Search This Blog

Sunday, December 26, 2010

ஆந்திராவில் ஜெகனின் "வெடி'க்கு காங்கிரஸ் உடையுமா?

ஆந்திராவில், கடப்பா தொகுதி முன்னாள் எம்.பி.,யும், ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டி, காங்கிரசுக்கு எதிராக மேற்கொண்டுள்ள எதிர்ப்பு பிரசாரம், மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி அமைச்சரவையில் தாக்கத்தை ஏற்படுத்துமா, புதிய கட்சி துவக்கினால், தற்போது ஆதரவு தெரிவிக்கும் 21 எம்.எல்.ஏ.,க்கள், ஜெகன் பக்கம் வருவார்களா என்ற கேள்வி, அரசியல் பார்வையாளர்களின் மனதில் எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், ஆந்திராவின் மையப் பகுதியான விஜயவாடாவின் கிருஷ்ணா நதிக்கரையில், விவசாயிகளுக்கு ஆதரவு குரல் கொடுக்க, 48 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார் ஜெகன் மோகன் ரெட்டி. தனக்கு ஆதரவாக கூடியிருந்த லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே அப்போது உரை நிகழ்த்தினார். அவரது அனல் பறக்கும் பேச்சின் போது, அகில இந்திய காங்கிரஸ் தலைமை, மாநிலத்தை ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிரான கருத்துக்களை அள்ளி வீசினார்.

தன் தந்தை ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலத்தை பொற்காலமாக புகழ்ந்து பேசிய அவர், தன்னை ஆந்திர மக்களின் எதிர்கால (முதல்வராக) தலைவராக அடையாளம் காட்டும் விதமாக ஆவேச முழக்கமிட்டார். "மூன்றரை ஆண்டு காத்திருங்கள்; பின்னர் நீண்ட காலம் ஆட்சி ஆளும் பொற்காலம் மலரும்' என, மறைமுகமாக, அடுத்த முதல்வராக நினைத்துக் கொண்டு, தன் புதிய அரசியல் கட்சி அறிவிப்புக்கு ஒரு அச்சாரமாக உண்ணாவிரதத்தை பயன்படுத்திக் கொண்டார். ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி ஆட்சியின்போது, அவரது ஆதரவால் வெற்றி பெற்று, அவருக்கு விசுவாசமாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் 21 பேரும், நான்கு எம்.எல்.சி.,க் களும், இரண்டு எம்.பி.,க்களும் உண்ணாவிரதம் இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ஜெகன் மோகன் ரெட்டி புதுக்கட்சி துவக்கினால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், கட்சியில் பதவி பொறுப்பு கிடைக்கும் என, நம்பப்படுகிறது.

அதனால், நடிகை ரோஜா உட்பட, தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சிலரும், ஜெகனின் உண்ணாவிரத மேடையில் தோன்றி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். புதுக்கட்சி துவக்கினால் எத்தனை எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் தனக்கு பின் அணிவகுப்பார்கள், முன்னர் ரோசய்யாவிற்கு ஆதரவு காட்டியவர்கள், இப்போது, முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கும் ஆதரவளிப்பார்களா அல்லது பதவி பறிபோனாலும் போகட்டும் என காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவார்களா என்ற தன் அரசியல் வியூகத்தை பகிரங்கமாக அறியவே, ஜெகன் மோகன் ரெட்டி, விவசாயிகளுக்கு ஆதரவு என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார் என, ஆளும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் விமர்சித்துள்ளனர். ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பின், ஆந்திராவில் முதல்வர் பதவியை எதிர்பார்த்த ஜெகன்மோகன் ரெட்டி, அந்த பதவி எட்டாக் கனியாகி விட்டதால், தன் மீடியா (சாக்ஷி தினசரி சேனல்) பிரசாரம் மற்றும் தன் பார்வையில் உள்ள பல்வேறு வகையான தொழில்களின் பங்குதாரர் என்ற பணபலத்தின் வாயிலாகவும், முதல்வராக இருந்த ரோசய்யா, பதவியை ராஜினாமா செய்து வீடு திரும்பும் வரை தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார்.

இனியும் ஜெகனின் ருத்ர தாண்டவம் தொடரக் கூடாது என்பதற்காகவே, கிரண் குமார் ரெட்டியை முதல்வராக காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது. தற்போது சட்டசபையில் காங்கிரசின் பலம் 155 ஆக உள்ளது. தெலுங்கு தேசம் கட்சிக்கு 98 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியில், 18 பேர் மற்றும் டி.ஆர்.எஸ்., கட்சிக்கு 11 பேர் உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் மதில்மேல் பூனையாக, 21 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஜெகன் புதிய கட்சி ஆரம்பித்தால், அவர்கள் அவர் பக்கம் சாய வாய்ப்பு உள்ளது. அப்படி சாய்ந்தால், அவர்களுக்கு எதிராக கட்சித் தாவல் தடைச் சட்டப்படி நடவடிக்கை பாயலாம். அப்படி எடுக்கும்போது, கிரண்குமார் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்படலாம். அதனால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அவசரப் பட்டு எந்த முடிவையும் எடுக்காது என, நம்பப்படுகிறது. ஜெகன் புதிய கட்சி துவக்கட்டும், அதன் பிறகு பார்க்கலாம் என்ற நினைப்பில் உள்ளது. ஜெகனின் அடுத்த (புதிய கட்சி) வெடிக்கு, ஆளும் காங்கிரஸ் உடையுமா அல்லது தற்போதைய நிலை தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments: