புது தில்லி, டிச. 19: காங்கிரஸ் தொண்டர்களை மத்திய அமைச்சர்கள் புறக்கணிக்கக் கூடாது என்று சோனியா காந்தி கண்டிப்புடன் கூறியுள்ளார்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் இது குறித்து அவர் மேலும் பேசியது:
காங்கிரஸ் ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள நமது கட்சித் தொண்டர்கள் பலரிடம் இருந்து எனக்குப் புகார்கள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை நமது மத்திய அமைச்சர்கள் தங்களைப் புறக்கணிக்கிறார்கள்; எங்கள் கருத்துக்களை அவர்கள் கேட்பதே இல்லை என்பதேயாகும்.
இது மிகவும் முக்கியப் பிரச்னை, எனவே தான் கட்சி மாநாட்டில் இதனைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறேன். இதுபோன்று மத்திய அமைச்சர்கள் நடந்து கொள்வது, தொண்டர்கள் மத்தியில் உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையை குறைத்துவிடும்.
பல்வேறு கடினமாக சூழ்நிலைகளில் கட்சித் தொண்டர்கள் நமக்காகப் பாடுபட்டு வருகிறார்கள். அவர்களை நமது அமைச்சர்களே புறக்கணிப்பது நிச்சயமாக கண்டிக்கத்தது.
முக்கியமாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இதுபோன்ற புறக்கணிப்புகள் நிலவுவது நமக்கு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
எனவே இனி வரும் காலங்களில் மத்திய அமைச்சர்கள் தாங்கள் செல்லும் இடங்களில் உள்ள நமது உள்ளூர் கட்சித் தலைவர்கள், தொண்டர்களுடன் அவர்கள் பிரச்னை குறித்தும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றார் சோனியா காந்தி.
தொண்டர்களுக்கு கோரிக்கை:தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள இடம், இல்லாத இடம் என்று வேறுபாடு எதையும் காண்பிக்காது மத்திய அரசு சரியாக நிதியை பகிர்ந்து அளித்து வருகிறது.
மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மக்களிடம் காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
முக்கியமாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் நமது தொண்டர்கள் இப்பணியை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் அங்கு ஆட்சியில் உள்ளவர்கள் இத்திட்டங்களை தாங்கள் செயல்படுத்துவதாகக் கூறி மக்களை திசை திருப்ப வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில் கட்சியின் மாநிலத் தலைவர்கள், காங்கிரஸின் பிற அமைப்புத் தலைவர்கள் கூறுவதைக் கேட்டு காங்கிரஸ் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். தொடர்ந்து பிகார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டிப் பேசிய சோனியா, மாநிலத்தில் கட்சியை அடிப்படையில் இருந்து பலப்படுத்த வேண்டும் என்பதையே தேர்தல் முடிவு காட்டுகிறது.
இதற்கு வேறு மாற்று வழிகள் இல்லை. நாம் விடாமுயற்சியுடன் போராடினால் வெற்றி கிடைக்கும். காங்கிரஸ் பலவீனமாக உள்ள எல்லா மாநிலங்களுக்கும் இந்த கருத்து பொருந்தும் என்றார் அவர்
No comments:
Post a Comment