Search This Blog

Sunday, December 19, 2010

சோனியா, ராகுல் ஆசியோடு பேசுகிறேன்: திக்விஜய் சிங்

மகாராஷ்டிரத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டமாநில போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேவுக்கு ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை கைவிடவில்லை என்ற திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலர் ராகுல் ஆகியோரின் ஆசியோடுதான் இதைப் பேசுகிறேன் என்று மீண்டும் வலியுறுத்தினார்.
நான் வேண்டுமென்றோ, பொருத்தம் இல்லாமலோ இந்தக் குற்றச்சாட்டைக் கூறவில்லை, என்னுடைய மனசாட்சிக்குத் தெரிந்த உண்மையைத்தான் கூறுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சில இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்தது குறித்து ஹேமந்த் கர்கரே புலனாய்வு செய்தார் என்பதாலும் அவருடைய விசாரணையின் விளைவாக சில தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பதாலும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவர் மீது பகைமை பாராட்டினர் என்று அவர் விவரித்தார்.
இத்தகைய குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக பிரக்யா தாக்கூர் என்ற பெண் சாதுவைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தபோது, அத்வானி போன்ற மூத்த தலைவர் ஏன் அவரைச் சிறைக் கொட்டடியிலேயே சென்று பார்த்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
உங்களுடைய இந்த கருத்து குறித்து சோனியா, ராகுல் ஆகியோர் உங்களிடம் ஏதேனும் கேட்டார்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, நான் பேசியதற்கு அவர்களுடைய ஆசி உண்டு என்று பதில் அளித்தார் திக்விஜய் சிங்.
மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான திக்விஜய் சிங் இப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: