Search This Blog

Monday, March 21, 2011

ம.தி.மு.க.,வுக்கு கருணாநிதி மறைமுக அழைப்பு

வருக, வருக, வரிப்புலி வரிசையே வருக' என, கவிதை நடையில் அறிக்கை விடுத்து, ம.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைமுக அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கை:தேர்தல் களம் புகுந்திட பல்வேறு கட்சிகளின் பாசறைகள், ஏறத்தாழ தயார் நிலையில் அமைக்கப்பட்டு விட்டன. எதிர் வரிசையில் நிற்கக் கூடிய அணி தேர் புரவி ஆட்பெரும் படையை உற்றுப் பார்க்கிறேன். எதிர் வரிசையில் இந்திரஜித்தனை காண முடியாத காரணத்தை உணர்ந்து கொண்டவுடன் களத்தில், அந்த யோசனைக்கு இடமளிப்பது நமது குறியை குலைத்து விடும் என்பதால் அதைப் பற்றி அதிகமாக கவலைப்படாமல், ஒரு சில நிமிடங்கள் அது பற்றிய சிந்தனையில் ஈடுபட்டேன். ஐயாயிரம் ஆண்டுக்கு மேலான வரலாறு கொண்ட திராவிட உணர்வு பட்டுப் போகாமல் காப்பாற்றி வந்த ஈ.வெ.ரா., எனும் பேருருவில் பிரிவுக்கணைகள் புகுந்து இரு இயக்கமானோம். அதில் ஒன்று அண்ணாதுரை தலைமையில் இன உணர்வு பகுத்தறிவு இயக்கமாகவும், மற்றொன்று பகுத்தறிவு கவலையின்றி, ஆனால், பண்பாடு காத்திடும் இயக்கமாக அருமை நண்பர் எம்.ஜி.ஆர்., தலைமையிலும் இயங்கிய ஏற்றமிகு நிலை கண்டு, அதன் எழிலை குறைத்திட எத்தனையோ சதிகள், சாகசங்கள் அத்தனைக்கும் ஈடு கொடுத்தோம்.

எந்த ஒரு இயக்கமும் ஜனநாயக வழித் தடத்தில், தேர்தலை சந்திக்க களம் இறங்கி விட்டால், ஜனநாயகத்தை கட்டிக் காக்க வேண்டிய பொதுமக்கள் மாத்திரமல்லாமல், அந்த பொதுமக்களிடத்திலே தமது கட்சிக்காக ஆதரவு திரட்டக் கூடிய தொண்டர்கள், தோழர்கள் அணி வகுத்து குவிந்திடுவது இயல்பே.ஓரிரு தம்பிமார்கள் எங்கெங்கோ சிதறிப் போயினர் என்றாலும், அங்கெல்லாம் அலைந்து திரிந்து அவர்களையும் ஒன்றிணைக்க அரும்பாடு பட்டவனின் கரம் தான் இந்த கரம். இந்த கரம் தழுவும் உணர்விலே கட்டுண்டு, "வாரீர் அனைவரும் ஒருங்கிணைந்து களம் காண்போம்' என்றழைக்கும் வேளை இது.

விடுபட்டோர், விரட்டப்பட்டோர், துரத்தப்பட்டோர் விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு, தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று, கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப் போல், தூய ஞானிகளைப் போல் நான் தவம் இருக்கின்றேன். படை பலம் போதாது என்பதால் அல்ல. இருக்கின்ற படை இன்னும் வலிமையாய், உறுதியாய், நிச்சயம் வாகை சூடுவதாய் அமைய வேண்டும் என்பதற்காக. இன்ப முடிவினை எல்லோரும் சேர்ந்து சுவைப்போம். வருக, வருக, வரிப்புலி வரிசையே வருக.இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments: