Search This Blog

Tuesday, December 28, 2010

விலைவாசி உயர்வு மிகப்பெரிய சவால்: காங்கிரஸ் கட்சி ஒப்புதல்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு, விலைவாசி உயர்வு மிகப் பெரிய சவாலாக விளங்குவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப் பெரிய மற்றும் பழமையான கட்சியான, காங்கிரஸ் 125ம் ஆண்டை நிறைவு செய்து, 126ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. 2ஜி ஸ்பெக்டரம், காமன்வெல்த் விளையாட்டு போட்டி மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள், காங்கிரசுக்கு எதிராக புகார் எழுப்பி வருகின்றன. இதன் காரணமாக, பார்லிமென்ட் குளிர் காலக் கூட்டத்தொடர் முழுவதையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த ஆதர்ஷ் குடியிருப்பில் முறைகேடு அக்கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. ஆந்திராவில், முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைந்தது முதல், அங்கு காங்கிரஸ் கட்சி பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல், பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று இளைஞர் காங்கிரசை வலுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தாலும் அதிக பலன் காணோம். மேலும், இந்து பயங்கரவாதம் குறித்து ராகுல் பேசியதாக, விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியதால், காங்கிரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நெருக்கடிகளையெல்லாம், கட்சித் தலைவர் சோனியா சமாளித்து, நான்காம் முறையாக, தலைவர் பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் 126ம் ஆண்டு துவக்க விழா நேற்று காலை டில்லியில் உள்ள, கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், "காங்கிரஸ் கட்சியும் இந்திய தேசிய வளர்ச்சியும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை பிரதமர் மன்மோகன் சிங் உறுதியாகவும், அமைதியாகவும் நிர்வகித்துச் செல்கிறார். நாட்டு மக்களுக்குத் தேவையான பல்வேறு திட்டங்களை அரசு தீட்டி வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சிக்கும் பொறுப்பு கூடுதலாக உள்ளது. இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் வலுவடைந்து வருவதாக, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாதிகளும், நக்சலைட்டுகளும் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். பொருளாதார வளர்ச்சியில் ஜாம்பவனாக திகழும் சீனாவுடன் இணைந்து செயல் பட இந்தியா தயாராக உள்ளது. கடந்த 2004 ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தல் வெற்றிக்குப் பின்னர், தன்னைத் தேடி வந்த பிரதமர் பதவியை உதறிவிட்டு, தன்னலமற்ற அரசியல்வாதிக்கு உதாரணமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா விளங்குகிறார். தற்போது, நாட்டில் காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களின் விலை உயர்வு மத்திய அரசுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. சென்ற தேர்தலில் காங்கிரசுக்கு 206 சீட் வெற்றி கிடைத்தது மாநிலக் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட வளர்ச்சித் தடையாகும். இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments: