தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக எஸ்.சிவராஜ் நிறுத்தப்பட்டுள்ளார். 55 வயதாகும் சிவராஜ் பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர். பஸ் போக்குவரத்து உள்பட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். கடந்த 14 ஆண்டுகளாக அவர் விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவரது உறவினர் சுந்தரம் ரிஷிவந்தியம் தொகுதியில் 2 தடவை எம்.எல்.ஏ. ஆக இருந்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து கடந்த 1984-ம் ஆண்டு சிவராஜ் தன் 28-வது வயதில் முதன் முதலாக ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அந்த தொகுதியில் 4 தடவை எம்.எல்.ஏ. ஆக இருந்த சிறப்பு அவருக்கு உண்டு. தற்போது அவர் 5-வது தடவையாக எம்.எல்.ஏ. ஆகும் முயற்சியுடன் களம் இறங்கி உள்ளார்.
விஜயகாந்தும், பலம் பொருந்திய காங்கிரஸ் வேட்பாளரும் மோதுவதால் ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் களம் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜிடம் பேசியபோது அவர் கூறியதாவது:-
நான் இந்த மண்ணின் மைந்தன். ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் மீண்டும் என்னை தேர்ந்து எடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளேன். விஜயகாந்த் ஒரு கட்சிக்குத் தலைவராக இருந்தாலும் கூட மீண்டும் விருத்தாசலத்தில் போட்டியிட அவருக்கு துணிச்சல் இல்லை. அங்கிருந்து நழுவி ரிஷிவந்தியம் பக்கம் வந்ததன் மூலம் அவரது பலவீனம் தெரிகிறது. ரிஷிவந்தியம் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மூலை, முடுக்குகள் பற்றிய விபரம் எல்லாம் எனக்கு தெரியும். ஒவ்வொரு பகுதியின் தேவை என்ன என்பதை நான் நன்கு அறிவேன். விஜயகாந்துக்கு இது பற்றியெல்லாம் தெரியாது.
அவர் வெளியில் இருந்து வந்து இருக்கிறார். சொந்த ஊரில் நான் போட்டியிடுவது எனக்குள்ள பெரிய பலமாகும். ரிஷிவந்தியம் தொகுதியில் எந்த ஊருக்குச் சென்றாலும் என்னைத் தெரியும். தொகுதி முழுவதும் மக்கள் என் மீது நல்ல மரியாதையும் அன்பும் வைத்து இருக்கிறார்கள். தி.மு.க., பா.மக., விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் கூட்டணி பலமும் ஆதரவும் எனக்கு உள்ளது. எனவே விஜயகாந்த்தை எதிர் கொள்வதில் நான் கவலைப்படவில்லை. மக்கள் ஆதரவுடன் அவரை எதிர் கொள்வேன்.
ரிஷிவந்தியம் தொகுதியில் பல பள்ளிகளை தரம் உயர்த்தி உள்ளேன். சாலைகளை பழுது பார்த்துள்ளேன். எனவே மக்கள் என்னை நம்புகிறார்கள். கடவுள் துணையும் இருப்பதால் நிச்சயம் விஜயகாந்தை வெல்வேன். இவ்வாறு சிவராஜ் கூறினார்.
தே.மு.தி.க.வினர் கடந்த கால ஓட்டுப்பதிவுகள் புள்ளி விபரங்களின் அடிப்படையில் விஜயகாந்த் எளிதில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின் போது சிவராஜ் 54,793 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் எல்.ஆதிநாராயணன் 46,858 ஓட்டுக்கள் பெற்று தோல்வி அடைந்தார். அப்போது களம் இறக்கப்பட்டிருந்த தே.மு.தி.க. வேட்பாளர் டி.கே.கோவிந்தன் 20,283 ஓட்டுக்கள் வாங்கி 3-வது இடத்தில் இருந்தார். 2006 தேர்தலில் அ.தி. மு.க. பெற்ற 46858 ஓட்டுக்களையும், தே.மு.தி.க. வேட்பாளர் பெற்ற 20283 ஓட்டுக்களையும் கூட்டினால் 67,141 ஓட்டுக்கள் வருகிறது. அதாவது வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் வாங்கிய 54,793 ஓட்டுக்களை விட இது 12,318 ஓட்டுக்கள் அதிகமாகும். இந்த பார்முலாபடி விஜயகாந்த் எளிதில் வெற்றி பெறுவார் என்று தே.மு. தி.க.வினர் கூறுகிறார்கள்.
மேலும் 2009-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடந்த போது ரிஷிவந்தியம் தொகுதியில் தே.மு. தி.க. வேட்பாளருக்கு 24,512 ஓட்டுக்கள் கிடைத்திருந்தது. 2006 தேர்தலுடன் ஒப்பிடுக்கையில் 2009ல் தே.மு. தி.க.வுக்கு கூடுதலாக 4 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருந்தது. எனவே ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் தங்களை அதிகம் ஆதரிப்பதாக தே.மு.தி.க.வினர் கருதுகிறார்கள்.
அ.தி.மு.க.வின் பலமான வாக்கு வங்கியும் சேர்வதால் விஜயகாந்த் வெற்றி உறுதி என்று தே.மு.தி.க.வினர் நம்பிக்கையுடன் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் இந்த கூட்டல், கழித்தல்களை நம்பாமல், சாதி ஓட்டுக்களையும், கூட்டணி பலத்தையுமே நம்புகிறார். இதனால் மற்ற தொகுதிகளை விட ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் களம் அனல் பறப்பதாக உள்ளது.
No comments:
Post a Comment