Search This Blog

Monday, December 20, 2010

அடுத்த 10 ஆண்டுகளுக்கு பா.ஜ., ஆட்சிக்கு வராது: சிதம்பரம்

அடுத்த 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலும் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். டில்லியில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டில் இது குறித்து அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது: பாரதிய ஜனதா கட்சி 2004 மற்றும் 2009ல் நடந்த தேர்தலில் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஒரு முறை ஆட்சியை இழந்தாலும் மறுமுறை காங்கிரசால் ஆட்சியைப் பிடிக்க முடிகிறது. அடுத்த 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலும் பாரதிய ஜனதா கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தான் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும். ஆட்சிக்கு எப்படி வர வேண்டும் என்ற வழிமுறை காங்கிரசுக்கு தெரியும். ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த பாரதிய ஜனதா அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வி கண்டுவிட்டது. இதனால், காங்கிரஸ் கட்சியைப் பார்த்து அது எரிச்சல் அடைகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி ஐந்தாண்டில் சராசரியாக 5.8 சதவீதமாக இருந்தது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி 8.5 சதவீதமாக உள்ளது. கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்காக மத்திய அரசு, மாநிலங்களுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

பல்வேறு மாநிலங்கள் நிதி பற்றாக்குறை உள்ளதாக கூறுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் அனைத்து மாநிலங்களின் நிதி நிலையை ஆராய்ந்த போது, 95 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருப்பு வைத்துள்ளன. இவ்வளவு நிதியை வைத்துக் கொண்டு நிதி இல்லை என கூற முடியுமா? நிதியில்லாமல் இல்லை. இருக்கும் நிதியை பயன்படுத்த பல மாநிலங்களுக்கு தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி அல்லது மற்ற கட்சி ஆளும் மாநிலங்களானாலும் சரி, நிதியை பயன்படுத்தும் முறையை தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து அமைச்சர்கள் தங்கள் துறை தொடர்பான செயல்பாடுகளை மூன்று மாதத்துக்கு ஒரு முறை பிரதமரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதே போல, மத்திய அரசின் ஆறு மாத செயல்பாடுகளை காங்கிரஸ் தலைவர் சோனியா ஆராய வேண்டும். இவ்வாறு சிதம்பரம் பேசினார்.

No comments: