Search This Blog

Sunday, April 17, 2011

ஊழலுக்கு எதிராக அமைதியா? இல்லை என்கிறார் ராகுல்

நாட்டில் செல்லரித்து உளுத்துப் போன நடைமுறைகளை மாற்றுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளேன்.எனவே, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில், நான் அமைதி காப்பதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது' என, காங்., பொதுச் செயலர் ராகுல் கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர், கடந்த 9ம் தேதி, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலுக்கு கடிதம் எழுதினார்.

அதில் எழுதப்பட்டு இருந்ததாவது:நேரு குடும்பத்தை சேர்ந்த நீங்கள், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அமைதி காப்பது ஆச்சர்யமாக உள்ளது. நம் நாட்டில் ஊழல்கள் அதிகரித்து வருகின்றன. ஊழலை கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நேருவின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதன் மூலம், சமூகம், தேசப்பற்று, பிரிட்டிசாருக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். சமூக பிரச்னைகளுக்காக போராடி, ஒருநாள் கூட, நீங்கள் சிறைவாசம் அனுபவித்தது இல்லை.இவ்வாறு அந்த கடித்தில் கிருஷ்ணய்யர் எழுதியிருந்தார்.

இதற்கு தற்போது ராகுல் பதில் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:நாட்டில் செல்லரித்து உளுத்துப் போன நடைமுறைகளை மாற்றுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளேன். இதற்காக, ஏராளமான நேரத்தை செலவிடுகிறேன். எனவே, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில், நான் அமைதி காப்பதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த ஒரு விஷயத்துக்காகவும் என்னை ஹீரோவாக காட்டிக் கொள்வதில், எனக்கு உடன்பாடு இல்லை. நேருவின் சுயசரிதையை ஏற்கனவே படித்து விட்டேன். தற்போது நீங்கள் ஆலோசனை கூறியுள்ளதால், மீண்டும் ஒருமுறை படிக்கவும் திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

வருத்தம்: இதற்கிடையே, கிருஷ்ணய்யர், ராகுலுக்கு நேற்று எழுதிய கடித்தில்,"நான் எழுதிய கடிதம், உங்களை காயப்படுத்தி இருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் மிகவும் வயதானவன். மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீது உள்ள கோபத்தின் காரணமாக இவ்வாறு எழுத நேரிட்டது' என, தெரிவித்துள்ளார்.

No comments: