Search This Blog

Sunday, November 28, 2010

5 நிமிடத்தில் நாட்டின் அத்தனை பிரச்சினைகளையும் பேசி விடுகிறோம்-ப.சிதம்பரம்

11 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது, 11.05 மணிக்கு முடிவடைந்து விடுகிறது. ஐந்தே நிமிடத்தில் நாட்டின் அத்தனை பிரச்சினைகளையும் பேசி முடித்து விடுகிறோம் என்று எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடந்த சி.சுப்ரமணியம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட ப.சிதம்பரம் பேசுகையில், நாடாளுமன்றம் தினசரி காலை 11 மணி்க்குக்கூடுகிறது. 11.05 மணிக்கு முடிந்து விடுகிறது. நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் ஐந்தே நிமிடத்தில் பேசி முடித்து விடுகிறோம். எல்லாப் பிரச்சினைகளையும் நாம் அப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இதுதான் இன்றைய நாடாளுமன்ற சூழல்.

இந்த நேரத்தில் 60களில் மறைந்த காங்கிரஸ் தலைவர் சி.சுப்ரமணியத்திற்கும், திமுக தலைவர் அண்ணாதுரைக்கும் இடையே தமிழக சட்டசபையில் நடந்த விவாதங்கள் எனது நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.

இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்கள் மூன்று தமிழர்கள். அவர்கள் சி.சுப்ரமணியம், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், விவசாயத்துறை செயலாளராக இருந்த சிவராமன். இந்த மூன்று பேரும்தான் இந்தியாலின் பசுமைப் புரட்சியின் நாயகர்கள்.

நேரு அமைச்சரவையிலும், இந்திரா காந்தி அமைச்சரவையிலும் முக்கியப் பதவிகளை வகித்தவர் சி.சுப்ரமணியம். மிகச் சிறந்த தலைவர்களில் அவருக்கும் முக்கிய இடம் உண்டு. மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட தியாகியும் கூட.

70களில் நம்மிடம் கோதுமை இல்லை. அதை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். அந்தக் கோதுமையை சமைத்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் கெட்டுப் போய் விடும். ஆனால் இன்று நமது கிட்டங்கிகளில் கோதுமை நிரம்பி வழிகிறது. இருப்பு வைக்க கிட்டங்கிகளுக்குப் பற்றாக்குறை உள்ளது. இதற்குக் காரணம் இந்த மூன்று தமிழர்களும்தான்.

இந்தியாவை வளமைப்படுத்திய இந்த மூன்று எஸ்களும் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை தரக் கூடியதாகும்.

தமிழ் மொழி மீது அளப்பறிய பற்று கொண்டிருந்தவர் சி.சு. தமிழ்நாடு என்ற பெயர் வர அவரும் முக்கியப் பங்காற்றியுள்ளார். இன்று இந்தப் பெருமைக்கு சிலர் உரிமை கொண்டாடலாம். பலர் அதை மறந்து கூட போயிருக்கலாம். ஆனால் தமிழுக்கும், தமிழ்நாடு என்ற பெயர் வந்ததற்கும் சி.சு ஆற்றிய பங்கு மிகப் பெரியது.

அதேபோல பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் கல்வி அமைச்சராக இருந்த சி.சு., இந்தியாவின் முதல் மதியஉணவுத் திட்டத்தை வெற்றிகரமாக அமலாக்க பெரும் பங்காற்றினார் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும் என்றார்.

No comments: