Search This Blog

Sunday, December 26, 2010

ஸ்பெக்ட்ரம் இழப்பின் மதிப்பிற்கு மூன்று ஆதாரங்கள்

"2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தணிக்கை அதிகாரியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இழப்பின் மதிப்பு அனுமானம் அல்ல. அது யூகத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டதல்ல என்பதற்கு மூன்று ஆதாரங்கள் உள்ளன' என்று, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உலக வரலாற்றில் இதுவரை நடந்திராத அளவுக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை நான் பூதாகரமாக ஆக்குவதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்த ஊழலே பூதாகரமான ஊழல் தான்; இதை யாரும் பூதாகரமாக்கத் தேவையில்லை. கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டபோது, ஏற்கனவே ராஜா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்ததால், அவருக்கு தொடர்ந்து அந்த துறை ஒதுக்கப்பட்டதே தவிர, அதில் தி.மு.க., பிடிவாதமாக இல்லை என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார். கருணாநிதியின் இந்த கூற்று, "முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்' அமைந்துள்ளது.அந்த காலகட்டத்தில், டில்லியில் இருந்து சென்னை வந்து, "வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம்' என்ற முடிவை தி.மு.க., எடுத்ததற்கான காரணம் என்ன? இதற்குக் காரணம் வளம் கொழிக்கும் இலாகாக்கள் கிடைக்காதது தான் என்பதும், தி.மு.க., கேட்ட வளம் கொழிக்கும் இலாகாக்களை தருகிறேன் என்று பிரதமர் சொன்ன பிறகு தான் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றனர் என்பதும் ஊரறிந்த விஷயம்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில், "முதலில் வருபவருக்கு முதலில் தருவது' என்ற முந்தைய கோட்பாட்டைக் கூட ராஜா பின்பற்றவில்லை. "தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தருவது' என்ற கோட்பாட்டைத் தான் கடைபிடித்துள்ளார்.தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு, ஆயிரக்கணக்கான ஏழைகளின் விவசாய நிலங்கள் அமைச்சர்களாலும், தி.மு.க.,வினராலும் அபகரிக்கப்பட்டுள்ளன. இந்த நில அபகரிப்புகளை கருணாநிதி வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்."2ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பு அனுமானத்தின் அடிப்படையில் தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது' என்று, கருணாநிதி கூறியுள்ளார். ஆனால், தணிக்கை அதிகாரியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இழப்பின் மதிப்பு அனுமானம் அல்ல; அது யூகத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டதல்ல என்பதற்கு மூன்று ஆதாரங்கள் உள்ளன."எஸ்-டெல்' என்ற நிறுவனம் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விலை கொடுத்து அலைக்கற்றை உரிமத்தை வாங்க முன்வந்தது. ஆனால், 2001ல் நிர்ணயிக்கப்பட்ட 1,650 கோடி ரூபாய்க்கு உரிமங்களை ராஜா விற்றார். அதன் அடிப்படையில் இழப்பின் மதிப்பு கணிக்கப்பட்டுள்ளது."ஸ்வான்' என்ற, "லெட்டர்பேடு' நிறுவனம் 1,650 கோடி ரூபாய்க்கு உரிமங்களை வாங்கியது. அந்நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை, "இடிசலட்' (ETISALAT) என்ற நிறுவனத்திற்கு, சில நாட்களுக்கு பின் 9,000 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது.

இதே போன்று, "யுனிடெக்' என்ற, "லெட்டர்பேடு' நிறுவனம் தனது 60 சதவீத பங்குகளை, "டெலிநார்' (TELENOR) என்ற நிறுவனத்திற்கு 6,120 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது. அந்த விலைக்கு அரசே கொடுத்திருந்தால், அந்த லாபம் மத்திய அரசுக்கு கிடைத்திருக்கும். அதன் அடிப்படையில் இழப்பின் மதிப்பு கணிக்கப்பட்டுள்ளது.அண்மையில் "3ஜி' ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. "2 ஜி' ஸ்பெக்ட்ரம் இதை விட அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இதே விலைக்கு "2 ஜி' ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டிருந்தால், மத்திய அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைத்திருக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலுமே இழப்பின் மதிப்பு கணிக்கப்பட்டுள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் பயன்பாடு இன்னும் அதிகம் என்பதால், தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை விட இழப்பின் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments: