புது தில்லி, டிச. 19: தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ்., அதன் சகோதர அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ள 2 நாள் மாநாடு புது தில்லியின் புறநகர்ப் பகுதியான புராரியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்த மாநாட்டின் தலைமை உரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:
வகுப்புவாத செயல்களிலும், தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டுவரும் அமைப்புகள் பெரும்பான்மைச் சமூகமா அல்லது சிறுபான்மைச் சமூகமா என காங்கிரஸ் வேறுபடுத்திப் பார்க்கவில்லை.
தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் அமைப்பு எந்த மதத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அது அபாயகரமானது. அத்தகைய சக்திகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
வகுப்புவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் அதை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. குறுகிய அரசியல் லாபங்களுக்காக வகுப்புவாதச் செயல்களில் ஈடுபடுவதும், வெறுப்புணர்வைப் பரப்புவதும், மதவெறியைத் தூண்டுவதும் மதத்தை அவமதிக்கும் செயலாகும்.
மதத்தை கேடயமாகப் பயன்படுத்தி மக்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டுவது, மற்ற மதங்களைப் பற்றி அவதூறுப் பிரசாரம் செய்வது, வரலாற்றைத் திரித்து மக்கள் மனங்களில் கேடு விளைவிக்கும் தனிநபர்கள், அமைப்புகள், கொள்கைகளை புறந்தள்ள முடியாது.
ஊழலைக் களைய 5 அம்சத் திட்டம்: ஊழல் ஒரு நோய் போல சமூகத்தின் எல்லாநிலைகளிலும் பரவியுள்ளது. அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகள் உள்பட அனைத்து வழக்குகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைவாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நிரபராதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
2-வதாக, வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்கு அரசே நிதி அளிக்க வேண்டும்.
ஊழலுக்கு மிக முக்கிய ஊற்றாக விளங்குவது நில ஒதுக்கீடு செய்வதற்கு உள்ள அதிகாரம். இத்தகைய அதிகாரத்தை எல்லா முதல்வர்களும், அமைச்சர்களும் கைவிட வேண்டும்.
மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் அனைத்தும் வெளிப்படையாக நடைபெறுவதற்கான தெளிவான வரைமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
இயற்கை வளங்களை சுரண்டுவதைத் தடுக்க தகுந்த வெளிப்படையான நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். தங்களது நேர்மை மீது எந்தவிதமான சந்தேகத்தின் நிழலும் விழாதவகையில் காங்கிரஸ் நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.
எளிமை, பொறுமை, சிக்கனம் போன்றவையே நமது தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறையாக இருக்க வேண்டும். இதை நாம் சட்டமாகக் கொண்டு வரமுடியாது. வறுமை நிறைந்திருக்கும் நாட்டில், நமது வளத்தை கூச்சமில்லாமல் வெளிப்படுத்துவதைத் தவிர்க்கும் சமூக உணர்வு நமக்கு இருக்க வேண்டும்.
பா.ஜ.க.வுக்கு சவால்: எந்தவிதமான குற்றச்சாட்டும் உறுதி செய்யப்படாத நிலையிலும், விசாரணை மட்டுமே நடைபெறும் நிலையிலும் நமது முதல்வர்கள், அமைச்சர்களை பதவி விலக ஆணையிட்டுள்ளோம்.
இதுபோன்று எத்தனைக் கட்சிகள் உரிமை கோர இயலும்? கர்நாடகத்தில் ஊழல் புகார் எழுந்துள்ள நிலையில், முதல்வரையோ, அமைச்சர்களையோ பாரதிய ஜனதா கட்சியால் விலகச் சொல்ல முடியுமா?
நாடாளுமன்ற முடக்கம் குறித்து...: நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியதற்கு எப்படி நியாயம் கற்பிக்கப் போகின்றன? அரசியல் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை பிணைக் கைதியாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தக் கூடாது.
மிக முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், முடிவு எடுக்கவும் நாடாளுமன்றமே மிகச் சரியான இடமாகும்.
மன்மோகன் சிங்குக்கு புகழாரம்: பிரதமர் மன்மோகன் சிங் கெüரவம், நேர்மையின் உருவமாகத் திகழ்கிறார். அவரது சீரிய தலைமை, கடுமையான புயல் வீசும்போதும் அவர் காத்துவரும் மெüனம், தேசத்தின் முன்னேற்றம் தொடர்பாக அவர் கொண்டுள்ள நிலையான முனைப்பு ஆகியவற்றுக்காக மாநாட்டில் கூடிய பிரதிநிதிகள் சார்பாக அவரைப் பாராட்டுகிறேன்.
சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டபோது அவரது தலைமையை உலகமே பாராட்டியது.
விலைவாசி உயர்வு...: ஒரே சீரான பொருளாதார வளர்ச்சியை அரசு உறுதிப்படுத்தியுள்ள அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது போன்ற சவால்களை அரசு எதிர்கொண்டுள்ளது.
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு அளிக்கும் மானியம் சரியானவர்களைச் சென்றடைய வேண்டும்.
பிகார் தோல்வி குறித்து...: மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது. நாம் செல்ல வேண்டிய பாதை நீண்ட தூரம் கொண்டது மட்டுமல்ல, கரடுமுரடானதும் கூட என்பதையே பிகார் தேர்தல் உணர்த்துகிறது.
எனினும், அந்தப் பாதையைக் கடந்து நாம் வெற்றி பெறுவோம். மனச் சோர்வு அடைய இப்போது நேரமில்லை. நாம் கூட்டணியில் உள்ள மாநிலங்கள் உள்பட எல்லா பகுதிகளிலும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டிய தருணம் இது என்றார் சோனியா காந்தி.
சர்ச்சையைத் தவிர்த்த ராகுல்: லஷ்கரை விட ஹிந்து அமைப்புகள் பயங்கரமானவை என காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறியதாக "விக்கி லீக்ஸ்' வெளியிட்ட தகவல் தொடர்பாக இந்த மாநாட்டில் ராகுல் காந்தி எதுவும் பேசவில்லை.
ஊழலில் ஈடுபடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று மட்டுமே ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
அத்வானி மீது திக்விஜய் சிங் தாக்கு: அயோத்தி பிரச்னை தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரைதான் ஹிந்து- முஸ்லிம் வேற்றுமைக்கு விதை விதைத்தது என்றும், அதுதான் நாட்டில் தீவிரவாத வன்முறைச் செயல்கள் நடைபெறுவதற்கு காரணம் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டினார்.
தீர்மானம்: தீவிரவாத செயல்கள் தொடர்பான சமீபத்திய சில வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ்.ஸýக்கும், அதன் சகோதர அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்வதுடன், வகுப்புவாதத்தை முறியடிக்க கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராகுல் காந்தி குறிப்பிட்டதாக "விக்கி லீக்ஸ்' வெளியிட்ட தகவலை ஈடுகட்டும் விதமாகவே தீவிரவாதத்தை எந்த உருவத்திலும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என சோனியா காந்தி பேசியதாகக் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment