Search This Blog

Sunday, January 2, 2011

தமிழக காங்., நிர்வாகிகளை மாற்ற முடிவு : விசாரித்து அறிக்கை தர சோனியா உத்தரவு

அகில இந்திய காங்கிரஸ் மாநாடு முடிந்த கையோடு, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன், சோனியா ஆலோசனை நடத்தினார். தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை மாற்றுவது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி, குலாம்நபி ஆசாத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இது, தங்கபாலு போன்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாடு, டில்லியில் டிச., 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடந்தது. மாநாடு முடிந்தவுடன் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வாசன், சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் பிரபு, இளங்கோவன், என்.எஸ்.வி.சித்தன், டாக்டர் செல்லகுமார், சுதர்சன நாச்சியப்பன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், மணிசங்கர் அய்யர், அகில இந்திய செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், சட்டசபை கொறடா பீட்டர் அல்போன்ஸ், ஞானதேசிகன் எம்.பி., ஆகிய 13 பேர், சோனியாவை நேரில் சந்தித்து பேசினர்.

கட்சி அமைப்பு மற்றும் தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி பற்றி பேசப்பட்டது. "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை மாற்றினால், மாவட்ட நிர்வாகிகளையும் மாற்றலாம். இல்லாவிட்டால், மாவட்ட நிர்வாகிகளை மாற்ற தேவையில்லை. காலியாக உள்ள மாவட்ட தலைவர்கள் பதவியிடத்தை மட்டும் நிரப்பலாம்' என, வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது கருத்துக்கு ஆதரவாக, இளங்கோவன் உட்பட எட்டுக்கும் மேற்பட்டோர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை மாற்ற வலியுறுத்தியுள்ளனர். அதற்கு, "தேர்தல் நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை மாற்றுவது அவ்வளவு நல்லதல்ல; 10 ஆண்டுக்கும் மேலாக உள்ள மாவட்ட தலைவர்களை மட்டும் மாற்றி விடலாம்' என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
இந்த கருத்தை ஏற்க மறுத்த சோனியா, "பெரும்பாலான நிர்வாகிகள், தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டியை மாற்ற வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். குறிப்பாக, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இதில் உறுதியாக இருக்கின்றனர்' என, தெரிவித்துள்ளார்.
அதற்கு, தங்கபாலு, "என்.எஸ்.வி. சித்தன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் ஆதரவு தெரிவிப்பதை வைத்து, நீங்கள் பேசக் கூடாது. அவர்கள் எந்த அடிப்படையில் இங்கு வந்தனர்?' என கேட்க, இளங்கோவன் ஆவேசமடைந்து, "டாக்டர் செல்லகுமாரை எந்த அடிப்படையில் அழைத்து வந்தீர்கள்?' என, எதிர்கேள்வி கேட்க, தங்கபாலு திகைத்து போய்விட்டார்.

"அணி இல்லாத தலைவர், நான் மட்டும் தான். எனவே, எனக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி தாருங்கள்' என, டாக்டர் செல்லகுமார் வெளிப்படையாக கேட்க, தங்கபாலு வாயடைத்து போய் விட்டார்.
இதையடுத்து, 13 பேர் கொண்ட குழுவிடம் மீண்டும் ஆலோசனை நடத்தி, தமிழக காங்கிரஸ் கமிட்டியை மாற்றுவது தொடர்பாக விரைவில் அறிக்கை தரும்படி, குலாம்நபி ஆசாத்துக்கு சோனியா உத்தரவிட்டுள்ளார்.
சோனியாவின் இத்தகைய அதிரடி உத்தரவு, தங்கபாலுவுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் காலியாக உள்ள நாமக்கல், திருவாரூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருச்சி (புறநகர்), விழுப்புரம், கடலூர், அரியலூர் உட்பட ஒன்பது மாவட்ட தலைவர்களை இன்னும் ஒரு மாதத்துக்குள் நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிறகு, கூட்டணி குறித்து பேசப்பட்டது. தமிழகத்தில், "தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள், காங்கிரசை வளர விடுவதே இல்லை. எனவே, காங்கிரஸ் தலைமையில் விஜயகாந்த், பா.ம.க., உட்பட இதர கட்சிகளை சேர்த்து தனி கூட்டணி அமைக்கலாம். அதன் பிறகு வேண்டுமானால், அ.தி.மு.க., அல்லது தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்யலாம்' என, வாசன் தன் கருத்தை பதிவு செய்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிதம்பரம், "அ.தி.மு.க. நம்பகமான கட்சியில்லை; எனவே, தி.மு.க.,வுடன் கூட்டணியை தொடரலாம்' என, கூறினார்.
அதை ஏற்க மறுத்த இளங்கோவன், "அ.தி.மு.க., கூட்டணியை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நாம் தனி அணி அமைத்து, அதன் பிறகு வேண்டுமானால், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து கொள்ளலாம்' என்றவர், சிதம்பரத்தை பார்த்து, "உங்கள் மகன் தமிழக முதல்வரை எதிர்த்து பேசுவார்; அறிக்கை விடுவார். நீங்கள் முதல்வரை சந்தித்து பேசி சமரசம் செய்வீர். யாரை ஏமாற்றுகிறீர்?' என, காட்டமாக கேட்க, சிதம்பரம் மவுனமாகி விட்டார்.

"மத்திய-மாநில அரசுகள் இணக்கமாக இருந்தாலும், கூட்டணி கட்சிகளுக்குள் சுமுக உறவு இல்லை. தமிழக மக்கள், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் விருப்பப்படி தான், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும்' என, சோனியா தன் முடிவை தெரிவித்துள்ளதாக, காங்., வட்டார தகவல்கள் உறுதியாக தெரிவிக்கின்றன.

No comments: