தலைவர் பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாக பேசித் திரியும் கட்சி காங்கிரஸ் மட்டும்தான். இங்குதான், மாநிலத் தலைவரின் பேச்சை அவரது ஆதரவாளர்களைத் தவிர வேறு யாரும் மதிக்க மாட்டார்கள்.

சமீப காலமாக தி்முகவை சரமாரியாக விமர்சித்துப் பேசி வருகிறார் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் [^]. அவருக்கு ஒத்து ஊதுவது போல தானும் விமர்சித்துப் பேசி வருகிறார் கார்த்தி சிதம்பரம் [^]. இதனால் திமுக தரப்பு கடும் டென்ஷனாக உள்ளது.

இதனால் தங்கபாலுவுக்கு தர்மசங்கடமாகியுள்ளது. இந்த நிலையில் கோவை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வலுவாக உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை, தமிழக தலைமை மற்றும் திமுக தலைமை இடையே எவ்வித உரசலும் இல்லை. காங்கிரஸ்-திமுக உறவில் யாரும் குறுக்கே வர முடியாது.

அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். கூட்டணி பற்றி தமிழ்நாடு [^] காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் இதுவரை நான் விமர்சித்துப் பேசவில்லை. மற்றவர்கள் விமர்சித்துப் பேசுவது முறையல்ல. திமுகவை பற்றி தனிப்பட்ட முறையில் யாரும் விமர்சனம் செய்யக்கூடாது.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும். உள்கட்சியில் பேச வேண்டிய விஷயங்களை உள்கட்சியிலும், வெளியில் பேச வேண்டியதை மேடைகளிலும் பேச வேண்டும். இதையும் மீறி பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. எனவே, தேர்தல் கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. கட்சியை பலப்படுத்துவதை பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. காங்கிரஸ் கட்சியின் கருத்துக்களை தெரிவிக்க தமிழ்நாடு தலைவர் என்ற முறையில் எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மற்றவர்கள் கருத்து அதிகாரபூர்வமானது அல்ல.

அதிமுக, திமுக கட்சியின் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களுக்கு கூட்டம் கூடுவது இயல்பான விஷயம். அது பற்றி காங்கிரஸ் கட்சி கவலைப்பட வேண்டியது இல்லை. காங்கிரஸ் கட்சியில் புதிதாக 14 லட்சம் இளைஞர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.

வரும் தேர்தலில் மகளிர்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடும் காங்கிரஸ் கட்சியில் வழங்கப்படும். இளைஞர்களுக்கும் உரிய பிரதிநித்துவம் வழங்கப்படும்.

மத்திய அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். சென்னையில் டிசம்பர் மாதத்தில் சோனியா காந்தி [^] பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது என்றார்.

சமூக நீதி குறித்து கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் பேசக் கூடாது-ராமதாஸ்

தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் ஒரே கட்சி பா.ம.க.தான். சமூக நீதியைப் பற்றி இங்கு பேச எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை. முதல்வர் கருணாநிதி [^] உள்ளிட்ட திராவிடக் கட்சித் தலைவர்கள் இது பற்றி பேசத் தகுதி இல்லை என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக தொடர் போராட்டங்கள் நடத்திய பா.ம.க. நிறுவனர் ராமதாஸைப் பாராட்டி, அக்கட்சி சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை பாராட்டுக் கூட்டம் என்று கூறுவது சரியல்ல. தமிழகத்தில் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுக்கும் கூட்டம் என்பதே சரியாக இருக்கும்.

பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்கும் வகையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறுகிறார்கள். புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கி 13 ஆண்டுகள் ஆகியும், இன்னும் எல்லோருக்கும் வழங்க முடியவில்லை. அதேபோல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, பயோ மெட்ரிக் அட்டை தர குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும்.

எனவே, தமிழக அரசு தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அண்மையில் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவும் இந்தக் கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்தியாக வேண்டும்.

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் [^] அண்மையில் ஒரு தீர்ப்பை கூறியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு 69 சதவீத இடஒதுக்கீடு தொடரலாம் என்றும், அடுத்த ஆண்டுக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எவ்வளவு இடஒதுக்கீடு தேவை என்பதை தீர்மானிக்கலாம் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதாவது, ஒருவேளை பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை 85 சதவீதமாக இருக்குமானால், அந்த அளவுக்கு இடஒதுக்கீட்டை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம் என்பதே அந்தத் தீர்ப்பு.

நாடு சுதந்திரம் பெற்ற பின், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளில் இதுவும் ஒன்று. தீர்ப்பு வந்த மறுநாளே ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை செய்யாதது ஏன்?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இப்போது மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பல மாநிலங்களுக்கு சென்று, ஆதரவை திரட்டி, தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவது பா.ம.க.தான். தமிழகத்தில் எந்த கட்சியாவது இதற்காக குரல் கொடுத்தது உண்டா?

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து மாநில எம்.பி.க்களிடமும் பா.ம.க. கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்தியது. 174 எம்.பி.க்களின் கையழுத்துடன் கூடிய கோரிக்கை மனுவை, பல்வேறு கட்சித் தலைவர்களுடன் சென்று அப்போதைய உள்துறை அமைச்சரிடம் அளித்தார் பா.ம.க.வைச் சேர்ந்த அன்புமணி. அந்த மனுவில் பா.ம.க.வைத் தவிர தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற கட்சி எம்.பி.க்கள் கையெழுத்து போட மறுத்து விட்டனர்.

பல ஆண்டுகளாக தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு ஒரே தொகுப்பாகத்தான் வழங்கப்பட்டு வந்தது. வன்னியர் சங்கம் தொடங்கி, பெரும் போராட்டங்களை நடத்தி, 30 உயிர்களை பலி கொடுத்த பிறகுதான் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

இப்போது தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கோருவதும் பா.ம.க. மட்டுமே. இவ்வாறு தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் ஒரே கட்சி பா.ம.க.தான். சமூக நீதியைப் பற்றி இங்கு பேச எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் கருணாநிதி உடனடியாக நடவடிக்கை [^] எடுக்க வேண்டும். இல்லையெனில், மாநில அரசுக்கு எதிராக பா.ம.க. பெரும் போராட்டத்தில் ஈடுபடும். இதற்காக வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது வழக்கு தொடர்ந்ததைப் போல என் மீது வழக்கு தொடர்ந்தாலும், அதைச் சந்திக்கத் தயார் என்றார் ராமதாஸ்.

காங்., சாதனையை மேடை போட்டு பேசுவோம்' : கார்த்தி சிதம்பரம் திட்டவட்டம்

திருத்துறைப்பூண்டி: ""தி.மு.க.,- அ.தி.மு.க., இருவரும் மேடைபோட்டு ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்வதை காங்கிரஸ் கட்சியினர் வேடிக்கை பார்க்காமல், நமது கட்சி சாதனையை மேடை போட்டு மக்களிடம் எடுத்துச் சென்றால் மட்டுமே காங்கிரஸை வலுவடையச் செய்ய முடியும்,'' என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். திருத்துறைப்பூண்டி சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அலுவலக திறப்பு விழா, சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் குகநாதன் தலைமையில் நடந்தது. நாகை லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு முன்னிலையில் வகித்தார். தொகுதி காங்கிரஸ் துணைத்தலைவர் கலைவாணி காமராஜ் வரவேற்றார்.

சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தை திறந்து வைத்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது: என்னை காங்கிரஸ் கட்சியில் சர்ச்சைக்குரியவன் என்று விவாதம் நடத்துகின்றனர். அதற்கு காரணம், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சாதனையை மக்களிடம் நேரடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதனால், என்னை விமர்சனம் செய்கின்றனர். தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகள் ஒருவரை ஒருவர் மேடை போட்டு விமர்சனம் செய்து கொள்கின்றனர். இதை நாம் வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட வேண்டும். காங்கிரஸ் கட்சி செய்த சாதனை, விவசாயிகள் கடன் ரத்து, கல்விக்கு வட்டியில்லா கடன், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் பல கோடி ரூபாய்களை விவசாயிகளுக்கு ஒதுக்கி பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதெல்லாம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு. இது மக்களுக்கு தெரியாது. இதை நேரடியாக மக்களிடம் எடுத்துச் சொல்ல தொடர்ந்து மேடை போட்டு பேச வேண்டும். தமிழகத்தில் சமீபத்தில் இயக்கப்பட்ட 600 புதிய பஸ் மத்திய அரசின் திட்டத்தில் தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது மக்களுக்கு தெரியாது. இதை எல்லாம் நாம் மக்களிடம் நேரடியாக கொண்டு செல்வதன் மூலம் தான் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதுடன், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வருவதற்கான அடித்தளமாக அமையும். எனவே, காங்கிரஸாரும், இளைஞர் காங்கிரஸாரும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த உறுதியுடன் செயல்படுவோம். இவ்வாறு அவர் பேசினார். சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நலவாரிய ஆலோசனைக்குழு உறுப்பினர் சிரஞ்சீவி, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் வரதராஜன், முன்னாள் பொதுச் செயலாளர் ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ரவீந்திரன், துரைராஜ், கோவிந்தராஜ் உட்பட சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸார் செய்திருந்தனர். பாஸ்கர் நன்றி கூறினார்.

வன்முறையை கைவிடுங்கள் : மன்மோகன் கோரிக்கை

"நக்சலைட்கள் வன்முறையை கைவிட்டு, பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும். வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் சமூக, பொருளாதார திட்டங்களை நிறைவேற்ற, மாநில அரசுகளுக்கு அவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

தலைநகர் டில்லியில் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக நடந்தது. செங்கோட்டையில் நடந்த விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், தேசியக் கொடியேற்றி வைத்தார்.விழாவில் அவர் பேசியதாவது:நக்சலைட்கள், உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ளனர். எந்தவொரு பிரச்னைக்குமே வன்முறை தீர்வு அல்ல. வன்முறையில் ஈடுபடுவோர், உறுதியான கரம் கொண்டு ஒடுக்கப்படுவர். நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்கும்.வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில், குறிப்பாக, பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போதிய திட்டங்களை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான திட்டங்களை தீட்டும்படி, திட்டக் கமிஷனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் மத்திய அரசு வழங்கும். மாநில அரசுகள், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

நக்சலைட்கள் வன்முறையை கைவிட்டு, பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். வளர்ச்சி குறைந்த பகுதிகளில், சமூக மற்றும் பொருளாதார திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, அரசுக்கு நக்சலைட்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.காஷ்மீரில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. இந்த வன்முறையால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் என்ற கோட்பாட்டுக்கு உட்பட்டு, பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசு தயாராக உள்ளது. வன்முறையை கைவிடும் யாருடனும் பேச்சு நடத்த தயார்.

பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக உள்ளோம். அதே நேரத்தில், பயங்கரவாதம் கைவிடப்பட வேண்டும். நிலையான, ஒருங்கிணைந்த பாகிஸ்தானைத் தான் இந்தியா விரும்புகிறது. அதே நேரத்தில் அந்த நாடு, பயங்கரவாதத்தை விட்டு விலகி இருக்க வேண்டும்.நம் நாட்டின் ஜனநாயகத்தின் முக்கிய தூணாக விளங்குவது மதச்சார்பின்மை. அதை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைளில் அரசு உறுதியாக உள்ளது. சிறுபான்மையினரின் நலனை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. சிறுபான்மையினர் நலனுக்காக கடந்த நான்காண்டுகளாக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மதம், மாநிலம், இனம், மொழி என்ற பெயரில் சமூகத்தில் பிரிவினை தலைதூக்குவது கவலை அளிக்கிறது. தூய்மையான இந்தியா என்ற பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆரோக்கியமான உணவு, உடல் நலன் ஆகியவை  மிகவும் அவசியமானவை. ஆனால், நம் நாட்டு மக்களுக்கு போதிய அளவில் சுகாதார வசதிகள் இல்லை. கிராமங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உயர் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்காக இரண்டு தனித் தனி கவுன்சில்கள் அமைக்கப்படும்.டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடக்கவுள்ளது, இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயம். இந்த போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும். காமன்வெல்த் போட்டிகளை தேசிய திருவிழாவாக மக்கள் கொண்டாட வேண்டும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

பாதுகாப்பு: சுதந்திர தின விழாவில் நேற்று கொடியேற்றியதன் மூலம், செங்கோட்டையில் ஏழு முறை தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் என்ற பெருமை மன்மோகன் சிங்கிற்கு கிடைத்தது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 17 முறையும், அவரது மகளும், முன்னாள் பிரதமருமான இந்திரா 16 முறையும் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளனர்.சுதந்திர தின விழாவையொட்டி, டில்லியில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தன. விழா நடந்து முடியும் வரை, அந்த பகுதியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.சுதந்திர தின விழாவையொட்டி, ராணுவத்தினரின் மிடுக்கான அணிவகுப்பு, மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஆகியவையும் நடந்தன.

தேர்தல் ஆண்டில் விவசாயிகளுக்கு சலுகை : இலவசமாக பம்ப்செட் வழங்க முதல்வர் முடிவு

அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், விவசாயிகளுக்கு சலுகை அளிக்கும் விதமாக, தமிழகத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் இலவசமாக வழங்கப்படுமென முதல்வர் அறிவித்தார். இதுதவிர, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில், கான்கிரீட் வீடுகளுக்கு வழங்கும் மானியம் 60 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக  உயர்த்தப்படுமென்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

 சுதந்திர தினமான நேற்று சென்னை கோட்டையில்  தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய முதல்வர் கருணாநிதி, விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு பரிசு வழங்கும் இலவச திட்டங்களை அறிவித்தார்.

முதல்வரின் சுதந்திர தின உரையில் வெளியிட்ட அறிவிப்புகள்:பல்வேறு மருத்துவ திட்டங்களை செயல்படுத்தி, ஏழைகள் இலவச மருத்துவ வசதிகள் பெறுவதால், பொது சுகாதாரம் பேணுவதில் தமிழகம், முன்னணி மாநிலமாக பாராட்டப்படுகிறது. ஏழைகள், நோய்வாய்ப்பட்டோர், அனாதைகள் மீது அன்பும், பரிவும் கொண்டு, அவர்களுக்காகவே வாழ்ந்த, அன்னை தெரசா பிறந்த நூற்றாண்டு, வரும் 26ம் தேதி துவங்குகிறது. அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் குடிசை வீடுகளே இல்லை என்ற புது வரலாறு படைக்க, கிராமப் பகுதிகளில் உள்ள 21 லட்சம் குடிசை வீடுகளையும், ஆறு ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும், "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்' இந்த ஆண்டு துவங்கப்படுகிறது. முதற்கட்டமாக மூன்று லட்சம் வீடுகள் கட்ட, 1,800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வீட்டிற்கு 60 ஆயிரம் ரூபாய் மானியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, மேலும் 15 ஆயிரம் சேர்த்து, 75 ஆயிரம் ரூபாயாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த ஆண்டை, "உலக இளைஞர்கள் ஆண்டு' என அறிவித்துள்ளது.

இதையொட்டி, இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கேற்ற பயிற்சியளிக்கும் புதிய திட்டம், இந்த ஆண்டு நடைமுறைபடுத்தப்படும். இதன்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்த மற்றும் பொறியியல், இளங்கலை, முதுகலை பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும். நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க, முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்படுகிறது.தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், கடந்த நான்கு ஆண்டுகளில் 3,465 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், சாலைகளை சீரமைக்க இந்த ஆண்டில் சிறப்பு நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.தமிழகம் முழுவதும் பயன்படுத்தப்படும் விவசாய பம்பு செட்டுகள், திறன் குறைந்தவையாக இருப்பதால் மின்சாரம் அதிகம் செலவாகிறது. இதற்கு பதிலாக, திறன் மிக்க புதிய பம்பு செட்டுகள் பொருத்துவதன் மூலம், 20 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும். சிறு, குறு விவசாயிகள் பம்பு செட்டுகளில் உள்ள பழைய மின் மோட்டார்களை நீக்கி, இலவசமாக புதிய மின் மோட்டார்கள் வழங்கப்படும். மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன், புதிய மோட்டார்கள் பொருத்தித் தரப்படும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

Friday, August 13, 2010

ஜாதிவாரி சென்ஸஸ்: குலை நடுங்கிப் போயுள்ள சமூகநீதி எதிர்ப்பு சக்திகள்-வீரமணி

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பது நியாயமானதே என்பது உலகுக்கு புலப்பட்டுவிடும் என்பதால் தான் சமூகநீதி எதிர்ப்பு சக்திகள் குலை நடுங்கிப் போய், குதறிப் பாய முயல்கின்றன என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அளிக்கப்படுவதற்கு 9வது அட்டவணை பாதுகாப்புடன் உள்ள சட்டத்தை எதிர்த்து, சென்னையில் உள்ள பார்ப்பனர்- முன்னேறிய ஜாதியினரின் அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது 1994ம் ஆண்டுமுதல்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ‘ஸ்டே’ என்ற தடையாணை எதுவும் தராமல், இச்சட்டம் நீடிக்கும், ஆனால் முன்பு 50 விழுக்காடு திறந்த போட்டியில் இருந்தால் எவ்வளவு இடம் அவர்களுக்குக் கிடைக்குமோ அதற்கேற்ப கூடுதலான இடங்களை வழங்க வேண்டும் என்று ஓர் ஆணை பிறப்பித்தது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அந்த அமைப்பு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று இதுபோன்ற ஓர் ஆணையைப் பெற்றது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணை கூட, கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை மட்டும் பொருந்தக் கூடியதாக மட்டுமே இருந்தது; வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை அது வழமைபோல் 69 சதவிகிதமாக நீடித்து வந்தது!.

கடந்த 3 வாரங்களுக்கு முன் தலைமை நீதிபதி மற்றும் இருவர் அடங்கிய பெஞ்ச் இச்சட்டம் அடுத்த ஆண்டிற்குள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் ஆய்வின் பின் இதற்குரிய சதவிகித அளவு பற்றிய அவ்வாணையத்தின் பரிந்துரைக்கேற்ப முடிவு செய்யலாம் என்றெல்லாம் திட்டவட்டமான ஓர் ஆணையை இடைக்கால ஆணையாக தந்துள்ளது மிகவும் சரியான சமூக நீதியை ஒட்டிய ஆணையாகும்.

இதுகண்டு வழக்குப் போட்ட அமைப்பும், பார்ப்பன- முன்னேறிய ஜாதியினரும் ‘ஆகாயத்துக்கும், பூமிக்குமாகக் குதித்து’ தங்களது எரிச்சலைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.

இது போதாது என்று இந்த ஆணையை மறு ஆய்வு செய்யவேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார்கள்.

சமூகநீதி ஒடுக்கப்பட்டோருக்குக் கிட்டிவிடக் கூடாது என்பதை எவ்வளவு வெறியுடன் பார்ப்பனரும், அவர்தம் தாசானுதாசர்களாக உள்ள சில பார்ப்பனரல்லாத முன்னேறிய ஜாதியினரும் நடந்து கொள்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அவர்களது நடவடிக்கை அமைந்துள்ளது அல்லவா?.

உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு ஓர் இடைக்கால ஆணை.

இந்திரா சகானி- மண்டல் ஆணைய வழக்கில் 9 நீதிபதிகள் தந்த தீர்ப்பில் 50 விழுக்காட்டிற்குமேல் போகக்கூடாது என்பது பொதுவானது என்றாலும், அதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம்; மேலும் கூடுதலான இட ஒதுக்கீடு தேவை என்றால், அதற்குரிய போதிய நியாயங்கள் வாதங்கள் நிலைமைகள் இருந்தால் தரலாம் என்று கூறப்பட்டிருப்பதாலும், தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மலைவாழ்
மக்களின் தொகை ஏறத்தாழ 85 விழுக்காட்டிற்கு மேல் உள்ளதால், அதனைச் சுட்டிக்காட்டிட, ஓர் ஆதாரபூர்வப் பணியை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் செய்ய ஆணையிட்டதோடு, அரசியல் சட்டத்தின் 15(4), (5), 16(4) ஆகிய பிரிவுகளின்படிதான் அந்த இடைக்கால ஆணையை அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கியது!.

இதுவே ஏதோ இறுதி தீர்ப்புபோல குலை நடுங்கி, குதறிப் பாய சமூகநீதி எதிர்ப்பு சக்திகள் ஏன் முனைய வேண்டும்?.

“ஜாதிவாரி கணக்கெடுப்பு 1931க்குப் பிறகு நடைபெறாதபோது நீங்கள் தன்னிச்சையாக உங்கள் விருப்பம்போல 69 சதவிகிதம் கொடுத்தது எப்படி சரி என்றுதானே இதே விஜயன்கள் இதற்கு முன்பு பலமுறை கேட்டனர்?.

இப்போது உண்மை உலகறியச் செய்யும் வகையில் புள்ளி விவரங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருப்பது நியாயங்கள்தானே என்று எவருக்கும் புலப்படுவது உறுதியாகிவிடும் என்ற அச்சம்தானே இவர்களை இப்படி அலறி அலறி ஓடச் செய்கிறது!.

தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு பழமொழி நம் நினைவுக்கு வருகிறது.“எனக்குப் பைத்தியம் தீர்ந்துவிட்டது; அந்த உலக்கையைக் கொண்டு வா நான் அதைக் கோவணமாகக் கட்டிக் கொள்ளுகிறேன்! என்றானாம் ஒரு “பிரகளிபதி!’’ அதுபோன்ற இப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபடுகிறார்கள் போலும்!.

நாடும் நல்லவர்களும், இவர்களைத் தூக்கிப் பிடிக்கும் ஏடுகளும், ஊடகங்களும் இனியாவது வர்களைப் புரிந்து கொள்ளுவார்களா?

சமூக நீதிக் கொடியை தமிழ்நாட்டில் இறக்கிவிட எவராலும் முடியாது. அது செந்நீராலும், கண்ணீராலும், வியர்வையாலும் ஏற்றப்பட்ட (சமூகநீதி) கொடியாகும் என்று கூறியுள்ளார் வீரமணி.

ஆட்சியில் 2273 நாட்கள்-நேரு, இந்திராவுக்கு அடுத்த நிலையில் மன்மோகன்!

பிரதமர் பதவியில் 2273 நாட்களை முடித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வைத்திருந்த சாதனையை தாண்டியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

இந்தியாவிலேயே அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர்கள் வரிசையில் தற்போது நேரு, இந்திரா காந்திக்குப் பிறகு 3வது இடத்தைப் பிடித்துள்ளார் மன்மோகன் சிங்.

காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தபோது அனைவரும் சோனியா காந்திதான் பிரதமராக வருவார் என கருதினர். அப்படித்தான் நிகழ்வுகளும் இருந்தன. ஆனால் வெளிநாட்டுக்காரர் பிரதமராக வருவதா என்ற எதிர்க்கட்சிகளின் பிரசாரம் அந்தக் கருத்துக்குத் தடையாக அமைந்தது. அந்தப் பிரசாரம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் எடுபடாவிட்டாலும் கூட அந்த சிந்தனை மக்கள் மனதில் பதிந்து விட்டதால் தார்மீக ரீதியாக பிரதமர் பதவியை ஏற்பதில்லை என்ற முடிவை எடுத்தார் சோனியா காந்தி.

சற்றும் தயக்கம் இல்லாமல் இந்த முடிவை எடுத்த அவர் பிரதமராக மன்மோகன் சிங்கை அறிவித்தபோது அனைவரும் வியப்படைந்தனர். குறிப்பாக காங்கிரஸ்காரர்களுக்கே அது அதிர்ச்சியாக இருந்தது. இவரா, இவர் அரசியல்வாதியே கிடையாதே, இவர் எப்படி ஆட்சி நடத்துவார் என்ற சந்தேகம் எதிர்க்கட்சிகளைப் போலவே காங்கிரஸ்காரர்களுக்கும் இருந்தது.

ஆனால் அந்த எண்ணத்தை அப்படியே மாற்றிப் போட்டார் மன்மோகன் சிங். கட்சியையும், அரசியலையும், சோனியா காந்தி கவனித்துக் கொள்ள, ஆட்சியில் அசத்த ஆரம்பித்தார் மன்மோகன் சிங். அவரது தெளிவான சிந்தனைகள், உறுதியான நடவடிக்கைகளால் தன்னை நோக்கி வீசப்பட்ட விமர்சனக் கணைகளை அப்படியே முறித்துப் போட்டார்.

இந்தியாவிலேயே இதுவரை இப்படி ஒரு பலவீனமான பிரதமர் இருந்ததில்லை என்று அத்வானி மிகக் கடுமையாக விமர்சித்தபோதெல்லாம் அதை மிக சாதுரியாக எதிர்கொண்டு பதிலளித்தார் மன்மோகன். இது கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவின் படு தோல்விக்கும் வழிவகுத்தது. இதனால் தனது பேச்சை திரும்பப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் அத்வானி.

சோனியா காந்தியைத் தாண்டி செயல்பட முடியாத நிலையில்தான் இன்னும் இருக்கிறார் மன்மோகன் சிங் என்பது உண்மைதான் என்றாலும் அவரது சுயமும் சரியான முறையில், சரியா நேரத்தில் வெளிப்படத் தவறியதில்லை, அவரும் வெளிப்படுத்தத் தவறியதில்லை.

குறிப்பாக அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் அவர் காட்டிய தீவிரமும், வேகமும் குறிப்பிடத்தக்கவை. ஆட்சியே போனாலும் பரவாயில்லை, ஒப்பந்தத்தை நிறைவேற்றுவோம் என்று அவர் உறுதியுடன் கூறியதும், அந்த உறுதியை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி எடுத்த முயற்சிகளும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவு திரட்டிய வேகமும் மன்மோகன் சிங் மீதான காங்கிரஸ் கட்சியின் அபிமானத்தை நிரூபிக்க உதவியது.

அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார் மன்மோகன் சிங். இதன் மூலம் இந்திரா காந்திக்குப் பிறகு தொடர்ந்து 2வது முறையாக பிரதமர் பதவிக்கு வந்த பிரதமர் என்ற பெயரும், பெருமையும் மன்மோகனுக்குக் கிடைத்தது.

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தபோதோ மன்மோகன் சிங்குக்குள் இருந்த பொருளாதார நிபுணர் வெளிப்பட்டு இந்தியப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். இதன் விளைவு, உலகப் பொருளாதார சீர்குலைவில் சிக்காமல், சிதறாமல் தப்பியது இந்தியா. உலகப் பொருளாதார வல்லரசுகளில் ஒன்று, பொருளாதார சீர்குலைவில் கடுமையாக பாதிக்கப்படவில்லை என்று கூறினால் அது இந்தியா மட்டுமே.

இந்தியாவுக்கு பாதிப்பு வராது என்று ஆரம்பத்திலிருந்தே மன்மோகன் கூறி வந்தார். சொன்னதோடு நிற்காமல் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோரின் உதவியின் மூலம் அப்படி ஒரு நிலை வந்து விடாமல் காக்கத் தேவையான நடவடிக்கைகளையும் அவர் முடுக்கி விட்டார். ஒரு அரசியல்வாதி பிரதமராக இருந்திருந்தால் ஒருவேளை இது சாத்தியமாகியிருக்காது என்று தைரியமாக கூறலாம்.

மன்மோகன் சிங் எடுத்த சில கடுமையான நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுவது, 2வது முறையாக ஆட்சியில் அமர்ந்ததும் திமுகவுக்கு அவர் போட்ட கிடுக்கிப்பிடிதான். டி.ஆர்.பாலு, ராஜா ஆகியோர் அமைச்சரவைக்குத் தேவையில்லை என்று அதிரடியாக கூறினார். அதை விட முக்கியமாக அழகிரிக்கு முக்கிய இலாகா தர முடியாது என்றார். மேலும் அதிர்ச்சியாக கனிமொழியை சேர்ப்பதிலும் சிவப்புக் கொடி காட்டினார். பல முக்கிய இலாகாக்களையும் தர முடியாது என்றும் கூறி விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக, அமைச்சரவையில் சேராமல் வெளியிலிருந்தபடி ஆதரவு தர முடிவு செய்தது. முதல்வர் கருணாநிதியும் டெல்லியிலிருந்து சென்னை திரும்பினார். இருப்பினும் மன்மோகன் நிலையில் மாற்றம் இல்லை.

இதையடுத்து சோனியா காந்தியின் தலையீட்டின் பேரில் திமுக அமைச்சரவையில் சேர்ந்தது. அப்படியும் டிஆர் பாலு, கனிமொழிக்கு இடம் தரப்படவி்ல்லை. எதிர்பார்த்த முக்கிய இலாகாக்கள் திமுகவுக்கு கிடைக்கவில்லை.

தற்போது பிரதமர் பதவியிலிருந்து மன்மோகனை நீக்க காங்கிரஸே நினைத்தாலும் கூட உரிய காரணத்தைக் கூறியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. காரணம், மன்மோகன் சிங்கின் செயல்பாடுகள் அப்படி அமைந்துள்ளன.

ஹைதராபாத்.... இந்தியாவின் சிறந்த விமான நிலையம்

விமானப் போக்குவரத்தில் இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது இந்தியா. முன்பு தூங்கி வழிந்து கொண்டிருந்து இந்திய விமான நிலையங்கள் மகா சுறுசுறுப்பாகக் காட்சியளிக்கின்றன. முக்கிய, பெரிய விமான நிலையங்களை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நவீனப்படுத்தி வருகிறது விமானப் போக்குவரத்து இயக்ககம்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம், சமீபத்தில் இந்தியாவின் சிறந்த விமான நிலையமாக ஹைதராபாத்தை தேர்வு செய்துள்ளது. வாடிக்கையர் திருப்தி, விமானங்களின் வருகை, செக் இன் செய்யப்படும் முறை என பல்வேறு விஷயங்களில் பயணிகளின் திருப்தியை அடிப்படையாகக் கொண்டு ஹைதராபாத்துக்கு இந்த கவுரவத்தை அளித்துள்ளது இந்த நிறுவனம்.

இது தவிர இந்தியாவின் சிறந்த 10 விமான நிலையங்களையும் அறிவித்துள்ளனர். ஆனால் இவற்றுக்கு ரேங்க் எதுவும் வழங்கப்படவில்லை.

அந்த வகையில் ஹைதராபாத் உள்பட இந்தியாவின் சிறந்த 11 விமான நிலையங்கள்...

1. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், ஹைதராபாத்

ஹைதராபாத் நகரிலிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ளது இந்த விமான நிலையம்.

ஆண்டுக்கு 4 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட இந்த விமான நிலையத்தில் எவ்வளவு பெரிய விமானமும் தரையிறங்கலாம்.

இந்திய அரசும் ஜிஎம்ஆர் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள விமான நிலையம் இது. ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ் ஆகியவையும் இதன் பங்குதாரர்கள். 31 மாதங்களில் கட்டப்பட்டு கடந்த மார்ச் 2008-ல் பயன்பாட்டுக்குவிடப்பட்டது. இதில் 13 லவுஞ்ச்கள் உள்ளன.

சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்துக்கு 'Leadership Energy and Environment Design' விருது வழங்கப்பட்டது. உலகிலேயே இந்த விருது பெற்ற முதல் விமான நிலையம் ஹைதராபாத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2. இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம், டெல்லி

நாட்டின் மிகப்பெரிய விமான நிலையம் இதுவே. ஜிஎம்ஆர் குழுமம், ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா, ப்ராபோர்ட் மற்றும் மலேசியன் ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் கட்டப்பட்டுள்ளது. மூன்று டெர்மினல்கள் உள்ளன.

இதில் மூன்றாவது டெர்மினல் மிக சமீபத்தில் கட்டப்பட்டது. உலகத் தரத்தில் அமைந்த இந்த மூன்றாவது டெர்மினல் சர்வதேச நாடுகளையும் வியக்க வைத்துள்ளது. அத்தனை நவீன வசதி. உலகின் எட்டாவது பெரிய பயணிகள் டெர்மினல் இதுவே. இந்த ஒரு டெர்மினலில் மட்டும் 34 மில்லியன் பயணிகள் வந்து போகமுடியும், ஆண்டுக்கு.

ஆட்டோமேடிக் பார்க்கிங் வசதி உண்டு. ஒரே நேரத்தில் 4300 கார்களை 7 அடுக்குகளில் நிறுத்தலாம்.

இரண்டடுக்கு கட்டடமாக உள்ள இந்த மூன்றாம் டெர்மினலில் 168 செக்-இன் கவுண்டர்கள் உள்ளன. 48 விசாரணை அல்லது தொடர்பு கவுன்டர்கள், 78 ஏரோபிரிட்ஜஸ், 72 இம்மிக்ரேஷன் கவுன்டர்ஸ், 15 ஸ்கேன் கவுன்டர்கள் என பிரமாண்ட வசதிகள் இங்குள்ளது.

3. சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், மும்பை

தெற்கு ஆசியாவில் அதிக பயணிகளைக் கையாளும் விமான நிலையம் என்ற பெருமைக்குரியது மும்பை விமான நிலையம். முன்பு சர்வதேச விமானங்கள் மற்றும் உள்ளூர் விமானங்களுக்கு தனித்தனி டெர்மினல்கள் இருந்தன.

இப்போது அவை ஒன்றாக்கப்பட்டு சத்ரபதி சிவாஜி விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. ஜிவிகே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய விமான நிலையம் 2006-ல் உருவாக்கப்பட்டது.

4. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம், கொல்கத்தா

கிழக்கு இந்தியாவின் பெரும் விமான சேவை மையம் கொல்கத்தா சர்வதேச விமான நிலையம். பங்களா தேஷ், பாங்காக் போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்துதான் செல்ல வேண்டும்.

ஆண்டுக்கு 8.5 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டது இந்த விமான நிலையம்.

5. சென்னை சர்வதேச விமான நிலையம், சென்னை

நகருக்குள்ளேயே அமைந்துள்ள ஒரே விமான நிலையம் என்ற பெருமை கொண்டது சென்னை விமான நிலையம். புதிதாக இரண்டாவது டெர்மினல் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ 2350 கோடி செலவில் அதிநவீனமயமாக்கப்பட்டு வருகிறது.

கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு ஆண்டுக்கு 50 மில்லியன் பயணிகளைக் கயாளும் திறன் கொண்ட முன்னணி விமான நிலையமாகத் திகழவிருக்கிறது சென்னை.

6. சர்தார் வல்லபபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையம், அகமதாபாத்

நாளொன்றுக்கு 150 விமானங்களைக் கையாளும் இந்த விமான நிலையம் 1124 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. மூன்று டெர்மினல்களைக் கொண்ட அகமதாபாத் விமான நிலையத்துக்கு நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் விமானங்கள் உண்டு.

ஆகஸ்ட் 14 முதல் இதன் புதிய டெர்மினல் இயக்கப்படுகிறது.

7. லோக்ப்ரிய கோபிநாத் போர்டோலாய் சர்வதேச விமான நிலையம், கவுகாத்தி

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விமான நிலையம் இந்திய விமானப் படைத் தளமாகவும் செயல்படுகிறது. முதன்முதலாக அசாம் மாநிலத்தின் முதல்வராக இருந்தவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான கோபிநாத் போர்டோலாய் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்காசிய நாடுகளின் முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவை உண்டு. எதிர்காலத்தில் இந்த விமான நிலையத்தை பெருமளவில் விஸ்தரித்து, கிழக்கு இந்தியாவின் முதன்மை விமான நிலையமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

8. ராஜா சான்ஸி சர்வதேச விமான நிலையம், அமிர்தசரஸ்

தினசரி 90 விமானங்களைக் கையாளும் அமிர்தசரஸ் விமான நிலையம், சமீபத்தில்தான் முற்றாகப் புதுப்பிக்கப்பட்டது. முன்பு வெறும் 12770 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலிருந்த இந்த விமான நிலையம்,

இப்போது 40175 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2009-ம் ஆண்டுதான் திறக்கப்பட்டது.

9.டபோலிம் விமான நிலையம், கோவா

கோவா மாநிலத்தின் ஒரே விமான நிலையம் இது. இந்திய ராணுவத்தின் விமானப் படைத் தளமாகவும் இது செயல்படுகிறது. இதந் ஏர் ட்ராபிக் கண்ட்ரோல் இந்தியக் கடற்படை வசமுள்ளது.

நாளொன்று 250 விமானங்கள் வருகை மற்றும் புறப்பாட்டுக்கேற்ற வகையில் கட்டப்பட்டுள்ளது கோவா விமான நிலையத்தின் உள்நாட்டு முனைமம்.

வெளிநாட்டு முனைமம் 1996-ல் கட்டப்பட்டது. இப்போது புதிய டெர்மினல் கட்டப்பட்டு வருகிறது.

10. பெங்களூரு சர்வதேச விமான நிலையம், பெங்களூரு

பெங்களூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது இந்த விமான நிலையம். 4000 ஏக்கரில் அமைந்துள்ள இந்தப் புதிய விமான நிலையம் 2008 முதல் செயல்படுகிறது. 2009-ல் நாளொன்றுக்கு 280 விமானங்களைக் கையாண்டது இந்த விமான நிலையம்.

பெங்களூரிலிருந்து இந்தியா மற்றும் உலகின் 50 முக்கிய நகரங்களுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது 9 மில்லியன் பயணிகளைக் கையாளும் பெங்களூரு விமான நிலையம், 2015-ல் 17 மில்லியன் பயணிகளைக் கையாளும் அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது.

11. கொச்சி சர்வதேச விமான நிலையம், கொச்சி

கொச்சியிலிருந்து 30 கிமீ தூரத்தில் நெடும்பாசேரி என்ற இடத்தில் உள்ளது இந்த விமான நிலையம்.

ரூ 31500 கோடியில் கட்டப்பட்டு, நாட்டிலேயே பொதுத்துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்ட முதல் விமான நிலையம் இதுதான். 30 நாடுகளைச் சேர்ந்த 10000 என்ஆர்ஐகள் இந்த விமான நிலையத்தில் முதலீடு செய்துள்ளனர்.