தமிழகத்தில் அ.தி.மு.க., வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஊழல் மிகுந்த கருணாநிதியின் குடும்ப ஆட்சி ஒழிய வேண்டும் என்று தமிழக மக்கள் நினைப்பதால், அ.தி.மு.க., நிச்சயம் வெற்றி பெறும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபை தேர்தலுக்கான, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை திருச்சியில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா நேற்று வெளியிட, மாநகர் மாவட்டச் செயலர் மனோகரன் பெற்றுக் கொண்டார். புதுச்சேரிக்கான தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட, திருச்சி புறநகர் மாவட்டச் செயலர் சுப்ரமணியன் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர், ஜெயலலிதா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை எப்படி உள்ளது?
தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு கெட்டு போய்விட்டது. அ.தி.மு.க., ஆட்சி வந்த பிறகு, தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுத்துச் சட்டம் ஒழுங்கு சீரமைக்கப்படும்.
* தி.மு.க., அரசு இலவசங்களை கொடுத்து ஏமாற்றுகிறது என்று பிரசாரம் செய்த நீங்களே, தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்துள்ளீர்களே?
தமிழகத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, அ.தி.மு.க., வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை சார்ந்து, தமிழகத்தில் அரிசி, பருத்தி, பால் உற்பத்தி பெருகும். புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். பல வளர்ச்சி திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளதால், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டு, அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். அதனடிப்படையில், தேவையான, தேவைப்படும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
* உங்களது தேர்தல் அறிக்கை தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை போலவே இருக்கிறதே?
தேர்தல் அறிக்கையை முழுமையாக படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
* இலவசங்கள் வழங்குவதற்கான நிதி ஆதாரம் இருக்கிறதா?
தி.மு.க., அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடனாக வைத்துள்ளது உண்மை தான். அதிலிருந்து மீட்டு, தமிழகத்தை மீண்டும் முன்னணி மாநிலமாக மாற்றுவோம். எங்களால் முடிந்ததைத் தான் சொல்லிருக்கிறோம். நிதி ஆதாரத்துக்கான அனைத்து வழிவகையும் செய்வோம். சொல்வதைத் தான் செய்வோம். செய்வதைத் தான் சொல்வோம்.
* தேர்தலில் பண வினியோகத்தைத் தடுக்க, தேர்தல் கமிஷன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா?
தேர்தல் கமிஷன் நடவடிக்கையை மீறி, தி.மு.க.,வினரால் பணம் எல்லா இடத்திலும் வினியோகம் செய்யப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அதைத் தடுக்க தேர்தல் கமிஷன் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* ஆண்டிப்பட்டி தொகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவது ஏன்?
ஆண்டிப்பட்டித் தொகுதி ரொம்ப தூரமாக இருக்கிறது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் அருகில் இருப்பதால் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறேன்.
* ஸ்ரீரங்கத்துக்கு ஏதாவது சிறப்புத் திட்டம் இருக்குமா?
ஸ்ரீரங்கத்துக்கு மட்டுமில்லை. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சிறப்புத் திட்டம் உள்ளது.
* அ.தி.மு.க.,வில் இருந்து ம.தி.மு.க., விலகியிருப்பது உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?
நாங்கள் எதையும் பின் நோக்கிப் பார்க்க விரும்பவில்லை. முன்நோக்கி செல்லவே விரும்புகிறோம்.
* வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஊழல் மிகுந்த கருணாநிதியின் குடும்ப ஆட்சி ஒழிய வேண்டும் என்று தமிழக மக்கள் நினைப்பதால், அ.தி.மு.க., நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு ஜெயலலிதா பதிலளித்தார்.
ஜெ., மனு தாக்கல்; "ஒர்க் அவுட்' ஆன "9' எண் சென்டிமென்ட்: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, நேற்று மனு தாக்கல் செய்தார். இதில், ஜெயலலிதாவுக்கு உகந்த, "9' எண் சென்டிமென்ட், "ஒர்க் அவுட்' ஆகியுள்ளது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். மனு தாக்கல் செய்வதற்காக நேற்று காலை விமானம் மூலம் திருச்சி வந்த ஜெயலலிதா, சங்கம் ஓட்டலில் தங்கினார். அங்கிருந்து காலை 11 மணியளவில் காரில் புறப்பட்ட அவர், திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள, ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான உதவி இயக்குனர் (நில சீர்திருத்தம்) அலுவலகத்துக்கு வந்தார். அங்கு காலை 11.03 மணியளவில், தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரனிடம் மனு தாக்கல் செய்தார். உறுதிமொழி ஏற்கப்பட்டு, ஆவணம் சரிபார்க்கப்பட்டு மனு தாக்கல் செய்யும் பணி, 11.07 மணியளவில் நிறைவடைந்தது. அங்கிருந்து புறப்பட்ட ஜெயலலிதா, மீண்டும் சங்கம் ஓட்டல் சென்றார்.
ஜெயலலிதா வருவதுக்கு முன்னதாக, அவரது மனுவை முன்மொழிந்த ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி மற்றும் வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆகியோர், மனு தாக்கல் செய்யும் இடத்தில் காத்திருந்தனர். ஜெயலலிதாவுடன், அவரது தோழி சசிகலா, திருச்சி மாநகர் மாவட்ட செயலர் மனோகரன் ஆகியோர் வந்திருந்தனர்.
"9' எண் "சென்டிமென்ட்': நேற்று முன்தினம், ஜெயலலிதாவுக்கு வேட்புமனு பெற்ற நிர்வாகிகள், அவருக்கு உகந்த கூட்டுத்தொகை எண், "9' வரும் நேரமான மதியம், 1.53க்கு மனுபெற்றனர். அதேபோல், நேற்று, "9' கூட்டுத்தொகை எண் வரும் நேரத்தில் மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 11.03 மணிக்கு மனு தாக்கல் செய்து, அனைத்து பணிகளும், 11.07 மணிக்கு முடிக்கப்பட்டது. 11.07 மணிக்கு கூட்டுத்தொகை, "9' வருவதால், அந்த சென்டிமென்டும், "ஒர்க் அவுட்' ஆனதாக கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment