Search This Blog

Sunday, December 19, 2010

காங்கிரஸ் தலைவர் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக நீட்டிப்பு

புது தில்லி, டிச. 19: காங்கிரஸ் கட்சித் தலைவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதவிக் காலம் 3 ஆண்டுகளாக இருந்தது.
இதற்காக காங்கிரஸ் கட்சியின் விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தில்லியில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில் இந்த பதவி நீட்டிப்பு குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தை மூத்த காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் கொண்டு வந்தார். பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி, பொதுச் செயலாளர் ராகுல்காந்தி, கட்சியின் பிற தலைவர்கள் அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டனர்.
இதே போன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை ஆண்டுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்ற புதிய தீர்மானமும் மாநாட்டில் கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்னர் ஆண்டுக்கு இரண்டு முறைக்கு குறையாமல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கட்சி விதி இருந்தது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பின் நடைபெறும் முதல் காங்கிரஸ் மாநாடு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டின் மிகவும் பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 125 ஆண்டுகள் ஆகின்றன. இது அக்கட்சியின் 83-வது மாநாடு. மாநாட்டில் சமீபத்தில் மரணமடைந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் தலைவர் சிலரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநாட்டின் முக்கியத்துவம்:முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் போட்டி ஆகிய முறைகேடு குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, ராகுலின் காவி பயங்கரவாதப் பேச்சு, பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் படுதோல்வி ஆகியவற்றாலும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது தவிர விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் காங்கிரஸின் கூட்டணி வியூகம் மாறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளாலும் மாநாடு மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

No comments: