Search This Blog

Sunday, November 28, 2010

5 நிமிடத்தில் நாட்டின் அத்தனை பிரச்சினைகளையும் பேசி விடுகிறோம்-ப.சிதம்பரம்

11 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது, 11.05 மணிக்கு முடிவடைந்து விடுகிறது. ஐந்தே நிமிடத்தில் நாட்டின் அத்தனை பிரச்சினைகளையும் பேசி முடித்து விடுகிறோம் என்று எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடந்த சி.சுப்ரமணியம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட ப.சிதம்பரம் பேசுகையில், நாடாளுமன்றம் தினசரி காலை 11 மணி்க்குக்கூடுகிறது. 11.05 மணிக்கு முடிந்து விடுகிறது. நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் ஐந்தே நிமிடத்தில் பேசி முடித்து விடுகிறோம். எல்லாப் பிரச்சினைகளையும் நாம் அப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இதுதான் இன்றைய நாடாளுமன்ற சூழல்.

இந்த நேரத்தில் 60களில் மறைந்த காங்கிரஸ் தலைவர் சி.சுப்ரமணியத்திற்கும், திமுக தலைவர் அண்ணாதுரைக்கும் இடையே தமிழக சட்டசபையில் நடந்த விவாதங்கள் எனது நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.

இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்கள் மூன்று தமிழர்கள். அவர்கள் சி.சுப்ரமணியம், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், விவசாயத்துறை செயலாளராக இருந்த சிவராமன். இந்த மூன்று பேரும்தான் இந்தியாலின் பசுமைப் புரட்சியின் நாயகர்கள்.

நேரு அமைச்சரவையிலும், இந்திரா காந்தி அமைச்சரவையிலும் முக்கியப் பதவிகளை வகித்தவர் சி.சுப்ரமணியம். மிகச் சிறந்த தலைவர்களில் அவருக்கும் முக்கிய இடம் உண்டு. மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட தியாகியும் கூட.

70களில் நம்மிடம் கோதுமை இல்லை. அதை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். அந்தக் கோதுமையை சமைத்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் கெட்டுப் போய் விடும். ஆனால் இன்று நமது கிட்டங்கிகளில் கோதுமை நிரம்பி வழிகிறது. இருப்பு வைக்க கிட்டங்கிகளுக்குப் பற்றாக்குறை உள்ளது. இதற்குக் காரணம் இந்த மூன்று தமிழர்களும்தான்.

இந்தியாவை வளமைப்படுத்திய இந்த மூன்று எஸ்களும் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை தரக் கூடியதாகும்.

தமிழ் மொழி மீது அளப்பறிய பற்று கொண்டிருந்தவர் சி.சு. தமிழ்நாடு என்ற பெயர் வர அவரும் முக்கியப் பங்காற்றியுள்ளார். இன்று இந்தப் பெருமைக்கு சிலர் உரிமை கொண்டாடலாம். பலர் அதை மறந்து கூட போயிருக்கலாம். ஆனால் தமிழுக்கும், தமிழ்நாடு என்ற பெயர் வந்ததற்கும் சி.சு ஆற்றிய பங்கு மிகப் பெரியது.

அதேபோல பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் கல்வி அமைச்சராக இருந்த சி.சு., இந்தியாவின் முதல் மதியஉணவுத் திட்டத்தை வெற்றிகரமாக அமலாக்க பெரும் பங்காற்றினார் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும் என்றார்.

Friday, November 26, 2010

சரியான அனுகுமுறையை இப்பொழுது தேர்ந்தெடுக்கிறார்கள் ஆண்களும் சரி பெண்களும் சரி ?

நீயெல்லாம் எங்கே உருப்படப் போறே, உருப்படியா ஒரு வேலையும் பார்க்கத் தெரியலே, புத்திசாலித்தனமா நடக்கத் தெரியுதா, விவரமா இருக்கத் தெரியுதா என்ற வசனங்களும், வசவுகளும், 80களில் தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளில் சர்வ சாதாரணமாக ஒலித்த ஒன்று. ஆனால் இன்று அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

5 வயதுப் பையனிடம் போய் பேசி நல்லபடியாக மீண்டு வந்தால் அவர்களுக்கு பெரிய பரிசே கொடுக்கலாம். அந்த அளவுக்கு பேசுகிறார்கள் இக்காலத்துப் பொடியர்களே. அப்படி இருக்கையில் இளைஞர் குலம் எப்படி தீயாக இருக்கும்.

இருக்கிறது. செக்ஸ் மட்டுமே இளைஞர் குலத்தின் ஒரே குறிக்கோள் என்பதெல்லாம் பழங்கதையாகி வருகிறது. பார்த்தவுடன் காதல் என்பதெல்லாம் இப்போது கிட்டத்தட்ட இல்லை என்றாகி விட்டது.

ஒரு பெண் ஆணைக் கவர முன்பெல்லாம் அழகுதான் முக்கியமாக இருந்தது.

சேலையில் வரும் பெண்களை சிலருக்குப் பிடிக்கும். சிலருக்கு மாடர்ன் டிரஸ் ஓ.கே.வாக இருக்கும். கவர்ச்சிகரமான உடைகளை விட சிம்பிளான உடையில்தான் நீ தேவதை போல இருக்கிறாய் என்று கூறுவோரும் உண்டு. இந்த எட்டு கெஜ புடவையைத் தூக்கிப் போட்டு விட்டு ஜில்லென்று ஜீன்ஸ், டீ சர்ட்டில் வந்தால் எப்படி இருக்கும் தெரியுமா என்று சிலாகிப்போரும் உண்டு.

சிலருக்கு பெண்களின் கண்கள் பிடிக்கும். கண்ணை வைத்து ஏகப்பட்ட கவிதைகளையும் வடித்துத் தள்ளுவார்கள். சிலருக்கு மூக்கு பிடிக்கும். சிலருக்கு உதடு பிடிக்கும். உன் காது இருக்கே, அதுலதான் கவர்ச்சியே இருக்கு என்று 'கலாய்ப்போரும்' உண்டு.

பெண்களின் இடுப்புக்கு எது எதையோ உதாரணம் காட்டி கவிதைகளையும், வசனங்களையும் வடித்து விட்டது இந்த ஆண்குலம். இடுப்பழகை வர்ணிக்க அவர்களுக்கு வார்த்தைகளும் போதாது. அந்தக் காலத்தில் மின்னல் இடை என்றார்கள், இந்தக் காலத்தில் இஞ்சி இடுப்பாக்கி விட்டார்கள்.

சிலருக்கு பெண்களின் கால்கள் பிடிக்கும். பெண்களின் வாளிப்பான கைகளை சிலர் ஆசையாக வர்ணிப்பார்கள். சிலருக்கு முன்னழகு பிடிக்கும், சிலருக்குப் பின்னழகு பிடிக்கும்.

இதெல்லாம் ஒரு ஆண் பெண்ணைப் பார்க்கும்போது மன லேபில் 'டிஸக்சன்' செய்யும் பொதுவான விஷயங்கள். ஆனால் இக்காலத்து இளைஞர்களுக்கு பெண்களிடம் இன்னொரு விஷயம்தான் மிக மிகப் பிடித்திருக்கிறதாம். அது - பணம்.

செக்ஸியான + சவுகரியமான வேலையில் உள்ள பெண்ணைத்தான் இப்போதைய இளைஞர்களுக்குப் பிடிக்கிறதாம். இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், இந்த டிரண்ட் வந்து ரொம்ப காலமாகி விட்டது.

உடல் ரீதியான கவர்ச்சிக்கு ஆண்கள் முக்கியத்துவம் தரும் அதே வேளையில், கை நிறைய சம்பாதிக்கும், நன்கு படித்த பெண்கள்தான் தங்களுக்கு 'சேஃப்' என்கிறார்கள்.

''செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லையே, எத்தனை நாளைக்குதான் செக்ஸிலேயே மூழ்கிக் கிடக்க முடியும். அதைத் தாண்டி வாழ்க்கையில் நிறைய உள்ளது. அதற்கு பணம் தேவை. அந்தப் பணம் இருவரிடமும் இருந்தால்தான் வாழ்க்கை வண்டியை சிரமமின்றி ஓட்ட முடியும். அதற்காகத்தான் சம்பாதிக்கும் பெண்ணை விரும்புகிறேன்.

அவர் என்னை விட அதிகம் சம்பாதிப்பவராக இருந்தால் இன்னும் சந்தோஷம். அதேசமயம், வெறும் பணத்துக்காக மட்டும் நான் பெண்ணை விரும்புவதில்லை. கூடவே எனக்கேற்ற செக்ஸியான பெண்ணாகவும் அவர் இருக்க வேண்டும்'' என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர்.

இதுகுறித்து மன நல மருத்துவர் ஒருவர் கூறுகையில், அக்கால இளைஞர்களைப் போல இப்போது யாரும் இல்லை. மிகப் பெரிய அளவிலான மன மாற்றம் இக்காலத்து இளைஞர்களிடையே வளர்ந்துள்ளது. இது ஆரோக்கியமானது.

வெறும் செக்ஸ் வேலைக்கு ஆகாது என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். உடல் ரீதியான ஆர்வம், ஈடுபாடு, மோகம் ஒரு கட்டத்துக்கு மேல் நீர்த்துப் போய் விடுகிறது என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். அதைத் தாண்டி பார்க்கும்போதுதான் அவர்களுக்கு வாழ்க்கைக்கான தேவை புரிகிறது.

அவசரப்பட்டு விவாகரத்து செய்கிறார்கள், அவசர கோலத்தில் கல்யாணம் செய்கிறார்கள், வாழ்க்கையை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை என்றெல்லாம் இக்காலத்து இளைஞர்கள், இளம் பெண்கள் மீது பொதுவான ஒரு குற்றச்சாட்டு இருந்தாலும்கூட பெரும்பாலானோர் அப்படி இல்லை.

ஒரு பெண்ணைப் பார்த்து இவள்தான் எனது மனைவி அல்லது காதலி என்ற முடிவுக்கு வருவதற்கு முன்பு அவளது உடல் அழகை மட்டுமல்லாமல், நமது பொருளாதார போராட்டங்களுக்கு இவள் எந்த அளவுக்கு உறுதுணையாக இருப்பாள் என்பதையும் பார்க்கின்றனர் இளைஞர்கள்.

பெண்கள் சம்பாத்தியத்தில் வாழ நினைக்கிறார்கள் ஆண்கள் என்று இதை கூறி விட முடியாது. மாறாக, பொறுப்புடன் யோசிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். பெண்ணின் அழகும், கவர்ச்சியும் நிரந்தரமல்ல என்பதை ஆணும், இவனிடம் காணப்படும் வாட்டசாட்டம், வசீகரம் நிரந்தரமல்ல. வயதாகும்போது இவையும் சேர்ந்தே தளரும், தொய்வடையும் என்பதை ஆணும், பெண்ணும் புரிந்து வைத்துள்ளனர்.

ஆண்கள் மட்டுமல்லாது இளம் பெண்களும் கூட 'மோகம் முப்பது, ஆசை அறுபது' என்பதை தூர வைத்து விட்டு அதற்குப் பிறகு வாழப் போகும் நீண்ட வருடங்களை வசந்தமாக வைத்துக் கொள்ள இவன் உதவுவானா என்று யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இது நிச்சயம் தவறல்ல. இப்படி இருவருமே திருமணத்திற்கு முன்பே திட்டமிட்டு வாழக்கையைத் தொடங்கும்போது இருவரும் இணைந்து வாழும் காலம் நிச்சயம் கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிரந்தரமாகும் என்கிறார்.

ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி

சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம், திராவிட முன்னேற்ற கழகம் என்கிற பெயரால் வளர்ந்த இந்த இயக்கத்திற்கு தேர்தலில் கிடைக்கின்ற வெற்றி மாத்திரம் முக்கியம் அல்ல, தமிழ் இனத்தினுடைய இன உணர்வை வலுப்படுத்துவது தான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

இதில் பொதுச்செயலாளர் அன்பழகன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென் மண்டல திமுக அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி, முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், எஸ்.பி.சற்குணபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி, அமைச்சர் கீதாஜீவன், முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, ஜெயதுரை எம்.பி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மற்றும் மாவடத்தின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்குபட்ட சட்டமன்ற தொகுதிகள் நிலவரம், திமுகவின் பலம்-பலவீனம் ஆகியவை நிர்வாகிகள் விளக்கினர். பின்னர் பேசிய முதல்வர் கருணாநிதி கூறுகையில்,

தூத்துக்குடி என்பது திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கோட்டைகளில் ஒன்று என்பதை நானும் அறிவேன், நீங்களும் அறிவீர்கள். தூத்துக்குடியில் எனக்கு ஒரு தனி கவனம் இருப்பதற்கு முக்கிய காரணமே, அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை 1949ம் ஆண்டு சென்னை ராபின்சன் பூங்காவிலே தொடங்கியபோது அதையொட்டி கழகத்தின் காவலர்களையெல்லாம் அதற்கடுத்த திங்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் சென்று திராவிட முன்னேற்ற கழகத்தின் இரு வண்ணக் கொடியை- புதிதாக அமைக்கப்பட்ட அந்த கொடியை ஏற்றி வைப்பதென்றும்- திமுக தொடங்கியதற்கான காரணத்தை ஆங்காங்கு விளக்க வேண்டுமென்றும் அறிவித்தார்.

அப்படி முதன் முதலாக என்னால் கொடியேற்றப்பட்ட இடம், தமிழகத்திலே தூத்துக்குடி தான். அதனால்தான் அப்படி ஏற்றி வைக்கப்பட்ட அந்த கொடி ஒரு அங்குலம் தாழ்ந்தால் கூட- என்னால் அந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியாது. எனவே தான் தூத்துக்குடியைப் பற்றி நான் சிறப்பான கவனம் செலுத்தி வருகிறேன்.

அங்கே ஏற்படுகின்ற மன மாச்சரியங்கள், புகைச்சல்கள், பூசல்கள் இவைகளுக்கு இடம் தராமல், கழகத்தை அங்கே எப்படி அமைதியாக, விறுவிறுப்பாக, சுறுசுறுப்பாக நடத்திச் செல்வது என்பதை பற்றி சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் மாவட்டந்தோறும் நடைபெறுகின்ற கூட்டங்களைவிட, தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக நடைபெறுகின்ற இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

நான் பல மாவட்ட நிர்வாகிகளின் கூட்டங்களில் பேசியதைப்போல, திமுக தேர்தலுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. அந்த அடிப்படை உண்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இயக்கம் திராவிட இன மேன்மைக்காக- திராவிடர்களின் சுயமரியாதை உணர்வை பாதுகாப்பதற்காக- திராவிட இயக்கத்தின் தன்மான கொள்கைகளை பரவ செய்வதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.

அதனால்தான் அரசியல் பக்கம் அடியெடுத்து வைக்காமல் சமுதாய அளவில் நம்மிடம் கட்டுப்பாடு இருந்தால் போதும் என்று தந்தை பெரியார் செயல்பட்டார். அதையேற்று அண்ணாவும், அண்ணாவை பின்பற்றி நாங்களும் சமுதாயம் வளர்ச்சிபெற இந்த கருத்துக்களையெல்லாம் மைதானங்களிலே பேசினால் மட்டும் போதாது, இந்த கருத்துக்களை சட்டமன்றங்களில், நாடாளுமன்றங்களில் பேசினால் தான் பயன் ஏற்படும் என்ற வகையில், அதற்கேற்ப தேர்தலில் ஈடுபடுவதென்று முடிவு செய்து, படிப்படியாக தேர்தலில் ஈடுபட தொடங்கினோம்.

அவ்வாறு தேர்தலில் ஈடுபட்டபோது, ஆட்சியை பிடிக்கிறோமோ இல்லையோ, ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பது நம்முடைய குறிக்கோளில் ஒன்று என்றாலும், சமுதாயப் பணிகளை நிறைவேற்ற ஆட்சியில் இருந்து தான் தீரவேண்டுமென்ற நிலை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், 1957ம் ஆண்டு முதன் முதலாக நான் குளித்தலை தொகுதியிலே நின்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபின்- அவையிலே தரப்பட்ட ஒரு கொள்கை குறிப்பில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

அந்தப் பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் 'இசை வேளாளர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நான் பேசும்போது அப்போது அவையிலே பெருந்தலைவர்கள் காமராஜர், கக்கன் உட்பட அனைவரும் இருந்தார்கள்.

நான் கூறினேன், அரசின் இந்த குறிப்பிலே 'இசை வேளாளர்' என்று 'ர்' விகுதி போடப்பட்டுள்ளது. ஆனால் மிகப்பெரிய சமுதாயங்களில் ஒன்றான நாடார் மற்றும் 'சாணார்' சமுதாயம் பற்றி இந்த புத்தகத்திலே 'சாணான்' என்று 'ன்' விகுதி போட்டு, அச்சடிக்கப்பட்டுள்ளதே, இது என்ன நியாயம் என்று கேட்டேன்.

உடனே முதல்வர் காமராஜர், அமைச்சர் கக்கனை திரும்பிப் பார்த்து 'என்ன?' என்று கேட்டார். உடனே அமைச்சர் கக்கன் எழுந்து, அது தவறு தான், அந்த தவறுக்காக வருந்துகிறேன், அந்த தவறு நாளைக்கே சரிசெய்யப்படும் என்று சொன்னார்.
நான் அங்கே அமர்ந்திருந்த காரணத்தால்தான் அன்றைக்கு 'சாணான்' என்ற பெயர் அந்த பட்டியலிலே 'நாடார்' அல்லது 'சாணார்' என்று மாற்றக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.

சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம், திராவிட முன்னேற்ற கழகம் என்கிற பெயரால் வளர்ந்த இந்த இயக்கத்திற்கு தேர்தலில் கிடைக்கின்ற வெற்றி மாத்திரம் முக்கியம் அல்ல, தமிழ் இனத்தினுடைய இன உணர்வை வலுப்படுத்துவது தான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட கழகத்தில் உள்ள நாம் இந்த இயக்கத்தை வளர்ப்பதற்கு ஒவ்வொருவரிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கழகம் ஒன்றே என்ற குறிக்கோளோடு நாம் பணியாற்றினால், நாம் ஒற்றுமையாக இருந்தால், ஒன்றுபட்டிருந்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது, வீழ்த்த முடியாது என்பதை நாம் நிரூபிக்க முடியும்.
தூத்துக்குடியில் நான் எதிர்பார்த்ததைப்போல சிறு சிறு சண்டைகள், குழுக்கள் இரண்டு மூன்று என்று இருந்தாலும், அவர்களுக்குள் தேவையற்ற பிரச்சனைகள் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க முடியாது.

மாவட்ட கழக செயலாளர் பெரியசாமி பற்றி உங்களுக்கு தெரியும். அவரைப்ப ற்றி அவருக்கும் தெரியும். அவர் கொள்கைப் பிடிப்பு உள்ளவர். கொள்கைகளை விலை கூறாதவர். கழகத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டுமென்று கருதுகிறவர்.
அதே நேரத்தில் அவருக்கு துணையாக, அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இந்த இயக்கத்திற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அது நாம் தேடிப்பெற்ற வெற்றி. நான் இருவரையும் இங்கே பாராட்டுகின்ற போது, இவரைவிட அதிகமாக அவரை பாராட்டி விட்டேன் என்று இவரும் கருதக்கூடாது, அவரை விட அதிகமாக இவரை பாராட்டி விட்டேன் என்று அவரும் கருதக்கூடாது.

அதனால் தான் நான் இருவரையும் சமமாக பாராட்டியிருக்கிறேன். பெரியசாமி நீண்ட காலமாக இந்த இயக்கத்தில் தொடர்ந்து இருப்பவராக இருக்கலாம். இடையில் வேறு சிலர் நமது இயக்கத்திலே வந்து இணையலாம்.

ஓடிக்கொண்டிருக்கின்ற ஆற்று வெள்ளத்தில், கிளை நதிகளின் தண்ணீரும் வந்து சேரும்போது இரண்டும் கலந்து ஒரே தண்ணீராக ஆவது போல பெரியசாமியும், அனிதாவும் சேர்ந்து ஜீவநதியாக இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும்.

அதைப்போலவே நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றிருக்கின்ற ஜெயதுரையும், அவரை வெற்றி பெற செய்ய மாவட்ட செயலாளர்களும், கழக தோழர்களும் எந்த அளவிற்கு பாடுபட்டார்கள் என்பதை மனதிலே கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு சிறு குறைபாடுகள் இருப்பதைக்கூட என்னால் தாங்கி கொள்ள முடியாது
என்றார்.

Wednesday, November 24, 2010

சேர்ந்திருப்பது தீது என்றால் யோசிக்கிறோம்

முன்பு நாங்கள் தனியாக இருக்கத்தான் எண்ணினோம். நீங்கள்தான் சேர்ந்திருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இப்போது சேர்ந்திருப்பது தீது என்றால், சொல்லுங்கள்; யோசிக்கிறோம்,'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.

சென்னையில் நேற்று நடந்த வேளாண் அலுவலர்கள் மாநாட்டு நிறைவு விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தென்னகப் பகுதி, தமிழக பகுதி, வடக்கே உள்ள பகுதி ஆகியவை கலந்த ஏக இந்தியாவில் நாம் இருக்கிறோம். நாட்டின் ஒரு பகுதியில் இருப்பவரை வளர்த்து விட்டுவிட்டு, ஒரு பகுதியில் இருப்பவரை தாழ்த்தினால், அது ஏக இந்தியாவாக இருக்க முடியாது. மாநிலம், மத்திய அரசு என்பது என்பது நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது. இது பேதங்கள், பிளவுகளுக்காக அல்ல என்பதை அரசியல் சிந்தனையாளர்கள் மறந்து விடக்கூடாது. தமிழக வேளாண்துறை வளர்ச்சியில் மத்திய அரசின் பங்கு இருக்கிறது; மத்திய அரசின் திட்டங்களில் மாநில அரசின் பங்கு இருக்கிறது. ஒரு குழந்தையை நான்தான் பெற்றேன் என்று ஒரு தாய் உரிமை கொண்டாட முடியாது; தகப்பனுக்கும் உரிமை உண்டு.

ஒரு குழந்தைக்கு உரிமை கொண்டாடி இரு பெண்கள் சாலமன் என்ற மன்னனிடம் வந்தனர். யார் உண்மையான தாய் என்று விசாரித்து, அந்த மன்னன் தீர்ப்பளித்த பின்பும், அதை இருவரும் ஏற்கவில்லை. கடைசியாக, தனது வாளை எடுத்து குழந்தையை இரு துண்டாக்கி, ஆளுக்கு ஒரு பங்கு தருவதாக கூறினான். இருபெண்களில் ஒருவராக இருந்த போலித்தாய் சதி செய்ய நினைத்தாள்; ஒப்புக்கொண்டாள். அந்த குழந்தையை பெற்ற தாயோ, "என் குழந்தையாக இருந்தாலும், அதை அவளிடமே கொடுத்து விடுங்கள்' என்றாள். அவளைப் பொறுத்தவரை குழந்தை உயிரோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. அந்த எண்ணம்தான் நமக்கும் இருக்கிறது. மற்ற முதல்வர்கள் சொல்வது போல், மத்திய அரசு என்று நான் சொல்லவில்லை; இந்தியப் பேரரசு என்று சொல்கிறேன்; நாங்கள் சிற்றரசுதான்.

நாங்கள் ஒரு சாதனையை, செயலை, திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்றால், அதில் மத்திய அரசுக்கும் பங்குண்டு. அவர்கள் எட்டு அடி பாய்ந்தால், நாங்கள் 16 அடி பாய்வோம்;அந்த எட்டு அடியையும் கூட்டித்தான் இந்த 16 அடி. தனியாக 16 அடி பாயவேண்டுமென அவர்கள் சொன்னாலும், சேர்ந்தே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். முன்பு நாங்கள் தனியாக இருக்கத்தான் எண்ணினோம். நீங்கள்தான் சேர்ந்திருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இப்போது சேர்ந்திருப்பது தீது என்றால், சொல்லுங்கள்; யோசிக்கிறோம். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

ராஜாவை நீக்க வேண்டும் தி.மு.க.,வுக்கு யுவராஜா கோரிக்கை: இளைஞர் காங்கிரஸ் பாதயாத்திரை நிறைவு விழா நேற்று சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு நிபந்தனை விதித்து பேசினார். அவர் பேசியதாவது: தற்போது ஆட்சி செய்யும் தி.மு.க., அரசை நான் குறை கூற விரும்பவில்லை. தி.மு.க.,வினர் கிராமத்திற்கு செல்கின்றனர். இலவச "டிவி' களை வழங்குகின்றனர். ஆனால், மக்கள் வளர்ச்சிக்காக அவர்கள் செல்லவில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்றால் காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். ராகுலுக்கும் ஆதரவு தர வேண்டும். வரும் காலத்தில் நிச்சயமாக காங்கிரஸ் ஆட்சிப் பீடம் ஏறும்.தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை ராகுல் தான் முடிவு செய்வார். அவர் வழிகாட்டும் கூட்டணி தான் தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெறும்.

ஊழலுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் கட்சி. ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். முதல்வர் கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தவர்களை (ராஜா) தி.மு.க.,விலிருந்து விலக்கி வைக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் ஒருவேளை சோனியாவும், ராகுலும் இந்த கூட்டணி வேண்டும் என்று உறுதி செய்ய வேண்டும் என்றால், இதுபோல நடவடிக்கைகளை எடுத்தால் தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியும். இவ்வாறு யுவராஜா பேசினார். அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்து, இந்த யோசனையை வரவேற்றனர்.

பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி சாதனை

பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கட்சிகள் இடம் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மைபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. நிதிஷ்குமார் இரண்டாவது முறையாக முதல்வராகிறார். ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கூட்டணி கடும் தோல்வியைத் தழுவியுள்ளது. காங்கிரஸ் கட்சி வெறும் நான்கு இடங்களை மட்டுமே பிடித்துள்ளது.

பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கும் ஆறுகட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ., கூட்டணி கட்சிகள் இடம் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு அணியாகவும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை ஒரு அணியாகவும், காங்கிரஸ் கட்சி ஒரு அணியாகவும் போட்டியிட்டன. ஒரு மாதமாக நடந்த ஆறு கட்டத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி 206 இடங்களைப் பிடித்துள்ளது. லாலு - பஸ்வான் கட்சிகளின் கூட்டணி 25 இடங்களையும், காங்கிரஸ் நான்கு இடங்களையும், இதர கட்சிகள் எட்டு தொகுதிகளையும் பிடித்துள்ளன. நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் கூட்டணி, நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மை பெற்றுள்ளது. இதனால், நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகிறார். கடந்த 2005 சட்டசபை தேர்தலில் 143 இடங்களைப் பிடித்த ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி, இம்முறை 206 இடங்களைப் பிடித்து மெகா சாதனை படைத்துள்ளது. முஸ்லிம் சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் இந்தக் கூட்டணி கணிசமான இடங்களைபிடித்துள்ளது. கடந்த 2005 தேர்தலில் 64 இடங்களை பிடித்த லாலு - பஸ்வான் கூட்டணி இம்முறை 25 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது; 39 இடங்களை பறிகொடுத்துள்ளது. கடந்த தேர்தலில் ஒன்பது இடங்களைப் பிடித்த காங்கிரஸ், இம்முறை நான்கு இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும், சுயேச்சைகள் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ரப்ரிதேவி தோல்வி: முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலுவின் மனைவி ரப்ரி தேவி, இந்த தேர்தலில் ரகோபூர் மற்றும் சோனேபூர் என, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்; இரண்டிலும் தோல்வி அடைந்தார்.

தேர்தல் வெற்றி குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியதாவது: ஜாதி அடிப்படையில் அரசியல் நடத்தியவர்கள், இந்த தேர்தல் வெற்றி மூலம் அதிருப்தி அடைவர். தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என, கருத்து கணிப்புகள் தெரிவித்தன. அவற்றை எல்லாம் லாலு பிரசாத் யாதவ் விமர்சித்தார். ஆனால், கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டது போலவே, தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. அதனால், மீடியாக்களின் செயல்பாடுகளை தேவையில்லாமல் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். பீகாரில் எனது தலைமையிலான புதிய அரசு, வரும் வெள்ளியன்று பதவியேற்கிறது. பாட்னாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும். தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை கட்சிக் கூட்டம் நாளை (இன்று) நடைபெறும். அதில், சட்டசபை கட்சித் தலைவர் தேர்வு செய்யப்படுவார்.

தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு முன்னதாக, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம் தனியாக நடைபெறும். அவற்றில், அந்தக் கட்சிகளின் சட்டசபை தலைவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு முதல்வர் நிதிஷ்குமார் கூறினார். கவர்னர் டி.என்.கொன்வரை நேற்று மதியம் சந்தித்த முதல்வர் நிதிஷ்குமார் தன் ராஜினாமா கடிதத்தை அளித்தார். ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட கவர்னர், புதிய அரசு அமைக்கும் வரை பதவியில் தொடரும்படி கேட்டு கொண்டார். அத்துடன் பீகாரின் 14வது சட்டசபையும் கலைக்கப்பட்டது.

நிதிஷ்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன: பீகார் சட்டசபை தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, பல்வேறு தரப்பில் இருந்தும் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. முதல்வர் நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, "பீகாரின் வளர்ச்சிக்காக, மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும்' என்றார்.

தேர்தல் வெற்றி குறித்து பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறுகையில், ""21ம் நூற்றாண்டின் அரசியல், வளர்ச்சி சார்ந்த அரசியலே அன்றி, ஜாதி அடிப்படையிலான அரசியல் அல்ல என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன,'' என்றார்.

பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், ""பீகாரில் கூட்டணியையும், அரசையும் நிதிஷ்குமார் நடத்திச் சென்ற விதத்தை நினைத்து நாங்கள் மிகுந்த பெருமைப்படுகிறோம். குடும்ப மற்றும் வம்சாவளி அரசியலைத் தாண்டி, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார். "பீகாரில் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றதற்கு முதல்வர் நிதிஷ்குமாரே காரணம். அவரின் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் நன்றாக மேம்பட்டுள்ளது' என, காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதேபோல, வேறு பல கட்சிகளின் தலைவர்களும் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நிதிஷ்குமாருக்கு அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பீகார் சட்டசபை தேர்தலில், எதிர்கட்சிகளின் அச்சுறுத்தலான செயல்பாடுகளையும் மீறி பெரும்பான்மையான தொகுதிகளில் உங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறந்த நிர்வாகம், நேர்மையான ஆட்சியை தொடர்ந்து மக்களுக்கு அளிப்பதற்கு இந்த தேர்தல் முடிவுகள் வழிவகுத்துள்ளன. மீண்டும் முதல்வராக பதவி ஏற்று, வெற்றிகரமாக பணியாற்ற வாழ்த்துகிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

தோல்வியை ஏற்கிறேன்: லாலு பிரசாத்: ""பீகார் சட்டசபை தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு ஏற்பட்ட தோல்வியை பணிவுடன் ஏற்கிறேன். திகைப்படைய வைக்கும் இந்தத் தேர்தல் முடிவுகளுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்வோம்,'' என ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ""தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ்குமாருக்கு எனது வாழ்த்துக்கள். நிதிஷ்குமார்மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால், தேர்தல் வாக்குறுதிகளை அவர் குறிப்பிட்ட கால அளவுக்குள் நிறைவேற்றுவார் என, எதிர்பார்க்கின்றனர். வளர்ச்சிக்காக மக்கள் ஓட்டளித்துள்ளனர்,'' என்றார்.

Tuesday, November 16, 2010

இஷ்டப்படி ஒதுக்கீடு செய்து நஷ்டத்தை ஏற்படுத்தினார் ராஜா

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான, மத்திய ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை நேற்று அமளியின் நடுவே பார்லிமென்டின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.

மொத்தம் 77 பக்கங்களை கொண்டிருந்த இந்த அறிக்கையில், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு, விதிமுறைகள் எப்படி மீறப்பட்டுள்ளன என்பது புட்டுபுட்டு வைக்கப்பட்டுள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து ஆய்வு நடத்திய மத்திய ஆடிட்டர் ஜெனரல் (கேக்), தனது அறிக்கையை ஜனாதிபதி, பிரதமரிடம் சமீபத்தில் அளித்து இருந்தார்.
இது பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசியில் ராஜாவும் மக்களுக்கு சேவை செய்த பெருமையைக் கூறி ராஜினாமா செய்ய நேரிட்டது.

இந்நிலையில், சி.ஏ.ஜி., அறிக்கை பார்லிமென்டின் இரு அவைகளில் தாக்கல் செய்யப்பட்டது.லோக்சபாவில் இந்த அறிக்கையை மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் நேற்று தாக்கல் செய்தார். ராஜ்யசபாவில், நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனாவால் தாக்கல் செய்தார்.
மொத்தம் 77 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தரப்பட்ட விதம், விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளது போன்றவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய், இழப்பு ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கு தீவிர கண்காணிப்பு தேவை. அதற்கான பணியைத்தான் மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சி.ஏ.ஜி., அறிக்கையில் முழு விவரங்களை குறிப்பிட்டு, பின்குறிப்பாக ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், "இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடு போல், வேறு எந்த அமைச்சகத்திலோ, அரசின் வேறு துறையிலோ ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்திலும், குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் உள்ளது என்ற வகையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அறிக்கையில், மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த ராஜா, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்காக விதிமுறைகளை மாற்றி வளைத்துள்ளார். பிரதமரின் ஆலோசனையையும் பொருட்படுத்தவில்லை, சட்ட அமைச்சகத்தின் ஆலோசனைகளை கேட்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:* "3ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்காக நடந்த ஏலம் மற்றும் அதில் பங்கேற்ற ஆபரேட்டர்கள் குறிப்பிட்ட விலையை வைத்துதான்,
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அதிக வருவாய் கிடைத்திருக்குமே என்ற யூகத்தின் அடிப்படையில் பார்த்த போது, இதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தெரியவந்தன.
* இந்த துறையின் அமைச்சராக இருந்த ராஜா, விதிகளை மாற்றி, அதாவது வளைந்து கொடுத்து, 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பழைய நுழைவு வரி பற்றி பரிசீலிக்காமல், 2008ம் ஆண்டில் வந்த புதிய ஆபரேட்டர்களுக்கு ஸ்பெக்டரம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதில், பிரதமர் கூறிய ஆலோசனையையும் புறக்கணித்துள்ளார்.
*"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட முறை வெளிப்படையாக இல்லை. மொத்தம் 122 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 85 நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்த தகுதி மதிப்பீட்டை பூர்த்தி செய்யவில்லை. இந்த 85 லைசென்சுகளை 13 கம்பெனிகள் பெற்றுள்ளன. இந்த கம்பெனிகள், நிர்ணயிக்கப்பட்ட மூலதனத்தைக் கொண்டு இருக்கவில்லை.
* வெளிப்படையான அணுகுமுறை இருக்க வேண்டும் என்ற பிரதமரின் ஆலோசனையும், இந்த துறையோடு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் குழுவை கலந்து ஆலோசித்து செயல்படுங்கள் என்று கூறிய நிதி அமைச்சகத்தின் ஆலோசனையும் ராஜா பொருட்படுத்தவில்லை.
* தகவல் தொடர்புத்துறை ஆணையத்தின்(டிராய்)வழிகாட்டு நெறிமுறையின் படியும் நடக்கவில்லை. இந்த விஷயத்தில்,"டிராய்' கையை கட்டிக் கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் வேடிக்கை பார்த்துள்ளது.
* அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு முறைகேடாக சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு இரட்டை தொழில்நுட்ப உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
* இரட்டை தொழில்நுட்ப பயன்பாடு விஷயத்தில், 2003ம் ஆண்டு கேபினட் எடுத்த முடிவு மீறப்பட்டுள்ளது. அவ்வாறு கேபினட் முடிவை மீறும் போது, கேபினட் அனுமதி பெற வேண்டும். அந்த நடைமுறையும் இங்கே பின்பற்றப்படவில்லை.
* எவ்வித அனுபவமும் இல்லாத, "ஸ்வான்' நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை பட்டியலில் உள்ள நிறுவனத்திற்கு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
* ஸ்பெக்ட்ரம் அலைவரிசை என்பது நமது தேசத்தின் அரிதான சொத்து. இது ஏலம் விடப்படவேண்டும்.
* இதில் பங்கேற்ற புதிய ஆபரேட்டர்களுக்கு எவ்வித விதிமுறையும் பின்பற்றப்படாமல், விலையை நிர்ணயம் செய்ததில் அக்கறையின்றி செயல்பட்டுள்ளனர்.
* வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை அளிக்கவேண்டும் என்பதற்காக கடைசி தேதியை முன்கூட்டியே வருவது போல் மாற்றியமைத்துள்ளனர்.
*கடந்த 2001ம் ஆண்டு விலைப்படி, 51 மண்டலங்களுக்கு, லைசென்ஸ் பெற்ற 13 ஆபரேட்டர்கள் கொடுத்த விலை ரூ.2,561 கோடி. இதே ஆபரேட்டர்கள் "3ஜி' ஏலத்திற்கு ரூ.12 ஆயிரம் கோடி முதல் 37 ஆயிரம் கோடி வரை கொடுத்துள்ளனர்.
* தற்போது நடைமுறையில் உள்ள ஆபரேட்டர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் போது நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி (6.2 மெகா ஹெர்ட்ஸ்) தகவல் தொடர்பு துறை அனுமதி வழங்கியுள்ளது.
* இரட்டை தொழில்நுட்ப லைசென்ஸ் 35 வழங்கப்பட்டுள்ளன. இதற்கான மதிப்பீட்டு தொகை 1.52 லட்சம் கோடி ரூபாய். ஆனால், உரிமமாக பெறப்பட்ட தொகை. 12 ஆயிரத்து 386 கோடி ரூபாய்.
* ஒதுக்கீடு உரிமம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றான, ஸ்வான்' நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை "எட்டிசேலட்' என்ற ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த நிறுவனத்துக்கு 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. யூனிடெக் நிறுவனம் தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்றது. தொலைத்தொடர்புத் துறை லைசென்சை பெற 1,661 கோடி ரூபாய் மட்டுமே "யூனிடெக்' கட்டியிருந்தது. லைசென்ஸ் மற்றொரு நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் தனது 26 சதவீத பங்குகளை, டோகோமோ என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு 13 ஆயிரத்து 230 கோடி ரூபாய்க்கு விற்றது. இந்த பங்குகளை யூனிடெக், ஸ்வான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 70,022.42 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்தன. ஆனால், தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு 10,772.68 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டது. இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்பது "2ஜி' உரிமத்தில் மட்டும் 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம்: ஒரு பார்வை*"2ஜி' லைசென்சுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை, அக்கறையின்றி அள்ளிவீசப்பட்டுள்ளது.
*விதிமுறைகள் வளைக்கப்பட்டுள்ளன; எவ்வித நடைமுறையோ, ஒழுங்குமுறையே பின்பற்றப்படவில்லை
* வேண்டியவர்களுக்கு சலுகை வழங்குவதற்காக, கடைசி தேதி முன்தேதியிடப்பட்டுள்ளது.
*மொத்தத்தில், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட அமைச்சர் ராஜாவின் வெளிப்படையில்லாத அணுகுமுறை காரணமாயிருக்கிறது. மேலும், அவர் அள்ளி வழங்கிய சலுகையில், டேடா காம் ( தற்போது வீடியோகான்). எஸ்-டெல், ஸ்வான் அண்ட் லூப் டெலிகாம் ஆகிய தொழிலமைப்புகளுக்கு 2008ல் லைசென்ஸ் தரப்பட்டிருக்கிறது,
* பிரதமர் ஆலோசனையை அவர் மீறி இதை வழங்கியிருக்கிறார். சட்டங்களை மீறி, நடைமுறைகளை மீறி "2ஜி' லைசென்சுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

*ஸ்வான் டெலிகாம் லைசென்ஸ்: ரூ.1,537 கோடிஇந்நிறுவனம் தனது 45 சதவீத பங்கை விற்றதன் மூலம் ரூ.4,200 கோடி பெற்றுள்ளது.
*மொபைல் சந்தாதாரர் நிலவரம்
2001 : 40 லட்சம்
2008 : 35 கோடி
* வருவாய் இழப்பு: ரூ.1.76 லட்சம் கோடி.
* சில நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது 2008ம் ஆண்டில், விலை நிர்ணயமோ 2001ம் ஆண்டின்படி செய்யப்பட்டது.
* யூனிடெக் ஒயர்லெஸ் லைசென்ஸ்:ரூ.1,661 கோடி.இந்நிறுவனம் 60 சதவீத பங்கை விற்றதன் மூலம் திரட்டிய தொகை: ரூ.6,200 கோடி.
*அரசுக்கு கிடைத்த வருவாய்: "2ஜி': ரூ.10,772 கோடி.
"3ஜி':ரூ. ஒரு லட்சம் கோடி.

Wednesday, November 10, 2010

தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவின் செயலால் நாட்டுக்கு ரூ.1.7 லட்சம் கோடி இழப்பு-சிஏஜி அறிக்கை

மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்தின் 2ஜி ஏலத்தால் நாட்டுக்கு ரூ. 1.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அமைச்சர் ராஜாவின் அணுகுமுறையே இதற்கு முழுக் காரணம் என்றும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2008ல் நடந்த 2ஜி ஏலம் மிக மிக மட்டமான விலைக்கு விடப்பட்டது. ஆனால் அதை ஏலம் எடுத்த நிறுவனங்கள் மற்றவர்களுக்கு பல மடங்கு விலை வைத்து விற்று விட்டனர். இந்த வகையில் நாட்டுக்கு ரூ. 1.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளாக கணக்கு தணிக்கை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த பெரும் தேசிய நஷ்டத்துக்கு அமைச்சர் ராஜாதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ராஜாவின் நிலை மேலும் சிக்கலாகியுள்ளது.

2ஜி ஏலம் தொடர்பாக, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது இறுதி அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளார். அதில் உள்ள அனைத்துமே ராஜாவுக்கு எதிரானதாக உள்ளது.

அறிக்கையின் சில முக்கியப் பகுதிகள்...

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பாக பிரதமர், சட்ட அமைச்சர், நிதியமைச்சர், தொலைத் தொடர்பு ஆணையத்தின் பரிந்துரை என எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல் அனைத்தையும் நிராகரித்து விட்டார் அமைச்சர் ராஜா.

மிக மிகக் குறைந்த விலைக்கு ஏலம் கேட்ட சில குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

முழுக்க முழுக்க தன்னிச்சையாக இதை அவர் செய்துள்ளதால் இந்த பெரும் தேசிய நஷ்டத்திற்கு ராஜாவே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

அதேபோல தனது பரிந்துரைகளை தொலைத் தொடர்பு அமைச்சகம் அப்பட்டமாக மீறி செயல்பட்டுக் கொண்டிருந்ததைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது டிராய் அமைப்பு. தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் செயலை அது தடுத்து நிறுத்த முயன்றிருக்க வேண்டும்.

2008ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த 2ஜி ஏலத்தின்போது மொத்தம் 122 புதிய உரிமங்கள் வழங்கப்பட்டன. அதில் 12 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 85 உரிமங்கள் தொலைத் தொடர்புத்துறை நிர்ணயித்திருந்த தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதவையாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நஷ்டத்தை கணக்கிட்டது எப்படி

மொத்தம் 3 வழிகளில் 2ஜி ஏலத்தால் நாட்டுக்கு ஏற்பட்டநஷ்டத்தைக் கணக்கிட்டுள்ளது கணக்கு தணிக்கை அலுவலகம்.

முதல் வழி - 2ஜி ஏலத்தில் பங்கேற்ற எஸ் டெல் நிறுவனம் 2007ம் ஆண்டு பிரதமருக்கும், பின்னர் தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கும் அனுப்பிய ஆஃபர் கடிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தின்படி பார்த்தால், 122 புதிய உரிமங்களின் மதிப்பு ரூ. 65,725 கோடியாக வருகிறது. ஆனால், மத்திய தொலைத் தொடர்புத் துறை வெறும் ரூ. 9013 கோடியை மட்டுமே இந்த உரிமங்களுக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வசூலித்துள்ளது.

அதேபோல எஸ்.டெல் நிறுவனம் டூயல் டெக்னாலஜிக்கான கட்டணமாக ரூ. 24,591 கோடி தர முன்வந்துள்ளது. இதையும் சேர்த்து கணக்கிட்டால் ரூ. 90,316 கோடியாக வருகிறது.

2வது வழி - 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கிடைத்த தொகையை ஒப்பிட்டுப் பார்த்தபோது, 2ஜி ஏலத்தால் ஏற்பட்ட நஷ்டமாக ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 511 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

டூயல் தொழில்நுட்ப கட்டணம் மட்டும் ரூ. 40,526 கோடி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இதில் கிடைத்ததுவெறும் ரூ. 3372 கோடி மட்டுமே. எனவே மொத்த நஷ்டத்தின் அளவு ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 652 கோடியாகும்.

6.2 மெகாஹெர்ட்ஸுக்கும் மேற்பட்ட அலைக்கற்றை ஒதுக்கப்பட்டிருப்பதை வைத்து கூட்டிப் பார்க்கும்போது கிட்டத்தட்ட ரூ. 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி அளவுக்கு நஷ்டத் தொகை வந்து நிற்கிறது.

இதன் மூலம் முன்பு கணித்ததை விட பல ஆயிரம் கூடி கூடுதல் நஷ்டக் கணக்கு வருகிறது.

உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள், பெற்ற வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணக்கிட்டுப் பார்த்தால், இந்தியா முழுமைக்குமான உரிமக் கட்டணம் ரூ. 7442 கோடி முதல் ரூ. 47,918 கோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இதை வெறும் ரூ. 1658 கோடிக்கு மட்டுமே கொடுத்துள்ளார் ராஜா.

கணக்கு தணிக்கை அதிகாரியின் இந்த இறுதி அறிக்கை பெரும் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது. சமீபத்தில்தான் இந்த ஊழல் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது மத்தியஅரசை கடுமையாக சாடியிருந்தது சுப்ரீம் கோர்ட்.

ஆதர்ஷ்வீட்டு வசதிக் கழக ஊழலில் சிக்கிய மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானையும், காமன்வெல்த் ஊழலில் சிக்கிய கல்மாடியையும் காங்கிரஸ் கட்சி உடனடியாக பதவி நீக்கம் செய்துள்ளது. ஆனால் கூட்டணிக் கட்சியான திமுகவைச் சேர்ந்த ராஜா மீது கை வைக்க முடியாமல் கடுமையாக திணறி வருகிறது மத்திய அரசு. ஆனால் கணக்கு தணிக்கை அதிகாரியின் இறுதி அறிக்கையில் நஷ்டக் கணக்கு 1 லட்சம் கோடிக்கும் மேல் காட்டப்பட்டிருப்பதால் ராஜா மீதான நெருக்குதல் அதிகரித்திருப்பதாக கருதப்படுகிறது.

அடுத்த சுப்ரீம் கோர்ட் அமர்வுக்கு முன்பாக ராஜா மீது நடவடிக்கை எதையாவது எடுத்தாக வேண்டிய கட்டத்திற்கு தற்போது மத்திய அரசு தள்ளப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

Tuesday, November 2, 2010

தி.மு.க.,வில் சதி: அமைச்சர் "திடுக்' தகவல்

நான் தி.மு.க.,வில் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், என்னுடைய புகழை கெடுக்க வேண்டும் என்ற நோக்கில், தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்,'' என, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.

சேலத்தில், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ் உள்ளிட்ட ஆறு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அமைச்சரின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமாரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ்குமாரை, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பார்த்து வந்ததற்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து ஆங்கில நாளிதழுக்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:நான் நீண்டகாலமாக தி.மு.க.,வில் பணியாற்றி வருகிறேன். அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலர் என்னுடைய புகழை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, பத்திரிகைகளுக்கு தவறான செய்திகளை கொடுத்து வருவதாக அறிகிறேன். இதற்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என தெரியவருகிறது.சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராகவும், பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலராகவும் சுரேஷ்குமார் பணியாற்றி வருகிறார். அவர் என் சின்ன தாயாரின் பேரனும், தம்பி மகனுமாவார். அவரை இந்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  நான், சிறைக்குச் சென்று பார்த்து வந்தேன்.இதில் எந்தவித தவறும் இல்லை. தேவையில்லாமல் இந்த வழக்கில் என்னை களங்கப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, கட்சியில் உள்ள ஒருசிலர் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு தொடர்பு கொண்டும், பொய் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் எனக்கு தகவல் கிடைத்துள்ளது.இறந்த குப்புராஜின் மகன் சிவகுரு, சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து, அந்த கொலை வழக்கை முதலில் மாவட்ட எஸ்.பி.,தான் விசாரித்து வந்தார். அதன் பின், சிவகுருவின் மகன் கோகுலை போலீசார் கைது செய்தனர்.

அப்போது நானும், என் தந்தையும் சேர்ந்து தான் கொலை செய்தோம் என அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.நீதிமன்றத்தில் சரணடைந்த சிவகுருவை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது, மகன் சொன்ன கருத்தையே அவரும் கூறியுள்ளார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால், தி.மு.க.,வை களங்கப்படுத்த, தி.மு.க.,விலேயே உள்ள ஒரு சிலர் ஈடுபடுவதை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் எடுத்துக் கொண்டு கட்சித் தொண்டர்களை மிரட்டுவதை நான் கண்டிக்காமலும் விடமுடியாது. இந்த வழக்கு சம்பந்தமாக இன்றைய தேதி வரை மாவட்டத்தில் உள்ள எந்த போலீஸ் அதிகாரியையும் நான் தொடர்பு கொள்ளவில்லை.இப்போது வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசாரையும் நான் எந்த விதத்திலும் தொடர்பும் கொள்ளவில்லை. இந்நிலையில், பத்திரிகைகளில் தவறான செய்திகளை வழங்கி, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த சில புல்லுருவிகள் தோன்றியிருப்பது தான் எனக்கு வேதனையளிக்கிறது.இவ்வாறு வீரபாண்டி ஆறுமுகம் கூறினார். 

கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் வலுப்படுத்துங்கள்: சோனியா

"சில மாநிலங்களில் கூட்டணி வைத்து கொள்கிறோம் என்பதற்காகவே, அங்கெல்லாம் நமது கட்சிக்கு செல்வாக்கு இல்லையென்ற முடிவுக்கு தொண்டர்கள் வந்துவிட வேண்டாம்' என, காங்., தலைவர் சோனியா கூறினார். மேலும் உத்தர பிரதேசம், தமிழகம் போன்ற மாநிலங்களில் எளிய மக்களை மேம்படுத்தும் விதத்தில், தொண்டர்கள் பாடுபட்டால் இம்மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது நிச்சயம் என்றும் ராகுல் பேசினார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களின் கூட்டம், நேற்று டில்லியில் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டம், டில்லி தல்கோட்ரா மைதான உள்ளரங்கில் நேற்று காலையில் துவங்கி, மதியம் 1 மணியுடன் முடிவடைந்தது.

புதிய உறுப்பினர்களை வரவேற்று, காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியதாவது:சில நாட்களுக்கு முன்பு வரை காஷ்மீர் நிலவரம் மிகவும் கவலையளிக்க கூடிய வகையில் இருந்தன. ஆனால் அடுத்தடுத்து எடுக்கப்பட்ட சீரிய நடவடிக்கைகள் காரணமாக, அங்கு தற்போது அமைதியும், சகஜ நிலைமையும் திரும்பியுள்ளது. அங்குள்ள பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நக்சலைட் பிரச்னை உள்ளது. அரசாங்கத்தின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பினால் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க இயலாது. அதே சமயம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதும் ஏற்க முடியாத ஒன்று. அவர்களது மேம்பாட்டிற்கு நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டியது அவசியம்.கடந்த 2004ம் ஆண்டில் மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து நலத்திட்டங்களை நிறைவேற்றுவதிலேயே குறியாக உள்ளோம். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை லோக்சபாவில் நிச்சயம் நிறைவேற்றுவோம். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கும் உள்ளது. பொது வினியோக திட்டத்தை சீரமைத்து, பதுக்கல் நடவடிக்கைகளை ஒழித்து கட்ட வேண்டும்.நியாயப்படுத்தாது: லக்னோ ஐகோர்ட் அளித்துள்ள அயோத்தி தீர்ப்பு என்பது, எந்த வகையிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி விடாது. மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம்.

குற்றவாளிகளை சட்டத்தின் முன் கட்டாயம் நிறுத்த வேண்டும்.சில மாநிலங்களில், பிற கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. பிற கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காகவே, அம்மாநிலங்களில் நமக்கு செல்வாக்கு இல்லவே இல்லை என்ற முடிவுக்கு தொண்டர்கள் வந்துவிடக் கூடாது. கூட்டணி கட்சிகளை மதிக்கிறோம். அதற்காக நாம் வளர வேண்டிய இடத்தை, மற்றவர்களுக்காக விட்டுத் தரமுடியாது. அடுத்த இரு ஆண்டுகளில், நடக்க இருக்கின்ற 10 சட்டசபை தேர்தல்களுக்கு தயாராக வேண்டும். கட்சியை பலப்படுத்த பல மடங்கு உழைக்க முன்வர வேண்டும்.இவ்வாறு சோனியா பேசினார்.

இருபது நிமிடங்கள் பேசிய சோனியா, ஒரு இடத்தில் கூட பீகார் தேர்தல் குறித்தோ, காமன்வெல்த் போட்டி ஊழல் மற்றும் ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் குறித்தோ குறிப்பிடவே இல்லை.

சோனியாவுக்கு பிறகு பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், "காஷ்மீர் நிலவரம் கவலையளிப்பதாக இருந்தாலும், தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. அங்கு அரசியல் தீர்வு அவசியம். பழங்குடியின மக்களுக்கு வேண்டிய திட்டங்களை நிறைவேற்றுவதில், அரசாங்கம் ஆர்வமாகவும், விழிப்புடனும் உள்ளது' என்றார்.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும் போது, "முன்பெல்லாம் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் போது, சட்டப் பாதுகாப்பு இருக்காது. ஆனால் இப்போது அப்படியல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் தனது ஆட்சியில் செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்கள் எல்லாவற்றுக்குமே, சட்டப் பாதுகாப்பையும் உள்ளடக்கியவையாக இருந்து வருகின்றன.இது மிகவும் வரவேற்கத்தக்கது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநில அரசுகளின் பங்கு மிகவும் அவசியம். பதுக்கல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் மாநில அரசுகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணவீக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் இரட்டை இலக்கத்துடன் இருந்த பணவீக்கம், தற்போது 8.6 சதவீதமாக உள்ளது. அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை மிகவும் குறைவான விலையில் தான் மத்திய அரசு வழங்கி வருகிறது' என்றார்.

பின்னர் ராகுல் பேசும் போது, "நான் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். இந்த பயணத்தில் நான் இரண்டு இந்தியாக்களை பார்க்கிறேன். ஒன்று வளர்ச்சியும், முன்னேற்றமும் அடைந்த இந்தியா. மற்றொன்று வறுமையுடன் போராடும் இந்தியா. இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். இதை நோக்கமாக வைத்தே நலத்திட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.மிகப்பெரிய மாநிலங்களான உத்தர பிரதேசத்திலும், தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாக உள்ளதென்று பலரும் கருதுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். இம்மாநிலங்களில் ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக கட்சி தொண்டர்கள் பாடுபட்டால், நிச்சயம் ஆட்சியையே பிடிக்கலாம்' என்றார்.இக்கூட்டத்தில் சுரேஷ் கல்மாடி, மகாராஷ்டிர முதல்வர் சவான், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகிய சர்ச்சைக்குரியவர்களும் கலந்து கொண்டனர்.

Monday, November 1, 2010

அதிபர் ஒபாமா வருகையை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகளுக்கு வைகோ கண்டனம்

இந்தியாவுக்கு வரும் ஒபாமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும்'  என்று, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து வைகோ விடுத்துள்ள அறிக்கை: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 8ம் தேதி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளது, அதிர்ச்சியையும் மிக்க வேதனையையும் தருகிறது. அமெரிக்க நாட்டில் கொடும் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட கருப்பர்கள் கடுமையாக போராடி சிறுக, சிறுக உரிமைகளை பெற்று உயர்ந்துள்ளனர். உலகம் போற்றும் திருப்புமுனையாக ஒரு கருப்பினத் தந்தையின் மகனாக பிறந்த பராக் ஒபாமா, அமெரிக்க அதிபராகியுள்ளார். நமது தேசப்பிதா காந்தியை மனித குலத்தின் ஒளிவிளக்காக ஒபாமா போற்றி, தனது அலுவலக அறையில் காந்தியின் படத்தை வைத்துள்ளார். ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து வந்துள்ள ஒபாமாவை இந்திய மக்கள் வாழ்த்தி வரவேற்க கடமைப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள்  அமெரிக்க கொள்கைகள் இந்திய மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதால், ஒபாமாவை  எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் உள்ளது. போபால் விஷவாயுக் கசிவால் எண்ணற்ற மக்கள் உயிரிழந்த போது அந்நிறுவனத்தின் உரிமையாளரை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்த காங்கிரசை கண்டித்து கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்தவில்லை. சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டதற்கு  கம்யூனிஸ்டுகள் கண்டனம் தெரிவிக்கவில்லை.  இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்தை  தங்கள் பகுதி என்று சீன வரைபடத்தில் வெளியிட்டதற்கும், ஜம்மு காஷ்மீரிலிருந்து செல்பவர்களுக்கு சீனா தனி விசா கொடுப்பதற்கும், பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ள இந்திய பகுதியை பாகிஸ்தானுக்கு உரியது என்று சீனா அதிகாரப்பூர்வமாக சொல்லி வருவதற்கும் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இலங்கை தீவில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க சீன அரசு ஆயுதங்களை வழங்கிய போது, கம்யூனிஸ்டுகள் கண்டிக்கவில்லை. ஒபாமா வருகைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள்  எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.