Search This Blog

Thursday, December 16, 2010

இந்தியாவின் வளர்ச்சி நம்பிக்கை தருகிறது : சீன பிரதமர் வென்ஜியாபோ மகிழ்ச்சி

சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு, இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவின் இந்த எழுச்சி, சீனா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்து வரும் மற்ற நாடுகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது' என, சீனப் பிரதமர் வென்ஜியாபோ கூறினார்.

சீனப் பிரதமர் வென்ஜியாபோ, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று அவர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தினார். இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாகவோ, தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவோ, சீனா தரப்பில் எந்த கருத்தும் இடம் பெறவில்லை. அதே நேரத்தில், லஷ்கர் உள்ளிட்ட அமைப்புகள், பயங்கரவாத அமைப்புகளின் ஏஜன்டுகளாக செயல்படுகின்றன என்ற ஐ.நா., தீர்மானத்தின் கருத்துக்கள் பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைதி பேச்சுவார்த்தை மூலம், எல்லை பிரச்னை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்றும், பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பான நடவடிக்கைளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்றும், அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு பிரதமர்களுக்கு இடையே "ஹாட்லைன்' தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்துவது என்றும், முக்கிய தகவல்களை இரு நாட்டு பிரதமர்களும் பகிர்ந்து கொள்வது என்றும், பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பரஸ்பரம் சுற்றுப்பயணம் செய்து, உறவை பலப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே, கலாசாரம், மீடியா, பசுமை தொழில்நுட்பம், வங்கி உள்ளிட்ட துறைகளில் ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. குறிப்பாக, வங்கி துறையில், இந்திய ரிசர்வ் வங்கிக்கும், சீனா வங்கி ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், "இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையேயான உறவு, ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சீனாவின் வளர்ச்சியில் இந்தியாவுக்கும், இந்தியாவின் வளர்ச்சியில் சீனாவுக்கும் பங்கு உண்டு. ஆசிய பிராந்தியத்தின் பொதுவான வளர்ச்சிக்காக இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படும். இந்தியா மற்றும் சீனாவின் மக்கள் தொகை 250 கோடி. இந்த 250 கோடி மக்களும் ஒரே குரலில் பிரச்னைகளை பேசும் போது, அதை உலக நாடுகள் கூர்ந்து கவனிக்கின்றன' என்றார்.

சீனப் பிரதமர் வென்ஜியாபோ பேசியதாவது: சமீபகாலமாக பல்வேறு துறைகளிலும் இந்தியா அபார வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தியாவின் இந்த எழுச்சி, சீனா உள்ளிட்ட பல வளரும் நாடுகளுக்கு பெரியளவில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை சீனா உணர்ந்துள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும், வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதும் சீனாவின் கருத்து. சர்வதேச விவகாரத்தில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும். அதற்கு சீனா ஆதரவு அளிக்கும். இந்தியா உடனான ஒத்துழைப்பையும், உறவையும் பலப்படுத்துவதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். இவ்வாறு வென்ஜியாபோ கூறினார்.

இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் கூறுகையில், "சீனப் பிரதமர் சில முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை தெரிவித்துள்ளார். பிரம்மபுத்திரா ஆற்றில் கட்டப்படும் அணையால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றும், காஷ்மீர் மாநிலத்தவருக்கு வழங்கப்படும் தனி விசா தொடர்பாக, இரு நாட்டு அதிகாரிகளும் விரிவான ஆலோசனை நடத்தி தீர்வு காண்பர் என்றும் அவர் கூறியுள்ளார்' என்றார்.

திபெத்தியர்கள் கைது: பிரதமர் மன்மோகன் சிங் - சீன பிரதமர் வென்ஜியாபோ சந்திப்பு, டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடந்தது. அப்போது அங்கு போராட்டம் நடத்த வந்த திபெத்தியர்கள் நான்கு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போராட்டக்காரர் ஒருவர் கூறுகையில், "எல்லை பிரச்னை குறித்து பேச்சு நடத்துவதற்கு வென்ஜியாபோவிற்கு எந்த உரிமையும் இல்லை. ஏனென்றால், இந்தியாவுடன் சீனாவுக்கு எல்லை என்பதே இல்லை. இந்தியாவுக்கும், திபெத்துக்கும் இடையே தான் எல்லை உள்ளது' என்றார்.

No comments: