Search This Blog

Tuesday, December 14, 2010

நீதித்துறை விவகாரத்தில் ராஜா தலையீடு: நீதிபதி கோகலே பதில்

நீதித்துறை விவகாரத்தில், மத்திய அமைச்சராக இருந்த ராஜா தலையிட்டது உண்மைதான் என, சுப்ரீம் கோர்ட் நீதிபதி கோகலே தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக, நீதிபதி பாலகிருஷ்ணனுக்கு அனுப்பிய கடிதத்தில் அமைச்சர் பெயர் இல்லை என்று அவர் குறிப்பிட்டதை மறுத்திருக்கிறார். நீதித்துறையில் ராஜா தலையீடு செய்தார் என்ற கருத்தை ஆதரிக்கும் வகையில், நீதிபதிகள் இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதல் வெளிப்படுத்தி உள்ளது.

வக்கீல்கள் சங்க தலைவர் சந்திரமோகன், கடந்த 2009ம் வருடம் தன் கட்சிக்காரர்களுக்கு முன் ஜாமீன் தொடர்பாக, அப்போதைய சென்னை ஐகோர்ட் நீதிபதி ரகுபதியிடம் பேசினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அமைச்சர் ராஜா, நீதிபதியுடன் பேச வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதியை, மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் கடந்த சில தினங்களுக்கு முன் பூதாகரமாக கிளம்பியதையடுத்து, வக்கீல்கள் சங்க தலைவராக இருந்த சந்திரமோகன், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே, மத்திய அமைச்சர் ராஜா தலையீடு குறித்து, அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனுக்கு, நீதிபதி ரகுபதி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த கோகலே மூலம், கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இருப்பினும், தனக்கு அப்படிப்பட்ட கடிதம் எதுவும் வரவில்லை என, முன்னாள் நீதிபதி பாலகிருஷ்ணன் மறுத்துவிட்டார்.

இந்த சூழலில், நீதிபதி ரகுபதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது உண்மைதான் என, தற்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உள்ள கோகலே தெரிவித்துள்ளார். மேலும், அந்தக் கடிதத்தை தாமே தலைமை நீதிபதிக்கு அனுப்பியதாகவும், குறிப்பாக கடிதத்தின் இரண்டாவது பத்தியில் மத்திய அமைச்சராக இருந்த ராஜாவின் பெயர் இடம் பெற்றிருந்தது என்றும், அந்தக் கடிதம் தற்போது அவரிடம் இருக்கக் கூடும் என்றும், நீதிபதி கோகலே நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்த விஷயத்தில் தனக்கு நேரடி அனுபவம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இப்பிரச்னை மீண்டும் வெளிவந்ததால் அது குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதி ரகுபதி, ""நீதித்துறையின் மதிப்பை காப்பாற்றும் விதத்தில் இந்த விவகாரத்தை பொதுப்படையாக பேச நான் விரும்பவில்லை' என்றார்.

இருப்பினும், தான் ஏற்கனவே தெரிவித்த கருத்தில் உறுதியுடன் இருப்பதாக, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை யாராவது மிரட்டியிருக்கும் பட்சத்தில், நீதிபதி என்ற முறையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அவரே நடவடிக்கை எடுத்திருக்கலாம், இதற்காக, சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியை கோர வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிபதி பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: