Search This Blog

Monday, March 28, 2011

ட்டசபை தேர்தலில் காங்., வேட்பாளரானார் தங்கபாலு: மனைவி மனு தள்ளுபடி

சென்னை, மயிலாப்பூர் தொகுதிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்தி தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவரது கையெழுத்து இல்லாத காரணத்தால், வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மாற்று வேட்பாளரான "டம்மி', தமிழக காங்கிரஸ் தலைவரும் அவரது கணவருமான தங்கபாலுவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இப்போது தங்கபாலு போட்டியிடுகிறார். வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலனை, நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி அறிவிக்கப்பட்டார். கட்சியினர் மத்தியில் ஜெயந்திக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தென்சென்னை மாவட்ட மகளிர் அணி செயலர் சிவகாமி, போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு, தேர்தல் அதிகாரி இன்னசன்ட் திவ்யா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது.

தங்கபாலு, அவரது மனைவி ஜெயந்தி, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜலட்சுமி, பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் போட்டி வேட்பாளர் சிவகாமி உட்பட 32 பேர் கலந்து கொண்டனர். ஜெயந்தியின் வேட்பு மனு பரிசீலனை செய்யும் போது அவரது மனுவில் ஜெயந்தியின் கையெழுத்து இல்லாத காரணத்தினாலும், இரண்டு முக்கிய ஆவணங்கள் இல்லாததாலும் அம்மனு நிராகரிக்கப்பட்டது. அவருக்கு மாற்று வேட்பாளரான தங்கபாலுவின் மனுவை சரிபார்த்த போது அனைத்தும் சரியாக இருந்ததால் அம்மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலு போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

தங்கபாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மயிலாப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஜெயந்தி தங்கபாலு அறிவிக்கப்பட்டார். கூட்டணிக் கட்சியினர் முன்னிலையில் தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை சரி பார்த்த தேர்தல் அதிகாரி, நான்கு மனுக்களும் சரியாக இருப்பதாகக் கூறினார். தற்போது இரண்டு மனுக்களை காணவில்லை; இரண்டு இடங்களில் வேட்பாளர் கையெழுத்து போடவில்லை என்று கூறுகிறார். மனு தாக்கல் செய்த போது சரியாக இருப்பதாகக் கூறிவிட்டு, இப்போது சரியில்லை என்று அதிகாரி கூறுவது ஏற்கக் கூடியது அல்ல. இரண்டு படிவங்கள் காணாமல் போனது குறித்து தேர்தல் அதிகாரிகள் மீது, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுப்பேன். வேட்பு மனு பரிசீலனையில் காங்கிரஸ் மாற்று வேட்பாளராக தாக்கல் செய்திருந்த என் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. என் மனைவி ஜெயந்தி மீது வழக்கு இருப்பதாக வதந்தி பரப்புகின்றனர். அதில் எந்தவித உண்மையும் கிடையாது. அவர் மீது எந்த வழக்கும் தொடரப்படவில்லை; எந்த வழக்கும் நிலுவையிலும் இல்லை. இவ்வாறு தங்கபாலு கூறினார்.

பின்னணி என்ன? மயிலாப்பூர் தொகுதியின் அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்தி தங்கபாலுவின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு, குறைபாடுகள் உள்ள வேட்பு மனுவை தங்கபாலுவும், அவரது மனைவியும் திட்டமிட்டே தாக்கல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜெயந்தி தாக்கல் செய்த வேட்பு மனு குறைபாடுகள் உள்ளதாகக் கூறி, மயிலாப்பூர் தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்துள்ளார். இதற்கு பதிலாக, ஜெயந்திக்கு, "டம்மி' வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த தங்கபாலுவின் மனுவை, தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டுள்ளார். இதன் மூலம் தங்கபாலு, மயிலாப்பூர் தொகுதியின் அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மயிலாப்பூர் தொகுதியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்பதற்காகவே, மனைவியின் வேட்பு மனுவில், உரிய ஆவணங்களை இணைக்கவில்லை என்று தங்கபாலு மீது, காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர். மனைவி பெயரில் தாக்கல் செய்துள்ள மனுவை அரைகுறையாக தாக்கல் செய்துவிட்டு, மாற்று வேட்பாளராக தன் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சரியாக தாக்கல் செய்துள்ளார். மாநில அரசியலுக்குள் நுழைய, பின் வழியை தங்கபாலு பயன்படுத்தியுள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

"சட்டசபை தேர்தலில், போட்டியிட நேரடியாக கட்சித் தலைமையிடம், "சீட்' கேட்டபோது, "மாநிலத் தலைவராக இருப்பவர் ஒரு தொகுதியில் முடங்கி விடக்கூடாது; மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டும்' எனக் கூறி நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. எனவே, அகில இந்திய தலைமையை ஏமாற்றும் வகையில் தங்கபாலு செயல்பட்டுள்ளதாக, கூட்டணிக் கட்சிகளில் சந்தேகம் எழுந்துள்ளது. காங்கிரசைப் பொறுத்தவரை, கூட்டணி ஆட்சி என்பதில் தெளிவாக உள்ளது. இது போன்ற சூழல் ஏற்படும் போது, மந்திரி சபையில் காங்கிரஸ் கட்டாயமாக பங்கேற்கும். அப்போது, தான் எம்.எல்.ஏ.,வாக இருக்க வேண்டும் என்பதற்காக, தங்கபாலு களத்தில் நுழைந்துள்ளார் என்றும் கூட்டணி கட்சியினர் சந்தேகிக்கின்றனர்.

No comments: