Search This Blog

Monday, December 20, 2010

சட்டசபை தேர்தல் பணிகளை ஆரம்பியுங்கள்: தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு உத்தரவு

"தமிழகத்தில் காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து, இப்போதே தேர்தல் பணியை துவங்கிட வேண்டும். மாவட்ட தலைவர்கள் மாற்றம் குறித்து விரைந்து செயல்பட்டு, புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க வேண்டும்' என, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறினார். "தமிழகத்தில் கூட்டணி குறித்து இப்போதைக்கு புதிய முடிவு எதுவும் எடுப்பதாக உத்தேசம் இல்லை' என்றும் அவர் கூறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டில்லியை அடுத்த புராரியில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று முன்தினம் காலை உரையாற்றினார். பின்னர் மதியம் 3 மணிக்கு, மேடைக்கு பின்னால் அமைக்கப்பட்டிருந்த சோனியாவின் அறைக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். அகில இந்திய மாநாடு நடைபெறும் போது, மாநில தலைவர்களை காங்கிரஸ் தலைவர் சந்திப்பது வழக்கமான ஒன்று. அந்த அடிப்படையில் அமைந்த இந்த சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது. தமிழக காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் உடனிருக்க, சிதம்பரம், வாசன், இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் சோனியாவை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் தி.மு.க.,வுடனான கூட்டணி குறித்து ஏதாவது பேசப்படும் என்று அனைத்து தரப்புமே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சந்திப்பின் ஆரம்பத்திலேயே குலாம் நபி ஆசாத், ""நீங்கள் எல்லாரும் எதைப் பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்று தெரியும்; அதைப் பற்றி இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம். இனி வரும் நாட்களில் சூழ்நிலைக்கு ஏற்ப அது குறித்து என்ன முடிவெடுக்க வேண்டுமென்பதை மேலிடம் பார்த்துக் கொள்ளும்,'' என்றார்.

இதையடுத்து பேசிய சோனியா, ""தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அங்கு கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டியது முக்கியம். அதற்கு இப்போதே பணிகளை துவக்கிட வேண்டும். காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து, இப்போதிருந்தே தேர்தல் பணிகளை முடுக்கி விட, முக்கிய தலைவர்கள் முயற்சிக்க வேண்டும். மாவட்ட தலைவர்கள் நியமனம் நடைபெறாமல் இருப்பது சரியானது அல்ல. புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்தை விரைவாகச் செய்திட வேண்டும். அது முடிந்துவிட்டால், பிறகு மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து மேலிடம் முடிவு செய்யும். எனவே, மாவட்ட தலைவர்கள் நியமனத்தில் தாமதம் கூடாது,'' என்றார்.

அதன் பின்னர் ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தனர்.

அதில் வாசன் கூறும் போது, ""தமிழகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ஒருவித அதிருப்தி உள்ளது. அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளது. எனவே, அனைத்து மாவட்ட தலைவர்களையும் மாற்றாமல், காலியாக உள்ள பதவிகளை மட்டும் நிரப்புவதே நல்லது,'' என்றார்.

சிதம்பரம் பேசும் போது, ""கட்சியின் விதிமுறைகளின்படி தேர்தல் நடந்தால், மாநில தலைவர், மாவட்ட தலைவர்கள் என, அனைவரது பதவியும் தானாகவே காலியாகிவிட்டது என்றே அர்த்தம். அப்படி பார்த்தால், இப்போது பதவியில் யாருமே இல்லை என்பதே பொருள். எனவே, எல்லா பதவிகளுமே நியமிக்கப்பட வேண்டும். கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்சும் வகையில் மாவட்ட தலைவர்களாக புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.

இளங்கோவன் பேசும் போது, ""2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது தமிழகத்து பிரச்னை அல்ல; இந்தியா முழுவதும் உள்ள பிரச்னை. எனவே, அந்த வகையில் இதை அணுக வேண்டும். தமிழகத்தில் கூட்டணி குறித்த தனது முடிவை, காங்கிரஸ் மேலிடம் பரிசீலனை செய்ய வேண்டும். தே.மு.தி.க., - பா.ம.க., - கொங்கு பேரவை உள்ளிட்ட கட்சிகளை இணைத்துக் கொண்டு காங்கிரஸ் புதிய அணி காண முயற்சி செய்ய வேண்டும்,'' என்றார்.

பிரபு பேசும் போது, ""சிறிய கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைமை தாங்கினால், அந்த கட்சிகளை தேவையில்லாமல் தமிழகத்தில் வளர்த்துவிட்டது போலாகி விடும். அக்கட்சிகளுக்குத் தான் நன்மையே தவிர, காங்கிரசுக்கு எந்த பயனும் இல்லை,'' என்றார்.

மணிசங்கர் அய்யர் பேசும் போது, ""கடந்த முறையைப் போல இல்லாமல் இந்த முறை தி.மு.க.,வுடன் தேர்தலுக்கு முன்னரே ஒப்பந்தம் போட வேண்டும். ஆட்சியில் பங்கு என்ற அந்த ஒப்பந்தம் இருந்தால் தான் காங்கிரசுக்கு நல்லது,'' என்றார்.

இந்த கூட்டம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறும்போது, ""தமிழகத்தில் தி.மு.க.,வுடனான கூட்டணி குறித்து ஏதாவது பேசி முடிவெடுக்கப்படும் என்று தான் முதலில் எதிர்பார்க்கப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே இதைப் பற்றி பேசக் கூடாது என குலாம் நபி கூறிவிட்டார். இளங்கோவன் போன்றவர்கள் துணிந்து இதைப் பற்றி பேசியும் பலனில்லை. பீட்டர் அல்போன்சையும், தங்கபாலுவையும் வைத்துக் கொண்டு தி.மு.க.,வுடனான கூட்டணி குறித்து சுதந்திரமாக எப்படி சோனியாவிடம் கருத்து தெரிவிப்பது என்பதாலேயே பலரும் அதைப் பற்றி முக்கியமாக பேசவில்லை,'' என்று தெரிவித்தன.

கூட்டம் முடியும் தறுவாயில் சோனியாவிடம் சென்ற சில தலைவர்கள், "தி.மு.க.,வுடன் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படாத நிலையில், பிரதமர் அடுத்த மாதம் தமிழகத்துக்கு வர வேண்டாம்' என கேட்டுக் கொண்டதாகவும், அது குறித்து பரிசீலிப்பதாக சோனியா கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: