Search This Blog

Sunday, December 26, 2010

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் ராகுலின் சிந்தனை

தமிழகத்திற்கு முதல் முறையாக ராகுல் வரும் போது, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்திற்காக வந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஆளுமை திறன் பயிற்சி கொடுப்பதற்காக, இரண்டாவது முறை வந்தார். அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் எண்ண ஓட்டங்களை அறிய மூன்றாவது முறையாக தற்போது ராகுல் வந்துள்ளார்.

இந்த பயணத்தின் மூலம் தான் உருவாக்கிய படையான, இளைஞர் காங்கிரசின் உணர்வுகளை பதிவு செய்து போயிருக்கிறார் ராகுல். தலைமைக்கு தலையாட்டுவது தங்கள் வேலையல்ல என்பது போல், உள்ளபடியே, துணிச்சலாக பல கருத்துக்களை ராகுலுக்கு தெரிவித்துள்ளனர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்.சென்னை வானகரத்தில் நடந்த கூட்டத்தில், "தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை பிடித்துள்ளதா? பிடிக்கவில்லையா?' என்ற கேள்வியை ராகுல் கேட்கவும், "பிடிக்கவில்லை' என மாநில தலைவர் யுவராஜா ஆதரவாளர்கள், "கை' தூக்கி பதிலளித்து பரப்பரப்பை ஏற்படுத்தினர்.அதே சமயம் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்கள் தி.மு.க., கூட்டணியை பிடிக்கவில்லை என்ற பதிலை கூறவில்லை.சென்னை விமான நிலையத்தில் முன்னாள் துணை மேயரும், சிதம்பரத்தின் ஆதரவாளருமான கராத்தே தியாகராஜன், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க வேண்டும் என்ற கருத்தை ராகுலிடம் வலியுறுத்தினார். இளைஞர் காங்கிரசில் கூட்டணி குறித்து இருவேறு கருத்துகள் நிலவுவதை இது வெளிப்படுத்தியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்னை நாடு முழுவதும் புயலாக வீசும் போது, தமிழக சட்டசபை தேர்தலை தி.மு.க., கூட்டணியுடன் எப்படி சந்திக்க முடியும்? அப்படி தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால், ஊழலில் காங்கிரசுக்கும் பங்கு உள்ளது என்ற விமர்சனம் எழும். இதனால் தேர்தல் முடிவு காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது, இளைஞர் காங்கிரசின் ஒரு தரப்பு கருத்தாக உள்ளது.

பெங்களூரு கோர்ட்டில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, சசிகலா மீதும் சொத்து குவிப்பு வழக்கு நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை வெளிநாட்டுக்காரர் என சரத்பவார், சங்மா போன்ற தலைவர்கள் கருத்து தெரிவித்து, பின் வருத்தமும் தெரிவித்தனர். சோனியாவை தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா விமர்சனம் செய்தது குறித்து, அவர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கும் போது அ.தி.மு.க.,வுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும் என்பது மற்றொரு தரப்பின் கருத்தாக உள்ளது. மொத்தத்தில் இரு கோஷ்டிகளின் குரலையும் கேட்டு, குழம்பி போய் ராகுல் திரும்பியுள்ளார் என்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.

இதுகுறித்து, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:"இளைஞர் காங்கிரசை சேர்ந்த ஒருவர் நாளை முதல்வராகலாம்' என, ராகுல் கூறியுள்ளார். 40 ஆண்டு காலமாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி இல்லை. ஆனால், இளைஞர் காங்கிரசில் 13 லட்சம் பேர் உறுப்பினராக உள்ளனர். இளைஞர் காங்கிரசார் மீது அசைக்க முடியாத நம்பிக்கை ராகுலுக்கு ஏற்பட்டுள்ளது.இளரத்தமும், புதிய உறுப்பினர்களும் 80 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களை வைத்து 2016ம் ஆண்டில் தனித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது ராகுலின் புது உத்தி. அதனால் தான் தமிழகத்தை ஐந்து மையங்களாக பிரித்து ஆதிதிராவிடர், மகளிர் நிர்வாகிகளை தனியாக சந்தித்து கருத்து கேட்டு அவர்களுக்கு புத்துணர்ச்சி வழங்கவும், சொந்த மண்ணில் அவர்களின் எண்ணங்களை அறிய வேண்டும் என்பதற்காக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை ராகுல் சந்தித்து பேசினார்.

கடந்த 1996ல், தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வேண்டாம் என ஒட்டுமொத்த காங்கிரசாரின் கருத்தாக இருந்தது. தொண்டர்களின் உணர்வுகளுக்கு எதிராக, மேலிடம் கூட்டணி வைத்ததால் த.மா.கா., உருவாகியது. தற்போது அப்படியொரு சூழ்நிலை உருவாகவில்லை. இளைஞர் காங்கிரசில் பெரும்பான்மையானவர்கள் தி.மு.க., கூட்டணியை விரும்பவில்லை. ஆனால், "கூட்டணி குறித்த முடிவை சோனியா எடுப்பார்' என்று ராகுல் திரும்ப, திரும்ப தெரிவித்து வருகிறார். எனவே, கூட்டணியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பில்லை.அதோடு, இளைஞர் காங்கிரசார் மட்டுமே கட்சி அல்ல. காங்கிரசில் வட்டார, மாவட்ட வாரியாக செல்வாக்குடன் உள்ள தலைவர்களின் செயல்பாடு தான் தேர்தல் பணிக்கு உதவியாய் இருக்கும். எனவே, அனுபவம் வாய்ந்த அவர்களது கருத்துக்களையும் ராகுலே கேட்டறிய வேண்டும். அப்போது தான், தமிழக அரசியல் நிலை குறித்து அவருக்கு ஒரு தெளிவான பார்வை கிடைக்கும்.இவ்வாறு காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினர்.

கக்கனை தெரியாத காங்கிரசார்! திருநெல்வேலியில் இளைஞர் காங்கிரசின் தலித் பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் 20 பார்லிமென்ட் தொகுதிக்கு உட்பட்டவர்கள் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட ஒன்றிரண்டு தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்றனர். 3,600 பேர் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விழா நடந்த அரங்கமே 1,500 பேர் தான் அமர முடியும் என்பதால், ஆரம்பத்தில் போலீசார் கெடுபிடியுடன்சோதனைக்கு பின்னர் அனுப்பினர். ராகுல் வரும் வரையிலும், அரங்கம் நிறையாததால் 60 வயதை கடந்த இளைஞர் காங்கிரசாரையும் உள்ளே அனுப்பி வைத்தனர்.
* ராகுலின் ஆங்கிலப் பேச்சு ஆக்ரோஷமாகவும், விழிப்புணர்வு தருவதாகவும் இருந்தது. ஆனால், மொழிப் பெயர்த்தவரோ தமது இஷ்டத்திற்கு தப்பும், தவறுமாக மொழி பெயர்த்தார். இதனால், ராகுல் பேச்சின் உண்மையான அர்த்தம், தமிழ் மட்டுமே தெரிந்த தொண்டர்களுக்கு போய் சேரவில்லை.
* விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் கக்கன் படத்திற்கு, ராகுல் மாலையணிவித்தார். இளைஞர் காங்கிரசின் தலித் பிரதிநிதிகள் பலருக்கும், அந்த படத்தில் இருப்பது யார் என்றே தெரியவில்லை..

No comments: