Search This Blog

Monday, December 27, 2010

பார்லிமென்ட் கூட்டுக் குழு

"ஜே.பி.சி.,' என அழைக்கப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்படுவதற்கோ அல்லது அந்த குழு செயல்படுவதற்கோ அல்லது அந்த குழுவை இயக்குவதற்கோ குறிப்பிடத்தகுந்த விதிகள் எதுவும் பார்லிமென்ட் விதிமுறைகளில் கூறப்படவில்லை. பார்லிமென்டின் பிற குழுக்களைப் போல இதுவும் ஒன்று.

இருப்பினும், நாட்டில் அசாதாரண சூழ்நிலை உருவாகும் நிலையிலும், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் என, அனைத்து தரப்பும் ஒப்புக் கொண்டால் மட்டுமே இது அமைக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க வேண்டுமென, எதிர்க்கட்சிகள் அனைத்துமே ஒரே அணியில் திரண்டு கோரிக்கை வைத்துள்ளன. கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடும் அமளியில் இறங்கியதால் பார்லிமென்டின் இரு சபைகளுமே முற்றிலுமாக இயங்க முடியாமல் முடங்கின. இதனால், கோடிக்கணக்கான வரிப்பணம் பாழாகிவிட்டதாக விமர்சனம் எழுந்தாலும்கூட, எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கையை கைவிட கடைசிவரை தயாராக இல்லை. இந்த சூழ்நிலையில், ஜே.பி.சி., என்றழைக்கப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழு எப்படி அமைக்கப்படுகிறது மற்றும் எதற்காக அமைக்கப்பட வேண்டுமென, பார்லிமென்ட் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதா என தேடிப்பார்த்த போது, பல்வேறு புதிய விஷயங்கள் தெரிந்துள்ளன.

மிகவும் அதிமுக்கியமான பிரச்னை குறித்து விரிவான விசாரணையை நடத்த வேண்டுமெனில், இந்த பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்கப்படும். அந்த வகையில், மிகப்பெரிய ஊழல் மற்றும் முறைகேடு ஏற்பட்டு, அந்த ஊழல் அல்லது முறைகேடு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அதுபோன்ற ஒரு அசாதாரணமான சூழ்நிலையாக இருக்கும்பட்சத்தில், பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்படுவது பார்லிமென்ட் நடைமுறையில் வழக்கமாக இருந்து வந்துள்ளது. மேலும் இந்த பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டுமெனில், அதற்கு ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டு தரப்புமே ஒப்புக் கொள்ள வேண்டும். பார்லிமென்டின் மிக முக்கியமான வலுவான, புலன் விசாரணை அமைப்பாக இந்த ஜே.பி.சி., இருந்து வருகிறது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டு தரப்பைச் சேர்ந்த எம்.பி.,க்களும் இந்த பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் உறுப்பினர்களாக அங்கம் வகிப்பர். பார்லிமென்ட் அமைக்கும் பிற குழுக்களில் ஆளும்கட்சி அல்லது ஆளும் கூட்டணி தரப்பைச் சேர்ந்த எம்.பி.,க்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள். இதைப் போலவே, பார்லிமென்ட் கூட்டுக் குழுவிலும் ஆளும் கட்சி எம்.பி.,க்களே அதிக எண்ணிக்கையில் இடம் பெறுவர்.

லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு சபைகளில் இருந்தும் எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த குழுவில் இடம்பிடிப்பர். தவிர மற்ற விஷயங்கள் எப்படியாக இருந்தாலும், பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் தலைவர் பதவியில் மட்டும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்தான் இருப்பார். பார்லிமென்ட் ஜனநாயகத்தில் உள்ள மிகப்பெரிய விசாரணை அமைப்பாக இது இருந்து வந்தாலும், இதற்கென தனியாக விதிமுறைகள் ஏதும் இல்லை. பார்லிமென்டிற்கு என தனிப்பட்ட விதிமுறைகள் இருந்து வருகின்றன. அந்த விதிமுறைகளில் இந்த கூட்டுக் குழுவுக்கென தனியாக எதுவும் வரையறை செய்யப்படவில்லை. பிற வழக்கமான பார்லிமென்ட் நிலைக்குழுக்களுக்கு பொதுவாக என்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அவைதான் இதற்கும் பொருந்தும். கூட்டுக் குழுவை அமைப்பதற்கோ அல்லது அதை செயல்படுத்துவதற்கோ அல்லது இந்த குழுவை இயக்குவதற்கோ எந்தவொரு தனி விதிமுறைகளும் பார்லிமென்ட் விதிகளில் கூறப்படவில்லை. பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைப்பது என முடிவெடுக்கப்பட்டுவிட்டால், அதற்கான தீர்மானத்தை சபையில் அமைச்சரோ அல்லது அவை முன்னவரோ முன்மொழிந்து பேசுவர்.

இந்த பார்லிமென்டின் கூட்டுக் குழு விசாரணை காலத்தை பொறுத்தவரை, இவ்வளவுதான் என எதுவும் வரையறை செய்யப்படவில்லை. இந்த குழுவின் ஆயுட்காலமும் கூட வரையறுக்கப்படவில்லை. இதுதவிர, இந்த குழு யாருக்கு வேண்டுமானாலும் சம்மன் அனுப்பி விசாரிக்கலாம். மிக முக்கிய உயர் அதிகாரிகளை அழைப்பது மற்றும் அரசின் மிக முக்கியமான கோப்புகளையும் கேட்டு வாங்கி சரிபார்க்கலாம். பிற விசாரணை அமைப்புகளை தனது புலன் விசாரணை உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம். இப்படி நிறைய அதிகாரங்கள் இந்த குழுவிற்கு என இருந்தாலும் கூட, விசாரணையின் முடிவில் தண்டனை வழங்கும் அதிகாரமோ அல்ல தீர்ப்பு எழுதும் அதிகாரமோ அளிக்கப்படவில்லை. மாறாக பல்வேறு முக்கியமான பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு இந்த குழு வழங்கிடலாம். அந்த பரிந்துரைகளை அரசாங்கம் கேட்டுத்தான் ஆக வேண்டுமென்பதும் கிடையாது. இருந்தாலும் அந்த பரிந்துரைகளின்படி அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது இதுவரை வழக்கமாக இருந்து வந்துள்ளது.

No comments: