Search This Blog

Thursday, September 2, 2010

மாநில தலைவர்-பொதுக்குழு உறுப்பினர் தேர்வு: தமிழக காங்.தலைவர்கள் டெல்லியில் முகாம்


அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடை பெறுகிறது. இதற்காக சோனியா காந்தி இன்று அல்லது நாளை மனு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவருக்கு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 10 பி.சி.சி. (மாநில பொதுக்குழு) உறுப்பினர்கள் முன்மொழிகிறார்கள்.

சோனியாகாந்திக்கு போட்டி இருந்தால் 7-ந் தேதிக்குள் தேர்தல் நடைபெறும். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்ந்து எடுப்பார்கள். சோனியா காந்தியை எதிர்த்து யாரும் போட்டியிட வாய்ப்பு இல்லை. எனவே அவர் மீண்டும் தலைவர் ஆகிறார்.

இந்த நிலையில், தமிழ் நாட்டில் புதிதாக மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் (பி.சி.சி.) தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவர், மாநில தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் (ஏ.சி.சி.) ஆகியோரை தேர்வு செய்வார்கள். எனவே இந்த பதவிக்கு கடும் போட்டி உள்ளது.

புதிய பி.சி.சி. உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பட்டியல் காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. என்றாலும் இதில் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவர்களில் யாருடைய ஆதரவாளர்கள் அதிகமாக இடம் பெற வேண்டும் என்பதில் கடும் போட்டி உள்ளது.

டெல்லியில் மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் ஆதரவாளர்கள் முகாமிட்டுள்ளனர். இது தவிர காங்கிரஸ் எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் தங்கள் ஆதரவாளர்களை பி.சி.சி. உறுப்பினர்களாக சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலையடுத்து, மாநில காங்கிரஸ் தலைவர் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான மனு தாக்கல் 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடக்கிறது. போட்டி இருந்தால் புதிய தலைவருக்கான தேர்தல் 17-ந் தேதி நடக்கும்.

தமிழ்நாட்டில் தற்போது மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக 580 பேர் உள்ளனர். இந்த எண்ணிக்கை மாற்றி அமைக்கப்படுகிறது. இதற்கான பட்டியல் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள் பரிந்துரைப்படி பெயர்கள் முறைப்படி அறிவிக்கப்படும். இன்னும் சில தினங்களில் மேலிட ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கும் யாரை நியமனம் செய்வது என்பது குறித்து கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது. சோனியா காந்தி மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பு ஏற்றதும், தமிழ் நாடு காங்கிரஸ் புதிய தலைவர் பெயர் அறிவிக்கப்படும். இந்த மாதம் 20-ந் தேதிக்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments: