Search This Blog

Sunday, December 19, 2010

தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தத் தயார்: சோனியா

காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதிகள், நக்சலைட்டுகளுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெறும் 83-வது காங்கிரஸ் மாநாட்டில் இது குறித்து அவர் மேலும் பேசியது:
இந்தியாவில் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து பல தீவிரவாத அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவர்கள் கூறும் பிரச்னைகள் அனைத்துக்கும் அரசியல் ரீதியாக தீர்வு ஏற்பட்டு அப்பகுதிகளில் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்றே மத்திய அரசு விரும்புகிறது.
இதற்காக தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்த மத்திய அரசு இப்போதும் தயாராவே உள்ளது. அவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வுகாண முன்வர வேண்டும். இதற்காக மத்தியஸ்தர்கள் குழுவையும் அமைத்துள்ளோம்.
ஜம்மு - காஷ்மீர் உள்பட எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் தொடர்ந்து பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களை உரிய வகையில் மத்திய அரசு எதிர்கொண்டு வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடரும்.
ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத நக்ஸலைட்கள், பல மாநிலங்களில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களில் இவர்கள் அமைதியைச் சீர்குலைத்து வருகின்றனர். இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடரும்.
எனினும் பேச்சு நடத்துவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக தடைபட்டு விடவில்லை. பிரச்னை உள்ள இடங்களில் பேச்சு நடத்த முன்வருபவர்களை எப்போதும் ஏற்றுக்கொள்வோம்.
நக்சல்கள் ஆதிக்கமுள்ள பகுதியில் இருக்கும் மலைவாழ் மக்களின் நலனில் கூடுதல் அக்கறை காட்டுவதன் மூலம் அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த முடியும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
ஜம்மு -காஷ்மீரில் உள்ள இளைய தலைமுறையினர் போராட்டத்தையும், வன்முறையையும் தவிர வேறு எதையும் பார்த்தது இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி விடக் கூடாது. அதே நேரத்தில் அங்கு ராணுவத்தினரும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் என்பதையும் மறுத்துவிட முடியாது என்றார் சோனியா.
பயங்கரவாதத்தில் வேறுபாடு இல்லை: சிறுபான்மையினரது இயக்கம், பெரும்பான்மை மக்களின் இயக்கம் என்றெல்லாம் வேறுபாடு பார்த்து மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது இல்லை. பயங்கரவாதம் என்பது நாட்டுக்கு அபாயகரமானது இதனை சிறுபான்மையினம், பெரும்பான்மையினம் என காங்கிரஸ் கட்சி பிரித்துப் பார்க்கவில்லை.
பயங்கரவாதம் எந்த விதத்தில் தலையெடுத்தாலும் அது ஒழிக்கப்பட வேண்டும். மதத்தைக் காரணமாகக் கூறி பயங்கரவாதத்தில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
நமது எல்லைக்கு அப்பால் இருந்து செயல்படும் பல அமைப்புகள், இங்கு பயங்கரவாதச் செயல்களைத் தூண்டிவிடுகின்றன.
நமக்குள் பிரிவினையை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியாக நமது நாட்டை பலவீனமாக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம் என்று சோனியா காந்தி பேசினார்.

No comments: