Search This Blog

Tuesday, March 1, 2011

தமிழக சட்டசபை தேர்தல்: 19ம் தேதி துவங்குகிறது மனுதாக்கல்

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக, வரும் ஏப்ரல் 13ம் தேதி நடத்தப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை, ஒரு மாதத்துக்கு பின், மே மாதம் 13ம் தேதி நடக்கிறது. தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்துள்ளன.

தமிழக சட்டசபையின் பதவிக் காலம், வரும் மே மாதம் 16ம் தேதியுடன் முடிகிறது. புதுச்சேரியில் மே மாதம் 28ம் தேதி சட்டசபை பதவிக் காலம் முடிகிறது. அதற்குள் புதிய அரசு அமைந்து, சட்டசபை துவக்கப்பட வேண்டும். கடந்த 2006ம் ஆண்டு, சட்டசபை பொதுத் தேர்தல் மே மாதம் 8ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டு, மே மாதம் 10ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. 13ம் தேதி புதிய அரசு பொறுப்பேற்றது. தற்போது, ஆட்சிக் காலம் முடியும் நிலையில், தமிழகத்துக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, தமிழகம், அசாம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை நேற்று வெளியிட்டார்.

இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக, ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. எனினும், ஓட்டு எண்ணிக்கை ஒரு மாதம் கழித்து மே மாதம் 13ம் தேதி தான், ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து நடத்தப்படுகிறது. தேர்தலுக்கான அறிவிக்கை வரும் (மார்ச்) 19ம் தேதி வெளியிடப்படுகிறது. எனவே, அன்று முதல், வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்யலாம்.

மனுக்கள் தாக்கல் செய்ய மார்ச் 26ம் தேதி கடைசி நாள். வாபஸ் பெற 30ம் தேதி கடைசி நாள். தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்துள்ளன. சட்டசபை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. தமிழகத்தில், மொத்தம் நான்கு கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் இரண்டு கோடியே 30 லட்சத்து 86 ஆயிரத்து 295 பேரும், பெண்கள் இரண்டு கோடியே 28 லட்சத்து 63 ஆயிரத்து 481 பேரும், அரவாணிகள் 844 பேரும் உள்ளனர்.

மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 44 தொகுதிகள் ஆதிதிராவிடர்களுக்கும், இரண்டு தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் ஐந்து தொகுதிகள் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 851 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் மொத்தம் எட்டு லட்சத்து 5,124 வாக்காளர்கள் உள்ளனர்.தமிழகத்தில் மொத்தம் 54 ஆயிரத்து 16 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 99.85 சதவீதம் புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 99.9 சதவீதம் பேருக்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 100 சதவீதம் புகைப்பட வாக்காளர் பட்டியலும், புகைப்பட அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முக்கிய கட்சிகள் இன்னும் கூட்டணியையே முடிவு செய்யாமல் உள்ள நிலையிலும், தொகுதிப் பங்கீடு போன்றவை முடிவடையாத நிலையிலும், ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்க இருப்பது, அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொகுதி பங்கீட்டை முடித்து இம்மாதம் 20ம் தேதிக்குள், வேட்பாளர்களை மனு தாக்கல் செய்ய தயாராக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் அரசியல் கட்சிகள் உள்ளன.

No comments: