Search This Blog

Tuesday, December 28, 2010

பா.ஜ., தலைவர்களிடையே திடீர் கருத்து வேறுபாடு: பார்லி., கூட்டுக்குழு விவகாரத்தில் திருப்பம்

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்ற பா.ஜ., கட்சித் தலைவர்களின் நிலைப்பாட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள் முரளிமனோகர் ஜோஷிக்கும், சுஷ்மா சுவராஜுக் கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, கட்சிக்குள் மோதல் முற்றியுள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அளித்த அறிக்கை, தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதன் காரணமாக, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா, பதவி விலகினார். இருந்தாலும், எதிர்க்கட்சியினர் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து தீவிரப் படுத்தினர். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் பிப்ரவரி மூன்றாம் வாரத்தில் துவங்கவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரிலும், பார்லிமென்ட் கூட்டுக் குழு பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், பட்ஜெட்கூட்டத்தொடரும் முடக்கப்படும்அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்ப்பதற்கான முயற்சியில் லோக்சபா சபாநாயகர் மீரா குமார் ஈடுபட்டுள்ளார். பார்லிமென்ட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, நாளை டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதாக பா.ஜ., நேற்று அறிவித்தது.

மோதல்: இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு தலைவரும், பா.ஜ., மூத்த தலைவருமான முரளிமனோகர் ஜோஷி கூறியதாவது: பொதுக் கணக்கு குழுவின் அதிகாரம், சில வரம்புகளுக்கு உட்பட்டது என, கூறுவது சரியல்ல. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணையை பொதுக் கணக்கு குழுவால் நடத்த முடியும். குறிப்பாக,இந்த விவகாரத்தில் கடந்த 2001ல் இருந்து மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் குறித்து விசாரிக்க முடியும். பொதுக் கணக்கு குழு முன், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங், கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து சரியான நேரத்தில், சரியான முடிவு எடுக்கப்படும் என்றார். ஆனால், பா.ஜ.,வின் மற்றொரு மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ், முரளிமனோகர் ஜோஷி கூறியதற்கு முற்றிலும் மாறான கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இணையதளத்தில் தெரிவித்துள்ளதாவது: ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பொதுக் கணக்கு குழுவின் அதிகாரம் வரைமுறைகளுக்கு உட்பட்டது. கணக்கு குறித்த விவரங்களை மட்டுமே பொதுக் கணக்கு குழு விசாரிக்க முடியும். பார்லிமென்ட் கூட்டுக் குழு தான், அரசு பொறுப்பாக செயல்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க முடியும். எனவே, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரித்தால் தான், ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த மர்மங்கள் வெளிச்சத்துக்கு வரும். பொதுக் கணக்கு குழு முன் ஆஜராக தயார் என, பிரதமர் கூறியுள்ளதில் எந்த அர்த்தமும் இல்லை. பொதுக் கணக்கு குழுவால், அமைச்சர்களையே நேரில் அழைத்து விசாரிக்க முடியாது என்கிறபோது, பிரதமரை எப்படி நேரில் அழைத்து விசாரிக்க முடியும் என்றார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பா.ஜ., மூத்த தலைவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல், பா.ஜ.,வுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரை, பொதுக் கணக்கு குழு நேரில் அழைத்து விசாரிக்க வேண்டுமானால், லோக்சபா சபாநாயகரிடம் அதற்காக அனுமதி பெற வேண்டும். மேலும், இதற்காக பார்லிமென்டின் பொது விஷயங்களை கவனிக்கும் கமிட்டியால் (பார்லிமென்ட் ஜெனரல் பர்ப்பஸ் கமிட்டி), விதிமுறைகளில் திருத்தமும் செய்யப்பட வேண்டும். இதுபோன்ற சட்ட சிக்கல்கள் உள்ள சூழ்நிலையில், கூட்டுக் குழு விசாரணை தொடர்பாக முரளிமனோகர் ஜோஷி கூறியுள்ள கருத்துக்கள், பா.ஜ.,வின் மற்ற தலைவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முரளிமனோகர் தன்னை சீனியர் என்று கருதி அத்வானி உள்ளிட்டோரை அதிகம் பொருட்படுத்தாதவர் என்ற பெயரும் உண்டு. இந்த குழப்பத்தால் , சபாநாயகர் நடத்தும் கூட்டத்தில் முட்டுக்கட்டை நிலை முடிவுக்கு வரும் வாய்ப்பு உள்ளது.

No comments: