Search This Blog

Sunday, December 26, 2010

பார்லி.யை முடக்கும் கட்சிகளை மக்கள் அடையாளம் காண வேண்டும்:மத்திய அமைச்சர் சிதம்பரம்

பார்லி.யை முடக்கும் கட்சிகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் நடையழகன் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா பாளை. ஜவகர் திடலில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நடையழகன் தலைமை வகித்தார். நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சுந்தரராஜ பெருமாள், கிழக்கு மாவட்ட தலைவர் மோகன் குமார ராஜா, மேற்கு மாவட்ட தலைவர் முத்தையா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது; நாட்டில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏற்படக்கூடிய புரட்சிகள் மாறுபடும். சுதந்திர போராட்டத்தின் போது கட்டபொம்மன், பூலித்தேவன் உட்பட பலர் புரட்சி செய்தனர். சுதந்திர இந்தியாவின் முதல் 10 ஆண்டில் ஏற்பட்ட புரட்சியானது இந்தியாவை இணைப்பது ஆகும்.
நம் நாட்டில் கடந்த 10ஆயிரம் ஆண்டுகளாக தீண்டதகாதவர்கள் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு சம உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு வழங்கப்படாமல் பெரிய அளவில் கொடுமை நிகழ்ந்ததை மறுக்க முடியாது. காந்தி தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டார். அம்பேத்கரை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க முயன்றார். ஆனால் அம்பேத்கர் காங்கிரசில் சேராமல் வெளியில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் சாசனம் மூலம் பாதுகாப்பை ஏற்படுத்தினார். உயர்ந்த, தாழ்ந்த ஜாதி என்ற நிலை தான் தீண்டாமையாகும். அந்த தீண்டாமை இன்னும் ஒழியவில்லை. நாட்டின் பல பகுதியிலும் தீண்டாமை உள்ளது. தீண்டாமை மனதளவில் ஒழியவில்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தீண்டாமையும், ஜாதி பாகுபாடும் முழுமையாக ஒழிய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு கல்வி மற்றும் அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இந்த இரண்டையும் வழங்க காங்கிரஸ் கட்சிதயாராக உள்ளது. கல்வி மட்டுமே மனிதனை பண்படுத்தும், திறமை தரும், மனிதனை மெருகூட்டுகிறது. புதிய சிந்தனையின் ஊற்றாக கல்வி திகழ்ந்து வருகிறது. இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது. பெற்றோர்கள் எந்த தியாகத்தை செய்தாவது ஆண், பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் கடந்த 1947 முதல் 1967ம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. இந்த கால கட்டத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த கக்கனிற்கு முதல்வருக்கு அடுத்த பொறுப்பான போலீஸ் துறை வழங்கப்பட்டது. இதற்கு பிறகு 1967 முதல் 2010 வரை 43 ஆண்டுகள் மற்ற கட்சிகள் ஆட்சி செய்துள்ளன. ஆனால் எந்த கட்சியும் தலித்களுக்கு போலீஸ் துறையை வழங்கவில்லை. மேலும் நிதித்துறை, கல்வி துறை போன்ற அமைச்சர் பதவி கூட வழங்கவில்லை. தலித்களுக்கு அரசியல் அதிகாரம் தரும் கட்சி காங்கிரஸ் கட்சியாகும். நாட்டின் முதல் தலித் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், முதல் தலித் பெண் சபாநாயகர் மீராகுமாரை உருவாக்கியது காங்கிரஸ் கட்சியாகும்.
தலித் மக்கள் எந்த கட்சி அரசியல் அதிகாரத்தை வழங்கியுள்ளது. இனி எந்த கட்சி வழங்கும் என்பதை பார்க்க வேண்டும். கல்வியும், அரசியல் அதிகாரமும் தலித்களுக்கு வழங்கப்பட்டால் தீண்டாமை மட்டுமின்றி, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலையும் ஒழியும். பிளவுபட்ட இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும். இன்னும் நிறைய இளைஞர்கள் காங்கிரசில் சேர வேண்டும். வாருங்கள் பதவி தருகிறோம். ஆசனத்தில் அமர்ந்து பொறுப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். வடகிழக்கு மாநில மக்கள், முஸ்லிம்கள், காஷ்மீர் மக்கள், பழங்குடியின, தலித் மக்கள், பெண்கள் போன்றோரை ஒதுக்கி வைத்தால் நாடு வல்லரசாக முடியாது. இன்னும் 100 ஆண்டுகள் கடந்தாலும் வல்லரசு ஆகாது. அனைவருக்கும் அரசியல் அதிகாரம், கல்வி வழங்கினால் மட்டுமே நாடு வல்லரசாகும். இந்த பணியை தான் காங்கிரஸ் செய்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். எந்த ஒரு பகுதி மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கருதுகின்றனரோ அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பது எனது அமைச்சகத்தின் கடமையாகும். பாஜ., ஒரு பகுதியிலும், கம்யூனிஸ்ட்கள் ஒரு பகுதியிலும் நிற்கிறது. ஆனால் காங்கிரஸ் மட்டுமே நடுநிலையோடு ஏழை, தலித், முஸ்லிம், பழங்குடியின மக்களை பார்த்து நிற்கிறது. சமீபத்தில் தவறு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக பிரதமரோ, சோனியாவோ ஓடி ஒளியவில்லை. குற்றம் நிரூபிக்கப்படவில்லை. வழக்கு பதியவில்லை. குற்றவாளி என தீர்ப்பு இல்லை. தண்டிக்கப்படவில்லை. இருப்பினும் முதல்வர்கள், அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அதிகாரிகளின் அதிகாரம் பறிக்கப்பட்டது. இதுகுறித்து சிபிஐ., வருமான வரித்துறை, நீதிபதி சிவராஜ் பாட்டீல் குழு, பொது கணக்கு குழுஉட்பட 5 குழுக்கள் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது. ஆனால் பாஜ., பார்லியை முடக்கி வைத்துள்ளது. இதனால் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா, பயங்கரவாததடுப்பு சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களை பார்லியில் நிறைவேற்ற முடியவில்லை. புதிய சட்டங்கள் நிறைவேறினால் தான் பாதுகாப்பை அதிகரிக்க முடியும். எனவே பார்லியை முடக்கும் கட்சிகளை மக்கள் அடையாளம் காண வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசினார். முன்னதாக நடையழகன் தலைமையில் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இளைஞர்கள் ஏராளமானோர் சிதம்பரம் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். கூட்டத்தில் எம்பிக்கள் அழகிரி, விஸ்வநாதன்,எம்எல்ஏக்கள் சுந்தரம், கந்தசாமி, செல்வப்பெருந்தகை மற்றும் வானமாமலை, ராகுல் காந்தி ரத்ததான கழக பிரம்மா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜோதிராஜ் நன்றி கூறினார்.

No comments: