Search This Blog

Monday, June 27, 2011

ரவுடிகளுடன் தே.மு.தி.க., எம்.எல்.ஏ., கைகோர்ப்பு: சேலம் எஸ்.பி., தகவல்

தே.மு.தி.க.,வைச் சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., பார்த்திபன், ரவுடிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது உட்பட, அவரின் ஒழுங்கீன நடவடிக்கைகள் குறித்த முழு விவர அறிக்கை, அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என, சேலம் எஸ்.பி., மயில்வாகனன் தெரிவித்தார்.

மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, சொந்த கட்சியினர் வெறுப்புக்கும், விரக்திக்கும் ஆளானதால், அதே தொகுதியில் இரண்டாவது முறையாக சட்டசபைக்கு போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க.,வைச் சேர்ந்த பார்த்திபன், புதியவர் என்றாலும், தொகுதிக்கும், மக்களுக்கும் நல்லது செய்வார் என்ற எண்ணத்தில், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்காளர்கள் ஓட்டு போட்டதால், மேட்டூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.எம்.எல்.ஏ.,வாக பார்த்திபன் பதவியேற்ற பின், அவருடைய நடவடிக்கை மற்றும் ரவுடிகளுடன் கைகோர்ப்பு சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொகுதிக்கு உட்பட்ட கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல தாதா அன்புசெல்வன். இவரும், பார்த்திபனும் பால்ய நண்பர் என்பதால், இருவருக்கும் உள்ள நட்பு தற்போது மிக நெருக்கமாகி விட்டதாக, தே.மு.தி.க.,வினர் வெளிப்படையாக பேசி வருகின்றனர். இது தொடர்பாக கட்சித் தலைவர் விஜயகாந்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், பார்த்திபன், கோனூர் கிராமத்துக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தபோது, அவருடன் திறந்த ஜீப்பில், ரவுடி அன்புசெல்வன் கையசைத்துச் சென்றது, வாக்காளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.மேட்டுதானப்பட்டி கிராம மக்கள், "எம்.எல்.ஏ.,வை ஊருக்குள்ளேயே இனி அனுமதிக்கப் போவதில்லை' என, தங்களுடைய வெறுப்பை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளனர்.அதோடு, ரவுடிகள் அன்புசெல்வன், உருட்டுகுமார், பாலாஜி ஆகியோருடன் அடிக்கடி பார்த்திபன் வலம் வருவது, தொகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 4ம் தேதி கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, பார்த்திபன் படை, பரிவாரங்களுடன் சென்றுள்ளார். அப்போது, எஸ்.எஸ்.ஐ.,க்கள் தங்கவேலு, சுப்ரமணி ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். அவர்களிடம், "நான் சொல்வதை இனி நீங்கள் கேட்க வேண்டும்; எதையும் தட்டிக்கழிக்கக் கூடாது' என, தடித்த வார்த்தைகளால் மிரட்டல் விடுத்தபடி வெளியேறி உள்ளார். இது குறித்து, போலீசார், மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் தெரிவித்தனர்.

மேட்டூர் மாசிலாபாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரா, 35. இவர், கடந்த 23ம் தேதி, மேட்டூர் போலீஸ் ஸ்டேஷன் சென்றார். எம்.எல்.ஏ., பேசுவதாகக் கூறி, தன்னுடைய மொபைல் போனை, பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., ரத்தினத்திடம் கொடுத்துள்ளார். அவரிடம் பேசிய பார்த்திபன், " நான் எம்.எல்.ஏ., பேசறேன். அந்தம்மா கொடுக்கிற புகார் மீது உடனடியாக எப்.ஐ.ஆர்., போட்டு, போலீசை அனுப்பி வை' என, மிரட்டல் விடுத்துள்ளார். "புகார் கொடுத்தால் தானே நடவடிக்கை எடுப்பது' என, எஸ்.எஸ்.ஐ., ரத்தினம் கூறிய பதில் கேட்டு, ஆவேசமடைந்த பார்த்திபன், எஸ்.எஸ்.ஐ.,யை படுகேவலமாக திட்டிவிட்டு மொபைல் இணைப்பை துண்டித்து விட்டார்.

மனம் நொந்து போன எஸ்.எஸ்.ஐ., ரத்தினம், இது குறித்து இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்தார். மேலும், போலீஸ் ஸ்டேஷன் நாள் குறிப்பில் நடந்த சம்பவங்களை தெளிவாக பதிவு செய்தார். இது, எஸ்.பி.,யின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கடந்த 24ம் தேதி, ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பார்த்திபன், அங்கு, தே.மு.தி.க., பிரமுகர் கொடுத்த புகார் தொடர்பாக விசாரித்தார். பணியில் இருந்த எஸ்.ஐ., நடராஜ் என்பவரை படுகேவலமாகத் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து, மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணியில் இருந்த சக போலீசார், போலீஸ் ஸ்டேஷனை மூடி, எம்.எல்.ஏ.,வை சிறை வைத்தனர். நடந்த சம்பவம் குறித்து, போலீஸ் ஸ்டேஷன் நாள் குறிப்பில் பதிவு செய்யப்பட்டது. எஸ்.பி., மயில்வாகனன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். நடந்த சம்பவத்துக்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட எஸ்.ஐ., நடராஜ் வசம் மன்னிப்பு கேட்டதால், பிரச்னை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், போலீஸ் எஸ்.ஐ., நடராஜ் போதையில் இருப்பதாகவும், ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் கட்டப் பஞ்சாயத்து நடந்து வருவதாகவும், பார்த்திபன் பகிரங்கமாக குற்றம் சாட்டி, நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.இந்த சம்பவம், சேலம் மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் முதல், கடைநிலை போலீசார் வரை பலர், எஸ்.பி.,யை தொடர்பு கொண்டு, பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட எஸ்.பி., மயில்வாகனன் கூறியதாவது:போலீஸ் ஸ்டேஷன்களில் அத்துமீறி, தவறாக நடந்து வரும், எம்.எல்.ஏ., பார்த்திபன் குறித்து, ஸ்டேஷன் நாள் குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டவர், தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.அவர் கேவலமாக பேசியது மற்றும் மன்னிப்பு கேட்டது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, போலீஸ் ஸ்டேஷனில் கட்டப் பஞ்சாயத்து நடப்பதாகவும், சம்பந்தப்பட்ட, எஸ்.ஐ., போதையில் இருந்ததாகவும் அவதூறாக பேசுகிறார். அந்த எஸ்.ஐ.,க்கு மது அருந்தும் பழக்கம் அறவே கிடையாது. பார்த்திபனின் நடவடிக்கை மற்றும் அவருக்கு ரவுடிகளுடன் உள்ள தொடர்பு குறித்து, அரசுக்கு விவரமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு மயில்வாகனன் கூறினார்.

Wednesday, June 1, 2011

தயாநிதி வீடு-சன் டிவி அலுவலத்திற்கிடையே ரகசிய எக்ஸ்சேஞ்ச்-ரூ. 400 கோடி இழப்பு என சிபிஐ புகார்

ஏர் செல் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது மேலும் ஒரு மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல்தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, பிரத்யேக எக்ஸ்சேஞ்சையே அமைத்துள்ளார். இதில் ஒரு இணைப்பிலிருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் மொத்தமாக ரூ. 400 கோடி அளவுக்கு பிஎஸ்என்எல்லுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ கணக்கிட்டுள்ளது.

இப்படி ஒரு தனிப்பட்ட சட்டவிரோதமான எக்ஸ்சேஞ்ச் தயாநிதி மாறன் வீட்டில் இயங்கி வருவதாக முன்பே கூறப்பட்டது. ஆனால் அதை அப்போது தயாநிதி மாறன் மறுத்து விட்டார். அந்த சமயத்தில் அவருக்கும், திமுகவுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் நல்லுறவு இருந்தது. அதேபோல காங்கிரஸ் கட்சியும், திமுகவுடன் ஒட்டி உறவாடி வந்தது.இதனால் அந்தப் புகார் குறித்து விசாரிக்கப்படாமலேயே அமுக்கப்பட்டு விட்டது.

இந்த 323 இணைப்புகளையும் தனது பெயரில் இல்லாமல், பிஎஸ்என்எல் பொது மேலாளர் பெயரில் வைத்துள்ளார் தயாநிதி மாறன். தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையிலான தகவல் தொடர்புக்காகக இப்படி ஒரு குட்டி எக்ஸ்சேஞ்சையே தனது வீட்டில் நடத்தி வந்துள்ளார் தயாநிதி மாறன்.

இந்த இணைப்புகளை தயாநிதி மாறன் குடும்பத்தினர் வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த ரகசிய இணைப்புக்காக 3.4 கிலோமீட்டர் தூரத்திற்கு, அதாவது மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகத்திற்கு ரகசியமாக கேபிள்களையும் பதித்துள்ளனர். பொதுச் சாலையில் இந்த கேபிள் போகிறது. இதுவும் சட்டவிரோதமான வேலையாகும்.

ராசாவுக்கு முன்பு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சத்தம் போடாமல் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனது குடும்பச் சொத்து போல பாவித்து இப்படி விளையாடியிருக்கிறார் தயாநிதி மாறன் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு.

இதுகுறித்து விசாரித்த சிபிஐ இதுதொடர்பாக மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு 2007ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி கடிதம் எழுதியுள்ளது.

அதில் தயாநிதி மாறனின் மோசடிகளை விரிவாக விளக்கியுள்ளது சிபிஐ.

என்ன கொடுமை என்றால் தயாநிதி மாறனின் வீடு உள்ள போட் கிளப் பகுதியிலிருந்து, அண்ணா சாலை வழியாக, இந்த ரகசிய இணைப்ப கேபிள்கள் போய் முடிந்த இடம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில். அங்குதான் அப்போது சன் டிவியின் தலைமையகம் இருந்துள்ளது. எனவே இந்த மெகா மோசடி குறித்து திமுக தலைமைக்கும் தெரிந்திருக்கும் என்றே கருதப்படுகிறது.

தனது சொந்த பயன்பாட்டுக்கு என்று கூறி வாங்கிய இந்த 323 இணைப்புகளையும், அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த சன் டிவியின் நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்காக, பயன்படுத்தியுள்ளார் தயாநிதி மாறன்.

இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.

இவை அனைத்தும் சாதாரண தொலைபேசி இணைப்புகள் கிடையாது. ஐஎஸ்டிஎன் இணைப்புகளாகும். அதாவது படு விரைவாக தகவல்களைக் கொண்டு செல்லக் கூடியவை. செயற்கைக் கோள்களை விட மின்னல் வேகத்தில் தகவல்களை செலுத்தக் கூடியவை. உலகின் எந்தப் பகுதிக்கும் தகவல்களை அனுப்பினால் அவை அதி வேகமாக போய்ச்சேரக் கூடிய வகையிலான அதி நவீன இணைப்புகள்.

டிஜிடல் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் வீடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவன சானல்கள் அனைத்தும் படு பளிச்செனவும், துல்லியமான சத்தத்துடனும் செயல்பட இந்த இணைப்புகள்தான் காரணம். இப்படிப்பட்ட இணைப்புகள் தமிழில் வேறு எந்த சானலுக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தயாநிதி மாறன் புண்ணியத்தால் இப்படி ஒரு அசாத்தியமான வசதியை சன் டிவி நிறுவனம் பெற முடிந்துள்ளது.

இந்த வசதியைப் பெற வேண்டுமானால் பல கோடி ரூபாய் பணத்தை வாடகையாக சன் டிவி நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஒரு பைசா கூட செலவில்லாமல் ஓசியிலேயே எடுத்து விளையாடியிருக்கிறார்கள் சன் டிவி குடும்பத்தார், தயாநிதி மாறன் மூலமாக.

வழக்கமாக யாராவது சிலர் தொலைபேசி இணைப்புகளை தவறாகப் பயன்படுத்தினாலே பெரிய அளவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள். ரகசிய தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி வந்தவர் கைது என்று செய்திகளில் படித்திருக்கிறோம். ஆனால் தயாநிதி மாறன் நடத்தி வந்த இந்த ரகசிய இணைப்பகம் எப்படி யாராலும் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

சிபிஐ இதுகுறித்து புகார் கூறியும் கூட அதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது பெரும் ஆச்சரியமாக உள்ளது. நியாயஸ்தனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் மன்மோகன் சிங்குக்கு கூடவா இது தெரியாமல் போயிற்று என்பதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.

இந்த 323 இணைப்புகளில், 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ.

சன் டிவிக்கு மட்டுமல்லாமல் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கும் கூட இந்த இணைப்புகளை மோசடியாக பயன்படுத்தியுள்ளனர் மாறன் சகோதரர்கள். அதுகுறித்து தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

தயாநிதி மாறன் செய்ததாக கூறப்படும் இந்த பகிரங்க மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து நிச்சயமாக பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்பப்படுகிறது. அப்படி உள்ள நிலையில், ராசாவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து அவரை பதவியை விட்டே ஓட வைத்த காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு தயாநிதி மாறன் விவகாரத்தில் மட்டும் பெருத்த மெளனம் காத்தது, காப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.