Search This Blog

Thursday, December 30, 2010

2010ல் தமிழ்நாடு-முக்கிய நிழ்வுகள்..

ஜனவரி

3 - அரசுப் பேருந்துகளில் டிரைவர்கள் செல்போன் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது.

6- சென்னை காமராஜர் சாலையில், சாலையைக் கடக்க முயன்ற கல்லூரி மாணவி மீது முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக எம்.பியுமான கனிமொழி வந்த கார் மோதியது. இதில் அந்த மாணவி லேசான காயமடைந்தார்.

7 - நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், ஆள் மாறாட்டத்தில், ஆம்பூர் அருகே சரமாரியாக வெட்டியும், வெடிகுண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டார். உயிருக்குத் துடித்த அவரை மீட்காமல் அமைச்சர்கள் வேடிக்கை பார்த்ததாக பெரும் சர்ச்சை கிளம்பியது.

- நான் முன்பை விட பாதுகாப்பான இடத்தில் இருக்கிறேன் என்று தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவை குற்றம் சாட்டியும், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டியும் பேசினார் எஸ்.வி.சேகர்.

8- பட்டப்பகலில் ஒரு சப் இன்ஸ்பெக்டரை கொலைக் கும்பல் வெடிகுண்டுகளை வீசியும், அரிவாள்களால் வெட்டியும் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வெடிகுண்டுக் கலாச்சாரத்துக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்து ஒடுக்க வேண்டும் என்று சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன் கூறினார்.

- தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் (டிஜிபி) கே.பி.ஜெயின் நீண்ட விடுமுறையில் சென்றார். இதையடுத்து புதிய டிஜிபியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டார்.

9 - தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்விமுறையைக் கொண்டு வருவது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

10 - மூட்டு வலி காரணமாக நடிகை மனோரமாவுக்கு இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

11 - புனித ஜார்ஜ் கோட்டியில் தமிழக சட்டசபையின் கடைசிக் கூட்டம் நடந்தது.

19 - நடிகர்கள் வடிவேலு, சூர்யா உள்ளிட்ட திரையுலகினரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது.

பிப்ரவரி

2 - மலையாளம் மற்றும் தமிழில் பிரபலமான நடிகர் கொச்சின் ஹனீபா எனப்படும் வி.எம்.சி. ஹனீபா உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் மரணமடைந்தார்.

- தன்னுடன் நடித்த சில நடிகர்கள் தன்னிடம் ரூ. 7 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து நடிகர் வடிவேலு புகார் கொடுத்தார்.

5 -கோவில்பட்டி அதிமுக எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரும், தென் மண்டல திமுக அமைப்பாளருமான மு.க.அழகிரியை சந்தித்தார். இதையடுத்து அவரது கட்சிப் பதவியைப் பறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

- தமிழ்ப் பெண்கள் குறித்து மலையாள டிவியில் நடிகர் ஜெயராம் பேசியது பெரும் சர்ச்சையானது. அவரது வீட்டை சிலர் தாக்கி தீவைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நான் பேசியது ஏதோ ஒருவகையில் தமிழ் உள்ளங்களை, முக்கியமாக, தமிழ் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் என் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி மன்னிப்பு கூறுகிறேன் என்று கேட்டுக் கொண்டார் ஜெயராம்.

- காசோலை மோசடி வழக்கில் பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலத்துக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பித்தது கரூர் நீதிமன்றம்.

- தனது காதல் கணவரை ஆவி அமுதா கைப்பற்றி வைத்துக் கொண்டுள்ளதாக புகார் கூறினார் நடிகை கனகா.

6- சேலத்தை தலைமையிடமாகக் கொண்ட கேபிஎன் டிராவல்ஸ் அதிபர் நடராஜனின் வீடு, அலுவலகங்கள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்ட் நடத்தினர்.

- நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் வரவேண்டும் என்று திரையுலக அமைப்பினர் நடிகர்களை மிரட்டுகிறார்கள். இது நியாயமா என்று முதல்வர் கருணாநிதிக்கு நடந்த திரையுலக பாராட்டு விழாவில் முதல்வர் முன்னிலையில் குமுறினார் நடிகர் அஜீத்குமார். அவரது பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார்.

7 - சென்னை அருகே பனையூர் பகுதியில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டியன். இவருடன் இருந்த கூட்டாளி கூடுவாஞ்சேரி வேலுவும் போலீஸின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானான்.

8 - சென்னை கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டு வரும் அண்ணா நூலகத்திற்கு முதல்வர் கருணாநிதி தம்மிடம் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான அரிய நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்.

11 -: சங்கரராமன் கொலை வழக்கில் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது மேலும் 7 பேர் பிறழ் சாட்சியாக மாறினர்.

12 - நடிகர் வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் 2 வழக்குகளில் சிக்கியுள்ள நடிகர் சிங்கமுத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்தது.

13 - கரும்பு விவசாயிகள் சிந்தி வரும் ரத்தக் கண்ணீருக்கு கருணாநிதி பதில சொல்லியே ஆக வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த அதி்முக கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.

14- ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

- கரும்பு விவசாயிகள் தொடர்பாக விழுப்புரத்தில் நடந்த போராட்டத்தின்போது பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டியிருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதற்காக அவருக்கு அகில உலகப் புளுகு ராணி என்ற பட்டமே கொடுக்கலாம் என்று கூறினார் முதல்வர் கருணாநிதி.

- வாக்குப் பதிவு எந்திரத்தி்ல் முறைகேடு செய்ய முடியாது என்பதை வெளிநாட்டு நிபுணர்கள் முன்பு தேர்தல் ஆணையம் நிரூபிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

21 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.ஆர். வரதராஜன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

மார்ச்

3 - கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை முதல்வர் கருணாநிதி திருச்சியில் தொடங்கி வைத்தார்.

4 - நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்க கோலத்தில் சாமியார் நித்தியானந்தா குஜாலாக இருந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

13 - தமிழகத்தின் புதிய சட்டசபைக் கட்டடத்தை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

19 - தமிழக புதிய சட்டசபைக் கட்டடத்தில் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார்.

21 - தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காலாவதி மருந்து வழக்கில் 7 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

26 - காஞ்சிபுரம் அருகே நடந்த என்கவுன்டரில் ரவுடி நடராஜன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

30 - பென்னாகரம் தொகுதியில் நடந்த சட்டசபை இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. பாமக இரண்டாவது இடத்தையும், அதிமுக 3வது இடத்தையும் பெற்றன.

ஏப்ரல்

6 - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

12 - தமிழகத்தில் மீண்டும் மேல்சபையைக் கொண்டு வருவது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

20 - வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினியின் அறையிலிருந்து செல்போன்கள் சிக்கியதாக சிறை அதிகாரிகள் அறிவித்தனர்.

28 - நடிகை குஷ்பு மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். தற்போது பெரும் ஊழல் புகார்களில் சிக்கியுள்ள முன்னாள் தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச்தான் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

30 - ரவுடி சின்னாவும் அவரது வக்கீல் பகவத் சிங் என்பவரும் பூந்தமல்லி கோர்ட் வளாகத்தில் ரவுடிக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

மே

1- பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த எஸ்.ஏ. ராஜாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

- சேலம் மாநகராட்சி மேயர் ரேகா பிரியதர்ஷினி சாலை விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

3 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் பாதுகாப்பு கருதித்தான், அரசின் அரவணைப்பில் அந்த அம்மையார் நாங்கள் குறிப்பிடுகிற மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அரசு செலவில் அவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

5 - தமிழக சட்ட மேலவைக்கான மசோதாவை சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார்.

- துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்- துர்கா தம்பதியினரின் மகள் செந்தாமரைக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.

- திமுகவிலிருந்து பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் கட்சிக்குத் திரும்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.

6 - யூனிகோட் தமிழ் எழுத்துருவை பொதுவான எழுத்துருவாக அங்கீகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சட்டசபையில் அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.

- தமிழகத்தில் செயல்பட்டு வரும் ராகுல் காந்தி பேரவை, பிரியங்கா காந்தி பேரவைகள் கலைக்கப்படுவதாக தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறினார்.

- கஞ்சா வழக்கில் விடுதலையான தன்னிடம் கைப்பற்றிய பணத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இதுவரை பணத்தை ஒப்படைக்கவில்லை என்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலம் பெண் செரீனா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

7 - நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதாக அதன் தலைவர் சீமான் அறிவித்தார்.

- கேரள மாநிலம் கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அனைவரும் ஆஸ்திரேலியா செல்லக் காத்திருந்தபோது பிடிபட்டனர்.

- தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்தது.

10 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நிபந்தனையுடன் தமிழகத்தில் சிகிச்சை பெறலாம் என மத்திய அரசு அறிவித்தது.

14 - தன் மீதான அனைத்து வழக்குகளும் தள்ளுபடியான சூட்டோடு நடிகை குஷ்பு திமுகவில் போய்ச் சேர்ந்து கொண்டார்.

16 - பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் மரணமடைந்தார்.

19 - லைலா புயலால் தமிழகத்தில் பெரும் மழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டது.

30 - மீண்டும் பாமகவை கூட்டணியில் சேர்க்கத் தயார் என்று திமுக உயர் நிலை செயல் திட்டக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதேசமயம், சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னரே பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தரப்படும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை பாமக இதுவரை ஏற்கவில்லை.

ஜூன்

2- தனது கோபாலபுரம் வீட்டை தனது மறைவுக்குப் பின்னர் இலவச மருத்துவமனையாக மாற்றுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதுதொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு வீட்டைத் தானமாகவும் அளித்தார்.

8- 8ம் வகுப்பு வரை யாரையும் பெயிலாக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

10- தமிழகத்தில் ராஜ்யசபாவுக்கு நடந்த தேர்தலில் 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

11 - தமிழகம் முழுவதும் நடந்த அதிரடி வேட்டையில் 170 போலி மருத்துவர்கள் சிக்கினர்.

21 - சென்னை உயர்நீதிமன்றம், மதுரை பெஞ்ச் ஆகியவற்றில் தமிழில் வாதாடத் தடையில்லை என்று தலைமை நீதிபதி இக்பால் அறிவித்தார்.

23 - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் பிரமாண்ட பேரணியுடன் தொடங்கியது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைத்துப் பேரணியைப் பார்வையிட்டார்.

26 - பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏவும், சட்டசபை காங்கிரஸ் தலைவருமான சுதர்சனம் கோவையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

27 - கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோலாகலமாக முடிவடைந்தது.

ஜூலை

13 - அதிமுகவுக்கு புத்துயிர் அளித்த கோவை கண்டனக் கூட்டம் இன்று நடந்தது. ஜெயலலிதா கலந்து கொண்ட இக்கூட்டத்தில் லட்சக்கணக்கில் கூடிய கூட்டத்தால் கோவையே திணறியது.

14 - பல மாநிலங்களில் மோசடியாக ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தி வந்த ஜேபிஜே குழுமத் தலைவர் தேவதாஸ் கைது செய்யப்பட்டார்.

17 - இலங்கைக் கடற்படையைக் கண்டித்தும், எச்சரித்தும் சென்னைக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் தலைவர் சீமான், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

21 - சென்னையில் ஆதித்யா என்ற சிறுவன் அவனது தந்தை ஜெயக்குமாரின் கள்ளக்காதலியான பூவரசியால் கடத்திக் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைத்து நாகப்பட்டனம் பஸ் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செயல் தமிழகத்தை அதிர வைத்தது.

24 - மதுரையைச் சேர்ந்த பாத்திமா என்பவரின் ஒன்றரை வயதுக் குழந்தை காதர் யூசுப்பைக் கடத்தி நரபலி கொடுத்து ரத்தத்தைக் குடித்ததாக அப்துல் கபூர் மற்றும் அவரது மனைவி ரமலா பீவி ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.

27 - திரைப்படத் தயாரிப்பாளரிடம் ரூ. 25,000 லஞ்சம் வாங்கியதாக திரைப்படத் தணிக்கை அதிகாரி ராஜசேகர் கைது செய்யப்பட்டார்.

- புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக குரேஷி நியமிக்கப்பட்டார்.

28 - ஐடிஐ வினாத்தாள் வெளியானதால், தமிழகம் முழுவதும் ஐடிஐ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

- ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து நளினி, முருகன் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

30 - தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பிரவீன் குமார் நியமிக்கப்பட்டார்.

- தமிழகத்திலும், புதுவையிலும் மாநிலக் கட்சி அந்தஸ்தை மதிமுக இழந்தது. புதுவையில் மாநிலக் கட்சி அந்தஸ்தை பாமக இழந்தது.

- ஆலடி அருணா கொலை வழக்கிலிருந்து எஸ்.ஆர்.ராஜாவை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

31 - சென்னைக் கடல் நீர் குடிநீராக்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

ஆகஸ்ட்

13 - சேலத்தில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

20- தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் குண்டு பல்புகளைப் பயன்படுத்த அரசு தடை விதித்தது.

30- தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

செப்டம்பர்

2- ஜாதி குறித்து தவறான தகவலைக் கொடுத்ததாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கருக்கு தமிழக அரசு மீண்டும் பணி வழங்கியது.

10 - தமிழக அரசின் சமச்சீர் க்ல்வித் திட்டம் சரியானதே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

12 - தமிழகத்தில் 15 ஆய்வகங்களில் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை செய்யலாம் என அரசு அறிவித்தது.

- பிரபல பின்னணிப் பாடகி சொர்ணலதா சென்னையில் மரணமடைந்தார்.

- தமிழகத்தில் பந்த் நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

14 - நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி தனியார் பள்ளிகளுக்கு விதித்த கட்டண நிர்ணயத்தை நடப்பு கல்வி ஆண்டில் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

- அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி 13 கைதகிளை விடுதலை செய்ய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

- தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

- இன்டர்நெட் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது, பதிவு மூப்பை புதுப்பிப்பது ஆகியவற்றை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

- சென்னையில் ரூ. 165 கோடியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

19 - சென்னையில் நடந்த டேவிஸ் கோப்பைப் போட்டியில், பிரேசிலை 3-2 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று உலகச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

22 - தஞ்சாவூர் பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா தஞ்சையில் கோலாகலமாக தொடங்கியது.

28 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவெடுத்தது.

- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அக்டோபர்

7 - புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாச்சலம் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

8 - டிஜிபியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. புதிய டிஜிபியை தேர்வு செய்யவும் அது உத்தரவிட்டது.

9 - முன்னாள் மத்திய அமைச்சரும், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளில் இருந்தவருமான திருநாவுக்கரசர் சோனியா காந்தி முன்னிலையில் திருச்சியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸில் முறைப்படி இணைந்தார்.

18- தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்தது.

- நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில், கள்ளக்காதல் விவகாரத்தில், போலீஸ்காரர் இசக்கிமுத்து என்பவர் தனது காதலி உமா மகேஸ்வரி, நண்பரின் மனைவியான கீதா ஆகியோரை வெட்டிக் கொன்று தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

19 - சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து கொள்ளையடிக்க முயன்ற முன்னாள் திமுக எம்.எல்.ஏ ரவிசங்கர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒரு கொள்ளையராக மாறிய கதை தெரிய வந்து தமிழகமே அதிர்ந்தது.

21 - பெரும் சர்ச்சைக்கு மத்தியில் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்யண விவரத்தை தமிழக அரசு தனது இணையதளத்தில் வெளியிட்டது.

22 - வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

23 - தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டித் தலைவர் பொறுப்பிலிருந்து நீதிபதி கோவிந்தராஜன் விலகினார்.

26 - காங்கிரஸுக்குப் போவது போல போக்குக் காட்டிய நடிகர் ராதாரவி திடீரென ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.

- பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரது பெயர்களை வழக்கிலிருந்து நீக்கி தடா கோர்ட் உத்தரவிட்டது.

நவம்பர்

1 - தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் கமிட்டியின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

3 - சென்னையை உலுக்கியது கீர்த்திவாசன் கடத்தல் நாடகம். இரண்டு பொறியியல் பட்டதாரி இளைஞர்களால் கடத்தப்பட்ட கீர்த்திவாசன் பெரும் பரபரப்புக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டான். அடுத்த நாளே கடத்தல்காரர்களான விஜய், பிரபு ஆகியோரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

6 - தமிழகத்தை உலுக்கிய ஜல் புயலால் பெரும் மழை பெய்து சென்னை உள்பட தமிழகமே வெள்ளக்காடாகியது.

9 - கோவையில் முஷ்கின் (11) என்ற சிறுமியையும், அவளது தம்பி ரித்திக்கையும் கடத்திச் சென்று முஷ்கினை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தும், இருவரையும் தண்ணீரில் தள்ளிக் கொன்ற மோகனகிருஷ்ணன், மனோகரன் ஆகிய இரு கொடூரர்களில், மோகன கிருஷ்ணன், கோவை அருகே என்கவுன்டரில் கொல்லப்பட்டான்.

11 - திமுக தனது ஆதரவை விலக்கிக் கொண்டால் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கத் தயார் என்று கூறி புதிய 'பிட்'டைப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஜெயலலிதா.

12 - தமிழை மொழிப் பாடமாக எடுத்துப் படித்தவர்களுக்கு அரசு வேலை தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பான சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

14 -2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

22 - தமிழகம் முழுவதும் கொட்டித் தீர்த்த கன மழையால் தமிழகமே ஸ்தம்பித்தது. 100 பேர் பலியானார்கள்.

23 - நடிகர் விஜயக்குமாரை தாக்கிக் காயப்படுத்தியதாக கூறி அவரது மகள் வனிதாவின் 2வது கணவர் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார்.

25 - தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

- குன்னூர் அருகே மத்திய அரசின் வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் 5 பேர் பலியானார்கள்.

29 - தஞ்சை பெரிய கோவிலின் ராஜராஜன் வாயில் கோபுரத்தில் இடி தாக்கி கலசம் உடைந்தது.

டிசம்பர்

1 - முதல்வர் கருணாநிதி தனது சொத்து விவரத்தை வெளியிட்டார். அதில் கோபாலாபுரம் வீட்டைத் தவிர தனக்கு வேறு சொத்து இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

2 - நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு மண் அள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் அதிரடி தடை விதித்தது.

4- கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் எம்.பி. முற்றுகைப் போராட்டத்தால் திரும்பிச் சென்றார்.

8 - முன்னாள் அமைச்சர் ராசா, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது.

14 - ஒரு ஜாமீன் வழக்கு தொடர்பாக முன்னாள் நீதிபதி ரகுபதியை மிரட்டி சாதிக்க முயன்றவர் முன்னாள் அமைச்சர் ராசா என்ற தகவலை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனும் சர்ச்சையில் மாட்டினார்.

15 - ராசாவின் வீடுகள், நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் மீண்டும் சிபிஐ சோதனைக்குள்ளாக்கப்பட்டன.

- ஹஜ் யாத்திரை போல கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்கு புனித யாத்திரை செல்ல அரசு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று அறிவித்தார் ஜெயலலிதா.

- எனக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத நில மாற்றம் தொடர்பாக அவதூறான நோக்கத்தோடு செய்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் எச்சரித்தார்.

- பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்திற்கு வரும்போது அவரைத் தாக்கி படுகொலை செய்ய விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு குழு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கைத் தகவலை அனுப்பியது. அதேபோல முதல்வர் கருணாநிதி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் கொல்லத் திட்டமிட்டுள்ளனராம் புலிகள் என்றும் உளவுத்துறை கூறியது.

16 - அரசியல்வாதிகளுடன் எங்களுக்குத் தொடர்புகள் இருப்பதால் எங்களை நியாயமே இல்லாமல் குறி வைத்துள்ளனர் என்று காட்டமாக கூறினார் சிபிஐ சோதனைக்குள்ளான தமிழ் மையம் அமைப்பின் தலைவர் பாதிரியார் ஜெகத் கஸ்பார்.

- தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

17 - தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் வளாகத்தில் அரசு மருத்துவமனை கட்டக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

- அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினராக தனது 'உடன் பிறவா சகோதரி' சசிகலாவை அக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா நியமித்தார்.

24 - ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசாவிடம் சிபிஐ அதிரடி விசாரணை நடத்தியது. இது 9 மணி நேரம் நீடித்தது.

25 - மீண்டும் ராசாவிடம் 7 மணி நேரம் சிபிஐ விசாரணை நடந்தது.

26 - ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டணம் பகுதியைச் சேர்ந்த சிலர் கடலில் படகுகளில் சென்றபோது ஒரு படகு கவிழ்ந்தது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

27 - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணனுக்கு வந்த 3 மிரட்டல் கடிதங்களில்ல மணிப் பாதிரியார் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் ஆகியவற்றை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து இக்கோவில்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

28 - ரூ. 470 கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டதாக கிரிக்கெட் வாரியம் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியது.

29 - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த காமச் சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடந்ததால் அவர் தப்பி ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

- அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் என்னைத் தாக்கியும், சிறிதும் நாகரீகம் இன்றி மறைந்த என்னுடைய தந்தையாரை வம்புக்கிழுத்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து எனக்கு அவர் மீது உள்ள அக்கறையால் ஐயோ! பாவம்! என்றுதான் தோன்றியது என்று கூறினார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

- 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிக்கக் கூடாது என்று நாம் தமிழர் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்தார்.

- சென்னை மாநகராட்சியைச் சுற்றி தாம்பரம், அம்பத்தூர், திருவொற்றியூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக 3 மாநகராட்சிகளை ஏற்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

30 - தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி ஆலோசனை நடத்தினார்.

No comments: