திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தொழில் மற்றும் விவசாயத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படியும், மாநிலத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், பயனுள்ள திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. மக்களை மயக்கும் இலவச அறிவிப்புகள், கவர்ச்சி திட்டங்கள் எதுவும், தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை.
சமீபகாலமாக, அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளில் இலவச மழை பொழிந்து கொண்டிருக்க, மேற்கு வங்கத்தில் பிரதான எதிர்க்கட்சியான திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மாநிலத்தில் எதிர்கால நலனை முன்னிறுத்தி, ஆரோக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டார். அதில், மாநிலத்தில் பசுமை புரட்சியை ஏற்படுத்தப் போவதாகவும், தொழில் துறையையும், விவசாயத் துறையையும் இரட்டை சகோதரிகளாக கருதி, அவற்றின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த முதல் நூறு நாட்களில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றுவது, அடுத்த 1,000 நாட்களில் என்ன திட்டங்களை நிறைவேற்றுவது என்பது குறித்து, விளக்கமாக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்: தொழில் துறையை மேம்படுத்தி, அதன் மூலம், வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் உள்ள தொழில் துறை பயிற்சி மையங்களின் எண்ணிக்கையை, தற்போதுள்ள 51ல் இருந்து 300 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் மையம் அமைக்கப்படும். மூடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை, மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதிய விமான நிலையங்கள் கட்டப்படும். தொழில் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆசிரியர்களின் பயிற்சி தரம் உயர்த்தப்படும். மாநிலத்தில் மேலும் 10 புதிய மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர். பள்ளிகளின் கட்டமைப்பு வசதி உயர்த்தப்படும். ஆரம்ப சுகாதார மருத்துவ மையங்களின் தரம் உயர்த்தப்படும்.
மாநிலம் முழுவதும், சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு நகரத்திலும் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் அமைக்கப்படும். விவசாயத் துறையின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும். விவசாயத்துக்கு தேவையான இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும். டார்ஜிலிங் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளையும் இணைப்பதற்கான "மாஸ்டர் பிளான்' செயல்படுத்தப்படும். மாநிலத்தின் நிர்வாக பணிகளில் அரசியல் ஆதிக்கம் அகற்றப்படும். பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்துக்காக திட்டங்கள் தீட்டப்படும். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment