ஊழலை நாட்டில் இருந்து ஒழிப்போம் என்று காங்கிரஸ் மாநாட்டில் சோனியா காந்தி உறுதிபடத் தெரிவித்தார்.
தில்லியில் இருந்து ஹரியாணா செல்லும் வழியில் உள்ள புராரி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள், கட்சியின் முக்கியத் தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் சோனியா காந்தி பேசியது: ஊழல் நடைபெறுவதையும், ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் துணைபோகின்றவர்களையோ காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. கட்சிக்கும், ஆட்சிக்கும் இது பொருந்தும். எளிமை, கட்டுப்பாடு, நேர்மை ஆகியவற்றை நமது கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
எனவே நமக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழும்பாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். ஊழலை ஒழிக்க இன்னும் கடும் நடவடிக்கைகள் எடுக்க புதிய வழிமுறைகளைக் கையாள முயற்சிகள் எடுக்கப்படும். ஊழலை ஒழிக்க காங்கிரஸ் பாடுபடும். ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஊழல் விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் பதவி விலகினார்கள். ஆனால் பாஜக அவ்வாறு நடந்து கொண்டதா?
கர்நாடகத்தில் ஊழலில் ஈடுபட்டவரைத்தான் பாஜகவினர் இன்னும் முதல்வர் பதவியில் வைத்துள்ளனர் என்றார் சோனியா காந்தி.
மன்மோகன் சிங் நேர்மையானவர்: தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மன்மோகன் சிங் குறித்து பாஜகவினர் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நேர்மைக்குக்கும், திறமையான நிர்வாகத்துக்கும் உதாரணமாகத் திகழும் அவரை குறை கூறுவது இழிவான செயல். அவரது திறமையின் மூலம்தான் இந்தியா பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியா பல்வேறு துறைகளில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதற்கு பிரதமர் மன்மோகன் சிங்கின் திறமையே காரணம் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற முடக்கம் நியாயமில்லை: தொடர்ந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வைத்து பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடேக்கியதைக் கண்டித்து சோனியா பேசினார்.
ஆனால் எதிர்க்கட்சியினர் அரசியல் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் செய்துவிட்டனர் என்று சோனியா காந்தி குற்றம்சாட்டினர்.
No comments:
Post a Comment